புள்ளின்வாய் கீண்டானைப் பொல்லா வரக்கனைக்
கிள்ளிக் களைந்தானைக் கீர்த்திமை பாடிப்போய்ப்
பிள்ளைக ளெல்லாரும் பாவைக்களம் புக்கார்
வெள்ளி யெழுந்து வியாழம் உறங்கிற்று
புள்ளுஞ் சிலம்பினகாண் போதரிக் கண்ணினாய்!
குள்ளக் குளிரக் குடைந்து நீராடாதே
பள்ளிக் கிடத்தியோ பாவாய் நீ நன்னாளால்
கள்ளந் தவிர்ந்து கலந்தே லொரெம்பாவாய்!
புள்ளின்வாய் கீண்டானைப் பொல்லா வரக்கனைக்
கிள்ளிக் களைந்தானைக் கீர்த்திமை பாடிப்போய்ப்= ஆண்டாள் பாட்டுக்கு முந்தைய பாட்டில் ஸ்ரீராமனைப் பற்றிப் பாட ஆரம்பித்தாலும் ஆரம்பித்தாள், சில கோபியருக்குக் கோபம் வந்திருக்கு போல! அவங்க இங்கே மறுபடியும் கிருஷ்ணனைத் துதிக்க ஆரம்பிச்சாச்சு! புள்ளின் வாய்க் கீண்டானை என்பது இங்கே பகாசுரன் கொக்காய் வந்து கிருஷ்ணனைக் கொல்ல வந்தபோது அந்தக் கொக்கின் வாயைக் கண்ணன் பிளக்க முயன்றதைக் குறிக்கும். அதைக் குறித்துச் சில கோபியர்கள் பாட, ஆண்டாளோ விடாமல் ஸ்ரீராமனையே குறித்துச் சொல்கிறாள். நாலு பெண்கள் சேர்ந்தாலே பேச்சு அதிகம். இங்கேயோ பாகவதர்களின் விசேஷம் வேறே. ஒவ்வொருத்தருக்கு ஒவ்வொன்று ப்ரீதி. அது போலத் தான். ஆண்டாள் பாட்டுக்குப் பொல்லா அரக்கனைக் கிள்ளிக் களைந்தானை அப்படினு முந்திய பாடலின் தொடர்ச்சியாக ராவணனின் பத்துத் தலைகளையும் ஸ்ரீராமன் அறுத்ததைக் குறிப்பிடுகிறாள். அப்படிப் பட்ட பரம்பொருளின் கீர்த்திகளைப் பாடிக்கொண்டே போவோம்.
பிள்ளைக ளெல்லாரும் பாவைக்களம் புக்கார்
வெள்ளி யெழுந்து வியாழம் உறங்கிற்று
புள்ளுஞ் சிலம்பினகாண் போதரிக் கண்ணினாய்!= இங்கே பிள்ளைகள் என்று கூறி இருப்பது மீண்டும் பாவை நோன்பு நூற்கும் பெண்களையே. தென்மாவட்டங்களில் இன்றும் பெண்குழந்தைகளைப் பெண்பிள்ளை என்று கூறுவதும், ஏ, பிள்ளே, என அழைப்பதும் வழக்கத்தில் இருக்கிறது. மேலே ஒருத்தி ஸ்ரீகிருஷ்ணனையும், மற்றொருத்தி ஸ்ரீராமனையும் பாட ஆரம்பிக்கவும், ஒருத்தருக்கொருத்தர் சண்டை போட்டால் வேலைக்காகாது என இன்னொருத்தி, சரி, சரி, எல்லாப் பெண்பிள்ளைகளும் பாவை நோன்புக்காக நதிக்கரைக்குப் போய்ப் பாவையைப் பிடித்து வைத்து வழிபாட்டுக்கு ஆரம்பிக்கப்போகிறார்கள். அதோடயா?? ஆச்சரியமான வாநிலை அறிக்கையும் தருகிறாள் ஆண்டாள் இங்கே. வெள்ளியெழுந்து வியாழம் உறங்கிற்று என்கிறாள். சுக்கிரன் உதயம் ஆகி வியாழ கிரஹம் அஸ்தமனம் ஆகிவிட்டதாம். ஆகையால் பொழுது விடிந்துவிட்டதே? இன்னுமா நீ தூங்குகிறாய்?? அந்தக் காலகட்டங்களிலே பெண்கள் கிரஹ சஞ்சாரங்களை எல்லாம் பார்த்துக் கேட்டுத் தெரிந்து கொள்பவர்களாய் அறிவு நிரம்பி இருந்திருக்கின்றனர். மற்றப் பறவைகளும் காச், மூச்சென்று கத்த ஆரம்பிச்சாச்சு, ஏ பெண்ணே, மலர் போன்ற கண்களை உடையவளே,
குள்ளக் குளிரக் குடைந்து நீராடாதே
பள்ளிக் கிடத்தியோ பாவாய் நீ நன்னாளால்
கள்ளந் தவிர்ந்து கலந்தே லொரெம்பாவாய்! = சீக்கிரம் வந்து நதியில் ஆழ்ந்து அமுங்கிக் குளிரக் குளிரக் குளித்தால் குளிரெல்லாம் போய்விடும். அதாவது ஸ்ரீகிருஷ்ண பக்தி அநுபவம் என்ற நதியில் மூழ்கி முங்கி எழுந்தால் நம் பாவங்களாகிய குளிர் போய்விடும். மேலும் தாமதம் ஆவதற்குள்ளாக சும்மாக் குளிருது, குளிருதுனு பொய் சொல்லி நடிக்காமல் வா, பெண்ணே!
இங்கே நம் மனம் ஒரு சமயம் ஈஸ்வர பக்தியில் ஆழ்ந்தாலும் மற்றொரு சமயம் வெளி உலக இன்பங்களில் ஆழ்கிறதைக் குறிக்கிறது. அதை விடுத்து மனப்பூர்வமாய்க் கண்ணனிடம் பக்தி பூண்டு, அந்த பக்தி ரசமாகிய அமுதக் குளத்தில் முங்கி மகிழ்வோம்.
பட்டத்திரியோ முக்குணங்களால் கிடைக்கும் வெவ்வேறு பலாபலன்களையுமே பகவானைச் சேவிப்பதும், பகவானின் க்ஷேத்திரங்களைத் தரிசனம் செய்வதுமாகிய செயல்களை நிர்பலனாக நிஷ்களங்கமாகப்பரிபூரண மனதோடு செய்து வந்தால் அதிலேயே முக்தி அடையலாம் என்கிறார்.
த்ரைகுண்யாத் பிந்ந ரூபம் பவதி ஹி புவனே ஹீநமத்யோத்தமம் யத்
ஜ்ஞாநம் ஸ்ரத்தா சகர்த்தா வஸதிரபி ச ஸுகம் கர்ம சாஹார பேதா:
த்வத் க்ஷேத்ர த்வந்நிஷேவாதி து யதிஹ புநஸ் த்வத்பரம் தத்துஸர்வம்
பராஹூர் நைர்குண்ய நிஷ்டம் ததநு பஜநதோ மங்க்ஷு ஸித்தோ பவேயம்
No comments:
Post a Comment