எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Saturday, February 23, 2008

புல்லாகிப் பூண்டாகி, விமரிசனம் - என் பக்கத்தில் இருந்து

//புல்லாகிப் பூண்டாகிப் புரைதீர்க்கப் போராடிக்
கல்லாகிக் கண்ணன் கழல்பெற்ற கதையீது
சொல்வார்கள் சொல்லக் கொள்வார்கள் சோர்வதனை
வெல்வார்கள் வென்று வையத்தில் வாழியரே!//

//புல்லாகி, பூடாய், புழுவாய், மரமாகி
பல்விருகம் ஆகி, பறவையாய், பாம்பாகி,
கல்லாய், மனிதராய், பேயாய், கணங்களாய்
வல் அசுரர் ஆகி, முனிவராய் தேவராய்
செல்லாஅ நின்றஇத் தாவர சங்கமத்துள்
எல்லாப் பிறப்பும் பிறந்திளைத்தேன்!
எம்பெருமான்! மெய்யே!
உன் பொன் அடிகள் கண்டு,
இன்று வீடு உற்றேன்!//

""மேற்கண்ட இரு பாடல்களும் மனிதப் பிறவி எடுப்பதன் தாத்பரியத்தை எடுத்து உரைக்கிறது. இந்தப் பூவுலகம் தோன்றியதும் முதலில் முளைத்ததும் புல் என்றே சொல்வதுண்டு. அந்தக் கோடானுகோடிப் புற்களின் ஒன்றான ஒரு சிறிய புல்லின் வாழ்க்கைச் சரிதமே இந்தக் கதை என்று சொல்லவேண்டும். கதையா அல்லது நிகழ்வுகளா? என்று அதிசயிக்கும் வண்ணம் சற்றும் மாறுபட்ட கருத்தைச் சொல்லாமல் எந்தக் கருத்து முக்கியமாய் எடுத்து ஆளவேண்டுமோ அதை ஒட்டியே கதையின் அனைத்து அத்தியாயங்களும் செல்கின்றன. கதையின் நாயகன் கந்தனை நமக்கு அறிமுகப் படுத்தும்போது சற்றே அவனைக் கருவம் படைத்தவனாய் அறிமுகப் படுத்துகிறார். தாத்தாவிடம் பணம் கொடுக்கும்போது தன்னை அறியாமல் அது வெளிப்படுவதும், பின் கந்தன் மனம் வருந்துவதும் எப்போதும் நம் மனத்தில் நடக்கும் இருமனப் போராட்டத்தை நன்கு வெளிப்படுத்துகிறது. கூடவே எல்லாப் பிறவிகளிலும் தொடர்ந்து வந்து கொண்டிருப்பதாய்க் கதையின் கடைசியில் அடையாளம் காட்டப் படும் கேசவனோ கந்தனை அடி ஒற்றி நடப்பதுவே அல்லாமல் வேறு ஒன்றறியேன் பராபரமே! எனக் கந்தனைத் தொடர்ந்தே செல்கிறான்.

திருவண்ணாமலையில் கிரிவலம் வரும்போது அனைத்துத் தெய்வங்களையும் தரிசிக்கும் கந்தனுக்குச் "சுடலை"யில் காவல் காக்கும் ஈசனை வணங்குவதில் தெரியும் தயக்கமும், மயானத்துக்குச் சென்றால் குளிக்க வேண்டும் என்று எண்ணுவதும், அவன் இன்னும் மாயை என்னும் அழுத்தத்தில் இருந்து விடுபடவில்லை என்பதைக் குறிக்கிறது. (இந்த இடத்தில் இந்த விமரிசனத்துக்குத் தேவையில்லாத குறிப்பு ஒன்று. குஜராத் "ஜாம்நகர்" என்னும் நகரத்தில் பார்க்கவேண்டிய முக்கிய சுற்றுலா இடங்களில் அந்த ஊரின் மயானமும் ஒன்று. அந்த மயானத்துக்குச் சிறு குழந்தையைக் கூட எடுத்துக் கொண்டு வருவார்கள் குஜராத்தியர்கள். அங்கே அது மிகவும் விசேஷமாய்ச் சொல்லப் படுகிறதோடு அல்லாமல், அங்கே சென்று வந்தால் குளிப்பது போன்ற ஆசாரங்களும் நடைமுறையில் இல்லை. சர்வ சாதாரணமாய்ப் புதுமணத் தம்பதிகள் முதல் அனைவரும் வந்து சுற்றிப் பார்த்துச் செல்வதுண்டு.) பின்னர் அவனுக்குப் பிடாரி அம்மன் சன்னதியில் மட்டுமே மன அமைதி வந்து சேருகிறது. திருவண்ணாமலைக்கு ஒருமுறை கூடச் செல்லாத என்போன்றோருக்கு மிகச் சிறந்த வழிகாட்டி போல் உதவும் குறிப்புக்களைக் கொடுத்துள்ளார் குமரன். பின்னர் தூக்கத்தில் ஆழ்ந்து போகும் கந்தனுக்கு வரும் கனவுகளே மற்ற அத்தியாயங்கள்.

