எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Monday, September 15, 2014

எல்லோருக்கும் பெய்த மழை எனக்கும் பெய்தது!

இதுவும் சகஜமாக எல்லோர் வாழ்க்கையிலும் நடக்கும் ஒரு நிகழ்வே.  அதிலும் வங்கியில் வேலைபார்ப்பவர்களில், காசாளராக வேலை பார்ப்பவர்கள் படும் கஷ்டத்தை எங்க வீட்டிலேயே பார்த்திருக்கேன். என் பெரியப்பா, அண்ணாக்கள்னு வங்கியில் காசாளர்களாக இருந்தவர்கள் நிறையவே உண்டு. அன்றாட வரவு, செலவுக் கணக்குச் சரியாகும் வரையில் வங்கியிலேயே இருந்து சரி பார்த்துவிட்டுப் பின்னர் வீட்டுக்குச் செல்லும் வங்கி அலுவலர்களே அதிகம்.

இந்தக் கதையின் நாயகியும் அப்படி ஒரு காசாளரே.  அதிலும் கணவன் இறந்ததால் கருணை அடிப்படையில் இந்த வேலை கிடைத்து வந்து ஓராண்டே பூர்த்தி ஆகியுள்ளது.  பல முறைகள் அன்றாடக் கணக்குச் சரி பார்க்கையில் வசந்திக்குக் கடந்து போன ஓராண்டில் பலமுறைகள் கையை விட்டுப் பணம் கட்டும்படி ஆகியுள்ளது இதிலிருந்து அலுவலக வேலையைக் கூட ஒருமித்த மனதோடு செய்யும்படி வசந்தியின் நிலைமை இல்லை எனப் புரிந்து கொள்ளலாம்.   திருமணமான ஒரே வருடத்தில் கணவனை இழந்து, மாமியார் மாமனாரிடம் பேச்சுக்களையும் வாங்கிக் கட்டிக் கொண்டு, ஒரு வருட மணவாழ்க்கைக்குப் பரிசாக அவன் கொடுத்த பெண் குழந்தையையும் பெற்றெடுத்து வளர்த்து ஆளாக்க வேண்டும் அவள். மிகச் சிறிய வயதில் பெரிய பொறுப்புத் தான். துணைக்கும் யாருமில்லை.  கணவன் இறந்ததுமே தாய் வீடு வந்தவளை மாமியார் மாமனார் திரும்பிப் பார்க்கவில்லை.  தாயார் மட்டும் கூட இருப்பதால் குழந்தையைப் பார்த்துக் கொள்வதில் பிரச்னை இல்லை.  ஆனால் அந்தக் குழந்தைக்கும் வலக்கைச் சுண்டுவிரல் அருகே ஆறாவது விரல் ஒன்று காணப்பட வசந்திக்கு மன உளைச்சல்.  அறுவை சிகிச்சை மூலம் அகற்றலாமா, அப்படியே இருக்கட்டுமா என்ற குழப்பம். இந்தச் சின்ன வயசில் இப்படி ஒரு கஷ்டமா என்னும் பரிதாப உணர்ச்சி மேலோங்குகிறது.

ஆக மொத்தம் இத்தகைய பிரச்னைகளால் எப்போதும் பற்பல சிந்தனைகளில் மனதை ஓடவிட்டு வசந்தி பணத்தைக் கூடுதலாகக் கொடுத்து விடுகிறாள் என்றே தோன்றுகிறது. தலைமைக் காசாளரும் கண்டித்துவிட்டார். அப்படியும் வசந்தியின் மனம் வேலையில் பதியவில்லை என்றே தோன்றுகிறது.  சம்பவ தினத்தன்றும் நானூறு ரூபாய் யாருக்கோ அதிகம் கொடுத்திருக்கிறாள். அதைக் கண்டு பிடிக்க முடியாமல் தவிக்கிறாள் வசந்தி. ஒவ்வொரு முறை அவள் இப்படிப் பணத்தைக் கவனமின்றிக் கையாளும்போதெல்லாம் அவள் சம்பளத்திலிருந்து முன் பணம் கொடுத்ததாகக் கூறிப் பணத்தை எடுத்துக் கொண்டு அதைச் சமன் செய்வார்கள் வங்கி நிர்வாகத்தினர். அவர்கள் எண்ணம் அவள் மாசக் கடைசியைச் சரிக்கட்டப் பணத்தை எடுக்கிறாள் என்பது. இங்கே வசந்தியைத் தவறாக நிர்வாகம் நினைக்கிறது.  ஏனெனில் பணத்தைக்கையாளுவது அவள் தானே! ஆனால் வசந்தி!!!!!!!!!!!!!!!

