எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Saturday, March 12, 2011

சாதனைப் பெண்களைப் பாரீர்!

பெண் நெருப்பை ஒத்தவள். அவளால் ஆக்கவும் முடியும், அழிக்கவும் முடியும். நெருப்பு எவ்வாறு ஆக்கபூர்வமான காரியங்களுக்கும் பயன்படுகிறதோ, அவ்வாறே பெண்ணும் ஆக்கபூர்வமான காரியங்களில் மட்டுமே தன் சக்தியைச் செலவிட வேண்டும். காட்டுத் தீயானது எப்படி எல்லாமோ எரிந்து காட்டையே அழிக்கும். ஆனால் வீட்டில் எரியும் அகலோ தன்னைச் சுற்றி இதமான வெளிச்சத்தைப்பரப்பும். பெண்கள் இதமான அகல்விளக்குப் போல் நின்று நிதானமாய்ச் சுடர் விட்டு எரியவேண்டும். அவர்களை அவ்விதம் நிலை நிறுத்துவதில் ஆண்களுக்கும் பெரும் பங்கு உண்டு. சங்கப் புலவர்களான பெண்களை ஆதரித்த பெரும்பாலான அரசர்கள் ஆண்களே. அதன் பின்னும் கண்ணகி, (மதுரையை எரித்ததால் எனக்குக் கண்ணகியோட கொள்கையில் விரோதம் உண்டு, என்றாலும், அந்தக் காலத்திலேயே தைரியமாய் ஒரு அரசனோடு சண்டை போட்டது மட்டும் பிடிக்கும், மற்றபடி கண்ணகி கதையைத் தனியா வச்சுப்போம்)ஒரு கணிகையாகக் கணிகைக் குலத்தில் பிறந்தும் கோவலனைத் தவிர வேறு எவரையும் ஏற்காத மாதவி, அவள் மகள் மணிமேகலை, இவளும் கணிகையர் குலத்தில் பிறந்தும் இல்வாழ்க்கையை நாடாமல் ஒரு புத்த பிக்ஷுணியாகத் தன் வாழ்க்கையை நடத்தியதோடு தனக்குக் கிடைத்த அக்ஷயபாத்திரத்தின் மூலம் மக்களின் பசியாற்றி வந்தாள். பாண்டிமாதேவி, அதன் பின்னர் வந்த திலகவதியார், இவர் இல்லை எனில் நாவுக்கரசர் எங்கே? ஈசனே அம்மையே என அழைத்த, காரைக்கால் அம்மையார் என்னும் புனிதவதியார், சோழநாட்டு இளவரசியான மங்கையர்க்கரசி பாண்டிய மன்னனுக்கு வாழ்க்கைப்பட்டுப் பாண்டிமாதேவியாகி சைவத்திற்குப் பெரும் தொண்டாற்றி அறுபட்து மூன்று நாயன்மார்களில் ஒருவரான பாண்டிமாதேவி,ஆகியோரைத் தவிர்த்துப் பின்னர் வந்த ஆண்டாளின் மனோ தைரியத்தையும், அவளின் பக்தியையும் பற்றி எழுதத் தனியாகத்தான் பதிவிடவேண்டும்.

தன் விருப்பத்தை உரக்கச் சொல்லி அந்த ரங்கமன்னாரைத் தவிர வேறு எவரானாலும் திரும்பிக்கூடப் பார்க்கமாட்டேன் என்று சொல்லிவிட்டாளே! இப்படிப் பல பெண்கள் தங்கள் திறமையைக் காட்டியே வந்திருக்கின்றனர். இவங்க எல்லாம் பல நூற்றாண்டுகள் முன்னே வாழ்ந்தவங்க என்று திரு ஜோ கூறுவதால், சென்ற நூற்றாண்டில் வாழ்ந்த சுதந்திரத்திற்கு உழைத்த சில பெண்மணிகளின் பெயரைக் கூறுகிறேன். சிவகங்கைச் சீமையை ஆண்டமுத்து வடுகரின் மனைவியான வேலு நாச்சியார், வட மாநிலங்களின் பீமாபாய் ஹோல்கர், ராணி லக்ஷ்மிபாய், ராணி சன்னமா, மற்றும் வீரசாவர்கரின் உதவியுடன் இந்திய தேசீயக் கொடியை முதலில் வடிவமைத்த மடாம் கமா.

