
நம் உடலின் மூலப் பொருட்களாகிய மஜ்ஜை, சுக்கிலம், பிராணன், ஜீவன் ஆகியவற்றை சிவாம்சம் எனவும், தோல், ரத்தம், மாமிஸம், மூளை, எலும்பு ஆகிய ஐந்தும் சக்தி அம்சம் எனவும் சொல்லப் படும். இது நம் பிண்டத்தின் சிவ, சக்தி அம்சங்கள் எனில் அண்டத்தில் பிருதிவி, வாயு, தேயு, அப்பு, ஆகாயம் போன்ற பஞ்ச பூதங்கள் ஐந்தும் சக்தி அம்சமாகவும், அதைச் சார்ந்த மாயை, சுத்தவித்தை, மகேஸ்வரன், சதாசிவன் ஆகியன சிவாம்சமாகவும் கொள்ளப் படும். ஸரஸ்வதி அஷ்டோத்திரத்திலும், லக்ஷ்மி அஷ்டோத்திரத்திலும் தேவியை ப்ரஹ்ம-விஷ்ணு-சிவாத்மிகாயை நம: என்று சொல்லி இருக்கிறது. அம்பிகையே ப்ரம்ம ரூபமாயும், விஷ்ணு ரூபமாயும், ருத்ர ரூபமாயும் இருக்கிறாள் என்பதையும் முன்னரே பார்த்தோம். இந்த மாத்ருகா ரூபங்கள் அனைதுமே தேவியுடையவையே. தேவியை பட்டர் ஐந்து வர்ணங்களையும் உடையவள் என்றும் கூறுகிறார்.
“மங்கலை செங்கலசம் முலையாள் மலயாள் வருணச்
சங்கலை செங்கைச் சகல கலா மயில் தாவு கங்கை
பொங்கலி தங்கும் புரிசடையோன் புடை ஆளுடையாள்
பிங்கலை நீலி செய்யாள் வெளியாள் பசும்பெண்கொடியே!” சில புத்தகங்களில் பசும்பொற்கொடியே என்றும் பாடம் இருக்கிறது.
மங்கலை என்றால் சுமங்கலி, அதுவும் நித்திய மங்கலையாகிய அபிராமி அன்னை, சிவந்த கலசம் போன்ற தனபாரங்களுடன், வருணனால் அளிக்கப் பட்ட சங்கு வளைகளை அணிந்த சிவந்த திருக்கரங்கள், எல்லாக் கலைகளுக்கும் தலைவி. இதை லலிதா சஹஸ்ரநாமம் சதுஷ்ஷஷ்டி கலாமயீ” என்றும் “கலாவதீ” என்றும் கூறும். அறுபத்து நான்கு கலைகளையும் தன்னிடத்தே கொண்டிருக்கிறாள் அம்பிகை என்றொரு அர்த்தம் கொள்ளலாம். அதோடு கலா என்றால் தோகை மயிலையும் குறிக்கும். ஈசனின் வாமபாகத்தை ஆட்கொண்ட அம்பிகையானவள் பொன் போன்ற நிறம் படைத்த பிங்கலை என்றும் கருநீல நிறம் கொண்ட காலி என்றும், செந்நிறம் கொண்ட லலிதாம்பிகையாகவும், வெண்ணிறம் பெற்ற விந்தியாவாகவும், பச்சை நிறம் பெற்ற மீனாக்ஷி, உமை அம்மையாகவும் இருக்கிறாள். இதிலே பிங்கலை ஸ்வாதிஷ்டானத்தில் ஆறிதழ்த் தாமரையில் காகினி என்னும் திருநாமத்தோடு பொன்னிறங்கொண்டு விளங்குகிறாள்.
இதை ஸ்ரீலலிதா சஹஸ்ரநாமம்,
“ஸ்வாதிஷ்டாநாம்புஜகதா சதுர்வக்த்ர-மநோஹரா!
சூலாத்யாயுத- ஸம்பந்தா பீதவர்ணாதி கர்விதா!!
