எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Wednesday, October 20, 2010

சோபனம், சோபனம், ஸ்ரீலலிதைக்கு சோபனம்! 12

ஹர –நேத்ராக்னி-ஸந்தக்த-காம-ஸஞ்ஜீவ நெளஷதி:

ஈசன் காலாக்கினி ருத்ரனாகத் தன் நெற்றிக்கண்ணால் மன்மதனை எரித்தபோது அம்பிகையானவள் தன் குளிர்ந்த நோக்கால் சஞ்சீவனி மருந்து போலச் செயல்பட்டு மன்மதனைப் பிழைக்க வைத்தாள். அத்தகைய சஞ்சீவனி போலவே ருத்ரன் உலகங்களை எரிக்கும்போது எரிந்த உலகிற்குக் குளிர்ச்சியைத் தன் பார்வையால் கொடுத்து மன்மதனைப் பிழைக்க வைத்தது போல் அனைவரையும், உலகங்கள் அனைத்தையும் பிழைக்க வைக்கிறாள். ஈஸ்வரனுடைய ஸ்வரூபத்தோடு அம்பிகையின் ஸ்வரூபமும் கலந்திருக்கின்றதாவது பூவிலே எப்படி மணம் சேர்ந்திருக்கிறதோ அவ்வாறு இருக்கிறதாம். பூவிலிருந்து சுகந்தத்தை எவ்வாறு பிரிக்க இயலாதோ, அக்னியில் இருந்து பிரகாசத்தை எவ்வாறு பிரிக்க இயலாதோ அப்படியே ஈஸ்வரனையும் அம்பிகையையும் பிரிக்க இயலாது. இந்த அபூர்வ தம்பதிகளின் ஆநந்தமயமான பிரகாசமே அனைத்து ஜீவாத்மாக்களுக்கும் ஜீவாதாரமாய் விளங்குகிறது. இதையே லலிதா சஹஸ்ரநாமத்தில் வ்யோமகேசீ, விமானஸ்தா” என்று கூறுகின்றனர். இதை ஆகாச தத்துவம் எனவும் கூறுவர். அர்த்தநாரீச்வரரைக் குறிப்பதாயும் கூறுவார்கள்.

இதை பட்டர்

“அதிசயமான வடிவுடையாள் அரவிந்தமெல்லாம்
துதிசய ஆனன சுந்தரவல்லி துணை இரதி
பதிசயமான தபசயமாகமுன் பார்த்தவர் தம்
மதிசயமாக அன்றோ வாமபாகத்தை வவ்வியதே!

தேவியின் அழகை வர்ணிக்க வார்த்தைகள் இல்லை. அவ்வளவு அதிசயமான வியப்பைத் தரும் திருவுருவை உடைய தேவி, அழகிய தாமரை மலர்களால் துதிக்கப்படும் அந்தத் தேவியே அந்தத் தாமரைக்கொடி போன்ற மெல்லிய உடலை உடைய அழகியவள், மன்மதனை எரித்துச் சாம்பலாக்கிய ஈசனைத் தன் வயம் இழுத்து அவரது இடப்பாகத்தைக் கவர்ந்து கொண்டதை எங்கனம் சொல்லுவேன்? என்கிறார். மேலும், அந்த வாமபாகத்து இறைவரும், நீயும் மகிழ்ந்து ஒன்றி இருக்கும் கோலமும், நம் உள்ளத்துள்ளே உள்ள ஆணவத்தைப் போக்கி நம்மைத் தடுத்தாட்கொள்ளுகிறதாம். அதுவும் எப்போது?? “வெவ்விய காலன் என்மேல் வரும்போது வெளிநிற்கவே!” என்கிறார்.

“வவ்விய பாகத்திறைவரும் நீயும் மகிழ்ந்திருக்கும்
செவ்வியும் உங்கள் திருமணக் கோலமும் சிந்தையுள்ளே
அவ்வியம் தீர்த்தென்னை ஆண்டபொற்பாதமும் ஆகிவந்து
வெவ்விய காலன் என்மேல் வரும்போது வெளிநிற்கவே!”

