கண்ணன் என்னும் மன்னன் பேரைச் சொல்லச் சொல்ல!
இப்போது நாம் சற்றுப் பின்னால் செல்லவேண்டும். பின்னாலேன்னா உட்கார்ந்திருக்கிற இடத்தை விட்டுப் பின்னாடி இல்லை. காலத்தில் சற்றுப் பின்னால் செல்லவேண்டும். கம்சனின் இறுதிச் சடங்குகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன. கண்ணனும் அதில் பங்கு பெற்றிருந்தான். தன் மாமனின் உடலைச் சிதையில் கிடத்தியதையும், அரச மரியாதைகள் அளிக்கப் பட்டதையும், கடைசியில் தன் பெரிய தாத்தாவான உக்ரசேனர் தன் ஒரே மகனுக்குச் சிதையில் தீ மூட்டியதையும் கண்டான். உக்ரசேனரின் கண்களில் இருந்து கண்ணீர்ப் பிரவாஹம். நிச்சயமாய் அது கம்சன் இம்முறையில் இறந்தான் என்பதால் இருக்காது. கண்ணனுக்கு அதில் உறுதி இருந்தது. கம்சன் தன்னைத் தானே அனைவருக்கும் தலைவன், அனைவரையும் வழிநடத்துபவன், எந்த ஒரு மனிதரையும், வாழ வைக்கவோ அல்லது இறக்கச் செய்யவோ தன் கையில்தான் அதிகாரம் உள்ளது என்ற முறையில் நடந்து கொண்டதும், அவன் கொடுங்கோன்மை எல்லையற்றுப் பரவிப்பல சின்னஞ்ச்சிறு குழந்தைகளைக் கூடக் கொல்ல வைத்ததையும், அப்பாவி மக்களும், நல்ல தேர்ந்தெடுத்த்த வீரர்களும் கம்சனுக்கு அடிபணியாததின் காரணமாய்ப் பலியானதையும் நினைத்திருப்பார். கம்சன் தவறு செய்துவிட்டான். மாபெரும் தவறு செய்துவிட்டான். ஆனால் அவன் பிறந்த அதே யாதவக் குலத்தில் தான் அக்ரூரர் போன்ற எப்போதுமே பகவத் தியானத்தில் இருக்கும் நபர்களும் பிறந்திருக்கின்றார்கள். ம்ம்ம்ம்ம் நல்லவேளையாக நான் நாரதரின் தீர்க்க தரிசனத்தை மெய்யாக்கினேன். கொடுங்கோலன் ஒருவனைக் கொன்றேன். ஆம், உலகில் சத்தியமும், உண்மையும், அமைதியும் நிலவ வேண்டுமானால் அப்பாவிப் பொதுமக்கள், தர்மவான்கள் காப்பாற்றப் படவேண்டுமானால் கொடுங்கோன்மை அறவே ஒழிய வேண்டும். தர்மத்தை நிலை நாட்டவேண்டும். அது ஒன்றே என் கடமை. நான் பிறந்ததின் நோக்கமும் அதுவே. என்ன வந்தாலும் சரி, தர்மத்தின் பாதையை விட்டு விலகமாட்டேன். அந்தப் பர வாசுதேவனின் விருப்பமும் அதுவாய்த் தான் இருக்கும்.
கண்ணனுக்கு இப்போது தன் வளர்ப்புத் தந்தையான நந்தனைப் பார்க்கவேண்டும், பார்த்தே தீரவேண்டும். தூரத்தில் இருந்து கம்சனின் இறுதிச் சடங்குகளைப் பார்த்துக் கொண்டிருந்தான் நந்தன். ம்ம்ம்ம்ம்ம் அப்பா, நல்ல அப்பாதான். மூன்று நாட்கள் முன் வரையிலும் அவருடைய செல்லப் பிள்ளையாகத் தானே இருந்தேன். இப்போது மூன்றே நாட்களில் எங்கள் உறவு முறை மாறிவிட்டதே? என்னை ஒரு இளவரசனாகவே அப்பா நடத்துகிறார். ம்ஹும் இது சரியில்லையே? எனக்குப் பிடிக்கவில்லையே. ஆனால் அப்பா ஒத்துக்கொள்ள மாட்டார். அவருக்குச் சரினு படுவதைத் தான் செய்வார். அப்பாவின் பார்வையில் நான் ஒரு அரசகுமாரன் இப்போது. ஆகவே அதற்குகந்த மரியாதைகளோட நடந்து கொள்கிறார். ம்ம்ம்ம் அப்பாவைப் போய்ப் பார்க்கணுமே??
