ஊருக்குப் போவது மட்டுமே முடிவு செய்திருந்தோமே தவிர சிதம்பரம் பயணம் கிளம்ப இரண்டு நாட்கள் முன்னரே தீர்மானிக்கப்பட்டு தீக்ஷிதரிடமே தங்குமிடத்துக்கும் சொல்லி இருந்தோம். சாதாரண நாட்களிலேயே சிதம்பரத்தில் தங்குமிடம் கிடைப்பது அரிது. பக்கத்தில் வைத்தீஸ்வரன் கோயிலோ, ,மாயவரமோ போனால் வசதியாய்த் தங்கலாம். வசதியாய் தரிசனம் செய்ய இயலாது. ஆகையால் தீக்ஷிதர் காட்டி இருந்த அறை கொஞ்சம் முன்னே பின்னே இருந்தாலும் சரினு போய்த் தங்கிட்டோம். ஒருமுறை நிகழ்வுகளை எங்களுக்குச் சொல்லிவிட்டு, அன்று மாலை நடராஜர் தரிசனம் பொன்னம்பலத்தில் செய்து வைக்கிறதைச் சொல்லி எங்களை வரச் சொல்லி இருந்தார்.
அறையில் போய் ஓய்வு எடுத்துக்கொண்டு பின்னர் மாலை நாலரை அளவில் கோயிலுக்குக் கிளம்பினோம். கீழவீதியிலேயே தீக்ஷிதர் வீட்டுக்கு எதிரேயே அறை இருந்ததால் எல்லாவற்றுக்கும் வசதியாகவும் இருந்தது. எங்கள் வீட்டில் எல்லாருக்கும் சிதம்பரம் கட்டளை இருப்பதால் பொன்னம்பலம் தரிசனமும், சிதம்பர ரகசியம் தரிசனமும் கனகசபையிலே இருந்தே பார்க்க முடியும். அதே சலுகையை தேரோட்டத்துக்கு முன்னர் ஸ்வாமி புறப்பாடிலும், தேரோட்டத்தின் போதும், அதன் பின்னர் ஸ்வாமி ஆயிரங்கால் மண்டபவருகையின் போதும், அபிஷேஹம், ஆருத்ரா தரிசனம் போதும் எதிர்பார்க்க முடியாது என்பதை தீக்ஷிதர் ஏற்கெனவே குறிப்பால் உணர்த்தி இருந்தார். இவை எல்லாம் அன்றைய கட்டளை தாரர்களை முன்னிறுத்திச் செய்யப் படும். கட்டளைக்காரர்கள் பச்சையப்ப முதலியார் குடும்பத்தினர்.
மார்கழி மாசம் ஆரம்பத்தில் இருந்தே மாணிக்க வாசகருக்குச் சிறப்பான வழிபாடுகள் நடக்கும். ஈசன் அந்தணர் வடிவில் வந்து மாணிக்கவாசகர் சொல்லச் சொல்லத் திருவாசகம் முழுதும் எழுதி முடித்துக் கடைசியில், "வாதவூரான் சொல்ல தில்லைச் சிற்றம்பலத்தான் எழுதியது" எனக் குறிப்பிட்டுக் கைச்சாத்து வைத்து அதைப் பொன்னம்பலப் படிகளில் வைத்திருந்தார். மறுநாள் ஈசன் வழிபாட்டுக்கு வந்த தீக்ஷிதர்கள் அதைக்கண்டு வியந்து அடிகளாரிடம் கேட்க, அடிகளாருக்கு அப்போது தான் நடத்தியது ஈசன் திருவிளையாடல் எனப் புரிந்தது. திருவாசகத்தின் பொருளை விளக்கும்படி தில்லை வாழ் அந்தணர்கள் கேட்டதுக்குச் சிற்றம்பலம் வந்து சொல்வதாய்ச் சொன்ன மணிவாசகர், சிற்றம்பலத்துக்கு வந்ததும், "திருவாசகத்தின் பொருள் இதுவே!' எனக்கூறி சிற்றம்பலத்தின் உள்ளே சென்று அனைவரும் காண ஈசனோடு ஐக்கியமானார். அந்த நிகழ்ச்சி நடைபெற்ற நாள் திருவாதிரைத் திருநாள் என்ற ஐதீகம். ஆகவே மார்கழி மாதம் முழுதும் மாணிக்க வாசகர் ஒவ்வொரு கால வழிபாட்டின் போதும் சிற்றம்பத்தில் எழுந்தருளுவார். மாணிக்கவாசகருக்குத் தனிச் சந்நிதி உண்டு. மாணிக்கவாசகரின் பதிகங்கள் ஓதுவார்களால் பாடப்பெறும்.
