எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Wednesday, May 06, 2015

வாலி வதம் சரியா, தப்பா, சில கேள்விகளும், பதில்களும்/மீள் பதிவு தான்!

 வாலியை ராமர் மறைந்திருந்து கொன்றதாய்ச் சொல்லப் படுவது முதன்முதலில் கம்பராமாயணத்திலே தீர்மானிக்கப் பட்டதாகவே நினைக்கின்றேன். துளசிதாசர், ராமனை ஒரு கடவுளாகவே சித்திரிக்கின்றபடியால், ராமன் மறைந்திருந்து வாலியைக் கொன்றதாய் அவர் சித்திரிந்திருந்தாலும், வாலியோ ராமனை ஒரு அவதாரம் எனவும், கடவுள் எனவும் உணர்ந்ததாயும், எத்தனை பிறவி எடுத்தாலும் ராமன் பாதங்களை மறவாத வரம் வேண்டும் என்று கேட்பதாயும் வரும். ஆனால் கம்பரோ, சுக்ரீவன் இறுதி முறையாக அடையாளம் காணக் கூடிய மாலை அணிந்து போருக்குச் செல்லும்போதே, ராமனும், சுக்ரீவனும் திட்டம் போட்டுக் கொண்டதாய்க் காட்டுகின்றார். வாலியோடு சுக்ரீவன் சண்டை போடும்போது ராமன், மற்றொரு இடத்தில் இருந்து அம்பு தொடுப்பதாய் சுக்ரீவனிடம் சொல்லுவது போல் வருகின்றது. அம்பானது வாலியின் மார்பில் தைத்து, அதில் ராமனின் பெயரைப் பார்த்துவிட்டே வாலி கண்டு பிடிப்பதாயும் வரும். அதில் ராமனைப் பற்றி வாலி நினைப்பதாய்க் கம்பர் இவ்வாறு கூறுகின்றார்:
"இல்லறம் துறந்த நம்பி எம்மனோர்க்காகத் தங்கள்
வில் அறம் துறந்த வீரன் தோன்றலால் வேத நல் நூல்
சொல் அறம் துறந்திலாத சூரியன் மரபும் தொல்லை
நல் அறம் துறந்தது என்னா நகை வர நாண் உட்கொண்டான்."

மனைவியோடு சந்தோஷமாய் அனுபவிக்க வேண்டிய இல்வாழ்வைத் துறந்து காட்டுக்கு வந்த ஆண்மகன் ஆகியவனும், தங்கள் குலப் பரம்பரையில் வந்த விற்போர் முறையை, எம் போன்ற வானரங்களைக் கொல்வதற்காகக் கைவிட்ட வீரனும் ஆன இந்த ராமன் தோன்றியதால், வேதங்களின் அறங்களையும் அவற்றில் சொல்லப் பட்ட தர்மங்களையும் கடைப்பிடிக்கும் அவன் பிறந்த சூரியகுலம் தன் அறத்தை இழந்து பாழ்பட்டது என எண்ணி ஏளனத்துடன் வாலி நகைத்தானாம். பின்னர் வாலி ராமனைக் கேட்கும் கேள்விகளும் அதற்கான வால்மீகியின் பதில்களை ஒட்டிய கம்பரின் பதில்களும் வருகின்றன. ஆனால் மேலே கடைசியில் வாலி ராமனை நீ ஒரு வேடன் போல் என்னை மறைந்திருந்து ஏன் கொன்றாய் எனக் கேட்டதாயும், அதற்கு லட்சுமணன், சொல்வதாய் இவ்வாறு கம்பர் கூறுகின்றார்:
"உன் தம்பியாகிய சுக்ரீவன் என் அண்ணனை முதலில் சரணடைந்து "அபயம்" எனக் கேட்டுவிட்டான். நீயும் சரியான விதிமுறைகளைக் கடைப்பிடிக்கவில்லை என உறுதியாய்த் தெரிந்ததால் அண்ணனும் அபயம் அளித்தார். இப்போது சண்டையில் ஒரு வேளை உன்னைக் காத்துக்கொள்ள நீயும் அபயம் என வந்துவிட்டால் என்ன செய்வது என்பதாலேயே மறைந்திருந்து கொல்ல நேரிட்டது." என்று லட்சுமணன் கூறுவதாய்க் கம்பர் சொல்கின்றார். வாதம் செய்வதற்கும், செய்ததை நியாயப் படுத்துவதற்கும் வேண்டுமானால் மேற்கண்ட மேற்கோளை எடுத்துக் கொள்ளலாம். ஆனால் உண்மையில் நடந்ததை, நடந்தபடியே வால்மீகி விவரிக்கின்றாரே?
இது இப்படியே இருக்கட்டும். ஆனால் முதல் தோன்றியது வால்மீகியின் ராமாயணமே என்பதில் யாருக்கும் ஐயம் இல்லை. அதில் இவ்வாறு சொல்லப் படவில்லை. ஏன் எனில் நடந்ததை நடந்தபடிக்கே எழுதி இருக்கின்றார் வால்மீகி.

