எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Sunday, July 23, 2006

92.வேத மந்திரங்கள்- ஒரு பார்வை

வேதங்கள் பற்றியும் மந்திரங்கள் பற்றியும் நமக்குத் தெரிந்தவை மிகக் குறைவு. அதன் மூலம் அவற்றால் ஒரு பயனும் இல்லை என்று முடிவு கட்டுகிறோம். ஆனால் அது அப்படி இல்லை. வேதங்களில் சொல்லாத விஷயமே இல்லை. அரசன், செய்ய வேண்டிய கடமையைப் பற்றிக் கூறும் அர்த்த சாஸ்திரம், உத்தமமான மருத்துவ முறையைப் பற்றிக் கூறும் ஆயுர்வேத சாஸ்திரம், சிற்பங்கள் வடிக்கும் முறை பற்றியும் கோவில் களின் விதி முறைகளையும் பற்றிக் கூறும் சிற்ப சாஸ்திரம், ஆகம சாஸ்திரம் இவற்றை எல்லாம் நாம் படிக்காமல் விட்டு விட்டோம்.தப்புத் தப்பாக அர்த்தம் செய்து கொள்கிறோம். ஆயுர்வேத மருத்துவர்கள் ஆராய்ச்சி செய்து மேன்மேலும் முன்னேற்றி இருக்க வேண்டிய ஒர் வைத்தியம் ஆயுர்வேத மருத்துவம். ஆனால் நாம் இதில் பின் தங்கி விட்டோம். அந்தக் காலத்தில் ரண சிகிச்சை முறை ஆயுர்வேதத்தில் இருந்திருக்கிறது. ஸுஸ்ருதர் என்பவர் இதைப் பற்றி எழுதி இருக்கிறார். வெளி நாட்டில் இருந்து வந்தவர்கள் நம் சாஸ்திரங்களில் உள்ள நல்ல விஷயங்களை எடுத்துக் கொண்டு மேலும் மேலும் ஆராய்ச்சி செய்து விஞ்ஞானத்தில் முன்னேறி விட்டார்கள். சில வருடங்களுக்கு முன்னால் சென்னைத் தொலைக்காட்சியில், "Vedhik Science" "Vedhik Maths" என்று இரண்டையும் பற்றி ஒரு நிகழ்ச்சி சனிக்கிழமைகளில் மாலை வேளையில் வந்து கொண்டிருந்தது. எத்தனை பேருக்கு அது தெரியும் என்பது சந்தேகமே. மிகப் பயனுள்ள ஒர் நிகழ்ச்சி. அதைப் பார்த்தவர்கள் கட்டாயம் புரிந்து கொண்டிருப்பார்கள் தற்காலத்திலும் அவை ஏற்கத் தக்கவை என்று. சீனாவிலிருந்து வந்தது என்று ஒரு கணக்கு முறையைப் பற்றிப் பைத்தியமாக அலைகிறோம். குங்ஃபூ, கராத்தே போன்றவை ஜப்பானில் இருந்து வந்தது என்று கற்றுக் கொள்கிறோம். ஆனால் நம்முடைய செல்வங்களான கலரி, சிலம்பம், வர்மம் போன்றவை பற்றி யாருக்குத் தெரியும்? சிலம்பம் என்றால் சினிமாவில் வருவது தான் என்று நினைப்பார்களே தவிர, நிஜ வாழ்வில் இப்படி ஒரு விளையாட்டு இருந்ததே இன்றைய தலைமுறைக்குத் தெரியாது. நம்மைப் பற்றி நாமே குறைவாக நினைக்காமல் நம்முடைய முன்னோர்கள் சொல்லிச் செய்த ஒவ்வொரு காரியமும் அர்த்தமுள்ளது என்று நினக்க வேண்டும்.இப்போது திருமணங்களில் வரும் ஒரு குறிப்பிட்ட மந்திரத்தை எடுத்துக் கொள்ளுங்கள். திருமணம் நடக்கும் போது மணமகனிடம் சொல்வது போல் அமைந்த ஒரு மந்திரம்:

"ஸோம: ப்ரதமோ விவிதே கந்தர்வோ விவித உத்தர:
த்ரூதீயோ அக்னிஷ்டேபதி:
துரீயஸ்தே மனுஷ்யஜா:
என்று ஒரு மந்திரம். வெளிப்படையாகப் பார்த்தால் பெண் முதலில் சோமன் என்னும் சந்திரனிடமும், பின் கந்தர்வர்களிடமும், பின் அக்னியிடமும் இருக்கிறாள், அக்னியிடம் இருந்து இந்தப் பெண்ணை உனக்குத் தருகிறேன்" என்று அர்த்தம் வரும்.

