
கண்ணை மூடினால் கண்ணன் வந்து தன்னைக் கொல்லுவதாய்த் தோன்றியது கம்சனுக்கு. அந்தப்பிள்ளையை அவன் பார்த்ததே இல்லை. என்றாலும் ஒருவேளை தேவகியின் மகனாய் இருக்கக் கூடும் என்ற சாத்தியமே போதுமானதாய் இருந்தது. கனவிலும், நனவிலும், , வந்து தொந்திரவு கொடுத்தான் அந்தச் சிறுவன். எக்காளமிட்டுச் சிரித்தான். கம்சனுக்கு அன்றிரவு தூக்கமே இல்லை. தூங்க முற்படும்போதெல்லாம் கெட்ட கனவு கண்டு விழித்து எழுந்தான். சுற்றும், முற்றும் பார்த்துக் கொண்டு தன் அரண்மனையில் தன் பிரத்யேகப் படுக்கை அறையில் காவலாளிகள் காவல் காக்கத் தூங்குவதை நிச்சயம் செய்து கொண்டான். இரவுப் பொழுது கழிந்து மறுநாள் காலை புலர்ந்தது. கம்சன் மரணப்படுக்கையில் இருக்கும் தன் முதல் மந்திரியான ப்ரலம்பாவை அன்று எப்படியேனும் சென்று பார்த்துவிடுவது என நிச்சயம் செய்து கொண்டான். காலைக்கடன்களை முடித்துக் கொண்டு நடக்கவோ, நிற்கவோ முடியாமல் பக்கவாதம் வந்து படுத்த படுக்கையில் இருக்கும் முதன்மந்திரியைக் காணத் தன் ரதத்தில் சென்றான். தன்னுடன் ப்ரத்யோதாவை மட்டும் அழைத்துச் சென்றான்.அங்கே படுத்துக்கிடக்கும் ப்ரலம்பாவைக் கண்ட கம்சனுக்குத் தூக்கிவாரிப் போட்டது. அரை நினைவோடு இருந்த மந்திரியைக் கண்டு கூட கம்சன் தன் காரியத்தையே குறியாக நினைத்தான்.
ப்ரத்யோதாவை வெளியே காவலுக்கு நிறுத்திவிட்டு ப்ரலம்பாவின் வீட்டு மனிதர்களையும், மற்றவர்களையும் அறைக்கு வெளியே அனுப்பினான். அவனுக்கு இருந்த ஆத்திரத்திலும், அவசரத்திலும் என்ன செய்கின்றோம் என்றே அறியாமல் அரை நினனவில் இருந்த அந்த மனிதனைப் போட்டு உலுக்கிச் சுயநினைவுக்குக் கொணர முனைந்தான் கம்சன். ஆனால் அவனோ, கண்ணைத் திறப்பதும், மீண்டும் மயங்குவதுமாகவே இருந்தான். கடும் பிரயத்தனத்தின் பேரில் ப்ரலம்பன் தன் கண்களைத் திறந்து பார்த்து கம்சனைப் புரிந்து கொண்டதற்கு அடையாளமாகத் தன் கைகளைக் கூப்பி வணங்க முற்பட்டான். கம்சன் விடவில்லை. இவனிடம் எப்படியாவது உண்மை என்ன என்று தெரிந்து கொள்ளவேண்டுமே?
“ப்ரலம்பா, நான் யார் தெரிகிறதா? பேசுவது காதில் விழுகிறதா?”
மேலும் இருமுறை கேட்டதும், ஒரு சிறிய கண்ணசைவினாலும், மெல்லிய குரலினாலும் ப்ரலம்பன் பதில் கொடுத்தான்
“ப்ரலம்பா, நன்றாய்க் கேள், யாரோ கிருஷ்ணனாமே? நந்தனின் மகனாமே? உனக்கு அவனைப் பற்றி ஏதாவது தெரியுமா? அப்புறம் ரோஹிணிக்கும் ஒரு மகன் பிறந்திருக்கிறானாமே? பலராமன் என்று பெயராமே? கேள்விப் பட்டாயா?”
