எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Sunday, January 17, 2016

ஒரு இடியாப்பம் புளி உப்புமா ஆன கதை!

முதல்லேருந்து கதையை ஆரம்பிக்கலாமா? அரிசியில் வண்டுகள் குடி இருப்பால் அரிசியைச் சலிக்க வேண்டி அரிசிச் சல்லடை வாங்கி வரச் சொல்லி இருந்தேன் ரங்க்ஸிடம். அவரும் வாங்கிண்டு வந்தார். இரு முறை வாங்கியும் இரண்டும் பெரிய கண் உள்ள சல்லடையாகப்போய்விட்டது. கடைகளில் அதைவிடச் சிறிய கண் உள்ள சல்லடை இல்லைனு சொல்லிட்டாங்க. ஆகவே சல்லடை வாங்கிய பணத்தைக் கடைக்காரர் திரும்பத் தரமாட்டார் என்பதால் வேறே என்ன வாங்கறதுனு ரங்க்ஸ் கேட்க, நானும் இடியாப்பச் சொப்பு, இடியாப்பம் பிழியும் சின்னப் படி, தேங்குழல் படி மாதிரி இருக்கும். முழுக்க முழுக்க மரத்திலேயே செய்தது. அடியில் துத்தநாகத் தகட்டில் சின்னச் சின்ன ஓட்டைகள் போட்டுப் பொருத்தி இருப்பார்கள். நான் சொன்னதும் அதை வாங்கிட்டு வந்துட்டார் ரங்க்ஸ். அது ஆச்சு ஒரு இரண்டு மாசம் முன்னால் நடந்த கதை! ஆனால் ரங்க்ஸுக்கு அது வாங்கிப் பயன்படுத்தலையேனு கவலை. என்னிடம் சேவை பண்ணு அதிலே என்றார். நானும் சேவை பண்ணறதுன்னா நாழியிலேதான் பண்ணணும், இதிலே வராது என்றேன்.அதோடு சேவை என்றால் புழுங்கலரிசியை ஊற வைச்சு கிரைண்டரில் அரைச்சு அதை இட்லியாக வார்த்துத் தான் சேவை செய்வேன். இதிலே அப்படிப் பண்ண முடியாது என்றேன். பின்னர் ஏன் வாங்கினேனு கேட்டாரா? கடையிலே விற்கும் இடியாப்ப மாவில் வெந்நீர் விட்டுப் பிசைந்து இதை நேரடியாக ஒற்றைத் தட்டில் தேங்குழல் மாதிரி பிழிந்து வேக வைச்சுடலாம்னு ரொம்ப சுலபமாச் சொன்னேன். பார்க்கப் போனால் அது சுலபம் தான். முன்னர் ஒரு முறை தேன்குழல் படியிலேயே பிழிஞ்சிருக்கேன். ஆகவே தைரியமாக (என்ன தைரியம், என்ன தைரியம்) இன்று காலை கீழே உள்ள வணிக வளாகத்திற்குச் சென்று இடியாப்ப மாவையும் வாங்கி வந்தேன்.  இன்னிக்கு ஞாயிற்றுக் கிழமையா! புதுசா இந்தச் சொப்பைப் பயன்படுத்தப் போறேனா! ராகு காலம், எமகண்டம் எல்லாம் பார்த்துக் கொண்டு மூன்றரை மணிக்கு இடியாப்பம் பிழிய வெந்நீரைக் கொதிக்க வைத்தேன். பண்ணி வைச்சுட்டா ராத்திரி சாப்பிட எளிதாக இருக்குமே! வெந்நீரை மாவில் விட்டு அரை உப்பும் சேர்த்து நன்றாகக் கிளறி வைத்தேன். மாவு நல்ல பதமாகவே இருந்தது. ரொம்பத் தண்ணீரும் இல்லை; அதே சமயம் தண்ணீர் குறைவாகவும் இல்லை.

