எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Monday, May 30, 2011

வாழ நினைத்தால் வாழலாம்! கல்யாணம் தொடர்

செருப்புப் போட்டு நடந்தால் கால் மணலில் புதையும் என்பது ஓரளவுக்குத் தெரிந்திருந்தாலும் அந்த நேரம் அது நினைவில் இல்லை. அப்புறம் செருப்பையும் கையில் எடுத்துக்கொண்டு ஒளபாசனப் பானையையும் எடுத்துக்கொண்டு நடப்பது கஷ்டம் என்பதால் மூங்கில் பாலத்தில் செல்லுமாறு வற்புறுத்தப்பட்டேன். மூங்கில் பாலத்தைப் பார்க்கையிலேயே பகீர் என்றது. என் அப்பா ஊரான மேல்மங்கலம் கிராமம் தான். ஆனாலும் செல்லும் வழியோ அந்த நாட்களிலேயே (பென்னி குக் தயவு?) நன்றாய் இருக்கும். ஊரும் சுத்தமாய் இருக்கும். மின் விளக்கு, குழாய் எல்லாமும் உண்டு. ஆகவே கிராமம் என்பது பெயரளவுக்குத் தான் இருந்தது. அருகேயே சில மைல்கள் தள்ளி இருந்த இன்னொரு சித்தி ஊரான சின்ன மனூரும் அப்படியே. ஆகவே கிராமம் என்றால் இப்படி ஒரு கிராமத்தை நான் பார்ப்பது அதுவே முதல் தடவை எனலாம். மெல்ல, மெல்லக் கரையேறினேன். மூங்கில் பாலத்தை நோக்கி நடந்தேன். என் அப்பா, அம்மா, நாத்தனார் எனக்குக் காத்திருந்தனர். மூங்கில் பாலத்தில் சர்வ அலக்ஷியமாய் என் நாத்தனார் நடக்க எனக்கு மூச்சே போயிற்று.

காலை வைத்தால் தெரியும் இடைவெளியில் கால் உள்ளே போயிடுமோனு பயம். நேரே பார்த்து நட என எல்லாரும் சொல்ல கண்களோ கீழேயே பார்த்தன. அருகே பாலத்தின் கைப்பிடியைப் பிடித்துக்கொண்டு மெல்ல மெல்ல நடந்தேன். நான் பிறந்து வளர்ந்ததில் இருந்து என் வாழ்நாளில் அது தான் முதல் முறையாய் மெதுவாய் நடந்திருப்பேன் என நினைக்கிறேன். அதுக்குள்ளே மாடுகள் கரையேறிவிட்டன. வண்டியையும் கரையிலே ஏற்றிக்கொண்டிருந்தனர். ஆஹா, இப்படியும் வாழ்பவர்கள் இருக்கின்றனர் என்பதே அப்போத் தான் தெரியும். இந்தக் கோடை காலத்திலேயே இப்படி என்றால் தண்ணீர் வந்துவிட்டால்?? வண்டியை அப்போ இறக்க மாட்டாங்க என்றார்கள். வண்டி அக்கரையிலேயே நிற்கும். மூங்கில் பாலத்தில் போய்த் தான் கடக்கவேண்டும் என்றார்கள். கடவுளே! எத்தனை முறை இனி இந்தப் பாதையில் வரப் போறேனோ, தெரியலை! முக்கி, முனகிக்கொண்டு போய்ச் சேர்ந்தேன். அப்புறமும் நடந்து வரேன்னு சொல்ல வேண்டாம்; புதுக் கல்யாணப் பொண்ணு நடந்து வரதைப் பார்த்தால் கூட்டம் கூடும் என்றார்கள். அதுவும் சரிதான் என வண்டியில் ஏறி உட்கார மொட் டென இடித்துக்கொண்டு பல்லைக் கடித்துக்கொண்டேன். அதுக்குள்ளே வண்டியோடு சில குழந்தைகள், பையன்கள் என ஓடி வர ஆரம்பித்தனர். வேடிக்கையாக இருந்தது. வலியினால் வந்த கண்ணீரையும் மறந்து சிரித்தேன் அவர்களைப் பார்த்து. வண்டி ஊருக்குள் நுழைந்து விட்டது என்பதை மேளச் சத்தம் உறுதிசெய்தது. வண்டி ஒரு பந்தல் போட்ட வீட்டில் நிற்க, நானும், என் கணவரும் இறங்கினோம். ஒரு சின்ன வீட்டிற்குள் அழைத்துச் செல்லப் பட்டோம். இது என்ன ஆரத்தி எடுக்கலை? வலது கால் எடுத்து வைனு சொல்லலை?? ஆச்சரியப் பட்டுக்கொண்டே உள்ளே சென்றேன். வீடு ரொம்பச் சின்னது. சுற்றும் முற்றும் பார்த்தேன், அங்கே இருந்த பெண்மணி, வாடியம்மா புது மாட்டுப் பொண்ணே, என அழைக்க அவரை நிமிர்ந்து பார்த்தேன், என் மாமியார் இல்லை, கல்யாணத்திலும் இவங்களைப் பார்த்த நினைவில்லை.