ஆனால் இதன் உண்மையான அர்த்தம் எல்லாருக்கும் புரிவது இல்லை. நான் புத்தகங்களில் இருந்தும், எங்கள் வீட்டுக் கல்யாணங்களில் இருந்தும் கேட்டுத் தெரிந்து கொண்டது என்ன என்றால்: பெண் குழந்தை பிறந்ததில் இருந்து திருமணம் வரை இருக்கும் காலத்தை மூன்றாகப் பிரித்துச் சொல்கிறார்கள். முதல் பாகத்தைக் காப்பாற்றும் பொறுப்பை ஏற்பவர் ஸோமன். இது சந்திரனைக் குறிக்கும். சந்திரன் குளிர்ச்சியும் மகிஷ்ச்சியும் அளிப்பவன். தேவர்கள் பலசாலியாக இருப்பதற்கு எப்படிச் சந்திரனின் அருள் தேவையோ அது போல பூமி வளம் பெறுவதற்கும் சந்திரனின் அருள் தேவை. அவன் அருளால் உலக ஆரோக்கியத்திற்கு உகந்த வகையில் பருவங்கள் உருவாகிறது. பூமி, வலுவும் வளமும் பெறுகிறது. அவன் அருளால் பெண்ணின் குழந்தைப் பருவம் ஆரோக்கியமானதாகவும், வளம் பொருந்தியதாகவும் இருக்கும். இதற்குச் சந்திரனின் அருள் தேவை. மேலும் ஆயுர்வேத முறைப்படியும், சோமம் என்றால் "கபம்" என்றும் ஒரு பொருள் உண்டு. பிறந்த குழந்தைக்கு இருக்கும் அதிகக் கபத்தினால் தொல்லைகள் கொடுக்காமல் காப்பாற்றும் பொறுப்பை ஏற்பவன் ஸோமன். மேலும் குழந்தை பிறந்து சிலவருடங்கள் வரை தாயின் கண்காணிப்பில் இருக்கும். தாயின் மென்மையான அணுகுமுறையைக் கூட ஸோமனின் உதாரணத்துக்குச் சொல்லலாம். வளர்கையில் பெண்ணின் குணமும், குரலும், மாறி அழகு அதிகரிக்கிறது. பெண் கனவு காண ஆரம்பிக்கிறாள். இதில் இருந்து அவளைக் காத்து நல்வழிக்குத் திருப்பும் பொறுப்பு கந்தர்வர்களுடையது. அதாவது தாய், தந்தை இருவரும் சேர்ந்து பெண்ணைக் கண்காணிக்கிறார்கள். அவளுடைய அழகுக்குக் காரணனான கபத்தை மட்டுப் படுத்தி அவளைத் தன்னிலை பெறச் செய்வது கந்தர்வர்கள் பொறுப்பு. அழகும், பருவமும் சேர்ந்து விட்டால் பின்னால் ஏற்படும் உணர்வுகளுக்கும் அவளுடைய துணை தேடும் நினைவுகளுக்கும் காரணம் அக்னி. இந்தச் சமயத்தில் தான் பெண் அந்த அக்னியைப் போல இருக்க வேண்டும். அவள் நினைவுகளும், கனவுகளும் அவளைச் சுட்டுப் பொசுக்காமல் அவளைப் பாதுகாப்பவன் அக்னி. அந்தப் பாதுகாப்பு உணர்வு அவளுக்குத் தோன்றக் காரணமாக இருப்பவன் அக்னி. ஏனென்றால் சிருஷ்டியின் மூலமே பெண்ணால்தான். தன்னிச்சையாகச் செயல் படும் தகுதி அவளுக்கு இருந்தாலும் அவள் ஜாக்கிரதையாகத் தன் குடும்பம், சமூகம் என்ற உணர்வுகளோடு ஆரோக்கியமான சிந்தனைகளோடு செயல் படுவதற்குக் காரணம் அக்னி. பெண்ணினம் காப்பாற்றப் பட்டால் அத்தனை தர்மங்களும் காப்பாற்றப் படும். ஆகவே திருமணம் ஆகும் வரை அவளைக் காக்கும் பொறுப்பை அக்னி ஏற்றுக் கொண்டு மணமகனிடம் மணப் பெண்ணை ஒப்படைக்கிறார். ஆகவே தான் திருமணங்கள் அக்னி சாட்சியாகவும் நடைபெறுகிறது. மணமகன், மணமகள் இருவரும் சேர்ந்து ஸோமன், கந்தர்வன், அக்னி இவர்கள் மூவருக்கும் முறைப்படி அவர்களுக்குப் பூஜை செய்து வணங்கி வழி அனுப்புவார்கள். முறையே சந்திரனுக்குப் பிடித்த பழத்தை ஒரு குழந்தைக்கும், கந்தர்வனுக்கு வேண்டிய ஆடை, அலங்கரம், வாசனைத் திரவியம் போன்றவைகளுக்கு மணமகன், மணமகள் ஆடைகளில் இருந்து நூல் எடுத்தும், அக்னிக்குப் பிரியமான நெய்யும் கொடுத்து வழி அனுப்புவார்கள். இதில் அவர்கள் இதுவரை செய்த தவறுகளை மன்னிக்கவும், மேலும் இனித் தவறு செய்யாமல் இருக்கவும் இருவரும் வேண்டும் வேண்டுதலும் இருக்கும். அக்னி பரிசுத்தமானது. அவன் பாதுகாப்பில் இருந்த பெண்ணும் சுத்தமானவள். அப்பழுக்கற்றவள். ஆகையால் நாம் சந்தேகமே இல்லாமல் வேதங்களும் மந்திரங்களும் கூறும் உண்மையைப் புரிந்து கொள்ள முயற்சிப்போம்.

