எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Tuesday, September 15, 2009

கண்ணன் வருவான், கதை சொல்லுவான் - வசுதேவரும் தேவகியும்!

தேவகியை நாம் பலநாட்கள் கழிச்சுப் பார்க்கிறோம். ரொம்ப இளைச்சுப்போய் முப்பது வயதிலேயே தலையும் நரைத்துப் போய் கண்களில் உயிரை வைத்துக் கொண்டு, தன்னுடைய மகன் எப்போ வருவான், தங்கள் அனைவருக்கும் மீட்சியைக் கொடுப்பான் என எதிர்பார்ப்புடன் இருக்கிறாள். அடுத்தடுத்துத் தான் பெற்ற ஆறு குழந்தைகளைக் கண்ணெதிரே கொல்லப்படுவதைக் கண்டவள். அவள் இதயம் என்ன இரும்பா? இல்லை கல்லா? எப்படித் தாங்கினாள்? கேட்கத் தோன்றுகிறது அல்லவா? எந்தத் தாய்க்கும் நேராத சோகம். அதோடு மட்டுமா? ஏழாவது குழந்தை பிறக்கும் முன்னரே வலுக்கட்டாயமாய் வெளியே எடுக்கப் பட்டு அவள் கணவனின் மற்றொரு மனைவியிடம் வளர்க்கக் கொடுக்கப் பட்டது. எட்டாவது குழந்தையோ பிறந்தே ஆகவேண்டும், அதை உடனே கொல்லவேண்டும் என்றே கம்சனின் திட்டம். அதற்காக அல்லும், பகலும் கண்காணிக்கப் பட்டாள். தூங்கும்போதும், விழித்திருக்கும்போதும் அவளுக்குத் தனியே இருக்கச் சுதந்திரம் இல்லை. இறை அருளாலேயே அன்றிரவு மழையும், இடியுமாக வந்து அவளைப் பூதனையின் கழுகுப் பார்வையிலிருந்து காத்துக் குழந்தையையும் கோகுலத்துக்கு அனுப்ப முடிந்தது. ஆனால் ஏன் இப்படி? ஒரு இளவரசியாக இருந்தும் ஏன் இப்படித் துன்புற்றாள்? அனைவரும் கேட்கும் கேள்வி இது!


இந்த தேவகி படும் துயரம் சகிக்க முடியாத ஒன்று. கண்களின் எதிரே அடுத்தடுத்துத் தான் பெற்றெடுத்த குழந்தைகள் கொல்லப் பட்டு சோகத்தை அனுபவித்து, எட்டாவது குழந்தையைப் பெற்றெடுக்கவேண்டும் என்ற ஒரே லக்ஷியத்தோடு வாழ்ந்தாள். சிலர் கேட்கின்றனர். புத்திசாலித் தனமான கேள்வியாய்ப் பார்க்கும்போதும், கேட்கும்போதும் தெரியும். வசுதேவரையும், தேவகியையும் ஏன் கம்சன் சேர்த்தேச் சிறையில் அடைத்தான்?? தனித் தனியாய்ப் பிரித்து வைத்திருக்கலாமே என்று கேட்கின்றனர். ஆனால் இறைவனின் படைப்புக்கும் இம்மாதிரியான காரியங்களுக்கும் காரணம் இல்லாமல் போகாது. தேவகியும், வசுதேவரும் இம்மாதிரியான ஒரு துக்கத்தை அனுபவிக்க வேண்டும் என்பது அவர்களுக்கு விதிக்கப் பட்ட ஒன்று. இதை அறிந்து கொள்ள இன்னும் கொஞ்சம் பின்னால் போய்ப் பார்க்கவேண்டும். காச்யபர் ஒரு ரிஷி. தக்ஷனின் மகள்களான திதி, அதிதி இருவரையும் காச்யபருக்குத் திருமணம் செய்து கொடுத்தான் தக்ஷன். அக்காள் தங்கைகள் தான் என்றாலும் இருவருமே ஒற்றுமை இன்றியே இருந்தனர். அதிதி என்பவள் இளையவள். அவளுக்கு வெகு விரைவில் குழந்தை பிறந்தது. அவனே தேவர்களுக்குத் தலைவனாய் இருப்பான் என்றும் இந்திர பதவி வகிப்பான் என்றும் தெரிய வந்தது.

