எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Thursday, July 23, 2015

பதிவுக்குச் சுவை கூட்டிய மொளகூட்டல் விவாதம்!

ஹிஹிஹி, "மொள"காய பிரச்னை, நம்ம எண்ணங்கள் பதிவிலே ஓடிட்டு இருக்கு! எரிசேரி பத்தி எழுதினால், ஶ்ரீராம் அதுவும் மொளகூட்டலும் ஒண்ணானு கேட்டு வைக்க. மொளகூட்டலை விவரித்த துளசிதரன்/கீதா, பாலக்காடு பக்கம் வேறே மாதிரிப் பண்ணுவாங்கனு சொல்ல, ஷோபா அதை மறுக்க சுவையான  ஒரு சமையல் விவாதமே நடைபெறுகிறது. எல்லாம் கிடக்க, நாம தான் மொளகூட்டல் பற்றிய ஒரு தெளிவைத் தருவோமேனு நான் உள்ளே புகுந்துட்டேன்! பின்னே! சான்ஸ் கிடைச்சால் விடுவோமா?

ஆனாப் பாருங்க! பின்னூட்டங்களின் தாக்கம் இப்போது தான் ஏற்பட்டதால் இன்று செய்த புடலை மொளகூட்டலுடைய படம் எடுக்க முடியவில்லை. விரைவில் கீரை அல்லது வேறு ஏதாவது காயில் பண்ணிட்டுப் படம் எடுத்துடறேன். இப்போதைக்கு மொளகூட்டல் சமையல் குறிப்பு மட்டும்.


இதுக்குப் புடலை, அவரை, கீரை, கீரைத்தண்டு, பூஷணிக்காய், பறங்கிக்காய் ஆகிய காய்களே அருமையாக இருக்கும். இப்போல்லாம் முட்டைக்கோஸில், சௌசௌவில் போன்றவற்றிலெல்லாம் பண்ணுகின்றனர். ஆனால் எங்க வீட்டில் இன்னும் மாற்றவில்லை. நாம் தான் லேசில் மாற மாட்டோமே! பிடிச்சா ஒரே பிடி! :)

மேலே சொன்ன காய்களில் ஏதேனும் ஒன்று கால் கிலோ,

கீரை எனில் ஒரு கட்டுக் கீரை (இப்போல்லாம் கீரைக் கட்டுப் பெரிதாக இருப்பதால் ஒரு கட்டுனு சொன்னேன். 4 பேருக்கு தாராளமா வரும். சின்னக் கட்டு என்றால் இரண்டு கட்டு)

மஞ்சள் பொடி ஒரு சிட்டிகை

உப்பு தேவையான அளவு

பாசிப்பருப்பு( தேவையானால்) ஒரு சின்னக் கரண்டி குழைய வேக வைத்தது.

அரைக்க

மிளகாய் வற்றல், 2

தேங்காய் ஒரு சின்ன மூடி முழுவதும் துருவிக் கொள்ளவும். தேங்காயின் மணம் தான் இதில் முக்கியம்.

சீரகம் இரண்டு டீஸ்பூன்

தாளிக்க

தே.எண்ணெய் இரண்டு டீஸ்பூன்

கடுகு, ஒரு டீஸ்பூன் உ.பருப்பு ஒரு டீஸ்பூன், மி.வத்தல் சின்னதாக ஒன்று, கருகப்பிலை.  சீரகம் சேர்ப்பதால் பெருங்காயம் கூடாது.

கீரை எனில் கல்சட்டியில் வேகப்போடவும். அல்லது அடி கனமான ஏதேனும் ஒரு பாத்திரத்தில் பொட்டு வேக வைக்கவும். நன்கு வெந்ததும் கீரையை உப்புச் சேர்த்து மசிக்கவும்.

அரைக்கக் கொடுத்துள்ள பொருட்களை நன்கு மைய அரைத்து வெந்த கீரையில் சேர்த்து ஒரு கொதி விடவும். சேர்ந்து வந்து விடும். பாசிப்பருப்புக் கீரைக்கு நான் சேர்ப்பதில்லை. இதுவே சப்பாத்திக்கு சைட் டிஷாகப் பண்ணினால் பாசிப்பருப்பும், ஒரு உ.கி.யும் சேர்ப்பது உண்டு. ஆனால் மொளகூட்டல் பண்ணும்போது சேர்ப்பதில்லை.

பின்னர் தே.எண்ணெயில் தாளிக்கவேண்டும்.

