மதுரா நகரத்தில் கம்சனின் அரண்மனை. மேல்மாடத்தில் கம்சன் நிலை கொள்ளாமல் தவித்துக் கொண்டு இங்கும், அங்குமாய் அலைபாய்ந்து கொண்டிருந்தான். தன் மாமனாராகிய ஜராசந்தனுக்காக பல தேசங்களுக்கும் அஸ்வமேத யாகக் குதிரையுடன் சென்று வெற்றி வீரனாய்த் திரும்பி இருந்தான் கம்சன். அஸ்வமேத யாகக்குதிரையே ஒரு கடவுளாக வழிபடப் படும். அது இஷ்டத்துக்கு இங்கும் அங்கும் திரிந்து கொண்டே செல்லும். அது போகும்போது கூடவே செல்வதற்கெனப் பிரத்தியேகமாய்த் தேர்ந்தெடுக்கப் பட்டான் கம்சன். குதிரை செல்லும் திசைகளில் இருந்த நாட்டு மன்னர்கள் எல்லாம் ஜராசந்தனுக்குக்கப்பம் கட்டினார்கள். மறுத்தவர்கள் போரில் தோற்கடிக்கப் பட்டனர். இப்படிப் பனிரண்டு வருடங்கள் சுற்றிய குதிரையைத் திரும்ப அழைத்துக் கொண்டு வெற்றி வீரனாய்த் திரும்பி இருந்தான் கம்சன். அவன் மாமனாராகிய ஜராசந்தன் கம்சனின் வெற்றியைப் பெரும் விழாவாய்க் கொண்டாடியதோடு அல்லாமல், அவன் ஜெயித்த பகுதிகளில் சிலவற்றை அவனே சுதந்திரமாய் ஆண்டு கொள்ள அனுமதியும் கொடுத்தான். இந்தப் பனிரண்டு வருஷங்களில் குதிரை மதுராவின் அக்கம்பக்கத்து நாடுகளில் சுற்றிய சில வருஷங்களில் ஓரிரு முறைகளே மதுராவுக்குக் கம்சனால் வர முடிந்திருக்கிறது. பொறுப்பை எல்லாம் தன் முதன் மந்திரியிடம் ஒப்படைத்திருந்தான் கம்சன்.
அவனுடைய முதல் மந்திரியான ப்ரலம்பன் மிக வயதானதோடு அல்லாமல் ஏதோ மனநோயும் தாக்கி மிக மோசமாய் உடல்நிலை சீர் கெட்டுப் படுத்த படுக்கையாய் இருந்தான். அவன் தளபதியான ப்ரத்யோதாவோ தன் மனைவியான பூதனையின் மறைவுக்குப் பின்னர் அவ்வளவு வேகம் காட்டுவதில்லை வேலை செய்வதில். என்றாலும் அவன் நம்பிக்கைக்கு உகந்தவன். ஆகவே அவனை விடமுடியாது. ஆனால் இது என்ன? இந்தப் பனிரண்டு வருடங்களில் யாதவ குலத்தின் 31 பிரிவுகளிலும், ஏன் அவனுடைய சொந்தப் பிரிவான போஜப் பிரிவிலும் உள்ள யாதவர்கள் அனைவருமே தங்கள் அளவில் சுதந்திரம் அடைந்து இருப்பதாய் நினைத்துக் கொண்டு கம்சனால் விதிக்கப் பட்ட எந்தவிதமான நியதிகளுக்கும் கட்டுப் படாமல் வாழ்ந்து வந்திருக்கின்றனர். கம்சன் எவ்வளவோ முயன்று அவர்களுக்குள் ஒற்றுமை ஏற்படாமல் பார்த்துக் கொண்டு, பிரிவினையைத் தூண்டும் வண்ணமே நடந்து வந்திருந்தான். ஆனால், ஆனால், இது என்ன? அவன் முயற்சிகள் அனைத்துமே விழலுக்கிறைத்த நீராய்விட்டனவே! ம்ம்ம்ம்ம்ம்ம்?? அவன் திரும்பி வந்ததில் கூட அவர்கள் சந்தோஷம் அடைந்ததாய்த் தெரியவில்லையே? கம்சனின் சொந்தத் தந்தை உக்ரசேனரை அவன் அரண்மனையிலேயே ஒரு பக்கம் சிறை வைத்துவிட்டுச் சென்றிருந்தான். அவருக்குக் கூட கம்சன் திரும்பி வந்ததில் அவ்வளவாய் சந்தோஷம் இருக்கிறதாய்க்காட்டிக் கொள்ளவில்லை. வேண்டாவெறுப்பாய் வரவேற்றார் அவனை. போதாக்குறைக்குப் ப்ரலம்பா, முதல் மந்திரிக்கு திடீரென பக்கவாதம் தாக்கி உள்ளதாம். இனி பிழைக்க மாட்டானாம்.