மேதோ-நிஷ்டா- மதுப்ரீதா பந்தின்யாதி- ஸமன்விதா
தத்யன்னாஸக்த-ஹ்ருதயா காகினீ-ரூப-தாரிணீ”
என்று கூறும். இவளே மூலாதாரத்தில் வீற்றிருக்கையில் ஸாகினீ என்னும் பெயரோடு நான்கிதழ்த் தாமரையில் பஞ்ச முகத்தோடு கரிய நிறத்தவளாய் இருக்கிறாள். லலிதா சஹஸ்ரநாமம் இதை,
“மூலாதாரம்புஜாரூட பஞ்சவக்த்ராஸ்தி-ஸம்ஸ்திதா
அங்குசாதி-ப்ரஹரணா வரதாதி-நிஷேவிதா
முக்கெளதநாஸக்த-சித்தா ஸாகின்யம்பா-ஸ்வரூபிணீ”
என்றும் ஆக்ஞா சக்ரத்தில்,
“ஆக்ஞா-சக்ராப்ஜ-நிலயா-சுக்லவர்ணா-ஷடானனா!
மஜ்ஜா-ஸம்ஸ்தா ஹம்ஸவதீ-முக்ய-சக்தி-ஸமன்விதா
ஹரித்ரான்னைக-ரஸிகா ஹாகினீ –ரூப-தாரிணீ”
என்றும் கூறுகிறது. இதை பட்டர் “வெளியாள்=கலைமகள்” என்னும் பொருளில் அழைக்கிறார். ஆக்ஞா சக்ரத்தில் ஈரிதழ்த் தாமரையில் ஆறு முகத்துடனே ஹாகினீ என்னும் பெயரோடு வெண்ணிறமுடையவளாய் (சுக்ல வர்ணா)எழுந்தருளி இருக்கிறாள். விசுத்தி சக்ரத்தில் ரக்த வர்ணத்தில் டாகினீ என்னும் பெயரோடும் பட்டர் இவளைப் பொதுவாக “செய்யாள்=திருமகள்” என்னும் பெயரில் அழைக்கிறார்.
“விசுத்தி- சக்ர –நிலயா-ரக்தவர்ணா த்ரிலோசனா
கட்வாங்காதி-ப்ரஹரணா வதனைக-ஸமன்விதா
பாயஸான்ன-ப்ரியா த்வக்ஸ்தா பசுலோக-பயங்கரீ
அம்ருதாதி-மஹாசக்தி-ஸம்வ்ருதா-டாகினீஸ்வரீ!
, மணிபூரகத்தில் லாகினீ என்னும் பெயருடனும் இருப்பதாய்க் கூறுகிறது சஹஸ்ரநாமம்.
“மணிபூராப்ஜ-நிலயா வதனத்ரய-ஸம்யுதா
வஜ்ராதிகாயுதோபேதா டாமர்ப்யாதிபி-ராவ்ருதா
ரக்தவர்ணா மாம்ஸநிஷ்டா குடான்ன-ரீத-மானஸா
ஸமஸ்த-பக்த ஸுகதா லாகின்யம்பா ஸ்வரூபிணீ
அநாஹதத்தில் ச்யாமளையாக ராகினீ என்னும் பெயரோடு வீற்றிருக்கிறாள்.
“அநாஹதாப்ஜ-நிலயா ச்யாமாபா வதனத்வயா!
தம்ஷ்ட்ரேஜ்வலாக்ஷமாலாதி-தரா ருதிர-ஸம்ஸ்திதா
காலராத்ர்யாதி-சக்த்யெளக-வ்ருதா ஸ்நிக்தெளதன-ப்ரியா
மஹாவீரேந்த்ர-வரதா ராகிண்யம்பா ஸ்வரூபிணீ!”
இனி ஸ்ரீலலிதையின் சேனை என்ன செய்தது என்பதைப் பார்ப்போம்.
விக்ன யந்திரம் பொடிப்பொடியாகிப் போனதை அறிந்த பண்டாஸுரன் தன் தம்பிகளை அனுப்புகிறான். விசுக்கிரன் முன்னால் தலைமை வகித்து வருகிறான். மந்த்ரிணீ அவனை எதிர்த்துப் போரிடுகிறாள். அஷ்வாரூடையும் துணை புரிய சக்தி சேனைகள் எதிர்த்துச் சண்டை போட்டும் விசுக்கிரனின் பாணங்கள் மழையெனப்பொழிய அம்பிகையை வேண்டுகின்றனர்.
