எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Saturday, February 08, 2014

நிச்சயதார்த்தத்தில் அமர்க்களம்! :)))

டிடி, முதல்லே வேறே தலைப்புத் தான் கொடுத்தேன். அப்புறமாத் தான் நமக்கும் அமர்க்களத்துக்கும் நெருங்கிய உறவுனு இந்தப் பேரை வைச்சுட்டேன்.  உங்களுக்கும் பிடிக்கும்னு தான்! :))))  //

பையர் மேலே ஓங்கிய உளி அப்படியே விழுந்திருந்தால் தலை இரண்டாகப் போயிருக்கும்.  அல்லது தோள்பட்டையில் விழுந்திருந்தால் தோள் பட்டையில் முறிவு ஏற்பட்டிருக்கும். (பையருக்கு மூணாம் வருஷம் படிக்கையிலேயே எல்&டியில் தேர்வாகிப் பரிக்ஷை எழுதிய உடனே சேரச் சொல்லி இருந்தாங்க.  அது கடைசி வருஷம்.  முதல் செமஸ்டர். அக்கா கல்யாணத்துக்காகவே குஜராத்திலிருந்து வந்திருந்தார். )  அந்த உளி என்ன காரணமோ அதைக் கோர்த்திருந்த மரப்பிடியிலிருந்து நழுவிப் பையரின் தலையையும், தோள்பட்டையையும் உரசிக் கொண்டு விழுந்திருக்கிறது.  உளி படாத கோபத்தில் அந்தத் தொழிலாளி பையரின் சட்டையைப் பிடித்து உலுக்க ஆரம்பிக்க பையரும் மன்னிப்புக் கேட்டிருக்கார்.  ஆனாலும் அவருக்குக் கோபம் அடங்கலை.  கன்னத்தில் அடிச்சிருக்கார்.  தெரியாமல் பட்டிருக்குனு சொன்னபோதும் விடலை.

அதுக்குள்ளே அங்கே தற்செயலாக நம்ம ரங்க்ஸின் அலுவலகத்திலிருந்து வந்திருந்த வண்டி வீட்டிலிருந்து சாமான்கள் எடுத்துச் செல்ல வந்திருக்கு.  வண்டி ஓட்டுநர்களுக்குப் பையரை அடையாளம் தெரியவே, உடனே உதவிக்கு ஓடி வந்து இருக்காங்க.  வீட்டுச் சொந்தக்காரரை வரவழைத்து, (அவரும் தெரிஞ்சவரே) இது தற்செயலாகப் பட்டது, திட்டமிட்டுப் படலைனு சொல்லி அந்தத் தொழிலாளிக்கு மருத்துவத்துக்குப் பணமும் கொடுத்து(இதுக்குத் தான் அவர் சண்டை போட்டிருக்கார் என்பதும் தெரிந்தது.) சமாதானம் பண்ணி இருக்காங்க.  அவங்க அப்புறமா சத்திரம் வந்தாச்சு.


இது இத்தனையும் நடந்ததை எல்லாம் பையர் என் கிட்டேயே அவங்க அப்பா கிட்டேயோ சொல்லலை.  நாங்க மணமேடையில் பிசியாக இருந்தோம். அடி வாங்கியதிலோ அல்லது உளி பட்டதிலோ பையருக்குத் தலை வலி வந்திருக்கு.  கண்ணும் ஒரு மாதிரி இருட்டவே அப்படியே என் தம்பி மனைவி மடியில் படுத்து,"மாமி, ரொம்ப முடியலை!" னு சொல்லி இருக்கார். அவ உடனே என் தம்பி கிட்டே விஷயத்தைச் சொல்லவும், தம்பியும் என் அண்ணாவுமா சத்திரத்துக்கு எதிரேயே இருக்கும் மருத்துவரிடம் அழைச்சுப் போயிருக்காங்க.  இந்த விஷயம் மெல்ல மெல்ல எல்லாருக்கும் பரவி என் மாமியார், நாத்தனார்கள், மைத்துனர்கள்னு எல்லாருக்கும் தெரியவே இரண்டு மைத்துனர்களும் உடனே மருத்துவமனைக்குப் போயிட்டாங்க.  வாசல்லே என்னமோ கூட்டம்னு பார்க்கப் போன ரங்க்ஸ் அங்கேயே விஷயத்தைக் கேட்டுவிட்டு செட்டில் ஆகிவிட்டார்.