புடலை க்கான பட முடிவு

படம் நன்றி கூகிளார்


காய்கள் எனில்

காய்களை ஒரு அடிகனமான பாத்திரத்தில் போட்டுக் கொஞ்சம் நல்லெண்ணெயில் வதக்கிக் கொண்டு (சீக்கிரம் வேகும், நிறம் மாறாது.) நீர்  விட்டு மஞ்சள் பொடி சேர்த்து வேக வைக்கவும். வெந்ததும் உப்பு (கட்டாயம்), பாசிப்பருப்பு (தேவையானால்) சேர்க்கவும்.   நான் பாசிப்பருப்புச் சேர்ப்பேன். பின்னர் மி.வத்தல், தேங்காய், சீரகம் அரைத்த விழுதைப் போட்டுக் கொதிக்க விடவும், அதுவே சேர்ந்து விடும். அப்படிச் சேர்ந்து கொள்ளவில்லை எனில் கொஞ்சம் போல் அரிசி மாவு கரைத்து விடலாம். பொதுவாக சமையலில் இந்த மாவு கரைப்பதும், அதைச் சேர்ப்பதும் எனக்குப் பிடிக்காத ஒன்று. சாம்பாரில் மாவு வாசனை வரும்னு தோணும். அதே போல் மொளகூட்டலிலும் மாவு வாசனை வரும்னு தோணுது. ஆகையால் போடுவதில்லை. அதுவே சேர்ந்து கொள்கிறது. பின்னர் தே.எண்ணெயில் கடுகு, உபருப்பு, மிவத்தல், கருகப்பிலை தாளிக்கவும். சாம்பாரை விட வற்றல் குழம்போடு நன்றாக இருக்கும். பொதுவாக நான் சமையலில் சாம்பார் பண்ணவில்லை எனில் வற்றல் குழம்பு அல்லது பருப்புப் போடாத வெறும் குழம்பு பண்ணும்போதே இம்மாதிரிப் பருப்புப் போட்ட கூட்டு வகைகள் செய்வது வழக்கம். ஏதேனும் ஒன்றில் பருப்பு இருக்கும்படி திட்டமிட்டுக் கொள்வேன்.  நீங்கள் உங்கள் வழக்கப்படி செய்து கொள்ளுங்கள்.
அவரைக்காயில் செய்தால் அந்த மணமே தனி! :)

32 comments:

  1. பாலக்காட்டுக்காரர்கள் வீட்டில் மொளகூட்டல் செய்தால் அது தான் அன்று குழம்பு, பருப்பு கட்டாயம் சேர்ப்போம் , கூட ஒரு தயிர் பச்சடி, புளி இஞ்சி , அல்லது வாழைக்காய் புளி குத்தின கறி என்று எதாவது செய்வோம் . அன்று மட்டும் ரசம் உண்டு :) ரொம்ப கெட்டியாக கூட்டு போல் இல்லாமல் சிறிது தளர பிசைந்து கொள்வது மாதிரி செய்வோம் .

    ReplyDelete
    Replies
    1. ஆமாம், பார்த்திருக்கேன். ஆனால் எங்க புக்ககத்தில் இம்மாதிரிக் கூட்டு என்பதே அபூர்வம். அவங்களுக்கு எண்ணெய் விட்டு வதக்கிய கறி வகைகள், பருப்பு, தேங்காய் போட்ட கறி வகைகள் தான் பிடிக்கும். எப்போதாவது தான் கூட்டு. ஆகவே குழம்புனு ஒண்ணு தனியா இருக்கணும். நான் கூட்டுப் பண்ணுவதையே என் மாமியார் அதிசயமாச் சொல்லுவார். :) நாங்க பிசைந்து சாப்பிடவும் பண்ணுவோம். தொட்டுக்கொள்ளவும் பண்ணுவோம். ரசம் தினம் உண்டு. ரசமில்லாமல் சாப்பாட்டில் ரசமே இல்லையே! :)

      Delete
    2. Geetha maami neenga nichchyam kumbakonmaaga thaan irukkanum.

      Delete
    3. Geetha maami, nichchyam neenga kumbakonam pallan thaan.

