எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Monday, December 03, 2012

சிற்றம்பல நாடிகள் ஜீவசமாதியடைந்த சித்தர் காடு


மாயவரம் கல்யாணத்துக்குப் போனப்போ அங்கிருந்து சில மைல் தூரத்தில் இருந்த சித்தர்காடு சென்றோம்.  இன்னொரு சித்தர் காடும் இருப்பதாய்க் கேள்வி.  அது வட தமிழ்நாட்டில் அரக்கோணத்துக்கு அருகே உள்ளது என நினைக்கிறேன்.  அதைப் பார்த்ததில்லை.  ஆனால் இதைக் குறித்துப் பலமுறை கேட்டுள்ளேன்.  ஆகையால் செல்லச் சந்தர்ப்பம் கிடைத்ததும் சென்றோம்.   தருமை ஆதீனப் பரம்பரையில் காழிக்கங்கை மெய்கண்டாரின் சீடரான சிற்றம்பல நாடிகள் என்பவர் அடுத்து பட்டத்துக்கு வந்தார்.  அனைத்து சிவசாரியார்களும் சிற்றம்பலத்தையே நாடினார்கள் எனினும், இவர் ஒருவருக்கு மட்டுமே சிற்றம்பல நாடிகள் எனும் பெயர் அமைந்தது என்கின்றனர்.  இவரை மிகப் பெரிய சித்தராகவும் கூறுகின்றனர்.  இவர் இயற்றிய நூல்களில் துகளறு போதம், திருப்புன்முறுவல், செல்காலத்திரங்கல், நிகழ்காலத்திரங்கல், வருங்காலத்திரங்கல் ஆகியன மிக முக்கியமானவை என்றாலும் துகளறு போதத்தையே மிகவும் முக்கியம்மானதாய்க் கூறுகின்றனர்.

சைவ சித்தாந்த சாத்திரங்களைக் கற்போர் உண்மை நெறி விளக்கத்திற்குப் பதிலாக துகளறு போதத்தைப் படிப்பார்கள் எனவும், சித்தாந்த சாத்திரங்கள் கற்போருக்கு துகளறு போதம், தத்துவப் பிரகாசம் ஆகியன கற்பது இன்றியமையாத ஒன்று எனவும் சொல்லப் படுகிறது.  இந்தச் சிற்றம்பல நாடிகளின் திருக்கூட்டம் மிகப் பெரியது.  63 சீடர்கள் உள்ள இவருக்கு இவரையும் சேர்த்து 64 பேர் ஒரு திருக்கூட்டமாய்த் திகழ்ந்து வந்தனர்.  இவர்கள் அனைவரும் காழி சிற்றம்பல நாடிகளின் அருளால் ஒரே சமயத்தில் முத்தி பெற்றனர்.  திருஞான சம்பந்தருக்குப் பின்னர் தம் திருக்கூட்டத்துக்கு ஒரே சமயம் முத்தி பெறச் செய்தவர் காழி சிற்றம்பல நாடிகளே என்கின்றனர். 

