மண்ணரசு நான் வேண்டேன்!
சற்று நேரம் அமைதி நிலவியது. முதலில் உயிர்பெற்றவர் அக்ரூரரே. அவர் “ஜெயஸ்ரீகிருஷ்ணா, சாது! சாது!” எனக் கோஷிக்கவும் கூடி இருந்த அனைத்துத் தலைவர்களும் அவரை ஆமோதித்து மகிழ்வோடு கோஷமிட்டனர். எங்கும் கிருஷ்ணனுக்கு ஜெயம் என்ற கோஷம் நிலவ அனைவரும் வசுதேவரையும், வசுதேவன் பெற்றெடுத்த வாசுதேவ கிருஷ்ணனையும் பார்த்தனர். கூப்பிய கரங்களோடும், விநயத்தோடும் கிருஷ்ணன் எழுந்து நின்று சபையோரைப் பார்த்தான். “தாத்தா அவர்களே, தந்தையே, குருவே, மற்றும் அனைத்து யாதவத் தலைவர்களுக்கும் என் மனமார்ந்த வணக்கங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். விலை மதிக்கமுடியாத, பெறர்கரிய ஒரு பெரிய சிறப்பை எனக்கு அளித்து நீங்கள் கெளரவப் படுத்துகிறீர்கள். இந்த மாபெரும் கண்டத்தின் அனைத்து தேச அரசர்களுக்கும் கிடைக்க முடியாத ஒரு மாபெரும் பதவி இது என்பதையும் நான் அறிந்து கொண்டிருக்கிறேன். ஏனெனில் இந்த மதுரா நகரம் இந்த கண்டமாகிய நாட்டின் கிரீடத்தில் ஜொலிக்கும் விலை மதிப்பற்ற ரத்தினமாக விளங்கி வருகிறது. இதன் பெருமை வார்த்தைகளால் சொல்லவும் முடியுமோ?? ஆனால், பெருமக்களே, தகுதியற்ற ஒருவனை நீங்கள் தேர்ந்தெடுத்துவிட்டீர்கள். நான் இன்னமும், இப்போதும் ஒரு இடைச்சிறுவனாகவே இருக்கிறேனேயன்றி ஒரு அரசகுமாரனாகவோ, அல்லது பட்டத்து இளவரசனாகவோ அல்ல. எனக்கு இந்தப் பதவி ஏற்றது அல்ல.”
அனைவரும் ஒருசேர ஒருமித்த குரலில் கிருஷ்ண வாசுதேவனை விட்டால் வேறு யாரும் இந்தப் பதவியை வகிக்க முடியாது என வற்புறுத்தினார்கள். ஆனால் கிருஷ்ண வாசுதேவனோ, “நான் ஒரு அரசன் அல்ல, தலைவரே. என்னால் இந்தப் பதவியை வகிக்க முடியாது. ஒரு மாபெரும் தலைவனுக்குரிய தகுதிகள் எதுவும் எனக்குள் இல்லை. தாத்தா அவர்களே, தாங்களே அரசராக நீடிக்கலாமே? மக்களோ உங்கள் மேல் பெருமதிப்பும், மரியாதையும் பூண்டிருக்கின்றனர். அனைவராலும் நீங்கள் விரும்பப் படுகிறீர்கள். யாதவத் தலைவர்களுக்கும் நீங்கள் தலைவராக இருப்பதில் உடன்பாடே. துணைக்கு என் தந்தையும், மதிப்புக்குரிய அக்ரூரரும் இருக்கின்றனர். நீங்கள் சொல்வதை அப்படியே நிறைவேற்றத் தளபதி ப்ரத்யோதாவும் காத்திருக்கிறார். நான் என்ன சின்னஞ்சிறு சிறுவன், எப்போதும் உங்கள் சரணாரவிந்தத்தில் கிடப்பவனே. முதலில் நாங்கள் முறையான சாஸ்திர, சம்பிரதாயங்களோடு க்ஷத்திரிய மார்க்கத்திற்கு வருகின்றோம். மேலும் வேதங்களைப் பற்றிய அறிவே எங்களுக்குச் சிறிதும் இல்லை. வேதங்களையும் அவற்றோடு ஆயுதங்களைக் கையாள்வது பற்றியும் தெரிந்து கொள்கிறோம். எங்கள் குருகுல வாசமே இன்னும் சரிவர ஆரம்பித்துப் பூர்த்தியாகவில்லை.” என்று எப்போதும்போல் மனதை மயக்கும் சிரிப்போடு கண்ணன் சொன்னான்.
