இங்கே
கடைசியாய் எழுதினதன் சுட்டி மேலே! திருமோகூரில் இருந்து மதுரை நோக்கி வந்தோம். பெரியார் பேருந்து நிலையத்தில் இறங்கியே போயிருக்கலாம். ஆனால் சேதுபதி பள்ளியிலிருந்து தானப்பமுதலி அக்ரஹாரம் பக்கத்தில் என்பதால் அங்கே இறங்கினோம். முதலிலேயே ஒரு பெரியவர் அங்கே இறங்க வேண்டாம். அதற்கடுத்த நிறுத்தத்தில் இறங்குங்கனு சொல்லி இருந்தார். எனக்குத் தான் ஊர் தெரியுமே என்னும் எண்ணத்தில் இருந்துவிட்டேன். இறங்கினால் ஆட்டோ குட்ஷெட் தெரு, வடக்குமாசி வீதி வழியாகப் போய் தானப்ப முதலித் தெருவுக்குப் போகாதாம். ஒன்வே! :( ஆகவே மேல வெளிவீதி திரும்பி சந்தைப்பேட்டைத் தெரு அல்லது டவுன்ஹால் ரோடு வழியாகத் தான் போகணுமாம். ஆட்டோக்காரர் 80 ரூபாய் கேட்டார். ஊரைச்சுத்தணுமே! வேறே வழியில்லாமல் ஒத்துக் கொண்டோம். மேலக்கோபுர வாசலில் தானப்பமுதலித் தெருவுக்குள்ளே நுழைந்தோம். தெரு அப்படியே மாறாமல் இருந்தாலும் பல வீடுகள் இடித்துக்கட்டப்பட்டிருந்தன.
எனக்குத் தெரிந்தவர்கள் வீடெல்லாம் ஹோட்டல்களாக ஆகிவிட்டிருந்தன. வரிசையாகப் பார்த்துக் கொண்டே வந்தேன். திருப்பாவை வகுப்பு மற்றும் முக்கியச் சிறப்பு நிகழ்ச்சிகள், கல்யாணங்கள் ஆகியவை நடைபெறும் கண் ஆஸ்பத்திரி என்று அழைக்கப்பட்ட மங்கள நிவாஸ் பழைய கட்டிடம் ஆகி எந்நேரமும் இடிந்து விழுமோ என்னும் நிலையில் காணப்பட்டது. அதற்கு எதிரே தான் நாங்கள் தேடிச் சென்ற கதிர் பாலஸ் ஹோட்டல். சரியாக மிட்லான்ட் ஹோட்டலுக்கு எதிரே இது இருந்தது. மிட்லான்ட் ஹோட்டலில் ஒரு காலத்தில் எம்.ஜி.ஆர்., சிவாஜி போன்ற நக்ஷத்திரங்கள் வந்து தங்குவார்கள். கீழே ஒரு போஸ்ட் ஆஃபீஸ் இருந்தது. அந்த இடத்தில் இப்போது வேறு ஏதோ ஒரு காரியாலயம். மிட்லண்ட் ஹோட்டலின் அறைகள் எல்லாம் நல்ல தெருவைப் பார்த்து ஜன்னல்கள் வைத்து வெளிச்சமாக இருக்கும். எல்லா அறைகளின் ஜன்னல் கதவுகளும் கண்ணாடி உடைந்து பார்க்கவே பரிதாபமாகக் காட்சி அளித்தது.
