சப்பாத்தி
"திங்க" கிழமை வந்தாலே எங்கள் ப்ளாகிலே "திங்க" என்ன போட்டிருப்பாங்கனு பார்க்கத் தோணும். சில/பல வாரங்கள் நான் பார்க்கிறச்சே எதுவும் வராது. சரினு கணினியை அணைச்சுட்டு ஒரு மணி, இரண்டு மணி கழிச்சுத் திறந்து பார்த்தாப் பதிவு வந்திருக்கும். யாரேனும் கருத்தும் சொல்லி இருப்பாங்க. எ.கொ.இ.ச.னு நொந்துக்கிட்டு சாப்பிட என்ன இருக்குனு பார்ப்பேன். நேத்திக்குக் கணினி பக்கமே வரமுடியலை! இன்னிக்குக் காலம்பரயும் உடனே பார்க்க முடியலை. கொஞ்ச நேரம் முன்னாடி பார்த்தாச் சப்பாத்திப் புராணம், அதிலே நமக்கு அழைப்பும் கூட.
சின்ன வயசிலே சப்பாத்தி சாப்பிட ஆரம்பிச்சது எப்போனு நினைவில் சரியா இல்லாட்டியும் கூட, தால், சப்பாத்தி சாப்பிட்டோம்னு அரைகுறை நினைவா இருக்கு. அப்போல்லாம் ரேஷனிலே கோதுமை கொடுப்பாங்க. மொட்டை கோதுமைனு அதைச் சொல்லுவாங்க. கோதுமைக்கு மொட்டை எல்லாம் அடிப்பாங்களா என்ன? இன்னும் சிலர் வடக்கே இதை எல்லாம் குதிரைக்குப் போடுவாங்கனு சொல்லிப்பாங்க. அதைத் தானா நாம சாப்பிடறோம்னு எல்லாம் புரியாத, தெரியாத வயசிலேயே அதை மாவா அரைச்சு அம்மா சப்பாத்தி பண்ணுவா.
அம்மாவுக்கும் விதம் விதமாகச் சமைத்துப் போடப்பிடிக்கும். அப்போதெல்லாம் கோதுமை மாவைப் பிசைந்து அப்பளம் போல் இட்டு அதைத் தோசைக்கல்லில் போட்டு நெய்யோ, எண்ணெயோ ஊத்தி இரண்டு பக்கமும் திருப்பிப் போட்டு எடுப்பாங்க. அது கொஞ்சம் மொறுமொறுனே இருக்கும். சப்பாத்தின்னா அப்படித் தான் இருக்கும்னு நினைச்சுப்போம். ஆனாலும் தால் மட்டுமில்லாமல், தக்காளிக்காய்க் கூட்டு, தக்காளிக் கூட்டு, வெங்காயம், தக்காளி வதக்கல்னு அம்மா பண்ணுவா. அபூர்வமாக் கிடைக்கும் காலிஃப்ளவரில் கூட வெங்காயம் சேர்த்துக் கறி பண்ணுவா. அப்பா அதைத் தொடவே மாட்டார். ஆனால் பெரிய வெங்காயமோ, குடைமிளகாயோ பார்த்ததே இல்லை.
என்னோட அம்மாவின் ஒன்று விட்ட அண்ணாவின் மாட்டுப் பெண் புனாவில் பிறந்து வளர்ந்து படித்துவிட்டு மதுரைக்குக் கல்யாணமாகி மேலாவணி மூலவீதிக்கு வந்து சேர்ந்தாள். அவங்க மூலமா அப்போத் தான் அம்மாவுக்குச் சப்பாத்தியை மடிச்சு மடிச்சுப் போட்டு இடும் பரோட்டா அறிமுகம் ஆனது. அதோடு இல்லாமல் உ.கி.யையே விதம் விதமாச் சமைக்கவும் தெரிய வந்த்து. அம்மா உ.கி.வெங்காயம் போட்டுச் செய்யும் கறி மிக நன்றாகச் சாப்பாடுடனும் சரி, சப்பாத்தியுடனும் சரி சுவையாக இருக்கும். நானும் அப்படித் தான் சப்பாத்தி பண்ணிட்டு இருந்தேன். ஆனால் பண்ணின உடனே மூடி வைத்தால் சப்பாத்தி மிருதுவாக இருக்கும் என்பதை என் சுய சமையலில் கண்டு பிடித்தேன். அதோடு அப்போவெல்லாம் சப்பாத்தியை இட்ட உடனே அடுப்பில் போட்டுப் பண்ணி எடுக்கணும்னும் தெரியாது. நிறைய இட்டு ஒரு பேப்பரில் போட்டுக் கொண்டு அதை ஒவ்வொண்ணாக எடுத்து தோசைக்கல்லில் போட்டு நெய் அல்லது எண்ணெய் ஊற்றி வேக வைப்போம்.
