எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Saturday, November 30, 2013

சித்திரவதையுடன் சித்திரகூடத்தில்-- தொடர்ச்சி குப்தகோதாவரி

சார்தாமில் பார்க்கவேண்டிய முதல் இடமான ஹநுமான் தாரா தான் போகாதீங்கனு சொல்லிட்டாங்க. அடுத்து சதி அநுசுயா ஆசிரமம் பார்த்தாச்சு.  அங்கேயும் மலை ஏற்றம் உண்டு.  தவிர்த்தோம். வேறே வழியே இல்லை. அடுத்தடுத்து அலைச்சல்கள்.  கோயில்கள் படியே நிறைய ஏறணும், இறங்கணும்.  அவையே பூமியிலிருந்து உயரமாக ஐம்பது, அறுபது படிகளோடு இருந்தன.  இதிலே மலையும் ஏறினால் நேரமும் ஆகும்.  உடம்பும் முடியாமல் போயிடும்.  அஹோபிலம் நவ நரசிம்மர் பார்த்தப்போக் கூட (2010 ஆம் ஆண்டு ஜனவரியில் ) கஷ்டப்படலை.  அதிலே மலைகளும் ஏறியாகணும்.  பிடிக்க ஒண்ணும் இருக்காது.  மலைப்பாறையிலே ஏறித் தாண்டி மேலே ஏறினு எல்லாம் போகணும்.  ஒரு பக்கம் தண்ணீர் வந்து கொண்டிருக்கும். பாறையிலிருந்து தொங்கும் சங்கிலிகளைப் பிடித்த வண்ணம்  தாண்டிப் போகணும். எல்லா வித்தைகளும் பண்ணியாச்சு.  இப்போ வேண்டாம்னு அரை மனசோடத் தான் முடிவு செய்தோம்.  

சதி அநசூயா ஆசிரமத்துக்கு அடுத்து குப்த கோதாவரி.  இங்கே இரண்டு குகைகள் இருக்கின்றன.  இங்கே ஶ்ரீராமர், சீதை, லக்ஷ்மணர் ஆகிய மூவரும் பதினோரு ஆண்டுகள் வசித்ததாய்ச் சொல்கின்றனர்.  குகைக்குள் போகும் முன்னர் செருப்பை எல்லாம் கழட்டி வைச்சுட்டுப் போகணும்.    நுழைவுச் சீட்டு உண்டு.  இரண்டு குகைக்கும் சேர்த்து எடுக்கணும்.  முதல் குகைக்குள் போகப் படிகள் சில ஏறணும்.


இந்தப்  படிகளில் ஏறி மேலே சென்று மறுபடி மலைப்பாதையில் சரிவில் இறங்கி முதல் குகைக்குப் போகணும்.  மேலே ஏறியதுமே அங்கே சில பண்டாக்கள் அமர்ந்து கொண்டு ஒரு இலைத் தட்டில் குங்குமம், மஞ்சள், ஒரு செம்பருத்திப் பூ போன்றவற்றை வைத்து அம்மாதிரிப் பல தட்டுக்களை வைத்து ஒரு தட்டு இருபது ரூபாய் என விற்பனை செய்தனர்.   அதை வாங்கிக் கொண்டு தான் போக வேண்டும் என்றும், இல்லைனால் ஶ்ரீராமர், சீதையின் அருள், கருணை, ஆசிகள் கிடைக்காது என வற்புறுத்திக் கொண்டிருந்தனர்.  நாங்க பொதுவாகவே இம்மாதிரியான பிரபலக் கோயில்களுக்குச் செல்கையில் எதுவுமே வாங்காமல் தான் போவோம்.  வாங்கிப் போனால் அதை சுவாமிக்குச் சார்த்துவதில்லை என்பதோடு தூக்கி ஒரு பக்கமாகப் போட்டு விடுகிறார்கள்.  வாங்காமல் சென்றோம்.  உடனே என்னைக் கன்னாபின்னாவெனத் திட்டினார் அந்த ஆசாமி.  கையில் ஒரு சின்னக் கோலை வைத்துக் கொண்டு எல்லாருடைய உச்சந்தலையிலும் தட்டி அதை வலுக்கட்டாயமாகக் கைகளில் திணித்துக் கொண்டிருந்தனர்.  அதைப் படம் எடுக்க முடியாமல் கூட்டம் வேறு நெரிசல்.