ப்ரத்யோதா, கம்சனின் நம்பிக்கைக்கு உகந்த தளபதி, அவனை விசாரித்ததில், யாதவக் குலமே கம்சனுக்கு எதிராக இருப்பது புரிந்தது. கம்சன் என்னதான் அவன் தந்தையையே சிறையில் அடைத்திருந்தாலும் பல யாதவர்களும் அவரையே மிகவும் மதித்துப் போற்றி வணங்கினார்கள் என்றும் சொல்கின்றான். அரசாங்க நடவடிக்கைகளில் நேரிடையாகத் தலையிடாவிட்டாலும், உக்ரசேனரின் ஒரு சொல்லுக்கு மிக்க மதிப்பு இருந்ததாகவும் சொல்கின்றான். ம்ம்ம்ம்ம்ம்ம்??? மறுபடியும், அனைவரையும் எப்படியாவது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரவேண்டும், என்ன செய்யலாம்? கம்சனின் குயுக்தியான மூளை மிகவும் யோசித்தது. யோசித்து யோசித்து மூளையே களைப்படைய ஆரம்பித்துவிட்டது. ஏதாவது செய்யணும், என்ன செய்யலாம்? ஆம் அதுதான் சரி, தனுர்யாகம். தனுர் யாகம் செய்து நாம் வெற்றியோடு திரும்பி வந்ததைக் கொண்டாடலாம். அதுதான் சரி. கம்சன் ஒரு முடிவுக்கு வந்து தனுர்யாகம் நடக்கப் போவதை அறிவிக்க முடிவும் செய்தான். அப்போது ப்ரத்யோதா அங்கே அவனுக்கு ஓர் செய்தியுடன் வந்தான். கம்சனைக் கண்டு பேச ஐயன் வந்தான். விசித்திரமான இந்தச் செய்தியால் ஆச்சரியம் அடைந்த கம்சன் அவனை அனுமதித்தான்.