அலுமினியம் சட்டியில் நீர் வைத்து ஒற்றைத் தட்டைப் போட்டு இடியாப்பச் சொப்பில் மாவை நிரப்பி அதில் பரப்பினேன். பரப்பும்போதே மனதில் பட்டுவிட்டது! இது ஒட்டிக்கப்போகிறது! தனியாக வரப் போவதில்லை என. உடனே ரங்க்ஸிடம் சொல்லிட்டேன். அவரும் பொறுமையாகச் செய்து பார்னு சொன்னார். அது வெந்ததுனு வாசனை வந்ததும் எடுத்துத் தட்டில் கொட்டினால் ஹிஹிஹி, மொத்தையாக விழுகிறது. சரி இந்தச் சொப்புத் தான் சரியில்லைனு தேன்குழல் சொப்பை எடுத்து அதில் மாவை நிரப்பிச் செய்தால் அதுவும் பெப்பே! அப்படியே மாவை எடுத்து மொத்தமாகச் சேர்த்து வைத்து மூடி விட்டு வந்து உட்கார்ந்துட்டேன்.  இந்த மாவைக் கர்நாடகாவில் செய்யறாப்போல் அக்கி அடையாகச் செய்யலாமா? அல்லது நாளைக்காலை இதிலே ப.மி. உப்பு.பெருங்காயம் சேர்த்து எலுமிச்சம்பழம் பிழிந்து வடாமாகப் பிழியலாமானு மண்டையை உடைத்துக் கொண்டேன். ரங்க்ஸுக்கு அக்கி அடையெல்லாம் புதுசு, எப்படி இருக்குமோனு பயம். வடாம் பிழியலாம் எனில் போன வருஷம் போட்டதே இருக்கு! அதைச் செலவு செய்யலைனு நான் இந்த வருஷம் போடப் போறதில்லைனு அறிவிப்புக் கொடுத்துட்டேன்.

அப்புறமா எனக்கு ஓர் யோசனை தோன்றியது. இந்த மாவில் புளி ஜலத்தைச் சேர்த்து இன்னும் தேவையான உப்பையும் சேர்த்து வெங்காயம் போட்டுப் புளி உப்புமாவாகப் பண்ணினால்? உடனே ரங்க்ஸும் ஆமோதிக்க (ரொம்பநாளாக் கேட்டுட்டு இருந்தார். நான் தான் அதிகம் பண்ணறதில்லை! இன்னிக்கு அடிச்சது வாய்ப்பு) இரவுக்கு அந்த மாவில் புளி உப்புமா என முடிவு செய்தாயிற்று. சற்று முன்னர்  நல்லெண்ணெயில் கடுகு, உ.பருப்பு, கருகப்பிலை, மி.வத்தல் சேர்த்து வெங்காயம் போட்டு வதக்கி உப்புமாவைக் கிளறிச் சாப்பிட்டாச்சு! என்ன? படமா? எடுக்கலை! எடுக்கணும்னு தான் காமிராவை எடுத்து வந்தேன்! ஏதோ பிரச்னை! மொபைலில் எடுத்திருக்கலாம். இந்தப் புறா காலம்பர போனது இன்னும் வரவே இல்லையா! ஜன்னலை, ஜன்னலைப் பார்த்ததில் மொபைலில் எடுக்கலாமேங்கறதும் மறந்து போச்சு! புறாவும் இன்னும் வரலை. அது உட்காரும் இடத்தைச் சுத்தம் செய்ததால் அதுக்கு வரப் பிடிக்கலைனு என்னோட எண்ணம்.  அது வந்திருந்தாக் காலம்பரக் கேட்டுட்டுச் சொல்றேன்.

