புள்ளும் சிலம்பினகாண் புள்ளரையன் கோயிலில்
வெள்ளை விளிசங்கின் பேரரவம் கேட்டிலையோ!
பிள்ளாய்! எழுந்திராய், பேய்முலை நஞ்சுண்டு
கள்ளச் சகடம் கலக்கழியக் காலோச்சி,
வெள்ளத்தரவில் துயிலமர்ந்த வித்தினை
உள்ளத்துக் கொண்டு முனிவர்களும் யோகிகளும்
மெள்ள எழுந்து அரியென்ற பேரரவம்
உள்ளம் புகுந்து குளிர்ந்தேலோ ரெம்பாவாய்!
இப்போது ஆண்டாள் தன்னுடன் கண்ணன் புகழைப்பாட மற்றப் பெண்களையும் அழைக்க ஆரம்பிக்கிறாள். ஒரு மாதிரியாகத் தடங்கல் சொல்லிக்கொண்டிருந்தவர்களை எல்லாம் பரமனின் புகழையும், செளந்தர்யத்தையும் அவன் கருணையையும் விவரித்துக் கூறி அவனைச் சரண் என அடைந்தால் நம் அனைத்துப் பாவங்களும் தீயில் எரிந்த தூசைப் போல் எரியும் என்றவள், இப்போது மற்றப் பெண்களையும் கூப்பிடுகிறாள். ஒரு வீட்டிற்குச் சென்று அந்தப் பெண்ணை எழுப்புகிறாள். பெண்ணே எழுந்திரு என்கிறாள். அதுவும் எவ்வாறு?
புள்ளும் சிலம்பின காண்= அடி பெண்ணே, விடிந்துவிட்டதே? இங்கே புள் என்பது பறவைகளைக் குறிக்கும். பறவைகள் விடியலைக்கண்டு சந்தோஷத்தில் கத்திக் கூச்சல் போடுகின்றனவே! அதற்கு என்ன அழகான ஒரு தமிழ்ச்சொல்! சிலம்பின!
புள்ளரையன் கோயில்= புள்ளரையன் இங்கே கருடனைக் குறிக்கும் என்று சிலர் கூற்று. எப்படி ஆனாலும் அனைத்துக்கும் தலைவன் ஆன அந்த ஸ்ரீமந்நாராயணனையே இது சொல்கிறது. புள்ளரையன் பக்ஷிராஜாவான கருடனின் தலைவன் ஆன ஸ்ரீமந்நாராயணனின் கோயிலில்
வெள்ளை விளிசங்கின் பேரரவம் கேட்டிலையோ = விடிந்து வெள்ளை வந்துவிட்டது என்பதற்கு அறிகுறியாகச் சங்கு ஊதுகிறார்களே அந்தச் சத்தம் கேட்கவில்லையா உனக்கு??
பிள்ளாய்! எழுந்திராய்! ஏ பெண்ணே! எழுந்திரு.
தென் தமிழ்நாட்டில் இப்போதும் பெண்குழந்தைகளைப் பிள்ளை என அழைக்கும் வழக்கம் உண்டு. அது அந்நாட்களிலும் இருந்திருக்கிறது தெரிய வருகிறது.
பேய்முலை நஞ்சுண்டு கள்ளச் சகடம் கலக்கழியக் காலோச்சி,= பால கிருஷ்ணனைக் கொல்ல அனுப்பப்பட்ட பூதனையின் நஞ்சு கலந்த பாலை உண்டானே கண்ணன், அது மட்டுமா? சகடாசுரன் வண்டிச்சக்கரத்துக்குள்ளே புகுந்துகொண்டு கண்ணனைக் கொல்லப் பார்த்தானே? கண்ணன் இதுக்கெல்லாம் அஞ்சவே இல்லையே? தன்னைக்கொல்ல வந்த பூதனையைக் கொன்றும், சகடாசுரனை அழித்தும் அவர்கள் மூலம் மேலும் நமக்குக் கஷ்டம் வராமல் காத்தானே அதை மறந்துவிட்டாயா பெண்ணே!
