எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Monday, June 11, 2012

இருபத்தைந்து வருடங்கள் முன்னால் 3

சந்துரு வருவது தெரிந்ததும், அந்த இடத்தின் சூழ்நிலையே மாறியது.  மாமியார் தன்பெண்கள், பிள்ளைகளைப் பார்த்துக் கண் ஜாடை காட்ட, அவர்கள் ஏதோ வேலையாக இருப்பது போல் காட்டிக் கொண்டு அமர, கடைசி நாத்தனாரை அழைத்து மாமியார், "மன்னியை அழைச்சுண்டு போய் வாசலிலே தண்ணீர் தெளிச்சுக் கோலம் போடச் சொல்லு. கிட்ட இருந்து எல்லாம் காட்டு. இரு மன்னிக்குக் காப்பி கலந்து தரேன்.  குடிச்சுட்டுப் போகட்டும்." என உருகினாள். கேட்டுக் கொண்டே வந்த சந்துருவின் முகம் மலர்ந்திருந்தது. அப்படியே அம்மா பக்கத்தில் அமர, அம்மா தனியாக எடுத்து வைத்திருந்த முதல் டிகாக்ஷனில் சந்துருவுக்குக் காப்பியைக் கலந்து தானே ஆற்றிக் கொடுத்தாள்.

தம்பி, தங்கைகளைப் பார்த்த சந்துரு, "இவங்க இங்கே என்ன செய்யறாங்க?" என்று கேட்கவும், அடுத்த நிமிடம் அந்த இடம் காலியானது. அம்மா, மெதுவாக,
"ஏன் சந்துரு, ராத்திரி அவ எங்களைப் பத்தி எல்லாம் ஏதாவது கேட்டாளா? என்ன சொன்னா?" என மெல்லிய குரலில் கேட்க, "உங்களை எல்லாம் பத்திக் கேட்க அதுக்குள்ளே என்ன இருக்கு அம்மா! அதெல்லாம் ஒண்ணும் பேசல்லை.  அவளுக்கு வேலை கிடைச்சிருக்கு இல்லையா? அதை மாத்திக்கிறதைப் பத்திப் பேசினோம். இந்த வேலை வேண்டாம்னு நான் சொல்லிட்டேன்." என்றான்.

தூக்கி வாரிப் போட்டது அகிலாண்டத்துக்கு.  என்ன இவன் இப்படிச் சொல்கிறானே? அப்படின்னா அவளையும் பம்பாய்க்கு அழைத்துப்  போகப் போகிறானா? அவள் வேலையைச் சாக்கு வைச்சு இங்கேயே நிறுத்திக்கலாம், ஒரு வருஷம், இரண்டு வருஷம் போனால் இந்த இரண்டாவது பெண்ணைக் கரையேத்தலாம்.  அப்புறமா நடு நடுவே போய் இருந்துட்டு வரமாதிரி அனுப்பி வைக்கணும். அப்புறம் நம்ம பேரிலேயே குத்தம் சொல்லுவாங்க..  சின்னவங்க ரெண்டு பேருடைய படிப்பும் முடியணும்.  அதுக்குள்ளே, குழந்தை, குட்டினுஆயிட்டா, என்ன பண்ணறது! எப்படியானும் தடுத்தே ஆகணும். அவள் மனம் கணக்குப் போட்டுக் கொண்டிருந்தது.  அங்கே............

சொன்ன வேலைகளை முடித்துவிட்டுக் குளிக்கப் போனாள் ராதா.  அப்போது அம்மா அவளோடு சேர்ந்து குளியலறைக்குள் நுழைந்தாள்.  மெல்ல அவளிடம், "ராத்திரி என்ன நடந்தது தெரியுமா?  நீங்க இரண்டு பேரும் சாந்திக்கல்யாண அறைக்குள்ளே நுழைஞ்சாச்சு.  நாங்க எல்லாம் அப்புறமாச் சாப்பிட உட்கார்ந்தோம். யாரோ ஒரு மாமி, உங்க புக்ககத்து உறவு தான்.. உங்க மாமியார்ட்ட, மாட்டுப் பெண் வந்தாச்சு;  அடுத்த வருஷம் ஒரு பேரக்குழந்தையைப் பெத்துக் கொடுக்கச் சொல்லுங்கோனு சொன்னா.  அவ்வளவு தான். உடனே உங்க மாமியார் ஓனு அழ ஆரம்பிச்சா."
 