புளி உப்புமா பல மலரும் நினைவுகளைக் கொண்டு வந்தது. அம்மா இந்த உப்புமாவை அப்பா ஊரில் இல்லாத சமயமாகப் பார்த்துச் செய்து தருவார். அப்பாவுக்குப் பிடிக்காது என்பதால் இந்த மாதிரி. எங்கானும் ஊருக்குப் போனால் அம்மா எங்களுக்குச் செய்து வைக்கும் பக்ஷணமும் இது தான். இந்தப் புளி உப்புமா, சுண்டல்(அதுவும் சிவப்புக் காராமணியில் சின்ன வெங்காயம் போட்டுச் செய்தது) புடலங்காய் பஜ்ஜி மூன்றும் எங்க மூணு பேருக்கும் (அண்ணா, நான், தம்பி) மறக்க முடியாத பக்ஷணங்கள். :)  இன்னிக்குப் புளி உப்புமா நல்லாவே இருந்தது.  ரங்க்ஸும் ரசிச்சுச் சாப்பிட்டார். அவங்க பாட்டி செய்வாங்களாம்.  ரொம்ப நாளைக்கப்புறமாப் பிடிச்ச உணவா ஒண்ணு சாப்பிட்டாச்சு இடியாப்பச் சொப்பின் தயவிலே! இடியாப்பச் சொப்பின் படத்தை அப்புறமாத் தான் எடுத்துப்போடணும்.

33 comments:

 1. நாமொன்று நினைக்க அதுவொன்றாய் ஆனாலும் சில சமயம் அது எதிர்பாராத விதமாய் நன்றாய் அமைந்து விடும். புளி உப்புமா எனக்கும் பிடித்த ஒன்று.

  ReplyDelete
  Replies
  1. புளி உப்புமா பிடிச்சாலும் அடிக்கடி பண்ண முடியறதில்லை. :) எண்ணெய் அதிகம் தேவை ஒரு காரணம். சில சமயம் அரிசி மாவு நல்லதாக இருப்பதில்லை.

   Delete
  2. ஓ... இந்தப் பதிவா!

   Delete
  3. இஃகி, இஃகி, "சொப்" னு போயிடுச்சா? :)))))

   Delete
 2. அடிக்கடி உப்புமா சாப்பிட்டு சலித்துப்போகும் போது இந்த புளி உப்புமா என்பது, சற்றே மாறுதலாகவும் வாய்க்கு ருசியாகவும்தான் உள்ளது. அவல் உப்புமாவிலும்கூட புளிசேர்த்து செய்தால்தான் எனக்கு பிடித்தமாக உள்ளது.

  இந்த சேவைநாழி சமாச்சாரம் எல்லா வீடுகளிலுமே இப்படித்தான் போலிருக்கிறது. முதலில் பித்தளையில் வாங்கணும் என்பார்கள், பிறகு எவர்சில்வர் என்பார்கள், அப்புறம் என்ன இருந்தாலும் இரும்பு சேவை நாழி போல வராது என்பார்கள். கடைசியில் _ _ _ வணங்கி எதிலும் சேவை சாதிக்க மாட்டார்கள். இடத்துக்கு இடைஞ்சலா பரணையில் எங்காவது இவை ஆங்காங்கே கிடக்கும். அதை எங்கே வைத்தோம் என ஞாபகப்படுத்தி தேடி எடுத்து செய்வதற்குள் போதும் போதும் என்றாகி, வேறு ஏதாவது டிபனுக்கு ஆயத்தமாகி விடுவார்கள். :)

  ReplyDelete
  Replies
  1. அவல் உப்புமா புளி சேர்த்தும் பண்ணுவேன். வெங்காயம், உ.கி போட்டு எலுமிச்சம்பழம் பிழிந்து போஹாவாகவும் பண்ணுவேன். தேங்காய் அவல், மிளகு அவலும் பண்ணுவேன். ஆனால் உப்புமாவை அடிக்கடி பண்ணினால் வீட்டில் பிரளயமே வரும்! :) வாரம் ஒரு நாள் பண்ணினால் பெரிய விஷயம்.

