எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Wednesday, May 27, 2015

நான் முதல் முதலாகக் குழம்பு வைத்த போது என்ன நினைத்தேன்!

 பள்ளிக்குப் போகும் நாட்களிலே திடீர்னு அம்மா தன்னோட பிறந்த வீட்டுக்குத் தங்கை பிரசவத்துக்கு உதவிக்குப் போக நமக்குச் சமையல் வேலை பிடித்துக் கொண்டது. முதல்நாள் சமைக்கிறச்சே அப்பா வெண்கலப்பானைக்குப் போட வேண்டிய அரிசித் திட்டத்தைச் சொல்லிட்டு, வத்தல் குழம்பு வைத்துக் குட்(கொட்டு) ரசம் வைக்கச் சொன்னார்.  எங்க அப்பா வீட்டில் கொட்டு ரசத்தை குட் ரசம் என்றே சொல்லிப்பழக்கம் ஆயிடுச்சு.  மாத்திக்க முடியலை, விட்டுடுங்க!

அந்த வருஷத்திலே இருந்து தான் ஸ்கூல் பஸ்ஸில் ஸ்கூலுக்குப் போகப் பணமும் கட்டி இருந்தது. ஏழரைக்கு, பாம், பாம், பாம் னு பஸ் வந்து குரல் கொடுக்கும்.  அதுக்குள்ளே சமைச்சுட்டுக் கிளம்பணும்.  என்ன?  வயசா? வயசெல்லாம் கேட்காதீங்க!  சின்ன வயசு என்பதால் திருஷ்டிப் பட்டுடும். ஆனால் நான் சமைக்க ஆரம்பிச்சு கோல்டன் ஜூபிளி கொண்டாடிட்டு இருக்கேன் இப்போ.  ஸ்கூலுக்கு லேட்டாவும் போக முடியாது. கிரவுண்டைச் சுத்தி ஓடணும்.  கிரவுண்ட் சும்மா ஒரு 2,3 மைலுக்குள் தான் இருக்கும்.

ஆகவே காலம்பர சீக்கிரமே எழுந்து, {ம்ஹூம், அதெல்லாம் எழுப்பி விடற வேலையெல்லாம் கிடையாது, நாமே தான் எழுந்துக்கணும், இப்போ அதே பழக்கத்தில் தானே முழிச்சுக்க வந்தாச்சு என்றாலும் ஒரு ஆறு மாசமாக் காலம்பர எழுந்துக்க முடியலை.  ஐந்தரை ஆயிடுது பல நாட்கள்! :(} அதை விடுங்க.  சீக்கிரமா எழுந்து பள்ளிப் பாடங்களை முடிச்சுக் கொண்டு குளிச்சுத் துவைச்சு,உலர்த்திட்டு வந்து சமைக்கணும்.  குளியலறை ஒன்றே ஒன்று.  நாலு குடித்தனங்கள்.  ஒரு வீட்டில் குறைந்தது நான்கு நபர்கள்.  எல்லோருக்கும் காலை அவசரம். அதிலே தான் குளிச்சுத் துவைச்சாகணும்.

எல்லாம் முடிச்சுச் சமைக்க வந்தாச்சு.  சாதம் வடிச்சாச்சு ஒரு குமுட்டியிலே. இன்னொரு குமுட்டியிலே ரசமும் வைச்சேன்.  புளி போடுவாங்களானு சந்தேகம்! எங்க பகுதி சமையலறையிலிருந்து குரல் கொடுத்தால் அடுத்த பகுதி சமையலறையிலே இருக்கும் மாமி பதில் கொடுப்பாங்க.  அவங்களோட வழிகாட்டுதலின் பேரில் ரசத்துக்கும் புளி உண்டுனு தெரிஞ்சது.  குழம்புக்கும் புளி கரைக்கணுமாமே!  அதையும் கரைச்சு வைச்சாச்சு! ரசம்  சின்னக் குமுட்டியில் ஆகி விட்டது.  அதிலேயே கல்சட்டியைப் போட்டுக் குழம்பு வைக்கணும்.  பெரிய குமுட்டியில் காய் பண்ணியாகணும்.  அதுக்குள்ளே ஸ்கூல் பஸ் பாம் பாமெனக் கத்த, இப்போ வரலை, அடுத்த ட்ரிப்புக்கு வாங்கனு டிரைவர் கிட்டே கூடத்தில் குடி இருந்த மாமியை விட்டுச் சொல்லச் சொல்லிட்டுக் காயைப் பெரிய குமுட்டியில் போட்டுவிட்டு, சின்னக் குமுட்டியில் போட்டிருந்த கல்சட்டியில் எண்ணெய் ஊற்றிக் கொண்டு தாளிக்க ஆரம்பித்தேன்.