காலன் வந்து நம் உயிரைக்கொள்ளும்பொருட்டு வரும்போது அம்பிகையின் தரிசனம் வேண்டிப் பிரார்த்திக்கொள்ளவேண்டும் என்கிறார் பட்டர். இனி லலிதையின் சேனை எவ்வாறு யுத்தம் செய்தது என்று பார்ப்போம்.

“பண்டஸைந்ய-வதோத்யுக்த-சக்தி-விக்ரம-ஹர்ஷிதா!
நித்யா-பராக்ரமாடோப-நிரீக்ஷண-ஸமுத்ஸூகா!!
பண்டபுத்ர-வதோத்யுக்த-பாலா-விக்ரம-நந்திதா!
மந்த்ரிண்யம்பா-விரசித-விஷங்க-வத-தோஷிதா!
விசுக்ர-ப்ராணஹரண-வாராஹீ-வீர்ய-நந்திதா!
காமேச்வர-முகாலோக-கல்பித-ஸ்ரீகணேஸ்வரா!
மஹாகணேச-நிர்பின்ன-விக்னயந்த்ர-ப்ரஹர்ஷிதா!
பண்டாஸூரேந்த்ர-நிர்முக்த-சஸ்த்ர-ப்ரத்யஸ்த்ர-வர்ஷிணீ!!


மேற்கண்ட ஸ்லோகங்களில் நடைபெறும் சம்பவங்களையே இன்று பார்க்கப் போகிறோம். பண்டாசுரனை வதம் செய்யவென்று அம்பிகை அனுப்பிய சேனைகளோடு முதலில் மந்திரி போர் செய்ய வந்தான். நாற்பது அக்ஷெளஹிணி சேனைகளைக் கொண்டு யுத்தம் செய்தவனை சம்பத்கரி வதைக்கிறாள். அதன் பின்னர் அனுப்பிய குண்டனை அச்வாரூடை சம்ஹரிக்க, தன் சேனாபதிகள் ஐவரை அனுப்பி வைக்கிறான். கூடவே விஷமான மாயைகளையும், சர்ப்பேணிப் பிசாசுகளையும் அனுப்பிப் பயமுறுத்துகிறான். அந்தச் சர்ப்பேணியானவள் அசுரனின் கட்டளையாலே பல பாம்புகளைப் பெற்று அவற்றை எல்லாச் சக்திகளின் மேலும் ஏவிவிடுகிறாள்.

“விதவித சர்ப்பங்கள் விஷத்தைக் கக்கிக்கொண்டு
விழுந்ததுகள் சக்திசேனையின் மேல்
இதைக்கண்டு நகுலியம்மன் கருடன் தோளில்
இருந்ததிவேகமாய் ஓடி வந்து
பாம்புக்கு ம்ருத்யுவாம் கீரிப்பிள்ளைகளைப்
பல்லுகளிலிருந்து விழவடிஅத்தாள்
அம்மெட்டுப் பாம்பையும் துண்டாக்கியது
அம்மன் கீரிப்பிள்ளைகள்-சோபனம் சோபனம்

இதைக் கண்ட பண்டாசுரன் தன் ஏழு பிலாஸ்கார் மந்திரி ராணுவத்தை அனுப்பி சூரியனையும் மிகவும் வருத்தித் தன் வரத்தாலே அம்மன் சேனையை ஸ்தம்பிக்க வைத்தான். அப்போது தண்டினி முன்னால் ஓடோடி வந்து மந்திரிகளின் கண்களைக் குருடாக்கி அனைவரின் தலைகளையும் கொய்து மாலையாகப் போட்டுக்கொள்கிறாள். பண்டாசுரன் தன் சகோதரர்களோடு கலந்து ஆலோசித்துவிட்டுக் குடிலாக்ஷனை மேலும் சேனைகளோடு அனுப்பி லலிதையை உயிரோடு பிடித்துக்கொண்டு வரச் சொல்கிறான். தேரைச் சுற்றி வளைத்துக்கொண்ட குடிலாக்ஷனின் கொடுமையால் சக்திகள் தேவியிடம் முறையிடுகின்றனர். அப்போது,