இவர்களுக்குப் பின்னர் வந்த காலத்தில் நேருஜியின் சகோதரி ஆன, திருமதி விஜயலக்ஷ்மி பண்டிட், திருமதி சுசேதா கிருபளானி,
திருமதி சுசேதா கிருபளானி, திரு கிருபளானியைத் திருமணம் செய்து கொண்டபோதே இருவரும் இல்வாழ்க்கை வாழவேண்டாம் என்ற முடிவு எடுத்துக்கொண்டு அதற்குச் சம்மதித்தே திருமணம் செய்து கொண்டனர். கடைசிவரையிலும் இருவரும் ஒரே வீட்டில் இருந்தாலும் கணவன், மனைவியாக இல்வாழ்க்கை நடத்தவில்லை, குழந்தைகள் பெற்றுக்கொள்ளவும் இல்லை. நாட்டு நலனுக்காகவே தங்கள் வாழ்க்கையைச் செலவிட்டனர். கவிக்குயில் என்று போற்றப் பட்ட சரோஜினி நாயுடு, அவரின் மகள் பத்மஜா நாயுடு, மஹாத்மாவின் மனைவி கஸ்தூரிபாய் காந்தி, பேகம் ஆஜாத், ஆகியோரும்,

நேதாஜியின் உளவாளி - வீரப்பெண்மணி சரஸ்வதி ராஜாமணியைத் தவிர காப்டன் லக்ஷ்மி என்னும் பெண்மணி, மிகச் சமீபத்தில் இறந்தார். வெள்ளையனே வெளியேறு இயக்கத்திற்கு மும்பையில் கொடி பிடித்துத் தலைமை வகித்த அருணா ஆசப் அலி, வெளிநாட்டில் பிறந்து இந்தியாவுக்கு வந்து இந்திய சுதந்திரத்துக்குப் போராடிய அன்னிபெசண்ட் அம்மையார்,
அன்னிபெசண்ட் அம்மையாரால் கவரப்பட்ட மருத்துவக்கல்லூரி மாணவி சிவகாமு அம்மாள்.
அன்னியத் துணிகளைப்பகிஷ்காரம் செய்த பத்மாசனி அம்மாள். டிவிஎஸ்.செளந்தரம் அம்மாள், டாக்டர் பிச்சைமுத்து அம்மாள் சேலம் அங்கச்சி அம்மாள், தென்னாற்காடு மாவட்ட வேலு நாச்சியார் எனப் புகழப்பட்ட கடலூர் அஞ்சலையம்மாள், ருக்மிணி லக்ஷ்மிபதி

உப்புச் சத்தியாகிரஹத்தில் ஈடுபட்ட துர்காபாய் அம்மாள், கிருஷ்ணம்மா, மேலும் துணிக்கடைகள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட எஸ்.அம்புஜம்மாள், இவரோடு போராட்டத்தில் ஈடுபட்டபோது தலைச்சேரி நீதிமன்றம் செல்லும் வழியில் அந்நியர்களின் காவல் படையினரால் தாலி அறுக்கப்பட்ட பி.லீலாவதி, லலிதாபிரபு, இதனால் அந்த இடமே தாலியறுத்தான் தலைச்சேரி என்று பின்னாட்களில் குறிப்பிடப் பட்டது. வ.வே.சு. ஐயரின் மனைவி பத்மாவதி அம்மாள், கமலாதேவி சட்டோபாத்யாயா, பெண்கள் அடிமைகள் என்று கூறப்பட்ட காலத்திலேயே அபலைப் பெண்களுக்காக சேவாசதனம் ஏற்படுத்தித் திறம்பட நிர்வகித்த சகோதரி சுப்புலக்ஷ்மி, முதல் பெண் மருத்துவரான டாக்டர் முத்துலக்ஷ்மி ரெட்டி