“உத்தவா, நீ வருகிறாயா?? மூத்தவரே? அண்ணனாரே, நீரும் வருகின்றீரா? தந்தை தங்கி இருக்குமிடம் சென்று பார்ப்போமா?” கூடாரங்கள் அடித்து நந்தன் தங்கி இருக்குமிடத்துக்கு மூவரும் ஓட்டமாய் ஓடினார்கள். மூவரையும் ஒன்றாய் அணைத்துக் கொண்ட நந்தனால் கடைசியில் கண்ணனை மட்டும் விடுவிக்க முடியவில்லை. கண்ணன் குழந்தையாய் இருக்கையில் எவ்வாறு அவனைக் கிச்சுகிச்சு மூட்டிச் சிரிக்க வைப்பானோ அவ்வாறே இப்போதும் செய்ய ஆரம்பித்தான் தன்னை மறந்ததொரு நிலையில். கண்கள் நிரம்பின அனைவருக்கும். பேச முடியாமல் தவித்த நந்தன் ஒருவாறு சமாளித்துக் கொண்டு, “கண்ணா, நாங்கள் நாளை திரும்புகிறோம்.” என்றான். “தந்தையே, நாளைக்கேவா??” பலராமனுக்கு ஆச்சரியம் மூண்டது. “இன்னும் பதினைந்து நாட்களில் எங்கள் இருவருக்கும், மற்றும் உத்தவனுக்கும் உபநயனம் செய்விக்கப் போகின்றனர். தாங்கள் இருந்து எங்களை ஆசீர்வதிக்கவேண்டாமா? கண்ணா, என்ன பார்த்துக் கொண்டிருக்கிறாய்? சொல் அப்பாவிடம்.”
“இல்லை ராமா, அது வரையிலும் எல்லாம் தங்க முடியாதப்பாஉங்களிடமிருந்து பிரிய வேண்டிய நேரம் வந்துவிட்டது. அது எவ்வளவு சீக்கிரம் நடக்குமோ நடக்கட்டுமே.”
”அப்பா, ஏன் இவ்வளவு அவசரம்?” கண்ணன் கேட்டான்.
“கண்ணா, என் குழந்தாய்! நீ வசுதேவனால் என்னிடம் ஒப்படைக்கப் பட்ட நாளிலிருந்தே உன்னை நாங்கள் வெகு விரைவில் பிரிய வேண்டி இருக்கும் என்பதை எதிர்பார்த்தே இருந்தேன். அந்த நேரம் இப்போது வந்துவிட்டது. இதைவிட அருமையான சந்தர்ப்பம் வேறு ஏது? நீ அனைவர் மனதையும் வென்றுவிட்டாயப்பா. உன்னிடம் அனைவரும் அன்பு செலுத்துகின்றனர். எனக்கு அதைவிட வேறு என்ன வேண்டும்? நாரதர் சொன்ன வாக்கும் சரியாகிவிட்டது. நான் சந்தோஷமாய் இருக்கிறேன். “ பேசிக்கொண்டே இருந்த நந்தனுக்குக் குரல் குழறிற்று. கண்ணீர் பெருகக் கண்களைத் துடைத்துக்கொண்டே மேலும் சொன்னான்:” எனக்கு மனதில் துக்கமும் இருக்கிறதப்பா. நீங்கள் இருவருமே என் கண்களின் கருமணி போன்றவர்கள். என் பிள்ளைகளாய் நீங்கள் இருந்திருந்தால் கூட இவ்வளவு அன்பு செலுத்தி இருப்பேனா?? தெரியவில்லையப்பா, சந்தேகமே! உங்கள் இருவரையும் என் பொறுப்பில் ஏற்றதிலிருந்து எனக்கென ஒரு மகன் இல்லை என்ற குறையே எனக்கு ஏற்பட்டதும் இல்லை. ஆனால், ஆனால், இப்போது என் மனதில் ஓர் வெற்றிடம் ஏற்பட்டு விட்டது.” தன் மார்பைச் சுட்டிக் காட்டினான் நந்தன். மீண்டும் குரல் தடுமாறியது. “ஆனால், ஆனால் நான் ஈசனின் விருப்பம் என்னமோ அதன்படிதான் நடக்கமுடியும். இறைவன் விருப்பம் இதுதான். உங்கள் இருவருக்கும் மாபெரும் எதிர்காலம் காத்திருக்கிறது. நீங்கள் செய்யவேண்டியது எவ்வளவோ இருக்கிறது. சாதிக்க எத்தனையோ இருக்கிறது. நான் இங்கே இருந்து கொண்டு உங்கள் இருவருக்கும் தொந்திரவு கொடுக்க விரும்பவில்லை. என் வேலை முடிந்துவிட்டது. என்ன நடக்கணுமோ அது சீக்கிரம் நடந்து முடியட்டும். அங்கே விருந்தாவனத்தில் உன் தாய், ……உன் தாய் மனமொடிந்து என்னிடமிருந்து வரும் தகவல்களுக்குக் காத்திருப்பாள். இருண்டு போன அவள் வாழ்வில் ஒளி வீசாவிட்டாலும் ஒளியின் ஓரிரு கிரணமாவது என் மூலம் தான் அவளுக்கு ஏற்படவேண்டும். உடலாலும், உள்ளத்தாலும் வலுவிழந்து இருக்கும் உன் தாய்க்கு இப்போது நான் ஒருவனே ஆறுதல் அளிக்க முடியும்.”