பணத்தைக் கட்டுக் கட்டாக எண்ணும்போது தற்காலங்களில் இருப்பது போன்ற வசதிகள் வசந்தி வேலை பார்த்த அந்தக் காலத்தில் இல்லை என்று கதாசிரியர் குறிப்பிட்டிருக்கிறார்.  இதைக் கவனத்தில் கொள்ளவேண்டும்.  பணத்தை ஸ்பாஞ்ச் டப்பாவில் நீர் விட்டுத் தொட்டுத் தொட்டு ஒவ்வொன்றாகவே எண்ணியாகவேண்டும் என்று சுட்டிக் காட்டி இருக்கிறார். ஆக இது நடந்த காலம் கதை எழுதப்பட்ட காலத்தில் இருந்து குறைந்தது 20,25 வருடங்கள் முன்னர் இருக்கலாம்.  வசந்தியின் பார்வையில் பின்னோக்கிப் பார்த்து எழுதப்பட்டதாய்க் கொள்ளவேண்டும்.  ஏன் இதைச் சொல்கிறேன் எனில், காரணம் இருக்கு! :)

நானூறு ருபாயை எங்கே விட்டோம் என யோசித்த வசந்திக்கு அந்த வங்கியில் கடைநிலை ஊழியரான அஞ்சலை எடுத்திருப்பாளோ என்னும் சந்தேகம் வருகிறது.  அவளை விட ஏழ்மையான அஞ்சலைக்குக் குடிகாரக் கணவன் மட்டுமின்றி அடுத்தடுத்து நான்கு குழந்தைகளும் கூட.  அதோடு அவ்வப்போது வசந்தியிடம் ஐந்து, பத்து எனக் கைம்மாற்றாகவும் வாங்குவாள். மேலும் அன்று காலை வசந்தியிடம் அவசரமாக 200 ரூபாய் வேண்டும் என்று வேறே கேட்டிருந்தாள்.  வறுமை தாங்காமல் அஞ்சலை எடுத்திருப்பாளோ என நினைக்கும் வசந்திக்குப் பணத்தைத் தேட தன்னோடு அஞ்சலையும் சேர்ந்து வந்து உதவியதை நினைத்துக் குழப்பமாகவும் இருந்தது. வங்கி நிர்வாகம் வசந்தியைத் திருடியதாக நினைக்க வசந்தி அஞ்சலையை நினைக்கிறாள்.  நாம் ஒருவருக்குச் செய்யும் கெடுதல் பலமடங்கு ஆற்றலோடு நமக்கே திரும்பி வரும் என்பதை வசந்தி இங்கே புரிந்து கொண்டிருக்க வேண்டும்.  ஆனால் திரும்பத் திரும்ப யோசிக்க, யோசிக்க அஞ்சலை தான் குற்றவாளியோ என்னும் எண்ணம் அவளுக்குள் பலமாக ஏற்பட்டது.  அதற்கேற்றாற்போல் பணம் தொலைந்த மறுநாள் காலை வசந்தியின் வீட்டுக்கே வந்து அஞ்சலை  தான் வசந்தியிடம் வாங்கிய கடன் சிறுகச் சிறுக நானூறு ரூபாய் ஆகி இருப்பதாகச் சொல்லி அவளிடம் நானூறு ரூபாயை நீட்டி, இதைத் தொலைந்த பணத்துக்கு ஈடாக வைத்துக் கொண்டு வங்கிக்குப் பணத்தைத் திருப்பச் சொல்கிறாள். , வசந்திக்குத் திகைப்பு ஏற்படுகிறது!  நமக்கும் திகைப்புத் தான்!! ஆனால் வசந்தியின் கஷ்டமான நிலைமை அஞ்சலைக்குப் புரிகிறது.  ஆகவே எப்படியேனும் அவளுக்கு உதவ நினைக்கிறாள்.

