இன்றைய அலங்காரம் ஜயதுர்கை!
சந்திரகாந்தா: மூன்று கண்களை உடைய இவளை வணங்கினால் வெப்பம் தணிந்து குளிர்ச்சி ஏற்படும். சந்திரகாந்தக் கல் எப்படி சந்திரனின் குளுமையைத் தன்னுள் வாங்கிக் கொண்டு நீரைப் பொழிகின்றதோ அப்படியே அம்பாள் நம் வெம்மையைத் தன்னுள் வாங்கிக் கொண்டு குளுமையான கருணை நீரைப் பொழிகின்றாள். இங்கே வெம்மை என்பது நம் வினைகளைக் குறிக்கின்றது. நம் தீவினைகளால் ஏற்படும் வெப்பத்தைத் தணிவித்துத் தன் கருணை மழையால் நம்மைக் குளிர்விப்பவள் இவளே. முக்கண்ணனின் பத்தினியான இவளும் முக்கண்களைக் கொண்டு தலையில் பிறைச்சந்திரனைச் சூடிக் கொண்டு காக்ஷி கொடுக்கின்றாள். நாம் செய்யும் தீவினைகள் ஆகிய அசுரர்களைத் தடுக்கக் கையில் பல்வேறு ஆயுதங்களை ஏந்தியவண்ணம் காக்ஷி கொடுக்கின்றாள். ராகுவினால் துன்பம் நேருமோ என அஞ்சுபவர்கள் இவளைத் துதிக்கலாம். செவ்வாய்க்கிழமைகளில் இவளைத் துதித்தல் துன்பம், தடைகள் நீங்கி வாழ்வில் வளம் பெறுவார்கள். திருவாலங்காட்டில் காளியைத் தோற்கடிக்க ஈசன் ஆடிய ஆட்டம் ஊர்த்துவ தாண்டவம் எனப்படும். ஒரு காலைத் தரையில் ஊன்றி, மறு காலைத் தோளுக்கு இணையாக உயர்த்தி ஈசன் ஆடிய இந்த ஆட்டத்தில் இருந்து தோன்றியவளே சந்திரகாந்தா தேவி.
ஸ்கந்தமாதா; இவளும் நவராத்திரியின் செவ்வாய்க்கிழமைகளிலேயே துதிக்கப் படவேண்டியவள். ஸ்கந்தனுக்கு உகந்த நாளும் செவ்வாய்க்கிழமையே. ஸ்கந்தனின் மாதாவான இவளுக்கும் செவ்வாயே உகந்த நாள். அக்னி சொரூபம் ஆன ஸ்கந்தனின் திரு அவதாரத்திற்குக் காரணகர்த்தா இவளே. அக்னி எவ்வாறு அனைத்துப் பொருட்களையும் சுட்டெரிக்கின்றதோ அவ்வாறே நம்மைச் சூழ்ந்து சுட்டெரிக்கும் துன்பத்தை இவள் சுட்டெரிப்பாள். அங்காரகனால் ஏற்படும் தோஷங்களையும் போக்குபவள் இவளே. நவராத்திரி செவ்வாய்க்கிழமைகளில் இவளை வணங்குதல் நன்மை பயக்கும். பாற்கடலை அசுரர்களும் தேவர்களும் கடையும்போது முதலில் வந்தது கடும் விஷமே. அந்த ஆலகாலவிஷத்தை உண்ட ஈசனின் கண்டத்தைப் பிடித்தாள் அன்னையவள். நீலகண்டனான ஈசன் அப்போது ஆடிய தாண்டவம் புஜங்க தாண்டவம் என அழைக்கப் படும். அந்தத் தாண்டவத்தின் போது தோன்றியவளே ஸ்கந்தமாதா ஆவாள்.