அதைப் பார்த்து மன வேதனையுடன் திரும்பிக் கதிர் பாலஸுக்குள் ஏறிப் போக நினைத்துப் படிகளில் கால் வைத்தால் பக்கத்தில் சேதுராம் பஜனை மண்டலி! ஆஹா! இது என்னுடன் கூடப் படித்த கோமதியின் பிறந்த வீடு அல்லவோ! ஆமாம், ஆமாம், அதே தான்! என்று உறுதிப் படுத்திக் கொண்டு ஹோட்டலுக்குச் சென்று அறை கேட்டோம். இரு அறைகள் காலியாக இருப்பதாகச் சொல்லி முதல் மாடியில் ஒன்றும் இரண்டாம் மாடியில் ஒன்றுமாகக் காட்டினார். இரண்டிலுமே ஜன்னல்களே இல்லை. ஓ.டி.எஸ். எனப்படும் திறந்த காற்றோட்ட அமைப்பினருகே ஒரு ஜன்னல். ஆனால் அந்த ஓடிஎஸ்ஸும் இருட்டு. கீழே இருந்து மேலே சென்றதற்கு மேலே திறப்பு இல்லை. முன் காலத்தில் போல் மேலே திறப்பு இருந்தால் காற்றும், வெளிச்சமும் வரும். அப்படி இல்லை. ஆனால் இதை எல்லாம் அப்போ யோசிக்காமல் இரண்டாம் மாடி அறையை எடுத்துக் கொண்டோம்.
சாப்பாடு பத்திக் கேட்டால் ரூமில் சேவை செய்யும் பையர் இப்போத் தான் காலை ஆகாரமே முடிஞ்சிருக்கு; சாப்பாடுக்கு நாழி ஆகும்னு சொல்றார். மணி அப்போவே பதினொன்றரை. சரி, இத்தனை நாழிக்கு மேலே கோயிலுக்குப் போனால் நடை சாத்தும் நேரமா இருக்கும், சாயங்காலமாப் போயிக்கலாம், சும்மா இப்படிக் காலார நடந்துட்டு வரலாம்னு கிளம்பினோம். நம்ம ரங்க்ஸுக்கு கோபு ஐயங்கார் கடையிலே போய்ச் சாப்பாடு சாப்பிடணும்னு! அங்கே சாப்பாடு இல்லைனு சொன்னால் கேட்டால் தானே! நீ மதுரைக்கு வந்து தங்கியே பல வருடங்கள் ஆச்சு! உனக்கு எல்லாம் மறந்திருக்கும்னு சொல்லிட்டுக் கீழே வந்து அங்கே கணக்கு எழுதிட்டிருந்த ஒருத்தரிடம் போய் வேலை மெனக்கெட்டு, "கோபு ஐயங்கார் கடையிலே சாப்பாடு உண்டா?" னு கேட்க, அவர் திருதிரு! ஙே! நான் அவசரம் அவசரமாக மறுத்துக் கொண்டே, வாங்க எனக்கு வழியெல்லாம் தெரியும், அங்கேயே போய்க் காட்டறேன்னு சொன்னதையும் லக்ஷியம் செய்யாமல் அவரை வழி கேட்க, அவர் மீண்டும் திருதிரு! ரிசப்ஷனில் இருந்த பையருக்கும் தெரியவில்லை!
கோபு ஐயங்கார் கடைனு ஒண்ணு இருக்கிறதாவே தெரியாதுனு அந்த மனிதர் திருவாய் மலர்ந்தருள ஒருவழியாய் வேறே வழியில்லாமல் என்னுடன் வந்தார் ரங்க்ஸ். வழியெல்லாம் பழைய நினைவுகளை மீட்டெடுத்தபடியே பூக்காரச் சந்து வழியாக மேலாவணி மூலவீதி, வடக்காவணி மூலவீதி, வடக்குக் கிருஷ்ணன் கோயில் தெரு சேரும் முனைக்கு வந்து சேர்ந்தோம். மேலாவணி மூல வீதி 1 ஆம் நம்பர் வீடு கோபாலசாமி ஐயர் வீடு; இப்போ அவர் பிள்ளை ஜி.எஸ்.மணி கர்நாடக சங்கீத வித்வான் இருக்கார். வீடு முன்னே பார்த்த மாதிரியே அப்படியே இருந்தது. வாசலில் ஜி.எஸ்.மணி பெயருடன் பெயர்ப்பலகை. மற்ற 2,,3,4,5,6,7 நாங்க இருந்த வீடு, அப்புறம் எட்டு பாரி&கம்பெனி வீடு, அடுத்து ஒன்பது எங்க சொந்தக்காரங்க வீடு, பத்தும் என்னோட ஒண்ணுவிட்ட மாமா வீடு, பதினோராம் நம்பர் வீடு என் அம்மாவின் சித்தி வீடு. எல்லாமும் மாறிவிட்டது.
