எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Saturday, July 04, 2015

கடவுளின் நாட்டுக்கு ஒரு பயணம்

கேரளா பக்கமே அதிகம் போகத் தோணினதே இல்லை. பதினைந்து வருடங்கள் முன்னால் குருவாயூருக்குப் போனது தான். அதிலேயே மனம் வெறுத்து விட்டது. தங்குமிடம் ஒரு பிரச்னைன்னா சாப்பாடுக்கும் பிரச்னை. எங்கே திரும்பினாலும் அசைவம்-சைவம் கலந்த உணவுக் கடைகளே காணப்பட்டன.  ரொம்பக் கஷ்டப்பட்டு ஒரு ஓட்டலுக்குப் போய் உணவு எடுத்துக்கொண்டால் வாயில் வைக்க முடியலை. எப்படியோ சமாளிச்சுட்டுத் திரும்பியாச்சு. அதுக்கப்புறமும் போகத் தோணலை. திருவனந்தபுரத்தில் இருக்கும் தங்கை (சித்தி பெண்) மட்டும் பல முறை கூப்பிட்டுவிட்டாள். அப்படியே அனந்தபத்மநாப சாமியையும் பார்க்கலாம். இங்கே இருப்பவர் பின்னால் வந்தவர். திருவனந்தபுரத்திலிருந்து கொஞ்சம் தள்ளி ஒரு சின்னக்கிராமத்தில் ஏரிக்கரையில் ஆதி அனந்தபத்மநாபர் கோயில் இருக்கு. அங்கெல்லாம் போகலாம் என்று  நினைத்துக் கொண்டிருந்தேன்.

இப்படிப்பல நாட்களாக/மாதங்களாக/வருடங்களாகக் கனவு கண்டது இந்த மாதம் ஆரம்பத்தில் வாய்த்தது. தங்கை கணவருக்கு சஷ்டி அப்தபூர்த்தி திருவனந்தபுரத்தில் நடைபெற்றது. அதற்கு நேரிலே வந்து அழைத்தார்கள். ஆகவே போகலாம்னு முடிவு செய்து பயணச் சீட்டு வாங்கப் போனால் க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்..... திருச்சி வழியாகத் திருவனந்தபுரம் செல்லும் வண்டிகள் இரண்டே இரண்டு தான் தினசரி போகிறது. இன்னொன்று  சிறப்பு வண்டி.  வாரம் ஒரு நாள் மட்டுமே செல்லும். அது போகும் தினம் பயணச் சீட்டு வாங்கினால் நிகழ்ச்சியில் கலந்துக்க முடியாது. ரொம்ப யோசித்து மண்டையை உடைத்துக் கொண்டு பயணச் சீட்டு வாங்கினோம். சென்னையிலிருந்து குருவாயூர் செல்லும் வண்டியில் தான் டிக்கெட் கிடைத்தது. அது ராத்திரி பதினொன்றரை மணிக்குத் தான் திருவனந்தபுரம் செல்லுமாம். வேறே வழியில்லை! டிக்கெட் கிடைச்சதும் நாளைக்கு நிகழ்ச்சி என்றால் முதல்நாள் தான் கிடைச்சது. ஒரு நாள் முன்னரே செல்லவேண்டும் என நினைத்திருந்தும் ஆவல் நிறைவேறவில்லை.

அதோடு இப்போப் பார்த்துப் பருவமழை வேறே சூடு பிடித்துக் கொண்டிருந்தது. நாங்க கிளம்பின திங்கட்கிழமை அன்று திருவனந்தபுரத்தில் நல்ல மழை பெய்வதாக அங்கே முன்னரே சென்றுவிட்ட தம்பி கூறினார். ஏற்கெனவே நாகர்கோயில், கன்யாகுமரி மழை வேறே பயமுறுத்திக் கொண்டிருந்தது.  ஆகவே குடை, தலைக்கு மழைத்தொப்பி, போர்வை, காற்றுத் தலையணை என அனைத்தும் இடம் பிடித்தன. எங்கே தங்கப் போறோம்னு ஒண்ணும் புரியலையே!