, நான்காம் நாள் படிக்கட்டுக் கோலம் போட்டு, ஐந்து வயதுள்ள பெண் குழந்தையை ரோகிணி என்ற நாமத்துடன் வழிபடவேண்டும். ரோகங்கள் அனைத்தும் நீங்க இவ்வழிபாடு மிகவும் சிறந்தது. இன்றைய அலங்காரமாய் அம்பிகையை ஜயதுர்கை கோலத்தில் அலங்கரிக்கலாம். அனைத்துத் தடைகளும் நீங்கிய கோலத்தில் சிங்காதனத்தில் தேவர்களும், முனிவர்களும் இவள் தாள் பணிந்து சொல்லும் தோத்திரங்களை ஏற்கும் கோலத்தில் உள்ள இவளை ரோகிணி என்பார்கள். சிவப்பு மலர்களால் நான்கு, ஐந்து, ஆறாம் நாட்களில் அர்ச்சிக்கவேண்டும் என்பது நியதி. என்றாலும் இன்றைய வழிபாட்டுக்குச் செந்தாமரைப் பூ மிகவும் உகந்தது.
இன்றைய நிவேதனம் சர்க்கரைப் பொங்கல். அரிசி, பருப்பை மிதமாக வாசனை வரும்படி வறுத்துக் கொண்டு, பால் விட்டுக் குழைய வைத்து, வெல்லம் சேர்த்து நன்கு சுருள வந்ததும், ஏலக்காய், முந்திரிப்பருப்பு, திராட்சி நெய்யில் வறுத்துப் போடவும். குழந்தைகளுக்கு மிகவும் பிரியமான ஆகாரம் இது. உடலுக்கும் கேடு விளைவிக்காது.
இன்றைய சுண்டல் பட்டாணிச் சுண்டல்.
துர்காஷ்டகம்:
உயிருமானவள் துர்கா உடலுமானவள்
உலகமானவள் எந்தன் உடமையானவள்
பயிருமானவள் துர்கா படரும் கொம்பவள்
பண்பு பொங்கிட என்னுள் பழுத்த துர்கையே
தேவி துர்கையே ஜெய தேவி துர்கையே
தேவி துர்கையே ஜெய தேவி துர்கையே
லலிதா நவரத்தின மாலையின் இன்றைய ரத்தினம் பவளம்
அந்தி மயங்கிய வானவிதானம் அன்னை நடம் செய்யும் ஆநந்த மேடை
சிந்தை நிரம்ப வளம் பொழிவாளோ தேன்பொழிலாமிது செய்தவளாரோ
எந்த இடத்தும் மனத்தும் இருப்பாள் எண்ணுபவர்க்கருள் என்ணமிகுந்தாள்
மந்திர வேதமயப் பொருளானாள் மாதா ஜய ஓம் லலிதாம்பிகையே!
மாதா ஜய ஓம் லலிதாம்பிகையே, மாதா ஜய ஓம் லலிதாம்பிகையே
மாதா ஜய ஓம் லலிதாம்பிகையே, மாதா ஜய ஓம் லலிதாம்பிகையே!
எனக்கு மிஹ பிடித்த வரிகள். அள்ளி தெளிச்சு அவசரக்கோலம் போட்டுட்டு போகிறோமோ னு நினைத்துக் கொண்டு அவதியாய் தினமும் போகும் போது ஸ்ந்த்யா காலத்திலோ உஷத் காலத்திலோ வழியில் பார்க்கும் sheppard sky இந்த வரிகளை ஞாபக படுத்தும். அந்த சமயம் உணர்ந்துசொல்வதால் மனசுக்கு ஒரு நம்பிக்கையும் ஆசுவாசுமும் வரும்
ReplyDelete//செவ்வாய்க்கிழமைகளில் இவளை
ReplyDeleteதுதித்தல் துன்பம்,தடைகள் நீங்கி வாழ்வில் வளம் பெறுவார்க்ள்.//
ஆம் கீதா,
என் அனுபவத்தில் கண்ட உண்மை.
நன்றி கீதா.
இந்த அளவுக்கு நினைவு வச்சிருக்கிங்களே ஜெயஸ்ரீ, அதுக்கே சந்தோஷப் படவேண்டாமா??? வாழ்த்துகள்
ReplyDeleteகோமதிஅரசு, ரொம்பவே நன்றிம்மா, நீங்க சொல்றது நானும் உணர்ந்திருக்கேன்.