செண்டலங்காரர்
சற்றேறக்குறைய நாற்பது வருஷங்களுக்கு முன், வழக்கமாக நான் செய்துவரும் தமிழ் யாத்திரையில் ஒரு முறை பொறையாறு முதலிய இடங்களுக்குப் போக நேர்ந்தது. என்னோடு இருந்து தமிழ்ப்பணிக்கு உதவிபுரிந்து வந்த திருமானூர்க் கிருஷ்ணையரென்பவருடன் அம்முறை புறப்பட்டேன். மாயூரத்தைக் கடந்து ஆறுமைல் தூரத்திலுள்ள ஆறுபாதி என்னும் ஊருக்கருகில் சென்று கொண்டிருந்தோம். அங்கே வழியில் கீழ்மேல் அக்கிரகாரத்துக்குப் பின்பக்கமாக வடபுறமுள்ள குளத்தின் கீழ்கரையில் ஒரு பெருமாள் கோயில் இருந்தது. அக்கோயிலின் வாசலில் அதனுடைய தர்ம கர்த்தாவும் வேறு சிலரும் நின்றுகொண்டிருந்தனர். அவர்கள் இருந்த நிலையப் பார்த்தபோது யாரோ பெரிய உத்தியோகஸ்தர் ஒருவருடைய வரவை எதிர்பார்த்துக் கொண்டு நிற்பதாகத் தோற்றியது. எங்களைக் கண்டவுடன் தர்மகர்த்தா என்னை அவ்வுத்தியோகஸ்தராக எண்ணிக்கொண்டா ரென்று ஊகித்தேன். அந்தக் கலத்தில் உத்தியோகஸ்தராக இருந்தாலும் கோவிலுக்குப் போகும் போது வைதிகக் கோலத்தோடுதான் போவது வழக்கம். ஆதலின் நான் மிகவும் சாதாரண உடை யணிந்து செல்வதைக் கண்டும் அவர் என்னையே உத்தியோகஸ்தராக எண்ணிவிட்டார், "வாருங்கள், வாருங்கள்" என்று உபசரித்து வரவேற்றார்.
யாரோ ஓர் உத்தியோகஸ்தர் அவ்வாலயத்தைப் பார்க்க வருவதாகச் சொல்லியிருந்தாராம். அதற்காகப் பெருமாளுக்கு அலங்காரம் செவ்வையாகச் செய்திருந்தார்கள். தர்மகர்த்தாவும் நல்ல உடைகளை உடுத்து அலங்காரம் செய்து கொண்டு நின்றனர். பிரஸாதங்களும் பெருமாளுக்கு நிவேதனம் செய்த வியாஜமாக உத்தியோகஸ்தரின் பொருட்டு ஸித்தமாக வைத்திருந்தனர். அவர்கள் நெடுநேரம் காத்திருந்தார்கள். உத்தியோகஸ்தர் வரவில்லை. அந்த நிலையிலே என்னைக் கண்டவுடன் அவரென்றோ அவரால் அனுப்பப்பட்டவரென்றோ தான் தீர்மானித்திருக்க வேண்டும். தர்மகர்த்தா எங்களை உள்ளே அழைத்துசு சென்றார். பெருமாளைத் தரிசனம் செய்து வைத்தார். அவர் எதிர்பார்த்தவர் நான் அல்லவென்று உடனிருந்தவரால் அறிந்து ஏமாந்து போனார்.
ஆனாலும் அவர் அதைக் காட்டிக் கொள்ளவில்லை. கும்பகோணத்தில் நான் வேலையில் உள்ளவனென்று தெரிந்தவுடன் தம்முடைய பெருமை அங்கே பரவட்டுமென்று எண்ணியிருந்தாலும் இருக்கலாம். எப்படியாயினும் எங்களுக்கு எதிர் பாராதபடி திவ்ய தரிசனமும் வயிறார இனிய பிரஸாதங்களும் கிடைத்தன.
தரிசனம் செய்தபோது பெருமாள் திருநாமம் ராஜகோபாலப் பெருமாளென்று அறிந்தேன். அவர் திருக்கரத்தில் பிரம்பைப்போல ஒன்று காணப்பட்டது. அதன் தலைப்பில் இரண்டு வளைவுகள் இருந்தன. நான் அதுகாறும் பெருமாள் திருக்கரத்தில் அத்தகைய ஒன்றைக் கண்டதில்லை; ஆதலால் தர்மகர்த்தாவை நோக்கி, "இது புதிதா யிருக்கிறதே; என்ன?" என்று கேட்டேன். "அது தான் செண்டு" என்று அவர் கூறினார். "செண்டா!" என்று சொல்லி அப்படியே சின்றுவிட்டேன். "எங்கே, அதை நன்றாகக் காட்டச் சொல்லுங்கள்" என்று வேண்டினேன்.
கோயில் அர்ச்சகர் கற்பூர தீபத்தால் அந்தச் செண்டை நான் நன்றாகப் பார்க்கும்படி காட்டினார். நான் அதைக் கவனித்துப் பார்த்தேன். என் மனக்கண்முன் அப்போது திரௌபதியின் உருவம் வந்து நின்றது; துச்சாதனன் தலைப்பு வளைந்த பிரம்புபோன்ற ஒரு கருவியால் அவள் கூந்தலைப் பற்றி யிழுக்கும் காட்சி வந்தது. அடுத்தபடியாக உக்கிர குமாரர் மேருமலையை அந்தக் கருவியால் எறிந்து திரித்த தோற்றம் தோற்றியது. அவர் மறைந்தார். கரிகாலன் கையில் செண்டாயுதத் தோடு நின்றான். ஐயனாரும் நின்றார். அவர்கள் கைக ளில் எல்லாம் தலைப்பு வளைந்த பிரம்புபோன்ற கருவியைக் கண்டேன். சில நிமிஷங்கள் வரையில் இந்த அகக் காட்சிகளால் புறவுலகத்தை மறந்திருந்தேன்.
