உடம்பு இன்னும் சரியாகவே இல்லை எனக்கு. அதோடு குளிக்கும்போது வெந்நீர் பட்டு எரிச்சல் அதிகம். ஆனாலும் எல்லாத்தையும் பொறுத்துக்கொண்டே கிளம்பினேன். போகும்போதே எண்கண் முருகனைத் தரிசனம் செய்து கொண்டு பின் திருவாரூர் போயிட்டு, அங்கே தரிசனம் முடிச்சுட்டுப் பின்னர் எட்டுக்குடியும், சிக்கலும் தரிசனம் முடிச்சுக்கணும்னு திட்டம். மதிய உணவுக்கும் சற்று ஓய்வுக்கும் பின்னர் திரும்பும் வழியில் திருக்கண்ண மங்கையும், திருச்சேறையும் பார்க்கவும் திட்டம். எல்லாம் முடிச்சுட்டுத் திரும்ப ஏழு மணி ஆயிடும். அதுக்கப்புறம் சாப்பிட்டு அறையைக் காலி செய்தால் மிஞ்சிப் போனால் இரண்டு மணி நேரம். ஓடியே போயிடும்னு நினைச்சோம். ஓடினது நேரமும் இல்லை எதுவும் இல்லை. மனதில் இருந்த உற்சாகமும், சந்தோஷமும் தான்.
எங்களோட திட்டம் ஓட்டுநருக்குச் சரியா வரலை. ஏழே முக்காலுக்கு எண்கண் போயிட்டோம். ஆனாலும் அவர் கோயில் திறந்திருக்குமானு சந்தேகப் பட்டுத் திருவாரூருக்கும் போகாமல் நேரே எட்டுக்குடி ஓட்டிட்டுப் போயிட்டார். இந்த இடத்தில் சொல்ல வேண்டிய முக்கியமான செய்தி ஒண்ணும் இருக்கே. கும்பகோணத்திலிருந்து குடவாசல் வரை சாலை கொஞ்சம் மோசம் தான். சாக்கோட்டை அருகே ரொம்ப மோசமான சாலை. ஆனால் குடவாசலில் ஆரம்பிச்சு திருக்குவளை வரைக்கும் சாலை பாருங்க, சும்மா கண்ணாடி போல் பளபளப்பு, ஜொலி ஜொலிப்பு, சாலை விரிவாக்கமும் அழகாய்ச் செய்து, பளபளவென்ற சாலை! ஒரே ஓட்டம் தான் வண்டி. அலுங்காமல், குலுங்காமல் போனது. ஒரே தடங்கல் என்னன்னா, இந்தப் போர் அடிக்கிறவங்க சாலையிலேயே கொண்டு வந்து போரடிக்க கதிர்களைக் கொட்டுவது தான்.
ஒரு காலத்தில் ஆனை கட்டிப் போரடிச்சாங்க மதுரையிலேனு சொல்லுவாங்க. இங்கே ஆனைகட்டிப் போரடிக்காட்டியும், வயலுக்கு அருகே களம்னு ஒண்ணு போட்டு,அதைச் சாணியால் மெழுகி, அங்கே பிள்ளையார் பிடிச்சு வச்சு, கோலம் போட்டு, தேங்காய் உடைத்து, வெற்றிலை, பழம், பூ நிவேதனம் பண்ணி,இத்தனையும் போட்டுட்டு முதல்லே வீட்டுப் பெரியவங்க கையாலே கொட்டச் சொல்லுவாங்க. அப்புறமாக் களத்திலே அறுவடை எல்லாம் வந்து முடிச்சதும் தூத்துவாங்க. இப்படித் தான் வேலை நடக்கும். இப்போ எந்த வயலிலும் களம்னு ஒண்ணு இல்லவே இல்லை. எல்லா அறுவடையும் சாலைக்கு வருது போரடிக்க. மாடுகட்டிப் போரடிச்சது எல்லாம் கற்காலமோனு தோணுது. அதே போல் அறுக்கவும் ஆட்கள் அங்கே ஒண்ணு, இங்கே ஒண்ணுனு எண்ணினாப்போல் சில வயல்களில் தான் பார்க்கமுடிந்தது. எல்லாம் இயந்திரமயம். உடல் உழைப்பே இல்லை.