21 பதிகங்கள் பாடப்பட்டு 21 முறை தீபாராதனை எடுக்கப் படும். இதிலே மாணிக்கவாசகர் ஈசனுக்கு எடுப்பதாகவும் ஐதீகம். இவை முடிந்ததும் மாணிக்கவாசகருக்கும், ஆநந்த நடராஜருக்கும் அடுக்குதீபாராதனை, கற்பூர ஆரத்தி காட்டப்படும். ஆகவே நாங்கள் சென்ற 20-ம்தேதி மாலை அதைப் பார்த்துவிட்டுச் செல்லும்படி தீக்ஷிதர் கூறி இருந்தார். நாங்கள் கோயிலுக்குச் சென்றபோது மாலை வழிபாடு இன்னும் ஆரம்பிக்கவில்லை. ஆகவே முதலில் நடராஜர், சிவகாமசுந்தரி தரிசனம் காணச் சென்றிருந்தோம். அங்கே நடராஜரும், சிவகாமி அம்மையும் பட்டுத்துணிகளால் மூடப்பட்டு முகம் மட்டுமே தெரியும்படி அமர்ந்திருந்தார்கள். இது என்ன???
நேத்திக்குப் பார்த்தது ஆநந்த நடராஜரின் தேரும், பிள்ளையார் தேரும், இப்போது பார்ப்பது சிவகாமசுந்தரியின் தேரும், சுப்ரமண்யர் தேரும்.
தொடரும்.
நேரிலே பார்ப்பது போல வர்ணிப்பதே படிக்க பரவசமாக இருக்கிறது
ReplyDeleteமார்கழி 16 ஆம் நாள் பதிவை எதிர்பார்த்து கொண்டு இருக்கிறோம் !
இனிய 2011புதுஆண்டு வாழ்த்துக்கள் கீதாம்மா!
/ஆகவே முதலில் நடராஜர், சிவகாமசுந்தரி தரிசனம் காணச் சென்றிருந்தோம். அங்கே நடராஜரும், சிவகாமி அம்மையும் பட்டுத்துணிகளால் மூடப்பட்டு முகம் மட்டுமே தெரியும்படி அமர்ந்திருந்தார்கள்.//
ReplyDeleteஎப்போ எந்த கோவில் போனாலும் இப்படித்தானே? ஸ்வாமியை சரியா பார்க்க முடிகிறதே இல்லை. துணியும் மாலையும் மத்த அலங்காரங்களும்.
வாங்க ப்ரியா, பதிவுகள் அப்லோட் பண்ணத் தாமதம் ஆகிவிடுகிறது. காலைவேளையில் உட்காரமுடியறதில்லை. இணையத்தில் செலவு செய்யும் நேரம் குறைந்து விட்டது. அதனால் கொஞ்சம் முன்னேப் பின்னே வரும். பொறுத்துக்குங்க! :))))))))
ReplyDelete@திவா, அந்த அர்த்தம் இல்லை. இங்கே உள்ளே நடராஜருக்கு அலங்காரம் ஆயிண்டு இருக்கிறது. அது ரகசியம் என்பதால் பட்டுத்துணியால் மூடி இருக்காங்க. :D
ReplyDelete