“ம்ம்ம்ம்” மெல்லிய முனகல் ப்ரலம்பனிடமிருந்து. “ஆஹா, அதுவும் அப்படியா, ப்ரலம்பா, இந்தக் கிருஷ்ணன் தானே பூதனையையும் திரிணாவிரதனையும் கொன்றது?” மீண்டும் மெல்லிய குரலில், “ம்ம்ம்ம்ம்ம்” என்றே பதில் வந்தது.
“அந்தக் கிருஷ்ணன் இப்போது பலசாலியாகவும், மிகவும் அழகாயும், அனைவரையும்கவரும் வண்ணமும் வளர்ந்திருக்கிறானாமே? அதுவும் அறிவாயா?”
“ம்ம்ம்ம்ம்ம்” மீண்டும் அதே குரல் ப்ரலம்பனிடமிருந்து. கம்சன் பல்லைக் கடித்தான். கடித்த பற்களினூடே கேட்டான்.” கிருஷ்ணனிடம் எல்லா கோபர்களும், கோபிகளும் உயிரையே வைத்திருக்கின்றார்களாமே? “
“ம்ம்ம்ம்ம்ம்ம், ஆம்”
“காலியன் என்ற கொடிய விஷநாகத்தைக் கூடக் கட்டி அடக்கிவிட்டானாமே?”
“ஆம் ஐயா” மிக மிக மெல்லிய குரலில் ப்ரலம்பன் சொல்கின்றான்.
அவ்வளவு தான், பாய்ந்தான் கம்சன். “முட்டாளே, அடி முட்டாளே, என்ன செய்து கொண்டிருந்தாய் இவ்வளவு வருஷங்களாய்? அவனை இவ்வளவு ஆகிருதியுடன் பலவானாக, இளைஞனாக வளரும்வரையில் நீ என்ன செய்தாய்? எப்படி அனுமதித்தாய்?” கம்சனின் கோபம் எல்லை மீறியது. ஆஹா, இவன் மரணப்படுக்கையில் இருந்தால்தான் என்ன? இவனைக் கொன்று விடலாமா? கம்சனின் கைகள் பரபரத்தன ப்ரலம்பனைக் கொல்வதற்கு.
அவனுடைய மந்திரியோ ஓரளவு தூக்க முடிந்த இடக்கையைத் தூக்கிக் கையை விரித்து, “நான் என்ன செய்திருக்க முடியும்?” என்று கேட்டுவிட்டு மீண்டும் கண்களை மூடிக் கொண்டான். இரக்கமற்ற கம்சனோ அவனைப் போட்டு உலுக்கு உலுக்கு என உலுக்கினனன். மீண்டும் பிரயத்தனத்துடன் கண்களைத் திறந்து பார்த்தவனைக் கம்சன், “இவனைப் பற்றிய தகவல்கள் உனக்கு வந்தனவா இல்லையா?” என்று கேட்டான். “ஆம் , வந்தன” என்றான் ப்ரலம்பன். “ அப்படியா? அப்படி என்றால் இந்தப் பையன் விருந்தாவனத்து கோபர்களையும் மற்ற மக்களையும் இந்திரவிழாவுக்குப் பதிலாக தன்னைத் தானே கடவுள் ஆக்கிக் கொண்டு தனக்குத் தானே விழா எடுத்துக் கொண்டான். அப்படித் தானே?”
அவ்வளவு உடல் பலஹீனத்திலும் கடுமையாக மறுத்தான் ப்ரலம்பன். “இல்லை, ஐயா, இல்லை” என்றான்.
“சரி, அப்படியே இருக்கட்டுமே, ஆனால் அவன் பசுக்களையும், மரங்கள், மலைகளையும், முக்கியமாய் கோவர்தனத்தையும் வழிபட்டு விழாவை மாற்றினான் இல்லையா? அது அவன் வேலை தானே?”