அவ்வளவில் அந்த யோசனை ஏற்றுக் கொள்ளப் பட்டது. சகோதரர்கள் இருவரும் அவர்களின் சிறிய தாய் மகனான உத்தவனோடு சேர்ந்து அரண்மனையில் இளவரசர்களுக்கென ஒதுக்கப் பட்டிருந்த அறையில் போய்த் தங்கினார்கள். மூவரும் சேர்ந்தே படுத்து வழக்கம் கோகுலத்திலும், விருந்தாவனத்திலும். இங்கும் அவ்வாறே படுத்தனர். அரண்மனையில் ஊழியம் செய்யும் பெண்கள் வந்து கவரி வீசத் தொடங்கினர். விளக்குகள் சிறியதாக்கப் பட்டன. அரை இருட்டில் திடீரென ஒரு சிரிப்புச் சத்தம். சிரித்தது வேறு யாருமல்ல, பலராமன் தான். கடந்த மூன்று நாட்களாய்த் தொடர்ந்து நடந்த சம்பவங்களையும், தாங்கள் மூவரும் இப்போது அரண்மனையில் படுத்துத் தூங்குவதையும் நினைத்துப் பார்த்த பலராமன், மூன்று நாட்கள் முன்னால் பெளர்ணமி தினத்தன்று மாட்டிடையர்களாகத் தாம் இருந்ததையும் மூன்று தினங்கள் முழுதாய்ச் சென்ற பின்னர் இன்று அரண்மனையில் இளவரசனாகப் படுத்திருப்பதையும் நினைத்துக் கொண்டான். மீண்டும் சிரிப்பு வந்தது அவனுக்கு. தன் இளைய சகோதரன் நாரதர் சொன்ன தீர்க்க தரிசனத்தை முடித்து வைத்துவிட்டான் தான். ஆனால் அனைவரும் சொல்வது போல் அவன் கடவுளா? அந்தப் பரவாசுதேவனா இவன்?? ம்ம்ம்ம்??? எப்படி இருந்தாலும் இவன் கடவுள் மட்டுமல்ல, நம்பினவர்க்கு நம்பியவற்றைக் கொடுக்கும் வள்ளலும் கூட. இவனைப் போன்றதொரு சகோதரன் எனக்குக் கிடைத்தது என் பாக்கியமே அன்றோ?? பலராமன் தன் அருமைத் தம்பியை இறுகக் கட்டிக் கொண்டான். கண் திறந்து பார்த்த கண்ணன் என்ன என்று கண்களாலேயே வினவ, “நீ ஓர் அற்புதமான, அருமையான, மேன்மையான சகோதரன் கிருஷ்ணா, நீ எனக்குக் கிடைக்க நான் கொடுத்து வைத்திருக்கிறேன்.” என்று சொல்ல, கண்ணன் புன்னகை மாறாமலேயே,” இவை அனைத்தும், நீ என் அண்ணனாக வந்ததால் அன்றோ?” என்று சொல்லிக் கொண்டே தன் அண்ணனை அணைத்துக் கொண்டான். இருவரும் நிம்மதியாகத் தூங்கினார்கள்.
