
ஏழாம் நாளன்று திட்டாணிக் கோலம் போட்டு துர்கையாக அம்பிகையை துர்கையாக அலங்கரிக்கலாம். சரஸ்வதி ஆவாஹனமும் இன்றே செய்யவேண்டும். ஆவாஹனம் செய்யும்போது அக்ஷமாலை, கமண்டலு, பரசு, கதை, வில், அம்பு,வஜ்ராயுதம், தாமரை தண்டாயுதம், சூலம், கத்தி, கேடயம், சங்கு, மணி, அமுத கலசம், பாசம் போன்றவை இருக்குமாறு பார்த்துக்கொள்ளவேண்டும். அனைத்துத் தேவிகளும் மஹாதேவியிடம் ஐக்கியமாவதால் அவர்களின் ஆயுதங்களும் அம்பிகையிடம் இருக்கவேண்டும். சிலர் வித்யா லக்ஷ்மியாகவும் அலங்கரிப்பார்கள். சிறு பெண் குழந்தையை துர்காவாய்ப் பாவித்து வழிபடவேண்டும். இன்றைய நிவேதனம் பால் சாதமும், கடலைச்சுண்டலும் செய்யலாம்.
“நாயகி, நான்முகி நாராயணி கை நளின பஞ்ச
சாயகி சாம்பவி சங்கரி சாமளை சாதி நச்சு
வாய் அகி மாலினி வாராஹி சூலினி மாதங்கி என்
றாயகி யாதி உடையாள் சரணம் அரண் நமக்கே!”
என்று இந்தக் கோலத்தையே அபிராமி பட்டரும் பாடி இருக்கிறார். நான்கு முகங்களை உடைய ஈஸ்வரி, இவளையே “சதுர் வக்த மநோஹரா” என லலிதா சஹஸ்ரநாமம் கூறும்; இவளே காகினி என்னும் திருநாமத்துடன் நான்கு முகங்களுடன் ஆறிதழ்த் தாமரையில் நம் உடலின் ஸ்வாதிஷ்டானச் சக்கரத்தில் வீற்றிருப்பாள் எனவும் யோகியர் கூற்று. இதை லலிதா சஹஸ்ரநாமம், “ மேதோ -நிஷ்டா மதுப்ரீதா பந்தின்யாதி-ஸமன்விதா! தத்யன்னாஸக்த-ஹ்ருதயாகாகினீ-ரூப-தாரிணீ!! என்று கூறுகிறது. மேலும் பட்டர் அம்பிகையை நாராயணி, சம்புவின் மனைவியான சாம்பவி, சங்கரி, சாமளை, நஞ்சுடைய பாம்பை ஆபரணமாய்த் தரித்தவள், என்றெல்லாம் கூறுகிறார். இனி ஸ்ரீலலிதையின் அவதார மஹத்துவத்தைக் காண்போம்.
மோஹினி அவதாரத்தையும் அம்பிகையின் அவதாரமென்றே கூறும் லலிதாம்பாள் சோபனம், அதை இவ்வண்ணம் கூறுகிறது.
“முன்னே பிரம்மாவை ரக்ஷிக்க வந்தாளே
முதலாவது அந்த அவதாரம்
பின்னே இப்பொழுது சொன்னோம் மோஹினி ரூபம்
பின்னுங்கேள் இது விரண்டு- சோபனம் சோபனம். என்று கூறுகிறது. பிரும்மாவை ரக்ஷிக்க வந்த மதுகைடப வதத்தையும், அதைத் தொடர்ந்த மற்ற அம்பிகையின் திருவிளையாடல்களையும் கண்டோம். இப்போது ஸ்ரீலலிதையின் மஹிமை.
“லலிதாதேவியுடைய மஹிமை தன்னிலே
லக்ஷங்கோடியுள்ளதில் லேசஞ் சொல்வோம்,
கேளும் பக்தியுடன் கேட்டவர்க்கு மங்களம்
கிட்டும் நிச்சயம் ஸந்தேஹமில்லை
பூர்வத்தில் தக்ஷனுடைய கன்னிகையாக்கும்
பூர்வாவதாரம் பரமேச்வரிக்கு
சாம்பவர் சொல் தள்ளி தகப்பனார் யக்ஞத்துக்குத்
தாக்ஷாயணி போனாள்- சோபனம் சோபனம்
இதைத் தொடர்ந்து தக்ஷன் தேவியையும், ஈசனையும் இகழ்ந்ததையும் அது பொறுக்காத தேவி அக்கினியில் வீழ்ந்ததையும் அறிவோம். தேவி பின்னர் பர்வதராஜனின் மகளான பார்வதியாய்த் தவம் செய்யுங்காலை குமரக்கடவுள் பிறக்கவேண்டி மன்மதனை தேவாதி தேவர்கள் ஸ்வாமிக்கு முன் ஏவினதையும் ஈசனின் நெற்றிக்கண்ணால் மன்மதன் சாம்பலானதும் அறிவோம். எரிந்த மன்மதனின் சாம்பலைப் பிசைந்து விஸ்வகர்மா மனித உருவம் செய்ய, ஈசன் அதை ஒரு கண நேரம் நோக்க அந்தச் சாம்பலில் செய்யப்பட்ட மனித உருவம் ஓர் மனிதனாக மாற விஸ்வகர்மா அந்தக் குழந்தையைக் கொண்டு போய் வளர்த்து அனைத்தும் கற்பிக்கிறான்.