   Delete
  2. சேவை நாழி எங்க வீட்டிலே பரணில் எல்லாம் இருக்காது. உடனே எடுத்துப் பயன்படுத்தும்படியாகக் கீழேயே வைச்சிருக்கேன். நினைச்சால் சேவை பண்ணுவேன். ஆகையால் நான் எடுக்கும்படியாகவே இருக்கும்.

   Delete
 3. படத்தில் காட்டியுள்ள சேவை நாழியும், பிழிந்து வழியும் சேவையும் சூப்பராக சேவை சாதித்து மகிழ்வித்துள்ளன.

  முக்காலி போல மூன்று கால்களுடன், கைப்பிடி போர்ஷன் லொடலொடவென்று ஆடிக்கொண்டே இருக்கும். எங்கு வைத்தாலும் அது பெரும் இடத்தை அடைத்துக்கொண்டுதான் இருக்கும். நீண்ட நாட்கள் உபயோகிக்காமல் விட்டால் துருப்பிடித்தும் போய்விடும்.

  இதையெல்லாம் பார்த்துப்பார்த்து சலித்துப்போய் விட்டேன். இப்போது எனக்கு மிகவும் ஆசையாக இருந்தால் இங்கு ஒரு மாமி இருக்கிறார்கள். அவர்களிடம் இத்தனை பேர்களுக்கு என்று சொல்லி, தேதி, கிழமை, நேரம் முதலியனவும் சொல்லி அவர்கள் கேட்கும் தொகையை சலவை நோட்டுக்களாகக் கொடுத்து, சரக்கு மிகவும் ரிச்சாக இருக்க வேண்டும் எனச் சொல்லிவிட்டு வந்துவிடுவேன்.

  சூடாக சுவையாக வறுத்த முந்திரிப்பருப்பெல்லாம் தூவி, தேங்காய் சேவை, எலுமிச்சை சேவை, பருப்பு சேவை + தேங்காய்ச்சட்னி + கொத்ஸு என எல்லாம் குறித்த நேரத்தில் அழகாக ஆத்துக்கே கொண்டுவந்து கொடுத்து விடுகிறார்கள். ரஸித்து ருசித்து சாப்பிடுவது மட்டுமே நம் வேலையாக உள்ளது. :)

  ReplyDelete
  Replies
  1. அந்தச் சேவை நாழி என்னுடையது தான். கல்யாணச் சீராக வந்தது. திண்டுக்கல் தயாரிப்பு. வாங்கும்போது 2 ரூபாய்க்கு வாங்கினதாக என் அம்மா சொல்வார். இப்போ 200 ரூக்கும் மேல்! ஆனாலும் இது போல் இருக்கலை. சேவை எல்லாம் விலைக்கு வாங்குவதில்லை. வீட்டிலே செய்யறது தான்.

   Delete
 4. ஶ்ரீராம் எந்த ஊரு? பாலக்காடு ஜோசியரா? அல்லது பம்பை ஆருடரா? புதுக்கோட்டை பக்ஷி ஜோஸ்யரா? என்னை பற்றி எப்படி தெரியும்? கீதா மாமி சொல்லிப்போட்டங்களா? அவங்க அரசி உப்புமா அடிப்பிடிக்கறமாதிரி செய்வாங்க. விஷயத்துக்கு வாரேன். நான் ஒரு நாள் ரவா உப்புமா கிளறினேன். டம்ளரில் போட்டுக் குடித்தோம். நானொன்று நினைக்க அதுவொன்றாய் ஆனாலும் அது எதிர்பாராத விதமாய் நன்றாய் (சூப்பிக்குடிக்கிறமாதிரி' அமைந்து விட்டது. அது ஶ்ரீராமுக்கு எப்டி மூக்கில் மணந்தது?!