என்னென்ன தாளிப்பாங்க?  சரியாத் தெரியலை.  எனக்குத் தெரிஞ்சதை எல்லாம் தாளிப்போம்னுட்டுப் பக்கத்துப் போர்ஷன் மாமியைக் கேட்காமலேயே கடுகு, உபருப்பு, கபருப்புனு எல்லாத்தையும் போட்டு சுண்டைக்காய் வத்தலையும் போட்டு நிறைய மிளகாய் வத்தலையும் போட்டுத் தாளிச்சுட்டேன்.  புளிக்கரைசலையும் ஊத்தியாச்சு.  உப்பும் போட்டாச்சு.  ஆனாலும் குழம்பில் நிறம் வரலை.  ஹிஹிஹி, பொடி போடணும்னு தெரியலை.  எங்க வீட்டிலே ரசப்பொடினு தான் பண்ணுவாங்களா.  அது ரசத்துக்கு மட்டும்னு நினைச்சுட்டேன். நிறத்துக்காக மஞ்சள் பொடியைப் போட்டுட்டேன்.  குழம்பும்கொதிச்சது.  கீழே இறக்கிட்டு அவசரம் அவசரமாச் சாப்பிட்டுட்டுப் பள்ளிப் பேருந்தைப் பிடிக்க நேரு பிள்ளையார் சந்திப்பை நோக்கி நடந்தேன்.

பள்ளியிலே குழம்பே நினைவில் இருந்தது.  எப்படி இருந்ததோ என்னமோனு!  சாயந்திரமா வந்தால் ஒரே பாராட்டு மழை.  புளிக்காய்ச்சல் மாதிரி இருந்ததுனு. அப்ப்பாடா!   பெருமூச்சு விட்டுட்டுத் தப்பிச்சுண்டேன். மெதுவாப் பக்கத்துப் போர்ஷன் மாமியிடம் மாமி அம்மா வைக்கிறாப்போல் குழம்பு இல்லையே என்ன காரணம்னு கேட்டால் அவங்க எப்படி வைச்சேனு கேட்டுட்டு அப்புறமாச் சொல்றாங்க பொடி போடணும்னு.  மி,வத்தல் ஒண்ணோ, ரெண்டோ தாளிச்சால் போதுமாம்!  ஹிஹிஹி, அதுக்கப்புறமா என்னதான்குழம்பு வைச்சாலும் அந்த முதல் குழம்பு மாதிரி இல்லைனே அப்பா சொல்லுவார்.  நல்லவேளையாக் கண்டு பிடிக்கலை. அல்லது போனால் போகட்டும்னு விட்டாரோ தெரியலை!  :)))))))

இந்தப் புராணம் இப்போ எதுக்குனு கேட்கிறீங்களா?  நேத்துச் சுண்டைக்காய் வத்தல் குழம்பு வைச்சிருந்தேன்.  நிறைய மிவத்தல் போட்டதால் அந்தப் பழைய ருசியில் வந்திருந்தது.  பொடியும் போட்டேன்.  கொஞ்சமாக.



நேத்திக்குக் குழம்பே வைக்கலை. கடைசிப் பத்தி இந்தப் பதிவை எழுதினப்போ போட்டது. நேத்திக்கு வெஜிடபுள் சாதம் பண்ணிட்டேன். குழம்பு வைச்சால் மிஞ்சிப் போகுது! :( அதனால் குழம்பே வைக்கலை. மசாலா சாமான்களில் வெறும் ஏலக்காயும், கிராம்பும் மட்டும் போட்டே வெஜிடபுள் சாதம் பண்ணலாம். வெங்காயம் கூடச் சேர்க்கணும்னு இல்லை. :))))

இது ஒரு மீள் பதிவு! சிநேகிதி ஷோபாவுக்காக!

27 comments:

  1. புளி போடுவாங்களானு சந்தேகம்!
    ~ இப்படி ஒரு சந்தேக ஜந்து இருக்குமோ! போனால் போகட்டும்.


    எங்க பகுதி சமையலறையிலிருந்து குரல் கொடுத்தால் அடுத்த பகுதி சமையலறையிலே இருக்கும் மாமி பதில் கொடுப்பாங்க.

    இப்பெல்லாம் ஸ்கைப்புவாங்க.