கூலி கொடுத்தால் கூட அறுக்க ஆட்கள் வருவதில்லையாம். இலவச அரிசி கிடைக்குது, இலவச சேலை கிடைக்குது, இலவச தொலைக்காட்சி கிடைக்குது. ஏன் கூலிக்கு மாரடிக்கணும்? இதுவே மக்கள் நினைப்பு என்று வயல் வைத்திருப்பவர்களின் கருத்து. விவசாயம் பண்ணவோ, நாற்று நடவோ, கதிர் அறுக்கவோ ஆட்கள் கிடைப்பதில்லை. அவ்வளவு ஏன் ஊரிலேயே தூர்ந்து போயிருக்கும் குளங்களைச் சுத்தம் செய்யவோ, அல்லது பாசன வாய்க்கால்களில் மண்டிக்கிடக்கும் ஆகாயத் தாமரைகளை அகற்றவோ மக்கள் முயல்வதில்லை. அதெல்லாம் அரசாங்கம் பார்த்துக்கும் என்று அவர்கள் எண்ணம். நாம் ஏன் செய்யணும்னு அவங்களுக்குச் செய்ய இஷ்டம் இல்லை. வெளிப்படையாகவே தெரியுது. காவிரியின் துணை நதிகளெல்லாம் பார்த்தீனியமும், ஆகாயத் தாமரையும் மண்டிக்கிடக்கு. அகற்ற யாருக்கும் மனமும் இல்லை, நேரமும் இல்லை. மானாட, மயிலாடிக் கொண்டு, சூப்பர் சிங்கரைப் பார்த்து மகிழவே நேரம் பத்தலை மக்களுக்கு. அதே போல் ஒரு காலத்தில் அரிசி மாவில் கோலம் போட்ட இடங்களில் இப்போது கல்மாவும் வந்துவிட்டது.
எல்லாக்கூத்தையும் பார்த்துக்கொண்டே போனோம். என்ன அருமையான சாலை?? நம்ம மாநில அரசால் போடப்பட்ட சாலைனு நம்பிக்கையே வரலை. நம்ம ரங்க்ஸும், ஓட்டுநரும் தேசீய நெடுஞ்சாலைனு சத்தியமே பண்ணினாங்க. ஆனால் நாம கண்டுபிடிச்சுட்டோமில்ல?? மாநில அரசுச் சாலைதான்னு. போர்டு பெரியதாய் இருந்ததைக் காட்டினோம். அவ்வளவு அருமையான சாலை வசதி தமிழ்நாட்டின் கிராமங்கள் பூராவுக்கும் இருந்தால் என்ற அல்பத் தனமான ஆசையோடு பயணித்தோம். வண்டி ஆட ஆரம்பிச்சது. என்னடா திருஷ்டியானு பார்த்தால், திருக்குவளை தாண்டி விட்டது. எட்டுக்குடி நோக்கிச் சென்று கொண்டிருந்தது. சாலை சுமாஆஆர் தான். என்ன செய்யமுடியும்?? போய்த் தான் ஆகணும்.
இந்த எட்டுக்குடி, சிக்கல், எண்கண் மூன்றிலும் இருக்கும் முருகன் சிலையைச் செய்தவர் ஒரே சிற்பி. இந்தச் சிற்பங்கள் பற்றிய கதை சென்ற வருஷம் எழுதி உள்ளேன். அப்போதிலிருந்து போயிட்டு வரணும்னு இப்போத் தான் கிடைச்சிருக்குனு நினைச்சுட்டு கோயிலுக்குப் போனோம். உள்ளே சந்நிதியில் முருகனுக்கு விபூதிக்காப்பு நடந்துட்டு இருந்தது. அர்ச்சகர் தன்னை மறந்து முருகன் அழகில் மயங்கி அலங்காரம் செய்தார். கோயில் பற்றிய விபரங்கள் ஆன்மீகப் பயணம் பக்கத்தில் தனியே வரும். அலங்காரம் முடிச்சு தீப ஆராதனை காட்டி முருகன் பற்றிய கதையைச் சொல்லி அனுப்பி வைச்சார். பிராஹாரம் சுத்திட்டு வெளியே வரும் போது நவகிரஹ சந்நிதி. ஆனால் அது என்ன மலைமேலே இருக்கிறாப்போல் இவ்வளவு உயரத்திலே இருக்கே?
நான் தயங்கினேன். அதுக்குள்ளே நம்ம ரங்க்ஸ் நீ மேலே ஏறமுடியாது. இந்த உடம்போட ஏறும் வேலை வச்சுக்காதேனு சொல்லிட்டார். அங்கே சனைசரனுக்கு எள் தீபம் போட தீபம் விற்றுக்கொண்டிருந்த பெண்ணோ, அதெல்லாம் ஏறலாம் சார், நல்லாப் பாருங்க மேலே சாக்குப் போட்டு வச்சிருக்கேன் என்றார். இரண்டு படிகள் தான் ஏற. ஆனாலும் ஒவ்வொரு படியும் இரண்டு அடிக்கு மேல் உயரம். மேலே சின்ன நடைபாதை போன்ற இடத்தில் சுற்றிக் கம்பிக்கிராதி போட்டு அதற்குள் ஒரு மூலையில் நவகிரஹங்களும், தனியே எதிரே சனைசரரும் குடி கொண்டிருந்தனர். நம்ம ரங்க்ஸுக்கு அன்று சனிக்கிழமை என்பதால் அவர் வழக்கமாய்ப் போடும் எள் தீபத்தை அங்கேயே போடலாமே என்ற எண்ணம். அதுவும் சனைசரர் தனியே இருக்காரே? அந்தப் பெண்மணியும் வாங்க சார், போணி பண்ணுங்கனு கூப்பிடவே ஒரு தீபத்தை வாங்கிக் கொண்டு மேலே ஏறினார்.