அதற்குள் என் நாத்தனார் ஒரு பாத்திரத்தில் டிபனும் , காப்பியும் எடுத்து வந்தாள். அண்ணா. மன்னியைச் சாப்பிட்டுவிட்டுத் தயாராய் இருக்கச் சொன்னாங்க. எட்டு மணிக்கப்புறமா நல்ல வேளையாம் என்று கூற, அந்த வீட்டுப் பெண்மணி, “இது உன் புக்ககம் இல்லை; நாங்க பக்கத்து வீடு; உன் குட்டி மைத்துனன் என் செல்லப் பிள்ளை; என்னை அவன் அத்தைனு கூப்பிடுவான்; நீயும் அப்படியே கூப்பிடு.” என்றார். அப்புறமாய் எங்கள் இருவருக்கும் காலை உணவு அளிக்கப் பட்டது. பின்னர் என்னைப்புடைவை மாற்றிக்கொள்ளச் சொல்ல, நான் குளிக்க குளியலறையைத் தேடினேன். அந்தப்பக்கத்து வீட்டு அத்தை, இப்போக் குளிக்கப் போனால் நேரம் ஆகும், இங்கே குளியலறையும் இல்லை; நீ முதலில் புடைவை மாற்றிக்கொண்டு கிரஹப்ரவேசம் செய்; அப்புறம் குளிச்சுட்டு, சாதம்(ஹவிஸ்) வைக்கணும்; அதுக்கப்புறம் ஹோமம் எல்லாம் இருக்கு; நேரம் ஆகும்.” என்றார். குளிக்காமல் புடைவை மாத்துவதா என நான் யோசிக்க, எல்லாரும் அவசரப் படுத்த வேறுவழியில்லாமல் புடைவைமாற்றப் போனால், ஒன்பது கஜம் புடைவைதான் கட்டணுமாம். கட்டத் தெரியாமல் முழித்த எனக்கு அத்தை கட்டிவிட்டார். அங்கே வந்த மாலைகளைப் போட்டுக்கொள்ளச் சொன்னார். இதற்குள் என் கணவரும் தயாராக இருவரும் மீண்டும் கைகோர்த்தபடி அந்த வீட்டிலிருந்து வெளியே வந்தோம்.

