எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Saturday, January 23, 2016

அரங்கன் வந்தான் தேரினிலே!

வைகுண்ட ஏகாதசியை அடுத்துப் பெரிய திருவிழா என்பது தை மாதத் தேரோட்டம் தான் ஶ்ரீரங்கத்திலே நடக்கும். இந்தத் தேர் சித்திரைத் தேரைவிடச் சிறியது எனச் சொல்லப்பட்டாலும் இதுவும் பெரிய தேரே. இதை பூபதித் திருநாள் என அழைக்கின்றனர். அரங்கநாதரைத் தன்குலதெய்வமாகக் கொண்ட அயோத்தியாபுரியை ஆண்ட ஶ்ரீராமனே இந்தத் திருவிழாவை நேரில் நடத்துவதாக ஐதீகம். புவியை ஆண்ட பூபதியான ஶ்ரீராமன் எடுப்பித்த திருவிழா என்பதால் இது பூபதித் திருநாள் எனப் பெயர் பெற்றது. 


நாங்களும் இங்கே வந்து கடந்த நான்கு வருடங்களாக ஒவ்வொரு வருடமும் தேருக்குப் போகவேண்டும் என நினைத்துப் போகமுடியாமல் போயிற்று. முதல் வருடம் கடுமையான ஜுரம் இரண்டு பேருக்கும். உ.பி. கோயில் போனதில் உடல்நலமின்றி ஒரு மாதம் படுத்துவிட்டோம். அடுத்தடுத்த வருடங்களில் இதே போல் ஏதேதோ பிரச்னைகள். இந்த வருடம் எப்படியானும் போகணும்னு ஒரு புத்தாண்டு சபதமே எடுத்திருந்தோம். நேற்றுத் தான் கும்பகோணம் வரை போய் வந்த களைப்பு, என்றாலும் இன்னிக்கு எப்படியானும் தேரைப் பார்க்கணும்னு ஒரு  உறுதியான முடிவு.


காலை நாலரைக்கு எழுந்து வாசல் தெளித்துக் கோலம் போட்டு வீடு சுத்தம் செய்து காஃபி குடித்துக் குளித்துக் கிளம்புகையில் ஆறே கால் ஆகிவிட்டது. ஆறரைக்குத் தேர் கிளம்பும் என்று சொல்லி இருந்தார்கள். தெற்கு வாசலிலே வண்டியை வைத்துவிட்டு அங்கிருந்து ரங்கா கோபுர வாசலுக்கு நடந்தோம். நாங்கள் போகும்போது தான் பூஷணிக்காய் உடைத்து, சிதறு தேங்காய் போட்டுத் தேர் கிளம்ப ஆயத்தம் நடந்து கொண்டிருந்தது. மெல்ல மெல்ல முன்னேறிக் கொஞ்சம் கிட்டத்திலே போய்ப் பெருமாளைத் தரிசிக்க எண்ணினோம். காவல்துறை வளையம் போட்டிருந்தது. ஆகவே இன்னும் கொஞ்சம் முன்னேறி வளையம் இல்லாத இடத்தில் போய்ப் பெருமாளைத் தரிசித்தோம். ஆனால் நல்ல கூட்டத்தில் மாட்டிக் கொண்டோம். விடிந்தும், விடியாத காலைப் பொழுது. கருக்கிருட்டு அப்போது தான் கிளம்பிற்று. அந்தச் சமயம் எடுத்த படம். காமிரா இன்னும் சரியாகவில்லை, என்பதால் அலைபேசியில் தான் எடுத்தேன். படமும் அலை பாய்கிறது.