இந்தக் கூட்டத்தின் நெரிசலின் மகத்துவம் உள்ளே இறங்குகையில் தான் புரிந்தது.   வரவும், போகவும் ஒரே வழி.  மிகக் குறுகல்.  ஒருவர் தான் உள்ளே நுழையலாம்.  அதுவும் கஷ்டப்பட்டு.  அந்த வழியிலேயே எல்லாருக்கும் உள்ளே செல்லவும் அவசரம், வெளியே வரவும் அவசரம். 

கொஞ்சம் கஷ்டப்பட்டே படம் எடுத்தேன்.  இங்கே யாரும் இல்லாததால் எடுக்க முடிந்தது.  ஆனால் படம் எடுக்க நின்று ஃபோகஸ் செய்யல்லாம் அவகாசம் இல்லை. எடுக்கையிலேயே ஒரு தன்னார்வலர் கத்த ஆரம்பிச்சுட்டார்.  ஃபோட்டோ எடுக்கக் கூடாதுனு.  முன் அனுமதி வாங்கி இருக்கணும் போல.  டிக்கெட் கொடுக்கும் இடத்தில் ஒண்ணும் சொல்லலை.  இன்னொரு படம் அவசரமாக எடுத்தேன்.  அங்கே உள்ளே பாறைகளின் வடிவங்கள் ஆச்சரியப்படும் விதத்தில் இருந்தன.  அதைப் படம் எடுத்தேன்.  அதுக்குள்ளே மீண்டும் கத்தவே பிடுங்கி எல்லாத்தையும் அழிச்சுடப் போறாங்கனு ரங்க்ஸ் பயந்தார்.  ஆகவே நிறுத்திட்டேன். அரை மனசாக.


உள்ளே நுழைந்ததும் பாறைகளின் விசித்திரமயமான அமைப்பு மேலுள்ள படத்தில்.  உள்ளே நுழைந்ததும் கொஞ்சம் விசாலமான மண்டபமும், அதிலே ஒரு சந்நிதியும் இருக்கிறது.  எல்லா சந்நிதிகளிலும் ஶ்ரீராமர், சீதை, லக்ஷ்மணன், அநுமன் ஆகியோர் தான்.  அங்கே படம் எடுக்க அநுமதி கிடைக்கலை என்பதோடு கூட்டமும் அதிகமாக இருந்தது.  அங்கே தரிசனம் முடிச்சு வெளியேறும் வழியில் வெளிவந்தோம்.  இந்த குகையில் தளம் கொஞ்சம் சுமாராக இருந்தது.  ஆகவே செருப்பில்லாமல் நடக்கையில் அதிகம் கஷ்டம் தெரியலை.  மறுபடி அடுத்த குகைக்குச் செல்லணும். 

வெளியே வந்து மறுபடி வேறு வாசல் வழியாகப் படிகள் கீழே இறங்கி அடுத்த குகைக்குச் சென்றோம். இது நீளமாகவும் வளைந்து வளைந்தும் சென்றதோடு நீரும் எங்கிருந்தோ வந்து கொண்டிருந்தது.  அனுமான் தாராவின் உற்பத்தியாகும் தண்ணீர்னு சொல்றாங்க.  கோதாவரி மறைந்திருப்பதாயும் சொல்கின்றனர்.  முதல் குகையிலும் இந்த குகையிலும் கோதாவரி அம்மனுக்கு சந்நிதி இருக்கிறது.  இங்கே ராமனும், சீதையும் சிம்மாசனம் போன்றதொரு பாறையில் அமர்ந்திருப்பார்களாம்.  எதிரே இன்னொரு சிறிய பாறை.  அதில் லக்ஷ்மணன் அமர்ந்திருப்பானாம்.  இந்தப் பாறைகளில் இப்போது மிகச் சிறிய அரை அடியே இருக்கும் ஶ்ரீராமர், சீதை, லக்ஷ்மணன் அனுமனோடு இருக்கும் சிலைகள் வைக்கப்பட்டு பாறைகளுக்கு இரு பக்கமும் இரு பண்டிட்கள் அமர்ந்து வழிபாடு நடத்துகின்றனர்.