“ஆம்”
“ஏன் என்னிடம் சொல்லவே இல்லை?”
பேசமுடியாத ப்ரலம்பன் ப்ரத்யோதாவை நோக்கிக் கை காட்ட, கம்சன், “ஓ ப்ரத்யோதாவுக்குத் தெரியும் என்கின்றாய், அப்படித் தானே?” என்று கேட்க, ப்ரலம்பன், “ஆம்” என்று பதில் சொன்னான். “ம்ம்ம்ம்ம்ம்ம் அப்போ, கிருஷ்ணனும் சேர்ந்து வழிபடப் பட்டிருக்கிறான் அந்த விழாவில், அதுவும் உண்மை, அப்படித் தானே?” கம்சன் அதட்டினான். ஆனால் ப்ரலம்பன் வாயைத் திறக்கவே இல்லை. “”””’ம்ம்ம்ம்ம்., இந்தக் கிருஷ்ணன் தான், முரட்டுத் தனம் நிறைந்தது என்றும் பைத்தியமோ எனவும் சொல்லப் பட்ட காளை அரிஷ்டனையும், முரட்டுக் குதிரை கேசியையும் கொன்றதும் இவன் தானோ? ப்ரத்யோதாதான் அதை ஏற்பாடு செய்திருந்தான் அல்லவா?” ப்ரலம்பன் தனக்கு அது பற்றி எதுவும் தெரியாது எனச் சைகை மூலம் தெரிவித்தான். கம்சனுக்கு மீண்டும் எல்லை மீறிய கோபம் கொந்தளித்தது.
தன் கோபத்தை அடக்கவே முடியாமல் அவன் அந்த இறந்து கொண்டிருக்கும் மனிதனிடம் சொல்கின்றான்:” இதோ பார் ப்ரலம்பா, நீ மட்டும் எனக்கு முப்பத்தைந்து வருஷங்களுக்கு மேல் சேவை செய்திருக்காவிட்டால் இந்நேரம் நான் உன்னைக் கொன்றிருப்பேன். அதுவும் இதோ இந்த நிமிஷமே, என் வெறும் கைகளாலே உன்னைக் கொல்ல வேண்டும்போல் உள்ளது. உன்னை நம்பி என் அரசுப் பொறுப்பையும், அரசு நிர்வாகத்தையும் ஒப்படைத்ததற்கு நீ என்னை நன்றாக ஏமாற்றிவிட்டாய். உன்னுடைய பலஹீனத்தினால் என்னுடைய யாதவத் தலைவர்கள் இன்று ஒன்று கூடி என்னை எதிர்க்கும் வல்லமை பெற்றிருக்கின்றனர். இவர்களை நான் இங்கு இருக்கும்போது நசுக்கிக் கொண்டிருந்தேன். இன்று துளிர்த்துவிட்டனர். எல்லாவற்றிற்கும் மேலாக நீ இந்தக் கிருஷ்ணனை இடைச்சிறுவனை இவ்வளவு தூரம் வளரும்படிச் செய்துவிட்டாய். அவனுடைய வல்லமையைப் பார்த்தால் இந்த மதுராபுரி மக்கள் அவன் தான் தங்களைக் காக்க வந்த கடவுள் என்று எண்ண ஆரம்பித்துவிட்டார்களோ என்று தோன்றுகிறது. ப்ரலம்பா, நீ என்னை ஏமாற்றிவிட்டாய்.”