  ReplyDelete
  Replies
  1. ஶ்ரீராம் பாதி கும்பகோணம், பாதி மதுரை! :) இ சார், நல்லவேளையா இடியாப்பத்தைத் தம்பளரில் எல்லாம் போட்டுக் குடிக்கும்படி ஆகலை! பிழைச்சேன். :)

   Delete
 5. புளி உப்புமாவா. ஏன் எனக்குச் சொல்லலை. நானும் வந்திருப்பேன். நன்றாக வந்திருக்கும்.
  ஜகஜ்ஜாலம்.

  ReplyDelete
  Replies
  1. ஹாஹாஹா, எனக்கே தெரியாதே வல்லி. திடீர் மெனு! :)

   Delete
 6. ஆகா... இப்படியும் செய்யலாமா...? வீட்டில் சொல்லி விடுகிறேன்... நன்றி அம்மா....

  ReplyDelete
  Replies
  1. சொல்லிட்டுச் செய்தும் பார்த்து, சாப்பிட்டும் பார்த்துடுங்க டிடி. :)

   Delete
 7. குரங்கு பிடிக்கப் போய் பிள்ளையார் ஆகிவிட்டது. அதுவும் சரிதான். ஆமாம் புளி உப்புமா என்றால் என்ன என்று தெரியாத என்னைப் போன்ற மடையர்களுக்காக கொஞ்சம் விளக்கி எழுதியிருக்கலாம். சேவையில் புளி எலுமிச்சம் தேங்காய் தக்காளி என்றெல்லாம் செய்வதுண்டு. அல்லது சேவையை நூடில்ஸ் போல சாஸ் எல்லாம் ஊற்றி செய்யலாம்.

  --
  Jayakumar

  ReplyDelete
  Replies
  1. http://geetha-sambasivam.blogspot.in/2010/04/blog-post.html// இங்கே இருக்கிறது பாருங்கள் செய்முறை. கிட்டத்தட்ட இதே போல் தான் நேற்றுச் செய்ததும். ஆனால் முதலிலேயே இடியாப்பத்துக்கு என வெந்நீர் ஊற்றிப் பிசைந்திருந்ததால் புளி ஜலம் கொஞ்சம் கெட்டியாக எடுத்துச் சேர்த்தேன். இது ஒரு பாரம்பரிய உணவு. தெரியாதுனு சொல்லி இருக்கீங்க! ஆச்சரியம் தான்! :)

   Delete
 8. தற்போது சேவை கைமுறுக்கு எல்லாம் பிழிய கரண்டில் ஓடுகிற மெஷின் உள்ளது தெரியுமோ?

  jayakumar

  ReplyDelete
  Replies
  1. தெரியாது, பார்த்ததில்ல. புனேயில் கைமுறுக்குத் தயாரிக்கும் மெஷின் இருக்குனு கேள்வி! ஆனால் பார்த்தது இல்லை.

   Delete
 9. சேவை இப்போதெல்லாம் பிழிந்து அப்படியே கூட கிடைக்கிறதே! அப்படியே வெந்நீரில் போட்டு எடுக்க வேண்டியதுதான் பாக்கி! ஆனால் அது நம் கை மணம் போல இருக்காது!

  ReplyDelete
  Replies
  1. ம்ஹூம், நம்ம வீட்டில் அதெல்லாம் தொண்டைக்குக் கீழே இறங்காது தம்பி! பாலே மாடு தான் கறந்து கொடுத்ததானு சோதனை செய்து பார்த்துட்டு வாங்கற வழக்கம். இந்தக் கவர் பாலெல்லாம் எப்போவானும் அவசரத்தேவைக்கு! தினசரிப் பயன்பாட்டுக்கு மாட்டைத் தேடிப் பிடிச்சுக் கறந்து தான் வாங்குவோம்.:)

   Delete
 10. இடியாப்பா மா பிழைத்தால் அதில் கொஞ்சம் தேங்காய்ப்பூ,வறுத்த பயறு,சர்க்கரை சேர்த்து பிசைந்து கொழுக்கட்டைகள் போல் கைகளால் பிடித்து இட்லி பானையில் வைத்து அவித்தும் எடுக்கலாம். நான் அடிக்கடி அப்படி செய்வேன். பிள்ளைகள் விரும்பி உண்பார்கள்.