விளக்குகள் எல்லாம் போட்டு வெளிச்சம் கொடுத்திருந்தாலும் அடர்ந்த காட்டின் உள்ளே இருக்கும் பாறைக்குகை.  உயரம் அதிகம் இல்லை.  அவற்றைக் குனிந்து கடக்கும்போது ரங்க்ஸ் ரொம்ப சிரமப் பட்டார். கீழே சலசலத்து ஓடும் தண்ணீர் வேறே. இம்மாதிரிப் பல இடங்களில் கடக்கணும்.  அதோடு கீழே பாறைகள் வேறே ஆங்காங்கே முண்டும், முடிச்சுமாக நீட்டிக் கொண்டும், உருண்டையாகவும், சில இடங்களில் உயரமாகவும் இருக்கின்றன.  முன்னும், பின்னும் ஆட்கள் வேறே.  ஒவ்வொருத்தராய்த் தான் போக முடியும்.  உடம்பை வளைக்க முடிந்தால் தான் நல்லது.  அவ்வளவு குறுகலான வழி.  எங்கே மேடு, எங்கே பள்ளம்னு புரியறதில்லை.  காலில் கூர்மையான கற்கள் குத்துகின்றன.  சரினு கொஞ்சம் நகர்ந்தால் அங்கே உயரமான பாறையாக இருக்கும்; இல்லைனா பள்ளமாக இருக்கும். 

சில இடங்களில் தண்ணீரின் ஆழம் ரங்க்ஸுக்கே முழங்காலுக்கு வந்துவிட்டது.  அப்போ எனக்கு இடுப்புக்கும் மேல்னு புரிஞ்சுக்கோங்க.  இதைக் குறித்து ஏற்கெனவே அறிந்து வைத்திருந்ததால் அவர் கிளம்புகையிலேயே பெர்முடாஸ் போட்டுக் கொண்டு வந்துவிட்டார்.  புடைவை எல்லாம் நனைந்து போய் நடக்க சிரமப்பட்டதோடு இல்லாமல் பாறைகளும் குத்தின.  இங்கே பார்த்து நம் மக்கள் குனிந்து குளிக்க ஆரம்பிப்பதும், தண்ணீரைக் குடித்துத் துப்புவதுமாக அமர்க்களம் பண்ண ஆரம்பிக்கிறாங்க.  உதவிக்குத் தன்னார்வலர்கள் தான்னு நினைக்கிறேன்.  அவங்க ஒண்ணும் சொல்றதில்லை.  படம் எடுக்கிறதை மட்டும் ஏன் தடுக்கறாங்கனு புரியலை.  இதை முழுசும் பார்த்து முடிக்க எங்களுக்கு ஒரு மணி நேரத்துக்கும் மேலே ஆச்சு.  நாங்க வெளியே வரச்சே எங்கே எங்களைக் காணோமேனு நினைச்சார் போல ஆட்டோ பையர்.  தேடிட்டு வந்திருந்தார்.

