எண்ண ஓட்டங்களில் கண்ணன்!
ருக்மிணியைப் பற்றிய எண்ணங்களிலிருந்து கண்ணன் தன்னை பலவந்தமாய் விடுவித்துக்கொண்டான். ம்ம்ம்ம்?? நாம் தான் உத்தவனுடனும், அண்ணன் பலராமனுடனும், குரு சாந்தீபனியின் குருகுலத்திற்குச் செல்லப் போகிறோமே?? இந்த அக்ரூரரும் அப்பா வசுதேவரும் எப்படியோ தநுர்யாகத்துக்கு வந்த விருந்தாளிகளை நம் உபநயனம் வரை இருந்து செல்லுமாறு சொல்லி நிறுத்தி விட்டனர். குரு சாந்தீபனியை விருந்தாவனம் வந்தப்போவே நமக்குப் பிடித்துவிட்டது. அங்கேயே சில ஆயுதப் பயிற்சிகளை குரு சொல்லிக் கொடுத்திருக்கார் என்றாலும், இழந்து போன நாட்களில் கற்க முடியாதவற்றைக் கற்கவேண்டும் என்பது தந்தை வசுதேவரின் விருப்பம். ம்ம்ம்ம்ம்??? தந்தை என்னை இன்னமும் சிறு குழந்தையாகவே நினைக்கிறாரே??? கொட்டும் மழையில் நந்தனின் கோகுலத்துக்குத் தூக்கி வந்த குழந்தை என்றே நினைத்துக் கொள்கிறார். சொன்னவற்றையே திரும்பத் திரும்பச் சொல்லி அறிவுறுத்துகிறாரே?? ம்ம்ம்ம்?? ஒருவேளை அரண்மனை வாழ்க்கைக்கு நாம் புதிது என்பதால் இருக்கும். அதனால் என்ன?? நாமும் பிறந்ததில் இருந்து அவரை விட்டுப் பிரிந்துவிட்டோமா?? அதான் இன்னமும் குழந்தையாகவே நடத்தி வருகிறார் போலும்! கண்ணனின் இதழ்களில் புன்னகை படர்ந்தது.
கம்சனின் இறுதிச்சடங்குகள் அனைத்துமே முழு அரச மரியாதைகளோடு நடந்து முடிந்தன. 12-ம் நாள் கடைசிச் சடங்கை அழுத வண்ணமே செய்து முடித்தான் உக்ரசேனன். ஆனாலும் இந்தப்பத்துப் பனிரண்டு நாட்களில் இதுவரையிலும் அறியாத, தெரியாத பல விஷயங்கள் கண்ணனுக்குத் தெரிய வந்தன. புரிய ஆரம்பித்தன. இந்த அரசபோகம் என்பது கண்ணுக்குத் தெரியாத மாயச் சுழலாகவும் இருக்கிறது. ஒரு சமயம் இதில் அகப்பட்டுக் கொண்டோமோனு வருத்தமாயும் இருக்கிறது. மற்றொரு சமயம் அரசபதவியை வேண்டாம்னு மறுத்தது சந்தோஷமாயும் இருக்கு. போகட்டும், இது வரை படிக்கமுடியவில்லை. கோகுலத்திலும், விருந்தாவனத்திலும் ஒரு மாதிரியாகப் போய்விட்டது. இதுவரை படிக்கமுடியாத அனைத்தையும் இப்போது கற்றுவிடவேண்டும். மதுரா நகரைக் காக்கவும், அரசாட்சி புரியவும் உக்ரசேனர் இருக்கிறாரே?? ஆனாலும் அவரால் எதுவும் முடியவில்லை. ஏற்கெனவே பலஹீனம், பல வருடங்கள் சிறைவாசத்தில் தளர்ந்த உடலும், மனமும். தந்தை வசுதேவரும், பெரியவர் அக்ரூரரும், மதுராவில் சகஜ நிலையை நிலைநாட்டப் பிரயத்தனப் பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
எல்லாவற்றிலும் முக்கியமாய் கிருஷ்ணனுக்குத் தன் வம்சாவளியைப் பற்றிய அறிவு இப்போது போதிக்கப் படுகிறது. மேலும் பல யாதவர்கள் கம்சனின் கொடுமை தாங்காமல் மதுராவை விட்டு ஓடியவர்கள் திரும்பிக் கொண்டிருந்தனர். அனைவருக்கும் தங்கள் குலப் பெருமை அதிகமாகவே இருந்தது. பெருமைக்கும், திறமைக்கும், அரசாட்சி புரிவதில் நிகரற்றவனும் ஆன யயாதி மன்னனின் மகனான யதுவின் குலத் தோன்றல்கள் தாங்கள் என்பதில் அவர்களுக்கு மிகவும் பெருமையாக