எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Friday, December 24, 2010

மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாள் 8

கீழ்வானம் வெள்ளென்று எருமை சிறுவீடு
மேய்வான் பறந்தனகாண் மிக்குள்ள பிள்ளைகளும்
போவான் போகின்றாரைப் போகாமல் காத்து உன்னைக்
கூவுவான் வந்து நின்றோம்! கோது கலமுடைய
பாவாய்! எழுந்திராய் பாடிப் பறைகொண்டு
மாவாய் பிளந்தானை மல்லரை மாட்டிய
தேவாதி தேவனைச் சென்று நாம்சேவித்தால்
ஆவாவென்று ஆராய்ந்து அருளேலோரெம்பாவாய்!

இப்போ வானமோ வெளுத்துவிட்டது. எருமைமாடுகளும் கறவை முடிந்து மேயக்கிளம்பிவிட்டன. நீ இன்னுமா எழுந்திருக்கவில்லை என்கிறாள் ஆண்டாள்.

அவள் அழைக்கும் பெண்ணோ கண்ணன் மனதுக்கு நெருங்கியவளாய் இருக்கணும். அதனால் அவளைக் கோதூகலமுடைய பாவாய் என அழைக்கிறாள்.

கோதூகலமுடைய பாவாய், கீழ்வானம் வெளுத்து எருமைகள் எல்லாம் புல் மேயக் கிளம்பிவிட்டனவே. நீ என்ன இன்னும் எழுந்திருக்கவே இல்லையா? இங்கே வானம் என்பது ஆகாயத்தைக் குறித்தாலும் நம் உள்ளத்தையும் குறித்துச் சொல்லப் பட்டிருக்கலாம். நம் உள்ளம் தூய்மையாக வெளுத்து எந்தவிதமான தோஷங்களும் இல்லாமல் நிர்மலமாய் இருத்தலையே இங்கே சொல்லி இருக்கவேண்டும். அதேபோல் எருமையும் இங்கே நம் அறியாமையைக் குறிப்பதாய் இருக்கவேண்டும். அறியாமையில் மூழ்கி மூழ்கி நாம் ஆங்காங்கே தடங்கித் தடங்கி மெல்ல மெல்ல இறைவன் திருவடியை நோக்கிப் பயணிக்கிறோம். எருமை மாடுகள் மேயப் போனாலும் மேய்ச்சல் நிலத்துக்கு நேராய்ப் போவதில்லை அல்லவா? அதே போல்! வழியில் அதுபாட்டுக்குப் படுத்துக்கும், நிற்கும், தண்ணீரைக் கண்டால் வாலால் அடித்துச் சேற்றைக் குழப்பும். இப்படியே நாமும் அந்த எருமை மாட்டைப் போலவே வாழ்க்கையின் அனைத்து ரசங்களிலும் ஆழ்ந்து போய் மிகவும் தாமதமாகவே இறைவனைத் தேட ஆரம்பிக்கிறோம்.

(இது எல்லாமே என்னையே சுட்டுவது போல் இருக்கே! )

மிக்குள்ள பிள்ளைகளும் போவான் போகின்றாரைப் போகாமல் காத்து உன்னை= ஆனால் இங்கே வந்திருப்பதோ பரமனுக்குப் ப்ரீதியான பிள்ளைகள் அன்றோ, அவன் மனதுக்கு அண்மையில் இருப்பவர்கள் அன்றோ. இவர்கள் வெகுவிரைவில் அவர்கள் போகவேண்டிய இடத்துக்குச் சென்றுவிடுவார்களே, அதுவரையிலும் அவர்களைப் போகாமல் உனக்காகத் தடுத்து நிறுத்தி உள்ளேன்.



கூவுவான் வந்து நின்றோம்!
பாவாய்! எழுந்திராய் பாடிப் பறைகொண்டு
மாவாய் பிளந்தானை மல்லரை மாட்டிய
தேவாதி தேவனைச் சென்று நாம்சேவித்தால்
ஆவாவென்று ஆராய்ந்து அருளேலோரெம்பாவாய்! =