அடுத்து என்னனு கேட்டதுக்கு, பரத் கூப்(பரதன் குகை) என்று என்னிடம் சொன்னார். அப்போ ரங்க்ஸ் ஒரு இடத்தைத் தாண்ட சிரமப் படவே அவரிடம் சென்று உதவி செய்தார்.  ரங்க்ஸ் அவரிடம் சாப்பிட்டுவிட்டு பரதன் குகை பார்க்கலாம் என்றும், அதோடு டிக்கெட் முன்பதிவுக்கு வேறே போகணும்னும் சொல்லி இருக்கார்.  என்னிடம் பரதன் குகை பார்க்கணும்னு சொன்ன அந்த ஆட்டோக்காரருக்கு என்ன தோணித்தோ அவரிடம் பரதன் குகை பார்க்கிறதுன்னா தனியாப் பணம் நானூறு ரூபாய் கொடுக்கணும்.  இதோட சேர்ந்தது இல்லை.  அது ரொம்ப தூரம்னு சொல்லி இருக்கார்.  உண்மையில் ஒவ்வொண்ணும் தூரம் தான் இல்லைனு சொல்லலை.

ஒவ்வொண்ணும் போறதுக்கே ஒரு மணி நேரத்துக்கும் மேலே ஆகிடுது.  நாங்க காலை பத்து மணிக்கே கிளம்பியதில் அப்போ கிட்டத்தட்ட மதியம் மூணு மணி ஆகி இருந்தது.  ஆகவே சர்க்கரை நோயாளியான ரங்க்ஸுக்குப் பசி வந்திருக்கு.  சாப்பிட்டுட்டுப் போகலாம்னு சொல்லி இருக்கார்.  மீண்டும் நகருக்குள் வந்தால் மறுபடி காட்டுப் பகுதிக்குப் போகணுமேனு அந்த ஆட்டோ ஓட்டுநருக்குத் தோணித்தோ என்னமோ. இம்மாதிரி சொல்லி இருக்கார்.


23 comments:

  1. //உடனே என்னைக் கன்னாபின்னாவெனத் திட்டினார் அந்த ஆசாமி. கையில் ஒரு சின்னக் கோலை வைத்துக் கொண்டு எல்லாருடைய உச்சந்தலையிலும் தட்டி அதை வலுக்கட்டாயமாகக் கைகளில் திணித்துக் கொண்டிருந்தனர். //

    காசையும் கொடுத்து தேளையும் கொட்டிக்கொண்ட கதை என இதைத்தான் சொல்வார்களோ ! ;)

    ReplyDelete
  2. கஷ்டப்பட்டு பயந்துகொண்டே எடுத்த படங்கள் நல்லாவே வந்திருக்கின்றன.

    >>>>>

    ReplyDelete
  3. //சில இடங்களில் தண்ணீரின் ஆழம் ரங்க்ஸுக்கே முழங்காலுக்கு வந்துவிட்டது. அப்போ எனக்கு இடுப்புக்கும் மேல்னு புரிஞ்சுக்கோங்க.//

    நல்லாவே புரிஞ்சுக்கிட்டோம். ;)

    //இதைக் குறித்து ஏற்கெனவே அறிந்து வைத்திருந்ததால் அவர் கிளம்புகையிலேயே பெர்முடாஸ் போட்டுக் கொண்டு வந்துவிட்டார்.//

    அடடா, உங்களுக்கும் வேறு ஏதாவது வசதியான ட்ரெஸ் போடச்சொல்லி சொல்லி இருக்கலாமே, அவர்.

    //புடைவை எல்லாம் நனைந்து போய் நடக்க சிரமப்பட்டதோடு இல்லாமல் பாறைகளும் குத்தின. //

    அச்சச்சோ !

    >>>>>

    ReplyDelete
  4. //என்னிடம் பரதன் குகை பார்க்கணும்னு சொன்ன அந்த ஆட்டோக்காரருக்கு என்ன தோணித்தோ அவரிடம் பரதன் குகை பார்க்கிறதுன்னா தனியாப் பணம் நானூறு ரூபாய் கொடுக்கணும். இதோட சேர்ந்தது இல்லை. அது ரொம்ப தூரம்னு சொல்லி இருக்கார். //

    நல்லவேளை ஆளுக்கு நானூறு கேட்காமல், இருவருக்கும் சேர்த்தே வெறும் நானூறு கேட்டுள்ளார். நல்ல பையன்.