      Delete
    4. கும்பகோணத்துக்காரங்களுக்கு மொளகூட்டல்னா என்னனே தெரியாதே! ஹாஹாஹா நான் மதுரை! கல்யாணம் ஆகிச் சென்றது தான் கும்பகோணம். :)))

      Delete
  2. இந்த மொளகூட்டல் செய்முறையை என் தளம் பூவையின் எண்ணங்களில் பதிவிட்டிருக்கேனே. அதையே அதாரிடேடிவ் ஆக எடுத்துக் கொள்ளலாம் சுட்டி இதோ.
    http://kamalabalu294.blogspot.in/2013/06/blog-post.html

    ReplyDelete
    Replies
    1. நன்றி ஐயா. ஏற்கெனவே பார்த்திருக்கேன். நாங்க பொதுவாக மொளகூட்டலுக்குத் துவரம்பருப்புச் சேர்ப்பதில்லை. அதோடு உருளைக்கிழங்கிலும் செய்வதில்லை. சிலர் முட்டைக்கோஸில் செய்யறாங்க தான். ஆனால் நாட்டுக்காய்களில் செய்வதன் ருசி அதில் வருவதில்லை. :) ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு விருப்பம். :)

      Delete
  3. எனக்கு இது புது ரெசிபி! நன்றி!

    ReplyDelete
    Replies
    1. இதைத் தமிழ்நாட்டில் (கன்யாகுமரி, நாகர்கோயில் நீங்கலாக) பொரிச்ச கூட்டு என்கிறார்கள் சுரேஷ். ஆனால் நான் வேறு விதமாகப் பொரிச்ச கூட்டு செய்வேன். :)

      Delete
  4. ஆம் சகோதரி எங்கள் ஊர் தவிர இது பொரிச்ச கூட்டுதான்..நான் சொல்லிய மொளகூட்டல் முந்தைய பதிவில் எங்கள் வீட்டில் இரண்டு விதாமாகச் செய்வதைத்தான் சொல்லியிருந்தேன்..கேரளத்து மொளகூட்டல் + .இதே ஜீரகம் இல்லாமல் உ.ப. மிளகு, மி வ. தேங்காய் வைத்து அரைத்து நீங்கள் சொல்லி இருக்கும் காய்களில் தான் கீரை, புடலைங்காய், லேட்டஸ்டாக சௌசௌ செய்வதுண்டு..பாசிப்பருப்பு உண்டு..குறிப்பிட்ட சமூகம் என்பதால் அதைக் குறிப்பிடவில்லை. இப்போதும் எனது உறவினர்கள் கேரளாவில்தான் தாமசம்.....இதனை மிளகுஷீயம் என்றும் சொல்வதுண்டு எங்கள் வீட்டில்....அதனால் தான் என்னால் உறுதியாச் சொல்ல முடிந்தது. சகோதரி...

    ReplyDelete
    Replies
    1. வாங்க துளசிதரன்/கீதா, உங்க எரிசேரி செய்முறையையும் நேரம் இருக்கையில் பகிருங்கள். நான் பிசைந்து சாப்பிட வறுத்து அரைத்தும், தொட்டுக்கொள்ளவெனப் பண்ணும்போது வறுக்காமல் மி.வத்தல், தேங்காய்,சீரகம் சேர்த்தும் பண்ணுவேன். ஆகவே இரண்டு விதமாகவும் பண்ணலாம். வறுத்து அரைத்துப் பண்ணும்போது புளிவிட்ட கீரை அதோடு எங்க வீடுகளின் காம்பினேஷன், பொரிச்ச குழம்பு+புளி விட்ட கீரை! :) கீரையில் பருப்புச் சேர்ப்பது இல்லை. பருப்புப் போட்டும் சிலர் புளி விட்ட கீரை பண்ணுகிறார்கள்.

      Delete
  5. க்கும்... இது எங்களுக்கு புதுசு...! ஹா... ஹா...

    ReplyDelete
    Replies
    1. நல்லா இருக்கும் டிடி. செய்து பார்க்கச் சொல்லுங்க. :)

      Delete
  6. மொளகூட்டல் என்றால் அதில் மிளகு வராதோ!

    :))))))

    நான் சௌசௌ அல்லது புடலங்காய் போட்டு செய்யும் ஒருவகைக் கூட்டில் பெயருக்கு பாசிப்பருப்புச் சேர்த்து, தேங்காய் மற்றும் மிளகு சற்றுத் தூக்கலாய் வைத்து அரைத்துச் சேர்த்து விடுவோம். மிளகு ருசியை பருப்பு அடிக்கக் கூடாது என்று கம்மியாக சேர்ப்போம். பெரும்பாலும் சௌசௌதான்.