அஞ்சலையிடம் பணம் கிடைத்த விபரத்தை விசாரிக்கிறாள் வசந்தி. தன் தாலியை அடகு வைத்துப் பணம் புரட்டியதாகச் சொல்கிறாள் அஞ்சலை.  அதோடு அதில் கிடைத்த 2,000 ரூபாயில் தன் குடும்பம் முதல்நாள் தான் வயிறாரச் சாப்பிட்டதாகவும் சொல்கிறாள். பொல்லாத கணவனைப் படைத்த அஞ்சலையை அவள் கணவன் அடித்து நொறுக்கப்போகிறான் எனக் கவலைப்படும் வசந்தியிடம் தாலி தன் தாய் வாங்கியதாகவும் தன்னைக் கணவன் அப்படி அடித்தால் வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தில் தான் புகார் செய்து அவனைச் சிறைக்குத் தள்ளிவிட நினைப்பதாகவும் சொல்கிறாள் அஞ்சலை.. ஆனால் 20,25 வருடங்கள் முன்னர் வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் வந்து விட்டதா? இல்லை என்றே நினைக்கிறேன்.  இங்கே ஆசிரியர் கொஞ்சம் சறுக்கிவிட்டார். அஞ்சலை தன் கணவனைக் குறித்து காவல்துறையினரிடம் புகார் செய்து விடுவதாகச் சொன்னதாக மட்டும் சொல்லி இருக்கலாம். அந்தக் காலகட்டத்தில் வன்கொடுமைத்தடுப்புச் சட்டம் இருந்ததாகத் தெரியவில்லை. வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் வந்தும் என்ன பயன்?  இதோ இப்போது கூட சில ஆண்கள் ஒன்று சேர்ந்து ஒரு பெண்ணைக் கொடுமைப் படுத்தியதில் அவள் நடக்க முடியாமல் நடந்து வருகிறாள் என்பதைத் தொலைக்காட்சியில் காட்டுகின்றனர். ஆகவே வசந்தி காசாளராக இருந்த அந்தக்காலம் இன்னமும் மோசமாகவே இருந்திருக்கும்.  காவல் துறையிடம் புகார் செய்தால் கூட எடுபடாது.  சமாதானமாகவே போகச் சொல்லி இருப்பார்கள்.  சரி, இதை இத்தோடு விடுவோம்.

ஆனாலும் வசந்தி அஞ்சலைக்குப் பணம் கிடைத்த விதத்தை நம்பவில்லை.  எப்படியோ அஞ்சலைக்குத் தான் இனாம் என நினைத்துக் கொடுத்த பணம் இப்படியானும் திரும்பியதே என நினைத்த வண்ணம் வங்கிக்குச் சென்றவளுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. கிராமத்துப் பெரியவர் ஒருத்தர் அவள் வங்கிக்குச் சென்றதுமே அவளை வந்து பார்க்கிறார்.  விவசாய வேலைகளுக்காக முதல் நாள் வாங்கிச் சென்ற 25,000/- ரூபாயில்  500 ரூபாய்த் தாள் 41 உம், 100 ரூபாய்த் தாள் 49 உம் கொடுத்ததாகவும், 100 ரூபாய்த் தாள் 50 கொடுப்பதற்குப் பதிலாக 500 ரூபாய் நோட்டைத் தவறுதலாகக் கொடுத்திருப்பதாகவும், அன்று காலை தான் அதைப் பார்த்ததாகவும் கூறி அவளிடம் பணத்தை நீட்டுகிறார்.   மேலும் பெரியவர் அவள் சரியாகக் கொடுத்திருப்பாள் என நினைத்து நேற்றே சரிபார்க்காமல் தான் சென்றதற்கு வருத்தமும் தெரிவிக்கிறார்.  அதோடு இல்லாமல் இந்த வங்கியில் வேலை செய்யும் அஞ்சலை தனக்கு உறவு என்றும், நல்ல பெண் என்றும் சின்ன வயசிலே இருந்து இப்போ வரைக் கஷ்டப்பட்டுக் கொண்டே இருப்பதாகவும் சொல்லுகிறார்.