    சுவாரஸ்யங்கள் தொடரட்டும்.

    ReplyDelete
  5. சென்று வருவதற்கு மிகவும் கஷ்டமான இடங்கள் என்று தெரிகின்றது. படங்கள் நன்றாக வந்திருக்கிறது. நீங்கள் சொல்வது போல படமெடுப்பதற்குக் கத்துபவர்கள் தண்ணீரைக் குடித்துத் துப்பி அடுத்தவர்களுக்குச் சங்கடம் தருபவர்களுக்கு அறிவுறுத்தாதது தவறுதான்.

    ReplyDelete
  6. எங்க ஊரு பக்கம் கூட இப்படி ஒரு சாமியார் உண்டு .அவரிடம் அடிவாங்க ஒரு கூட்டமும் உண்டு.அவசியமான எண்ணங்கள்

    ReplyDelete
  7. ஒரு இலைத் தட்டில் குங்குமம், மஞ்சள், ஒரு செம்பருத்திப் பூ போன்றவற்றை வைத்து அம்மாதிரிப் பல தட்டுக்களை வைத்து ஒரு தட்டு இருபது ரூபாய் என விற்பனை செய்தனர்.//
    அதை வாங்கவில்லை என்றால் திட்டு வாங்குவதுடன் நமக்கு பக்தி இல்லை என்று வேறு சொல்வார்கள்.
    வட நாட்டில் ஒரு கோவிலில் நிறைய லிங்கங்கள் ஒரு இடத்தில் இருந்தது. அதில் நிறைய காசு போட்டு வைத்து இருந்தார்கள் பண்டா போட சொன்னார் என்னிடம் காசு இல்லை,என் கண்வரிடமிருந்தது, அவர்கள் முன்னால் போய் விட்டார்கள் .
    என்னை காசு போடவில்லை என்று பக்தி கோயி நஹி என்று திட்டினார்.

    ReplyDelete
  8. படங்கள் எல்லாம் நன்றாக இருக்கிறது. பயண அனுபவம் அடுத்து போகிறவர்களுக்கு உதவும்.
    நன்றி.

    ReplyDelete

  9. காசியில் பைரவர் சந்நதியிலும் பண்டா முதுகில்அடிக்கிறார்.அதைப் பார்த்து நான் அவர் பக்கமே போகவில்லை. சுவாரசியமான அனுபவங்கள்.

    ReplyDelete
  10. இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி எங்கெங்கோ அலைகிறார் ஞானதங்கமே!

    ReplyDelete
  11. வடக்கில் பல கோவில்களில் பண்டாக்கள் இப்படி முதுகில் அடிப்பார்கள்... ஜம்முவில் ஒரு கோவிலில் இப்படி அடித்துக் கொண்டிருக்க, அதிலிருந்து தப்புவதற்கு அவரைத் தாண்டும்போது சட்டென குனிந்து ஓடினேன்! பின்னால் வந்ந நண்பர் எனக்கும் சேர்ந்து இரண்டு அடி வாங்கினார்! :)

    ReplyDelete
  12. வைகோ சார், வடமாநிலங்களில் சில இடங்களில் இந்தப் பிடுங்கல் தாங்க முடியாத ஒன்று. :( வாங்கலைனு வைச்சுக்கோங்க சாபமே கொடுக்கிறாங்க! :(

    ReplyDelete
  13. படம் நல்லா வந்திருக்குனு சொன்னதுக்கு நன்றிங்க.