என்னிடம் சொன்னால் பயப்படுவேன்னு யாருமே சொல்லலை.  எங்க பொண்ணை உடை மாத்திக்க அனுப்பிட்டு, நான் வாசலுக்கு வந்து என்ன எல்லாரும் என்னை விட்டுட்டு ரகசிய மீட்டிங்கா? னு கேட்டேனா!  எல்லாரும் திருதிரு!  உடனே சந்தேகம் ஜனிக்க என்ன விஷயம்னு கேட்டா யாருமே வாயைத் திறக்கலை.  தம்பியோட பெரிய பையர் அப்போ மருத்துவமனையிலிருந்து வந்து நேரடி ரிப்போர்ட் கொடுத்தார். மருத்துவர் ஸ்கான் பண்ணணும்னு சொல்றார்னு சொல்லவே, நான் சாவகாசமா யாருக்கு என்னனு கேட்க அந்தப் பையர் பட்டுனு போட்டு உடைச்சுட்டார்.  உடனே அங்கிருந்து எதிரிலிருந்த மருத்துவமனைக்கு மின்னல் வேகத்தில் ஓடினேன்.  பின்னாலே ரங்க்ஸ், என் மாமியார் எல்லாம் ஓடாதே, ஓடாதே, இரு ஒண்ணும் இல்லைனு சொல்லிட்டு வராங்க.

அங்கே போனால் அந்த மருத்துவர், (கல்யாணம் ஆனதிலிருந்து தெரிஞ்சவர்) என்னைப் பார்த்துட்டு, உன் பிள்ளையா? என்னம்மா இப்படி அடி வாங்கி இருக்கானே! சின்னப் பையன்ம்மா.  தலை வலிக்குதுனு சொல்றான், ஸ்கான் ப்ண்ணினாத் தான் என்னனு புரியும்னு சொல்றார்.  ஒரே தலை சுத்தல்.  அவரிடமே எங்கே ஸ்கான் பண்ணறதுனு கேட்டு அதுக்குச் சீட்டும் வாங்கிக் கொண்டு அவசரம்  அவசரமாச் சாப்பிட்டுட்ட் என் தம்பியும், ரங்க்ஸோட கடைசித் தம்பியுமா, என் கடைசி நாத்தனார் கணவரையும் அழைச்சுண்டு,  ஒரு ஆட்டோ வைச்சுட்டுப் பையரை அழைச்சுட்டுப் போனாங்க.  நாங்க இங்கே என்ன செய்யறதுனு தெரியாம முழிச்சுட்டு இருக்கோம்.  பையர் ஒண்ணுமே சாப்பிடலை.  ஸ்கான் பண்ணணுமே!

அங்கே இருந்து உடனே ரிப்போர்ட் வேணும்னு சொல்லி இருக்கிறதாலே ஸ்பெஷலிஸ்டுக்கும் பணம் கட்டி வரவழைச்சிருந்தோம்.  போய் ஸ்கான் பண்ணி இருக்காங்க.  தோள் பட்டையில் மட்டும் உளி பட்டு லேசா உள் காயம் இருந்தது.  நல்லவேளையாத் தலையில் இல்லை.  தோள்பட்டை வலியால் கூடத் தலையில் வலி தெரிஞ்சிருக்கலாம்னு அங்கே மருத்துவர் சொல்லிட்டு அவரே மருந்துகளையும் கொடுத்திருக்கார்.  அங்கிருந்து ரங்க்ஸோட தம்பி உடனே தொலைபேசித் தெரிவிக்க நாங்களும் கொஞ்சம் நிம்மதியாகி சாயந்திரம் நிச்சயதார்த்தத்துக்கு ஏற்பாடுகளைக் கவனிக்க ஆரம்பிச்சோம்.

சாயந்திரம் ஆறு மணிக்கு நிச்சயதார்த்தம்.  இவங்கல்லாம் கீழ்ப்பாக்கத்திலிருந்து நாலு  மணிக்குக் கிளம்பிட்டாங்க.  நாத்தனார் கணவர் வண்டியிலே போயிருந்தார்.  ஆகவே பையரை அவரோட அனுப்பிட்டு, நிச்சயதார்த்தம் போது பெண்ணின் சகோதரன் வேண்டுமே!  என் தம்பியும், ரங்க்ஸின் தம்பியும் ஆட்டோவில் வரோம்னு சொல்லி இருக்காங்க.  இவங்க இரண்டு பேரும் ஆட்டோவில் வந்து சேர ஐந்து மணி ஆயிடுச்சு.  ஆனால் பையரும், நாத்தனார் கணவரும் வரலை.  இவங்க வந்ததுமே, அவங்க வந்தாச்சானு கேட்க, நாங்க வரலைனு சொல்ல இருவருக்கும் திகைப்பு.  நாலு மணிக்கே அனுப்பிட்டு, நாங்க கொஞ்ச தூரம் நடந்து வந்து ஆட்டோ பிடிச்சோம்.  அம்பத்தூருக்குனு வரமாட்டேனு சொல்றாங்க.  ஆட்டோ பிடிச்சு வரதுக்குத் தான் இத்தனை நாழி ஆச்சு.  அவங்க அப்போவே வ்ந்திருக்கணுமேனு சொல்றாங்க.