பலராமனின் இளகிய மனம் இதைக் கேட்டதும் தவிக்க ஆரம்பித்தது. ஆனால் யதார்த்தவாதியான கண்ணனோ தகப்பன் சொல்லுவதில் உள்ள நியாயங்களைப் புரிந்து கொண்டான். “தந்தையே, உங்களுக்கு வேண்டுமென்ற போது என்னை நினனயுங்கள். உங்கள் அருகே நான் இருப்பேன்.” என்று சொல்ல, “என் குழந்தாய், என்னருகில் நீ எப்போதுமே இருக்கிறாயே? உன்னை வளர்த்து ஆளாக்கினதில் இருந்து என் வாழ்நாளை நான் வீணாக்கவில்லை எனப் புரிகிறது அப்பா. நாங்கள் நாளைக்கே கிளம்புகிறோம். “ என்றான்.
“நாளை நீங்கள் கிளம்பும்போது நாங்கள் வந்து பார்க்கிறோம் தந்தையே. உத்தவன் உங்களுடன் வந்து என் செய்தியையும், விருந்தாவனத்து மக்களுக்கு என் சார்பாகச் சில பரிசுகளையும் எடுத்துவருவான்.” கண்ணன் திரும்பி நடக்க, நந்தனோ, அங்கேயே நின்று கொண்டு கண்ணன் செல்லுவதைப் பார்த்துக் கொண்டிருந்தான். அப்படியே தன் கண்கள் மூலம் தன் அருமை மகனைத் தன் நெஞ்சம் நிறைய நிறைத்துக் கொள்ள முடிந்தால்????? மனம் வலித்தது நந்தனுக்கு. அந்த வலியில் கண்கள் தம்மையும் அறியாமல் நீரை வர்ஷித்தன.
திரும்பிப் பார்க்காமல் சென்று கொண்டிருந்த கண்ணனுக்கோ தன் இதயத்தில் அம்பு தைத்துவிட்டாற்போன்றதொரு உணர்வு. சொல்லத் தெரியாமல் எதையோ இழந்துவிட்டோமே, அது திரும்பக் கிடைக்காதே என்ற தவிப்பு. அவன் தன் வளர்ப்புத் தந்தை, தாயை மட்டுமின்றி கோகுலத்திலும், பின்னர் விருந்தாவனத்திலும் அவனுடன் பழகின நண்பர்களையும் நினைத்துக் கொண்டான். கோப ஸ்த்ரீகளை நினைத்தான். எல்லாவற்றுக்கும் மேல், எல்லாவற்றுக்கும் மேல் அங்கே ராதை, ராதை, அவன் அன்புக்குரிய ராதை அவன் உயிர், அவன் ஜீவன், அவன் பேச்சு, அவன் மூச்சு, அவன் எண்ணம், அவன் செயல் அனைத்துக்கும் சக்தியைக் கொடுக்கும் ராதை அங்கே இருக்கிறாள். அவள் தான் அவன் சந்தோஷத்தின் அதி தேவதை. அவன் இதய ராணி. உத்தவனைத் தனியே அழைத்துச் சென்று தன் செய்திகளைக் கூறலானான் கண்ணன்.
