எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Wednesday, January 06, 2010

கண்ணன் வருவான், கதை சொல்லுவான், இரண்டாம் பாகம்!

உக்ரசேனரின் விருந்தோம்பல்! ருக்மியின் சந்தேகம்!



“வேறு என்ன அண்ணா??? அங்கே நான் திரிவக்கரையுடன் உட்கார்ந்திருந்தேன்.”

“அதைத் தான் சொல்லிவிட்டாயே? பின்னர்?”

“பின்னர் அங்கே வசுதேவரும், உக்ரசேனரும் வந்தனர். மற்றும் அனைத்து யாதவத் தலைவர்களும் அங்கே கூடினர். அனைவரும் நாட்டு நடவடிக்கையை அலசினார்கள். உக்ரசேனருக்கு வயதாகிவிட்டதாலும், அவரால் இவ்வளவு துக்கத்தில் அரசாளுவது முடியாது என்பதாலும் வலிமையும், இளமையும் உள்ள அரசனைத் தேர்ந்தெடுக்கப் பேசினார்கள். தேவகியின் மகன் கம்சனின் ராணிகளைக் கூடக் கண்டு ஆறுதல் சொல்லிவிட்டு வந்திருக்கிறான்.”

“ஆஹா, நாதா, ஆர்யபுத்திரா, பார்த்தீர்களா?? இவள் தேவகியின் பையன் பெயரைக்கூடச் சொல்ல மாட்டாளாம். அதைக் கவனித்தீர்களா? அதில் உள்ள தனித்துவம் புரிகிறதா உங்களுக்கு?” சுவ்ரதாவுக்கு அவள் கவலை.

“ஓஓஓஓ, சுவ்ரதா, பேசாமல் இருக்கமாட்டாயா சிறிது நேரம்?? முக்கியமான தகவல் கேட்கவேண்டும் எனக்கு.” ருக்மிக்குப் பொறுமை போய்விட்டது.

“அவர்கள் அனைவரும் ஒருமனதாக வாசுதேவ கிருஷ்ணனை அடுத்த அரசனாகத் தேர்ந்தெடுத்தனர்.””

“என்ன??? என்ன??’” ருக்மி எழுந்தேவிட்டான் பரபரப்பில். அவன் முகம் வாட்டமுற்றது. “அட கடவுளே?” எனத் தலையிலும் ஓங்கி அடித்துக் கொண்டான். அவன் செயல்களில் இருந்தே கிருஷ்ணன் அரசனாவதில் அவனுக்கு இஷ்டம் இல்லை என்பதும் புரிந்தது.

“ரொம்பவே வருத்தமடையாதே அண்ணா! சந்தோஷப் படு! கிருஷ்ணவாசுதேவன் தனக்கு அரசுரிமையே வேண்டாம் என மறுத்துவிட்டான். “

“என்ன?? அரசுரிமை வேண்டாம்னு சொல்லிவிட்டானா?” ஆச்சரியத்தில் ஆழ்ந்தான் ருக்மி.

“ஆம், அரசுரிமை தனக்கு வேண்டாம்னு சொல்லிவிட்டான். தான் இன்னமும் ஒரு இடைச்சிறுவனாகவே இருப்பதாகவும், அரசை ஏற்று நடத்தும் அளவிற்குத் தனக்கு அநுபவம் இல்லை என்றும் சொல்லிவிட்டான். இப்போ சந்தோஷமா உனக்கு?? மகிழ்ச்சி தானே?? ம்ம்ம்ம்ம்ம் எனக்குத் தான் கோபமாய் வருகிறது! ஆனால் என் கோபத்தை இங்கே யார் லட்சியம் செய்கிறார்கள்? யாருக்கும் அது பற்றிக் கவலையே இல்லை!” என்று சற்றே மனத்தாங்கலுடன் சொன்னாள் ருக்மிணி.

