எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Saturday, September 26, 2009

நவராத்திரி நாயகி - சரஸ்வதி!

சரஸ்வதி: புராணங்களில் பிரம்மாவின் மனைவி எனக் கூறப்படும் இவளைப் படைத்தவனே பிரம்மா தான் என்றும், பிரம்மாவின் உடலில் இருந்து இவள் தோன்றியதாகவும் கூறப்படுகிறது. இவளின் மற்ற பெயர்கள், சாவித்திரி, காயத்திரி, பிராமணி ஆகியன. ஒவ்வொரு சமயத்தில் ஒவ்வொரு உருவம் எடுத்துப் பூஜிக்கப் படுகின்றாள். ரிக் வேதம் சரஸ்வதி ஸூக்தத்தில் உலகின் ஆதிகாரணி என இவளைப் போற்றுகிறது. சரஸ்வதி வடிவங்கள் தாராபூஜையில் வழிபடப் படுகின்றன. எட்டுவிதமான சரஸ்வதி வடிவங்களை வழிபடுகின்றனர். அவை வாகீஸ்வரி, சித்ரேஸ்வரி, துளஜா(சியாமளா), கீர்த்தீஸ்வரி, அந்தரிட்ச சரஸ்வதி, கட சரஸ்வதி, நீல சரஸ்வதி, கினி சரஸ்வதி ஆகியன. கட சரஸ்வதியை வழிபட்டு தண்டி மகாகவியும், சித்ரேஸ்வரியை வழிபட்டு சாலிவாகன மன்னனும், சியாமளாவாக வழிபட்டு காளிதாசனும் பெருமை பெற்றிருக்கின்றனர் என்று சரஸ்வதி மஹாத்மியம் சொல்லுகிறது.

இவளே சரஸ்வதி என்னும் நதியாகவும் ஓடினாள். சரஸ் என்னும் பெயருக்குத் தடையில்லாமல் தெரியும் ஒளி என்றும் அர்த்தம் உண்டு. கலைகளைத் தடையின்றிப் பிரவாஹிக்கச் செய்யும் சக்தியும் இவளிடம் இருப்பதாலேயே சரஸ்வதி என்னும் பெயர் உண்டாயிற்று. இவள் நதியாக ஓடியதற்கு ஒரு காரணம் உண்டு. ததீசி முனிவரிடம் தேவர்களின் ஆயுதங்கள் கொடுத்து வைக்கப் பட்டிருந்தன. நீண்ட காலம் தேவாசுர யுத்தம் நடைபெற்று வந்த சமயம் அது. தேவர்கள் தோற்றுப் போகும் சமயமாக இருந்தது. வலிமையும், சக்தியும் வாய்ந்த பல ஆயுதங்களையும் அசுரர்களிடம் இழக்க மனமில்லாத தேவர்கள் ததீசி முனிவரிடம் ஆயுதங்களைக் கொடுத்து வைக்க அவரும் மறைத்து வைக்கிறார். காலதேச வர்த்தமான மாற்றங்களால் தேவர்களும் மறைந்து வாழவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுவிட அவர்களும் அசுரர்கள் கண்களில் படாமல் மறைந்தே வாழ்கின்றனர். அப்போது விருத்தாசுரன் தேவர்கள் இருக்கும் இடத்தைக் கண்டுபிடித்துவிட அவனோடு போர் செய்யும் கட்டாயத்தின் பேரில் தேவர்கள் வெளியே வந்தாகவேண்டி இருக்கிறது.

வந்த தேவர்கள் தங்கள் ஆயுதங்களை ததீசி முனிவரிடம் கேட்க, நீண்ட நெடுநாட்கள் அவர்கள் வராத காரணத்தால் ஆயுதங்களைக் கரைத்துக் குடித்துவிட்டதாய்ச் சொல்லுகின்றார் ததீசி முனிவர். ஆயுதங்கள் இல்லாமல் தவித்த தேவர்களின் நிலை கண்ட முனிவர் தம் உயிரைப் பிராணத்தியாகம் செய்து, தன் முதுகெலும்பில் இருந்து தேவேந்திரன் ஆயுதம் செய்து கொள்ளச் சம்மதிக்கிறார். தானே தன் உயிரைப் போக்கிக் கொள்ளும் வல்லமை கொண்ட மகரிஷியாதலால் அவ்வண்ணமே தன் உயிரையும் போக்கிக் கொள்ளுகிறார். அவருடைய எலும்பில் இருந்து வஜ்ராயுதம் செய்யப் பட்டு இந்திரனுக்கு முக்கிய ஆயுதமாகிறது. இங்கே ரிஷியின் மனைவி ப்ராதி பூரண கர்ப்பிணி. தன் கணவன் தன் உயிரைப் போக்கிக் கொண்ட தகவல் அறிந்த அவள் தானும் உடன்கட்டை ஏற முடிவெடுக்கிறாள். ஆனால் தன் வயிற்றில் வளரும் சிசுவுக்கு எந்தவிதமான ஹானியும் ஏற்படக் கூடாது என முடிவு செய்து தன் தவ வலிமையாலும், தன் பதிவ்ரதா வலிமையாலும் அந்தச் சிசுவை வெளியே எடுத்து வனதேவதைகளையும், வன மூலிகைச் செடி,கொடிகளையும், இன்னும் நதிகள், மலைகள், மற்றத் தாவரங்கள் போன்ற வனவளங்களை வேண்டிக் கொண்டு அங்கிருந்த பெரிய அரசமரத்திடமும் வேண்டிக் கொண்டு அந்தச் சிசுவை அங்கே விடுகிறாள். அதன் பின்னர் அவள் உடன்கட்டை ஏறித் தன் உயிரைத் தானும் போக்கிக் கொள்கிறாள். அரசமரம் வளர்த்த சிறுவன் “பிப்பலாதன்” என்னும் பெயருடன் வளர்ந்துவந்தான்.