    ReplyDelete
    Replies
    1. ஹிஹிஹி ஶ்ரீராம், அது "மொள"கூட்டலாக்கும். "மிளகூ"ட்டல் இல்லை. அதனால் மிளகு வராது! மிளகு, உபருப்பு வறுத்துத் தேங்காயோடு சேர்த்து அரைத்தால் அதை நாங்க பொரிச்ச குழம்பு என்போம். :) அதுக்குப் புளி விட்ட கீரை தான் அருமையான துணை.

      Delete
  7. என் தோழி பாலக்காட்டுக்காரி. அவளிடமிருந்து இந்த மொளகூட்டானைக் கற்றுக் கொண்டேன்.
    பெரும்பாலும் ரசம் மொள்கூட்டான், பப்படம் இதுதான் சமையல். தே.எண்ணெய் வாசம் எதிலும் இருக்கும்.
    நன்றி கீதா.

    ReplyDelete
    Replies
    1. நம்ம வீட்டிலேயும் சரி, அக்கம்பக்கமும் சரி, அதிகம் பழகினது திருநேலி(திருநெல்வேலி) பாலக்காட்டுக்காரங்களோடு தான். அதனாலேயோ என்னமோ அவங்க சமையல் பக்குவம் ஓரளவுக்குத் தெரியும்; புரியும். திருநெல்வேலிப்பக்கம் ஒரு சில ஊர்களில் அவியலுக்குப் புளி தான் சேர்ப்பாங்க. அதுக்காக நிறையப் புளி எல்லாம் இல்லை. காய்கறி வேகும்போது நீர்க்கப் புளி கரைத்து விடுவாங்க. தேங்காய் தூக்கலாக வைத்துப் பச்சைமிளகாயோடு அரைத்து விட்டிருப்பாங்க. 2,3 நாட்கள் ஆனாலும் கெட்டுப் போகாது. தயிர் சேர்த்து அவியல் மிகச் சிலரே பண்ணுவாங்க. எங்க வீட்டில் அம்மா தயிர் தான் சேர்ப்பார். ஆனால் காய்கறிகளை வேகவைத்து அரைத்துக் கலந்து கொண்டு நன்கு கொதிக்கவிட்டுப் பின்னர் தே.எண்ணெயோடு கருகப்பிலை போட்டு வைத்துப் பரிமாறும்போது கொஞ்சம் கொஞ்சமாக எடுத்துக் கொண்டு தயிரைக் கலந்து பரிமாறுவார்.

      Delete
  8. கேரள மெழுகு வரட்டி பற்றி கேள்வி பட்டிரிக்கிறீர்களோ?

    Jayakumar

    ReplyDelete
    Replies
    1. கிட்டத்தட்டக் காரக்கறி தானே அது? கேள்விப் பட்டிருக்கேன். ஆனால் மெழுக்குவரட்டி என்பார்கள்னு நினைக்கிறேன். :)

      Delete
  9. துவரம் பருப்பு இல்லாமல் செய்வது மொளகூட்டலாய் இருக்காது. வேறு ஏதாவதாய் இருக்கும் .

    ReplyDelete
    Replies
    1. 2,3 காய்கள் சேர்த்துப் பண்ணும்போது து.பருப்பும் ஒரே காய் என்றால் பாசிப்பருப்பும் போடுவார்கள் எனக் கேள்விப் பட்டிருக்கேன். கீரை மட்டும் தனியாப் பண்ணினால் பருப்பே இல்லாமலும் பண்ணலாம் என்பார்கள். ஆகவே இது அவரவர் வழக்கம் மட்டுமே. துபருப்புப் போட்டால் தான் மொளகூட்டல்னு சொல்ல முடியாது. இப்போல்லாம் எல்லாக் காய்களிலும் பண்ணினாலும் முன்னால் எல்லாம் நாட்டுக்காய்கள் மட்டும் தான் பண்ணுவாங்க என்றும் கேள்வி.