நாங்க வருவதற்குக் காத்திருந்த மாதிரி அரங்கனும் நகரா கொட்ட அதிர்வேட்டுகள் முழங்க மெல்ல மெல்லத் தேரில் வீதி வலம் கிளம்பினான். கொஞ்ச தூரம் அரங்கன் செல்லும்வரை காத்திருந்தோம். அதற்குள்ளாகக் காவல் துறையினர் போகச் சொல்லி அவசரப் படுத்தவே கிளம்பி வந்தோம். மதுரையில் கடைசியாக எழுபதாம் வருஷம் மீனாக்ஷி தேர் பார்த்தது. அதன் பின்னர் 2010 ஆம் வருடம் சிதம்பரத்தில் நடராஜா தேர். அதன் பின்னர் இப்போது தான் அரங்கன் தேர். அடுத்த மாதமும் பூந்தேர் இருக்கிறது. சித்திரையில் விருப்பன் திருநாளின் போது பெரிய தேர். முடிஞ்சால் போகணும். அரங்கன் விருப்பம் என்னமோ தெரியாது! 

17 comments:

  1. கூட்டமே இல்லையாமே... இப்போது தான் வெங்கட் ஐயாவின் பதிவில் தரிசித்தேன்...

    ReplyDelete
    Replies
    1. ஹிஹிஹி, தேர் கிளம்பும் இடத்திலே நாங்க இருந்தோம். அங்கே அப்போது கூட்டம் ஜாஸ்தி தான் இருந்தது! அதாவது எங்களுக்கு அது கூட்டம் தான்! :)

      Delete
  2. நேற்று கும்பகோணம் வரை பயணமா... அட, சுற்றுப்பயணத்திலேயே இருக்கிறீர்களே...

    தேர்த்திருவிழா, கும்பாபிஷேகம் போன்ற கூட்டங்களில் சென்று மாட்டிக் கொள்வதில்லை!

    ReplyDelete
    Replies
    1. வாங்க ஶ்ரீராம், வெங்கட் சொல்றாப்போல் அவ்வளவு கூட்டம் இல்லை; ஆனால் கூட்டம் தான்! ஹிஹிஹி ஆமாம் இன்னமும் பயணங்கள் பாக்கி இருக்கின்றன. :) அநேகமாய் இந்த மாசத்தோடு முடிஞ்சால் நல்லது. வீட்டில் கால் தரிக்காமல் பல வேலைகள் பாக்கி நிற்கின்றன! :)

      Delete
  3. ஓ இங்கும் தேரோட்டம்..!!!! வெங்கட்ஜி யின் பதிவைப் பார்த்துவிட்டு இப்போது இங்கும்..தரிசனம்..

    ReplyDelete
    Replies
    1. ஆமாம், வெங்கட்டோட பதிவில் தெளிவான தரிசனம். :)

      Delete
  4. வலைப்பூ முழுவதும் தேரோட்டமா ? ஓடட்டும் விரட்டி வருகிறோம்

    ReplyDelete
    Replies
    1. இன்னைக்கு இங்கே இதான் முக்கியச் செய்தி! :)

      Delete
  5. தேர் தரிஸனம் கிடைத்தது. சந்தோஷம். பகிர்வுக்கு நன்றிகள். வெங்கட்ஜி காட்டியுள்ள படங்கள் இன்னும் தெளிவாக உள்ளன.

    //நாங்க வருவதற்குக் காத்திருந்த மாதிரி அரங்கனும் நகரா கொட்ட அதிர்வேட்டுகள் முழங்க மெல்ல மெல்லத் தேரில் வீதி வலம் கிளம்பினான்.//

    ஆஹா, என்ன ஒரு பாக்யம் ! :)

    ReplyDelete
    Replies
    1. வெங்கட் படம் எடுத்தப்போ ஆறரைக்கு மேல் ஆகி இருக்கும்னு நினைக்கிறேன். அதோட அவர் காமிராவிலே எடுத்திருக்கார். என்னோட காமிரா என்னவோ சில நாட்களாகப் பிரச்னை செய்யுது. இன்னிக்குக் காலையில் எடுத்துப் போகும்போது சோதித்தால் வேலையே செய்யலை. இன்னொரு செல்லில் எடுத்திருக்கணுமோனு நினைச்சேன். ஆனால் அதை எடுத்துப் போகலை.

      Delete
  6. ஆஹா... இங்கும் தேரோட்டமா.....