ஆனால் மேலாவணி மூலவீதிக்குப் போகலை. முக்கில் இருந்தே பார்த்துட்டு வடக்காவணி மூலவீதியில் நடந்தோம். நான்படிச்ச பொன்னு ஐயங்கார் சந்துப் பள்ளிக்கூடம் இப்போ இல்லை. சந்தும், கட்டிடமும் இருக்கு. ஆனால் அங்கே பள்ளிக்குப் பதிலாக ஏதோ கோடவுன் வந்திருக்கு. சற்றுத் தள்ளி இருந்த மண்டபம் ஸ்கூலும் இல்லை. சந்துப் பள்ளிக்கூடத்துக்கு எதிர்ச் சந்தில் நுழைந்து வலப்பக்கம் திரும்பினால் கொஞ்ச தூரத்தில் கோபு ஐயங்கார் கடை. அதன் அருகே இருந்த காப்பிக்கடைக் கூட்டத்தைப் பார்த்துட்டு ரங்க்ஸ் கடை இருக்குனு சொல்ல, வார விடுமுறைநாள்னு போட்டிருக்குனு நான் சொல்ல, கிட்டேப் போய்ப் பார்த்து உறுதி செய்து கொண்டு காப்பிக் கடையில் விசாரித்தார் ரங்க்ஸ். அவங்களும் சாப்பாடு போடுவதில்லை என்பதை உறுதி செய்தார்கள். பின்னர் அவங்க கிட்டேயே சாப்பாடு எங்கே கிடைக்கும்னு விசாரித்துக் கொண்டு, ஒரு காஃபி வாங்கிக் குடித்துவிட்டு வழியில் அவங்க சொன்ன ஹோட்டலில் தயிர் சாதம் பொட்டலம் வாங்கிக் கொண்டு ரூமுக்கு வந்தோம்.
ரூமில் பகல் பனிரண்டு மணிக்கே விளக்குப் போட்டுக்கணும்; வெளிச்சமே இல்லை. காற்று என்பது வாயால் ஊதினால் தான். 24 மணி நேரமும் மின் விசிறி சுத்தணும். அல்லது ஏசியில் இருக்கணும். ஏசியில் அவ்வளவு நேரமெல்லாம் இருந்தால் உடம்புக்கு ஒத்துக்காது என்பதோடு என்னோட கீல்வாயுப் பிரச்னையும் அதிகம் ஆகும். ஆகவே அவற்றோடு சில நேரம் போட்டு, அணைத்து என்று விளையாடினோம். ஏண்டா வந்தோம்னு ஆகிப் போச்சு. குறைந்த பக்ஷமாக வாசல்பக்கம் பார்த்தாவது ஒரு ஜன்னல் வைச்சிருக்கலாம். விளக்கு எரிந்தால் அறை சூடாகி விடுகிறது. பல்லைக் கடித்துக் கொண்டு வாங்கிப் போன தயிர்சாதத்தைச் சாப்பிட்டுவிட்டு 3 மணி வரைபொழுதைப் போக்கிவிட்டுக் கோயிலுக்குக் கிளம்பினோம். மேல கோபுரம் வழியாகப் போகலாம்னு சொன்னேன். ஆகையால் மேலகோபுர வாசல் வழியாவே போகலாம்னு ரங்க்ஸ் சொன்னார். மேல, கீழ அனுமந்தராயன் கோயில் தெருவுக்கு எதிரே தானப்பமுதலி அக்ரஹாரத்தின் தென் பக்கம் வரும். அப்படி வந்து மேல கோபுரத்துக்காகத் திரும்பினோம். ராஜாபார்லி பிஸ்கட் பேக்கரி இருந்த சந்தையும், அங்கே தான் ஹிந்தி பிரசார சபா இருந்தது என்பதையும் காட்டினேன். ஹனுமந்தராயன் கோயில் தெருவில் தான் எம்.எஸ்.அம்மாவின் வீடு இருந்தது என்பதையும் சொன்னேன். அப்படிப் போனால் திண்டுக்கல் ரோடு வரும் என்பதையும், அங்கே ராஜா பார்லி கடை இருப்பதையும் சொல்லவே கிளம்பும் முன்னர் ராஜா பார்லி பிஸ்கட் வாங்கிச் செல்லணும்னு சொன்னார். அங்கே வெண்ணை பிஸ்கட் நல்லா இருக்கும்னு சொல்லி இருக்கேன்.
