வெளிநாட்டு நாவல் என்றால் தாய், மொழிபெயர்ப்பு, ஆங்கிலம்
இர்விங் வாலஸின் நாவல்கள், அதிலும் முக்கியமாய் The Man, Hitler மனைவி ஈவா பற்றிய ஒரு நாவல், பெயர் நினைவில் இல்லை. துப்பறியும் நாவல்கள் உண்டு என்றால் அகதா கிறிஸ்டிக்கு முதலிடம், அலிஸ்டர் மக்ளீன் நாவல்களும் பிடிக்கும், என்றாலும் ஆங்கிலத்தில் படித்ததில் கண்ணில் நீர் வர வைத்த கதை என்று சொல்லலாம் என்றால் A Stone for Danny Fisher (ஹெரால்ட் ராபின்ஸ்) கதையின் முடிவை இன்னும் மறக்க முடியாது. We have to ignore the vulgarity. :(
17. திரும்பத் திரும்ப படித்த நாவல்கள் எவை?
சந்தேகமே இல்லாமல் பொன்னியின் செல்வனும், தேவனின் அனைத்து நாவல்களும் தான்.
18. படிக்கும் முன்னரோ, படித்த பின்னரோ நாவலின் தலைப்புகள் குறித்து யோசிப்பது உண்டா?
அப்படி ஒண்ணும் யோசிச்சது இல்லை, என்றாலும் தலைப்புக்கும், கதைக்கும் சம்மந்தம் இருக்கானு பார்ப்பேன்.
19. நாவல்களில் வந்த கதாபாத்திரங்களை தங்கள் லட்சிய மனிதர்களாக வரித்துக் கொண்டதுண்டா? அப்படி இருந்தால் குறிப்பிடுங்களேன்.
படிக்கிற வயசில் ஆச்சரியமாய்ப் படிச்சது பொன்விலங்கு சத்தியமூர்த்தியையும்,அப்புறம் கேள்விப் பட்டது குறிஞ்சி மலர் அரவிந்தனையும். நான் முதலில் படிச்சது பொன்விலங்கு. அப்புறமே முதலில் வெளிவந்த குறிஞ்சிமலரைப் படிக்க நேர்ந்தது. என்றாலும் நா.பா.வின் இந்த லட்சியக் கதாநாயகர்கள் ரொம்பநாள் ஆச்சரியத்தில் ஆழ்த்திக் கொண்டிருந்தார்கள். நான் மனமுதிர்ச்சி பெறும்வரை???
20. பிற மொழி நாவல்களுக்கும் தமிழ்மொழி நாவல்களுக்கும் என்ன வித்தியாசங்களை உணர்கிறீர்கள்?
கதைக்களம் மாறுபடும், மொழி மாறுபடுவதால் சில முக்கியமான கலாசார மாறுபாடுகளும் காணப்படும். வழக்கங்கள் மாறுபடும். பொதுவான உணர்வுகள் தவிர
21. உலகின் பிறமொழிகளுக்கு எடுத்துச் செல்லப்பட வேண்டும் என கருதிய தமிழ் நாவல்கள் எவை?
பல நாவல்கள் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப் பட்டுள்ளனவே. என்றாலும் இப்போ சமீபத்தில் ஆனந்த விகடனில் வந்த மல்லி என்ற நாவலும், கல்கியில் வந்த பா.ராகவனின் "கால் கிலோ காதல், அரை கிலோ கனவு" நாவலும் பிறமொழிகளுக்கு எடுத்துச் செல்லப் படவேண்டும். மல்லியின் கதாநாயகி ஆன மல்லியின் உழைப்பை, தெளிவான சிந்தனையை, தீர்க்கமான முடிவை மாணவிகளும், பா.ராகவனின் கதாநாயகனின் விடலைத் தனம் எவ்வாறு மாறுகின்றது, மனமுதிர்ச்சி அடைந்து, காதல் என்னும் மாயா உலகில் இருந்து விலகிப் படிக்க ஆரம்பிக்கின்றான் என்பதையும் அந்தப் பருவ வயதில் இருக்கும் அனைத்து இளைஞர்கள், இளைஞிகளையும் சென்றடைய வேண்டும் என்பதில் ரொம்பவே ஆவலாய் இருக்கின்றது. உளவியல் ரீதியாகவும் இது பயனளிக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. இன்னும் சொல்லப் போனால் பதின்ம வயது ஆண்களின் மனநிலையைக் குறித்த இந்தக் கதையைத் துணைப்பாடமாகவே வைக்கலாம் என்பதும் என் தனிப்பட்ட கருத்து.
22. வாசித்ததில் தங்களது இயல்பு நிலையை வெகுவாக தொந்தரவு செய்த நாவல்கள் எவை?
தலைமுறைகள், 24 ரூபாய் தீவு,
23. கதாபாத்திரங்களின் உரையாடல் எப்படி இருக்க வேண்டும்?