    எனது பதிவிலிருந்து படங்களை எடுத்துக் கொண்டிருக்கலாமே! :)

    ReplyDelete
    Replies
    1. எனக்கு நீங்க பதிவு போட்டது டிடி சொன்னப்புறம் தான் தெரியும். அதோடு நம்ம ஷ்டைலிலும் படம் இருக்கட்டுமே! என்ன சொல்றீங்க? :)

      Delete
  7. தேரும் திருவிழாவாகவும் கோலாகலமாக இருக்கிறது ஸ்ரீரங்கம்! பகிர்வுக்கு நன்றி! கும்பகோணம் பயண பதிவு நாளைக்கு வருமா?

    ReplyDelete
    Replies
    1. ஆமாம், அடுத்த மாசமும் தேர் இருக்கு. சித்திரை வரை கோலாகலம் தான். கும்பகோணம் பயணப் பதிவு நேத்தே போட்டுட்டேன் தம்பி! :) பெருமாளைப் பற்றிய அப்டேட் கொடுத்திருக்கேன். :)

      Delete
  8. புவியை ஆண்ட பூபதியான ஶ்ரீராமன் எடுப்பித்த திருவிழா என்பதால் இது பூபதித் திருநாள் எனப் பெயர் பெற்றது.
    -- கீதா சாம்பசிவம்

    இத்திருநாள் வீரபூபதி உடையாரா் ( இவர் இரண்டாம் ஹரிஹரரின் பேரன் மற்றும் இரண்டாம் புக்கரின் மகன் ஆவார்) என்பவர் பெயரால் கி.பி 1413 ம் ஆண்டு முதல் நடைபெருகிறது.

    -- Hari Avatar தளம்.

    பூமாதேவியின் பதி ராமர் நடத்திய விழா என்பதால் இவ்விழா, "பூபதி திருநாள்' என்று அழைக்கப்படுகிறது.

    -- ஈகரை தமிழ் களஞ்

    ஒரே செய்திக்கு எத்தனை மாறுபட்ட விளக்கங்கள் பாருங்கள்..

    இந்தத் திருவிழாவிற்கு திருக்கோயில் விளக்கம் என்று ஒன்று இருக்கும் இல்லையா, அது தான் என்ன?

    யார் எது சொன்னாலும் அது வழிவழி மொழியப்பட்டு அதுவே வரளாறு அந்தஸ்த்து பெற்ரு விடுகிறது. புராண விஷயங்களைப் பற்றிய செய்திகளில் இந்த மாதிரி மாறுபட்டு மொழிவது என்பது அவரவர் நினைப்புக்கேற்ப நடப்பதால் எது தான் உண்மை என்றறியா மயக்கமும் ஏற்படுகிறது.

    இதற்கு இது தான் என்று வரையறுத்த வரலாற்று செய்திகள் ஆவணமாக்கப்பட வேண்டும். இந்ந மாதிரி விஸ்யங்களில் ஆர்வம் உள்லவர்கள் ஒன்று பட்டு 'ஒரே குரலில் பேசுகிற; ஆவண உருவாக்கங்களை சாத்தியப்படுத்த வேண்டும்.

    ReplyDelete
    Replies
    1. எனக்குத் தெரிந்து பலரும் ஶ்ரீராமர் ஏற்படுத்திய பிரம்மோற்சவம் என்றே சொல்கின்றனர். என்றாலும் நீங்கள் சொல்லி இருப்பதையும் தேடிப் பார்க்கிறேன். இங்கே பலருக்கும் நம்பெருமாள் என்னும் பெயர் வந்த காரணமே தெரிவதில்லை! :( இத்தனைக்கும் அவங்க ஶ்ரீவைஷ்ணவர்கள் தான். பல காலமாகத் திருச்சி, ஶ்ரீரங்கம் வாசிகள்! ஆகவே இதைக் குறித்துக் கோயிலோடு தொடர்பு இருப்பவர்களைத் தான் கேட்க வேண்டும்.

      Delete
    2. இதற்காக இந்தத் திருவிழா என்று கோயில் சொல்லும் சேதி ஒன்று இருக்குமல்லவா? அது என்னவென்று அறியத் தான் கேட்கிறேன். அது ஓரளவு சரியாக இருக்கும் என்ற எண்ணத்தில் விசாரித்து அறிய வேண்டுகிறேன்.

      Delete