
அடுத்துப் பேரிடியும், மின்னலும் ஆரம்பித்தது. இடியின் சப்தத்தாலும், மின்னலின் “பளீர்” “பளீர்” என்ற ஒளியாலும் அங்கே கட்டப் பட்டிருந்த ஆவினங்கள் கொஞ்சம் அசெளகரியமாய் உணர்ந்தன போலும். எங்கே பார்த்தாலும் அவற்றின் அவலக்குரல், “அம்மா, அம்மா” எனக் கேட்க ஆரம்பித்தது. தங்கள் செல்வங்களான பசுக்களையும், கன்றுகளையும், காளைகளையும் காக்கவேண்டி எழுந்த கோபர்களும், கோபியர்களும் இருண்ட வானத்தைப் பார்த்துக் கவலை கொண்டனர். இப்படி ஒரு இருட்டா?? கும்மிருட்டு, மையிருட்டு என்றெல்லாம் சொல்லுவார்களே, அதை விடக் கூட இது மோசமாய் இருக்கே? எதிரே ஆள் நிற்பது கூடத் தெரியவில்லையே? சட்டென ஒரு வயதான கோபருக்குத் தோன்றியது. நிச்சயம் இது கோபம் கொண்ட இந்திரனின் செயலே தான். அவனல்லவோ மழைக்கு அதிபதி? அவனை மறந்துவிட்டோமே? ஒரு சின்னப் பையனின் முட்டாள்தனமான புத்திமதியில் மயங்கிவிட்டோமே? இப்போ என்ன நடக்கப் போகிறது? இந்திரா, ஓ இந்திரா, எங்களைக் காப்பாய்!
மழைக்கடவுளான இந்திரனுக்கு உண்மையாகவே கோபம் தான் போல். மழை ஊழிக்காலத்துப் பிரளயத்தைவிட மோசமாய்ப் பெய்ய ஆரம்பித்தது. முகத்தில் வந்து அறையும் மழைப் பிரவாகம். யாருக்கும் என்ன நடக்கிறதெனப் புரியாமல் மழையின் வேகம் எந்தச் செயலையும் செய்யவிடாமல் தடுத்தது. கூடவே வாயுவின் சேஷ்டைகளும் ஆரம்பித்தன. காற்றின் வேகத்தால் கூடாரங்கள் பிய்த்துக் கொள்ள அனைத்துக் கோபர்களின் குடும்பங்களும் மழை நீரில் தத்தளிக்க ஆரம்பித்தன. மழை நம்மை முற்றிலும் மூழ்க அடிக்கும் முன்னர் நாம் விருந்தாவனத்தை எவ்வாறேனும் சென்றடையவேண்டும். இதுவே அவர்கள் எடுத்த முடிவு. ஆனால் அவர்களால் ஒரு அடி கூட எடுத்து வைக்க முடியவில்லை. மின்னலின் ஆங்காரமான ஒளி கண்ணையே பறித்துவிடும்போல் இருந்தது. கூடவே இடி மேல் இடியாகப் பெரும் சப்தத்துடன் ஒலித்துக் கொண்டிருந்தது. மெல்ல மெல்ல இரவும் கழிந்து பொழுது விடிந்தது, சூரியனும் வந்துவிடுவான் என நினைத்தனர். ஆனால் என்ன இது? பொழுது என்னமோ விடிந்தாச்சு, சூரியனும் வந்துவிட்டான் போல? ஆனால் இங்கே என்ன இத்தனை இருட்டு? ஆஹா, நாம் நன்றாக வசமாக மாட்டிக் கொண்டுவிட்டோமே? எங்கே பார்த்தாலும் மழை நீர் வெள்ளம்போல் பிரவாகம் எடுத்து ஓடுகிறது. குளங்களை விட ஆழமாய் மழை நீர் ஆங்காங்கே ஒரு இரவில் தேங்கிக் கிடக்கிறதே. விருந்தாவனம் செல்லும் பாதை எல்லாம் மூழ்கிவிட்டதே?