கல்லாய்த் தோன்றிய தன்னை உயிர்ப்பித்து முக்தி கொடுக்கவே கண்ணன் காலால் உதைபட நேர்ந்தது எனத் தாத்தா சொல்லுவதைக் கேட்கும் கந்தன் மட்டுமில்லாமல் நாமும் ஆச்சரியப் படுகிறோம். கூடவே கற்கள், மலைகள் பற்றிய விஞ்ஞானபூர்வச் செய்திகளும் கதையின் போக்குடன் சேர்ந்தே வந்து செல்கிறது. கழுகுகள் பற்றிச் சொல்லும்போதும் அப்படியே! பழகின காக்கை கூடத் தினம் தினம் சாதம் வைக்கும்போது வந்துவிடுகிறது. சற்று நேரம் ஆனால் கத்தி ஊரைக் கூட்டுகிறது. கருடன்களும் அப்படியே பழக்கலாம் என்று தோன்றினாலும் எங்கேயோ காட்டில் இருக்கும் கருடன்கள் அவை! ஆன்மீகவாதிகளால் ஏற்றுக் கொள்ளக் கூடிய ஒன்று இந்தக் கருடன் வலம் வருவது என்று தோன்றினாலும் பலமுறை சில குறிப்பிட்ட கோயில்களை மட்டுமே கருடன் சுற்றி வருவதையும் காணலாம். அதுவும் கும்பாபிஷேகம் என்று எப்படித் தெரியும் எனத் தோன்றினாலும் ஏதோ ஓர் கண்ணுக்குப் புலன் ஆகாத சக்தி ஒன்று அனைவரையும் இயக்குகிறது என்றவரையில் புரிந்து கொள்ள முடிகிறது.

மரங்களும் அப்படியே! இறைவனுக்கு உருவம் இல்லை என்பது சனாதனா தர்மக் கோட்பாடு என்றாலும், நம்மைப் போன்ற பாமர ஜனங்களுக்குப் புரியவைப்பதற்காக இறை உருவை நிர்மாணம் செய்தார்கள். அதை ஒரு மரத்தில் நிர்மாணம் செய்து அந்த மரத்தையும் சேர்த்து வழிபடச் சொன்னது நம் வாழ்வே இயற்கையோடு இயைந்தது என்பதைச் சுட்டிக் காட்டவே. ஆனாலும் காலப் போக்கில் அவை மாறித் தான் போய்விட்டது. கூடவே அநேக மரங்களும் அவற்றோடு போய்விட்டது! பின்னர் மனிதரில் தேவர் ஆன நரசிம்மதாசரின் பக்தி மெய் சிலிர்க்க வைக்கிறது. "உண்ணும் சோறும், பருகும் நீரும் கண்ணனே!" என்ற நிலையில் இருக்கும் நரசிம்மதாசன், குரு சைதன்யர் இன்னும் ஐநூறு பிறவிகள் இருக்கின்றன என்று சொல்லுவதைக் கேட்டு ஆனந்த நடனம் ஆடுகிறான். இதைக் கண்ட மற்றவர் வியந்தாலும் ஐநூறு பிறவிகளிலும் கண்ணனை மறவாமல் இருக்கவேண்டும் என்ற நரசிம்மதாசனின் பக்தியை நினைத்தால் உண்மையிலேயே "அரிது, அரிது, மானிடராய்ப் பிறப்பது அரிது" என்ற தமிழ் மூதாட்டியின் சொல்லின் உண்மையில் மெய் சிலிர்க்கிறது.

அடுத்து ஜகன்மோகன் ஆனபோதோ இராமகிருஷ்ண பரமஹம்சரின் யோகநிலையைப் பார்த்து வியப்புறுவதும், திருமணம் என்ற பந்தத்தால் ஆன்மீகம் தடைப்படாது, மனையாள் துணை இருந்தால் எதையும் வெல்லலாம் என்பதும் உணர்ந்து கொள்வதோடு அல்லாமல் நம்மையும் உணர வைக்கிறார்.
//ஆனால் இல்லறத்தில் ஈடுபட்டிருக்கும் இராமகிருஷ்ணருக்கு எப்படி இந்த நிலை சாத்தியப்பட்டது?"//
இந்தக் கேள்விக்குப் பதில் முழுமையாக ஜகன்மோகனுக்குக் கிடைக்கவில்லை. சிருஷ்டியின் ரகசியம் அறிய முடியுமா? என்றாலும் ஓரளவு சொல்கிறார் குருநாதர் தோதாபுரி:

//ஜகன்மோகன். அனுபவங்களின் வாசனைகள் இரண்டு விதமாக நீங்கும். ஒன்று அந்த அனுபவத்தை முழுமையாக அனுபவித்துவிட தானாக அந்த வாசனையும் அதோடு சேர்ந்து வரும் ஆவலும் நீங்கும். மற்றொன்று அந்த அனுபவத்தைத் தரும் பொருட்கள் நம்மை விட்டு வலுவாக நீக்கப்பட்டு அதனால் அந்த அனுபவத்தைத் தொடர்ந்து பெறும் வாய்ப்பு இல்லாமல் போய் அந்த வாசனையும் ஆவலும் நீங்கும். உனக்கு ஏற்பட்டிருக்கும் ஆவல்களும் உன் முந்தைய பிறவிகளில் ஏற்பட்ட அனுபவங்களின் வாசனையே. முழுமையடையாத அந்த அனுபவங்கள் தான் உன்னை மீண்டும் அவற்றை அனுபவிக்கத் தூண்டுகின்றன. ஆன்மிக வாழ்வில் நன்கு முன்னேற்றமடைந்த உனக்கு அந்த அனுபவங்கள் மீண்டும் ஏற்பட்டாலும் வழி தவறிப் போக இயலாது. அதனால் கவலை வேண்டாம்"//
ஜகன்மோகனுக்கு மட்டுமில்லாமல் நமக்கும் கொஞ்சம் கவலை நீங்குகிறது.

மறுநாள் தூங்கி எழுந்து அனைத்தையும் யோசித்துக் குழம்பும் கந்தனின் மனதை ஒருமைப் படுத்தும் தாத்தா அவன் முன்பிறவிகள் அனைத்தும் அவன் கனவில் வந்தவை எனத் தெளிவு படுத்துவதோடு அல்லாமல் இப்பிறவியிலும் அவனுக்கு ஆன்மீகத்தில் ஈடுபாடு இருக்கும் என உறுதிபடவும் சொல்லுகிறார். ஜாதகம், கைரேகை என்பது பற்றியும் அவனிடம் கூறுகிறார். (இந்த விஷயத்தில் எனக்கு உடன்பாடு உண்டு.என்னோட பள்ளி நாட்களிலேயே என் ஜாதகம், பார்த்தும், கைரேகை பார்த்தும் பல வருடங்களுக்கு முன்னர் எனக்குக் கூறிய என் நண்பன் "சிவா" கூறிய அனைத்தும் எனக்கு நடந்திருக்கிறது. ஆனால் சொல்பவர்களின் கணக்கு மிகத் துல்லியமாய் இருக்கவேண்டும்.) தாத்தா சொல்லுவதை ஏற்க முடியாத கந்தனோ, அறிவுபூர்வமாய் அவருடன் வாதாடுகிறான். ஆனாலும் தாத்தா சொல்லுவதும் ஏற்கக் கூடியதாயே உள்ளது. இந்த உலக அனுபவங்களை இன்ப, துன்பங்களை, இல்வாழ்வின் உயரிய தத்துவத்தைப் புரிந்து கொள்ளும் விதமாயே அவனின் இப்பிறப்பு அமைந்துள்ளது என்றும் கூறும் தாத்தா இப்பிறவியிலும் அவன் ஆன்மீகவாதியாகவே இருப்பான் எனவும் முன் பிறவித் தொடர்புகளும் தொடரும் என்றும் புதிய தொடர்புகள் உண்டாகும் எனவும் சொல்கின்றார். கேசவன் அவனை எல்லாப்பிறவியிலும் தொடர்ந்து வருவதாயும் சொல்கின்றார்.

என்றாலும் அமைதி அடையாத கந்தன் தான் ஏன் வெளிநாடுகளில் பிறக்கவில்லை என்று எண்ணியதோடல்லாமல் தாத்தாவையும் கேட்கின்றான். அவன் வெளிநாடுகளிலும் பிறந்திருப்பதாயும், பெண்ணாய்க் கூடப் பிறந்திருப்பதாயும் சொல்லும் அவர் பதிலில் அவ்வளவாய்த் திருப்தி அடையவில்லை கந்தன். என்றாலும் மேலும் அவரைக் குடைகின்றான். தாத்தா தான் அவதாரமா எனவும் கேட்கின்றான். இல்லை, என்று கூறும் அவர் அவனின் ஆன்மீகப் பயிற்சி பற்றி இப்பிறவியிலும் அவன் தொடரவேண்டும் என்பதை நினைவு படுத்த வந்த ஒருவர் எனவும், ஒவ்வொரு பிறவியிலும் ஒருத்தர் வருவார்கள் நினைவு படுத்த என்றும் சொல்கின்றார். ""