"எல்லாருமாச் சேர்ந்து என் பிள்ளையை என் கிட்டே இருந்து பிரிச்சுட்டீங்களே,குஞ்சும், குளுவானுமாக் குழந்தைகளை வைச்சுண்டு இருக்கேனே.  மூத்த பெண்ணை எப்படியோக் கரையேத்திட்டேன். இன்னும் இரண்டு பெண்கள் இருக்காளே.  அதுக்குள்ளே அவனை என் கிட்டே இருந்து பிரிச்சுட்டீங்களே.  நான் என்ன  பண்ணுவேன்?  நான் இருக்க மாட்டேன். உயிரோடயே இருக்க மாட்டேன். போறேன். செத்துத் தொலைஞ்சு போறேன்.  என் பிள்ளையைக் கூப்பிடுங்க.  அவனைப் பார்த்து நாலு வார்த்தை பேசிட்டு அவன் கிட்டே சத்தியம் வாங்கிண்டு செத்துப் போறேன்." அப்படினு கத்தினாங்க. அப்புறமா மயக்கம் வந்தாப்போல் கீழே விழுந்துட்டாங்க.  இலை மேலேயே விழுந்துட்டாங்க." என்றாள்.

ராதாவின் அடி வயிறு கலங்கியது.

8 comments:

  1. என்ன அநியாய கேரக்டர் அந்த சந்த்ரும்மா..... ஆனால் நான் கூட இப்படிப் பட்ட கேரக்டர்களைப் பார்த்திருக்கேன்! ராதாவுக்கு என்ன சமாளிக்க வ'ராதா' என்ன!

    ReplyDelete
  2. எனக்கு இப்படி ஒரு மாமியாரைத் தெரியும் என்பதால் ரொம்ப உறுத்துகிறது.

    ReplyDelete
  3. ம்ம்ம்ம்ம்ம்??? பலருக்கும் இந்த அனுபவங்கள் இருந்திருக்கு போல! :((((மனிதர்கள்! :((((

    ReplyDelete
  4. ஒன்று தெரிகிறது. பெண்களின் குண நல விசேஷங்களைப் பற்றி ஆண்கள் எழுதுவதற்கும், அதையே பெண்கள் எழுதுவதற்கும் வித்யாசம் இருப்பதாக தெரிகிறது. ஆனால் பெண்கள் ஆண்களிடமும் ஆண்கள் பெண்களிடம் பட்ட பாடெல்லாம் பரிதாபதற்குரியதாக போய்விடக் கூடாது என்பது மட்டும்
    நிச்சயம்.

    இயல்பாகவே இந்தியப் பெண்கள் தங்கள் பாதுகாப்பிற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்.
    அதனால் அதற்கு ஆதாரமானவர்களை தங்கள் பிடியில் இருத்திக் கொள்ள மிகவும் சிரமப்படுவதின் மூலம் தங்களை சிரமப்படுத்திக் கொண்டு பிறரையும் சிரமப்படுத்துக்கிறார்கள்..

    இந்தக் கதையையே எடுத்துக் கொள்ளுங்கள். ராதாவிற்கு ஒரு நல்ல வேலை கிடைப்பது இந்தக் குடும்பத்திற்கு நல்லது தானே, அவளுக்கு அப்படியான ஒரு நல்ல வேலை கிடைத்து அவள் மேல் அன்பைச் சொரிந்து அவள் சம்பாதிப்பதையும் சுருட்டிக் கொண்டு அவளை தன் அடிபணிந்த மருமகளாக வளைத்துப் போட்டுக் கொண்டு தன் பெண்களையும் கடைத்தேற்ற வேண்டும் என்று ஏன் அந்த அகிலாண்டம் நினைக்க மாட்டேன் என்கிறார்கள் என்பதில் தான் பெண்களைப் பற்றிய ஒரு புதிர் அடங்கியிருக்கிறது. அது என்ன புதிர் என்பதை விண்டு விவரித்து பெண்களைப் பற்றி எழுதும் பெண்கள் தாம் சொல்ல வேண்டும். ஆண்கள் சொன்னால் அவ்வளவு நம்பகத்தன்மை கொண்டதாக அது இருக்காது.