இருந்தது. ஆனாலும் குலப் பெருமையையும், குடிப்பெருமையையும் மட்டும் நினைவில் கொண்டு ஒதுங்கி இருக்காமல், மற்ற இனத்தவருடனும், மற்றக் குலத்தவருடனும் திருமண பந்தங்களும் ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றனர். ஆர்ய வர்த்தத்தைச்சேர்ந்த இளவரச, இளவரசிகள் மட்டுமல்லாமல், அதை விடுத்து கெளடதேசம், திராவிடம் போன்ற நாடுகளின் அரசகுமாரிகளையும், அரசகுமாரர்களையும் மணந்து கொண்டு தங்கள் வம்சத்தைப் பெருக்கிக் கொண்டிருக்கிறார்கள். அவ்வளவு ஏன்?? எவன் பெயரால் இந்தக் குலம் அழைக்கப் படுகின்றதோ அந்த யதுவின் ஒரு மனைவி நாகர் குலத்தின் இளவரசியாவாள். அவளுக்குப் பிறந்த ஐந்து பிள்ளைகளில் ஒருவனான மாதவனின் குலத்திலேயே இந்த அந்தகர்கள், விருஷ்ணிகள், ஷூரர்கள் எனப் பிரிந்திருக்கின்றனர். அப்பாடி, ஒருவழியாக யாதவகுல வம்சாவளியைப் பற்றிப் புரிந்து கொண்டாயிற்று. இப்படிக் கலந்து திருமணம் செய்து கொண்டாலும், யாதவ குலத்து ஆண்கள், தங்களவில் ஆரிய வர்த்தத்தின் வழிமுறைகளையும், தர்ம சாஸ்திரங்களையுமே கடைப்பிடித்தனர். அதில் அவர்கள் உறுதியையும் காட்டி வந்தார்கள். தர்மத்தை நிலை நாட்டி அதர்மத்தை வேரோடு களைவதிலும் உறுதியைக் காட்டி வந்தனர். இதில் தங்களை எவராலும் வெல்லமுடியாது என்ற எண்ணமும், பெருமையும் அவர்களுக்கு உண்டு. ம்ம்ம்ம் அதுவும் இப்போது கம்சன் இறந்ததும் மீண்டும் வேத கோஷங்களும், யாகங்களும், யக்ஞங்களும் நகரிலும், நாட்டில் நாலா பக்கமும் நடக்க ஆரம்பித்துவிட்டன. வேதியர்களும், தபஸ்விகளும், ரிஷி, முனிவர்களும் சற்றும் கலக்கமின்றித் தங்கள் கடமைகளைச் செய்ய ஆரம்பித்துவிட்டார்கள்.
இந்த யாதவர்களிலிருந்து பிரிந்த ஒரு கிளை போஜர்கள் என அழைக்கப் படுகிறது. இந்த போஜ நாட்டு அரசனான குந்திபோஜனுக்கே வசுதேவரின் தமக்கையான ப்ரீத்தா சுவீகார புத்திரியாகக் கொடுக்கப் பட்டாள். குந்திபோஜன் வளர்த்த காரணத்தால் அவளைக் குந்தி என அழைத்தனர். இவள் தான் அஸ்தினாபுரத்தைத் தலைநகராய்க் கொண்டு ஆண்டு வந்த பாண்டு அரசனுக்கு வாழ்க்கைப் பட்டு மூன்று குமாரர்களைப் பெற்றிருக்கிறாள். இவளின் இளையாள் ஆன மாத்ரிக்குப் பிறந்த இரண்டு குழந்தைகளையும், தன் கணவனான பாண்டுவின் மரணத்தில் கூடவே உடன்கட்டை ஏறிவிட்ட மாத்ரிக்குக் கொடுத்த வாக்குறுதியின் படி தன் குழந்தைகளாகவே வளர்த்துவருகிறாள். இந்தக் கதையைச் சில அத்தியாயங்களுக்குப் பின்னர் சற்றே விரிவாய்ப் பார்ப்போம். பாண்டுவிற்கு ஏற்பட்ட சாபம், அதன் விளைவுகள், குந்திக்கு துர்வாசர் கொடுத்த மந்திர ஜபம் என நீண்டதொரு விபரங்கள் அடங்கியவை. இந்த போஜ வம்சத்தில் வந்த இன்னொரு மன்னன் சேதி என்னும் நாட்டை ஆண்டு வந்தான். தாமகோஷன் என்னும் பெயருள்ள இந்த அரசனுக்கு குந்தி, வசுதேவர் ஆகியவர்களின் உடன்பிறந்த தங்கையான ஷ்ருதஷ்ரவா என்னும் பெண்ணைத் திருமணம் செய்து கொடுத்திருந்தது. அவர்களுக்கு ஒரு பிள்ளை இருக்கிறான். அவன் பெயர் சிசுபாலன். இந்த சிசுபாலனை கண்ணனின் உபநயனத்திற்கு அழைத்திருந்தனர்.