இத்தனையும் திருமணம் ஆகிப் பத்துவருடங்கள் ஆகும்போது நினைக்கும் கந்தனுக்குத் தன் திருமணத்துக்கு அழைக்கச் சென்ற போது தாத்தா இறந்து போனதும், ஆனாலும் அவர் தன் திருமணத்துக்கு வந்து வாழ்த்துவேன் என்று சொன்னமாதிரி வந்து வாழ்த்தியதைக் கண்டதும், தான் மட்டுமே கண்டோம் என நினைத்த ஒன்றை நண்பன் ஆன கேசவன் கண்டிருக்கிறான் என்று சொல்வதும் குழப்பத்தை அதிகப் படுத்துகிறது. இவை அனைத்தையும் நினைக்கும் கந்தனுக்கு ஏற்படும் குழப்பங்களும், கேள்விகளும் அதற்கான விடைகளும் இன்னும் கிடைக்கவில்லை. காலம் தான் பதில் சொல்லும் என்ற நம்பிக்கையுடன் எதிர்பார்க்கிறேன். கந்தன், அவன் மனைவி, இருகுழந்தைகள் அனைவருக்கும் வாழ்த்துக்களும், நல்லாசிகளும். கூடிய சீக்கிரம் கந்தன் தன்னை அறிவான்.

பொருத்தமான இடங்களில் பொருத்தமான பாட்டுக்களும், அர்த்தங்களும், சுலோகங்களும், அதன் அர்த்தங்களும், படங்களும் என்று கண்ணை மட்டுமின்றி கருத்தையும் கவரக் கூடியதாய் உள்ளது இந்தப் பதிவு. அதுவும் திருவண்ணாமலை பற்றிய பதிவுகளில் வரும் படங்கள் அனைத்தும் அருமை. புதிதாய் முதல் முதல் எழுதுகிறார் என்று ஒரு இடத்தில் கூடத் தோன்றாத படிக்கு எழுதி இருப்பதும் குமரனின் எழுத்து வல்லமைக்குச் சான்று.
**************************************************************************************
மேற்கண்ட விமரிசனத்தைக் குமரனின் "புல்லாகிப் பூண்டாகி" தொடர் பதிவுகளுக்காக நான் எழுதி அனுப்பிய விமரிசனம். அதைக் குமரனுக்கு அனுப்பி அவர் பதிவில் போட்டாச்சு என்றாலும், இங்கேயும் மீள்பதிவு செய்கிறேன். தத்துவ விசாரணையில் எல்லாம் நான் இறங்க வில்லை. கதையை மட்டுமே தொட்டிருக்கிறேன். ஏனெனில் என்னளவில் நான் ஒரு "ஆன்மீக"வாதியே அல்ல என்பதாலும், உண்மையான ஆன்மீகத் தேடல் உள்ள கதாநாயகன் கந்தனின் ஆன்மீகத் தேடலை விமரிசிப்பது என்னளவில் ஒரு பெரிய விஷயம் என்பதாலுமே ஆகும். உண்மையில் இறை நம்பிக்கை உள்ளவளே நான். ஆன்மீகம் என்பதற்கும் இறை நம்பிக்கை என்பதற்கும் பெருமளவில் வித்தியாசமும் உண்டு. இதில் அனைவரும் எழுதிய விமரிசனங்களுள் என்னை மிகவும் கவர்ந்தது "கண்ணபிரான்" "திரு திராச" மற்றும் "ரத்னேஷ்". எழுதிய விமரிசனங்கள். இதில் ரத்னேஷ் ஓரளவு நான் எதிர்பார்த்த மாதிரி எழுதி இருந்தாலும் அதற்கான சில பதிலை வரும் நாட்களில் தேட முயற்சிக்கிறேன்.

ஏற்கெனவே சிஷ்ய(கோ)கேடிங்க எல்லாம் அரண்டு போய்க் கிடக்காங்க, வரதே இல்லை, தொ(கு)ண்டர்களில், மூத்த தொ(கு)ண்டர் ஆன நம்ம "அதியமான்" "மொக்கைப் பதிவு"க்கே நம்ம ஓட்டும், பின்னூட்டமும் என்று ஸ்டாம்ப் பேப்பரிலேயே எழுதிக் கொடுத்திருக்கிறார். அப்படி இருந்தும் இதைப் போடப் போறேன்னா, எல்லாம், அஜித் லெட்டர்னு தான் சொல்லணும்.

2 comments:

  1. இதில் அனைவரும் எழுதிய விமரிசனங்களுள் என்னை மிகவும் கவர்ந்தது "கண்ணபிரான்" "திரு திராச" மற்றும் "ரத்னேஷ்".


    நன்னி வர்ர்ட்டா

    ReplyDelete
  2. விமர்சனத்திற்கு மீண்டும் என் நன்றிகளைச் சொல்லிக் கொள்கிறேன் கீதாம்மா.

    ReplyDelete