எச்சரிக்கை
இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.
Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.
Have a great day.
Have a great day.
பரமாசாரியாரின் அருள் வாக்கு
Tuesday, October 12, 2010
சோபனம், சோபனம், ஸ்ரீலலிதைக்கு சோபனம்! 4
மூன்றாம் நாளான இன்று பூக்களால் கோலம் போட்டு அம்பிகையைத் தாருணியாக வழிபட வேண்டும். சிலர் இவளை வஜ்ராயுதத்துடன் கூடிய இந்திராணியாக யானை வாகனத்தில் அமர்த்தி வழிபடுவார்கள். சிறு பெண் குழந்தையைத் தாருணியாகப் பாவித்து வழிபட்டு எலுமிச்சை சாதமும், பாசிப் பருப்பு சுண்டலும் நிவேதனம் செய்யலாம்.
தேவியின் அருளைப் பெறுவதற்குப் பெரிதாகப் பூஜை, ஜபம், ஹோமம்னு எல்லாம் அமர்க்களமாய் எதுவும் செய்யவேண்டாம். ஒருமித்த மனதோடு தேவியின் நாமஸ்மரணை பண்ணினாலே போதும் என செளந்தர்ய லஹரியின் 23-ம் ஸ்லோகம் கூறுகிறது. தேவியை பவனாகிய ஈசனின் மனைவி என்ற பொருளில் பவானி என அழைக்கின்றனர். ஆனால் சம்ஸ்கிருத மொழியில் விளங்கும் பல பொருள் கொண்ட சிறப்பின் படி, பவாநீ என்பது,”நான் அப்படியே ஆவேன்” என்னும் பொருள் கொண்ட வினைச்சொல்லாகவும் எடுத்துக்கொள்வார்கள் சாக்தர்கள். தேவியைப் பூரணமாக ஒருமித்த மனதோடு வழிபடும் சாக்தர்கள் “நீயாகவே நான் ஆகின்றேன்” என்று உணர்கின்றான். இதை பகவான் ஸ்ரீராமகிருஷ்ணரும் உணர்ந்திருக்கிறார். அம்பாளை வழிபடும் சக்தி உபாசகர் ஆன அவர் அச்சமயங்களில் தானும் புடைவை உடுத்திக்கொண்டு ஒரு பெண்ணைப் போலவே முக்கியமாய்த் தானே அம்பாள் ஆனதாகவே உணர்ந்திருக்கிறார். தேவியை வழிபடுபவர்களுக்குத் தனக்கும் அவனுக்கும் வேற்றுமை இல்லாததாகிய அத்தகையதொரு சாயுஜ்ய பதவியை தேவி அளிக்கிறாள். இப்போ மஹிஷனுக்கு என்ன ஆச்சுனு பார்ப்போமா?
அநேக காலம் மஹிஷன் தேவியுடன்
அஞ்சாமலே யுத்தம் செய்து நின்றான்
மாய்கையினால் பல ரூபமெடுத்தவன்
மஹாதேவியுடன் யுத்தம் செய்தான்
காளிரூபமெடுத்துக்கொண்டு தேவி
கைதனில் சக்ராயுதமுங்கொண்டு
மஹிஷரூபமெடுக்கும் போதவனை
மடிய வெட்டினாள் மாதேவியும்
தேவியோடு யுத்தம் செய்ய வந்த மஹிஷன் தனக்கு உதவியாக எண்ணற்ற அசுரப் படைகளைக் கொண்டு வந்ததோடு அல்லாமல், பலவிதமான ஆயுதங்களையும் கொண்டு தேவியோடு யுத்தம் செய்தான். வாளை வீசிக்கொண்டு சண்டிகையைக் கொல்ல முயன்ற அசுரர்களைச் சண்டிகை வதம் செய்தாள். தேவியின் வாஹனமான சிம்ஹமும் பிடரியைச் சிலிர்த்துக்கொண்டு யுத்த களத்தில் பாய்ந்தது. அம்பிகையின் பெருமூச்சினாலேயே அசுர சேனாபலம் குறைந்து வந்தது. கதையாலும், சூலத்தாலும் தாக்கப்பட்டனர். அம்புகள் முட்களைப் போல் உடலெங்கும் பாய்ந்து உயிரை விட்டனர் பலர். தேர்களும், யானைகளும், குதிரைகளும் அசுரர்களும் வீழ்ந்து கிடந்தமையால் பூமியெங்கும் கால் வைக்க முடியாமல் இருந்தது. எங்கும் ரத்த வெள்ளம் பாய்ந்தது. அசுர சேனையின் தோல்வியைக் கண்டு தேவர்கள் விண்ணிலிருந்து புஷ்பமாரி பொழிந்து தேவியைத் துதித்துப் பாடினார்கள். தன் சேனையின் தோல்வியைக் கண்ட மஹிஷாசுரன் தேவியைத் தன் வாளால் வெட்ட எண்ணி அவளை அடிக்க அவளின் புஜத்தில் பட்டு வாள் பொடிப் பொடியாய் ஆயிற்று, பின்னர் சூலத்தையும் ஏவினான். பின்னர் எருமை உருவிலேயே வந்து அனைவரையும் தன் கொம்புகளாலும், வாலாலும், குளம்புகளாலும் தாக்க ஆரம்பித்தான். அனைவரையும் வாலில் சுருட்டி வீசி பூமியில் எறிந்தான். தேவியை நோக்கிக் கோபத்துடன் கர்ஜனை செய்தான். பூமி நொறுங்க, கடலும் கரை புரண்டு பூமிக்குள் புகுமோ என்னும் அளவுக்கு விஸ்வரூபம் எடுத்து விண்ணுக்கும், மண்ணுக்குமாய் ஆரோகணித்து நின்றான் மஹிஷாசுரன்.