பக்கத்து வீட்டில் மேளம் முழங்கிக்கொண்டிருந்தது. வாசலில் பெரிய கோலம் போடப் பட்டிருந்தது. ஒரு சின்ன மேடை போன்ற பந்தலின் கீழே நாங்கள் போய் நின்றதும் மீண்டும் மாலை மாற்றிக்கொள்ள வேண்டும் என்று சொல்லி, மாற்று மாலை கொண்டு வந்தார்கள். மாற்றுமாலையைப் பார்த்ததும் எனக்கு அத்தனை பேர் இருக்கையிலும் சிரிப்பு தன்னையறியாமல் வந்தது. மதுரையில் ரோஜா, மல்லி, முல்லை மாலைகளையே பார்த்திருந்த எனக்கு இங்கே வெறும் இலைகளையும், மரமல்லி ஆங்காங்கே ஒன்றிரண்டு வைத்துக் கட்டப்பட்ட இந்த மாலையைப் பார்த்ததும் சிரிப்பு வந்துவிட்டது. அம்மா நிமிண்டினாள். அப்புறமாச் சிரிக்கலாம், நேரம், காலம் தெரியாமல்: என்று முணமுணத்தாள். மனசுக்குள் தலையில் அடித்துக்கொண்டிருக்கலாம். மீண்டும் ஓர் முறை மாலை மாற்றல் நடந்தது. ஊஞ்சலும் இருக்குமோனு நினைக்கையில் மீண்டும் சுற்றிக்கொட்டினார்கள். அப்புறமாய் இருவரும் வலக்கால் எடுத்து வைத்து உள்ளே போனோம். நுழை வாசல் குட்டையான உயரம் கொண்டது. என் உயரத்துக்கே இடிக்கும். ஆகையால் வரிசை கட்டி எல்லா உறவினரும் நின்றுகொண்டு குனி, குனி, குனி எனச் சொல்லிக்கொண்டே இருக்க குனிந்த படியே உள்ளே சென்று உள்ளே ஸ்வாமி அலமாரியில் இருந்த ராமரை நமஸ்கரித்துவிட்டு, அங்கே இருந்த ஊஞ்சலில் அமரச் சொன்னார்கள். அமர்ந்தோம். பால், பழம் கொடுத்து உபசரித்தார்கள். அதற்குள்ளாக ஹோமத்துக்கு ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தன. ப்ரவேச ஹோமத்துக்கு நேரமாகிவிட்டதால் சீக்கிரம் வரவேண்டும் என்று புரோகிதர் கூற நான் குளிக்கப் போனேன். குளித்துவிட்டு மறுபடியும் ஒன்பது கஜம் புடைவை உடுத்தி ஹோமத்துக்குத் தயாராக வர, என்னைச் சமையலறைக்கு அழைத்துச் சென்ற மாமியார் ஒரு பாத்திரத்தில் உள்ள பாலை முதலில் காய்ச்சச் சொல்லிவிட்டுப் பின்னர் ஹவிஸ் வைக்க ஒரு வெண்கலப்பானையைக் கொடுத்து வைக்கச் சொன்னார்கள். வாத்தியார் கேட்பதற்குள் தயாராக வேண்டும் என ultimatum வேறே கொடுத்தாச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்

24 comments:

  1. ஹிஹி எனக்கு இந்த பயம் ஒரு சில முறை வந்திருக்கு . எங்கன்னு நியாபகம் வரலை. இந்த பிரவேஷ ஹோமம்லாம் எனக்கு புதுசா இருக்கு . கொஞ்சம் விளக்கவும். இல்லை திவா அண்ணா சொல்லட்டும்

    ReplyDelete
  2. ஹிஹி எனக்கு இந்த பயம் ஒரு சில முறை வந்திருக்கு . எங்கன்னு நியாபகம் வரலை//

    பயம்?? யாருக்கு பயம்?? எங்கே பயம்?? என்ன பயம்?? எப்படி பயம்?? கறுப்பா சிவப்பா?? :)))))

    பிரவேச ஹோமம் பத்தி எனக்குத் தெரிஞ்சதை எழுத முயல்கிறேன். திவாவும் சொல்லட்டும், எங்கே அவரைத் தான் ஆளையே காணோமே!

    ReplyDelete
  3. அப்படியே லைவ்வாக போயிக்கிட்டு இருக்கு ;)

    ReplyDelete
  4. நன்றி கோபி.