அப்புறம் டெல்லிவாலாவுக்குப்போய் இரவுச் சாப்பாடு உண்டானு கேட்டோம். டெல்லிவாலா மாறி விட்டிருந்தது. பழைய ஆட்கள் யாருமே இல்லை. இப்போது யாரோ வாங்கி இருக்காங்க போல! கடையே அழுது வடிந்ததோடு இல்லாமல் அடுக்கடுக்காய்க் காணப்படும் இனிப்பு வகையறாவே இல்லை. அங்கேயும் இரவில் சப்பாத்தியும், பூரியும் என்று சொல்லிவிட்டுத் தொட்டுக் கொள்ளக் குருமா தான் என்றார்கள். சரினு மேலே நடந்தோம். டாய்லாண்ட் இருந்த இடத்தில் வேறே ஏதோ இருக்கு. ஃபன்ட் ஆஃபீஸ் கட்டிடம் மாறவே இல்லை. மணி அடிக்கும் காவலாளி மாறி இருப்பார். :) ஃபன்ட் ஆஃபீஸ் தாண்டியதும் மேலாவணி மூலவீதி, மேலக்கோபுர வாசல் சேரும் இடம். அங்கே மேலாவணி மூலவீதி முக்கில் இருக்கும் பிள்ளையாரைப் பார்க்கணும்னு நினைச்சுட்டு மறந்துட்டேன். மேலாவணி மூலவீதியின் மறுபக்கம் போகாமல் நேரே மேலக் கோபுரத்துக்காக நடந்தோம். வழியில் நாகப்பட்டினம் மிட்டாய்க்கடை அம்பியின் வீடு வர அதைக் காட்டினேன். அதன் பக்கத்தில் இருந்த டி.ஏ.எஸ்.ரத்தினம் பட்டணம் பொடிக்கடை இப்போ இல்லை. அதே போல் சென்ட்ரல் சினிமா பக்கம் அஜீஸ் சந்தனக்கடையும், அதன் எதிரே இருக்கும் வி.சூ.சுவாமிநாதன் புத்தகக் கடையும் கண்ணில் படவில்லை.
மேலக்கோபுர வாசலில் ஒரு ஹோட்டலில் காஃபி மட்டும் சாப்பிட்டுவிட்டு செருப்பு வைக்கும் இடம் அருகே இருந்த செக்யூரிடி செக்கப்பில் ஸ்கானிங், மற்ற சோதனைகளை முடித்துக் கொண்டு கோபுர வாசலுக்காக நடந்தோம். மேலக்கோபுர வாசலில் நுழையும்போதே காற்று தள்ளும். இப்போ அந்தக் காற்றுக்கென்ன வேலி! என்ன தடைனு புரியலை! காற்றே இல்லை! ஏமாற்றமாக இருந்தது. மேல ஆடி வீதி, வடக்கு ஆடி வீதி சுற்றிக் கொண்டு கல்யாண மண்டபம் வழியாகவோ, அல்லது பூக்கடைகள், வளையல் கடைகள் வழியாகவோ கிழக்கு சந்நிதிக்குப் போய் அம்மனையும் சுவாமியையும் பார்ப்பது என்றால் நாழியாகும் என்பதால் நான் குறுக்கே போய் தெற்கு கோபுர வாசல் வழியாகச் சீட்டையும் வாங்கிக் கொண்டு போயிடலாம்னு ஏற்கெவே முடிவு பண்ணி இருந்ததால் அப்படியே போக ஆரம்பித்தோம்.