சகஜமாய், பேச்சுத் தமிழிலேயே, அவங்க அவங்க இருப்பிடம், சுற்றுப்புறம், கதைக்களம் சார்ந்தே
24. தாங்கள் இதுவரையில் வாசித்த நாவல்களில் பிடிபடும் பொதுத்தன்மைகள் எவை எவை?
பொதுத்தன்மை??? பொதுத் தன்மை என்று பார்த்தால் கதாநாயகன் என்றொருவன், கதாநாயகி என்றொருத்தியும் இருப்பதே தான் சொல்ல முடியும். ஆனால் கி.ரா. அவர்களின் எழுத்தை எடுத்துக் கொண்டால், கோபல்ல கிராமமே முதன்மை வகிக்கும். ஒவ்வொருத்தருக்கு ஒவ்வொன்று.
25. எந்த நாவல்களைப் படித்ததும், அவற்றை எழுதிய எழுத்தாளரை சந்திக்க வேண்டும் என்று தோன்றியது?
பார்க்கணும்னு எல்லாம் நினைக்கலை.
26. தாங்கள் நாவல்களை தொடர்ந்து ஒரே மூச்சில் படிப்பீர்களா? அல்லது விட்டு விட்டு பல்வேறு சமயங்களில் படிப்பீர்களா?
நேரம் கிடைப்பதைப் பொறுத்தே இது அமையும். என்றாலும் சில சமயம் துப்பறியும் கதைகளை முடிவு தெரியும் வரையில் கிடைக்கும் நேரத்தில் எல்லாம் படிப்பது உண்டு.
27. உள்ளடக்கத்திற்காக மட்டுமின்றி மொழிநடைக்காகவே லயித்துப் படிப்பது யார் யாருடைய நாவல்களை?
கி.ராஜநாராயணன், தி.ஜானகிராமன், பி.வி.ஆர்
28. கதாபாத்திரங்களின் இயல்பு மீறி, நாவலாசிரியரே வலிந்து பேசுவது போல தோன்றியிருக்கிறதா. அப்படியானால், அந்த நாவல்கள் பற்றி உங்கள் அபிப்ராயம் என்னவாகிறது?
சிலவற்றில் அவ்வாறு தோன்றும். என்றாலும் இப்போ நானும் ஏதோ கிறுக்க ஆரம்பிச்சதும், அது சிலரால் தவிர்க்கமுடியலை என்று தெரிகிறது. இந்தப் பதிவுகள் இரு பகுதிகளாய் வந்திருக்கிறதிலேயே தெரியுமே!

29. நாயகத் தன்மையற்ற நாவல்களைப் படித்திருக்கிறீர்களா? குறிப்பிடுங்களேன்.
கி.ராஜநாராயணன் அவர்களின் கோபல்ல கிராமத்தில் கிராமம் தானே கதாநாயகத் தன்மை வகிக்கின்றது. கிராமத்து அனைத்து மக்களும் பங்கு பெறுவார்கள். இல்லையா? ம்ம்ம்ம்ம்??? சுஜாதாவின் ஜீனோ??? அந்தக் கதையில் அது தானே நாயகன்?? அது கணக்கில் வராதுனு நினைக்கிறேன்.
30. கவிதை, சிறுகதைகளைத் தாண்டி, நாவல்கள்தான் இலக்கியத்தின் உச்சம் என்று
கருதுகிறீர்களா?
இலக்கியம் என்ற நிர்ணயம் நம்மால் செய்யப் படுவது தானே?? தவிர, ஒரு கவிதையிலும் மொத்தக் கதையையும் சொல்ல முடியும். சிறுகதைகளும் அதே தளத்தில் இயங்கும். சிறந்த சிறுகதை எழுத்தாளர் ஆன பி.எஸ்.ராமையாவின் கதைகளைப் படித்தாலே போதும். சொல்லப் படும் கருத்தே முக்கியம்.
31. தாங்கள் கடைசியாக படித்த தமிழ்நாவல் எது?
ம்ம்ம்ம்ம்ம்??? இப்போ ஒரு வருஷமா எதுவும் படிக்கலை. ஹூஸ்டனில் படிச்சது தான்.
32. நாமும் ஒரு நாவல் எழுதவேண்டும் என்று உங்களுக்குத் தோன்றுவதுண்டா?
அட, நான் எழுதற பதிவுகளே நாவல் அளவுக்குப் பெரிசா இருக்கேனு கத்திட்டு இருக்காங்க, இந்த தண்டனை வேறேயா???

33. நாவல்கள் எழுதத் தோன்றினாலும் ஏன் இதுநாள் வரையிலும் எழுதவில்லை?
அதெல்லாம் யாரையும் தண்டிக்கவேண்டாமேனு ஒரு தாயுள்ளத்தோடு தான் வேறே என்ன???
இங்கே பார்க்கவும்.