தியானத்தின் சக்தியை எளிதாக நினைக்க வேண்டாம். மனிதன் தான் விரும்புகிறபடியே ஆகிறான். இதைக் காரணங்கள் காட்டி ருஜூப்படுத்த வேண்டுமானால,் அது ஒரு பத்திரிகைக் குறிப்பின் அளவுக்குள் முடிவு பெறமாட்டாது. ஆனால் அநுபவத்தில் பார்த்துக்கொள்ளலாம்.
ஒருவன் மனத்தில் நிமிஷத்துக்கு நிமிஷம் தோன்றிமறையும் தோற்றங்க ளெல்லாம் தியானமாக மாட்டா. புதர்க் கூட்டத்திலே தீப்பிடித்தாற்போல மனதிலுள்ள மற்றக் கவலைகளையும் எண்ணங்களையும் எரிக்கும் ஒரே ஜோதியாக விளங்கும் பெரிய விருப்பத்தைத் தியானமென்று கூறுகிறோம். உள்ளத்தில் இவ்வித அக்னி ஒன்று வைத்துக்கொண்டிருப் போமானால், உலகத்துக் காரியாதிகளெல்லாம் நமது உள்ள நிலைக்கு இணங்கியவாறே மாறுபடுகின்றன.
சுவாமிகள் ஆத்ம நாசத்திற்கு இடமான ஒருவகை இன்பத்தையே தியானமாக வைத்துக்கொண்டிருக்கிறார்கள். உலகத்திலுள்ள மெய்யான இன்பத்தை யெல்லாம் நுகர்ந்து, தமக்கும் பிறர்க்கும் நிலைத்த பயன்கள் விளைவதற்குரிய நற்காரியங்கள் செய்து, உள்ளத்திலுள்ள குழப்பங்களும் துன்பங்களும் நீங்கி, சந்தோஷமும் புகழும் பெற வேண்டுமென்ற இச்சை உடையவர்கள், தமது இச்சையை நிறைவேற்றிக் கொள்வது அசாத்தியமன்று. அது இவ்வுலகத்திலேயே இந்த ஜன்மத்திலேயே சாத்தியமாகும்.
அஃதெப்படி என்றால், தமது உள்ளத்திலே தீரத் தன்மை, அமைதி, பலம், தேஜஸ், சக்தி அருள், பக்தி, சிரத்தை இந்த எண்ணங்களையே நிரப்ப வேண்டும்.
''இவற்றை யெல்லால் நான் எனது உடைமையாக்கிக் கொள்வேன். இவற்றுக்கு எதிர்மறையான சிந்தனைகள் எனது அறிவினுள்ளே நுழைய இடங்கொடுக்க மாட்டேன்'' என்று ஒவ்வொருவனும் உறுதி செய்து கொள்ளவேண்டும்
மேற்கண்ட பத்திகள் பாரதியாரின் கட்டுரைத் தொகுப்பில் உள்ளவை. இவை இன்றைய இளைஞர்களுக்கு மிகத் தேவையான ஒன்று. மனக்கட்டுப்பாடு இல்லாமல், தட்டிக் கேட்போருமில்லாமல் இளைஞர்கள் பெருமளவில் தங்கள் வாழ்க்கையைப் பாழடித்துக் கொள்கின்றனர். இரண்டு நாட்கள் முன்னர் கல்லூரி மாணவர்களுக்கிடையே ஏற்பட்ட சண்டை அரிவாள் வெட்டில் முடிந்து இரு மாணவர்கள் நிலை கவலைக்கு இடம். இதற்கெல்லாம் யார் காரணம்? என்ன காரணம்? அடிப்படைக் கல்வியிலேயே தேவையான நீதி ஒழுக்கத்தைப் போதிக்காததே முக்கியக் காரணங்களில் ஒன்றாகும். அதோடு ஒரு மாணவன் தவறே செய்தாலும் ஆசிரியர்கள் அவனைத் தட்டிக் கேட்க முடியாத ஒரு நிலை உருவாகியுள்ளது. பின் மாணவன் எப்படித் தான் திருந்துவான்?
பெற்றோர்கள் தான் தட்டிக் கேட்கவேண்டும்! மாணவர்கள் குழுவாக அலைவது, கையில் அரிவாள், கத்தி போன்றவற்றோடு மற்றப் பள்ளி, கல்லூரி மாணவர்களைப் பழிவாங்க அலைவது போன்றவற்றை நிறுத்திக் கொண்டு படிப்பை மட்டும் பார்க்கும்படி பெற்றோர்கள் தான் சொல்ல வேண்டும். பள்ளியில் கற்றுக்கொடுக்காத, கற்றுக்கொடுக்க இயலாத நீதி போதனைகளையும், நல்லொழுக்கத்தையும் மாணவனின் பெற்றோர்கள் தான் சிறு வயதிலிருந்தே போதிக்க வேண்டும். முன்னெல்லாம் ஒரு மாணவன் ஒரு மாணவியையோ, அல்லது யாரேனும் ஒரு பெண்ணையோ கேலி செய்தாலோ, துன்புறுத்தினாலோ, "உனக்கெலலாம் அக்கா, தங்கை இல்லையா?" எனக் கேட்பது வழக்கம். ஆனால் இப்போதெல்லாம் அவ்வாறு கேட்கமுடியாமல் ஒரே குழந்தையாகப் போய்விடுகின்றனர். ஆகவே மற்றவர் வலியும், வேதனையும் புரிகிறதில்லை.