    இதில் கூடப் பாருங்கள். பெண்ணுக்கு பெண்ணே எதிராகப் போகிறார்கள். என்ன வேதனை என்றாலும் ராதா தழைந்து போனால் தான் உண்டு.
    இல்லை, அகிலாண்டம் தணிந்து போக வேண்டும். இந்த இரண்டு பேரின் சமரசத்தில் சந்துருவின் வாழ்க்கை சுகம் அடங்கி இருக்கிறது. ஏன் இந்த நிலைமை? பெண்ணுக்கு பெண் புரிந்து கொள்ள மாட்டார்களா? ராதாவின் மாமியாரும் இதே மாதிரியான ஒரு வாழ்க்கையை வாழ்ந்து பார்த்த பெண் தானே?.. ஏன் பெருவாரியான மாமியார்கள் இப்படி இருக்கிறார்கள்?
    இந்த மாதிரியான குணப்போக்குகளைத் தோண்டி எடுத்து எழுதினால், அற்புதமாக இருக்கும். புத்தகங்களைப் படிக்கக் கூடிய மாமியார்களுக்காக வாவது ஒரு வழிகாட்டும் எழுத்தாக இருக்கும் இல்லையா?.. ஆண்கள் தாம் எழுதவில்லை. பெண் எழுத்தாளர்கள் கூட எழுதக்கூடாதா?

    ஆனால், தமிழில் அப்படியான பெண் எழுத்துக்கள் அமையவில்லை என்பது தான் சோகம்.

    படிப்பவரை உணர வைக்கிற மாதிரியாக உங்களால் எழுத முடிகிறது. அதனாலேயே எதிர்பார்ப்பும் கூடுகிறது.

    தொடர்ந்து வருகிறேன்.

    ReplyDelete
  5. ஜீவி சார், அலசல் பின்னூட்டம். நன்றி. மாமியார்கள் இப்போதெல்லாம் இப்படி இல்லை. நிறையவே மாறி இருக்காங்க. அதோடு எல்லாருக்குமே ஒரு பெண் இல்லைனா ஒரு பிள்ளைனு தானே இருக்காங்க. இதிலே எங்கேருந்து படுத்தறதெல்லாம் வைச்சுக்கறது! :)))))ஆனால் இப்படியும் இருந்திருக்காங்கனு பலருடைய மடல்கள், ஸ்ரீராம், அப்பாதுரை பின்னூட்டங்களிலிருந்து தெரிகிறது.

    டிஸ்கி போட்டுடலாம்னு இருக்கேன். ஏற்கெனவே கூகிள் சதியோடு இப்போ மின்சாரமும் சதி. நேத்திக்குப் பாருங்க. தலைப்புக் கொடுக்க மறந்திருக்கேன். உங்க கமெண்டை பப்ளிஷ் பண்ணறச்சே எப்படியோ மாடரேஷன்லே வைச்சிருந்ததும் பப்ளிஷ் ஆகி இருக்கு. உடனே மின்சாரமும் போயிடும். செக் பண்ணக் கூட முடியாது.:)))))))

    ReplyDelete
  6. மு.அ. இனி மின் தடை இருக்காதுனு சொன்னதிலே இருந்து இங்கே தினம் தினம் மின் தடைத் திருநாள் தான். அதுவும் கடந்த இரண்டு நாட்களாக மோசமோ மோசம்! :)))))

    ReplyDelete
  7. நீங்கள் வேண்டுமென்றே தலைப்பு வைக்கவில்லை என்று நினைத்தேனே..... இல்லையா?!!

    ReplyDelete
  8. //நீங்கள் வேண்டுமென்றே தலைப்பு வைக்கவில்லை என்று நினைத்தேனே..... இல்லையா?!!//

    ஸ்ரீராம் நினைச்சது போலவே தான் நானும் நினைச்சேன். வேணும்ன்னா கொடுக்கலாம்ன்னு ஒரு தலைப்பு கூட ரெடியா தயார் பண்ணி வைச்சிருந்தேன்.

    ReplyDelete