“ஆமாம், ஆமாம், இவள் அவனுடைய பட்டமஹிஷியாக ஆகலாம் என நினைத்துக் கொண்டிருந்தாள். அவள் எண்ணத்தில் மண் விழுந்துவிட்டது!” என்று ஏளனமாய்ச் சிரித்த வண்ணம் சொன்னாள் சுவ்ரதா.


அடுத்த நிமிஷம் அங்கே மாபெரும் சொற்போர் துவங்க இருந்தது. ஆனால் அப்போது உள்ளே நுழைந்த ஒரு பணிபெண்ணால் அது தடைப்பட்டது. இருவருக்குமே ஏமாற்றமோ?? பணிப்பெண் சொன்னாள்: குரு சாந்தீபனி தன்னுடைய இரு சீடர்களுடன் அங்கே வந்து கொண்டிருக்கிறார் என்பதே. அவந்தி தேசத்து இரட்டையர்களான அரசகுமாரர்கள் விந்தனும் அனுவிந்தனுமே அந்த சீடர்கள். மூவரும் ருக்மியைச் சந்திக்க வந்திருப்பதாய்த் தெரிவித்தாள். உடனே பெண்கள் இருவரின் நடவடிக்கையும் வியக்கத் தக்கவிதத்தில் மாறியது. தங்கள் சேலை முந்தானையில் தலையில் அரைமுக்காடாய்ப் போட்டுக் கொண்டு (வட இந்தியவழக்கம், பெரியவர்கள், மரியாதைக்குரியவர்கள் முன்னிலையில் இவ்வாறு இருக்கவேண்டும்) தயாராக நின்றார்கள். மூவரும் உள்ளே நுழைந்ததும், மூவருமே குரு சாந்தீபனியின் பாதங்களைத் தொட்டு வணங்கி, இளவரசர்கள் இருவரையும் முகமன் கூறி வரவேற்று அமர வைத்தனர்.

நல்ல உயரமும், அதற்கேற்ற உடல்கட்டும் கொண்ட குரு சாந்தீபனியின் புருவங்கள் இரண்டும் எப்போதுமே ஏதோ சிந்தனையிலும், கவலையிலும் இருக்கிறாரோ எனத் தோற்றமளிக்கும் விதமாய் முடிச்சிட்டே காட்சி கொடுத்தது. அவரின் கறுத்த தாடியும், வலிமையான தோள்கள், நீண்ட உறுதியான கைகள், எடுப்பான நாசி, மூக்கு, பளிச்சிட்ட கண்கள் அனைத்துமே அவரின் தவ வாழ்க்கையைப் பறை சாற்றிய அதே நேரம் ஆயுத சாஸ்திரத்திலும் கை தேர்ந்தவர் எனக் காட்டிக் கொடுத்தது. குரு சாந்தீபனி பரசுராமரின் சீடர் ஆவார். இருபத்தைந்து வருடங்களுக்கு முன்பாய் பார்கவ, பரசுராமரின் ஆசிரமத்திலிருந்து பயிற்சிகளை முடித்துக்கொண்டு குருவின் ஆசிகளோடு கிளம்பினார். ஒவ்வொரு ஊராக, ஒவ்வொரு நாடாகப் பயணம் செய்து அந்த அந்த தேசத்து மக்களில் விரும்பியவர்களுக்கும், அரசகுமாரர்களுக்கும், அரசர்களுக்கும் தேவையான ஆயுதப் பயிற்சியை அளித்துவந்ததோடு, வேத சாஸ்திரங்களையும் கற்பித்தார். வேத சாஸ்திரங்களும், ஆயுதப் பயிற்சியும் ஒன்றோடொன்று பிணைந்தே இருந்ததால் அதற்கேற்ற சீடப் பரம்பரையையும் உருவாக்கி வந்தார். பதினைந்து வருஷங்கள் முன்பாக அவந்தி தேசத்தில் அரசனின் விருப்பத்துக்கு இணங்க ஒரு பெரிய குருகுலத்தை ஆரம்பித்து நடத்தி வந்தார். தேச, தேசாந்திரங்களின் அரசர்கள் தங்கள் குமாரர்களையும், படைக்குத் தேவையான வீரர்களையும் அங்கே அனுப்பி வைத்து ஆயுதப் பயிற்சியிலும், போர்க்கலையிலும் தேர்ச்சி பெற வைத்தனர். குரு சாந்தீபனியின் ஆயுதப் பயிற்சிக்கூடத்திலும், வேதப் பயிற்சிக் கூடத்திலும் கற்பிக்காத விஷயங்களே இல்லை என்னும் அளவிற்கு பிரபலமும் அடைந்திருந்தார். ருக்மியும் சிறுவனாக இருந்த போதிலிருந்தே குரு சாந்தீபனியின் குருகுலத்திலே சேர்ந்தே படித்தான். இப்போது விந்தன், அனுவிந்தன் படிக்கும் முன்னேயே ருக்மி தன் குருகுலவாசத்தை முடித்துக்கொண்டு நாடு திரும்பி இருந்தான்.