    ReplyDelete
    Replies
    1. வாங்க "இ" சார், என்னோட அம்மா புளியே போடாமல் தக்காளி, பச்சைமிளகாய் மட்டும் போட்டு சாம்பார் பண்ணுவாங்க. கிள்ளு மிளகாய் சாம்பார்னு அதுக்குப் பெயர். அதான் ரசத்துக்குப் புளி உண்டானு சந்தேகம். தக்காளி மட்டும் தான் போடுவாங்கனு நினைச்சேன். இப்போல்லாம் ஸ்கைப் கூட ஃபாஷன் இல்லை. வாட்ஸப் தான் ஃபாஷன்! :)

      Delete
  2. எனக்கே எனக்காக ஒரு பதிவு ! நன்றி கீதா ! படித்த பிறகு , இப்படி அனுபவங்கள் நமக்கில்லையே என்று தோன்றுகிறது . கல்யணம் ஆகி, மகளுக்கும் ஒரு வயது ஆன பிறகு தான் தனி குடித்தனம் , அது வரை சாதம் கூட வடித்ததில்லை . அம்மா எதுவும் செய்ய சொன்னதில்லை, என்றாவது அம்மியில் சட்னி அரைத்தது தவிர. மாமியாரும், கர்ப்பிணி பெண் பிறகு கைக்குழந்தைக்காரி என்று எதுவும் செய்ய விட்டதில்லை , சுத்து காரியம் மட்டுமே .கணவருக்குப் பணி மாற்றம் ஆனபோது மாமியார் கவலை பட்டார் ஒன்றுமே தெரியாதே என்று, அதற்கு அம்மா ," அவளுக்கு நாக்கு நீளம்" (அப்போ அது உள்குத்தோ ) அதுனால கைக்கு தானே வரும்ன்னு சொல்லிட்டா ! அப்புறம் எப்பிடியோ நானும் இத்தனை வருடம் குடித்தனம் பண்ணி குப்பை கொட்டியாச்சு ! sorry for the looong comment !

    ReplyDelete
    Replies
    1. ஹாஹா, இது மாதிரி நிறையத் திப்பிச வேலைகள் இருக்கு ஷோபா! எல்லாம் தனியாக சமைக்கக் கத்துண்டதின் பிரதிபலிப்பு. அப்புறமா நாளாக ஆக, இம்மாதிரி மி.வத்தல் மட்டும் தாளித்த குழம்பில் வெறும் சட்டியில் வறுத்த மிளகாய், து.பருப்பு, வெந்தயம் பொடி செய்து போட்டால் நல்லா இருக்கும்னு தெரிஞ்சுண்டேன். இதைத் தான் எங்க பக்கம் வெந்தயக் குழம்புனும் சொல்லுவாங்க.

      Delete
    2. ஷோபா, கீ அக்காவுக்கு உங்க பாட்டி வயசு ஆயிடுத்து! :-))))

      Delete
    3. ஷோபா, வா.தி.க்குத் தான் வயசாச்சு! எனக்கு இல்லை! உங்க பாட்டி வயசுன்னா நான் உயிரோடு இருக்கிறதே பெரிய விஷயமாச்சே! அது கூடத் தெரியலை வா.தி.க்கு! அவ்வளவு தடுமாற்றம்! :P :P :P :P

      Delete
  3. நமக்குத்தான் அம்மாவோட மூணௌ நாட்கள் மஹாத்மியத்தில்
    குமுட்டி அடுப்பு,விறகடுப்பு எல்லாம் பழகிவிட்டது. குழம்பு விஷயம் தான்
    தகறாரு. அப்பா உதவி செய்வார்,. இல்லவிட்டால் சீரா மிளகு வறுத்து அந்தச் சாதம் தான் .தொட்டுக்க வடாம்.
    இனிமையான நாட்கள்,.
    உங்கள் அனுபவம் எப்போதும் போலப் புதுமை.

    ReplyDelete
    Replies
    1. மூணு நாள் சமைக்கிறது தனி! இது மாதக் கணக்காகச் செய்தது! சாயந்திரம் வந்து பாத்திரம் தேய்த்துட்டு, அரைக்கப் போட்டிருந்தால் அரைச்சு வைச்சுட்டுத் தான் படிக்கவே உட்கார முடியும்! :) வீட்டுக்காரங்க வேறே ஒன்பது மணிக்கெல்லாம் மெயினை அணைச்சுடுவாங்க. பாதி நாட்கள் சின்னச் சிம்னி விளக்கில் தான் படிப்பு!

      Delete
  4. குழம்பான நினைவுகள்!(பின்ன, எத்தனை தரம் ரசமான நினைவுகள்னே சொல்றது!)

    எனக்கும் என் ஃப்ளாஷ்பேக் நினைவு வந்தது. எனக்கு என் அந்த வயசுல வெங்கலப்பானைல சாதத்தை, விறகு அடுப்புல வைக்கறதும், அதைவிட அதை சிப்பில் தட்டு போட்டு மூடி கஞ்சி வடிப்பதும்தான் பீதியான அட்வெஞ்சரஸ் சுவாரஸ்யம்.

