எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Monday, April 06, 2015

காஷ்மீரில் இருந்து தமிழ்நாடு வரை ஒரு பயணம்

இந்தியாவின் உச்சியில் இருக்கும் காஷ்மீரமும், அதன் கீழே தென் கோடியில் இருக்கும் ஶ்ரீலங்காவும் அமைதியின்றி இருக்கின்றன.  அதன் காரணம் காஷ்மீரத்திலிருந்து வெளியேறிய ஶ்ரீசக்கரமும், ஶ்ரீலங்காவில் இருந்து அனுமன் கொண்டு வந்த நிகும்பளையும் காரணம் என்கிறார் நரசிம்மா. யார் இந்த நரசிம்மா என்பவர்களுக்கு!  "காலச்சக்கரம்" நரசிம்மா தான்.  நிகும்பளை காளியின் 18 வடிவங்களில் கடைசி வடிவம் என்று சொல்லும் நரசிம்மா இவள் உக்கிர காளி என்றும் சொல்கிறார். இனி நரசிம்மா இவற்றைக் குறித்து சொல்வது:--

இலங்கையின் காவல் தெய்வமான நிகும்பளை  இலங்கையில் இருந்தவரை இலங்கை பாதுகாப்புடன் எவராலும் வெல்ல முடியாமல் இருக்கும் என ராவணன் வரம் வாங்கி வந்திருந்தான்.  ஆகவே நிகும்பளையை சகலவித மரியாதைகளுடனும் போற்றிப் பாதுகாத்து வந்தான்.  ஆனால் விபீஷண சரணாகதியின் போது விபீஷணன் ஶ்ரீராமனிடம் இலங்கையை வெல்ல வேண்டுமெனில் நிகும்பளையை இங்கே கொண்டு வர வேண்டும் என்று சொல்கிறான்.  அதன்படிவிபீஷணன் வடவாநல ஆஞ்சநேயரை ஸ்தோத்திரம் ஒன்றால் துதிக்கிறான்.  அதனால் மகிழ்ந்த ஆஞ்சநேயர் இலங்கை சென்று நிகும்பளையைக் கொண்டு வந்ததாகச் சொல்கிறார் திரு நரசிம்மா. இந்த நிகும்பளை தமிழ்நாட்டில் கபாடபுரத்தில் முதலில் பிரதிஷ்டை செய்யப்பட்டதாகச் சொல்லுகிறார். கபாடபுரம் அழிந்த பின்னர் கோயில் மட்டும் அழியாமல் இருக்கவே நிகும்பளையை அங்கிருந்து எடுத்துக் கும்பகோணம் அருகே ஓர் சிற்றூரில் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கிறாள் என்பது அவர் சொல்வது. 

அந்த நிகும்பளையின் உக்கிரம் தாங்க முடியாமல் போகவே ஆதிசங்கரர் காஷ்மீரம் சென்றபோது அங்கே குஜ்ஜேஸ்வரி கோயிலில் இருந்த ஶ்ரீசக்கரத்தை எடுத்து வந்து நிகும்பளையை அதில் பந்தனம் செய்து விடுகிறார்.  காஷ்மீரத்துக்குத் தலைவலி ஆரம்பிக்கிறது.  ஏனெனில் ஶ்ரீசக்கரம் இருக்கும் வரை காஷ்மீரத்தில் பிரச்னை ஏதும் இருக்காது என்பது அம்பிகை சொன்னது. எப்படி எனில் ஈசனால் அம்பிகையின் விளையாட்டுக்காக ஏற்படுத்தப்பட்ட காஷ்மீர நந்தவனத்தை அம்பிகை பிரிய மனமில்லாமல் இருக்க, அம்பிகையைத் திரும்ப அழைக்க  ஈசன் ஏவி விட்ட காலாக்னியை அம்பிகை மேரு சக்கரத்தை உருவாக்கி அதன் மேல் நிற்க காஷ்மீரம் காப்பாற்றப்படுகிறது.  அப்போது அம்பிகை தானும் இந்த சக்கரத்தின் மேல் அமர்ந்த வண்ணம் இங்கே குஜ்ஜேஸ்வரியாகக் கோயில் கொள்ளப்போவதாகவும், ஶ்ரீசக்கரம் இருக்கும் வரை காஷ்மீரத்தில் பிரச்னை ஏதும் இருக்காது என்றும் சொல்கிறாள்.  ஆனால் நிகும்பளையின் சக்தியை ஒடுக்க வேண்டி அங்கிருந்து ஶ்ரீசக்கரத்தை ஆதி சங்கரர் எடுத்து வந்துவிடுகிறார்.  காஷ்மீரத்தை அழிக்கவிடாமல்  தடுத்து வந்த ஶ்ரீசக்கரம் தமிழ்நாட்டில் இருப்பதை அறிந்து ஒரு காஷ்மீரப் பண்டிட்டின் பெண் அதைத் தேடி வருகிறாள். இன்னொரு பக்கம் யாழ்ப்பாணத்திலிருந்து நிகும்பளையைத் தேடி வரும் மந்திரவாதி ஒருவன்.