    ReplyDelete
  5. பிரவேச ஹோமம் புதுசா இருக்கு - இப்போ பண்றது இல்லையே. பாலும் பழமும் மட்டும் தான்.
    மேலே சொல்லுங்கோ. waiting..

    ReplyDelete
  6. ஸ்ரீநி, இப்போத் தான் பிள்ளை வீட்டுக்காரங்க சத்திரத்திலே தங்கி இருக்கும் பகுதிக்குப் போறதையே கிரஹப்ரவேசம்னு சொல்லிக்கிறாங்களே. பிரவேச ஹோமம் என்பது பெண் முதல் முதலாய் தன் புக்ககத்தினுள் நுழைந்ததும் செய்யறது. அதுக்கோ, இல்லாட்டி ஸ்தாலீபாகத்துக்கோ பிறந்த வீட்டு அரிசியிலே தான் சமைக்கணும்னோ என்னவோ சொல்வாங்க. மறந்துட்டேன். கொஞ்சம் யோசிச்சுப்பார்க்கிறேன். இல்லாட்டி சில புத்தகங்களைப் பார்க்கணும். ஆனால் அன்னிக்கு நான் முதல் முதலாய் விறகு அடுப்பில் சாதம் வைச்சது நினைவில் இருக்கு. அரிசி தான் எதுனு நினைவில்லை.. :)))))

    ReplyDelete
  7. //அப்புறம் செருப்பையும் கையில் எடுத்துக்கொண்டு ஒளபாசனப் பானையையும் எடுத்துக்கொண்டு //
    கடவுளே!
    //என் வாழ்நாளில் அது தான் முதல் முறையாய் மெதுவாய் நடந்திருப்பேன் //
    ஹாஹ்ஹாஹ்ஹா!

    ReplyDelete
  8. பிரவேச ஹோமம் உண்டவே உண்டு! எல்லாமே இப்ப நாலு மணி நேரத்திலே முடிக்கறாங்களே! :-( அதையும் சேத்து முடிச்சுடுறாங்க. நமக்கு கண்ணை கட்டி காட்டுல விட்டாப்போல இருக்கறதால ஒண்ணும் புரியறதில்லை. என்ன செய்யறோம்ன்னு கேட்க ஆரம்பிச்சா விளக்கி சொல்லுவாங்களோ என்னமோ?
    ப்ரம்மசாரியாக இருக்கும்போது சமிதாதானம். திருமணம் ஆன பிறகு ஔபாசனம். இதுவே குடும்பஸ்தனுக்கு முக்கியமானது. அக்னி யாருக்கு ப்ரதானமாக உரிமையானது என்றால் அது கல்யாணமான பெண்மணிக்குத்தான். புதுசா இந்த அக்னி சம்பாதித்துக்கொண்டு வீட்டுக்கு வாராங்க இல்லையா? அதான் ப்ரவேச ஹோமம் செய்யறாங்க.

    ReplyDelete
  9. /என் வாழ்நாளில் அது தான் முதல் முறையாய் மெதுவாய் நடந்திருப்பேன் //
    ஹாஹ்ஹாஹ்ஹா!//

    @thiva, என்ன சிரிப்பு??? க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், இப்போ நடக்கிறதை நினைச்சுப் பார்க்காதீங்க. இது 2003-க்கு அப்புறம் உள்ள நிலைமை. :P

    ReplyDelete
  10. பிரவேச ஹோமம் உண்டவே உண்டு! எல்லாமே இப்ப நாலு மணி நேரத்திலே முடிக்கறாங்களே! :-( அதையும் சேத்து முடிச்சுடுறாங்க. //

    சரிதான், நீங்க சொன்னாச் சரியாத் தான் இருக்கும். ஹிஹிஹி. அ.வ.சி. ஸ்ரீநி, பிரவேச ஹோமம் உண்டாம், நான் என்னமோ அது பிள்ளை வீட்டிலே மட்டும் தான் செய்யணும்னு நினைச்சுட்டேன். :)))))