நான் கீழேயே நின்றுகொண்டிருந்தேன். திக் திக் னு இருந்தது. ஆனாலும் அவர் மேலே ஏறி அங்கே சனைசரருக்கு எதிரே போட்டிருந்த சாக்கில் காலைத் துடைத்துக்கொண்டு விளக்கை ஏற்றி வைத்துவிட்டு, நவகிரஹம் சுற்றினார். அப்போவே வழுக்கி இருந்திருக்கிறது. எனக்குப் புரியலை. சமாளித்துக்கொண்டு சுற்றி இருக்கிறார். ஆனால் நல்லவேளையா நீ வரலை, இங்கே ஒரே வழுக்கல் என்றும் என்னிடம் கூறினார். சுற்றி முடிச்சுவிட்டுக் கீழே இறங்கணும். வேறே ஒருத்தர் உள்ளூர்க்காரர் மேலே ஏறி விளக்குப் போட்டுக் கொண்டிருந்தார். இவர் கீழே இறங்கக் கம்பிக்கிராதியைப் பிடித்துக் கொண்டு மேல் படியிலிருந்து முதல் படிக்கு இறங்கினார். அங்கே ஒரு விநாடி நிதானித்துக்கொண்டு இரண்டாம் படியில் காலை வைக்கக் காலைத் தூக்கினது தான் தெரியும். சடபுடவென்று சப்தத்தோடு என்ன நடக்கிறது என்பதே புரியாத வேகத்தோடு கீழே வந்து விழுந்தார். நான் கத்திய கத்தலில் கோயிலில் இருந்த அனைவரும் கூடிவிட்டார்கள்.
:(! அடி ஏதுமின்றி லேசாப் போயிருக்கணும்னே வேண்டிக்கறேன். இப்போ நலம்தானே?
ReplyDeleteஅடப் பாவமே. நல்ல படி ஒண்ணும் அடி பலமா இருந்திருக்காம இருக்கணுமே ! ஹாஸ்பிடல் பக்கத்துல இருக்கிற ஊர் தானே?
ReplyDeleteஅச்சச்சோ. என்னம்மா ஆச்சு? மாமா எப்படி இருக்கார்? நீங்க எப்படி இருக்கீங்க? சீக்கிரம் சொல்லுங்க.
ReplyDeleteஎன்ன ஆச்சு கீதா.
ReplyDeleteராமச்சந்திரா.! எங்கதான் நிறுத்தறதுன்னு கணக்கு இல்லையா.
அடடா...இப்போ மாமா நலந்தானே?...
ReplyDeleteவல்லியம்மா சொன்னது போல, எந்த இடத்தில் தொடரும் போடறதுன்னு இல்லையா?
என்னப்பா ஆச்சு? அடி ஏதும் பலமா?
ReplyDeleteஇந்த வம்பெல்லாம் பார்த்தால்......
மனசுக்குப் பேஜாராப் போயிருது. கோவிலுக்குப்போறதே நிம்மதிக்காகன்னு இருந்த காலமும் மாறிப்போச்சே:(
படித்துக் கொண்டேபோய் இறுதியில் கவலையாகி விட்டேன்.
ReplyDeleteரா.ல. அடி நல்லாவே பட்டது. அதுவும் ஏற்கெனவே அவருக்குக் கழுத்து பிரச்னை. இப்போக் கொஞ்சம் தேவலை.
ReplyDeleteகவிநயா, இப்போ ஓகேம்மா
வல்லி, தொலைபேசி விசாரித்ததுக்கு ரொம்ப நன்றிம்மா. அங்கே நிறுத்தாமல் எழுதறதுக்குனு இருந்தப்போ தொலைபேசி அழைப்பு! பேசிண்டே க்ளிக் கொடுத்துட்டேன்.
மெளலி, நலமா இருக்கார்.
துளசி, விரிவா எழுதறேன் பாருங்க.
மாதேவி, ஆறுதலான வார்த்தைகளுக்கு நன்றிம்மா.
ஜெயஸ்ரீ, உங்க பின்னூட்டத்தைக் கவனிக்கலை. ஆஸ்பத்திரி எதுவும் பக்கத்திலே இல்லை. ஆரம்ப சுகாதார மையங்கள் தான் கிராமம் தானே!
ReplyDelete