எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Friday, November 22, 2013

சித்திரவதையுடன் சித்திரகூடத்தில்! தொடர்ச்சி!

மடிக்கணினிக்கு என்னமோ உடம்பு. நேத்திக்குப் பூராவும் ஓய்வு எடுத்துண்டதும், இன்னிக்கு டாக்டரைப் பார்த்ததும், தானே சரியாயிடுத்து. அது கிட்டே ரொம்பக் கோபமா வந்தது.  ஆனால் கடந்த இரு நாட்களும் எதுவுமே சரியில்லை.  ஒரே பிரச்னை மேல் பிரச்னை.  நேத்திக்குக் கோவிலுக்குப் போய்ப் பெருமாளைப் பார்த்து "ஹெலோ" சொன்னதும் கொஞ்சம் மனம் லேசாச்சு. இம்முறை ஒரு நிமிஷம் நிக்க முடிஞ்சது. நம்பெருமாளும் எப்போவும் போல நமுட்டுச் சிரிப்புச் சிரிச்சிண்டார். இப்போ நம்ம சித்ரகூடப் பயணத்தைத் தொடருவோமா?
*******************************************************************************

சித்ரகூடம் பாதி நகரம் உத்தரப் பிரதேசத்திலும், பாதி நகரம் மத்தியப் பிரதேசத்திலும் உள்ளது.  உத்தரப் பிரதேசப் பகுதி தாண்டினதுமே நல்ல வெளிச்சம் இருக்கு.  அதாவது மின் விநியோகம் சிறப்பாகச் செய்யப்பட்டிருந்தது.  ஆனாலும் எங்களால் ஹோட்டல்களைக் கண்டு பிடிக்க முடியவில்லை.  முதலில் சொன்ன ஹோட்டலில் இருந்து கிட்டத்தட்ட அரை கிலோ மீட்டர் போயிருப்போமோ என்னமோ!  ஒரே ஒரு ஹோட்டல் திறந்திருந்தது.  படிகள் ஏறிப் போகணும். ஆனால் நானும் வந்து அறையைப்பார்க்கணும்னு எங்க இரண்டு பேருக்குமிடையே பேசப்படாத ஒரு ஒப்பந்தம்.  ஆகவே வேறே வழியில்லாமல் இறங்கினேன்.  இந்த ஆட்டோக்களே தனிப்பட்ட முறையில் இருக்கின்றன.  உயரக் காலைத் தூக்கி வைச்சு ஏறணும். மடிக்க முடியாத முழங்காலோடு ஏறவும், இறங்கவும் கஷ்டம்.  ஹோட்டலுக்கு வேறே பத்துப் படிகள் ஏறணும்.  ஏறி அங்கே போனால் அங்கே இருந்தவரை எழுப்பினோம்.

முதலில் அறை இல்லைனு சொன்னவர், என்னைப் பார்த்ததும் இரவு தங்கிப் படுத்துக்க இடம் வேணும்னா தரேன்னு சொன்னார்.  அது ஏதானும் அறையிலிருக்கும்னு நினைச்சால், கடவுளே, அங்கேயே ஒரு ஒதுக்குப்புறமான ஹாலில் கிட்டத்தட்டப் பத்துப் பேர் படுத்து உறங்கினார்கள்.  அவங்களைக் கொஞ்சம் ஒதுங்கச் சொல்லிட்டு நமக்கு இடம் கொடுப்பாங்களாம்.  இதெல்லாம் சரிப்பட்டு வராதுனு திரும்ப நினைச்சோம்.  அதுக்குள்ளே எங்க முகத்தைப் பார்த்த அந்த நபர், "இதெல்லாம் ராயல் குடும்பம் போலிருக்கு"னு நினைச்சிருப்பார் போல!  உங்களுக்கெல்லாம் சரியா வராதும்மானு சொல்லிட்டு, தேவி பகவதி ஹோட்டல் என்னும் பெயரை ஆட்டோக்காரரிடம் சொல்லி, வழியையும் சொல்லி அங்கே கட்டாயம் அறை கிடைக்கும் என்றும், ரொம்ப ரொம்ப வசதியாய் இருக்கும்னு சொன்னார்.