    ReplyDelete
  11. மூங்கில் பாலத்தில் நமக்கு முன்னால் தடுமாறிக் போகிறவர் கீழே விழுந்தால் அந்த அதிர்ச்சியில் நம் பயம் போய் வேகமாக நடந்துவிடுவோம் என்கிறது மனோ. அடுத்த முறை மூங்கில் பாலத்தில் நடக்க நேர்ந்தால் முன்னால் ஒன்றிரண்டு பேர் இருக்கும்படி பார்த்துக் கொள்ளவும்.

    ReplyDelete
  12. என்ன ஆச்சு போர்க்கொடி?? வாயே திறக்கலை?? :P

    ReplyDelete
  13. அப்பாதுரை, நல்லா இருக்கு, முன்னாடி போறவங்களைப் பிடிச்சுத் தள்ளினாத் தான் விழறதுக்கு!:P

    அதோட இப்போ மூங்கில் பாலங்களை எல்லாம் எடுத்துட்டாங்க. எனக்கு ரொம்பவே வருத்தம்! :((((

    ReplyDelete
  14. நசிகேத வெண்பா என்று கடோபனிஷதத்தைத் தழுவி தமிழில் எழுதி வருகிறேன். அதற்காக ஆன்மீக விஷயம் கொஞ்சம் தேடிய போது, தமிழ்மரபு அறக்கட்டளை தளத்தில் நான் தேடிக்கொண்டிருந்த கொடிக்கவி பாடல்களும் உமாபதி சிவாசாரியார் பற்றியும் ஒரு தொகுப்புக் கட்டுரை படிக்க நேர்ந்தது. கட்டுரை எழுதியவர் நீங்களா?

    ReplyDelete
  15. சிதம்பர ரகசியம்

    வாங்க அப்பாதுரை, நான் எழுதிய கட்டுரையை அதிலே சேர்த்திருப்பாங்க. வலைத் தளம் என்றால் நேரடியாக சுபாஷிணியே சேர்ப்பாங்க. மரபுவிக்கியிலே பார்த்திருந்தால் நானே சேர்த்திருப்பேன். நிறையக் கட்டுரைகளைச் சேர்ப்பதால் சுட்டி இல்லாமல் உறுதி செய்ய முடியலை. மன்னிக்கவும். :(

    மேலே கொடுத்திருக்கும் சுட்டியில் உமாபதி சிவாசாரியார் குறித்த ஒரு சிறிய குறிப்பையும் கொடிக்கவியையும் காணலாம். நன்றி.

    ReplyDelete
  16. இணைத்தது என்று இன்னொரு பெயர் போட்டு இருந்தாங்க. ஆனால் உங்க பேர் தான் கொ எழுத்துல :) இருந்தது.

    அப்ப எழுதினது நீங்க தானா? very well written.

    ReplyDelete
  17. @அப்பாதுரை,

    ம்ம்ம்ம்??? சுபாஷிணி தான் இணைச்சுட்டு இருந்தாங்க. அவங்க பிசிங்கறதாலே வேறே யாரானும் இணைச்சிருக்கலாம், அந்தத் தளத்திலேயே கிராம தெய்வங்கள் பகுதியிலே பாருங்க, எங்க ஊர்க் கோயில்கள் பத்தி எல்லாம் குறிப்புகள் கொடுத்திருக்கேன். இணைச்சிருப்பாங்க. மரபு விக்கியிலும் போய்ப் பாருங்க, குறிப்பாப் பயணக்கட்டுரைகள், நளபாகம், சைவ சித்தாந்தம், சித்தர்கள், வைஷ்ணவம், பாரம்பரியம், சடங்குகள் போன்ற தலைப்புகளில் இணைக்கிறேன். உங்களிடம் அரிய செய்திகள், குறிப்புகள் இருந்தால் எனக்கு அனுப்பி வைங்க, உங்க பெயரிலேயே வெளியிடுவோம். நன்றி.