பெரியவர் பணத்தை நீட்டியதுமே வசந்திக்குத் தான் அஞ்சலையைத் தப்பாக நினைத்துவிட்டோம் என்பது புரிய, பண்டம் ஓரிடம், பழி ஓரிடமாகப் போய் விட்டதே என வருந்துகிறாள். ஆளைப் பார்த்து எதுவும் முடிவு கட்டக் கூடாது.  வறுமையிலும் செம்மையாக இருப்பவர்கள் உண்டு என்பது இப்போது வசந்திக்குப் புரிந்திருக்கும்.  அஞ்சலை மாதிரியும், கிராமத்துப் பெரியவர் மாதிரியும் நேர்மையான மனிதர்கள் இருப்பதாலேயே இன்றைக்கும் ஏதோ கொஞ்சமானும் மழை பெய்து கொண்டிருக்கிறது என ஆசிரியர் சொல்லாமல் சொல்லி இருப்பது முழுக்க முழுக்க உண்மையே!

ஆனாலும் அஞ்சலையிடம் அவள் மன்னிப்புக் கேட்க வில்லை.  இதற்கு அவள் அகங்காரம் இடம் கொடுத்திருக்காது.  போகட்டும்,  இனியாவது அவளையும் தன்னைப் போல் ஒரு மனுஷியாக நடத்துவாள் என எதிர்பார்க்கலாம்.. மிகச் சிறியதொரு கதைக்கரு.  அதையே வசந்தியின் நினைவுகளாகக் கொண்டு போய்க் கதையைச் சாமர்த்தியமாக நகர்த்தி, மனிதரிலே உயர்ந்தவர், தாழ்ந்தவர் என்பதை வெறும் பார்வையாலேயோ அவர்கள் தோற்றத்தாலேயோ அல்லது ஏழ்மை நிலையாலேயோ நிர்ணயிக்க முடியாது  என்பதை ஆசிரியர் உணர்த்திவிடுகிறார்.


நேற்றுக் கடுமையான மின்வெட்டு. சாயந்திரம் ஐந்து மணிக்குத் தான் மின்சாரம் வந்தது.  ஆனால் கணினியில் அமர முடியாதவாறு முக்கியமான வேலை வெளியே போகவேண்டிய வேலை இருந்தது.  வரும்போது எட்டு மணி ஆகிவிட்டதால் அதற்கப்புறம் வீட்டு வேலைகளுக்கும், அதன் பின்னர் படுக்கவுமே நேரம் சரியாக இருந்தது.  ஆகவே இது இரண்டாம் பரிசைப் பெற்ற விமரிசனம் என்பதை குறிப்பிட முடியவில்லை.  ஷெட்யூல் பண்ணி வைச்சிருந்தேன்.  வெளியாவதற்குள்ளாக எத்தனாம் பரிசு என்பதைப் பார்த்துவிட்டுச் சேர்க்க எண்ணி இருந்தேன்.  அதுக்குள்ளே வீட்டில் வேலை வந்ததால் சேர்க்க நேரம் இல்லை.  பப்ளிஷ் ஆகிப் பலரின் கருத்துக்களும் வந்துவிட்டன. :)))))

இது இரண்டாம் பரிசைப் பெற்ற விமரிசனம். அரைமணி நேரம் ஒரு வேலைக்காகக் கணினியைத் திறந்தப்போப் பின்னூட்டங்களைப் பார்த்தேன்.  ஆதலால் அங்கே பதில் சொல்வதற்குப் பதிலாக இங்கே வந்து சொல்லி இருக்கேன். :)

13 comments:

  1. அங்க அனுப்பறத்துக்கு பதிலா இங்கே பிரசுரித்து விட்டீர்களா? :)))

    நான் கூட இதே போல ஒரு வங்கிக் காசாளர் தவறு பற்றிய கதை ஒன்று எ.பி -ல் எழுதி இருந்தேன்!

    ReplyDelete
  2. "எல்லோருக்கும் பெய்த மழை எனக்கும் பெய்தது!"

    என்று தலைப்பிட்டு ஏதேதோ எழுதிக்கொண்டே போய் முடித்துவிட்டால் எப்படி?

    புதிதாக தங்கள் தளத்திற்கு யாராவது வருகை தந்தால் அவர்களுக்கு இதைப்பற்றிய ரிஷி மூலம் நதி மூலம் எப்படித் தெரியும்?

