நட்பு இறுகியது!
“ஆஹா, இதெல்லாம் உண்மையா, கண்ணா?? நீ அப்படி இவை எல்லாம் செய்திருந்தாயானால்????? ம்ம்ம்ம்ம்ம்ம்.. உன்னைப் பார்த்தால் பொறாமையாக இருக்கிறதடா கண்ணா, துஷ்டனும், கொடுங்கோலனுமான கம்சனை நீ அழித்தாற்போல் என்னாலும் என் தந்தை வழி சகோதரர்கள் ஆன துரியோதனையும், துஷ்சாசனையும் அடக்க முடிந்தால்?? அதுவும் அந்தத் தேரோட்டியின் மகன் இருக்கிறானே?? கர்ணன், அவர்களின் நண்பன், அவனையும் இதே மாதிரி என்னால் மட்டும் அடக்க முடிந்தால்???””” பீமனின் கண்கள் கற்பனையில் விரிந்தன. பின்னர் அவன் வழக்கமான அட்டகாசச் சிரிப்புச் சிரித்தான். இப்போது யுதிஷ்டிரனுக்கும் சிரிப்பை அடக்க முடியவில்லை. என்றாலும், ஒரு அண்ணனுக்கே உரிய தன்மையோடு, பீமனைப் பார்த்து, “பீமா, இப்போது தான் வந்திருக்கிறோம், கிருஷ்ணனையும் முதல் முதல் இப்போத் தான் பார்க்கிறோம். அதற்குள்ளாக நம் குடும்ப விஷயங்களை எல்லாம் அவனிடம் பேசுவதா?” பாதி விளையாட்டாய்த் தெரிந்தாலும், அதில் மீதி உண்மையும் இருப்பதை அனைவரும் உணர்ந்தனர்.
ஆனால் பலராமன் விடவில்லை. “எப்படி ஆனாலும் சரி, நீங்க எல்லாம் என்ன நினைச்சாலும் சரி, உன்னுடைய அந்தப் பொல்லாத சகோதரர்களின் செயல்களைப் பற்றியும், அவர்களைப் பற்றியும் நான் அறிய விரும்புகிறேன். அது சரி, அவங்களை முடிக்கணும்னு சொன்னியே, அது முடிவாயிடுச்சா? சொல்லு, நானும் சேர்ந்துக்கறேன்.” பலராமன் சொன்ன தொனியே அவன் கேலி செய்வதைக் குறித்தது. ஆனாலும் கிருஷ்ணனின் உள் மனதில் இதில் ஏதோ விஷயம் பெரியதாக அடங்கி இருக்கிறது போலும். ஹஸ்தினாபுரத்தில் நடந்த மனதுக்கு ஒவ்வாத விஷயங்களைப் பற்றி இவர்களிடம் இங்கே பேசுவதும் அதைப்பற்றிக் கேட்பதும் உசிதம் அல்ல எனத் தோன்றியது. உடனேயே பேச்சை மாற்றினான் கண்ணன். “ஹா, அதெல்லாம் இருக்கட்டுமப்பா! நான் இன்னும் ஒண்ணுமே படிக்கலை, நீங்க எல்லாரும் குரு துரோணாசாரியாரின் சிஷ்யர்களாமே? என்ன எல்லாம் படிச்சீங்க? யாருக்கு எந்த ஆயுதம் நல்லாக் கையாள முடியும்? உங்க குரு அவரே நேரடியாச் சொல்லித் தருவாரா? இல்லைனா அவரோட முக்கிய சீடர்களில் எவரானுமா? நீங்க எல்லாம் நல்லாப் பயிற்சி எடுத்திருப்பீங்க, எங்களைப் பாருங்க, நாங்க இரண்டுபேரும் இன்னமும் மாட்டிடையர்களாகவே இருந்தோம், இருக்கோம் இன்னமும். நீங்க எல்லாம் உங்க குருகுலத்தை முடிக்கப் போறீங்க இல்லையா?? ஹாஹ்ஹா, வேடிக்கையா இல்லை, நாங்க இப்போத்தான் போகவே போறோம்.”