அந்த அர்ச்சகர் காட்டிய கற்பூர தீபம் பெருமாள் திருக்கரத்திலிருந்த ஆயுதத்தை எனக்குத் தெளிவாகக் காட்டியது. அதனோடு நெடுங்காலமாக என் மனத்திலிருந்த சந்தேக இருளை அகற்றித் துச்சாதனன், உக்கிரகுமார், கரிகாலன், ஐயனாரென்பவர்கள் கையில் உள்ள கருவி இன்னது தானென்று அறியும்படியும் செய்தது.
" ஐயா, நீங்கள் எனக்குப் பெரிய உபகாரம் செய்தீர்கள். பெருமாளின் தரிசனத்தால் எனக்கு ஒரு பெரிய லாபம் கிடைத்தது; என் மனம் சந்தோஷம் அடைந்தது. இதுவரையிலும் இந்தச் செண்டைப் பார்த்ததில்லை. உங்கள் தயையால் இதைப் பார்த்தேன்" என்று தர்மகர்த்தாவை நோக்கிக் கூறினேன்.
" இந்தப் பெருமாளும் மன்னார்குடியில் எழுந்தருளியிரு்க்கும் பெருமாளும் ஒரே அச்சு. அங்கும் பெருமாளின் திருக்கையில் செண்டு உண்டு. செண்டலங்காரப் பெருமாள் என்றும் அவரது திருநாமம் வழங்கும்" என்று அவர் கூறினார்.
" சந்தோஷம். தங்களுக்கு மிகவும் வந்தனம்" என்று கூறி விடை பெற்றுக்கொணடேன்.
அன்றுமுதல் என் சந்தேகம் பறந்துபோய் விட்டது. பிறகு ஆராய்ச்சி செய்யத் தமிழ் இலக்கியத்தில் பல செண்டுகள் கிடைத்தன. அவற்றை நான் மிகவும் தெளிவாக அறிந்துகொண்டேன். மன்னார்குடிப் பெருமாளுக்குச் செண்டலங்காரப் பெருமாளென்னும் திருநாமம் உண்யென்று தர்ம கர்த்தா கூறியதை இலக்கிய வாயிலாகவும் நான் உறுதி செய்து கொண்டேன். ' செண்டலங்காரப் பெருமாள் வண்ணம்' என்ற பிரபந்த மொன்றை நான் படித்தபோது அந்த நினைவு எனக்கு வந்தது. சுந்தரமூர்த்தி நாயனார் திருக்கரத்தில் உள்ள செண் டும் ஓர் ஆயுதமென்று தெரிந்து கொண்டேன். பெருமாள் தரிசனத்தின் பயன் கைமேல் கிடைத்தது.
**************************************************************************************
இது உ.வே.சாமிநாத ஐயரவர்களின் நினைவு மஞ்சரியிலிருந்து எடுத்தது. செண்டலங்காரர் என்னும் தலைப்பிலே எழுதி இருக்கிறார். இன்று உ.வே.சா. நினைவு தினம். தமிழ்த் தாத்தாவை நினைவு கூர்வோம்.
படித்தேன். ரசித்தேன். நினைவு கூர்ந்தேன்.
ReplyDelete:))
வணக்கம்
ReplyDeleteிவிரிவான தகவல் அறிந்துகொண்டேன் விடயங்களை.. பகிர்வுக்கு நன்றி
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
மேலும் படிக்கத் தூண்டுகிறது, பகிர்வுக்கு நன்றி!
ReplyDeleteபன்மொழிப் புலவர் தெ.பொ.மீ 'சீவக சிந்தாமணி' பதிப்புப் பிரதி வேண்டி ஐயரவர்களை அணுகிப் பெற்ற சுவையான செய்தி தெரியுமில்லையா?..
ReplyDeleteதமிழுக்குத் தொண்டு செய்தவரின் எழுத்துக்கள் இலகுவான நடையில் ....ரசித்தேன்
ReplyDeleteசெண்டலங்கார் பற்றி அறிந்து கொண்டேன்! தமிழ் தாத்தாவையும் நினைவு கூர்ந்தேன்! நன்றி!
ReplyDeleteதமிழ்த்தாத்தாவை நினைவு கூர்ந்த அனைவருக்கும் என் நன்றி.
ReplyDeleteதமிழ் தாத்தா
ReplyDeleteசொல்லும் போதே எவ்வளவு மகிழ்ச்சியாக உள்ளது.
தகவல் பகிர்வுக்கு நன்றிகள் பல.
அ. ஸ்ரீ விஜயன்.
தமிழ் தாத்தா
ReplyDeleteசொல்லும் போதே எவ்வளவு மகிழ்ச்சியாக உள்ளது.
தகவல் பகிர்வுக்கு நன்றிகள் பல.
அ. ஸ்ரீ விஜயன்.
மன்னை இராஜ கோபாலுக்கு செண்டலங்காரர் என்ற தகவலுக்கு மிக்க நன்றி.
ReplyDeleteஅ. ஸ்ரீ விஜயன்