குரு சாந்தீபனி சமீப காலமாகத் தேர்ந்தெடுத்த சில சீடர்களோடு ஒவ்வொரு நாடாகச் சென்று விசேஷப்பயிற்சி அளித்து வந்தனர். அது போல் இப்போது மதுராவிற்கு வந்திருக்கின்றார் போலும். ஆயிர்று இன்னும் சில தினங்களில் அவர் தன் சொந்த ஆசிரமத்திற்குச் சென்றுவிடுவார். ருக்மி தன் ஆசிரியரிடம், தன்னால் அவருக்கு ஏதாவது ஆகவேண்டுமா என விசாரித்தான். சாந்தீபனி ருக்மியைப் பார்த்து, “ருக்மி, உக்ரசேன மஹாராஜா உன்னை இன்னும் பதினைந்து நாட்கள் இங்கே தங்கும்படி வேண்டுகிறார்.” என்று சொன்னார். ருக்மி ஆச்சரியத்தின் எல்லையில், “என்ன??? இன்னும் பதினைந்து நாட்களா?” என வினவினான். மேலும் தீராத வருத்தத்துடனேயே தொடர்ந்தான். “இல்லை, குருதேவா, இல்லை, என்னை இங்கே அழைத்தது என் நண்பன் கம்சன். அவனே இல்லை இப்போது! நான் தங்க மாட்டேன். உடனே திரும்பப் போகிறேன்.”

“உன் மன நிலை புரிகிறது ருக்மி. ஆனால் என்ன செய்வது? அவன் விதி அப்படி! மேலும் உக்ரசேன மஹாராஜா மிகவும் வற்புறுத்திச் சொன்னார் உன்னைத் தங்க வைக்குமாறு.”

விந்தனும், அனுவிந்தனும் அதை ஆமோதித்துப் பேசினார்கள். குருவின் வார்த்தை எவ்விதம் மீறுவது என்ற தர்மசங்கடத்தில் ஆழ்ந்த ருக்மி யோசனையில் ஆழ்ந்தான். சாந்தீபனி அப்போது தான் நினைவில் வந்தது போல்,” ருக்மி, எப்படி இருந்தாலும் கம்சனின் இறுதிச்சடங்குகள் அனைத்தும் நிறைவேற இன்னும் பத்துதினங்கள் உள்ளனவே. ஆகவே அதுவரையிலும் யாருமே செல்ல முடியாதல்லவா?? துக்கநாட்களில் துக்க காரியம் முடியும் வரையிலும் வெளி ஊர்களுக்கோ, அல்லது நாட்டுக்கோ செல்வதை அனுமதிக்கமாட்டார்களே??? மேலும் இந்த துக்க காரியம் முடிந்ததுமே, ஒரு நல்ல நாளில் பலராமனுக்கும், கிருஷ்ணனும் உபநயனம் செய்து வைக்கப் போகின்றார்கள். க்ஷத்ரிய இளைஞர்களான அவர்களுக்கு உபநயனம் செய்வது அவசியம் அல்லவா?”