“அதனால் என்ன கண்ணா? எங்கள் வாழ்நாளில் எங்களால் சாதிக்க முடியாத பல விஷயங்களை நீ சாதித்திருக்கிறாயே? பலராமனும் அதற்கு உதவி புரிந்திருக்கிறானே? மதுராவை ஒரு கொடுங்கோலனின் ஆட்சியில் இருந்து மீட்டெடுத்திருக்கிறாயே? “ அர்ஜுனன் கண்ணனைத் தேற்றுவது போல் சொன்னாலும் உண்மையில் அவன் உள் மனதில் கண்ணனின் இந்த வீர, தீர, பராக்கிரமச் செயலால் பிரமிப்பு ஏற்பட்டிருந்தது. கண்ணன் மேல் தனக்கு உள்ள அன்பு முழுதும் தன் சொற்களின் மூலம் வெளிப்படுமாறு செய்யும் கலையும் இயல்பாகவே அவனுக்குக் கை வந்திருந்தது. அவன் கண்ணன் மேல் மிகுந்த பாசமும், அன்பும் வைத்திருப்பதை அனைவரும் உணர்ந்தனர்.
“ஆமாம், ஆமாம், இதன் மூலம் நீ தர்மத்திற்குப் பேருதவி செய்துள்ளாய், உன்னால் அரச தர்மம் காக்கப் பட்டிருக்கிறது.” என்றான் யுதிஷ்டிரன்.
“ம்ம்ம்ம்??? அப்படியா? ஆனால் இதன்மூலம் சக்தியும், பலமும் பொருந்திய எதிரிகளும் ஏற்பட்டிருக்கிறார்களே?” கண்ணன் குரலில் கேலி வெளிப்படையாக இழையோடினாலும் உள்ளூர அதற்கு வருந்துவதும் புரிந்தது. “அவங்க யாருமே இன்னும் சரியாக உணரவும் இல்லை, இது நடந்தது நன்மைக்கு என.” என்று ஆழ்ந்த வருத்தத்தோடு சொன்னான் கண்ணன்.
“அப்படி யாரானும் உன்னைத் தாக்க நினைத்தால்???? நாங்க ஐந்து பேர் இருக்கிறோம் உன்னைக் காக்க. மறவாதே கண்ணா!” பீமன் அப்போதே யாரோ கண்ணனைத் தாக்க வந்துவிட்டாற்போல் முழக்கமிட்டான்.
“அது வேறேயா??? கிருஷ்ணனும், பலராமனும் நமக்கு உதவியா வரும்படி இருந்துடப் போகிறது. அப்போ என்ன செய்யறதாம்? “ அர்ஜுனன் பீமனுக்கு பதிலடி கொடுத்தான்.
ஆனால் கண்ணன் உடனடியாகக் கவனித்துவிட்டான். அர்ஜுனன் வெளிப்படையாக பீமனைக் கிண்டல் செய்தாலும் உள்ளுக்குள் விஷயம் மிகவும் கவலைக்கிடமாகவே இருப்பதை உணர்ந்தே சொல்கிறான் என்று கண்ணனுக்குப் புரிந்தது.
”என்ன?? அவ்வளவு மோசமா இருக்கிறதா ஹஸ்தினாபுரத்து நிலை?” கண்ணன் உடனே கேட்டான்.
“நாங்க எவ்வளவு துன்பத்தில் இருக்கோம்னு புரிஞ்சுக்கறது உனக்குக் கஷ்டம் கண்ணா!” தங்களுக்கு நேர்ந்திருக்கும் அவமதிப்பை மறைக்கும்படியாக அர்ஜுனன் பேசினாலும் துயரத்தை அவனால் ஒளிக்க முடியவில்லை. “ வெளிப்படையாக நாங்கள் ஐவரும் குரு வம்சத்தின் அதிகாரபூர்வ வாரிசுகளாக இருந்தாலும், இன்னமும் நாங்கள் துரியோதனாதியாருக்குக் கீழே அவர்களுக்குக் கீழ்ப்படிபவர்களாகவே இருக்க வேண்டி இருக்கிறது.”