ஆனால் அந்த மதுரா நகரில் விருந்தினர் மாளிகையில் ஒரு பெரிய அறையில் தூங்காமல் விழித்திருந்தாள் பதினாறு வயது மங்கை ஒருத்தி. தன் கைகளைப் பிசைந்து கொண்டாள். அறையின் ஒரு மூலையில் போய் அமர்ந்து கொண்டாள். அவளுக்கு எதிரே அவளை விட நான்கைந்து வயது மூத்தவளான இன்னொருத்தி கடுங்கோபத்துடன் நின்று கொண்டிருந்தாள். இளையவளைப் பெரியவள் ஏதோ அதட்டிக் கேட்டுக் கொண்டிருப்பதையும், இளையவள் சற்றுத் தடுமாறினாலும் சமாளித்துக் கொண்டு பதில் சொல்வதும் தெரிகிறது. யார் இவர்கள்?? அந்தச் சிறிய இளம்பெண் விதர்ப்ப தேசத்து ராஜகுமாரியான ருக்மிணிதான். பெரியவளோ, பட்டத்து இளவரசன் ஆன ருக்மியின் மனைவி சுவ்ரதா. தன் நாத்தியைக் கண்டித்துக் கொண்டிருந்தாள் அவள்.
“எங்கே போய்விட்டாய் நீ?? நேற்றிலிருந்து உன்னைக் காணவே இல்லை?? விருந்திற்காக வந்த இடத்தில் இப்படித் தான் சொல்லாமல், கொள்ளாமல் போய்விடுவதா? உன் அண்ணனுக்கு யார் பதில் சொல்வது? உன் தந்தையார் கேட்டால் என்ன சொல்லமுடியும்??” என்று கடுகடுத்துக் கொண்டிருந்தாள் சுவரதா. ருக்மிணி சற்றுத் தயங்கினாலும், சமாளித்துக் கொண்டு, “ எங்கேயும் போகவில்லையே, திரிவக்கரையுடன் தான் இருந்தேன். அதற்குப் பின்னர் தேவகி அம்மாவைப் பார்க்கச் சென்றேன். நீங்கள் தான் வரவே இல்லையே தேவகி அம்மாவைப் பார்க்க. கம்சனின் மனைவிகளோடு இருந்துவிட்டீர்கள்.”
“ஓஹோ, எனக்குப் புரிகிறது, நீ ஏன் அங்கே போனாய் என்று. உன் அண்ணன் வரட்டும். சொல்கிறேன். அவர் உனக்குத் தகுந்த பாடம் கற்பிப்பார்.” என்று ஏளனத்தோடும், கோபத்தோடும் சொன்னாள் சுவ்ரதா. “சீச்சீ, ஒரு பெரிய நாட்டின் இளவரசியாக இருந்து கொண்டு இப்படி நடக்க உனக்கு வெட்கமாய் இல்லை?? மதிப்புக்குரிய, மரியாதைக்குரிய விதர்ப்ப தேசத்து மகாராஜாவான பீஷ்மகனின் கெளரவத்திற்கு இழுக்குத் தேடிவிட்டாய்.”
“ஆஹா, நீ செய்வது மட்டும் ரொம்ப நியாயமோ??” கத்திய ருக்மிணி தன் உதடுகளைக் கோபத்துடன் கடித்துக் கொண்டாள். அவள் அண்ணன் வந்தால்??? என்ன நடக்குமோ??? அவள் அண்ணன் கம்சனின் இறுதி யாத்திரைக்குச் சென்றிருக்கிறான். இன்னும் திரும்பவில்லை. அங்கே என்ன நடக்கிறதோ??? பார்ப்போமா?? ருக்மி என்ன நினைக்கிறான்???