  நல்ல அனுபவம்.

  ReplyDelete
  Replies
  1. வாங்க நிஷா, வெகு காலம் ஆகிவிட்டது, இந்தப் "பிழைத்தால்" என்னும் சொல்லாட்சியைக் கேட்டு. மதுரைப்பக்கம் அதிகம் புழங்குவார்கள். அதே போல் இராப்பிச்சைக்காரி/காரர்கள் "சாதம் தப்பா இருந்தா" என்றே கேட்பார்கள். இப்போதெல்லாம் இத்தகைய தமிழைக் கேட்க முடிவதில்லை.

   Delete
  2. சர்க்கரை சேர்த்துச் செய்தால் நாங்க சாப்பிட முடியாது. வீட்டில் வேறு நபர்களும் இல்லை. அதனால் தான் புளிச் சாறைச் சேர்த்து உப்புமாவாக்கினேன். இப்போ என்னன்னா, அதே மாதிரி இன்னொரு நாள் பண்ணுனு கேட்டுட்டு இருக்கார். :) உண்மையாகவே அன்று சுவையான உப்புமாவாக இருந்தது. :)

   Delete
  3. அப்படிய்யா? சூப்பர்மா!
   எங்களுக்கும் புளி சேர்த்து செய்யும் அனைத்தும் அந்த புளிப்பு சுவை வாய்க்கும் ருசியை கூட்டுவதால் நிரம்பவும் பிடிக்கும்,

   இடியப்பா மா ரெடிமேட்டாய் வரும் போது அரிசி மா கலைவையாக வருமா?மைதாவும் சேர்த்திருக்குமா? இங்கே தனி அரிசி மாவில் வருவதால் நான் தேவைக்கு மைதா சேர்ப்பேன். தனித்தனியேயும் செய்வது உண்டு.

   ஆஹா எங்க தமிழ் இராப்பிச்சைக்காரி ரேஞ்சுக்கு போகுதா? நான் தமிழ் பேசினால் இலங்கையர்கள் நீ எந்தூரு தமிழ் பேசுறே.. இலங்கைத்தமிழ் இல்லை என்பார்கள். இந்திய நட்பூக்கள் நீ இந்திய தமிழ் பேசலையே... இதான் இலங்கைத்தமிழா என்பார்கள். அப்படி எனக்கு என ஒரு தமிழை உருவாக்கி பேசிட்டிருக்கும் ஆளம்மா நான்.

   பல நேரம் நான் பேசும் தமிழ் கண்டு சிரிப்பதும் உண்டு. என்ன செய்வது? அடிக்கடி ஊருக்கு வந்தால் ஊர்த்தமிழ் பழகும், நான் தான் வருவதே இல்லையே...!

   Delete
  4. //ஆஹா எங்க தமிழ் இராப்பிச்சைக்காரி ரேஞ்சுக்கு போகுதா?//

   ஆஹா! தவறாக ஒப்பிட்டு இருக்கிறேனோ? என் கருத்து என்னவெனில் அந்தக் காலகட்டத்தில் இராப்பிச்சைக்காரி கூட சுத்தமான தமிழ் பேசினார்கள். இப்போது போல் கலப்புத் தமிழ் இல்லை என்பதே! இப்போது கீரைக்காரி கூட ஒன் ருபி என்கிறாள். ஆங்கிலக் கலப்பில்லாமல் பேசுவதில்லை. அதற்காகச் சொன்னது. உங்கள் மனம் புண்பட்டிருந்தால் மன்னிக்க வேண்டுகிறேன்.