ஆஹானு மகிழ்ந்து போய் ஆட்டோவில் மறுபடி ஏறினோம்.  கிட்டத்தட்ட ஒரு கிலோ மீட்டருக்கும் மேலே போனதும் அந்த தேவி பகவதி ஹோட்டல் வந்தது.  ஆட்டோ அறிவிப்புப் பலகையைப் பார்த்ததும் நின்றது.  நின்றது ஒரு மேடான இடம்.  அங்கிருந்து இறங்கிப் பள்ளத்தில் போய் மலைச்சாரலில் இன்னும் பள்ளத்தில் கொஞ்ச தூரத்தில் ஒரு கட்டிடம் கட்டிக் கொண்டிருந்தார்கள்.  அது தான் தேவி பகவதி ஹோட்டல்.  பகவானே!  இப்போத் தானே கட்டிட்டு இருக்காங்க.  அதோடு போற பாதையே சரியில்லையே!  இங்கே எப்படிப் போறது? நான் வரமாட்டேன்னு அடம் பிடிக்க, அந்த ஹோட்டல் கதவு திறந்து விளக்குப் போடப்பட்டது.  ஆட்டோக்காரரும் அவருடைய உதவியாளும் போய்ப் பேசினாங்க.  அறை இருப்பதாகச் சொல்லி இருக்காங்க.  ஆகவே ஆட்டோக்காரர், பிரச்னை தீர்ந்ததுனு நிம்மதியா சாமானைத் தூக்க ஆரம்பிச்சார். நான் ஆக்ஷேபிக்க, ரங்க்ஸோ இந்த நேரத்தில் வேறே எங்கே போய்த் தேடுவோம், பேசாமல் வா, என்று அதட்ட அரை மனசாப் போனேன்.

அங்கே மாடியில் (லிஃப்டெல்லாம் இல்லை) படிகள்.  ஒவ்வொன்றுக்கும் குறைந்தது முக்காலடி இருக்கும். :( படி ஏறிப் போனதும் கடைசியில் இருந்த அறை ஒன்றைக் காட்டினார். பத்துக்குப் பத்து அறைக்குள்ளேயே குளியல், கழிவறை போக மீதம் இருந்த இடத்தில் கட்டிலைப் போட்டு அழுக்கான படுக்கை.  அதிலே எப்படிப் படுக்கிறது? அதுக்குள்ளே ஆட்டோக்காரங்க சாமானைக் கொண்டு அங்கே வைச்சாச்சு.  அந்த விடுதிக் காப்பாளர்னு சொல்லக் கூடிய ஒரு நபர் (இளைஞன்) அங்கே வந்தார். வாடகை 450 ரூ என்றார்.  இந்த அறைக்கா? என நான் கேட்க, இப்போ இந்த வாடகை, நவம்பரில் ஆயிரம் ரூபாய் வாங்குவோம்னு சொன்னார்.  அந்த ஹோட்டலில் கீழ்த்தளம் மிகப் பெரிய ஒரு கூடம் (கிட்டத்தட்ட நூறு பேர் சாப்பிடலாம்) ஒன்றோடும், அதைத் தாண்டி சமையலறை, வெளியே கழிவறை, தண்ணீர்க் குழாய்கள் என்றும் ஹாலில் நுழையும் இடத்துக்கு அருகிருந்து மாடிப்படிகளோடும் காணப்பட்டது.  மாடியில் ஒரு தளம் தான் கட்டி முடிஞ்சிருந்தது.  இரண்டாம் தளம் கட்டிக் கொண்டிருக்கிறார்கள். முழுதும் கட்டி முடிச்சதும், கீழே சாப்பாடும், மேலே தங்குமிடமாகவும் இருக்குமாம்.

