எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Friday, October 22, 2010

சோபனம், சோபனம், ஸ்ரீலலிதைக்கு சோபனம்! 13


இப்போ அடுத்ததுக்குப் போகறதுக்கு முன்னால் ராம்ஜி யாஹூவின் நேயர் விருப்பம்.

த்ரயாணாம் தேவானாம் த்ரிகுண-ஜநிதானாம் தவ சிவே
பவேத் பூஜா தவ சரணயோர்-யா விரசிதா!
ததா ஹி த்வத் பாதோத்வஹன-மணிபீடஸ்ய நிகடே
ஸ்திதா ஹ்யேதே சச்வந்முகுலித-கரோத்தம்ஸ-மகுடா:

குணங்கள் மூன்று வகைப்படும். சத்வம், ராஜஸம், தாமஸம். சத்வ குணமே அனைத்திலும் மேலானதாய்ச் சொல்லப் படும். எனினும் எல்லாரிடமும் சத்வ குணமே மேலோங்கி இருப்பதில்லை. மூன்று குணங்களின் கலவையாகவே இருப்போம். இந்த மூன்று குணங்களின் மூலகர்த்தாவே அம்பிகைதான். லலிதா சஹஸ்ரநாமம் அம்பிகையை, “யோநிமுத்ரா த்ரிகண்டேசீ த்ரிகுணாம்பா த்ரிகோணகா” என்று கூறுகிறது. இந்த குணங்களில் ரஜோ குணம் மேலிட்டிருந்தால் அதனுடன் சம்பந்தப் பட்ட சைதன்யம் ஆன பிரம்மாவும், சத்வ குணம் மேலிட்டிருக்கும்போது விஷ்ணு சைதன்யமும், தமோ குணம் மேலிடும்போது ருத்ர சைதன்யமும் சம்பந்தப் படும். ஆகவே அம்பிகை இந்த ஈரேழு பதினான்கு உலகையும் ஈன்றவளாய், அனைத்துக்கும் மூத்தோளாய் இருக்கிறாள். அருள் கொண்டு ஈன்றது போல அவற்றைப் பாதுகாக்கவும் செய்கிறாள். தேவைப்படும்போது சம்ஹரிக்கவும் செய்கிறாள். மும்மூர்த்திகளையும் அவரவருக்கு உரிய தொழிலைச் செய்யுமாறு இயற்றுபவள் அம்பிகை என்பது இதன் மூலக் கருத்து.

இதையே அபிராமி பட்டர்,
பூத்தவளே புவனம் பதினான்கையும் பூத்தவண்ணம்
காத்தவளே பின் கரந்தவளே கறைக்கண்டனுக்கு
மூத்தவளே என்றும் மூவா முகுந்தற்கிளையவளே
மாத்தவளே உன்னை அன்றி மற்றோர் தெய்வம் வந்திப்பதே!”

என்கின்றார். சக்தி தத்துவத்தில் இருந்தே சதாசிவ தத்துவம் தோன்றியதால் இங்கே அம்பிகையை மூத்தவள் என்கிறார். இன்னும் தெளிவாய்ச் சொல்லப் போனால் அம்பிகையில் மும்மூர்த்திகளும் அடக்கம். ஆகவே அம்பிகையைப் பூஜித்தால் மும்மூர்த்திகளையும் பூஜித்ததாகும் என்பதே இந்த ஸ்லோகத்தின் மையக் கருத்து. இதையே லலிதா சஹஸ்ரநாமம்,

ஸ்ருஷ்டி கர்த்ரீ ப்ரஹ்மரூபா கோப்த்ரீ கோவிந்த ரூபிணீ
சம்ஹாரிணீ ருத்ரரூபா திரோதானகரீ ஈஸ்வரீ
ஸதாசிவா அனுக்ரஹதா பஞ்சக்ருத்ய-பராயணா!

என்று கூறுவதை ஏற்கெனவே பார்த்தோம்.