    ReplyDelete
  18. ஓ மை காட்... இன்னும் கல்யாணமா? என்னோட "ஜில்லே..." பரவால்ல ஹி ஹி... சரி விடுங்க... ஹ்ம்ம்... மாமா மாட்டின கதைய கதை கதையா சொல்றதுல சிலருக்கு சந்தோஷம் போல இருக்கு... :))

    ReplyDelete
  19. //என் வாழ்நாளில் அது தான் முதல் முறையாய் மெதுவாய் நடந்திருப்பேன் //

    ha ha ha...:)

    ReplyDelete
  20. நீங்க வேணா மாட்டு வண்டியில் போய் இருக்கலாம்
    ஆனா கதை (பதிவு ) சும்மா ராக்கெட் வேகத்திலே இல்லே போயிட்டு இருக்கு :) :)

    ரசிக்க வைத்த வரிகள்
    //மூங்கில் பாலத்தில் சர்வ அலக்ஷியமாய் என் நாத்தனார் நடக்க எனக்கு மூச்சே போயிற்று.//

    //நான் பிறந்து வளர்ந்ததில் இருந்து என் வாழ்நாளில் அது தான் முதல் முறையாய் மெதுவாய் நடந்திருப்பேன் என நினைக்கிறேன்//

    //வலியினால் வந்த கண்ணீரையும் மறந்து சிரித்தேன் அவர்களைப் பார்த்து. //

    //ஒன்பது கஜம் புடைவைதான் கட்டணுமாம். கட்டத் தெரியாமல் முழித்த எனக்கு அத்தை கட்டிவிட்டார்.//

    // மாற்றுமாலையைப் பார்த்ததும் எனக்கு அத்தனை பேர் இருக்கையிலும் சிரிப்பு தன்னையறியாமல் வந்தது. மதுரையில் ரோஜா, மல்லி, முல்லை மாலைகளையே பார்த்திருந்த எனக்கு இங்கே வெறும் இலைகளையும், மரமல்லி ஆங்காங்கே ஒன்றிரண்டு வைத்துக் கட்டப்பட்ட இந்த மாலையைப் பார்த்ததும் சிரிப்பு வந்துவிட்டது. அம்மா நிமிண்டினாள். அப்புறமாச் சிரிக்கலாம், நேரம், காலம் தெரியாமல்: என்று முணமுணத்தாள். மனசுக்குள் தலையில் அடித்துக்கொண்டிருக்கலாம்.//

    சோ ஸ்வீட் events

    ReplyDelete
  21. மனபூர்வமா சொல்றேன் கீதாம்மா
    நீங்க மட்டும் கதை எழுதி இருந்தீங்கன்னா
    அனுத்தமா ,ரமணி சந்திரன் வரிசையில் (முதல் ஆளாகூட ) இருந்து இருப்பீங்க கீதாம்மா !

    ReplyDelete
  22. என்ன பொற்கொடி !
    ஆஜர் சொல்லிட்டு போறதை வெளியில் இருந்து ஆதரவு தர்றதா எடுத்துக்கலாமா :)

    என்ன புவனா !
    உங்க ஜில்லே பரவா இல்லைன்னு ஜோக் எல்லாம் அடித்து எங்களை இங்கேயும் சிரிக்க வைக்காதீங்கோ ப்ளீஸ் :)

    ReplyDelete
  23. //அப்புறம் செருப்பையும் கையில் எடுத்துக்கொண்டு ஒளபாசனப் பானையையும் எடுத்துக்கொண்டு //

    பேஷ்! பேஷ்! ரொம்ப ப்ரமாதம்! திவா அண்ணா நச்! நச்!னு தலைல அடிச்சுண்டு இருப்பார்...:PP

    ReplyDelete