நாங்க குருவாயூரில் வரதாகத் தகவல் கொடுத்துட்டோம். தங்குமிடம் தான் பிரச்னை. ஆனால் அவங்க ஏற்பாடு செய்திருந்த கல்யாண மண்டபத்திலே அறைகள் நிறைய இருப்பதாகச் சொல்லி இருந்தார்கள்.  நமக்கோ கீழே படுக்க முடியாது. அதோடு கழிப்பறைப் பிரச்னை வேறே. என்ன நடக்கப் போகுதோ ஒரே த்ரில்லிங்காக இருந்தது. குறிப்பிட்ட நாளும் வந்தது. ஒரு விதத்தில் இந்த வண்டி மத்தியானமாய்க் கிளம்புவதால் காலை சீக்கிரம் எழுந்து தயாராகவேண்டிய அவசரம் எல்லாம் இல்லை. ஆனால் குருவாயூர் வண்டியே கட்டை வண்டி ரகம். ஏதேனும் ஒரு சின்ன மேடையைப் பார்த்தாலே போதும்; ரயில்வே நிலைய நடைமேடைனு நினைச்சு ஓட்டுநர் வண்டியை நிறுத்திடுவார். இன்னிக்கு என்ன நடக்குமோ தெரியலை.

இப்போதெல்லாம் பல்லவனில் செல்கையில் கழிவறை வசதி எல்லாம் சிறப்பாகச் செயல்பட்டது என்பதோடு போலீஸும் அடிக்கடிப் பெட்டியில் அங்குமிங்குமாகச் சென்று வந்து சோதித்துக் கொண்டிருந்தார்கள். ஆகவே ஓரளவுக்குச் சுமாராகவாவது இருக்கும்னு நினைச்சிருந்தேன். வண்டி பனிரண்டே முக்காலுக்கு வரவேண்டியது ஒன்றே காலுக்குத் தான் வந்தது. இவ்வளவு பழைய வண்டியை எந்த ஷெட்டில் இருந்து தேடிக் கண்டு பிடிச்சிருப்பாங்கனு ஆச்சரியமா இருந்தது. இரண்டாம் வகுப்பு ஏசி பெட்டி மாதிரியே தெரியலை. ஈயம்,பித்தளைக்குப் பேரிச்சம்பழம் கூட அந்தப் பெட்டிக்குக் கொடுப்பாங்களானு சந்தேகமா இருந்தது. ஆனால் அதிலே தானே உட்கார்ந்தாகணும். உட்கார்ந்தாச்சு. வண்டியும் கிளம்பியது. காலை பத்து மணிக்கே வீட்டில் சாப்பிட்டது. கையில் இட்லி, காஃபி, தயிர்சாதம்(ராத்திரிக்கு) எடுத்து வந்திருந்தேன்.

சென்னையில் இன்று காலை ஏழு இருபதுக்குக் கிளம்பும் இந்த வண்டி மறுநாள் காலை ஆறரை போலத் தான் குருவாயூர் போகிறது. அவ்வளவு நீஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈண்ட பிரயாணம் செய்யணும். அப்படி இருந்தும் இந்த வண்டியில் ஒரு தண்ணீர் பாட்டில் கூட விற்க மாட்டார்கள். காஃபி, டீ, சாப்பாடு எதுவும் வராது. ஒரு காலத்தில் பான்ட்ரி கார் இருந்ததாம். அதை எடுத்துட்டாங்க! அதுக்கப்புறமா வேறே மாற்று ஏற்பாடுகள் எதுவும் செய்யலை. நீண்ட பிரயாணம் செய்பவர்களுக்குக் கஷ்டம் தான். பெரும்பாலும் திருவனந்தபுரமோ, குருவாயூரோ செல்பவர்கள் சென்னை சென்ட்ரலில் இருந்து செல்லும் விரைவு வண்டிகளில் சுருக்கமான வழியில் கோவை வழி சென்று விடுகின்றனர். இங்கே அதிகம் இறங்கி ஏறும் பயணிகளே! அதனால் எந்தவிதமான ஏற்பாடும் இல்லைனு சொல்றாங்க. என்னவோ அவதிப் படுவது மக்கள் தான்.