23 comments:

  1. எங்கள் ஊரில் ஒரு வேதியர் திருமணம் மற்றும் இதர சடங்குகளின் போது சமஸ்க்ருதத்தில் ஓதும் மந்திரங்களின் தமிழ் அர்த்தத்தை 'கோனார் தமிழுரை' மாதிரி எளிய இனிய தமிழில் மொழி பெயர்த்தும் சொல்லுவார். பலரும் அதை விரும்பினாலும், ஒரு சிலர் "சீக்கிரமா மந்திரத்தை சொல்லி முடிங்கய்யா" என்று கோரிக்கை எழுப்புவதும் உண்டு.

    அரசியலுக்காக தமிழை கையில் எடுத்துக் கொள்ளும் 'திராவிட' அரசியல்வா(ந்)திகள் மாதிரி இல்லாமல், நிஜமான ஆதங்கத்தில் கேட்கிறேன் : மேற்படி வேத பாராயணங்களை தமிழில் (ஆந்திராவில் இருந்தால் தெலுங்கில், கர்நாடகா என்றால் கன்னடத்தில்....) செய்தால் இன்னும் பலருக்கு அதன் அர்த்தங்களும், அதனால் எழும் நன்மைகள் குறித்தும் நன்கு விளங்குமே.. இல்லையா?!

    ReplyDelete
  2. கீதா,

    ஆங்கிலத்தில் பேசத்தெரியவில்லை என்றால் நம் குக்கிராமத்துக் கிழவிகூட "என்னத்த படிச்சுக் கிழிச்ச" என்று சர்டிபிகேட் தருகிற அளவுக்கு அடிமை மனோபாவம் இன்னும் விலகவில்லை.

    "நீ என்ன பெரிய கலெக்டரா" எனும் சொல் மிக அதிகமான அளவுக்கு வழக்கில் உள்ள சொல், ஆழ்ந்து நோக்கினால் ஆங்கிலேயர் அடிமைத்தனத்தால் அதிகாரம் உள்ள பதவி மீதான பிடிப்பு தெரியவரும்.

    நீங்கள் சொல்லும் வேதமுறையிலான கணிதம், வேத முறையிலான அறிவியல் இவைகளைப் படிக்க "கலோனியல் மனப்பாங்கு" அனுமதிக்காது.

    மருத்துவ வேதமான ஆயுர்வேதம் படித்தால் மிதிக்கும் சைக்கிளுக்கு "ஆயில்" கூடப் போடமுடியாது. ஆங்கிலேய அலோபதியில் "சைடு எபெக்ட்டில்" அதீத "க்ரோனிக் கார்டியாக் ரப்ச்சர்" ஏற்பட்டு மாண்டுபோனலும் லட்சங்கள் கட்டி "பாடியை" எந்த மனக்கிலேசமின்றி எடுத்து வரலாம்.