      Delete
  10. நான் பழகிய கேரளக்கார அதான் மேல் தேங்காய்த் துருவலெல்லாம் அவியல்முதலாநவைகளுக்கு வெளுப்பாக, கொட்டாங்கச்சி வரை துருவியது நிறையவே கொஞ்சம் கலர் மாருதலாய் மொலகுட்டலுக்கு. துவரம் பருப்பு வேகவைத்து ரஸத்திற்கும்,அடிப்பருப்பு மொளகுட்டலுக்கும் தான். தயிர்ப்பச்சடியோ,புளி இஞ்சியோ ஒன்று. இருக்கும். காயை வேகவைத்து துளி அரிசி,சீரகம்,ஒரு மிளகாய் வற்றல்,தேங்காயை அரைத்துச் சேர்ப்பார்கள்..வெந்த பருப்பையும்தான். தேங்காயெண்ணையில் கடுகு உளுத்தம் பருப்பு பொரித்து கொட்டி, கறிவேப்பிளை சேர்ப்பார்கள். அப்பல்லாம் அவர்கள் தேங்காயெண்ணை தவிர மற்றதை உபயோகப் படுத்தவே மாட்டார்களே.பப்படாம் காய்ச்சினது ஸ்டாக் இருக்கும். அன்புடன்

    ReplyDelete
    Replies
    1. வாங்க காமாட்சி அம்மா,
      பப்படம் தான் நிறையவே பொரித்து வைத்துக் கொள்வார்களே! அது இல்லாமல் சாப்பாடு ஏது? தே.எண்ணெய் தான் நானும் சில சமையல் வகைகளில் சேர்ப்பேன். மோர்க்குழம்பு, அவியல், மோர்க்கூட்டு, மொளகூட்டல், வாழைக்காய்ப் பொடிமாஸ் போன்றவற்றிற்கு தே. எண்ணெய் தான் நல்லா இருக்கு. :)

      Delete
  11. அவியலுக்கு காயை வேக வைக்கும்போது லேசாக புளிஜலம் சேர்த்தால் வாழைக்காய் கறுக்காது. இறக்கும் போது மாங்காயைச் சிதைத்துப்போடுவார்கள் அவியலில்.. பலவித ருசிகள். நமக்கென்று ஒரு பாணி இல்லாமள் கதம்பமாகி விடுகிறது சிலஸமயம். அன்புடன்

    ReplyDelete
    Replies
    1. மாங்காய் போட்ட அவியலும் சாப்பிட்டிருக்கேன். என் அம்மாவே போடுவார் என்றாலும் எனக்கு அந்த ருசி பிடிப்பதில்லை. :)

      Delete
  12. எரிசேரி சரி,

    புளிசேரி என்றும் ஒன்று இருக்கிறதா?

    தெரியாமல்தான் கேட்கிறேன்.

    தவறாக நினைத்திட வேண்டாம்.


    நன்றி.

    ReplyDelete
    Replies
    1. வாங்க ஊமைக்கனவுகள், கிட்டத்தட்ட நம்ம மோர்க்குழம்பைத் தான் புளிசேரி என்கின்றனர். :)

      Delete
    2. Objection Your Honor. புளிசேரி வேறு. மோர்க்குழம்பு வேறு. 1/2 மூடி தேங்காய், 4 பச்சை மிளகாய், (ஜீரகம் 1 ஸ்பூன் தேவைனா) நல்லா அரைத்து, மோரில் கலக்கி, உப்பு தேவையான அளவு போட்டு, முதல் கொதியில் (பதைப்பது. விரல் வைத்தால் நல்லா சூடு தெரியும் பதம்) அடுப்பை அணைத்து, தேங்காய் எண்ணெயில், கடுகு, உளுத்தம்பருப்பு, கருவேப்பிலை தாளிதம் பண்ணிச் சேர்ப்பது புளிசேரி. இதை சட்னிக் குழம்பு என்றும் சொல்வார்கள். மோர்க்குழம்பு பலவிதம். ஊறவைத்த துவரை, அரிசி, சிவப்பு மிளகாய், தேங்காயோடு அரைத்து மோரில் கலந்து, மஞ்சப்பொடி போட்டு பதைக்க வைப்பது.

      Delete
  13. மாமி தங்களின் இந்த மொளகூட்டல் குறிப்பினை செய்தேன்,மிகவும் நன்றாக இருந்தது. பொரிச்ச கூட்டு செய்முறையை விரைவில் போடுங்களேன்..
    http://sashiga.blogspot.fr/2015/07/molagootal-avarakkai-broad-beans.html

    ReplyDelete
    Replies
    1. http://geetha-sambasivam.blogspot.in/2016/10/blog-post.html

      Delete
  14. மறுபடியும் முதல்லேருந்தா...

    ReplyDelete
  15. எனக்கு ஸ்ரீராமின் பின்னூட்டத்தைப் படித்துச் சிரிப்பு வந்துவிட்டது. நல்ல comment.

    ReplyDelete