இங்கே செளந்தர்ய லஹரியில் மேலும் மணிபீடஸ்ய நிகடே என்றும் கூறி இருக்கிறார் ஆசாரியாள். நம் சரீரத்தில் ஆறு ஆதாரங்கள் உள்ளன என்பதையும் அவற்றுக்கு உள்ள தத்துவத்தையும் ஏற்கெனவே பார்த்தோம். மூலாதாரம், மணிபூரகம், ஸ்வாதிஷ்டானம், அநாஹதம், விசுத்தி, ஆக்ஞா ஆகிய ஆறு ஆதாரச் சக்கரங்கள் உள்ளன. இவை ஒவ்வொன்றும் நம் உடலின் ஒவ்வொரு தத்துவத்தைக் குறிக்கும். அதோடு சம்பந்தப் பட்டதே. எப்படி எனில் மூலாதாரம் (இளவேனில் காலம்)வஸந்தருதுவாகவும் 55 நாட்கள் கொண்டதாயும், (வறண்ட கோடைக்காலம்)மணிபூரகம் 52 நாட்கள் கொண்ட க்ரீஷ்மருதுவாகவும், ஸ்வாதிஷ்டானம் 62 நாட்கள் கொண்ட (மழைக்காலம்)வர்ஷருதுவாகவும், அநாஹதம் 54 நாட்கள் கொண்ட (இலையுதிர்காலம்)சரத்ருதுவாகவும், விசுத்தி72 நாட்கள் கொண்ட (முன்பனிக்காலம்)ஹேமந்த ருதுவாகவும், ஆக்ஞா 64 நாட்கள் கொண்ட (பின்பனிக்காலம்)சிசிர ருதுவாகவும் வர்ணிக்கப் படுகிறது. இந்த ஆறு ஆதாரங்களும் மூன்று கண்டங்களாயும் பிரிக்கப் பட்டுள்ளது. அக்னி கண்டம், சூர்ய கண்டம், சோம கண்டம். அக்னி கண்டத்தில் பிரம்மக்ரந்தி, சூர்ய கண்டத்தில் விஷ்ணு க்ரந்தி, ஸோம கண்டத்தில் ருத்ர க்ரந்தி. ஆறு சக்கரங்களின் வழியாகவும் தேவியை உள்முகமாய் வழிபட்டால், மும்மூர்த்திகளையும் வழிபட்டதாகும். கடைசியில் சஹஸ்ராரத்தில் சச்சிதாநந்த ஸ்வரூப தரிசனம்.

இதை லலிதா சஹஸ்ரநாமம்,
மூலாதாரைக-நிலயா ப்ரஹ்மக்ரந்தி-விபேதினீ
மணிபூராந்தருதிதா விஷ்ணுக்ரந்தி-விபேதிணீ
ஆக்ஞா-சக்ராந்தராலஸ்தா ருத்ரக்ரந்தி-விபேதினீ
ஸஹஸ்ராராம்புஜாரூடா ஸூதாஸாராபி-வர்ஷிணீ!!

என்று சொல்கிறது.

ஒவ்வொரு ஆதார சக்கரத்தின் வழிபாட்டின் மூலமும், சக்தியானவள் ஒவ்வொரு கண்டத்திலும் உள்ள ஒவ்வொரு முடிச்சையும் அவிழ்த்துக்கொண்டு மேலே ஏறி சஹஸ்ராரத்தில் நிலை பெற்று இருக்கிறாள். இது யோகியருக்கே புரியும். நம் போன்ற சாமானியருக்கு எளிதில் புரியாது. குரு மூலமாகவே முயலவேண்டும். நம் உடலின் பஞ்சபூத தத்துவங்கள், இவ்வுலகின் பஞ்சபூத தத்துவங்களோடு பெரிதும் சம்பந்தப் பட்டிருக்கிறதைப் புரிந்து கொள்ள முடியும். அதைப் புரிந்து கொண்டோமானால் இந்த வார்த்தைகளுக்குப் பொருளும் எளிதில் விளங்கும்.