    இன்றைய நவயுகத்திலும் ஆயுர்வேதப்படி காய்ச்சல், ஜலதோஷத்திற்கு மிளகுக் கஷயம், மஞ்சள்+மிளகுப்பொடி கலந்த பால் அருந்தும் அரிதான சிலரில் நானும் ஒருவன். இப்போ பேஷனே தும்மினாக்கூட "ஆண்டிபயாடிக்" தான். காசு கரந்து ஆண்டியானலும் பரவாயில்லை.

    வேத மந்திரமாம், அர்த்தமாம், தெரிஞ்சுக்கணுமாம் கீதா தமிழ்நாட்டில் இருந்து கொண்டு என்னங்க அநியாயத்துக்கு அப்பாவியா எப்படி இப்படி?

    நாங்க எப்பவுமே வீட்டு தெய்வத்தை வெளக்குமாத்தால அடி பின்னிட்டு, காட்டு தெய்வத்தை கையெடுத்து "பகுத்தறிவோட" கும்புடுற டைப்.

    வேணாம் உங்களோட வலைப்பூவில் என் சூறாவளி காமெண்ட் தவிர்க்கிறேன்.

    ReplyDelete
  3. மிக நல்ல பதிவு கீதா.
    மாயவரத்தார் சொன்னது போல் நானும் சில வேதியர்களை பார்த்து உள்ளேன். அவர்கள் தமிழில் அர்த்தப்படுத்தி சொல்லும் போது, ஆஹா, இதில் இவ்வளவு அர்த்தம் உள்ளதா என்று ஆச்சரியப்பட்டது.

    இதற்கு யாரும் முக்கியத்துவம் கொடுக்காமல் இருப்பது மிகவும் வருத்தமான விசயம் தான்.

    ReplyDelete
  4. மாயவரத்தாரே,
    நீங்கள் சொல்வது சரிதான். ஆனால் பூனைக்கு மணி கட்டுவது யார்? A million dollar question?

    ReplyDelete
  5. ஹரிஹரன்,
    தமிழ் நாட்டுக்குத் தான் தேவை என்ற நினைப்பிலும், ஊதுற சங்கை ஊதி விட்டால் கேட்பவர்கள் கேட்பார்களே என்ற எண்ணத்திலும் தான் எழுதினேன். மற்றபடி அப்பாவியாக ஒன்றும் இல்லை. 1000 பேரில் ஒருத்தர் என்ற கணக்கில் கேட்டாலும் போதுமே!

    ReplyDelete
  6. ரொம்ப நன்றி சிவா, எல்லாத்துக்கும் தான். சரியாகப் புரிந்து கொண்டதற்கும்.

    ReplyDelete
  7. கீதா மேடம்,

    //ஊதுற சங்கை ஊதி விட்டால் கேட்பவர்கள் கேட்பார்களே என்ற எண்ணத்திலும் தான் எழுதினேன். //

    நல்ல முயற்சி.

    நன்றி.

    ReplyDelete
  8. கீதா,

    உங்கள் "டிடர்மினேஷனுடனான" தைரியமான முயற்சிக்கு என் வாழ்த்துக்கள்.

    நீங்கள் அநியாயத்துக்கு அப்பாவியாய் இருந்து இப்பதிவை பதியவில்லை என்றறிவதில் மகிழ்ச்சி.

    கண்டிப்பாக ஒருசிலர் கேட்டால் அதுவே இப்பதிவு இலக்கைத் அடைந்ததாகும்.

    வாசிப்போர்க்கு அதிகப் பயன் தருவதற்காக ஒவ்வொன்றாக ஆயுர்வேதம், வேதக் கணிதம், வேத ஆறிவியல் ,மந்திரங்களில் சிலவற்றின் தமிழ் அர்த்தங்கள் என தாங்கள் அறிந்ததை தனியாக விரிவாக விளக்குங்கள்.

    மிகவும் பயன் தருவதாக அமையும்.

    ReplyDelete
  9. வேதா,
    மிக நல்ல புரிதலுக்கான நன்றி. இம்மாதிரி புரிதல் இருந்தால் எழுதுவதற்கும் மனதுக்கு நிறைவாக இருக்கும்.

