சார்தாமில் பார்க்கவேண்டிய முதல் இடமான ஹநுமான் தாரா தான் போகாதீங்கனு சொல்லிட்டாங்க. அடுத்து சதி அநுசுயா ஆசிரமம் பார்த்தாச்சு. அங்கேயும் மலை ஏற்றம் உண்டு. தவிர்த்தோம். வேறே வழியே இல்லை. அடுத்தடுத்து அலைச்சல்கள். கோயில்கள் படியே நிறைய ஏறணும், இறங்கணும். அவையே பூமியிலிருந்து உயரமாக ஐம்பது, அறுபது படிகளோடு இருந்தன. இதிலே மலையும் ஏறினால் நேரமும் ஆகும். உடம்பும் முடியாமல் போயிடும். அஹோபிலம் நவ நரசிம்மர் பார்த்தப்போக் கூட (2010 ஆம் ஆண்டு ஜனவரியில் ) கஷ்டப்படலை. அதிலே மலைகளும் ஏறியாகணும். பிடிக்க ஒண்ணும் இருக்காது. மலைப்பாறையிலே ஏறித் தாண்டி மேலே ஏறினு எல்லாம் போகணும். ஒரு பக்கம் தண்ணீர் வந்து கொண்டிருக்கும். பாறையிலிருந்து தொங்கும் சங்கிலிகளைப் பிடித்த வண்ணம் தாண்டிப் போகணும். எல்லா வித்தைகளும் பண்ணியாச்சு. இப்போ வேண்டாம்னு அரை மனசோடத் தான் முடிவு செய்தோம்.
சதி அநசூயா ஆசிரமத்துக்கு அடுத்து குப்த கோதாவரி. இங்கே இரண்டு குகைகள் இருக்கின்றன. இங்கே ஶ்ரீராமர், சீதை, லக்ஷ்மணர் ஆகிய மூவரும் பதினோரு ஆண்டுகள் வசித்ததாய்ச் சொல்கின்றனர். குகைக்குள் போகும் முன்னர் செருப்பை எல்லாம் கழட்டி வைச்சுட்டுப் போகணும். நுழைவுச் சீட்டு உண்டு. இரண்டு குகைக்கும் சேர்த்து எடுக்கணும். முதல் குகைக்குள் போகப் படிகள் சில ஏறணும்.
இந்தப் படிகளில் ஏறி மேலே சென்று மறுபடி மலைப்பாதையில் சரிவில் இறங்கி முதல் குகைக்குப் போகணும். மேலே ஏறியதுமே அங்கே சில பண்டாக்கள் அமர்ந்து கொண்டு ஒரு இலைத் தட்டில் குங்குமம், மஞ்சள், ஒரு செம்பருத்திப் பூ போன்றவற்றை வைத்து அம்மாதிரிப் பல தட்டுக்களை வைத்து ஒரு தட்டு இருபது ரூபாய் என விற்பனை செய்தனர். அதை வாங்கிக் கொண்டு தான் போக வேண்டும் என்றும், இல்லைனால் ஶ்ரீராமர், சீதையின் அருள், கருணை, ஆசிகள் கிடைக்காது என வற்புறுத்திக் கொண்டிருந்தனர். நாங்க பொதுவாகவே இம்மாதிரியான பிரபலக் கோயில்களுக்குச் செல்கையில் எதுவுமே வாங்காமல் தான் போவோம். வாங்கிப் போனால் அதை சுவாமிக்குச் சார்த்துவதில்லை என்பதோடு தூக்கி ஒரு பக்கமாகப் போட்டு விடுகிறார்கள். வாங்காமல் சென்றோம். உடனே என்னைக் கன்னாபின்னாவெனத் திட்டினார் அந்த ஆசாமி. கையில் ஒரு சின்னக் கோலை வைத்துக் கொண்டு எல்லாருடைய உச்சந்தலையிலும் தட்டி அதை வலுக்கட்டாயமாகக் கைகளில் திணித்துக் கொண்டிருந்தனர். அதைப் படம் எடுக்க முடியாமல் கூட்டம் வேறு நெரிசல்.