ஐயனும், ப்ரத்யோதாவும் வந்தனர். ஐயன் பேசி முடிக்கும் வரையில் மெளனமாய்க் கேட்டுக் கொண்டிருந்தான் கம்சன். என்றாலும் அவன் முகம் வெளிறியதையோ, மீசை துடிக்க ஆரம்பித்ததையோ அவனால் தடுக்க முடியவில்லை. பின்னர் ஐயனையும், ப்ரத்யோதாவையும் அறையை விட்டு வெளியே போகச் சொல்லிவிட்டு அறையில் அங்குமிங்கும் நடக்கலானான். கைகளைப் பிசைந்து கொண்டான். தலையில் அடித்துக் கொண்டான். முஷ்டியை மடக்கிக் குத்தினான். ஆஹா, என்ன மடத்தனம்! என்று கூவினான். இத்தனை வருடங்களாய் ராணுவத்துடன் சேர்ந்து அங்குமிங்கும் அலைந்து திரிந்து கொண்டிருந்ததில் நாரதரின் ஜோசியத்தை மறந்தே போனானே! அவனின் சித்தப்பன் மகளான தேவகியின் எட்டாவது குழந்தையால் கம்சனுக்கு மரணம் நேரிடும் என்றாரே? ஆனால் தேவகிக்கு எட்டாவதாய்ப் பிறந்த குழந்தை பெண்ணல்லவோ? ஆனால் இது என்ன ஐயன் சொல்லுவது? கோகுலத்திலும், பின்னர் விருந்தாவனத்திலும் நந்தனின் பையனாக வளரும் சிறுவன், ஐயன் சொல்லுவதை எல்லாம் பார்த்தால் தேவகியின் எட்டாவது குழந்தையின் வயதே இந்தப் பையனுக்கு இருக்கும் போலுள்ளதே! அதிலும் இந்தப் பையன் ஏதோ அதிசயங்கள் எல்லாம் நடத்துகின்றானாமே? அவனிடம் விருந்தாவனமே மயங்கிக் கிடக்கிறதாமே? ஐயனுக்காக நிச்சயிக்கப் பட்ட ராதையைக் கூட அந்தக் கண்ணன், அதான் அந்த நந்தனின் மகன் கொண்டு போய்விட்டானாமே? அவ்வளவு கெட்டிக்காரனா அவன்? அவன் ஒருவேளை தேவகியின் எட்டாவது மகனாய் இருக்குமோ? சீச்சீ! இருக்காது, ஒருகாலும் இருக்காது. நாம் தான் நேரில் பார்த்தோமே! அது பெண்குழந்தைதான். மேலும் யசோதை பல வருஷங்கள் கழித்துக்கர்ப்பம் தரித்ததும் உண்மைதானே!
ம்ம்ம்ம்ம் போர் செய்யும் போது யுத்தகளத்தில் இறக்க நேரிடுவதில் எந்தத் தவறும் காணமுடியாது. ஆனால் இந்தச் சிறுவன், அதுவும் நான் வளர்த்த தேவகி, அவள் பையன், அவன் கைகளால் கொல்லப் படுவேன் என்றால்! கம்சனால் தாங்க முடியவில்லை. என்னததன் ஐம்பது வயது ஆனாலும் கம்சனுக்கு உயிரின் மேல் ஆசை இருக்கத் தான் செய்தது. நாடாளுவதிலும் இன்னும் அவன் நினைத்த லட்சியத்தை எட்டவில்லை. யாதவ சமூகத்தையே ஒன்றாக்கி அனைத்து யாதவர்களுக்கு மட்டுமில்லாமல், இந்த ஆரியவர்த்தத்துக்கே அரசன் ஆவதே அவன் ஆசை. ம்ம்ம்ம் இது எவ்வாறேனும் நடந்தாகவேண்டும். அதற்கு ஏற்படும் எந்தத் தடைகளையும் உடைக்கவேண்டும். இந்த நந்தனின் குமாரனை ஒரு கை பார்க்கவேண்டும். அவன் தேவகியின் பையனோ, நந்தனின் பையனோ, யாராயிருந்தால் நமக்கென்ன? அவனால் நமக்குத் தீங்கு என்றால் கட்டாயமாய் அவனை ஒழித்துவிடவேண்டும், எப்படியாவது! அவன் சாகவேண்டியவனே!
ம்ம்ம்...வந்துட்டாருய்யா வில்லன்..கதை சூடுபிடிக்கிறது ;))
ReplyDelete//வந்துட்டாருய்யா வில்லன்//
ReplyDeleteஅதானே எவ்வளோ நேரம் மரத்தை சுத்தி சுத்தி வரது?
வாங்க கோபி, இனிமே கொஞ்ச நாளைக்கு வில்லன் தான் வருவான். :))))
ReplyDelete//ஹிஹிஹிஹி திவா, நீங்களும் த.ம.வோடு மரத்தைச் சுத்தினீங்க?? சொல்லவே இல்லையே?? :P:P:P//
ReplyDeleteவில்லனே வராம அப்பப்ப கண்ணனும் வர மாதிரி பாத்துக்கோங்க அம்மா :)
ReplyDelete