திதிக்குக் குழந்தை பிறக்கவில்லை. தன் தங்கை அதிதிக்குக் குழந்தையும் பிறந்து மஹா பராக்கிரமசாலியான இந்திரனாகவும் அது ஏற்பட்டதை அறிந்து சற்றுப் பொறாமையுடனேயே காச்யபரிடம் போய்ப் பிள்ளை வரம் கேட்டாள் திதி. இந்திரனைப் போன்ற சகல உலகங்களும் போற்றும் வண்ணம் ஒரு குழந்தையை வேண்டினாள். அவளை தேவிக்கு விரதம் இருக்கச் சொன்னார் காச்யபர். முறைப்படி விரதம் இருந்தாள் திதி. உரிய நாளில் கருவுற்றாள். அவள் கருவுற்றதைக் கேள்விப் பட்ட அதிதிக்குப் பொறாமை மேலோங்க, நெஞ்சில் வஞ்சம் ஏற்பட்டது. தன் உடன் பிறந்த அக்காவாகவே இருந்தாலும் அவள் மகன் தன் மகனை விட மேலோங்கி இருப்பதை அவளால் பொறுக்கமுடியாது போல் இருந்தது. ஆகவே தன் மகனான இந்திரனை அழைத்து, “உன் பெரியம்மாவின் வயிற்றில் வளரும் குழந்தை உனக்கு எதிரியாகி விடுவான். உன் இந்திர பதவிக்கும் ஆபத்து ஏற்படும். சகல உலகும் திதியின் குழந்தையைப் போற்றிப் புகழும்.” என்று கூறி வருந்தினாள். தாயின் துயர் கண்ட இந்திரன் பதவி ஆசையால் இயல்பாய்ப் பெரிய தாயாரிடம் ஏற்பட்ட பாசத்தைக் கூட மறந்து அவள் சிசுவைக் கர்ப்பத்திலேயே கொன்றால் என்ன என்று எண்ணினான். இதை எவ்விதம் முடிப்பது என யோசித்து திதியிடம் சென்றான். திதி மிகச் சிறந்த தேவி பக்தை. தேவிக்கு வழிபாடுகள் செய்யும் அவளுக்கு உதவிகள் செய்வது போல் நடித்துப் பணிவிடைகள் செய்தான் இந்திரன். திதியும் அதை உண்மையான அன்பு என எண்ணி இருந்தாள்.

ஒருநாள் வழிபாட்டின்போது விரதம் இருந்த அசதியாலும், கர்ப்பிணிகளுக்கே இயல்பான தளர்ச்சியாலும் திதி தன்னை மறந்து தூங்கினாள். தூங்கும்போது அவள் வாய் சிறிதே திறந்திருந்தது. இந்திரன் தன் சக்தியால் மிகச் சிறிய வடிவெடுத்து அவள் வாயின் வழியாக உள்ளே நுழைந்து கர்ப்பைப் பையை அடைந்து கர்ப்பத்தைச் சிறு சிறு துண்டுகளாக ஆக்கிக் கொன்றான். பின்னர் வெளியேறித் தன் தாயிடம் சென்று வெற்றி வீரனாய்த் தான் வந்திருப்பதைப் பெருமையுடனும் மகிழ்வுடனும் தெரிவித்தான். அவன் தாயும் மகனின் திறமையை எண்ணி மகிழ்ந்தாள். அப்போது கர்ப்பம் கலைந்ததால் கண் விழித்த திதி தன் தங்கையிடம் தன் துயரத்தைச் சொல்லி அழவேண்டும் என எண்ணிச் சென்றபோது தாயும், மகனும் பேசி மகிழ்ந்ததைக் கேட்டு மனம் மிகவும் நொந்து போனாள். தன் உடன் பிறந்த தங்கையே தன் குழந்தைக்கு எமனாய் வந்ததை எண்ணிக் கதறி அழுத வண்ணமே அவள் தன் தங்கையிடம், “என் குழந்தையைக் கர்ப்பத்திலேயே கொன்ற நீ, உன் குழந்தைகள் பிறந்ததுமே அடுத்தடுத்துக் கொல்லப் படுவதைக் கண் முன்னால் காண்பாய்! நீ பெற்ற குழந்தைகளை உன்னால் வளர்க்க முடியாமல், பாலூட்டிச் சீராட்டித் தாலாட்ட முடியாமல் குழந்தையை எண்ணி எண்ணிக் கலங்குவாய். எனக்கு இப்போது ஏற்பட்டிருப்பதை விட அதிக மடங்கு புத்திரசோகம் உனக்கு ஏற்படட்டும்.” என்று சாபம் கொடுத்தாள். அதிதி தன் கணவரான காச்யபரிடம் நடந்ததைச் சொல்லித் தன் அக்காவின் சாபத்தையும் சொல்லி மன்னிக்குமாறு கேட்க, அவரோ, “திதி தான் மன்னிக்கவேண்டும்.” என்று சொல்லி அவளிடம் அழைத்து வந்தார். இருவரையும் சேர்த்துப் பார்த்த திதி, காச்யபரும் இந்தச் செயலுக்கு உடந்தை என எண்ணிக் கொண்டு, “என் தங்கைக்கு நான் இட்ட சாபம் உங்களையும் சேர்த்தே!” என்று சொல்லிவிடுகிறாள். ஒருபாவமும் அறியாத காச்யபர் அவசரப் பட்டுவிட்டாயே திதி என எண்ணிக்கலங்கினார். என்றாலும் சாபம் விடவில்லை. இந்த அதிதிதான் தேவகியாகவும், காச்யபரே வசுதேவனாகவும் பிறந்து புத்திர சோகத்தில் துடிதுடித்தனர்.