ஒரு அரசன் கடைப்பிடிக்கவேண்டிய தர்மத்தில் இருந்து ராமன் சற்றும் பிறழ்ந்ததாய் எங்கும் சொல்லவில்லை. சுக்ரீவன், அனுமன், ராமன், லட்சுமணன் உட்பட அனைவரும் கூட்டமாகவே கிஷ்கிந்தைக்குச் சென்று, காட்டில் மறைந்து நிற்கின்றனர். பின்னர் வாலிக்கு சுக்ரீவன் அறைகூவல் விடுத்துக் கூப்பிட்டுச் சண்டை நடக்கின்றது. சண்டையின் போது ராமர் மறைந்து இருந்ததாய் வால்மீகி எங்கும் குறிப்பிடவில்லை. சண்டையின்போது சுக்ரீவன் தனக்கு உதவிக்கு யாரும் வருகின்றார்களா எனச் சுற்றும் முற்றும் பார்த்ததாயும் அதை ராமன் பார்த்ததாயும் குறிப்பிடுகின்றார். இதோ கீழே:
// Raghava has then seen the lord of monkeys Sugreeva who is repeatedly eyeing all sides for help and who is even deteriorating in his enterprise. [4-16-31]//

அதன் பின்னரே ராமன் சுக்ரீவன் உதவிக்குப் போகின்றார். ராமர் நேரிடையாக வாலியுடன் சண்டை போட்டதாய் எங்கும் சொல்லவில்லைதான். அதே சமயம் மறைந்திருந்து சண்டை போட்டதாயும் எங்கும் சொல்லவில்லையே?
//"When you have not appeared before me when I confronted Sugreeva my concept was, 'it will be inapt of Rama to hurt me while I am combating with another combatant, besides, when I will be unvigilant in that fight…' [4-17-21]// நான் உன்னுடன் சண்டை போடாமல், உன்னைக் கவனிக்கக் கூட இல்லாமல் சுக்ரீவனுடன் போரிடுவதிலேயே கவனமாய் இருந்தபோது என்னை நீ வீழ்த்தி விட்டாய். உன்னுடன் நேருக்கு நேர் மோதாத என்னை நீ எப்படி வீழ்த்தலாம் என்றே வாலி கேட்கின்றான் ராமனை. மேலும் பலவகையிலும் ராமனை இகழ்ந்து வாலி பேசியபின்னரே, ராமர் தனது கடமையையும், குல தர்மத்தையும், ஒரு அரசனானவன், வானரங்களைக் கொல்வது தவறில்லை எனவும் சொல்கின்றார். அதிலும் தம்பி மனைவியை அவள் இஷ்டம் இல்லாமல் வலுக்கட்டாயமாய் அபகரித்ததே அவனைக் கொல்ல முக்கியக் காரணம் என்றும் சொல்கின்றார். மேலும் ராமர் வில்லை எடுக்கும்போதும், அம்பைப் பொருத்தும் போதும், அம்பை விடுவிக்கும்போதும் ஏற்பட்ட சப்தத்தைக் கம்பரும் விவரித்திருக்கின்றார். வால்மீகியும் சொல்கின்றார். பறவைகளும், மான்களும், காட்டு மிருகங்களும் சிதறிப் பதறி ஓடி இருக்கும்போது வாலிக்குத் தெரியாமல் ராமன் வாலியக் கொன்றது எப்படி? சிந்திப்போம் இனியாவது!
//Then on tautening a venomous serpent like arrow in the bow, Rama started to draw out bowstring, whereby that bow attained a similitude with the Time-disc of the Terminator. [4-16-33]

At the blast of bowstring the lordly birds and animals are panicked, like those that will be startled by the approach of ear ending, and they all fled. [4-16-34]

The arrow released by Raghava that has the boom of thunderbolt's thunderclap and the flashes of a lightning fell on the chest of Vali. [4-16-35]//

மேலும் சுக்ரீவனோ, மற்ற வானரங்களோ கூட ராமன் மறைந்திருந்து வாலியைக் கொன்றதாய்க் கூறவில்லை. வாலியின் ஆயுதங்கள் ஆன மரங்களையும், பாறைகளையும் ராமன் பொடிப்பொடியாக்கிவிட்டதாகவே கூறுகின்றனர். மேலும் ஒரு மனித தர்மத்திற்கு உட்பட்டே ராமன் நடந்து கொண்டார் எனவும் கொள்ளவேண்டும். ராமன் வாலியின் எதிரே வந்து சண்டை போட்டிருந்தார் எனில், ஒன்று வாலி சரணடைந்திருக்கலாம், அப்போது சுக்ரீவனுக்கு ராமன் கொடுத்த வாக்கைக்காப்பாற்ற முடியாது. கொடுத்த வாக்கைக் காப்பது அரசனுக்கு முக்கியக் கடமை. அதிலும் அபயம் என்று வரும் அரசர்கள், சிற்றரசர்களுக்கு உதவி செய்வதும் அரச தர்மம். அல்லது ராமன் நேரில் சண்டைக்கு வருகின்றான் என்ற காரணத்தினால் ஏற்கெனவே ராவணனை வென்றிருக்கும் வாலி, அவனுக்குத் துணைக்கும் போயிருக்கலாம், அல்லது வாலியினிடம் இருந்த சுக்ரீவன் மனைவி ருமைக்கு ஆபத்து நேரிட்டிருக்கலாம். இவை அனைத்தையும் யோசித்தே, அரச தர்மம் இது என உணர்ந்து ராமன் செயல்பட்டிருக்கின்றான் என்றே நாம் கொள்ளவேண்டும்.