   இங்கே இடியாப்ப மாவு தனி அரிசி மாவு தான். நான் வாங்கிச் செய்திருக்கேன். அன்னிக்கு என்னமோ சரியா வரலை. காரணமும் தெரியலை. மைதா மாவு கலப்பதில்லை. சமையலில் மைதாவே எப்போதோ தான். அதிகம் சேர்ப்பதில்லை. ரவாதோசைக்குக் கூட ரவை+அரிசிமாவு+ உளுத்தமாவு அல்லது கோதுமை மாவு தான் சேர்ப்பேன்.

   Delete
  5. ஐய்யோ நான் அப்படில்லாம் ஒன்றும் நினைக்கலைமா! மன்னிப்புல்லாம் வேண்டாம்.

   இடியப்பம் செய்யவே கூட அந்த ரெடிமேட் அரிசி மா பிசைந்தால் உதிரி உதிரியாகத்தான் வரும். நாம் வீட்டில் செய்யும் அரிசி மா போல் பாக்கெட்டில் இல்லை. அதனால் நான் மோதுமை மாவை இட்லி பானையில் வைத்து அவித்து சலித்து எடுத்துக்கொண்டு. ஒன்றுக்கு மூன்று என இடியப்ப மாவும்,அவித்த கோதுமை மாவும் கலந்து உப்புப்போட்டு சுடு நீரில் பிசைந்தெடுப்பேன்.

   இதிலும் இடியப்ப உரலில் போட்டு இலகுவாக பிளிய வேண்டுமானால் கொதிநீரை விட்டு பிசையக்கூடாது, கொஞ்சம் ஆற விடணும். புட்டுக்கு பிசைய கொதி நீர் விட வேண்டும் என இருக்கும்மா!
   எங்க ஹோட்டலில் அடிக்கடி ஆர்டர் வரும். இன்று இடியப்பமும் புட்டும் ஆர்டர் இருக்கு!

   Delete
  6. புரிதலுக்கு நன்றி நிஷா! நீங்க எந்த நாட்டில் இருக்கீங்க?

   Delete
  7. சுவிஸர் லாந்தமா! 26 வருடமா இங்கே இருக்கேன்,என் பதிவுகளில் எழுதி இருக்கேன்மா, நேரம் கிடைக்கும் போது வந்து பாருங்கள்.

   Delete
 11. ஆஹா! இடியாப்பம்! புளி உப்புமா ஆன கதை!! இரண்டுமே ரொம்பப் பிடிக்கும். இடியாப்பம் இலங்கையில் செய்வது போல்...வித் சொதி...இலங்கை சொதி. அருமையான காம்பினேஷன் மட்டுமல்ல சுவையாகவும் இருக்கும்(நாங்கள் லங்கா வாசிகளாக இருந்தோமே!!!)

  புளி உப்புமா எங்கள் வீட்டில் புளித் தண்ணீரில், உப்பு, அரிசி மாவைக் கலந்து கொண்டு (நீர்க்க இல்லாமல், ரொம்ப கெட்டியாகவும் இல்லாமல்) நல்லெண்ணையில், கடுகு, மோர்மிளகாய் கறிவேப்பிலை தாளித்துக் கொண்டு கொஞ்சம் பெருங்காயம் சேர்த்துக் கொண்டு மாவைப் போட்டு கலந்து விட்டு தோசைச் சட்டுவம் கொண்டு கொத்து கொத்து என்று கொத்தி உசிலிப்பது போல் உதிர்த்துச் செய்வார்கள். இடையிடையே கட்டிப்பெருங்காயம் ஊறவைத்த தண்ணீரைச் சிறிது சிறிதாகத் தெளித்துக் கொண்டு உதிர்க்க வேண்டும். ஃபைனல் டெக்சர் சிறு சிறு உருண்டைகளாக கிட்டத்தட்ட பருப்புசிலி போல சாஃப்ட்டாக இருக்கும். வெங்காயம் சேர்ப்பதில்லை. நான் என் மகனுக்குப் பிடிக்கும் என்பதால் செய்வதுண்டு. அது போல இடியாப்பம், சேவை எல்லாம் வீட்டில்தான். எனக்கும் சீராக சேவை நாழி, இலங்கை இடியாப்ப அச்சு (சிறிய சொப்பு போல அழகாக இருக்கும் 60 வருடப் பழசு (என் பாட்டி இலங்கையில் இருக்கும் போது வாங்கி உபயோகித்தது!!)இன்னும் உபயோகத்தில் என்னிடம்) எல்லாம் வந்தது.