*************************************************************************************
அன்று அதிகாலையிலேயே ருக்மி மற்ற அரச விருந்தினர்களோடு சேர்ந்து கம்சனின் இறுதியாத்திரையில் கலந்து கொள்ளச் சென்றான். மொத்த நகருமே கம்சனின் இறுதி யாத்திரையில்கலந்து கொண்டது. என்னதான் கம்சன் ஒரு கொடுங்கோலனாக இருந்தாலும், இறந்த பின்னரும் வெறுப்பைக் காட்டி அவனுக்குக் கொடுக்கவேண்டிய அரசமரியாதைகளைச் செலுத்தத் தவறலாமா? ஆகவே அனைவருமே கலந்து கொண்டனர். வயதான அரசன் உக்ரசேனன், தன் ஒரே மகனான கம்சனின் இறுதிப் பயணத்தில் மனம் கொள்ளா பாரத்துடனேயே கலந்து கொண்டான். அவன் தான் அனைத்து சாஸ்திர, சம்பிரதாயங்களையும் தன் மகனுக்குச் செய்யவேண்டி வந்துவிட்டது. கம்சனை எரித்துவிட்டு அவன் அஸ்தியை யமுனையில் கரைத்துவிட்டு அனைவரும் யமுனையிலேயே தங்கள் ஸ்நாந பானங்களையும் முடித்துக் கொண்டே அரண்மனைக்குத் திரும்பினர். ருக்மி தனக்கென ஒதுக்கப் பட்டிருந்த அறைக்கு வரும்போது மதியத்துக்கும் மேல் ஆகிவிட்டிருந்தது.
ஏற்கெனவே அவன் மிக்க கோபத்திலும், வருத்தத்திலும், ஆத்திரத்திலும் இருந்தான். கம்சன் ஜராசந்தனின் மாப்பிள்ளையாக எவ்வளவு அதிகாரத்திலும், உன்னத பதவியிலும் இருந்தான். கம்சன் மூலம் ஜராசந்தனின் நட்பைப் பெற்றுத் தானும் ஒரு சக்கரவர்த்தியாகத் தன்னை உயர்த்திக் கொள்ளவேண்டும் என்ற எண்ணத்துடனேயே அவன் இந்த தநுர்யாகத்திற்கு வந்திருந்தான். எப்படியேனும் தங்கள் விதர்ப்ப நாட்டின் எல்லைகளை விஸ்தரிக்கக் கம்சனின் ஆலோசனைகள் பயன்படும் என்ற நம்பிக்கையிலும் இருந்தான். ஆனால் அவன் எண்ணங்கள் எல்லாமே பொய்த்துப் போய்விட்டன. அவ்வளவு ஏன்?? ஊருக்குள் நுழைந்ததில் இருந்தே எதுவும் சரியில்லை!
அந்த இடைப்பையன்கள்! பற்களைக் கடித்துக் கொண்டு தன் கைமுஷ்டியால் தன் உள்ளங்கையைத் தானே குத்திக் கொண்டான் ருக்மி. ஆஹா, எங்கிருந்தோ வந்த இரு இடைப்பையன்கள், நம்மை எவ்வளவு துவம்ஸம் செய்துவிட்டனர்?? அவர்கள் இப்போ திடீர்னு வசுதேவனின் பிள்ளைகளாகவும் ஆகிவிட்டன்ரே? உண்மையாய் இருக்குமா இது??? அதிலும் அந்த இளையவன் இருக்கிறானே?? கறுத்த நிறத்தவன்?? சிரித்துச் சிரித்தே கழுத்தை அறுக்கிறான். அவனைக் கண்டாலே பற்றிக் கொண்டல்லவோ வருகிறது???
"அதிலும் அந்த இளையவன் இருக்கிறானே?? கறுத்த நிறத்தவன்?? சிரித்துச் சிரித்தே கழுத்தை அறுக்கிறான். அவனைக் கண்டாலே பற்றிக் கொண்டல்லவோ வருகிறது??"
ReplyDelete:((( aempa!!! vaenunna meesai samiyai poi paraen triplicanelanu sollidungo Mrs Shivam .
ஆஹா, ஹீரோயின் வந்தாச்சு!
ReplyDeleteவாங்க ஜெயஸ்ரீ, தாமதமான பதிலுக்கு மன்னிக்கவும். சொல்லிடறேன், மீசைக்காரனைப் போய்ப்பார்க்கச் சொல்லி, இன்னொரு மீசைக்காரரும் அங்கே தானே குடித்தனமா இருந்திருக்கார். அங்கேயும் போகச் சொல்லிடலாம்! :D
ReplyDelete@திவா,
ReplyDeleteஇவள் மட்டுமா ஹீரோயின்??? :)))))))