நாம் ராமனை அவதாரமாகவே நினைப்பதால் வரும் தவறான கருத்தே இது. ராமனுக்கு அந்தக் கட்டாயம் ஏதும் இல்லை. அவன் தான் மனிதனா? அவதாரமா? என்ற கேள்விகளுக்குள் போகவே இல்லை. அவனுக்குச் சிலமுறை சுட்டிக் காட்டப் பட்டும் அவன் தான் யார் எனத் தெரியாமலேயே சாதாரண மனித தர்மத்திற்கும், மனித குணங்களுக்கும் உட்பட்டே அநேக காரியங்களைப் புரிந்து வந்திருக்கின்றான். இன்னும் சொல்லப் போனால் இவை இரண்டுக்கும் நடுவில் இருந்து கொண்டு தன் விதியானது தன்னை எங்கே கொண்டு சேர்க்கப் போகின்றது என்பதைக் கூட அறியாதவனாயும் இருக்கின்றான். அதன் வழியில் அது இழுத்த இழுப்பின் போகவேண்டிய கட்டாயத்துக்கும் ஆளாகின்றான். ஒரு அவதாரம் என்றால் அவனால் முடியாது என்ன? சற்றே யோசிக்கலாம். அப்படி அவனுக்குத் தான் ஒரு அவதாரம் என்பதும், தன்னால் முடிக்கவேண்டிய காரியம் ராவண வதம் என்றும், அதை நோக்கியே விதி தன்னை இழுத்துச் செல்கின்றது என்பதும் முன்பே தெரிந்து கொண்டிருந்தானால், கதை எப்படி இருந்திருக்கும்? கதையின் போக்கே மாறி இருக்கும் அல்லவா?

8 comments:

  1. தப்போ, ரைட்டோ இந்தப் படலத்தை இப்போது சுவாரஸ்யமாகப் படிக்க முடிந்தது. தப்பு, ரைட்டு என்பதை படிக்கிறவர்கள் முடிவுக்கே விட்டு விடுகிறார்கள் படைப்பாளிகள். அந்த வாய்ப்பை அவர்களேதானே வழங்குகிறார்கள்?

    ஒன்று சொல்ல விட்டுப் போய்விட்டதோ? வாலிக்கு தன் எதிரில் யார் வந்து நின்றாலும் அவர்களின் பலத்தில் பாதியை அவன் பெற்று விடுவான் என்ற வரமும் இருக்கிறதே....,

    ReplyDelete
    Replies
    1. எனக்குத் தெரிஞ்சு சீதையின் அக்னிப்ரவேசம், வாலி வதம், சீதையைக் காட்டுக்கு அனுப்புதல் இதெல்லாம் தமிழ்நாட்டிலே தான் விவாதிக்கப்படுகிறது. மற்ற இடங்களிலே இல்லை. இருந்தாலும் இத்தனை வெறுப்புடனும், கசப்புடனும் பேசுவதாகத் தெரியவில்லை.

      அப்புறம் வாலியின் பலம் பத்திக் கேட்டிருப்பது விட்டெல்லாம் போகலை! வாலிக்கு எதிராளிகளின் பலத்தில் பாதி வரும் என்பதெல்லாம் வால்மீகியிலே கிடையாது. அதனால் தான் அதைக் குறிப்பிடவில்லை. இதைக் குறித்தும் குறிப்பிட்டுச் சொன்ன நினைவு. தேடிப் பார்க்கணும். :)

      Delete
  2. முடிவில்லாமல் தொடரும் வாதங்கள்.

    ReplyDelete
    Replies
    1. ஆமாம், அதனாலேயே ராமாயணம் எத்தனை வருடங்கள் ஆனாலும் ஒவ்வொரு முறை படிக்கையிலும் புதிதாகவே தெரிகிறது.

      Delete
  3. நான் போட்டு இருந்த பின்னூட்டம் எங்கே போச்சு ?

    சுதா.
    @subbuthatha

    ReplyDelete
    Replies
    1. இது தான் வந்திருக்கு. எதுக்கும் ஸ்பாமிலும் பார்த்துடறேன். :)

      Delete
    2. ஸ்பாமிலே இல்லை. :( என்ன எழுதினீர்கள் எனத் தெரியவில்லை, முடிந்தால் மறுபடியும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

      Delete