ஆனாலும் அந்தப்பெண் அதான் எல்லாம் முடிஞ்சாச்சே, அதனால் என்னனு மேலும் கேட்கிறாள்.
வெள்ளத்தரவில் துயிலமர்ந்த வித்தினை=ஆதிசேஷன் மேல் துயில் கொண்டிருக்கும் மூலவித்தான பரமனை. பரமன் ஒருவனே ஆதிவித்து, மூலவித்து, சகலமும் அவன் மூலமே வந்தது. அவன் ஒருவனே நிரந்தரம். அத்தகைய மூலவித்தான பரமன் வெண்மையான பாற்கடலில் அரவத்தின் மேல் துயில் கொண்டிருக்கிறான் என்றும் கொள்ளலாம். அல்லது யோக மார்க்கத்தில் உள்ளே இருக்கும் குண்டலினியை எழுப்பும் மூலகர்த்தாவாய் இருக்கிறான் என்றும் கொள்ளலாம்.
உள்ளத்துக்கொண்டு முனிவர்களும் யோகிகளும் =அத்தகைய மூலவித்தைத் தியானித்துத் தவமும், யோகமும் இருக்கும் முனிவர்களூம், யோகிகளும் மெல்ல எழுந்து
அரியென்ற பேரரவம் உள்ளம் புகுந்து குளிர்ந்தேலோ ரெம்பாவாய்= "ஹரி, ஹரி, ஹரி, ஹரி, ஹரி, ஹரி, ஹரி" என்று கோஷிக்கிறார்களே, அந்த ஓசை உனக்குக் கேட்கவில்லையா? எங்கள் உள்ளமெல்லாம் குளிர்ந்துவிட்டதே! அந்தப்பேரொலி கேட்டே நாங்கள் உன்னை எழுப்ப வந்தோம். எழுந்திரு பெண்ணே! பரந்தாமனின் குணவிசேஷங்களைப் பற்றிக் கேட்டாலோ, பார்த்தாலோ, சொன்னாலோ உள்ளம் மயக்கம் கொள்ளும், என்றாலும் சிலரால் மட்டுமே விரைவில் அத்தகைய மோன நிலைக்குச் செல்ல முடிகிறது. சிலரால் அவரவர் கர்மவினையைப் பொறுத்து மெல்லத் தான் செல்ல முடிகிறது. ஆகவே கர்மவினையிலிருந்து சீக்கிரம் விடுபட நாம் சீக்கிரமாகவே அவன் திருவடியில் சரணடையவேண்டும். அதற்கு நமக்குத் தேவைப்படுவது எளிய பக்தியே.
இதையே பட்டத்திரி கூறுவது எவ்வாறெனில்,
த்வத்பக்திஸ்து கதா ரஸாம்ருதஜரீ நிர்மஜ்ஜநேந ஸ்வயம்
ஸித்த்யந்தீ விமல ப்ரபோத பதவீம் அக்லேஸதஸ்தந்வதீ
ஸத்ய: ஸித்திகரீ ஜயட்யயிவிபோ ஸைவாஸ்துமே த்வத்பத
ப்ரேம ப்ரெளடி ரஸார்த்ரதர த்ருதரம் வாதாலயாதீஸ்வர'
பரந்தாமனின் திவ்ய சரித்திரங்களைக் கேட்டாலோ, பாராயணம் பண்ணினாலோ, அவை அமுதபானம் செய்தற்கு ஒப்பாகும். அமுதமான அவற்றில் மூழ்கித் திளைக்கும் அடியார்கள் பரமனை நினைந்து பக்தியில் பொங்குகிறார்கள். இந்த எளிய பக்தி ஒன்றே அவர்களுக்கு ஞாநபோதத்தை அளிக்கவல்லதாகிறது. பிறவிப்பயனையும் அளிக்கிறது. ஆகையால் இத்தகைய பக்தியே சிறந்தது. ஏ, பகவானே, உம்மை நான் வேண்டுவதே இத்தகைய பக்தியில் நான் மூழ்கி எந்நேரமும் உன் திருவடிகளிலேயே திளைத்திருக்கவேண்டும் என்பதே.
No comments:
Post a Comment