தேசபக்திப் பாடல்களைப் பாடிப் பிரசாரம் செய்த கே.பி.சுந்தராம்பாள், டி.கே.பட்டம்மாள். எஸ்.ஆர்.ரமாமணிபாய், வை.மு.கோதைநாயகி அம்மாள்.மதுரை எம்.கண்ணம்மாள் ,
எழுத்துக்கள் மூலம் தேசபக்தியைப் பரப்பிய பண்டிதை அசலாம்பிகை அம்மாள், இன்னும் எண்ணற்ற பெண்கள் இருக்கின்றனர். இவர்களில் திருமதி எம்.எஸ்.சுப்புலக்ஷ்மி அம்மாளின் இனிய சங்கீதத்தைப் பற்றிக் கூறவேண்டியதில்லை. அதே போல் திருமதி எம்.எல்.வசந்தகுமாரி, என்.சி. வசந்த கோகிலம், டி.கே,பட்டம்மாள், ஆகியோர் தங்கள் குடும்பத்தையும் கவனித்துக்கொண்டு திறம்பட சங்கீத மேடையிலும் ஆட்சி செலுத்தினார்கள். கணித மேதை சகுந்தலா தேவியைப் பற்றியும் அறியாதோர் இருக்க மாட்டோம. பாராளுமன்றத்தின் ராஜ்யசபாவில் நீண்ட காலம் தலைவராகப் பதவி வகித்த நெஜ்மா ஹெப்துல்லா, இளம் வயதிலேயே அமைச்சரான சுஷ்மா ஸ்வராஜ், தன் தைரியத்தாலும், அதிரடி நடவடிக்கைகளாலும் அனைவரையும் கவர்ந்த திருமதி இந்திரா காந்தி, ஜெயலலிதா, விண்வெளி வீராங்கனைகள் கல்பனா சாவ்லா, பெப்ஸியின் தலைவர் இந்திரா நூயி, சுனிதா வில்லியம்ஸ் என்னும் விண்வெளி வீராங்கனை, பிரிட்டன் பிரதமரின் அமைச்சரவையில் இடம் பெற்றிருக்கும் சுருதி வதேரா,

தன் குழந்தைகளைக் கவனித்துக்கொள்ள வேண்டிக் கிட்டத்தட்டத் திருமணம் ஆகி இருபது வருடங்கள் தன் கச்சேரிகளில் இருந்து விலகி இருந்த அருணா சாயிராம், மேலும் இன்று சங்கீத உலகில் திறம்படக் கோலோச்சும் பெண்கள் செளமியா, சுதாரகுநாதன், நித்யஸ்ரீ, பாம்பே ஜெயஸ்ரீ, காயத்ரி வெங்கட்ராகவன், காயத்ரி கிரீஷ், அனுராதா கிருஷ்ணமூர்த்தி, கன்யாகுமரி, அக்கரை சுப்புலக்ஷ்மி என எண்ணற்றோரைச் சொல்லலாம். அவ்வளவு ஏன், நம் சமகாலத்தில் நம்மோடு இணையத்தில் இன்னமும் தொண்டாற்றும் சீதாம்மாவும், ராஜம் அம்மாவும் வாழும் இதிகாசங்கள். சீதாம்மா சமூகத் தொண்டில் தலை சிறந்து நின்றிருக்கின்றனர். ராஜம் அம்மாவோ தமிழுக்கு ஆற்றிய தொண்டை நினைக்க நினைக்க மலைப்பாய் இருக்கிறது. தனி ஒரு மனுஷியாக இருவரும் பல விதங்களிலும் சாதித்திருக்கின்றனர்.