இந்தக் கூட்டத்தின் நெரிசலின் மகத்துவம் உள்ளே இறங்குகையில் தான் புரிந்தது. வரவும், போகவும் ஒரே வழி. மிகக் குறுகல். ஒருவர் தான் உள்ளே நுழையலாம். அதுவும் கஷ்டப்பட்டு. அந்த வழியிலேயே எல்லாருக்கும் உள்ளே செல்லவும் அவசரம், வெளியே வரவும் அவசரம்.
கொஞ்சம் கஷ்டப்பட்டே படம் எடுத்தேன். இங்கே யாரும் இல்லாததால் எடுக்க முடிந்தது. ஆனால் படம் எடுக்க நின்று ஃபோகஸ் செய்யல்லாம் அவகாசம் இல்லை. எடுக்கையிலேயே ஒரு தன்னார்வலர் கத்த ஆரம்பிச்சுட்டார். ஃபோட்டோ எடுக்கக் கூடாதுனு. முன் அனுமதி வாங்கி இருக்கணும் போல. டிக்கெட் கொடுக்கும் இடத்தில் ஒண்ணும் சொல்லலை. இன்னொரு படம் அவசரமாக எடுத்தேன். அங்கே உள்ளே பாறைகளின் வடிவங்கள் ஆச்சரியப்படும் விதத்தில் இருந்தன. அதைப் படம் எடுத்தேன். அதுக்குள்ளே மீண்டும் கத்தவே பிடுங்கி எல்லாத்தையும் அழிச்சுடப் போறாங்கனு ரங்க்ஸ் பயந்தார். ஆகவே நிறுத்திட்டேன். அரை மனசாக.
உள்ளே நுழைந்ததும் பாறைகளின் விசித்திரமயமான அமைப்பு மேலுள்ள படத்தில். உள்ளே நுழைந்ததும் கொஞ்சம் விசாலமான மண்டபமும், அதிலே ஒரு சந்நிதியும் இருக்கிறது. எல்லா சந்நிதிகளிலும் ஶ்ரீராமர், சீதை, லக்ஷ்மணன், அநுமன் ஆகியோர் தான். அங்கே படம் எடுக்க அநுமதி கிடைக்கலை என்பதோடு கூட்டமும் அதிகமாக இருந்தது. அங்கே தரிசனம் முடிச்சு வெளியேறும் வழியில் வெளிவந்தோம். இந்த குகையில் தளம் கொஞ்சம் சுமாராக இருந்தது. ஆகவே செருப்பில்லாமல் நடக்கையில் அதிகம் கஷ்டம் தெரியலை. மறுபடி அடுத்த குகைக்குச் செல்லணும்.
வெளியே வந்து மறுபடி வேறு வாசல் வழியாகப் படிகள் கீழே இறங்கி அடுத்த குகைக்குச் சென்றோம். இது நீளமாகவும் வளைந்து வளைந்தும் சென்றதோடு நீரும் எங்கிருந்தோ வந்து கொண்டிருந்தது. அனுமான் தாராவின் உற்பத்தியாகும் தண்ணீர்னு சொல்றாங்க. கோதாவரி மறைந்திருப்பதாயும் சொல்கின்றனர். முதல் குகையிலும் இந்த குகையிலும் கோதாவரி அம்மனுக்கு சந்நிதி இருக்கிறது. இங்கே ராமனும், சீதையும் சிம்மாசனம் போன்றதொரு பாறையில் அமர்ந்திருப்பார்களாம். எதிரே இன்னொரு சிறிய பாறை. அதில் லக்ஷ்மணன் அமர்ந்திருப்பானாம். இந்தப் பாறைகளில் இப்போது மிகச் சிறிய அரை அடியே இருக்கும் ஶ்ரீராமர், சீதை, லக்ஷ்மணன் அனுமனோடு இருக்கும் சிலைகள் வைக்கப்பட்டு பாறைகளுக்கு இரு பக்கமும் இரு பண்டிட்கள் அமர்ந்து வழிபாடு நடத்துகின்றனர்.