சண்டிகை கோபத்துடன் அவனைக் கொல்ல முயல, அவன் சிங்க உரு, மானிட உரு, யானை உரு எனத் தன் மாயையால் பல உரு எடுத்தும் தேவி அவனை விடாது துரத்திக் கொல்ல முயன்றாள். மீண்டும் எருமை உருவிலேயே வந்து தேவியை முட்டித் தள்ள முயன்றான். தேவி அவன் மேல் பாய்ந்து அவனை வீழ்த்திக் கீழே தள்ளித் தன் கால்களால் மிதித்துக்கொண்டு கைச்சூலத்தால் அவனைத் தாக்கினாள். தேவியின் கால்களில் மிதிபட்ட மஹிஷாசுரன் வாயைப் பெரிதாய்த் திறந்துகொண்டு சுய உருவில் வெளியே வந்து எவ்விதமேனும் தப்ப முயல, அதைக் கண்ட தேவி தன் வாளால் அவன் தலையை வெட்டி வீழ்த்தினாள். மிச்சம் இருந்த அசுரர்கள் எல்லாம் ஓடிச் சிதற தேவர்கள் குதூகலத்துடன் ஆடிப் பாடி தேவியைப் பல வகைகளிலும் துதித்தனர்.
இங்கே எருமை என்பது அறியாமை என்னும் மெளட்டிகத்தையே குறிக்கும். தத்துவார்த்த ரீதியான இக்கதைகளின் உள்ளார்ந்த பொருளைப் புரிந்துகொண்டு அநுபவிக்கவேண்டுமே தவிர, அசுரன் என்றால் கொல்லலாம், தேவர்கள் என்றால் சகாயம் காட்டுவதா என்ற கேள்வி அர்த்தமற்றது. நம் மனத்திலே உள்ள ரஜோ குணம், தமோ குணம் போன்றவைகளால் நாமே சில சமயம் மிகவும் கோபம் கொள்ளுகிறோம். அப்போது என்ன சொல்லுவோம், “என்னைக் கோபப் படுத்தாதே, கோபம் வந்தால் நான் மனுஷனாக இருக்க மாட்டேன்!” இப்படித்தானே பெரும்பாலும் சொல்கிறோம்? இந்தக் குணமே மஹிஷாசுரனை ஒத்த அசுரர்களைக் குறிக்கும். நம்முடைய அறியாமையால் விளையும் இத்தகைய துர்க்குணங்களையே தேவி வழிபாடு வெட்டி வீழ்த்தும். அதுவும் மஹிஷன் தேவியின் பாதாரவிந்தங்களை அன்றோ சரணடைந்தான்?? அவ்வாறு தேவியின் பாதார விந்தங்களை நாம் சரண் அடைந்தால் அசுரர்களாகிய துர்க்குணங்கள் ஒழிந்து சத்வ குணம் நிரம்பப் பெற்று மானிட நிலையிலிருந்து தேவ நிலைக்கு உயர்த்தப் படுவோம். அதன் பின் படிப்படியாக மேலே உயர்ந்து தேவியின் கிருஹத்தில் அவள் துணையோடு சிவசக்தி ஐக்கிய சொரூபத்தைத் தரிசிக்கலாம்.
Subscribe to:
Post Comments (Atom)
நல்ல குணங்கள் அமைய அன்னையின் பாதாராவிந்தங்களே சரணம்.
ReplyDeleteதுர்குணங்களைப் போக்கி நல்ல உயர் நிலையை அளிப்பாள் பவானி!
நன்றி.
படிக்கப் படிக்கப் பரவசம். மிக்க நன்றி அம்மா.
ReplyDeleteஒரு வேண்டுகோள். தாமதமாப் படிக்கும் என் போன்றவர்களுக்கு எல்லாப் பதிவுகளுக்கும் நம்பர் போட்டா கொஞ்சம் உதவியா இருக்கும். சிரமம் இல்லையென்றால்...
ஆஹா, என் வேண்டுகோளை நிறைவேற்றியிருக்கீங்க. மிக மிக நன்றி அம்மா!
ReplyDelete