    ReplyDelete
  14. //நல்லவேளை ஆளுக்கு நானூறு கேட்காமல், இருவருக்கும் சேர்த்தே வெறும் நானூறு கேட்டுள்ளார். நல்ல பையன்.//

    உண்மைதான். ஏமாறுகிறோம்னு தெரிஞ்சே ஏமாந்ததில் இதுவும் ஒண்ணு. ஆனால் என்னனு புரியலை. முதல்நாள் மதியம் அயோத்தியில் பனிரண்டு மணிக்கு ஆரம்பிச்ச பயணம் மறுநாள் மதியம் வரை தொடர்ந்ததாலேயே என்னமோ! ஒரு அலுப்பு, சலிப்பு. இதைப் பொருட்படுத்தும் மனநிலை மறுநாள் தான் வந்தது. :(

    ReplyDelete
  15. வாங்க ஶ்ரீராம், குழுவோடு போயிட்டு வரலாம். இம்மாதிரி சிரமமான இடங்களுக்குக் குழுவோடு போவதே நல்லது. எனக்குக் குழுவோடுதான் போகணும்னு இருந்தது. ஆனால் அவங்களோட பயணத்திட்டம், தங்குமிடம் எல்லாம் ஒத்து வரலை. :(அதோடு சித்திரகூடப் பயணம் எல்லாரும் போடுவதில்லை.

    ReplyDelete
  16. வாங்க கோமதி அரசு,பக்தி இல்லைனு மட்டும் சொல்லலை. நீ வந்ததுக்கு ஒரு பலனும் உனக்குக்கிடைக்கப் போவதில்லைனு வேறே சொன்னாங்க. :))) அவங்கல்லாம் என்ன ரிஷி, முனிகளா?? நம்மை மாதிரி மனுஷங்க தானே! என்ன வேணா சொல்லிக்கட்டும்னு விட்டுட்டேன். :)))) நிறையப் பார்த்தாச்சு இது போல.

    ReplyDelete
  17. வாங்க மைதிலி கஸ்தூரிரங்கன், முதல்வரவுக்கும் கருத்துக்கும் நன்றிங்க.

    ReplyDelete
  18. பயண அனுபவத்தை விரிவாக எழுதுவதன் காரணமே அடுத்துப் போறவங்களுக்கு சிரமம் இல்லாமல் இருக்கணும்னு தான். :)

    ReplyDelete
  19. வாங்க ஜிஎம்பி சார். காசியிலே எல்லாம் நாங்க கஷ்டப்படவே இல்லை. சொல்லப் போனால் கயாவிலே கூடப் பரவாயில்லை ரகம். :))) மத்ரா, பிருந்தாவன், கோகுலம் இங்கெல்லாம் வசூல் ஜாஸ்தி! :)

    ReplyDelete
  20. அட???????? யாரு அது??? மஞ்சூர் ராஜா????????????????????????????????????? என்ன என்ன? நிஜம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்மாவா? பெரிய ஆளுங்க எல்லாம் வர ஆரம்பிச்சுட்டாங்க டோய்!

    ReplyDelete
  21. வாங்க வெங்கட், பத்ரியில் எல்லாம் இப்படிப் பிடுங்கலை. பொதுவா இந்தப் பிடுங்கல் உ.பி. ஒரிசா, கல்கத்தா போன்ற இடங்களில் அதிகமா இருக்கிறதாத் தெரியுது. குஜராத், ராஜஸ்தான், மஹாராஷ்ட்ராவில் எல்லாம் நிம்மதியாப் பார்க்கலாம். நாசிக், பஞ்சவடி எல்லாம் போனோமே. பிரச்னையே இல்லை.

    ReplyDelete
  22. பாறைகளின் விசித்திரமயமான அமைப்பு அசப்பில் ஓவியம் போல இருக்கிறது.

    ReplyDelete
  23. அப்போது நினைவுக்கு வரவில்லைதான். வீடியோவாகப் பார்த்ததில் மனதில் நின்று விட்டது போல. நானும் கமெண்ட் போட்டிருக்கேன் பாருங்க.. எப்படியோ எலா இடங்களுக்கும் போய்ப் பார்த்திருக்கீங்க... கொஞ்சம் பொறாமையாத்தான் இருக்கு!

    ReplyDelete