அதெல்லாம் சரி, இப்போ சாப்பாடுக்கு என்ன செய்யறது?  முக்கியமாக் காலைத் தேநீர் கிடைக்குமானு கேட்டதுக்கு அதெல்லாம் ஒண்ணும் கிடையாதுனு சொல்லிட்டார் அந்த வாலிபர்.  கடவுளே!  எங்கே போய்க் குடிக்கிறதுனா?  நீங்க போய்ப் பாருங்க ஏதேனும் டீக்கடை இருந்தால் குடிச்சுக்கலாம்னு பதில் வருது.  சாப்பாடும் அப்படியேனு சொல்லிட்டார். இங்கே இன்னும் இரண்டு நாள் தங்கணுமா?  மாடி ஏறி, ஏறி இறங்கி ரோடுக்குப் போய், அங்கிருந்து ஆட்டோ ஏதும் கிடைச்சால் கடைத்தெருக்குப் போய் அப்புறமாத் தான் சாப்பிட ஏதானும் கிடைக்கும்.  இங்கே நீங்க போட்டுத் தர மாட்டீங்களா, குறைந்த பக்ஷம் தேநீர் மட்டும் என்று கேட்டதுக்குப் பிடிவாதமாக அந்த இளைஞர் மறுத்துவிட்டார்.

விதியேனு ஒருத்தரை பார்த்து விழித்த வண்ணம் விளக்கை அணைச்சுட்டுப் படுத்தோம்.  இதுக்குள்ளாக மணி நாலு ஆகி இருந்தது.  எங்கே இருந்து தூங்க?  ஶ்ரீராமர் சித்திரகூடம் வந்து கஷ்டப்பட்டாரோ இல்லையோ, தெரியலை, நாம் கஷ்டப்படறோம்.  இங்கேருந்து எப்போத் திரும்பிப் போறது? திடீர்னு எனக்குக் கவலை வர, நாளைக்கு மதியம் ரயிலிலேயே திரும்பிடலாம்னு சொல்ல, லக்னோவோ, கான்பூரோ போய் இருந்தாலும் அங்கே எல்லாம் பார்க்க இரண்டு நாளைக்குள் தான் ஆகும்.  நம்ம டிக்கெட் புதன் கிழமைக்குத் தான் அதுவரை அங்கே சும்மா உட்கார முடியுமானு அவர் திரும்பக் கேட்க இரண்டு பேருக்கும் விடியும் வரை விவாதம். விடிஞ்சதும், பல் தேய்த்து விட்டுக் கீழே இறங்கினோம்.  அருகில் டீக்கடை இருக்கானு கேட்டுக் கொண்டே போய்க் கொஞ்ச தூரத்தில் தென்பட்ட ஒரு டீக்கடையில் தேநீர் குடிச்சோம். சகிக்கவில்லை.  திரும்பி ஹோட்டலுக்கு வந்து துணி துவைக்க முடியுமானு கேட்டதுக்கு! அப்பாடா, அந்த இளைஞன் தோய்த்து உலர்த்தக் கொடி கூடக் கட்டி இருக்கோம்.  உங்க அறைக்கு வெளியே உள்ள தாழ்வாரத்தில் பாருங்கனு உதவியாக ஒரு வார்த்தை சொல்ல, நான் என் துணி, அவர் துணினு எல்லாத்தையும் தோய்த்து உலர்த்திப் பின் குளித்தேன்.

நல்லவேளையா( என்னனு எங்களுக்கே தெரியலை) வெந்நீர் ஒரு பக்கெட் கொடுத்தான்.  ஆனால் அது வெந்நீர்னு சத்தியம் பண்ணணும். பரவாயில்லைனு அதிலே நான் மட்டும் குளிச்சேன்.  இரண்டு பேரும் டிபன் எங்கேயானும் சாப்பிட்டுட்டுச் சுத்திப் பார்க்கக் கிளம்பினோம்.  வெளியே வந்து ரோடில் நின்று ஒவ்வொரு ஆட்டோவாகக் கூப்பிட்டோம்.