“பின்னே கள்ளர் வந்து செய்யுங் கலகத்தைப்
புரட்டுச் செய்கையைத் தேவியறியாமல்
முன்னே தண்டநாதைச் செய்கின்ற சண்டையின்
வேடிக்கை பார்த்தம்மனிருந்து விட்டாள்
துரோகி விஷங்கள் ஒரு பாணத்தால் தேரின்
துலங்குங் கொடிதன்னை அறுத்துவிட்டான்
வேகமாய்ப் புருவங்களை அம்மன் கோபத்தால்
வில்லுப்போல வளைத்தாள்- சோபனம், சோபனம்.

அன்னையின் கோபத்தைக் கண்ட பதினைந்து காமேச்வர சக்திகள் அசுரனைக் கொல்ல அம்மனால் அனுப்பப் பட்டனர். ஜ்வாலா மாலினி முதல் பதினைந்து அசுரர்களையும் கொன்றழிக்க, குடிலாக்ஷனை வாராஹி துரத்துகிறாள். பின்னர் ஜ்வாலா மாலினியின் உதவியோடு அக்னிக் கோட்டையை நிர்மாணம் செய்து சக்திகள் அனைவரோடும் அம்பிகை உள்ளே இருக்கின்றாள்.

“குடிலாக்ஷனையும் துரத்தினாள் வாராஹி
கூடிவந்த அஸுராளைக் கொன்றாள்
விடியற்காலங் கண்டு விஷங்கன் செய்ததுகளை
விசையாய் மந்த்ரிணி தண்டநாதையுமாய்
அம்பாவிடத்தில் சொல்லி ஜ்வாலாமாலினியாலே
அக்னிக்கோட்டையைப் போடச் சொன்னாள்
தென்புறம் வீதியொரு யோஜனை வாசலில்
ஸ்தம்பினியும் காவல்-சோபனம் சோபனம்.

முப்பது யோஜனை உயரமுள்ள கோட்டை
முழுவதும் நூறு யோஜனை சுற்றளவு
இப்படி ஸ்ரீசக்கரத் தேருஞ் சேனையுங் கொண்டு
இருக்கின்றார் சக்திகள் தீக்கோட்டைக்குள்
தம்பியும் மந்திரியும் தப்பி வந்ததையும்
சலியாத தீக்கோட்டை மஹிமை கேட்டு
அன்பாய் முப்பது பிள்ளைகளைப் பண்டன்
சண்டைக்கு அனுப்பினான் தேவி மேல்-சோபனம், சோபனம்

இப்போது பாலா திரிபுரசுந்தரியை அனுப்புகிறாள் தேவி. தண்டினியும், மந்த்ரிணியும் துணைக்கு வர, சின்னஞ்சிறு பெண்ணான பாலா கண்டித ரதத்தில் ஏறிக்கொண்டு போருக்குப் போகிறாள். பண்டபுத்ர-வதோத்யுக்த-பாலா-விக்ரம-நந்திதா!” என மேலே கூறியுள்ள படிக்கு பண்டாசுரனின் புத்திரர்களையும், கூட வந்த அசுரர்களையும் பாலா திரிபுர சுந்தரி அழிக்கிறாள். அதைக் கேள்விப் பட்ட பண்டாசுரன் கொடிய அசுரன் ஆன விசுக்கிரனை அனுப்பி விக்ன யந்திரம் செய்யச் சொல்கின்றான்.