ஒரு நாள் சிற்றம்பல நாடிகள் தம் திருக்கூட்டத்துடன் உணவு உண்ண அமர்ந்திருந்தார்.  உணவு பரிமாறிய சமையல்காரர் தவறுதலாக நெய் என எண்ணி வேப்பெண்ணையைப் பரிமாறிவிட்டார்.  சிற்றம்பல நாடிகளும் சீடர்களில் 62 பேரும் அமைதியாக வேப்பெண்ணெயை நெய்யாகக் கருதி உணவு உண்ண ஆரம்பிக்க, ஒரே ஒருவர் மட்டும் உணவை வாயிலிட்டதும் ஓங்கரித்துக் கொண்டு “வே” என வாயைத் திறந்தார்.  வேப்பெண்ணெய் எனச் சொல்லத் தான் அவர் வாயைத் திறக்கிறார் என்பதைப் புரிந்து கொண்ட சிற்றம்பல நாடிகள் அவரைப் பார்த்து, “கண்ணப்பா, நம் திருக்கூட்டத்தில் இப்படிப் பக்குவமில்லாத ஒருவன் இருப்பது தகுமோ?” எனக் கேட்க மனம் வருந்திய அந்தக் கண்ணப்பர் என்னும் சீடர் திருக்கூட்டத்தினின்றும் நீங்கி வட தேச யாத்திரை செய்யப் போய்விட்டார்.  சிறிது காலத்திற்குப் பின்னர் சிற்றம்பல நாடிகள் ஜீவ சமாதியடையத் திருவுளம் கொண்டார்.  அப்பகுதியை ஆண்ட அரசனை அழைத்துத் தாம் தம் சீடர்கள் 62 பேரோடும் ஒரே சமயம் சமாதி அடையப் போவதாய்ச் சொல்லிச் சித்திரைத் திருவோண நாளில் அந்நிகழ்ச்சி நடைபெறும் எனவும் கூறினார்.  தாம் சமாதியில் இறங்க வசதியாகத் தனித்தனியாக 63 சமாதிகள் அமைக்கும்படியும் கூறினார்.  வியப்படைந்த மன்னனும் அவ்வாறே 63 சமாதிக் குழிகளை அமைத்தான்.  இந்த அதிசய நிகழ்வைக் காண மக்கள் கூட்டம் கூடியது.  சிற்றம்பல நாடிகள் கூடி இருந்த மக்களை வாழ்த்தி ஆசிகள் வழங்கினார்.  மூன்று வெண்பாக்களைப் பாடித் தமக்கென நிர்ணயிக்கப் பட்ட சமாதிக்குழியில் இறங்கினார்.  அவ்வாறே சீடர்களும் ஆளுக்கு ஒரு வெண்பாவைப் பாடிவிட்டு அவரவருக்கென நிர்ணயித்த சமாதிக் குழியில் இறங்கினார்கள். 

சிற்றம்பல நாடிகள் தம் குருநாதர் திருவடியில் மனம் ஒன்றி நிட்டையில் ஆழ்ந்து ஜீவ சமாதி அடைந்தார்.  அவ்வண்ணமே மற்றச் சீடர்களும் தங்கள் குருநாதரான சிற்றம்பல நாடிகளின் திருவடியில் ஒன்றி நிட்டையில் ஆழ்ந்து சமாதி அடைந்தனர்.  கூடி இருந்த மக்கள் 63 பேர் இருந்த திருக்கூட்டத்தில் ஒருவர் குறைவதைக் கண்டு வியப்புற்று ஒருவருக்கொருவர், அந்த மறைந்த சீடர் எங்கே சென்றாரோ, இங்கே நடக்கும் விஷயங்கள் அவருக்குத் தெரியுமோ, தெரியாதோ எனப் பேசிக் கொண்டனர்.  அப்போது திடீரென அங்கே கண்ணப்பர் வந்து சேர்ந்தார்.  தம் குருவானவர் மற்றச் சீடர் திருக்கூட்டத்தோடு சமாதி அடைந்து கொண்டிருந்ததைக் கண்ட கண்ணப்பர், ஆஹா, நமக்கும் இங்கே சமாதிக்குழி அமைக்கவில்லையே, என் செய்வோம் என எண்ணி மனம் வருந்தி குருநாதரின் சமாதியை வலம் வந்து வணங்கித் தமக்கும் ஓர் இடம் தருமாறு வேண்டினார்.  அது ஒரு வெண்பாவாக அமைந்தது.

“ஆண்ட குரு சிற்றம்பலவா அடியேற்கா
மீண்டும் எழுந்தருள வேண்டாவோ--- நீண்டவனும்
ஆரணனும் காணாத ஆனந்த வாரிதியில்
பூரணமாய் வையாத போது

என அந்த வெண்பாவைப் பாடி முடித்ததுமே சிற்றம்பல நாடிகளின் சமாதி திறந்தது.  நாடிகள் கண் விழித்துத் தம் சீடனாம் கண்ணப்பரை நோக்கிக் கையைப் பற்றி அழைத்துத் தம் மடி மீது அமர்த்திக் கொண்டார்.  தம்மோடு இரண்டறக் கலக்கச் செய்தார்.  கூடி இருந்த மக்களும், மன்னனும் ஏற்கெனவே தாங்கள் அடைந்திருந்த வியப்புப் போதாது என இப்போது நேரில் கண்ட இந்நிகழ்வால் மேலும் வியந்து போற்றினர்.  இந்நிகழ்வு நடந்த இடம் மயிலாடுதுறையிலிருந்து கும்பகோணம் செல்லும் சாலையில் மயிலாடுதுறைக்கு மேற்கே சித்தர்காடு என்ற ஊராக உள்ளது. 