  நீங்கள் ரெடிமேட் சேவை மாவு வாங்குவதென்றால் நிரப்பாரா மாவு நன்றாக உள்ளது. ரமணாஸ் மற்றும் அணில் என்று நினைக்கின்றேன் அதுவும் பரவாயில்லை. ஆனால் நிரப்பாரா ஏமாற்றுவதில்லை. கலந்த கையோடு சூட்டுடன் பிழிய வேண்டும் இல்லை என்றால் தோள்பட்டை முரண்டு பிடிக்கும்.

  கீதா

  ReplyDelete
  Replies
  1. வாங்க கீதா/துளசிதரன் தில்லையகத்து! புளித்த மோரில் அரிசிமாவை உப்புச் சேர்த்துக் கலந்து செய்கையில் மிளகாய் வத்தல் போடுவதில்லை. அப்போ மோர் மிளகாய் மட்டுமே காரத்துக்குப்போடுவோம். தோசைத் திருப்பியால் தான் நானும் கிளறினேன். நல்ல முறுமுறுனு வந்திருந்தது. :) நான் வாங்கியது ஶ்ரீகிருஷ்ணாஸ் இடியாப்பம் மாவு! இதற்கு முன்னர் எந்த பிராண்டு வாங்கினேன் என நினைவில் இல்லை. :)

   Delete
 12. அக்கா, இப்போது சேவை மேக்கர் வந்திருக்கிறது தெரிந்திருக்கும் என்று நினைக்கின்றேன். ஆனால் நான் இன்னும் நினைத்தால் சேவை நாழியில் தான் பிழிகின்றேன். இந்த சேவை மேக்கர் கோயம்புத்தூரில்தான் செய்கின்றார்கள். ப்ரெஷர் குக்கர் போல மேலே வெயிட் போடும் இடத்தில் சேவை பிழியும் பாத்திரத்துடன் நாம் மாவு மட்டும் அரைத்துப் போட்டால் போதும் அதுவே சேவையாகப் பிழிந்து தந்துவிடுகின்றது.

  https://www.youtube.com/watch?v=n0agnHv5WPc

  https://www.youtube.com/watch?v=uy4WcFYdh8s

  http://sevaimagik.blogspot.in/2007/07/sevai-recipe-contest.html

  இவர்களது தளம் எனக்கு 2008ல் இண்டஸ் லேடிசில் சேவை நாஸ்டால்ஜிக் என்று ஆங்கிலத்தில் எழுதிய போது கிடைத்த தகவல். இப்போது அந்த வலைத்தளம் இல்லை. யுட்யூபில் இருக்கிறது அதுதான் இந்த லிங்குகள். அதன் விலை அப்போது 3000 + இருந்தது. இப்போது தெரியவில்லை. பார்க்க அழகாகத்தான் இருக்கிறது  ReplyDelete
  Replies
  1. சேவை மேக்கர் இருப்பது தெரியாது.ஆனால் நான் இன்னும் சேவை நாழியில் தான் பிழிந்து வருகிறேன். இங்கே கிடைப்பதாகவும் தெரியவில்லை. நீங்கள் கேட்டபடி இமெயில் சப்ஸ்க்ரிப்ஷன் சேர்த்திருக்கிறேன். இன்று தான் நேரம் வாய்த்தது. :)

   Delete