கதை சுதந்திரம் வந்த பின்னர் வரும் 48 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கிறது. 1992 கும்பகோணம் மகாமகம் சமயம் ஏற்பட்ட விபத்தில் முடிகிறது.  கதை நடுவில் ஒரு அத்தியாயத்தில் வருஷம் 1974 என்பதற்கு பதில் 1984 என இருந்தாலும் நிகழ்ச்சிகளை வைத்துப் புரிந்து கொள்ள முடிகிறது.  காஷ்மீரத்தில் இருந்து தமிழ்நாடு வந்த பெண்ணும், யாழ்ப்பாணத்தில் இருந்து வந்த மந்திரவாதியும்   அவரவர் நோக்கத்தில் வெற்றி அடைந்தனரா? அதற்குள் தான் எத்தனை  கோப தாபங்கள்! பழி தீர்த்தல்கள்! காதல்கள்! கல்யாணங்கள்! ஒரு பக்கம் டெல்லியில் ஆனந்தப்பூர் ராஜவம்சம்! தமிழ்நாட்டிலோ  ஒரு வைதீக சாஸ்திரிகள் குடும்பமும், திடீர்ப் பணக்காரர் ஆன ஒரு சமையல்காரர் குடும்பமும் இவற்றுக்குள் சிக்கிக் கொண்டு படும் பாடு! அருமையாக விவரிக்கிறார்.  ஒரு இடத்திலும் தொய்வே இல்லை. ஆரம்பம் முதல் கடைசி வரை புத்தகம் கீழே வைக்க முடியாமல் நம்மை  .இழுக்கிறது. அதிலும் காஷ்மீரத்தில் இருந்து தான் நம் கலாசார ஆறு ஆரம்பிக்கிறது என்பதும் அது ஓடி வந்து கடைசியில் முடியும் இடம் தமிழ்நாடு என்பதால் அதன் வேகம் இங்கே அதிகமாக இருந்ததாகவும் சொல்லும் போது உண்மையிலேயே உணர்ச்சி வசப்பட்டு விடுகிறோம்.

வேத உபநிஷத்துக்களின் விளைநிலமான காஷ்மீரம் பற்பல ஞானிகளையும் வரவேற்று அவர்களை கௌரவித்துள்ளது.  ஆதிசங்கரர், ராமானுஜர் போன்றவர்கள் காஷ்மீரம் போய்த் தான் தங்கள் ஞானத்தை விருத்தி செய்து கொண்டனர். அத்தகைய சிறப்பு வாய்ந்த காஷ்மீரம் இப்போது இருக்கும் நிலையை எண்ணிக் கண்ணீர் வடிக்கத் தான் தோன்றுகிறது. அதே போல் தமிழ்நாடும் ஒரு காலத்தில் ஆசார, அநுஷ்டானங்களுக்கும் பெரிய பெரிய ஞானிகளுக்கும் தபஸ்விகளுக்கும் பெயர் போனதாக இருந்த மாநிலம். இப்போது? சொல்லவே வேண்டாம்!  இப்போது இருக்கும் நிலையை வைத்துப் பார்த்தால் காஷ்மீரத்துக்கு இன்னமும் ஶ்ரீசக்கரம் போய்ச் சேரவில்லை என எண்ணும்படி இருக்கிறது.  அதே போல் ஶ்ரீலங்காவுக்கும் நிகும்பளை போகவில்லை போல! :( கதையின் கருத்தில் நாம் ஆழ்ந்து போய்விடுகிறோம்.  ஏனெனில் இது நம் மண்ணின் கதை! பாரதமாதாவே சொல்றாப்போல் ஓர் எண்ணம்!

ஆசிரியர் எழுதி இருப்பது எந்தக் கோணத்தில் இருந்தாலும் நாம் நம் நாட்டிலும் சரி, அண்டை நாடுகளிலும் சரி அமைதியையும் சமாதானத்தையும் தானே விரும்புகிறோம். அது வர வேண்டிய வழி இது தான் என்றால் அதற்கும் சம்மதமே! :)))))

உண்மையில் திரு நரசிம்மாவுக்கு இது தான் மாஸ்டர் பீஸ் நாவல் என்பது என் கருத்து.  ஏனெனில் ஒவ்வொருவருக்கு ஒவ்வொன்று சரியாகத் தோன்றும்.  நான் படித்த ரங்கராட்டினம், சங்கதாரா, காலச்சக்கரம் மூன்றில் இது தான் அருமை! முதல் இடத்தையும் பிடிக்கிறது. நம் மனதிலும்.


புத்தகம் பெயர்: காலச்சக்கரம்

எழுதியவர்:  திரு நரசிம்மா

வானதி பதிப்பகம் வெளியீடு

19 comments:

  1. ஆம். விறுவிறுப்புக்குக் குறைவில்லை. எனக்கும் மூன்று படைப்புகளுமே பிடித்திருந்தன. ரங்கராட்டினம் இப்போது நீங்கள் இருக்கும் ஊர் பற்றிய கதை.