“மன்மதன் சாம்பலைப் பிசைந்து விச்வகர்மா
மனித உருவஞ் செய்தான் – சோபனம் சோபனம்
சாம்பமூர்த்தியப்போ அம்ருத கடாக்ஷத்தால்
சாம்பல் பொம்மையைப் பார்த்தார்; பார்த்தவுடன்
சாம்பசிவனுடைய அம்ருத கடாக்ஷத்தால்
சாம்பல் புருஷன் ஜீவனோடெழுந்தான்
விச்வகர்மா அந்தக் குழந்தையைக் கொண்டு போய்
விருப்பத்துடனே வளர்த்த பின்பு
வேண்டிய வரங்களை அடையும் பொருட்டவன்
ஈசனைப் பூஜித்தான் –சோபனம் சோபனம்
தவம் செய்து ஈசனிடம் வரங்கள் பெற்று ஆட்சி செய்யும் அந்தக் குழந்தை ஈசனின் நெற்றிக்கண்ணின் அக்னியில் உண்டானதால் பண்டன் என்ற பெயரைப் பெறுகிறது. வரங்கள் வாங்கிய கர்வத்தில் ஆட்சி செய்த அவனை பண்டாசுரன் என அனைவரும் கூற, தேவர்களுக்குப் பயந்து பாதாளம் சென்று ஒளிந்திருந்த அசுரக்குலம் மீண்டும் வெளியே வருகிறது. அசுரர்களின் குருவான சுக்கிராசாரியார் அவனுக்குப் பல யோசனைகள் கூறுகிறார். ஆனாலும் அவன் அதைக் கேட்கவில்லை.
“பண்டாஸுரனுக்குப் பலநாளைக்குப் பின்பு
கெட்ட புத்தி வந்து தேவர்களைப் ப்
பிடிக்கத் துவங்கினான்; வாஸ்வன் முதலாகப்
பிடித்துக்கொண்டு வந்து தன் கோட்டையில்
காவல் காக்கச் சொல்லிச் சேவகராகவே
கட்டளையிட்டான் தேவர்களை;
துஷ்டன் கையிலகப்பட்டு விழிக்கிறார்கள்
வில்வலாந்தகனே கேள் –சோபனம் சோபனம்
தங்கட்கு வினையைத் தேவாள் வருத்திக்கொண்டார்
தாருகாஸுரனை வதைக்கவென்றே
சங்கரரிடத்தில் மன்மதனை ஏவப் போய்த்
தானே வலையில் விழும்புலியைப் போல
ஸ்வாமி தபஸிற்குத் துரோகம் நினைத்ததால்
சத்துருவாகினான் பண்டாஸுரன்
வம்பன் பண்டாஸுரனை வதைப்பதற்கு
மனதில் நிச்சயித்தார்கள் –சோபனம் சோபனம்
மஹாவிஷ்ணு தன் மாயையின் மூலம் அவனை மயக்கிச் சிவபூஜையிலிருந்து அவனை விலகி இருக்கச் செய்ய தேவர்கள் அனைவரும் தேவியைத் துதித்து ஜபம், தவம், ஹோமம் போன்றவற்றைச் செய்கின்றனர்.
தேவமுனி சொல்ல இந்திரனுடன் கூடச்
செய்கிறார் தேவர்கள் உக்கிரதபஸை
ஈச்வரியை நோக்கி வருஷம் பதினாயிரம்
இப்படித் தேவர்கள் தபஞ் செய்தார்கள்
ஆஹார நித்திரை விட்டெல்லாத் தேவர்களும்
அதிகடினமான தபஸிருந்தார்
பகவதி ஈச்வரியாள் இதுவரைக்கும்
பிரத்யக்ஷமாகவில்லை –சோபனம் சோபனம்
தங்கள் உடலை வருத்தி, உறுப்புக்களையும் ஆஹுதியில் இட்டு யாகம் செய்ய ஆரம்பித்தனர் தேவர்கள். அப்போது யாக குண்டத்தில் இருந்து ஒரு பிரகாசமான வெளிச்சம் தோன்றியது. கோடி கோடி சூரியப் பிரகாசங்களை ஒத்திருந்த அந்த வெளிச்சத்தில் ஒரு அழகான ஸ்ரீ சக்ரரதம். அந்தச் சக்ர ரதத்தின் மேல் ஸ்ரீலலிதை சுப ஜனனம்.

கால் முதல் தோள்வரை ஹோமஞ்செய்து தேவாள்
கழுத்துடன் குதிக்க நிச்சயித்தார்கள்
மின்னல்மலை போல அக்னி குண்டத்தில்
மின்னிக்கொண்டொரு காந்தியுண்டாயிற்று
ஆச்சரியத்துடன் தேவாள் தேஜஸைக் கண்டார்
அதற்குள்ளே ஸ்ரீசக்ரரதத்தைக் கண்டார்.
அழகான ஸ்ரீசக்ரரத்தின் மேல் லலிதா
அம்மனவதரித்தாள் – சோபனம் சோபனம்
என்ன சிரிப்பு?? புரியலை! :P
ReplyDeleteமிகவும் அருமையான இறை நிகழ்வுகள் ;
ReplyDeleteஸ்ரீ லலிதையின் ஜனனத்தை தெரிந்து கொள்ள முடிந்தது
ஆன்மீக அறினர் கீதாம்மாவின் பதிவு பணி தொடரட்டும் !
சொல்ல வார்த்தைகளே இல்லை கீதாம்மா. அருமையா எழுதறீங்க. அதுவும் இது எனக்கு ரொம்பப் பிடிச்ச பகுதி :) மிக்க நன்றி.
ReplyDelete