    ReplyDelete
  10. ரொம்ப நன்றி நன்மனம், பேருக்கு ஏத்த மாதிரி எழுதறீங்க.

    ReplyDelete
  11. ஹரிஹரன்,
    நாம் நம்மைப் பற்றிய உண்மைகளைச் சொல்வதற்குக்கூட தைரியம் வேண்டும் என்ற சூழல் கூடிய விரைவில் மாற வேண்டும் என்பது தான் என் பிரார்த்தனை. மற்றபடி நான் அறிந்தவற்றையும், தெரிந்து கொண்டதையும் கட்டாயம் பகிர்ந்து கொள்வேன். ஊக்கத்திற்கு நன்றி.

    ReplyDelete
  12. நல்ல கருத்துக்கள் கீதா அக்கா,

    ஆனா! நான் படிக்க ஆரம்பித்தவுடன் கொஞ்சம் பயந்துவிட்டேன். கொஞ்சம் சொல் நயம் சொல்லி எழுதினால் என்னைப்போன்ற இளசுகளுக்கு நல்லா புரிந்திருக்கும்.

    என் பள்ளிக்காலங்களில், தமிழ் அய்யா ஒரு நாத்தீகர். ஒரு நாள் அவர் பாடம் எடுக்கும் போது இந்த வாக்கு வந்தது. அவர் "கல்யாணத்தில சொல்ற மந்திரங்கள் தமிழ்ல சொன்னா மாப்பிள்ளை யாரும் பொண்ண கல்யாணம் பண்ணிக்க மாட்டாங்க. முதல்ல மணப்பெண்ணை தேவர்களுக்கு கல்யாணம் பண்ணி வைச்ச பிறகே மாப்பிள்ளைக்கு கல்யாணம் பண்ணி வைப்பாங்க. இது மாப்பிளைக்கு தெரிஞ்சதுன எழுந்து ஒடி போயிடுவார்" னு எள்ளி நகையாடினார்.

    நல்ல கருத்துக்கள்..

    ஸ்ரீதர்

    ReplyDelete
  13. நல்ல விதயங்களைக் கூறியிருக்கிறீர்கள். ஆனால் இது எல்லோரையும் ஏன் சென்றடைவதில்லை? ஒரு குறிப்பிட்ட வட்டத்திற்குள்ளேயே பரிமாறிக்கொள்ளப்பட்டு அந்நியப்பட்டு விட்டன. இன்று வேதம் என்றாலே காததூரம் ஓடும் மனிதர்களே அதிகம்.

    ReplyDelete
  14. தமிழ்மணத்தில் சேர்த்தாச்சு!

    ReplyDelete
  15. நீங்க எந்த ஸ்ரீதர் தெரியலையே? நம்ம நன்மனம் (சங்கத்து உளவுப்படைத் தலைமை) கூட ஸ்ரீதர் தான். பரவாயில்லை, உங்களுக்குச் சொல் நயம் என்றால் எப்படி என்று எனக்குப் புரியவில்லை. கூடிய வரை எளிய தமிழில் சொல்ல முயற்சிக்கிறேன், சரியா? பாராட்டுக்களுக்கு நன்றி, அடிக்கடி வாருங்கள்.

    ReplyDelete
  16. மணியன்,
    எதுவும் கேட்டால் கிடைக்கும் என்ற formula தான். நீங்கள் குறிப்பிட்டிருக்கும் அந்த ஒரு குறிப்பிட்ட வட்டம் கூட இல்லை என்று தேடிப் படித்து வருகிறேன். இன்னும் கொஞ்ச நாளில் அதைப் பற்றியும் எழுதுகிறேன். ரொம்ப நன்றி, உங்கள் வரவுக்கும், கருத்துக்களுக்கும்.

    ReplyDelete
  17. சிவா,
    ரொம்ப நன்றி, தமிழ்மணத்தில் சேர்த்ததற்கு. ஆனால் என்னால் ஏன் இப்போது இந்த blogger blockingற்கு அப்புறம் சேர்க்க முடியவில்லை? இன்னும் என்னால் நேரிடையாக என்னுடைய வலைப்பக்கம் திறக்க வரவில்லை.tools.superhit.in போய்த் தான் வர வேண்டி இருக்கிறது. இன்னும் எத்தனை நாள் இப்படி இருக்கும்? நான் என்ன செய்ய வேண்டும் என்று சொல்லித் தந்தால் நல்லது.