    ReplyDelete
    Replies
    1. ஆமாம், ரங்க ராட்டினம் கதையின் நிகழ்ச்சிகள் ஏற்கெனவே பலமுறை படித்ததாலோ என்னமோ அதில் அவ்வளவு ருசி தெரியவில்லை. அபரஞ்சிப் பொன் ஒன்று தான் புது விஷயம்! :))))

      Delete
  2. விறுவிறுப்புக்கு குறைவில்லாத கதை. நரசிம்மா அவர்களின் முதல் நாவல் தான் காலச்சக்கரம் என்பதை நம்புவது கடினம்... காலச்சக்கரத்தை இரண்டு முறை வாசித்திருக்கிறேன். ஸ்ரீசக்கரம் இன்னும் அங்கே போகலையோன்னு தான் நானும் சொல்லிக் கொண்டிருப்பேன்...எனக்கு மிகவும் பிடித்தது காலச்சக்கரமும், குபேரவனக்காவலும்...

    ReplyDelete
    Replies
    1. ஆமாம், ஶ்ரீசக்கரம் இன்னும் காஷ்மீருக்குப் போகவில்லை! குபேரவனக்காவல் படிக்கணும்! :) உங்களுக்குத் தான் நன்றி சொல்லணும். :)

      Delete
  3. சுவாரசியமான நாவல். நான் இனிமேல்தான் படிக்க வேண்டும். நன்றி மாமி, புத்தக அறிமுகத்திற்கு.

    ReplyDelete
    Replies
    1. கிடைச்சால் வாங்கிப்படிங்க. எனக்கு ஆதி கொடுத்தாங்க!

      Delete
  4. ஒரேயடியா எல்லா புத்தகமும் படிச்சாச்சு போல! :)

    காலச்சக்கரம் அவரது முதல் புத்தகம் என்று நம்புவது கடினம் தான். அவரை ஒரு முறை அவர் வீட்டிலேயே நண்பர் பால கணேஷுடன் சென்று சந்தித்தது இன்றும் நினைவில்.

    ReplyDelete
    Replies
    1. ஆமாம், முதலில் சிவ ரகசியங்கள் மூணையும் முடிச்சேன். இப்போ நரசிம்மாவோட நாலும் முடிச்சாச்சு. இன்னும் நாலு பாக்கி! :)

      Delete
  5. படிக்க வேண்டும் அம்மா... நன்றி...

    ReplyDelete
    Replies
    1. நேரம் கிடைக்கியில் படியுங்கள் டிடி. நன்றி.

      Delete
  6. சரித்திர நாவல்களை மீள் வாசிப்புக்கு உட்படுத்தி இருக்கிறீர்களோ.

    ReplyDelete
    Replies
    1. எந்தப் பழைய நாவல்களையும் மீண்டும் படிக்கவில்லை ஐயா. அனைத்துமே புதியவை. முதல் முதலாகப் படித்து விட்டு அதைப் பற்றிச் சொல்கிறேன்.

      Delete
  7. நான் அவரது 4 நூல்களையும் படித்து விட்டு எனது கருத்துக்களை மின்னஞ்சலில் அனுப்பியிருந்தேன். உடனேயே பதில் அனுப்பி மகிழ்வித்தார்...:)

    ReplyDelete
    Replies
    1. அப்படியா? பார்க்கலாம். என்னுடைய விமரிசனங்களைப் பார்க்கிறாரானு. இல்லைனா மின்னஞ்சல் அனுப்பிப் பார்க்கிறேன். :)

      Delete
    2. நான் அனுப்பின மின்னஞ்சல் திரும்பி வந்துவிட்டது ஆதி. புத்தகத்தில் கண்டிருக்கும் மெயில் ஐடிக்குத்தான் அனுப்பினேன். nacu_ne@yahoo.co.in இந்த ஐடியே இல்லைனு வருது. :)

      Delete
  8. படிக்க வேண்டும்மா கீதா. அறிமுகம மிக அருமை.இப்படி எல்லாம யோசிக்க எவ்வளவு கறபனா சகதி வேண்டும

    ReplyDelete
    Replies
    1. ஆமாம், நல்ல கற்பனைகளே! அதிலும் எடுத்துக் கொள்ளும் கரு புராணங்களில் இருந்து. அதை விரிவாக்கித் தற்காலச் சூழ்நிலைகளோடு பொருந்தும்படியாகக் கொண்டு வருவது எவ்வளவு கடினம்! அநாயாசமாகக் கையாண்டிருக்கிறார்.

      Delete
  9. கீதா மேடம்! இவ்வளவு தெளிவான ஒரு மதிப்பீட்டை அண்மையில் நான் படிக்கவில்லை. தேர்ந்த வார்த்தைகளில்,ரத்தினச் சுருக்கமாய் கதையின் போக்கை சொல்லியிருக்கும் விதம் ஆவலைத் தூண்டுகிறது. நானும் படிக்க உத்தேசம்! மீண்டும் பாராட்டுக்கள்... வாழ்க வளமுடன்

    ReplyDelete
    Replies
    1. உங்கள் பாராட்டு எனக்கு வசிஷ்டர் வாயால் பிரும்மரிஷி பட்டம் கிடைச்சாப்போல் இருக்கு. நன்றி மோகன் ஜி.

      Delete