தனது அத்தை மகனும், தன் சகோதரன் முறை ஆனவனும் ஆன சிசுபாலன் வரவுக்கு மிகவும் ஆவலுடன் காத்திருந்தான் கண்ணன். மேலும் இங்கே மதுராவில் அனைவரும் ஜராசந்தன், ஜராசந்தன் என்று அந்த மகத நாட்டுச் சக்கரவர்த்திக்குப் பயந்து கொண்டே இருக்கின்றனர். எந்த நேரம் வந்துவிடுவானோ எனப் பயம் அனைவருக்கும். மேலும் அவன் கம்சனின் மாமனார். தன்னிரு பெண்களையுமே கம்சனுக்குத் திருமணம் செய்து கொடுத்திருந்தான். இப்போது இருவருமே கணவனை இழந்துவிட்டனர். இதை ஜராசந்தன் சும்மா விடுவானா?? கம்சன் அவனுக்கு மறு மகன் மட்டுமல்ல, உண்மையான விஸ்வாசம் மிகுந்த அடிமை மாதிரியும் இருந்தான். அவ்வளவு சுலபமாகவா மதுராபுரி மக்கள் ஜராசந்தனின் மறு மகன் மரணத்தை ஏற்றுக் கொண்டனர்?? ஜராசந்தனுக்கு ஒற்றர்கள் மூலம் செய்தி போயிற்று. அவன் மதுரா நகரையே அழித்துவிடுவதாய்க் கூறி இருப்பதாய்ச் சொல்லுகின்றனர். கிருஷ்ணனுக்கு நன்கு புரிந்துவிட்டது, கம்சனின் மரணத்தின் மூலம் அப்போது மாபெரும் சக்கரவர்த்தியாய் இருந்த ஒருவனின் விரோதத்தை சம்பாதித்துக் கொண்டுவிட்டோம் என்று. அது மட்டுமா?? அந்தச் சக்கரவர்த்தியின் பெருமைகளிலும், அவனுடைய வீரத்திற்கும் இது ஒரு மரண அடிபோலும் விழுந்திருக்கிறது. என்ன செய்வானோ???
ஜராசந்தனை இந்த வேளையில் சமாளிக்கும் வல்லமை கொண்டவன் தாமகோஷன் ஒருவனே. அனைத்து யாதவர்களும் ஒரு மனதாக இதை நினைத்தார்கள். என்ன தான் வசுதேவரின் சொந்தத் தங்கையை மணந்திருந்தாலும் தாமகோஷன் வலுவான கூட்டணி அமைத்திருந்தான் ஜராசந்தனுடன். ஆகவே அவன் சிசுபாலனை அழைத்து வருவதால் ஒரு வேளை, ஒருவேளை சிசுபாலனைத் தலைவனாக்கினால், ஜராசந்தன் அமைதியடையலாமோ?? மேலும் சிசுபாலன் குழந்தைப்பருவத்தில் இருந்தே தன் பாட்டன் வீடான மதுராவின் மாளிகைக்கு வந்து போய்க் கொண்டிருந்தான். இங்கே பெரியோர் அனைவருக்கும் அவன் மிகவும் பிடித்தமானவனும் கூட. ஜராசந்தனின் கொடுங்கோன்மையை அடக்க சிசுபாலனை விட வேறு யாரும் சிறந்தவரில்லை என யாதவத் தலைவர்கள் நினைப்பதில் எந்த ஆச்சரியமும் இல்லை.