ப்ரலம்பன் மிகுந்த கஷ்டத்துடன் தன் இருகைகளையும் கூப்பிக் கம்சனை வணங்க முற்பட்டான். பல்லைக் கடித்த கம்சன், “போலி வேஷதாரியே, நிறுத்து உன் வேஷத்தையும், நாடகத்தையும். உனக்கு என்னிடம் விசுவாசம் என்பதே கிடையாது. இரு, இரு, உனக்குக் கொஞ்சமாவது விசுவாசம் இருந்தால் இந்த ஒரு விஷயத்தை மட்டுமாவது சொல்லு. இதுவே உன்னிடம் நான் கேட்கும் கடைசி உதவி.” என்றான். ப்ரலம்பன் என்ன என்பது போலப் பார்த்தான். கம்சன் குனிந்து மிக மிக மெதுவாக ரகசியக்குரலில் கிசுகிசுப்பாகக் கேட்டான், “ இவன், இவன் , இந்த நந்தனின் மகன் என்கின்றார்களே, இவன் தான் தேவகி பெற்ற எட்டாவது பிள்ளையா?? “ அவன் கேட்டது என்னமோ மெதுவாய்த் தான். ஆனால் ப்ரலம்பனுக்கு அது ஒரு மிரட்டலாகவே தொனித்தது. அவன் வாயே திறக்கவில்லை.
“ஆஹா, பேசு, ப்ரலம்பா, பேசு, ஒரு பிராமணன் ஆன உன்னைக் கொல்லவேண்டும் என்ற என் ஆவலைக் கட்டுப் படுத்திக் கொண்டிருக்கிறேன். இந்தக் கேள்விக்கு நீ பதில் சொல்லவில்லை என்றால், நீ ஒரு பிராமணன் என்றும் பார்க்காமல் கொன்றே விடுவேன். சொல், அவன் தேவகியின் எட்டாவது பிள்ளையா?”
மிகுந்த கஷ்டத்துடன், சிரமத்துடன், தன் தலையையும் ஆட்டி, வாயினாலும், “ஆம்” என்று சொல்வதற்குள் ப்ரலம்பன் பட்ட கஷ்டம் அவனுக்கு மட்டுமே புரியும். “துரோகி, பச்சைத் துரோகி, என் உப்பைத் தின்றுவிட்டு எனக்கே துரோகமா செய்தாய்? நன்றி கெட்டவனே, ஏன் என்னிடமிருந்து மறைத்தாய் இந்த விஷயத்தை, சொல், இப்போதே சொல்.” உலுக்கினான் கம்சன் ப்ரலம்பனை. ப்ரலம்பனுக்கு உடல் ஆட்டம் கண்டு விட்டது. ஏற்கெனவே நோயின் கடுமையால் ஆட்டம் கண்டிருந்த உடல் இப்போது கம்சனால் மிகவும் தளர்ந்துவிட்டது. அவனால் கண்களையும் திறக்கமுடியவில்லை, பேசவும் முடியவில்லை. ஆனால் கம்சனும் விடவில்லை. மீண்டும், மீண்டும் உலுக்கிக் கேட்டான். ஏன், ஏன் ஏன்” இதுதான் கம்சனின் கேள்வி, மிகுந்த ப்ரயத்தனத்துடன் இது தான் தன்னுடைய கடைசி வார்த்தை என்பது போல் கஷ்டத்துடனேயே ப்ரலம்பன் சொன்னான். “ ஏன் என்றால், என்றால் மரியாதைக்குகந்த, முக்காலமும் தெரிந்த வியாசர் சொன்னார், இவன் அந்த வாசுதேவனே, சாட்சாத் மஹாவாசுதேவன்!" வாசுதேவன் என்ற உச்சரிப்பைச் சொன்ன மாத்திரத்தில் ப்ரலம்பனின் தலை சாய்ந்தது. தொண்டையில் இருந்து “க்ளக்” என்னும் ஒரு சப்தம் மாத்திரமே வந்தது. அப்புறம் அவனிடம் அசைவே இல்லை. கம்சன் அவனை பார்த்து மிரண்டான். ப்ரலம்பன் இறந்துவிட்டான். மரணம் ப்ரலம்பனுக்கு ஏற்பட்டதை நேரில் பார்த்ததினால் ஏற்பட்ட பயம் இன்னும் அதிகரித்து அதிலிருந்து விடுபட முடியாமல் இப்போதே தன்னையும் மரணம் துரத்துகின்றதோ என்ற பய உணர்வோடேயே அங்கிருந்து வேகமாய்ச் சென்றான் கம்சன்.