பெண்ணே, நீ கண்ணனுக்கு மிகவும் பிடித்தவள் அன்றோ? நாங்கள் முன்னாலேயே இது இது செய்யவேண்டும் என்று ஒருவருக்கொருவர் பேசிக்கொண்டோம். இப்போது உன்னை இங்கேயே விட்டு விட்டுச் சென்றால் கண்ணன் நீ வந்திருக்கிறாயா எனக் கேட்டால்?? என்ன சொல்வோம் பெண்ணே! கண்ணனைப் பாடி அவன் புகழைப் பாடி வாழ்த்துவோம். கண்ணன் கம்சன் சபையில் மல்லர்களை வென்றான், கேசி என்ற அசுரனை வென்றான். பகாசுரன் என்னும் கொக்கசுரனை வென்றான். இப்படி அனைத்து அரக்கர்களையும் வென்ற தேவாதிதேவனாகிய கண்ணனின் திருவடியை நாம் போற்றிப் பாடினால் , "ஆஹா, நாம் நம் அடியார்களைத் தேடிப்போகவேண்டியதிருக்க அவர்களே இங்கு வந்துவிட்டார்களா?" என்று கண்ணன் நமக்கு அவன் அருளை மழையாகப் பொழிவான்.

இதையே நாராயண பட்டத்திரி கண்ணனின் மகிமைகளை எடுத்துச் சொல்லும் விதமாய்க் கூறுகிறார். பரப்ரம்மம் என்பது எல்லையைக் கடந்து நிலை பெற்றிருப்பது என்கிறார். மேலே ஆண்டாள் அவன் மனதுக்குப் ப்ரீதியானவர்களை எவ்விதம் விட்டுச் செல்வது என அனைவரையும் கூட வருமாறு அழைக்கிறாள். பட்டத்திரியோ நிறைந்திருக்கும் இந்தப் பரம்பொருள் சகலமாகவும் இருக்கிறானே என ஆச்சரியப் படுகிறார்.

"நிஷ்கம்பே நித்யபூர்ணே நிரவதி பரமாநந்த பீயூஷரூபே
நிர்லீநாநேக முக்தாவலி ஸுபகதமே நிர்மல ப்ரஹ்மஸிந்தெள
கல்லோலோல்லாஸ துல்யம் கலு விமலதரம் ஸத்வமாஹூஸ் ததாத்மா
கஸ்மாந்தோ நிஷ்கலஸ்த்வம் ஸகல இதி வசஸ்த்வத் கலாஸ்வேவ பூமந்

தெளிந்த கடல் போன்ற ஆழமான எங்கேயும் நிறைந்திருக்கும் எல்லைகளே இல்லாத பரப்ரும்மம் ஆனது பரமாநந்தம் என்னும் அமுதக் கடலாகும். அசைவற்றிருக்கும் இது ஒரு சமயம் அசையவும் செய்யும். ஆழ்கடலில் அடியில் காணப்படும் நல்முத்தூக்களைப் போல இங்கே பக்தர்கள் இந்த அமுதக் கடலில் மூழ்கித் தங்களை மறந்து பகவத் பக்திப் பரவசத்தில் ஆழ்ந்து கிடக்கிறார்கள். எல்லா நலன்களையும் தன்னில் மூழ்கிய பக்தர்களுக்குத் தரும் இந்தக் கடலில் பகவானுடைய திவ்ய மங்கள விக்ரஹம் ஓர் பேரலையைப் போல் தோன்றுகிறது. பக்தர்கள் அதைக் கண்டு பரவசம் அடைகின்றனர்.

4 comments:

  1. ஓவொரு பாடலுக்கும் எளிமையான அழகான விளக்கம்... ரெம்ப நல்லா இருக்குங்க மாமி... பகிர்ந்தமைக்கு நன்றி...

    ReplyDelete
  2. // தண்ணீரைக் கண்டால் வாலால் அடித்துச் சேற்றைக் குழப்பும். இப்படியே நாமும் அந்த எருமை மாட்டைப் போலவே வாழ்க்கையின் அனைத்து ரசங்களிலும் ஆழ்ந்து போய் மிகவும் தாமதமாகவே இறைவனைத் தேட ஆரம்பிக்கிறோம்.//
    true..absolutely true. Your simple way of explanations makes it very interesting to read. Thanks a lot ,Maami.:)))

    ReplyDelete
  3. வாங்க ஏடிஎம், வந்ததுக்கு நன்னிங்கோ. அதென்ன நான் ஊரிலே இல்லைனு தெரிஞ்சுண்டு வந்திருக்கீங்க?? :P

    ReplyDelete
  4. வாங்க எஸ்கேஎம், எல்லாருமே எருமை மாட்டைப் போலத் தான் இருக்கோம்! இல்லையா?? :( மாறணும்!

    ReplyDelete