மணி ஆறும் ஆச்சு, ஆறரையும் ஆச்சு.  இதுக்குள்ளே முழு விஷயமும் பிள்ளை வீட்டுக்கும் தெரிஞ்சு போக அவங்களும் பெண்ணின் தம்பி வரட்டும் அப்புறம் தான் நிச்சயம்னு சொல்லிட்டாங்க.  புரோகிதர்கள் வந்தாச்சு. உறவினர்கள் வந்தாச்சு. சத்திரத்தில்  எல்லா நாற்காலிகளும் நிரம்பி வழியறது. மணி ஏழும் ஆச்சு. இவங்க ரெண்டு பேரையும் காணவே காணோம்.  இப்போ எங்க நாத்தனாருக்கும் கவலை வர அவளும் ஒரு பக்கம் அழ ஆரம்பிச்சாச்சு. ஏழரை மணி.  ம்ஹூம் இரண்டு பேரும் வரவே இல்லை.!!!!


14 comments:

  1. எங்களுக்கும் திகைப்பாக இருக்கு...! ஏன் வரவில்லை..? என்னாச்சி...?

    ReplyDelete
  2. போக்குவரத்து நெறிசலில் மாட்டிக் கொண்டார்களோ!

    ReplyDelete
  3. அடுத்த சஸ்பென்ஸ். என்ன ஆனதுன்னு தெரிய ஆவல். பார்ப்போம்.

    அதுசரி, மோதிக்கு சாப்பாடு கொடுத்தாங்களா இல்லையா! :)))

    ReplyDelete
  4. என் மகனின் திருமணத்தன்றும் இப்படித்தான் இரண்டு மகன்கள் பைக்கில் மண்டபம் நோக்கி வரும்போது அடிபட்டு மருத்துவமனையில்..

    ஹாஸ்பிடலுக்கும் திருமண மண்டபத்துக்கும் அலைந்தோம் .

    மண்டபம் நிறைந்த கூட்டத்தில் விஷயம் வெளியே தெரியாதபடி உள்ளே அழுதும் வெளியே சிரித்தும் .. ஒரே வேதனைதான் ..

    ReplyDelete
  5. டிடி, அதிலே தான் இருக்கு விஷயமே!:)

    ReplyDelete
  6. கோமதி அரசு, அவங்களுக்குப் பின்னால் ஆட்டோவில் கிளம்பினவங்க வந்துட்டாங்களே! :)

    ReplyDelete
  7. வாங்க ஶ்ரீராம், அத்தனை அமர்க்களத்திலும் எங்க பையர் மோதிக்குச் சாப்பாடு வைச்சுட்டுத் தான் வந்தார். இதை யாராவது கவனிச்சுக் கேட்பாங்களானு பார்த்தேன். :))))

    ReplyDelete
  8. வாங்க ராஜராஜேஸ்வரி, நல்லவேளையா அப்படி ஒண்ணும் ஆகலை! உங்க விஷயம் இன்னமும் சோகம் தான்! :)

    ReplyDelete
  9. வாங்க அப்பாதுரை, மொக்கைகளுக்கே விஜயம்னு சங்கல்பம் பண்ணி இருக்கீங்க போல! :)))))

    இது மர்மக் கதை அல்ல. நடந்த நிகழ்வு. ஆனால் ஒவ்வொரு கணமும் திகில்! :)))

    ReplyDelete
  10. சரியான திகில் .பாவம் பையன்.நல்லபடியா வந்து சேர்ந்து திருமணம் நடந்திருக்கும். இந்தக் கஷ்டங்கள் நடக்காமல் இருந்திருக்கலாம்.

    ReplyDelete
  11. வாங்க வல்லி, என் கல்யாணம் வரையிலும் இம்மாதிரித் திகில் சம்பவங்கள் நடைபெறவே இல்லை. முதல் முதல் சீமந்தத்தில் ஆரம்பிச்சது. அதிலிருந்து ஒரே திகிலூட்டும் சம்பவங்கள் இல்லாமல் எந்தக் கல்யாணமும், எந்த விசேஷமும் நடைபெறவில்லை. :))))

    ReplyDelete
  12. பயங்கர திகில் கதையா இருக்கே.....

    தொடர்கிறேன்.

    ReplyDelete
  13. கல்யாணம் என்றால் திகிலும் வந்துவிடும்போல........

    ReplyDelete