“இன்னுமா அவங்களுக்கு உபநயனம் நடக்கவில்லை?” ருக்மி சற்றே ஆச்சரியத்துடன் கேட்டான்.

“ஆஹா, உனக்குத் தெரியாதா ருக்மி? அவர்கள் இருவருமே இடையர்களால் வளர்க்கப் பட்டனர் என்று??? அனைவரும் அறிந்த செய்திதானே அது?? இப்போது இந்தச் சடங்குகளைச் செய்து அவர்களை க்ஷத்திரிய தர்மத்தை மேற்கொள்ள வைக்கவேண்டும்.”

“குருதேவா? அந்தக் கிருஷ்ணன் தனக்கு வந்த மணிமகுடத்தை வேண்டாமெனச் சொன்னது உண்மையா?” ருக்மிக்கு இன்னும் சந்தேகம் தான்.


“ஆஹா, உனக்குத் தான் தெரிந்திருக்கிறதே! ஆம், ருக்மி, ஆம், உண்மையே! ஆனால் இதை நாங்கள் ரகசியமாயே வைத்திருக்க நினைத்தோமே!” கொஞ்சம் ஏமாற்றத்துடனும் கவலையுடனும் தொனித்தது சாந்தீபனியின் குரல்.

“ஏன் மறுத்துவிட்டான்?? அவனுக்கு அதில் தான் ஆசை என்றல்லவோ நான் நினைத்தேன்? அவன் கம்சனைக் கொன்றதற்கே அதுதான் காரணம் என நினைத்திருந்தேனே! நடிக்கிறானோ?” சீறினான் ருக்மி குரு எதிரே இருப்பதையும் மறந்தாற்போல்.

“சாந்தி! சாந்தி! ருக்மி, விதர்ப்பதேசத்துக்கு அரசனாகப் போகும் நீ இன்னும் சற்று நிதானத்தைக் கைப்பிடிக்கவேண்டும். இந்தக் கிருஷ்ணனுக்கு அதர்மத்தை வேரோடு அறுத்துத் தள்ளுவதில் உள்ள ஆசை, அரசாளுவதில் இருப்பதாய்த் தெரியவில்லை. எங்கெல்லாம் அதர்மம் தலை தூக்குகிறதோ, அங்கெல்லாம் அதை வேரோடு அறுக்க ஆசைப்படுகிறான்.”

“அதெல்லாம் ஒன்றுமில்லை குருதேவா! இந்த யாதவர்களிலேயே அவனைப் பிடிக்காதவர்கள் நிறைய இருப்பார்களே! அவன் சும்ம்மா நடிக்கிறான்!”

“யாருமே அவனுக்கு எதிரி இல்லை ருக்மி! சொல்லப் போனால் அனைத்து யாதவர்களும் எதிர்பார்த்ததே அவன் அரசனாகவேண்டும் என்றே.”

“அப்போ?? அவன் என்னதான் செய்யப் போகிறானாம்? மறுபடி மாடு மேய்க்கப் போகிறானோ?” தன் ஹாஸ்யத்தில் தானே மகிழ்ந்துகொண்டான் ருக்மி. ருக்மிணியோ பல்லைக் கடித்தாள் அண்ணனைப் பார்த்து, முகத்தை வலித்து, பழிப்புக் காட்டினாள்.

“கிருஷ்ணன் எங்களோடு குருவின் குருகுலம் இருக்கும் அவந்திக்கு வரப் போகிறான். அங்கே வந்து ஆயுதங்களில் பயிற்சி எடுத்துக்கொள்ளப் போகிறான்.” அவந்தி தேசத்து இளவரசர்களில் ஒருவனான விந்தன் இதற்கு பதில் சொன்னான்.

“ஓஓஓ, அதுவும் அப்படியா??” ருக்மிக்கு உற்சாகம் இழந்துவிட்டது.