பின்னர் தன் தாய் தேவகியைக் காணச் சென்றான் கண்ணன். தேவகி அம்மா அவனிடம் இவ்வளவு பாசம் வைத்திருப்பது அவனுக்கு ஒரு ஆச்சரியம் தான். அவனைப்பெற்றதோடு சரி, வெறும் பெயரளவில்தான் தெரியும் அவளுக்கு. ஆனால் அவனைக் கண்டாலே அவள் கண்கள் எப்படி ஒளிர்கின்றன?? என் அருகாமையால் எவ்வளவு நம்பிக்கையும், உறுதியும் கிடைக்கிறது அவளுக்கு. ஆச்சரியம் தான். ஆனால் தந்தை வசுதேவரோ?? தாயைப் போல் உணர்ச்சி வசப்படுவதில்லை. ஆனாலும் எங்கே இளவயது ஆசையில் விளையாட்டுத்தனமான வீராப்பில் கண்ணன் தனக்குக் கொடுக்க வந்த மணிமகுடத்தை ஏற்றுவிடுவானோ என்று பய்ந்திருந்தார். கண்ணனே வேண்டாமெனச் சொன்னது அவருக்கு நல்லதாய்ப் போயிற்று. கண்ணனையும், பலராமனையும், உத்தவனையும் அழைத்துப் பல பழங்கதைகளை முக்கியமாய் யாதவ குல முன்னோர்களைப் பற்றியும்,க்ஷத்ரிய தர்மத்தைப் பற்றியும் விரிவாக எடுத்துச் சொன்னார். பிரம்ம தேஜஸ் அடைந்த பல ரிஷி, முனிவர்களைப் பற்றியும், அவர்களின் தவங்களையும் பற்றிக் கூறினார். கூடவே தன் அருமை அக்கா குந்தி பற்றியும், அவள் கணவர் பாண்டு பற்றியும், இன்னொரு மனைவியான மாத்ரி பற்றியும் அவர்கள் இருவருக்கும் பிறந்த ஐந்து குமாரர்களையும், ஐவரையும் குந்தி தன் சொந்தப் புத்திரர்கள் போலவே வளர்த்து வருவதையும் கூறினார். ஹஸ்தினாபுரத்தின் குரு வம்சத்தைச் சேர்ந்திருந்தாலும் அந்தக் குமாரர்களுக்கு அங்கே சரியான கவனிப்பு கிடைக்கவில்லை என்றும் கூறினார்.
இவை எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டாலும் கண்ணனின் கவனம் இன்னொன்றையும் கவனித்தே வந்தது. அது விதர்ப்ப நாட்டு இளவரசியான ருக்மிணி. எப்படியோ, எவ்வாறோ அவள் சந்தர்ப்பத்தை உருவாக்கிக் கொண்டு தன் தாய் தேவகியுடன் வந்து பொழுதைக் கழிப்பதைக் கண்ணன் கண்டான். வரும்போதெல்லாம் திரிவக்கரையும் கூட வருகிறாள்தான். ஆனாலும், இந்தப் பெண்ணின் நடத்தை விசித்திரமாக அன்றோ இருக்கிறது? எவ்வளவு பெரிய விழிகள்? அந்த விழிகளின் ஆழத்தில் நாமே மூழ்கிவிடுவோம் போல் உள்ளதே? நான் எங்கே சென்றாலும், என்ன செய்தாலும் அந்தப் பெரிய விழிகள் என்னை விழுங்கிவிடும் போல் பார்க்கின்றனவே?? இந்தப் பெண் தன்னிரு கண்களாலேயே என்னைத் தின்றுவிடுவாளோ?? கண்ணனுக்குத் தூக்கிவாரிப் போட்டது! என்ன இது?????????????
நன்றாக சொல்லியுள்ளீர்கள். நன்று. கண்ணன் ருக்மணி மணத்திற்காக ஆவலுடன் காத்துள்ளேம். நன்றி.
ReplyDeleteஹாஹாஹா, கண்ணன், ருக்மிணி சந்திப்பே இப்போத் தான் ஆரம்பம், அதுக்குள்ளே கல்யாணமா?? கண்ணன் செய்யவேண்டிய செயல்கள் நிறைய இருக்கே, அதில் கொஞ்சமாவது முடிஞ்சு துவாரகைக்கும் போனப்புறம்தான் கல்யாணம், அதுவரைக்கும் பொறுத்துக்கணும் நீங்க! :)))))))))))))
ReplyDelete