கண்ணன் மேல் நம்பிக்கை இழக்காமல் இருந்த கோபியர் அனைவரும் இவ்வளவு நேரம் மாடு, கன்றுகளைப் பராமரித்துக் கொண்டிருந்தவர்கள் இந்தக் கூக்குரல் கேட்டு உடனே ஓடி வந்தனர். அதிசயம் ஒன்று நடக்கும், அதுவும் அது கண்ணன் மூலமே நடக்கும் என்பதை அவர்கள் அறிந்தே வைத்திருந்தனர். கண்ணன் அவர்களை முதலில் குழந்தைகளைக் கொண்டு வந்து குகைக்குள்ளே விடச் சொல்லிவிட்டு, பின் மெதுவாய் அந்தக் குகையை மூடிக் கொண்டிருந்த ஒரு பெரிய பாறையை மலையின் நடு வயிறு என்று சொல்லப் படும் இடத்திலிருந்து நகர்த்தினான். கண்ணனின் முயற்சியைக் கண்ட அனைவரும் இப்போது அவனுக்குக் கை கொடுக்கப் பாறை நகர்த்தப்பட்டு ஒரு பெரிய நகரமே குடி இருக்கும் அளவுக்கான இடம் தென்பட்டது. திடீரென இடித்த இடியில் அந்த இடமே பூகம்பம் வந்தது போல் நடுங்க, எடுக்கப் பட்டுக் கொண்டிருந்த பெரிய பாறை அனைவர் கைகளில் இருந்தும் நழுவ, கண்ணன் ஒருவனே அந்தச் சிறு மலை போன்ற பாறையைத் தாங்கிப் பிடித்தான். சந்தோஷக் கூச்சலுடன் அனைவரும் அந்த மலைக்குடைக்குக் கீழ் புகுந்து கொண்டு ஆர்ப்பரிக்க ஆரம்பித்தனர்.
அப்பாடா, இந்த அற்புதத்துக்கு முன்னர் இந்திரனால் என்ன செய்ய முடியும்? கண்ணா? கண்ணா? ஸ்ரீவாசுதேவ கிருஷ்ணா? நீ உண்மையிலேயே அந்த மஹா வாசுதேவன் தானோ? அனைவரும் சொல்லுவது உண்மையோ? நீ அருகையில் இருக்கும்போது எங்களுக்கு எப்படிப் பட்ட துன்பம் நேர்ந்தாலும் சூரியனைக் கண்ட பனித்துளி போல் விலகி ஓடுகின்றதே? கோபர்களும், கோபிகளும் ஆனந்தம் தாங்க முடியாமல் பலவாறு வாழ்த்துப் பாடி கிருஷ்ணனைக் கொண்டாடினார்கள். அனைவரும் கிருஷ்ணனைப் பார்த்த பார்வையில் அன்பு மட்டுமின்றி இப்போது மிதமிஞ்சிய பக்தியும் கூடி இருந்தது. இந்தக் கிருஷ்ண வாசுதேவனும் தாங்களும் வேறு அல்ல. தாங்கள் அனைவருமே கிருஷ்ண வாசுதேவன். கிருஷ்ண வாசுதேவனே இந்தக் கோகுலத்து அனைத்து மக்களுமாய் இருக்கின்றான். அனைவருக்கும் புரிந்தது, இந்தப் பந்தம் எந்நாளும் யாராலும் பிரிக்க முடியாத ஒன்று என. கிருஷ்ணன் தங்களுக்கு உரியவன், தங்களுடையவன் என்ற எண்ணம் அனைவருக்கும் தனித்தனியாக ஏற்பட்டது. அப்போது ஒரு கோபி “ஏ, கோவிந்தா!” என்று கூவினாள். அனைவரும் திகைப்போடு பார்க்க”கோவர்த்தன கிரிதாரி, நீ எங்கள் கடவுள்!” என்று மனம் நிறைவான பக்தியுடன் சொல்ல, கண்ணனோ “இல்லை நான் உங்களில் ஒருவன். உங்களுடன் இதோ அடுத்த பெளர்ணமி இரவில், யமுனை நதிக்கரையில் “ராஸ்” ஆடப் போகிறவன். இனி நாம் இந்திரனுக்காகப் பயப்பட வேண்டாம். இந்திரனுக்காக விருந்தாவனத்து ஒரு பகுதியினர் எடுக்கும் விழாவையும் போய்ப் பார்க்கலாம். வாருங்கள், இதோ சூரியன் உதித்துவிட்டான். ஒளி பிறந்து விட்டது.” என்று அழைத்தான்.
அடுத்துக் கம்சன் என்ன எண்ணத்தோடு இருக்கிறான் என்பதையும், தேவகியின் நிலைமையும் என்ன என்று பார்ப்போம்.
அட குகைக்குள்ளே வெளிச்சம் இருக்குங்களா? :P:P:P
ReplyDelete