    :))))

    ReplyDelete
    Replies
    1. ஹிஹி, குழம்பான நினைவுகள் என்றாலும் குழப்பாத நினைவுகள். எங்க வீட்டிலே கஞ்சி வடிக்கிறதில்லை. கரெக்டா ஜலம் வைச்சு அரிசி களைஞ்சு போட்டுட்டு இரண்டு கொதி வந்ததும் அப்படியே இறக்கி வைச்சு மூடி வைச்சுடுவோம். சாதம் பொல பொல! பிசைந்தால் குழைவாகவும் இருக்கும். சம்பா அரிசினு வரும் அப்போல்லாம். இல்லைனா நெல்லூர் அரிசி!

      Delete
  5. ஆஹா நல்ல சுவையான குழம்பை மிஸ் பண்ணிட்டோம் போல.....

    ReplyDelete
    Replies
    1. ஹா,ஹா, வத்தக்குழம்பு தானே! லேட்டா வந்தாலும் நல்லாவே இருக்கும். அரிசி உப்புமா வெங்கல உருளியில் பண்ணினதை மறுநாளைக்கு முதல் நாள் வைச்ச வத்தக்குழம்போட சாப்பிட்டுப் பாருங்க! சொர்க்கம் அது தான் அப்படினு சத்தியம் பண்ணுவீங்க! இதுக்காகவே அரிசி உப்புமாவைக் கொஞ்சமாவது மிச்சம் எடுத்து வைப்பேன். அதுவும் அந்த அடி மொறுமொறுவோடு! :)

      Delete
  6. கொட்டு ரசத்தை குட் ரசம் என்றே சொல்லிப்பழக்கம் /// அட! அப்ப அது குட் ரசம் இல்லியா? வொய் கொட் ரசம்?

    ReplyDelete
    Replies
    1. தெரியலை வா.தி. அதிலே து.பருப்பை அள்ளிப் போட்டுட்டு அப்புறம் மிச்ச ரசத்தோட கீழே கொட்டுவாங்க! அதனாலே இருக்குமோ? :)

      Delete
  7. அர்த்தராத்திரி அஞ்சர மணிக்கு எழுந்துகிட்டு என்ன அலப்பரை? :P

    ReplyDelete
    Replies
    1. ஹாஹா அஞ்சரை மணி அர்த்தராத்திரியா? இப்போல்லாம் ரங்க்ஸ் அலாரம் வைக்கிறார் அலாரம் அடிச்சு ஓய்ஞ்சதும் மறுபடி ரெண்டு பேரும் தூங்கிடறோம். :) அர்த்த ராத்திரி அஞ்சரைக்குத் தான் எழுந்துக்க முடியுது! :)))) ஒரு வாரமாக் கொஞ்சம் பரவாயில்லை. நாலே முக்காலுக்கு விடியக்காலையிலே எழுந்துக்கறோம்.

      Delete
  8. இதே போல சாம்பு மாமாவும் தான் எப்போ சமைக்க ஆரம்பிச்சார்னு ஒரு பிளாஷ்பேக் பதிவு எப்போ போடுவார்..? :P

    ReplyDelete
    Replies
    1. அட? அம்பி, நிஜம்மாவே நீங்க தானா?

      Delete
  9. பிறந்த நாளுக்கு போன் செய்யலாம்னு நம்பர் தேடினேன். கிடைக்கலை. ஹிஹி :)))

    ReplyDelete
    Replies
    1. அதானே, என்னோட நம்பரெல்லாம் உங்களுக்கு எப்படிக் கிடைக்கும்! கொடுக்கும்போது சேமிச்சு வைச்சிருந்தால் தானே!

      Delete
  10. செமையா தாளிச்சிட்டீங்க அம்மா... ஹிஹி...

    ReplyDelete
    Replies
    1. அந்தத் தாளிப்பு இல்லைனா சாப்பிட முடிஞ்சிருக்குமா டிடி? :)

      Delete
  11. பருப்பு ரசம் மிளகு ரசம் என்று ரசங்களில் பலதும் கேட்டிருக்கிறேன் கொட்டு ரசம் என்றோ குட ரசம் என்றோ கேட்டதில்லை.

    ReplyDelete
    Replies
    1. கொட்டு ரசம் என்பது மிகப் பாரம்பரியமான ரசம் வைக்கும் முறை ஐயா. அநேகமாக அனைவர் வீடுகளிலும் பருப்பே இல்லாத இந்த ரசத்தை வைத்தே சமாளிப்பார்கள். குட ரசம் இல்லை. குட் (good) ரசம் என்று எங்க வீடுகளில் சொல்வார்கள்.

      Delete
  12. Anonymous31 May, 2015

    சுவையான பதிவு

    ReplyDelete
    Replies
    1. கடைசிபெஞ்ச், கடைசியிலே வந்திருக்கீங்க போல! :)

      Delete