“பாலாதேவி கையால் பிள்ளைகள் மாண்டதைப்
பண்டன் கேட்டுப் புலம்பி அழுதான் மெத்த
கொலைபாதகன் விக்னயந்திரஞ் செய்யச் சொல்லிக்
கொடூரன் விசுக்கிரனை அனுப்பி வைத்தான்
துஷ்ட விசுக்கிரன் அக்னிக்கோட்டையில் வந்து
சுற்றி உள்ளே போகமாட்டாதே
கெட்டவன் பாறையில் எட்டுத் தேவதேயந்திரம்
சீறி ஏவினான் கேளும்-சோபனம் சோபனம்

யந்திரத்தால் சக்திகள் புத்தி மயங்கியே
எல்லோரும் ஸ்தம்பித்து இருந்தார்கள்
தண்டினி, மந்த்ரிணி, அம்பாளிடத்திற்குச் சொல்ல
மாதாவும் காமேசர் முகத்தைப் பார்த்தாள்
சக்தி கணபதி சுத்த லக்ஷணத்துடன்
திடுமென்று குதித்து வ்ந்து யந்திரத்தைக்
குத்தித் தன் கொம்பாலே தூளாய்ப் பறக்கவிட்ட
குஞ்ஜார முகர்க்குச் –சோபனம், சோபனம்

விசுக்ர-ப்ராணஹரண-வாராஹீ-வீர்ய-நந்திதா!
காமேச்வர-முகாலோக-கல்பித-ஸ்ரீகணேஸ்வரா!
மஹாகணேச-நிர்பின்ன-விக்னயந்த்ர-ப்ரஹர்ஷிதா!

அம்பாள் தன் பார்வையைக் காமேச்வரர் பக்கம் திருப்ப, அம்பாளின் மறுபாதியான ஈசனும் அம்பிகையின் எண்ணம் தெரிந்து விக்னேஸ்வரரை அவதரிக்க வைக்கிறார். விக்னேஸ்வரர் வந்து தன் கொம்பாலே விக்ன யந்திரத்தைப் பொடிப் பொடியாக்கி நிர்மூலமாக்கி அம்பாள் மனதைக் குளிர வைக்கிறார்.

நாளை பண்டாசுரனின் சகோதரர்கள் வதமும், பண்டாசுரன் யுத்தம் செய்தலும்

ஒரு யோஜனை என்பது கிட்டத் தட்ட பனிரண்டு, அல்லது பதின்மூன்று மைல்களைக் குறிக்கும்.

டிஸ்கி: இன்னிக்குப் படம் காட்டாதே என்று ப்ளாகர் காலம்பர இருந்து சொல்லிட்டு இருக்கு. முடிஞ்சால் படங்களை நாளை சேர்க்கிறேன்.

கூடிய வரைக்கும் ரொம்பவே எளிமையான வார்த்தைகளாய்ப் போட்டே விளக்கம் சொல்கிறேன். தத்வார்த்தமான விளக்கத்துக்கு எல்லாம் போகலை! ஆகவே புரியலைனா சொல்லிடுங்க. :)))))))

8 comments:

  1. Very Nice am enjoying the lalithambal shobanam. am eagerly wait for next blog.
    thanks
    N.Sankaran

    ReplyDelete
  2. படித்து பயன் அடைந்து கொண்டு இருக்கிறோம்
    உங்கள் மேல் ஏற்படும் வியப்பும் கூடி கொண்டே போகிறது டீச்சர்

    ReplyDelete
  3. எளிமையான விளக்கங்கள் நன்கு புரிகிறது.

    நன்றி.

    ReplyDelete
  4. பகிர்விற்கு நன்றிகள் மாமி

    ReplyDelete
  5. பின்னூட்டம் கொடுத்த அனைவருக்கும் நன்றி. தனித்தனியாய்ச் சொல்ல முடியலை. மன்னிக்கவும்.

    ReplyDelete
  6. மன்னிப்பா !உங்களுக்கா ! சான்சே இல்லை !
    ஏன்னா நீங்க தான் தப்பே செய்யலையே !ஹ ஹ

    ReplyDelete
  7. சோபனம் சோபனம் எழுதியது யாரு?
    பாலா திரிபுரசுந்தரி இப்பத்தான் கேள்விப்படுறேன். நன்றி.

    ReplyDelete
  8. சோபனம் சோபனம் எழுதியது யாரு?
    பாலா திரிபுரசுந்தரி இப்பத்தான் கேள்விப்படுறேன். நன்றி.

    ReplyDelete