விஷங்களோடெதிர்த்தாள் மந்திரிணியும் பொல்லா
விசுக்கிரனை எதிர்த்தாள் வாராஹிதேவி
அச்வாரூடை முதலானபேரெதிர்த்தாள்
அந்தச் சேனைகளக்ஷெளஹிணிகளையும்
வஞ்சக விசுக்கிரன் பாண வருஷத்தால்
வாடி மெலிந்து சக்தி சேனைகளும்
அம்பாவின் சேனைகள் அஸ்திரத்தின் தாபத்தால்
அம்மனை வேண்டினார்-சோபனம் சோபனம்
மந்த்ரிணி உரையாலே சிந்துவைச்
சக்திகள் தாபந்தீர அழைத்தாள்
வந்து சொரிந்தது சுத்த கங்கா தீர்த்தம்
வாரணத்துக்கை போல் இரண்டு சாமம்
வேண்டிய மட்டும் குடித்தே சக்திகளெல்லாம்
வெகு தாகந்தீர்ந்து பலமடைந்து
தேகக்களைகள் தீர்ந்து சத்தி சேனைகளெல்லாம்
ஜயத்துடன் எதிர்த்தார்கள்- சோபனம், சோபனம்
கங்கையின் நீரைப் பருகி புதிய பலம் பெற்று சக்தி சேனைகள் போரிட்டு விஷங்கன், விசுக்கிரன் போன்றோரை மந்திரிணியும், அஷ்வாரூடையும் வதம் செய்கின்றனர். இனி தானே நேரிடையாய்ப் போரிடவேண்டியதுதான் என பண்டாஸுரன் நினைத்தான். அவன் போருக்கு ஆயத்தமாகிறான்.
சேனாதிபதிகள் முதல் தம்பிகள் வரைக்கும்
செலவாய்ப் போனதைக் கேட்டுப் பண்டாஸுரன்
மானங்கெட்டவன் இன்னும் பின்னதி கோபமாய்
மஹேச்வரியை வைது திட்டிக்கொண்டு
கடித்துக்கொண்டான் பர்களையும் உதட்டையும்
கண்களிலே அனல்பொறி பறக்கக்
குடிலாக்ஷனைப் பார்த்து ஆக்கினை செய்கின்றான்
கிப்பக் குழந்தாய் கேள்-சோபனம், சோபனம்
கேளாய் குடிலாக்ஷா லலிதையென்பாளொருத்தி
கேடு செய்தாள் நமக்கினியவளை
வாளாலே லேசுலேசாகவே கொய்கிறோம்
வரவிடுவாய் என்றன் சேனையெல்லாம்
முன்கோட்டை வாசலில் காக்கும் சேனையைத் தள்ளி
மிச்சம் மீதியாயுள்ள சேனையெல்லாம்
பெண்கள் தவிர, மற்றப் பேர்களும் புறப்பட்டார்
பெண்கொடி லலிதைக்கு-சோபனம் சோபனம்
கழுதை, குதிரைகள் போன்றவகள் தேரில் பூட்டப் பட்டன. கரடி, சிங்கம், ஒட்டகம், கரும்பன்றி, காக்கை, பருந்து, கோழி, செந்நாய்கள், பாம்புகள், இன்னும் பூதப் ப்ரேதங்கள், வேதாளங்கள் போன்றவையும் வாஹனங்களாய் வந்து துணை செய்கின்றன. இதைத் தவிரவும் சாமானிய வாஹனங்களும் அநேகமாய் வருகின்றது. பண்டாஸுரன் கிளம்பும்போதே வழக்கம்போல் அபசகுனங்கள் தெரிய வருகின்றன. பூமாதேவி நடுங்கினாள். விண்ணிலிருந்து ரத்தம் சொரிந்தது. யானைகளுடைய தந்தங்கள் திடீரெனக் காரணமே இல்லாமல் முறிந்தன. இது எதைப் பற்றியும் கவலைப்படாமல் பண்டாஸுரன் கிளம்பி வருகிறான்.
எந்த உற்பாதமும் எண்னாமல் வருகிறான்
இலவம்பஞ்சு காற்றில் பறக்கின்றாப்போல்
பொல்லாத காலத்தில் பண்டாஸுரன் சேனை
புறப்பட்ட தம்மனை ஜயிக்கவென்றே
துஷ்டப் பண்டாஸுரன் வருவதைக் கண்டு
சூரிய சந்திரன் ஏழு சமுத்திரமும்
அஷ்டதிக் கஜங்களும் அலறி நடுங்கிற்று
அம்மனுக்கே ஜயம்- சோபனம் சோபனம்