இதற்குத் தான் நம் சநாதன தர்மத்தில் பெண்ணை தேவியாகவும், தாயாகவும் பார்க்கச் சொல்லி சொல்லிக் கொடுத்தனர். இப்போது அதையும் கேலி செய்கின்றனர். பெண் குழந்தையை ஒரு தாய் எப்படிக் கண்டித்து வளர்ப்பாளோ, அவள் வெளியே செல்லும் நேரம், வரும் நேரம், தொலைபேசியில் பேசும் நபர்கள் என அனைவரையும் எப்படிக் கண்காணிப்பாளோ அதே கண்காணிப்பு ஆண் குழந்தைகளுக்கும் தேவை. பல பெண்கள் ஆண் குழந்தைகளுக்குச் சலுகைகள் கொடுக்கின்றனர். அது தேவையே இல்லை. ஆண், பெண் சமத்துவம் என ஒரு பக்கம் பேசிக் கொள்ளும் நாம் இன்னொரு பக்கம் மூடத்தனமாக ஆண் குழந்தை என்றால் சிறப்புச் சலுகை கொடுத்து ஊக்குவிக்கிறோம். இது எந்த விதத்தில் நியாயம்?
இதைத் தான் நம் பிரதமர் திரு நரேந்திர மோதியும் வேண்டிக் கொண்டார். ஆனால் அதுவும் சர்ச்சைக்கே உள்ளாகிறது. ஆண் குழந்தைகளை இப்போதிலிருந்தே கண்டித்து வளர்த்து வந்தால் வருங்கால சமுதாயம் நல்ல ஒழுக்கமான குடிமகன்களைக் கொண்டிருக்குமே என்னும் தொலைநோக்குப் பார்வை அது. அதைக் கூட விமரிசிப்பவர்களும் இருக்கின்றனர். ஆணின் பார்வை நேர்மையாக இருக்க வேண்டும் எனில் அதற்குப் பெற்றோர் ஒரு முன்னுதாரணமாக இருக்க வேண்டும். முடிந்த வரையில் பிள்ளைகளைத் தவறு செய்யும்போது தட்டிக் கேட்க வேண்டும். சுட்டிக் காட்டித் திருத்த வேண்டும்.
பெண்கள் பாதுகாப்பாகவும், சௌகரியமாகவும், பயமின்றியும் இருக்க வேண்டுமெனில் அதற்கு நல்லொழுக்கங்களைக் கொண்ட ஆண்கள் துணையாக இருக்க வேண்டும். அதைக் கொண்டு வருவது பெண்கள் கைகளிலேயே இருக்கிறது. ஒவ்வொரு வருடமும் நாம் பாரதிக்குச் செலுத்தும் சிறப்பான அஞ்சலி இவ்வாறு நடந்து கொள்வதில் தான் இருக்கிறது.
Super
ReplyDeleteசிறப்பான பாரதி பகிர்வுகள். பாராட்டுக்கள்.!
ReplyDeleteதிராச சார், நிஜம்ம்ம்ம்ம்ம்ம்ம்மா நீங்களா இது? சந்தேகமா இருந்ததாலே மூணு கருத்தையும் வெளியிட்டுவிட்டேன். ஏதேனும் ஒண்ணு உங்களோடதா இருக்குமுல்ல! :))))
ReplyDeleteவாங்க ராஜராஜேஸ்வரி, இன்னும் கடுமையாகவும் எழுதி இருந்தேன். நீளம் கருதியும் வேறு சில காரணங்களாலும் எடுத்துட்டேன். :))))
ReplyDelete
ReplyDeleteசுவாமி விவேகாநந்தாவுடன் பாரதியையும் ஒப்பிட்டிருந்தது ரசித்தேன். உங்கள் கருத்துக்களுக்கு வலு சேர்க்க மோடி எதற்கு.? மோடியின் செயல்கள் எல்லோருக்கும் உடன்பாடாகாது. ஆண்பெண் குழந்தைகள் இருசமன் செய்யும் சக்திகள்
சுவாமி விவேகாநந்தர் பற்றிய கருத்து தவறுதலாகைங்கே பதிவாய் விட்டது மன்னிக்கவும் வேறு ஒரு பதிவில் படித்தது.
ReplyDeleteபாரதியாரிலிருந்து இந்தக் கால இளைஞர்கள் நிலைக்குச் சென்று விட்டீர்கள்.