சரி அது போகட்டும், நாம் தான் கொண்டு போயிடறோமே; அதைச் சாப்பிடலாம்னு சாப்பிட்டுக் கை கழுவப் போனால் சுத்தம்!!!!!!!! கழிவறை, கைகழுவும் இடம் போன்ற இடங்களில் உள்ள குழாயில் தண்ணீரே வரலை. சரினு மறு பக்கம் போய்ப் பார்த்தால் அங்கேயும் அப்படித் தான். அட்டென்டன்ட் கிட்டேயோ, டிடிஇ கிட்டேயோ சொன்னால் தலையை ஆட்டிட்டுப் போயிட்டாங்க. அப்புறமா (நல்லவேளையா இப்போ வர பெட்டிகள் எல்லாம் வெஸ்டிப்யூல் ஆக இருப்பது ஒரு வசதி! அடுத்த பெட்டிக்குச் சென்று அங்கே கை கழுவிக் கொண்டு பாத்திரங்கள், ஃப்ளாஸ்க் எல்லாத்தையும் மேலாக அலம்பிக் கொண்டு வந்தோம்.  திருச்சி தாண்டி கொளத்தூர்னு ஒரு ஸ்டேஷன் வந்ததோ இல்லையோ வண்டி நின்னுடுச்சு! என்னனு கேட்டால் க்ராசிங்காம். அதோடு பேக்கப்  வேறே நடக்குதாம். வண்டி கிளம்ப ஒரு மணி நேரம் ஆகுமாம்.  ஒரு மணி நேரம் வண்டி நின்றால் ஏசி ஒரு பக்கம் தான் வேலை செய்யுமாம். (தொழில் நுட்பம் தெரிஞ்சவங்க விளக்குங்கப்பா) இன்னொரு பக்கம் வேலை செய்யாதாம். ஏற்கெனவே ஏசி பெட்டி மாதிரியே இல்லை; இந்த அழகிலே எங்க பக்க ஏசி வேலையே செய்யலை! அடம்! ஃபானைப் போட்டுக் கொண்டோம்.  அதுவும் சைட் லோயர், சைட் அப்பருக்குக் காத்து வரமாதிரி அமைப்பு இல்லை. மொத்தத்துக்கு ஒரே ஃபான் தான். எங்கோ போயிட்டிருந்தது.

ஒரு மணி நேர நரக வாசத்துக்குப் பின்னர் மெல்ல மெல்ல வழியில் உள்ள ஸ்டேஷன்களில் எல்லாம் நின்று நிதானமாக நாலரை மணி போல திண்டுக்கல் போய்ச் சேர்ந்தது. இந்நேரம் மதுரை போயிருந்திருக்கணும். இது முக்கி, முனகி திண்டுக்கல் போகவே இத்தனை நேரம்! அதுக்குள்ளே திருவனந்தபுரத்திலிருந்து இரண்டு, மூன்று முறை தொலைபேசி அழைப்பு. நாங்க இன்னும் திண்டுக்கல்லே தாண்டலைனதும் அங்கே பேசிய தம்பி சரி தான் ராத்திரி ஒரு மணிக்கு மேல் ஆகும் போலிருக்கேனு சொன்னார். நான் எங்களுக்காக யாரும் காத்துட்டு இருக்க வேண்டாம்; எல்லோரும் தூங்கிடுங்க. நாங்க ஸ்டேஷனிலேயே தங்கிட்டு வரோம்னு சொன்னோம்.