நினைவில் வந்தவர்கள் பெயர் மட்டுமே கூறியுள்ளேன். இன்னும் எத்தனையோ பேர் உள்ளனர். ஆக இதன் மூலம் தெரிவது என்னவென்றால் பெண் தன்னை வெளிப்படுத்திக்கொள்ள அவளே முயலவேண்டும் என்பதே. சில வீடுகளில் குடும்பச் சூழ்நிலை சரியாய் இருக்காது என்று சொல்வார்கள். உண்மையே. அப்படிப்பட்டவர்கள் தங்கள் குடும்பத்தின் மகிழ்வை மட்டுமே கவனித்துக்கொண்டு வந்தால் நாளாவட்டத்தில் அவர்கள் விரும்பும் சூழ்நிலை குடும்பத்தில் உருவாகும். கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையும் என்பார்கள் அல்லவா?? ராஜம் அம்மா கல்லூரியில் தமிழ் படிக்கவும், தமிழுக்குத் தொண்டாற்றியும் பட்ட கஷ்டங்களை எல்லாம் நினைத்துப் பார்த்தால் சோதனைகளைத் தாண்டப் பெண் ஒருத்தியாலேயே இயலும் என்பது முற்றிலும் உண்மை என்றே தோன்றுகிறது.

இதிலே தமிழ் மரபு அறக்கட்டளையின் தலைவியான திருமதி சுபாஷிணி ட்ரெம்மல் அவர்களைப் பற்றிக் குறிப்பிட மறந்திருக்கிறேன். தமிழ்நாட்டுப் பூர்வீகம் ஆனாலும் மலேஷியாவிலேயே பிறந்து வளர்ந்து படித்து, அங்கே முதலில் ஆசிரியை வேலை பார்த்துப் பின்னர் கணினித் துறைக்கு வந்திருக்கும் இவரின் தாயார் ஒரு எழுத்தாளர். தாய்மொழி, தந்தை மொழி தமிழ் என்பதாலேயே தமிழை நன்கு கற்ற இவரும் கொரியாவின் விஞ்ஞானியான திரு நா. கண்ணனும் முனைந்து தமிழ் மரபையும், பழங்காலத்து அச்சு நூல்கள், ஏடுகள் என மின்னாக்கம் செய்து பொதுமைப் படுத்தவும், தமிழ் மரபுகள், நாட்டுப்புறக்கலை, தாலாட்டுப் பாடல்கள், பாரம்பரியங்கள், கலை, சங்கீதம், பக்தி இலக்கியங்கள் ஏற்படுத்திய தாக்கம் என அனைத்தையும் வலையேற்றுவதற்காக ஏற்படுத்திய இந்த அறக்கட்டளையைப் பல விதங்களிலும் பாடுபட்டு மேம்படுத்தி வருகின்றார். தமிழ் கூறும் நல்லுலகில் இன்று இந்த அறக்கட்டளையும் இதைச் சார்ந்த மின் தமிழ்க் குழுமமும் குறிப்பிடத்தக்க பணிகளை ஆற்றி வருவது திருமதி சுபாவின் தலைமைப் பண்பினாலும், அவரின் பல்வேறுவிதமான முயற்சிகளாலுமே. அவ்வகையில் இவரும் ஒரு சாதனைப் பெண்மணியே.

10 comments:

  1. குடும்பம் என்ற ஒன்றே பெண்கள் முன்னேறத் தடை ....

    ReplyDelete
  2. ரொம்ப சமீபத்தில் உள்ள மகளிர்களில் பூனாவில்காலம் சென்ற Dr பானு ஜஹாங்கீர் கோயாஜி அவர்கள் பூனா, மஹராஷ்ராவில் கிராம மருத்துவ சேவை செய்தவர்கள் . அவருடன் வேலை செய்யும் வாய்ப்பு எனக்கு 1984 - 1986 கிடைத்தது .கிங் எட்வர்ட் மெமோரியல் ஹாஸ்பிடல் டைரக்டர், கிராமங்களில் குடும்பநல மருத்துவத்திட்டம் ஒரு சின்ன க்ரூப் of community workers உதவியோடு துடங்கி வெற்றிகரமாய் நடத்தியவர்!!,young women's health and developmental projects ,மஹிலா மண்டல், கன்யா மண்டல் மூலமாக rural india மருத்துவ நலத்திட்டங்களை நடத்தியவர். அவர்களோட சுறுசுறுப்பு, ஊக்கம் விடாமுயர்ச்சி உறுதி என்னை வெகுவாக கவர்ந்தது. அவர்களுக்கு பத்மபூஷன், ரமோன் மக்சேசே அவார்ட் கிடைத்தபோது மகிழ்ந்து போனேன்!!அவர்களும் குடும்பத்தலைவி தான் !!