ReplyDelete//பல பெண்கள் ஆண் குழந்தைகளுக்குச் சலுகைகள் கொடுக்கின்றனர்//
இப்போது இது பொருத்தமில்லை என்று தோன்றுகிறது. கணினி, அலைபேசி, தொலைகாட்சி.... ஆண்குழந்தை, பெண்குழந்தை எல்லாம் ஒரே நிலைதான் இன்றைய வளர்ப்பில்!
தன் மனைவியை நாற்காலியில் உட்கார வைத்து, தான் அருகில் நின்று கொண்டிருக்கிற மாதிரி பாரதியாரின் புகைப்படம் ஒன்று உண்டு. மஹாகவியின் புகைப்படங்களில் எனக்கு மிகவும் பிடித்த படம் அது தான். மனைவிக்கு மிகுந்த மரியாதை கொடுக்கிற மாதிரியான (அதுவும் அந்தக் காலத்தில்) புகைப்படம் அது!
ReplyDeleteநீங்கள் அந்தப் படத்தைப் பார்த்திருக்கிறீர்களா?.. உங்களிடமிருந்தால் பிரசுரிக்கவும்.
பாரதியின் கவிதைகள் இக் கால பெண்களுக்கு மிகவும் பொருந்தும்...இல்லையில்லை மிகவும் அவசியம் என்று சொல்ல வேண்டும்.
ReplyDeleteஅவர் சொல்லும் தைரியமும், ரௌத்திரமும் ... மிக மிக அவசியமே!
பாட்டுப் புலவன் பாரதி நினைவு
ReplyDeleteசிறந்த இலக்கியப் பகிர்வு
தொடருங்கள்
பாரதிக்கு நல்லதோர் நினைவஞ்சலி.....
ReplyDeleteஜிஎம்பி சார், மோதியைப் பிடிக்கவில்லை என்பதால் அவருடைய நல்ல கருத்துகளையும் வெறுக்கிறவர்களைப் பார்த்தால் சிரிப்பாக வருகிறது. :)
ReplyDeleteஶ்ரீராம், எப்போதும் இது பொருந்தும் என எனக்குத் தோன்றுகிறது. முன்னைப் போல் பெண்களை வீட்டில் அடக்கி வைப்பதில்லை என்பதை வேண்டுமானால் சொல்லலாம். ஆண்பிள்ளைகளைக் குறித்து அதிகம் கவலைப்படுவதில்லை என்பதும் பெற்றோர் காலதாமதமாகவே விழித்துக் கொள்கின்றனர் என்பதும் பல இடங்களில் பார்க்க முடிகிறது. :(
ReplyDeleteபாரதியார் இளைஞர்களைப் பார்த்து ஒளி படைத்த கண்ணினாய், உறுதி கொண்ட நெஞ்சினாய் என்றெல்லாம் கூறி வரவேற்றிருக்கிறாரே ஶ்ரீராம். ஆகையால் பாரதியிலிருந்து இன்றைய இளைஞர்களுக்குச் சென்றேன். :)
ReplyDeleteஜீவி சார், ஏற்கெனவே முன்னர் போட்ட நினைவு. தேடிப் பார்க்கிறேன். அநேகமாக என்னோட பாரதிப் பதிவுகளிலேயே இருக்கலாம்.
ReplyDeleteவாங்க ராஜலக்ஷ்மி, ரௌத்திரத்தையும் கோபத்தையும் பெரும்பாலும் தவறாகவே புரிந்து கொள்கின்றனர். :)
ReplyDeleteஇதெல்லாமா இலக்கியம், காசிராஜலிங்கம், பாராட்டுக்கு நன்றி.
ReplyDeleteவாங்க வெங்கட், பார்த்து ரொம்ப நாளாச்சு. உங்க பதிவுக்கு வந்தும் நாளாச்சு. வரணும். :)
ReplyDelete//தமது உள்ளத்திலே தீரத் தன்மை, அமைதி, பலம், தேஜஸ், சக்தி அருள், பக்தி, சிரத்தை இந்த எண்ணங்களையே நிரப்ப வேண்டும்//
ReplyDeleteநம் தேசியக்கவி சொன்னது போல் ஆண் , பெண் இருபாலர்களும் நல்ல எண்ணங்களயே நிரப்ப வேண்டும் உள்ளத்தில்.
நல்ல எண்ணங்களால் முகத்தில் தேஜஸ் வரும். மனபலம், தன்னம்பிக்கை, பக்தி எந்த செயலை செய்தாலும் சிரத்தை இல்லாத காரணத்தால் தோல்வி அதனால் எழும் கோபம், விளைவு கொடுமையான முடிவுகள் எடுக்கிறார்கள்.
நீங்கள் சொல்வது போல் பெற்றோர்கள் எப்போதும் கவனமாக இருக்க வேண்டும் குழந்தைகள் மேல் காலதவறிய கவனிப்பால் ஒரு பலனும் இல்லை.