    ReplyDelete
  18. எந்த உளவுப்படைக்கும் எனக்கும் எந்த சம்பந்தம் கிடையாது. நீங்க வேற இப்படியெல்லாம் எழுதி என்ன இந்தியாவுக்குள்ள வரவிடாம பண்ணிடாதிங்க.. பஹ்ரேன் பாலைவனத்துல எண்ணைக்கூட இல்ல..

    மருந்துக்கூட கொஞ்சம் தேன் கலந்து குழந்தைகளுக்கு தருவாங்க.. அந்த மாதிரி உங்கள் எழுத்திற்க்கும் கொஞ்சம் சொற்சுவை சேர்த்தால் நல்லா இருக்கும்.

    உங்கள் எழுத்தை விமர்சிக்கும் அளவிக்கு நான் பெரியவன் இல்லை. என் மனசுல இருக்கிறத சொன்னேன்.

    - ஸ்ரீதர்

    ReplyDelete
  19. ஹி,ஹி,ஹி, ஸ்ரீதர்,
    உளவுப்படைன்னதும் பயந்துட்டீங்க போலிருக்கு. நான் சொன்னது நம்ம வ.வா.சங்கத்தின் உளவுப்படை நம்ம நன்மனம் ஸ்ரீதர் அவர்கள். நீங்க வலைப்பதிவுக்குப் புதிசு போலிருக்கு. நம்மளோட பழைய பதிவை எல்லாம் படிங்களேன். ஆளாளுக்கு நம்மளை "கல்கி" (இது கொஞ்சம் ஓவர்தான்), "தேவன்" ரேஞ்சுக்குப் புகழ்ந்து எழுதி இருப்பாங்க. எல்லாம் வேதா சொல்ற மாதிரி நம்ம கொடுமை தாங்காமலோனு அப்போ அப்போ எனக்கும் சந்தேகம் வரும். நீங்க கண்டுக்காதீங்க. இது ஒரு ஜனரஞ்சகமான வலைப்பதிவுப் பக்கம். நவரசமும் கிடைக்கும். சோக ரசமும், தக்காளி ரசமும் தவிர. உங்க மனசிலே இருக்கிறதைச் சொல்லத்தானே உங்க பின்னூட்டமே!

    ReplyDelete
  20. வேதா,
    (நிஜமா இன்னும் எனக்கு நேர் வழியில் திறக்க முடியவில்லை. முத்தமிழ்க்குழுமத்திலும் முனைவர். இரவாவிற்கும் பிரச்னை இருப்பதாகச் சொல்கிறார். அவரும் Tata Indicom Broadband தான்.) நான் என்னமோ அறுக்கிறேன். ஆனால் அது அவங்களுக்கும் தெரிஞ்சு போச்சுங்கறீங்க?

    ReplyDelete
  21. நீங்கள் சொன்னீர்களே சந்திரன்,கந்தர்வன்,அக்னி இவர்களின் அம்சம் உள்ளவள் பெண் என்று.அது சரிதான் இந்த மாதிரிப்பார்த்தாலும்.பெண் சந்திரனைப்போல் குளுமையானவள்,மரியாதையுடன் வைத்துக்கொண்டால் கந்தர்வ கானம் போல் இருப்பாள்.சற்றேனும் ஏறுமாறாக இருந்தால் அக்னியைப்போல் ஜ்வலித்து பொசுக்கவும் தயங்கமாட்டாள்.என் நண்பர் தனது மகன் திருமண்த்திற்க்கு வந்தவர்களுக்கு அன்பளிப்பாக திருமண மந்திரங்களின் தமிழ் வடிவத்தை புத்தகமாக அளித்தார். மிகவும் பயனுள்ள காரியம்.எல்லோரும் இதை கடைபிடிக்கலாம்.

    ReplyDelete
  22. தி.ரா.ச. சார்,
    நீங்கள் சொல்வதும் ஏற்கும்படியாக இருக்கிறது. மிக்க நன்றி, வந்ததுக்கும், பாராட்டுக்கும்.

    ReplyDelete
  23. நல்ல தகவல்கள். நல்ல முயற்சி. வாழ்த்துக்கள்

    விதூஷ் பதிவில் இருந்த உங்கள் மூலம் இங்கே வந்தேன்.

    ReplyDelete