வழியில் கண்ட சில காட்சிகளை செல்ஃபோன் மூலம் படமாக்கினேன். அவற்றில் இரண்டு இங்கே பகிர்ந்திருக்கேன். இவை திண்டுக்கல், மதுரை இடையே உள்ள இடங்கள் என எண்ணுகிறேன்.

10 comments:

 1. பயணங்கள் எளிதாகவும், விரைவாகவும் இருந்தால் சிரமமிருக்காது. இது போன்ற பயணங்கள் அவஸ்தை.

  ReplyDelete
  Replies
  1. ஆமாம், ஶ்ரீராம், கொஞ்சம் சிரமமான பயணமாகவே இருந்தது. :(

   Delete
 2. முன்பே தகவல் தெரிந்திருந்தால் உங்களை சந்தித்து இருப்பேன் அம்மா...

  ReplyDelete
  Replies
  1. டிடி, உங்களுக்குத் தகவல் தெரிவிக்கும் எண்ணம் இருந்தது. ஆனால் கடைசி நிமிட மாற்றங்கள் இருக்குமோ எனத் தோன்றியதில் உங்களைச் சிரமப்படுத்த வேண்டாம் என்று நினைத்தேன். இனி திண்டுக்கல் வழி சென்றால் கட்டாயமாய் முன் கூட்டியே சொல்கிறேன். :) நன்றிப்பா.

   Delete
 3. அம்மா

  திருச்சியில் இருந்து திருவனந்தபுரம் செல்வதானால் திருச்சியில் சாயந்திரம் வைகையில் ஏறி இரவு 8:30க்கு மதுரையில் இறங்க வேண்டும். பின்னர் அங்கிருந்து இரவு 11:15க்கு புறப்படும் மதுரை புனலூர் பாசென்ஜெரில் புறப்பட்டு மறுநாள் காலை 6:45க்கு திருவனந்தபுரம் சென்றடைய வேண்டும். இரண்டு வண்டிகளுக்கும் முன்பதிவு செய்யலாம். ரயில் நிலையத்தில் சென்று பதிவு செய்வதானால் டிக்கெட் ஒன்றாக எடுக்கலாம். exp/pass combined ticket. இடையில் மதுரையில் மீனாக்ஷி அம்மனையும் அல்லது கூடல் அழகரையும் தரிசித்து விட்டு மதுரை புகழ் இரவு இட்டிலி சாப்பிட்டு விட்டு பாசென்ஜெரில் ஏறலாம்.

  First class was available in madurai punalur passenger.


  --
  Jayakumar

  ReplyDelete
  Replies
  1. வாங்க ஜேகே, இனி ஒரு வாய்ப்புக் கிடைத்தால் கட்டாயமாய் முயன்று பார்க்கிறோம். தகவலுக்கு நன்றி.

   Delete
 4. இம்மாதிரியான பல அனுபவங்களே பிரயாணம் மனதில் நிற்கச் செய்யும்

  ReplyDelete
 5. இருப்பதிலேயே கொடுமையான ஒரு வண்டி இது! சென்னையிலிருந்து ஒரு முறை திருவரங்கம் வருமே என்று இதில் முன்பதிவு செய்து அவதிப்பட்டிருக்கிறேன்! :(

  கேரளம் - சென்று அங்கே பார்த்தவை பற்றிய பதிவுகளுக்கு காத்திருக்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. ஆமாம், வெங்கட், ஒருமுறை நாங்களும் வந்தோம்~ திக்கி முக்கி ஒன்றரை மணிக்குள் ஶ்ரீரங்கம் வந்துடுச்சு! அதுவே அதிசயம் தானே! கேரளாவில் அதிகம் சுத்தலை! முக்கியமாத் தங்குமிடம் பிரச்னை! சாப்பாடு பிரச்னை!

   Delete