மேலும் இந்த விதர்ப்ப நாட்டு அரசன், பீஷ்மகன் அவனும் போஜ இனத்தைச் சார்ந்திருந்தாலும் ஜராசந்தனுடனேயே நட்பு கொண்டிருக்கிறான் என தந்தை வசுதேவர் சொல்கிறார். ஆகவே மதுராவை அப்படி ஒருவேளை தாக்க ஜராசந்தன் நினைத்தால் பீஷ்மகன் எந்த உதவியும் செய்யவும் மாட்டான் என்று தந்தை உறுதியாகச் சொல்கிறார். அந்த இளைய போஜன், பீஷ்மகனின் மகன் ருக்மி, மண்டை கர்வம் பிடித்தவனாய் இருப்பான் போல. மேலும் அவன் தன் தந்தையிடம் கூறி நமக்கு உதவி செய்ய விடமாட்டான். இயல்பாகவே கம்சனின் நண்பன் வேறே. என்னதான் குரு சாந்தீபனி கேட்டுக் கொண்டதால் நம் உபநயனத்துக்குத் தங்கினாலும், அவன் நமக்கு எந்த உதவியும் செய்யப் போவதில்லை. ஆஹா, அதோ கோஷங்கள் கேட்கிறதே! அத்தையும், சேதிநாட்டு ராணியும் ஆன ஷ்ருதஸ்ரவா வந்துவிட்டாள் போலிருக்கிறதே?? கண்ணன் அங்கே சென்றான். இது என்ன? மன்னர் தாமகோஷர் ஏன் வரவில்லை?? அவர் ஏதோ நொண்டிச்சாக்குச் சொல்லிவிட்டார் வர முடியவில்லை என்று. ஷ்ருதஸ்ரவா சொன்னாள். மேலும் ரகசியமாய்ச் சொன்னாளாம், ஜராசந்தனின் மாப்பிள்ளையைக் கொன்ற கிருஷ்ணனின் உபநயனத்துக்கு பகிரங்கமாய் வருவதற்கு தாமகோஷருக்கு விருப்பமில்லையாம். அவள் குமாரன் ஆன சிசுபாலனோ? அவன் என்ன சொன்னானாம்?? கலகலவெனச் சிரித்தாள் அத்தை.
இந்த மாட்டிடையனுக்கு உபநயனமா?? ஹாஹ்ஹா! ஹாஹ்ஹா! நான் பிறந்ததிலிருந்தே ஒரு பெரிய நாட்டின் இளவரசன். என் தகுதியை விட்டுவிட்டு மாட்டிடையனின் உபநயனத்தில் நான் எங்கனம் கலந்து கொள்வது? கண்ணன் இதழ்களில் மீண்டும் புன்னகை அரும்பியது. ஆம், நான் மாட்டிடையன் தான், அதனால் என்ன?? நான் ஒருபோதும் அதை மறுக்கப் போவதில்லை. ஆனால், ஆனால் இந்த இடையன் என என்னை இகழ்ச்சியாக நினைப்பவர்களுக்கு, அவர்கள் நினைப்பு தவறு எனப் புரியவைப்பேன்.
கண்ணன் புன்னகை பூத்த முகத்துடனேயே அவ்விடம் விட்டு அகன்றான்.
//ம்ம்ம்ம்ம்??? தந்தை என்னை இன்னமும் சிறு குழந்தையாகவே நினைக்கிறாரே??? //
ReplyDeleteம்ம்ம்ம்ம்?? அம்மாக்கள் அப்படி நினைக்கிறதிலாச்சரியமில்லை. ஆனா அப்பா? அப்படியும் இருப்பாங்க போல இருக்கு!
இப்ப எனக்கு தெரியாத விஷயங்களில கதை போயிட்டு இருக்கு. ம்ம்ம் நடக்கட்டும்.
வாங்க திவா, உங்களுக்குத் தெரியாத விஷயம்ங்கறது கொஞ்சம் ஆச்சரியமாத் தான் இருக்கு.
ReplyDelete//ஆனா அப்பா? அப்படியும் இருப்பாங்க போல இருக்கு!//
ஹிஹிஹி, நம்ம வீட்டிலே அப்பாவையும், பிள்ளையையும் பார்த்தால் இப்படிக் கேட்டிருக்க மாட்டீங்களோ? ஒண்ணொண்ணுக்கும் கவலைப்படுவார்! :))))))))))))))))) நான் அப்படியே உல்டா!!!!!!