9 comments:

  1. எனக்குத் தெரிந்த ஒரு மாமி சந்திரா என்ற தனது பெயரை அவரது கணவர் ஜானகி என்று கூப்பிட ஆரம்பித்த நாளிலிருந்துதான் கஷ்டப்படத் தொடங்கியதாகச் சொன்னது நினைவுக்கு வந்தது, உங்கள் 'ஶ்ரீராமர் சித்திரகூடம் வந்து கஷ்டப்பட்டாரோ இல்லையோ...' வரிகளைப் படித்தவுடன்! நல்ல அனுபவங்கள்தான்.

    ReplyDelete
  2. நேத்திக்குக் கோவிலுக்குப் போய்ப் பெருமாளைப் பார்த்து "ஹெலோ" சொன்னதும் கொஞ்சம் மனம் லேசாச்சு.

    நேற்று உலக ஹலோ தினம் ..!

    ReplyDelete
  3. //ஶ்ரீராமர் சித்திரகூடம் வந்து கஷ்டப்பட்டாரோ இல்லையோ, தெரியலை, நாம் கஷ்டப்படறோம். இங்கேருந்து எப்போத் திரும்பிப் போறது? //

    நாமாக ஏதோ ஒரு ஆசையில் ஏற்படுத்திக்கொள்ளும் அவஸ்தைகள் தான் இவைகள்.

    பதிவு நல்ல சுவாரஸ்யமாகவே போகிறது.

    ReplyDelete
  4. வாங்க ஶ்ரீராம், சீதாலக்ஷ்மினு பெயர் இருந்தால் கஷ்டம் படுவாங்கனு சொல்வாங்க. எனக்குத் தெரிஞ்ச எத்தனையோ ஜானகிகள் சந்தோஷமாகவே இருந்திருக்காங்க; இப்போவும் இருப்பாங்க.

    என்னோட உண்மைப் பெயர் சீதாலக்ஷ்மி தான். :))))

    ReplyDelete
  5. வாங்க ராஜராஜேஸ்வரி, அட, தெரியாமப் போச்சு! நம்பெருமாள் அதான் கூப்பிட்டு ஹெலோ சொல்லி இருக்கார் போல! :)))

    ReplyDelete
  6. வைகோ சார், நீங்க சொல்வது உண்மையே. நாமாய் ஏற்படுத்திக் கொண்டது தான். ஆனால் நாங்க நினைச்சாப்போல் வண்டி கிடைச்சிருந்தால் கான்பூர் போய் பிட்டூர் வால்மிகி ஆசிரமம் பார்த்துட்டுப் பின்னர் அங்கிருந்து சித்திரகூடம் வந்திருப்போம். அப்போ இத்தனை கஷ்டம் இருந்திருக்காது. ஏனெனில் அந்த வண்டி இரவு எட்டு மணிக்கெல்லாம் சித்திரகூடம் வந்துடும். எதிர்பாரா மாற்றம் தான் கஷ்டத்தின் காரணம். :))))

    ReplyDelete
  7. அவங்க அப்படி நினைக்கறாங்கன்னு சொன்னேன். மற்றபடி எனக்கு அதில் நம்பிக்கை இல்லை. :))

    ReplyDelete
  8. நமது ஊர் போல தேநீர் கடைகள் பெரிதாக இங்கே இருப்பதில்லை. நடைபாதையில் சில கடைகள் இருக்கும் - அவ்வளவு தான்....

    பல இடங்களில் இப்படி கஷ்டம் தான்!

    ReplyDelete
  9. ரொம்பத்தான் சிரமம்.

    ReplyDelete