இப்போது இந்த இடம் ஒரு கோயிலாக  உள்ளது. சம்பந்தர் கோவில் என அழைக்கப்படும் இந்தக் கோயிலின் முக்கிய மூர்த்திகளாக  திரிபுரசுந்தரி உடனுறை பிரம்மபுரீசுவரர்  அருள் பாலிக்கின்றனர்.  ஈசனின் லிங்கத் திருமேனி இருக்கும் இடமே சிற்றம்பல நாடிகள் ஜீவசமாதி அடைந்த இடம் எனவும், சுற்றிலும் மற்றவர்கள் சமாதி அடைந்தனர் எனவும் சொல்கின்றனர்.  ஒவ்வொரு வருடமும் சித்திரைத் திருவோணத்தில் இங்கே சிற்றம்பல நாடிகள் ஜீவசமாதியடைந்த தினம் வெகு விமரிசையாகக் கொண்டாடப் படுகிறது.  கோயிலுக்கு நாங்க சென்ற அன்றைய தினம் பிரதோஷமாகவும் அமைந்தது.  கோயிலின் குருக்களிடம் அனுமதி வாங்கிக் கொண்டு சில படங்களை எடுத்தேன்.  சமீபத்தில் தான் ஊர் மக்களின் பெரு முயற்சியின் பேரில் இந்தக் கோயிலிற்குக் குடமுழுக்கு நடைபெற்றிருக்கிறது.   



சித்தர் காடு.
பிரம்மபுரீஸ்வரர் சந்நிதி




சிற்றம்பல நாடிகளின் ஓவியம்.

தக்ஷிணாமூர்த்தி சந்நிதி திருச்சுற்றில்.  இருபக்கமும் 63 திருக்கூட்டத்தாருக்காக ஏற்படுத்தப்பட்ட சிவலிங்கங்கள்.  இந்தச் சிற்பங்கள் விமானத்தின் வெளிப்பக்கமே ஏற்படுத்தப் பட்டுள்ளது.  படங்கள் மீதம் நாளை பகிர்கிறேன்.

14 comments:

  1. அருமையான செய்திகளை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி. துகளறு போதம் தொடர் விளக்கங்களை செவி மடுக்கும் பேறு பெற்றவன் என்ற வகையில் இந்த செய்திகளை ரசித்துப் படித்தேன். 'படி'த்தேன்.

    ReplyDelete
  2. நான் நீண்ட நாட்களாக எழுத இருந்த விஷயம் இது. நீங்க அருமையா எழுதி மாயவரத்தின் பெருமையை சொல்லி இருக்கீங்க. மாயூரம் ரயில்வே ஜங்சன் இருக்கும் இடம் தான் (மேம்பாலம் இறக்கம்) சித்தர்காடு. மிகப்பெரிய புண்ணிய ஸ்தலம். மிக்க நன்றி கீதாம்மா. ஆனா மாயவரம் வந்துட்டு வீட்டுக்கு வராம போனதிலே கிருஷ்ணாவுக்கும் குழந்தைகளுக்கும் கொஞ்சம் மன வருத்தமே!

    ReplyDelete
  3. ஆகா முதல்ல போட்ட கமெண்ட் என்ன ஆச்சுன்னு தெரியலையே. மீண்டும் போடுறேன்.

    ======================

    நானே சித்தர்காடு பெருமையை எழுதலாம்னு இருந்தேன். நீங்க அருமையா எழுதிட்டீங்க கீதாம்மா.மாயூரம் ரயில்வே ஜங்சன் இருக்கும் இடம் அதாவது மேம்பாலம் இறக்கம் தான் சித்தர்காடு. ரொம்ப புண்ணிய ஸ்தலம். அருமையாக கட்டுரை கீதாம்மா. பை தி பை மாயவரம் வரை வ்ந்துட்டு வீட்டுக்கு வராம போனதில் கிருஷ்ணாவுக்கும் குழந்தைகளுக்கும் கொஞ்சம் வருத்தமே!