அடுத்து ஜராசந்தனின் பூர்வீகம் வரும். இதுவும் இந்தத் தொடருக்குத் தேவையான ஒன்று.

8 comments:

  1. ஓ...இதுல இப்படி ஒரு கதை வேற இருக்கா!!

    ReplyDelete
  2. யசோதா துலாரனாஹி கண்ணன் பெருமைபடுத்திய யசோதை யாரோ?என்ன தவம் பண்ணிணா அந்த ஆனந்தம் கிடைக்க? இந்திரனுக்கு அவன் பண்ணின கார்யத்துக்கும் cosequence ஒண்ணும் இல்லையா?
    புது விஷயங்களை தெரிஞ்சுக்கிறேன். ரொம்ப நன்றி,

    ReplyDelete
  3. அன்புள்ள மேடம்...

    தங்களது கண்ணன் பதிவுகளைப் படித்தேன். படித் தேன். 'கண்ணன் என் காதலனைக்' க்ளிக்கினால் நான் கண்ணனைப் பற்றி எழுதிய சில பதிவுகளைப் பார்க்கலாம். தங்களைப் போன்ற கண்ணன் ஆர்வலர்களின் கருத்துக்களைத் தெரிந்து கொள்ள விரும்புகிறேன். நன்றிகள்.

    ReplyDelete
  4. அப்படியா... அதிதி, திதி பற்றி கேட்டிருக்கேன், ஆனால் இந்த சாபக் கதை கேட்டதில்லை... நன்றி அம்மா.

    ReplyDelete
  5. வாங்க கோபி,
    பதில் சொல்லத் தாமதம் ஆயிடுச்சு, மன்னிக்கவும். ஆமாம், எதுவுமே காரணம் இல்லாமல் நடக்கிறதில்லை.

    ReplyDelete
  6. வாங்க ஜெயஸ்ரீ, நவராத்திரியிலேயும் மற்ற விஷயங்களிலேயும் ரொம்பவே பிசி, அதான் உடனே பதில் போடலை. :D இந்திரனுக்கும் தண்டனை இருந்தது. அதை இங்கே குறிப்பிடலை. அப்புறமா எழுதறேன். சந்தர்ப்பம் நேரும்போது!

    ReplyDelete
  7. வாங்க வசந்தகுமார், முதல்வரவுக்கும், அழைப்புக்கும் நன்றி. உங்க பதிவுகளைப் படிச்சேன். பின்னூட்டம் இட்டேனா?? நினைவில் இல்லை! :))))))) மறுபடியும் வந்து பார்க்கிறேன்.

    ReplyDelete
  8. வாங்க கவிநயா, சாபத்தினால் தான் இப்படி எல்லாம் நடக்கும். அதுவும் முன் ஜென்மவினை, மற்ற ஜென்மத்திலே தான் அனுபவித்துக் கழிக்கணும்! :)))))))

    ReplyDelete