“ருக்மி, உனக்கு அவன் ஆயுதப் பயிற்சி எடுத்துக்கொள்ளுவதில் என்ன ஆட்சேபணை?? நான் அவனுடன் விருந்தாவனத்தில் சிலமாதங்கள் தங்கி இருந்து பயிற்சி கொடுத்தேன். அவனைப் போன்ற மாணாக்கர்களையே எல்லா குருக்களும் விரும்புவார்கள். அவ்வளவு அருமையான, பணிவான, விநயம் பொருந்திய மாணாக்கன்.” சாந்தீபனி பெருமிதம் தொனிக்கச் சொன்னார்.

“அப்போ, நீங்கள் கிளம்பும்போது எங்களையும் கிளம்பச் சொல்கிறீர்களா குருதேவா, “ சட்டென மனைவி பக்கம் திரும்பினான் ருக்மி. “நீ என்ன நினைக்கிறாய் சுவ்ரதா?” என்று மனைவியை ஆலோசனை கேட்டான். மேலும் ருக்மிக்குத் தன்னை சாந்தீபனியோடு போகும்படி உக்ரசேன மஹாராஜா சொல்லுவதற்கு வலுவான காரணம் ஏதோ இருக்கவேண்டும் என்றும் தோன்றியது. அந்தக் காரணம் என்னவெனத் தெரியவேண்டும். அவனுக்கு யோசிக்க நேரமும் வேண்டி இருந்தது. அதற்குள் கண்கள் பளபளக்க, முகமெல்லாம் விகசித்து மலர, ருக்மிணியோ, “அண்ணா, நாம் தங்கிவிட்டு குருதேவரோடு போகலாம். “ என்றாள். தன் நாத்தியையே வெறுப்போடு நோக்கிய சுவ்ரதா, “எனக்கு உடனே கிளம்பவேண்டும். குருதேவர் எப்போ வேண்டுமானலும் வந்து கொள்ளட்டும். அது அவர்பாடு, அவந்தி இளவரசர்கள் பாடு.” என்று சொன்னாள். பலமாகச் சிரித்தார் சாந்தீபனி.

“இதோ பார் ருக்மி, இரு பெண்களும் சொல்லுவதை! ஒருத்தி சொல்வதற்கு நேர்மாறாய் மற்றொருத்தி சொல்கிறாள். இப்போது முடிவெடுக்கும் பொறுப்போ உன் கையில். நீ யார் பக்கம் என்று அப்போது தெரிந்துவிடும்தான். ஆனாலும் இங்கே உள்ள பிரச்னைகள், அதன் முடிவுகள், அதை ஒட்டிய ராஜரீக உறவுகள், அனைத்தையும் பற்றி அறிய உன் தந்தையும் விதர்ப்ப தேசத்து அரசனுமான பீஷ்மகன் விரும்புவான். இனி உன் கையில் இருக்கிறது முடிவு. உன் விருப்பம் போல் செய். இங்கே தங்கினால் உனக்குத் தான் நன்மை.” என்று முடித்துக் கொண்டார்.

“அப்படி என்றால் எனக்குப் பூரண சம்மதம் இல்லை என்றாலும் ராஜரீக காரணங்களை ஒட்டித் தங்கிச் செல்லச் சம்மதிக்கிறேன்.” என்றான் ருக்மி. ருக்மிணியோ சந்தோஷத்தில் ஆழ்ந்தாள்.

2 comments:

  1. நல்ல அருமையான கட்டம். கிருஷ்னனும் ருக்மினியும் சந்திக்கும் கட்டத்திற்க்காக காத்துள்ளேம். மிதிலையில் இராமனும் சீதையும் பார்த்துக் கொண்டதைப் போல. நன்றி அம்மா.

    ReplyDelete
  2. நன்றி பித்தனின் வாக்கு. வருகைக்கு நன்றி.

    ReplyDelete