மூலாதாரம்-பூமி தத்துவம்
மணிபூரகம்- ஜல தத்துவம்
ஸ்வாதிஷ்டானம்-அக்னி தத்துவம்
அநாஹதம்-வாயு தத்துவம்
விசுத்தி- ஆகாயதத்துவம்
ஆக்ஞா- மனஸ் தத்துவம்

இந்த ஆறு ஆதாரங்களும், பஞ்ச பூதங்களும் காலகதிக்கு உட்பட்டவை, ஆனால் தேவியோ காலத்தைக் கடந்து என்றென்றும் நிற்பவள். இவ்வுலகத்தை அண்டம் என்கின்றோம். அதே பஞ்ச பூதங்களைக் கொண்ட நம் உடலோ பிண்டம் எனப்படும். நம் உடலின் மூலப் பொருட்கள் ஒன்பது. இவ்வுலகின் மூலப் பொருட்களும் ஒன்பது. ஆகவே அம்பிகையும் நவகோண நாயகியாவாள்.

8 comments:

  1. படிக்காம விட்ட எல்லாத்தையும் சேத்து இப்போ தான் படிச்சேன் மாமி... அருமையான விளக்கங்கள்... எங்களுக்கு இது சேமிக்க வேண்டிய பக்கங்கள்... நன்றி

    ReplyDelete
  2. நவக்கோண நாயகி (நவராத்திரி நாயகி)

    நமக்கு எல்லா வளங்களும்,நலங்களும் தரவேண்டும்.

    உங்களுக்கு என் நன்றி.

    ReplyDelete
  3. பகிர்ந்தமைக்கு நன்றிகள் மாமி.

    லலிதா சஹஸ்ரநாமம், சோபனம் முறையாக போய்க் கொண்டிருந்த நேரத்தில் சௌந்தர்ய லஹரியை உள்ளே நுழைததுக்கு மன்னிக்கவும்.

    த்ரயாணாம் ஸ்லோகத்தின் தமிழ் மொழி பெயர்ப்பு சுலோகம் மிக அருமையாக இருக்கும், எனக்கு முழு தமிழ் சுலோகம் மறந்து விட்டது. மறைந்த என் தந்தை அடிக்கடி சொல்லி கொண்டிருப்பார்.

    மூவருக்கும் முதற் பிறப்பே
    முக்குண கடல் பிறப்பே
    நின் சேவர் திருவடி....

    ReplyDelete
  4. ம்ம்ம்ம்???? ராம்ஜி யாஹூ, இன்னொரு புத்தகத்திலே பார்த்த நினைவு! தேடிப் பார்க்கிறேன். நன்றி.

    ReplyDelete
  5. ஏடிஎம், மெதுவாப் படிங்க, என்ன அவசரம்??

    @கோமதி அரசு, அம்பிகை அருள் அனைவருக்கும் கிட்டும். நன்றிங்க.

    ReplyDelete
  6. ராம்ஜி யாஹூ, அந்தப் புத்தகம் கிடைக்கலை, யார் கிட்டேயாவது கேட்கணும். பார்க்கலாம்.

    ReplyDelete
  7. arumayaana ezhuththu unkalukku geetha mam!

    ReplyDelete
  8. நல்ல பகிர்வு டீச்சர்
    மனவள கலை அகத்தாய்வு பயிற்சி வகுப்புகளில்
    தவத்தை பற்றி சொல்லி கொடுக்கும் போது
    மூலாதாரம்-
    மணிபூரகம்-
    ஸ்வாதிஷ்டானம்-
    அநாஹதம்-
    விசுத்தி-
    ஆக்ஞா-
    துரியம்-
    துரியாதீதம்-
    என்று குருஜி சொல்லி கொடுத்தார்
    மேலும் மனதை ஒரு நிலை படுத்தி மேம்படுத்தும் தவ நிலைகளை
    பற்றி சொன்னதற்கு உங்களுக்கு சிறப்பு நன்றி டீச்சர்

    ReplyDelete