‘சரி, சரி, இனிமேல் வரப்போகும் துன்பங்களுக்கோ, வந்து போய்விட்ட துன்பங்களுக்கோ மனதில் இடம் கொடுக்காமல், நாம் அனைவரும் சேர்ந்து இருப்பதைக் கொண்டாடிக் களிப்போமே!” பலராமன் வேண்டுகோள் விடுத்தான். இயல்பாகவே பலராமனுக்குத் துயரமான நிகழ்ச்சிகளையோ, அவற்றை நினைப்பதோ பிடிக்காது. “பீமா, நீ மல் யுத்தத்தில் தேர்ந்தவன் என்று சொன்னார்களே? எங்கே, எனக்குச் சில அபூர்வப் பிடிகளைச் சொல்லிக் கொடு, பார்ப்போம். எனக்கும் சில புதிய பிடிகள் தெரியும். அவை உனக்குத் தெரியாதெனில் சொல்லித் தருகிறேன்.”
“அவர்கள் போய்விட்டனர், நாம் அனைவரும் யமுனையில் நீச்சல் அடித்துக் குளிக்கச் செல்லுவோம். யமுனையில் எனக்குப் பழகின இடங்களை உங்களுக்குக் காட்டுகிறேன்.” கண்ணன் மற்ற நால்வரிடமும் சொன்னான்.
ஆனால் யுதிஷ்டிரனோ தான் தன் மாமனிடம் ஹஸ்தினாபுரத்து விஷயங்களைப் பற்றிப் பேசிக் கலந்தாலோசிக்க வேண்டும் என்றும், அது அவன் தாயான குந்தியின் கட்டளை என்றும் சொன்னான். மேலும் அவர்கள் ஹஸ்தினாபுரம் திரும்பும்போது அக்ரூரரை உடன் அழைத்துச் செல்லவேண்டும் என அவர்கள் தாய் விரும்புவதாயும் கூறிவிட்டுத் தன் மாமனைக் காண சகாதேவனுடன் சென்றான். இதைக் கண்ட நகுலன், தானும் அவர்களோடு செல்வதாயும், தங்கள் தாயான குந்திக்கு அந்தப்புரத்தில் எல்லா செளகரியங்களும் செய்து கொடுக்கப் பட்டுள்ளதா எனத் தான் கவனித்தால் தான் தனக்கு நிம்மதி என்றும் சொல்லிவிட்டு யுதிஷ்டிரனைத் தொடர்ந்தான். கிருஷ்ணனும், அர்ஜுனனும் தனித்து விடப்பட்டனர்.
கண்ணன் அர்ஜுனனைப் பார்த்து, “ வா, நாம் இருவரும் யமுனைக்குச் செல்வோம். நீ வில் வித்தையில் மிகவும் தேர்ந்தவனாமே? புதியதாய் வில் வித்தையில் என்ன பயிற்சி எடுத்துக் கொண்டாய்? எனக்கும் சொல்லிக் கொடு!” என்றான். அர்ஜுனன் அதற்கு, “நான் புதியதாய் இருட்டில் குறி பார்த்து அம்பைச் செலுத்தும் பயிற்சியை மேற்கொண்டுள்ளேன். அதில் ஓரளவு தேர்ந்து விட்டேன். குருவிற்குக்கூட ஆச்சரியம்தான். ஆச்சரியம் என்பதை விட அது அவருக்குக் கொஞ்சம் அசெளகரியமாக இருக்கிறதோ என நினைக்கிறேன்.”
“என்ன, என்ன, என்ன நடந்தது? ஏன் அப்படி?”
புதுப் புது விஷயங்களை அருமையாகத் தொகுத்துக் கொடுக்கிறீர்கள் கீதா. மனசுக்கு இதமாக இருக்கிறது.
ReplyDeleteயப்பா...எப்படா இந்த கூட்டணி வருமுன்னு நினைச்சிக்கிட்டு இருந்தேன். வந்தாச்சி....இனி கலக்கல் தான் ;))
ReplyDeleteநன்றி வல்லி. தொடர்ந்து படித்து வருவதற்கும் ஆதரவு கொடுப்பதற்கும் நன்றி.
ReplyDeleteம்ம்ம்ம்??கோபி, இந்த பாகத்தில் தொடர்ந்து இந்தக் கூட்டணி வராதே! :))))))))
ReplyDelete