    ReplyDelete
  4. பதிவை படிச்சபோது வியப்பாவும், பிரமிப்பாவும் இருக்கு. இந்த இடத்துக்கு போயிட்டு வந்தோதோட இல்லாம படங்களோட எங்கிட்டேயும் பகிர்ந்துக்கறதுக்கு ரொம்ப ரொம்ப நன்றி. வெண்பா பிரமாதம்!

    ReplyDelete
  5. ஆச்சர்யப்பட வைக்கும் தகவல்கள். வாய்ப்புக் கிடைத்தால் போக வேண்டிய இடங்களில் ஒன்று.

    ReplyDelete
  6. வாங்க அஷ்வின் ஜி, என் பயணங்களிலே வலைப்பக்கம் தான் போட நினைச்சேன். அப்புறமா இங்கே போட்டால் பெருமளவு ரசிகர்கள் இருப்பாங்கனு நினைச்சேன். ஹிஹிஹி, இதுக்கெல்லாம் ரசிகர்கள் எதிர்பார்க்காதீங்கனு நம்ம தொண்டர் கூட்டம் எட்டியே பார்க்கலை. :))))))
    போகட்டும். துகளறு போதம் தொடர் விளக்கங்களைக் கேட்டுப் புரிஞ்சுக்கும் உங்களோட ஆன்மிக அறிவுக்கு என் வணக்கம்.

    ReplyDelete
  7. அபி அப்பா, முதல்லெ போட்ட கமென்ட் மெயிலில் வந்திருக்கு. ஆனால் பப்ளிஷ் ஆக மாட்டேன்னு பிடிவாதம். அப்புறமா இதை மட்டும் போட்டிருக்கேன்.

    மாயவரம் வந்ததே அந்தக் கல்யாணத்துக்குத் தான். :))) நான் இம்முறை நண்பர்கள் யாரையும் சந்திக்கும் அளவுக்கு அவகாசத்தோடு வரலை. கல்யாணச் சத்திரத்துக்கு என்னை வந்து பாருங்கனு நண்பர்களைச் சொல்வது என் வரையில் சரியாகப் படலை. அதான் யாருக்கும் சொல்லாமல் சென்னையும் போயிட்டு, மாயவரமும் போயிட்டு வந்துட்டேன். பார்க்கலாம் அடுத்த முறை. :)))))

    ReplyDelete
  8. அபி அப்பா, உங்க சாட்டிங் வந்தப்போ மாயவரத்தில் இருந்தேன். வந்து பார்த்ததும் பதில் அனுப்பி இருக்கேன்; பாரத்தீங்களோ இல்லையோ தெரியலை. :)))))

    ReplyDelete
  9. வாங்க மீனாக்ஷி, ரசிச்சதுக்கும் வியந்ததுக்கும் ரொம்ப நன்றி. பதிவு பிடித்திருப்பது குறித்து மகிழ்ச்சியும் கூட.

    ReplyDelete
  10. வாங்க ஸ்ரீராம், மாயவரத்தில் இருந்து ஆட்டோவில் போயிட்டு வந்துடலாம். பேருந்தும் உள்ளது.

    ReplyDelete
  11. சிறப்பான தகவல்கள். ஒவ்வொரு ஊரிலும் இப்படி எத்தனை விதமான கோவில்கள். பார்க்க இந்த ஜன்மா போறாது....

    மாயவரத்திற்குப் போக வேண்டும்... பார்க்கலாம் அடுத்த முறை முடிகிறதா என....

    ReplyDelete
  12. சிற்றம்பல நாடிகள் ஜீவசமாதி சிறப்புக்கள் அறிந்துகொண்டேன்.

    விரிவான பகிர்வு.

    ReplyDelete
  13. There is a siddar samadhi temple near Karaikudi,

    Prof Rathinam chandramohan was kind enough to take me to that place.

    I have taken some photogra[hs of that place and

    http://siddhar-pages.blogspot.in/

    one can see that place in photos here.

    good wishes

    ReplyDelete
  14. சிற்றம்பல நாடிகள் கதை மெய் சிலிர்க்க வைத்தது. என்ன ஒரு குரு, என்ன ஒரு சிஷ்யன்!
    உங்கள் தயவால் நாங்களும் எல்லாவற்றையும் தரிசனம் செய்தோம்.
    நன்றி!

    ReplyDelete