வளர, வளர அவனுக்குத் தேவர்களுக்கு உதவி செய்யவேண்டித் தன் தந்தையும், தந்தையுடன் தாய் உடன்கட்டை ஏறினதும் தெரியவருகிறது. தேவர்களிடம் விரோத பாவம் மேலிட அவன் தேவர்களைப் பழிவாங்க நினைக்கிறான். பிரம்மாவின் அருள் பெற்று ஈசனைக் குறித்துத் தவம் செய்கின்றான். தேவாதிதேவர்களை அழிக்கவேண்டிய ஆற்றலைத் தருமாறு ஈசனிடம் வேண்டுகிறான். அவனுடைய பலத்தைச் சோதிக்க எண்ணிய ஈசனோ, தன் நெற்றிக்கண்ணைத் தான் திறக்கப் போவதாயும், அதைத் தாங்கும் வல்லமை அவனுக்கிருந்தால் கேட்ட வரம் தானாகவே கிட்டும் என்றும் சொல்லுகின்றார். நெற்றிக்கண்ணின் வல்லமை தாங்காமல் மீண்டும் தவம் செய்கிறான் பிப்பலாதன். இம்மாதிரி இன்னும் இருமுறைகள் அவனைச் சோதித்துவிட்டு தன் நெற்றிக்கண்ணை அவனையே திறக்கச் சொல்லுகிறார் ஈசன். பிப்பலாதனும் நெற்றிக்கண்ணைத் திறக்கிறான். இவனையும் ஈசனின் ஓர் அவதாரம் எனக் கருதுவோர் உண்டு.

நெற்றிக் கண் திறந்ததும், அதிலிருந்து உக்கிரமான வெப்பத்துடன் கூடிய ஒரு தீக்கொழுந்து தோன்ற அதைப்பிப்பலாதனிடம் கொடுத்து இந்தத் தீக்கொழுந்து அனைத்து உலகையும் அழிக்கவல்லது என்றும் சொல்லுகிறார். பிப்பலாதனும் தேவர்களைத் துரத்துகிறான். தேவர்கள் பிரம்மாவைச் சரணடைகின்றனர். தேவர்களை அழிக்கக் காத்திருந்த பிப்பலாதனுக்கு வாழ்வின் ஏற்றத் தாழ்வுகளையும், ஜனனம், மரணம் ஆகியவற்றையும் பற்றிய தத்துவங்களை விரிவாக எடுத்துரைத்தார் பிரம்மன். மேலும் சொன்னார்:” தேவர்களின் நன்மைக்காக வேண்டி உன் தந்தை தானாகவே மனம் விரும்பி உயிர் துறந்தார். நீயானால் தேவர்களை அழிக்கக் கிளம்பியுள்ளாய். இதோ புஷ்பக விமானத்தில் உன் தந்தையை இங்கே வருவிக்கிறேன். நீயே கேட்டுக் கொள்.” என்று கூறிவிட்டு ததீசி முனிவரையும், அவர் மனைவியையும் அங்கே வரவழைக்க உண்மை தெரிந்த பிப்பலாதன் மனம் அமைதி அடைகிறது. ஆனால் இந்தத் தீக்கொழுந்தை என்ன செய்வது? அதை எப்படி அழிப்பது? ஒவ்வொருவரும் ஒவ்வொரு யோசனை சொன்னார்கள். அப்போது ஈசனால் எழுப்பப் பட்ட அந்த அக்னியே குரலெடுத்துச் சொன்னது:”என்னை ஒரு தங்கக் கலசத்தில் வைத்து சமுத்திரத்தில் விட்டுவிடுங்கள். நான் சமுத்திரத்தின் உள்ளே சென்று விடுகின்றேன். வடவாமுகாக்கினியாய் அங்கேயே இருப்பேன். உங்களை எல்லாம் அழிக்க மாட்டேன், எனக்கு வேண்டிய இரைகள் அங்கேயே கிடைக்கும்.” எனச் சொல்ல அவ்வாறே முடிவு செய்யப் பட்டது.

சரஸ்வதியைப் பற்றிய செய்தி நாளையும் தொடரும். அனைவருக்கும் சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை நல்வாழ்த்துகள்.

4 comments:

  1. நான் ததிசீ முனிவர் கிட்ட விஷணு போய் இந்திரனை அவரோட ஹட்டியை கேட்க சொன்னதாவும், இந்திரனுக்கு உலக க்ஷேமம் கருதி தன்னை த்யாகம்பண்ணிமுதுகு எலும்பை கொடுத்ததா குழந்தகளுக்கு sacrifice, altruism ங்கற moral value , நிஷ் காம ஃபல கர்மா க்கு எடுத்துக்காட்டா சொல்வேன்.பிப்பலாதன் ருத்ரனின் அம்சம் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.இந்த மற்ற விஷயங்கள் தெரியாதே!!. ம் அப்புறம் என்ன ஆறது?

    ReplyDelete
  2. நவராத்திரி நாயகி சரஸ்வதி கலைகளை
    தடையின்றி அருளட்டும்.


    நன்றி கீதா,
    சரஸ்வதிப் பற்றி நிறைய
    விஷயம் தெரிந்துக் கொண்டோம்.

    ReplyDelete
  3. மிக்க நன்றி, இத் தொடரின் மூலம் பல விசயங்களை அறிந்துகொண்டேம்.

    ReplyDelete
  4. பின்னூட்டம் இட்ட அனைவருக்கும் நன்றி. தனித்தனியாய்ப் பதில் சொல்ல முடியலை! :(

    ReplyDelete