    ReplyDelete
  3. எல்கே, என்ன பாதியிலே நிறுத்திட்டீங்க?? :)))

    ReplyDelete
  4. வாழ்த்துகள் ஜெயஸ்ரீ, உங்கள் அனுபவங்களே ஒரு நாலைந்து புத்தகம் போடலாம் போல இருக்கு. பலவிதமான அபூர்வ மனிதர்களோடு பழக நேர்ந்திருக்கிறது. நீங்க சொல்வது முற்றிலும் உண்மை. குடும்பம் எந்நாளும் தடையாக இருக்காது.

    எல்கே, பதில் கிடைச்சாச்சா?? :))))))

    ReplyDelete
  5. பதிவுக்கு நன்றி கீதாம்மா

    இதிலே பலபேருடைய பெயர்களை இப்போது தான் கேள்வி படுகிறேன்

    பெருமையாகவும் நிறைவாகவும் இருக்கு

    மெல்லிசை பாடகிகளையும் இந்த வரிசையில் சேர்த்து கொள்ளலாமா லதாவில் இருந்து சுசிலா அம்மா வரையும்
    என்னை பொறுத்தவரை சாதனை பெண்கள் தான்

    அப்புறம் எழுத்தாளர்களில் அனுத்தமா ,லக்ஷ்மி ,சிவசங்கரி ,இந்து மதி ,அனுராதா ,ராஜம் கிருஷ்ணன் ,ரமணி சந்திரன்,வாஸந்தி
    போன்றோர்களையும் நான் சாதனை பெண்களாக தான் பார்க்கிறேன் கீதாம்மா

    மேலும் தினமலர் வாரமலரில் அற்புதமாக ஆலோசனைகளை வழங்கி கொண்டு இருக்கும் ( முன்பு மறைந்த அனுராதா ரமணன் தற்போது) நீதிபதி சகுந்தலா கோபி நாத் அவர்களையும் நான் குறிப்பிட்டே ஆக வேண்டும் .

    ReplyDelete
  6. சுமார் 2000 பதிவுகள் போட்டு தொடர்ந்து எழுதி கொண்டு இருக்கும்

    எங்கள் தங்க தலைவியும் ஒரு சாதனை பெண்மணி தான் !

    ReplyDelete
  7. இது நகைச்சுவைக்காக சொல்வது

    மொக்கை பதிவுகளையும் கமெண்ட்ஸ்களையும் போடும் நானும் எனது அப்பாவி தோழியும்

    சாதனை பெண்மணிகளாக ஒரு நாள் வந்தாலும் வருவோம் கீதாம்மா ஹீ ஹீ

    ReplyDelete
  8. //சுமார் 2000 பதிவுகள் போட்டு தொடர்ந்து எழுதி கொண்டு இருக்கும் ///

    வன்மையா கண்டிக்கிறேன் 3000 பதிவுகளுக்கு மேலே எழுதி இருப்பதை இப்படி குறைத்து சொல்வது மாபெரும் தவறு

    ReplyDelete
  9. இத்தனை சிறப்பா! வாவ்! இவங்க எல்லாருக்கும் மேலே என்னோட அம்மா.

    ReplyDelete
  10. பெண்களைப் பற்றிய விரிவான தகவல் தேடுவோருக்கு உங்களது திரட்டு மிகவும் உதவும் Jolna Jawahar.

    ReplyDelete