    சிறுகதை விமர்சனப் போட்டியில் கலந்துகொண்டதாகவோ, பரிசு பெற்றதாகவோ எங்கும் சொல்லவில்லையே !

    அதுவும் சாதாரண பரிசா ?

    மிகப் பிரபலமான [வஸிஷ்டர் வாயால்] திரு. ஜீவி ஐயா அவர்களால் தேர்வு செய்து கொடுக்கப்பட்டுள்ள இரண்டாம் பரிசு .... அதுவும் இல்லாமல் .... ஹாட்-ட்ரிக் பரிசு .... என பல்வேறு சிறப்புகள் பெற்றுள்ள தாங்கள் கதையின் இணைப்பையும், பரிசு பெற்ற அறிவிப்பின் இணைப்பையும் கொடுத்து எழுதினால் அல்லவோ இதுவிஷயம் அனைவருக்கும் [உலகம் பூராவும்] தெரியவரும் !! :)

    [ BBC யிலும் ஒலிபரப்பாகும் :))))) ]

    நாளைக்கு தங்களுக்கே ஏதும் Back Reference தேவையென்றாலும் அதுவல்லவோ உதவக்கூடும் !!!

    தாங்கள் இதில்போய் இவ்வளவு தன்னடக்கம் காட்டுவது வியப்பளிக்கிறது, எனக்கு.

    எனினும் வாழ்த்துகள்.

    தனிப்பதிவாக இதனை வெளியிட்டு சிறப்பித்துள்ளதற்கு என் நன்றிகள்.

    அன்புடன் கோபு [VGK]

    ReplyDelete
  3. அருமையான கதை! சிறப்பான பகிர்வு! நன்றி!

    ReplyDelete
  4. //தாங்கள் இதில்போய் இவ்வளவு தன்னடக்கம் காட்டுவது வியப்பளிக்கிறது, எனக்கு//

    இந்த வரிகளை படிச்சதும் மயக்கம் போட்டு விழுந்துட்டேன். தன்னடக்கமா..? அவ்வ்வ்...இன்னுமா உங்கள இந்த உலகம் நம்புது..? :))

    ReplyDelete

  5. கோபு சாரின் பின்னூட்டம்படித்துத்தான் இது விமரிசனப் பதிவு என்று தெரிந்தது. இரண்டாம் பரிசா வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  6. ஶ்ரீராம், "எங்கள்" பக்கத்தில் காரணம் சொல்லி இருந்தேனே! முழுதும் முடிப்பதற்குள்ளாகப் பிரசுரம் ஆகி விட்டது. :))

    ReplyDelete
  7. வைகோ சார், எத்தனாம் பரிசு என்பதைப் பார்த்ததும் அதைச் சேர்க்க எண்ணி இருந்தேன். அதுக்குள்ளே மின்சாரம் போயிட்டதாலே சேர்க்க முடியலை. :))) அதான் விஷயம்.

    ReplyDelete
  8. நன்றி சுரேஷ்.

    ReplyDelete
  9. அம்பி தும்பி, என்ன துள்ளல் பலமா இருக்கு? க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

    ReplyDelete
  10. ஜிஎம்பி சார், மின்சாரம் இல்லாததால் வந்த கோளாறு. நேற்று கணினியைச் சொந்த வேலைக்காகவே திறந்து அரைமணி பார்த்தேன். அப்போத் தான் வைகோ சாரின் பின்னூட்டம் வந்திருப்பதையும் கவனித்தேன். :)))) அப்போ வெளியே கிளம்பத் தயாராகிக் கொண்டிருந்ததால் உட்கார நேரமில்லை. :))))

    ReplyDelete
  11. மனம் நிறைந்த வாழ்த்துகள். அடாது மழை தொந்தரவு.மின் துண்டிப்பு இப்படி எத்தனை துன்பங்கள் வாட்டினாலும் அழகாகச் சிந்தித்து விமரிசனம் எழுதி இருக்கிறீர்கள் கீதாமா. வெகு அருமையான தெளிவான சிந்தனை ஓட்டம்.

    ReplyDelete
  12. மிக்கமகிழ்ச்சி. பரிசுபெற்றதற்கு வாழ்த்துகள்.

    ReplyDelete
  13. வாழ்த்துகள்.

    ReplyDelete