விளக்குகள் எல்லாம் போட்டு வெளிச்சம் கொடுத்திருந்தாலும் அடர்ந்த காட்டின் உள்ளே இருக்கும் பாறைக்குகை. உயரம் அதிகம் இல்லை. அவற்றைக் குனிந்து கடக்கும்போது ரங்க்ஸ் ரொம்ப சிரமப் பட்டார். கீழே சலசலத்து ஓடும் தண்ணீர் வேறே. இம்மாதிரிப் பல இடங்களில் கடக்கணும். அதோடு கீழே பாறைகள் வேறே ஆங்காங்கே முண்டும், முடிச்சுமாக நீட்டிக் கொண்டும், உருண்டையாகவும், சில இடங்களில் உயரமாகவும் இருக்கின்றன. முன்னும், பின்னும் ஆட்கள் வேறே. ஒவ்வொருத்தராய்த் தான் போக முடியும். உடம்பை வளைக்க முடிந்தால் தான் நல்லது. அவ்வளவு குறுகலான வழி. எங்கே மேடு, எங்கே பள்ளம்னு புரியறதில்லை. காலில் கூர்மையான கற்கள் குத்துகின்றன. சரினு கொஞ்சம் நகர்ந்தால் அங்கே உயரமான பாறையாக இருக்கும்; இல்லைனா பள்ளமாக இருக்கும்.
சில இடங்களில் தண்ணீரின் ஆழம் ரங்க்ஸுக்கே முழங்காலுக்கு வந்துவிட்டது. அப்போ எனக்கு இடுப்புக்கும் மேல்னு புரிஞ்சுக்கோங்க. இதைக் குறித்து ஏற்கெனவே அறிந்து வைத்திருந்ததால் அவர் கிளம்புகையிலேயே பெர்முடாஸ் போட்டுக் கொண்டு வந்துவிட்டார். புடைவை எல்லாம் நனைந்து போய் நடக்க சிரமப்பட்டதோடு இல்லாமல் பாறைகளும் குத்தின. இங்கே பார்த்து நம் மக்கள் குனிந்து குளிக்க ஆரம்பிப்பதும், தண்ணீரைக் குடித்துத் துப்புவதுமாக அமர்க்களம் பண்ண ஆரம்பிக்கிறாங்க. உதவிக்குத் தன்னார்வலர்கள் தான்னு நினைக்கிறேன். அவங்க ஒண்ணும் சொல்றதில்லை. படம் எடுக்கிறதை மட்டும் ஏன் தடுக்கறாங்கனு புரியலை. இதை முழுசும் பார்த்து முடிக்க எங்களுக்கு ஒரு மணி நேரத்துக்கும் மேலே ஆச்சு. நாங்க வெளியே வரச்சே எங்கே எங்களைக் காணோமேனு நினைச்சார் போல ஆட்டோ பையர். தேடிட்டு வந்திருந்தார்.
அடுத்து என்னனு கேட்டதுக்கு, பரத் கூப்(பரதன் குகை) என்று என்னிடம் சொன்னார். அப்போ ரங்க்ஸ் ஒரு இடத்தைத் தாண்ட சிரமப் படவே அவரிடம் சென்று உதவி செய்தார். ரங்க்ஸ் அவரிடம் சாப்பிட்டுவிட்டு பரதன் குகை பார்க்கலாம் என்றும், அதோடு டிக்கெட் முன்பதிவுக்கு வேறே போகணும்னும் சொல்லி இருக்கார். என்னிடம் பரதன் குகை பார்க்கணும்னு சொன்ன அந்த ஆட்டோக்காரருக்கு என்ன தோணித்தோ அவரிடம் பரதன் குகை பார்க்கிறதுன்னா தனியாப் பணம் நானூறு ரூபாய் கொடுக்கணும். இதோட சேர்ந்தது இல்லை. அது ரொம்ப தூரம்னு சொல்லி இருக்கார். உண்மையில் ஒவ்வொண்ணும் தூரம் தான் இல்லைனு சொல்லலை.
ஒவ்வொண்ணும் போறதுக்கே ஒரு மணி நேரத்துக்கும் மேலே ஆகிடுது. நாங்க காலை பத்து மணிக்கே கிளம்பியதில் அப்போ கிட்டத்தட்ட மதியம் மூணு மணி ஆகி இருந்தது. ஆகவே சர்க்கரை நோயாளியான ரங்க்ஸுக்குப் பசி வந்திருக்கு. சாப்பிட்டுட்டுப் போகலாம்னு சொல்லி இருக்கார். மீண்டும் நகருக்குள் வந்தால் மறுபடி காட்டுப் பகுதிக்குப் போகணுமேனு அந்த ஆட்டோ ஓட்டுநருக்குத் தோணித்தோ என்னமோ. இம்மாதிரி சொல்லி இருக்கார்.