நாங்க தோசை மாதிரிச் சுட்டு எடுப்பது உண்மையில் சப்பாத்தியே இல்லை என்பதை நான் முதல் முதல் ராஜஸ்தான் வந்ததும் புரிந்து கொண்டேன். நான் பண்ணும் சப்பாத்தியைப் பார்த்து அவங்க சிரிப்பாங்க. அவங்க இட்லியையும், தோசையையும் பார்த்து பதிலுக்கு நான் சிரிப்பேன். மாவை உருட்டிப் பிசைவதில் இருந்து இடும்போது திரும்பத் திரும்ப மாவைப் பிசைந்து உருட்டினால் தான் சப்பாத்தி நன்கு இட வரும் என்பதோடு மெலிதாக இருந்தாலும் முறுகாமல் பூப்போல் வரும் என்றும் அதுவே இரட்டை மடிப்பாக வரும் என்றும் புரிந்து கொண்டேன். மெலிதாக மடித்துப் போட்டு இட்டு தோசைக்கல்லில் போட்டு இருபக்கமும் நெய் தடவினால் அது சப்பாத்தி என்றும், மெலிதாக இட்டு விட்டுத் தோசைக்கல்லில் இரண்டு பக்கமும் லேசாகச் சூடு செய்து விட்டு அனலில் வாட்டி எடுப்பது ஃபுல்கா ரொட்டி என்றும், உள்ளே வெண்ணெய் தடவி மடித்து மடித்துப் போட்டு இட்டு கொஞ்சம் இல்லை நிறையவே கனமாகப் பண்ணினால் அது தான் பரோட்டா அல்லது பஞ்சாபி மொழியில் தவா பூரி அல்லது பராந்தா என்றும் புரிந்து கொண்டேன். ரொட்டியை இட்டதும் தோசைக்கல்லிலேயே போட்டு வாட்டி ஒரு வெள்ளைத் துணியால் ஒத்தி ஒத்தி எடுத்துச் சப்பாத்தியைச் சுற்றிச் சுற்றித் திருப்பிப் போட்டு தோசைக்கல்லிலேயே உப்ப வைத்து எடுத்தால் அது தவா ரொட்டி என்றும் புரிந்தது.
அதைத் தவிரவும் ருமாலி ரொட்டி, கஸ்டர்ட் ஸ்டஃப் செய்து பண்ணும் பரோட்டா, நான், தந்தூர் ரொட்டி ஆகியவையும் பழக்கம் ஆகியது.
இன்னும் உ.கி. வேக வைத்து மசாலா சாமான்கள் சேர்த்துக் கறி போல் செய்து உள்ளே ஸ்டஃப் பண்ணும் ஆலு பரோட்டா,
ஆலு பரோட்டா
வெந்தயக்கீரையைப் பொடிப் பொடியாக நறுக்கி உப்பு,மஞ்சள் பொடி சேர்த்துச் சற்று நேரம் வைத்த பின்னர் கோதுமை மாவில் சேர்த்து விட்டுக் காரம் , மசாலா சேர்த்துச் செய்யும் மேதி பரோட்டா,
மேதி பரோட்டா
தேப்லா, இரண்டு, மூன்று மாவுகள் சேர்த்துச் செய்யும் மிஸ்ஸி ரொட்டி, முள்ளங்கிக்கறியை உள்ளே ஸ்டஃப் செய்யும் மூலி ரொட்டி, சோள மாவு சேர்த்துச் செய்யும் ரொட்டி, கம்பு ரொட்டி என விதவிதமான ரொட்டி வகைகள் இருப்பதும், தால் பாட்டி என்னும் ராஜஸ்தானின் முக்கிய உணவையும் குறித்து அறிய நேர்ந்தது.
தால் பாட்டி
தால் பாட்டிக்கு பாட்டியைச் சுட்டும் செய்யலாம்; நெய்யிலோ, எண்ணெயிலோ பொரித்தும் செய்யலாம். அதை உதிர்த்துக் கொண்டு கட்டாயமாய் அதன் தலையில் நெய்யை ஊற்றிக் கொள்ள வேண்டும். அதன் பின்னர் காரமான தாலை அதன் மேல் ஊற்றிக் கொண்டு சாப்பிட வேண்டும்.
சூர்மா லட்டு
இதற்குப் பின்னர் சாப்பிடும் சூர்மா எனப்படும் இனிப்பு இனிப்போ இனிப்பு. கோதுமை மாவு அல்லது ரவையை வறுத்துப்பொடித்த மாவில் வெல்லம் சேர்த்துப் பெரும்பாலும் பண்ணுவார்கள். இப்போதெல்லாம் சர்க்கரையும் சேர்க்கின்றனர். இதிலேயும் நெய் நிறைய இருக்கும். இதன் பின்னர் மீட்டா லஸ்ஸி குடிக்கவேண்டும். இது ஒரு முழுச் சிறப்பு விருந்து உணவாக ராஜஸ்தானின் தென் பகுதியில் விருந்தினருக்குச் சமைப்பார்கள்.
ஒருவேளை தொடருமோ? :)
நான் எடுத்த சில படங்கள், பரோட்டா பண்ணுகையில், தால் பண்ணுகையில் எடுத்தவை நாளை வெளிவரும்.
இதில் உள்ள படங்கள் கூகிள் உபயம். கூகிளாருக்கு நன்றி.
இதை எழுதிப் போட்டுட்டுக் காணாமல் போய்த் தேடிக் கண்டு பிடித்துப் போட வைத்தவருக்கு என் நன்றி. :)