எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Sunday, July 05, 2015

கனவுத் தொழிற்சாலையில் ஓர் காவியம் கண்டேன்!


தலைமுறைகள் விமர்சனம் க்கான பட முடிவு

மனதுக்கு நிறைவாய் ஒரு படம்! பல ஆண்டுகள் கழித்து. தற்செயலாகத் தான் பார்க்க ஆரம்பித்தோம்.  படம் தலைமுறைகள் எனப் புரிந்தாலும் எனக்குத் தோன்றியது என்னவோ நீல பத்மநாபனின் நாவல் தலைமுறைகளை ஒட்டி எடுக்கப்பட்டிருக்குமோ என்பதே! பின்னர் படம் பார்க்கையிலேயே கணினியைத் திறந்து படம் பற்றித் தேடுதல் நடத்தினதில் பாலு மகேந்திராவின் தலைமுறைகள் எனப் புரிந்தது.  கதைப்படி பாலுமகேந்திராவின் மகனான சசிகுமார் மருத்துவம் படிக்கிறார். கூடப்படிக்கும் பெண்ணை (அநாதை ஆசிரமத்தில் வளர்ந்தவள் என்பதோடு தமிழ் அறியாதவளும் கூட) கல்யாணம் செய்து கொண்டு  விடுகிறார். அப்பாவிடம் ஆசிக்கு வரும்போது அப்பாவான பாலுமகேந்திரா விரட்டி அடிக்கிறார்.

இந்தக் கதைப்படி பாலு மகேந்திரா தான் கதாநாயகர். ஜாதிப் பற்று மிகுந்தவர்.  பிள்ளையை விரட்டிப் பனிரண்டு வருடங்கள் ஆன பின்னர் ஒரு சமயம் உடல்நிலை சரியில்லாமல் போக நண்பன் மூலம் தகவல் அறிந்த பிள்ளை அப்பாவைப் பார்க்க வருகிறார்.  தன்னால் தன் ஒரே தங்கை  எம்.எஸ்.சி. படித்துக் கொண்டிருந்தவள் பாதியில் படிப்பை விட்டு விட்டுக் கல்யாணம் ஆகி அடுத்தடுத்துக் குழந்தைகள் பெற்று இப்போது நான்காவது குழந்தைக்கும் தயாராகிக் கொண்டிருப்பதையும் பார்க்கிறார். இதைத் தொடர்ந்து பாலு மகேந்திராவின் மருமகளும், பேரனும் வருகின்றனர்.

தாத்தாவுக்கும், பேரனுக்கும் இடையில் மொழி (பேரன் ஆங்கிலம் தான் பேசுகிறான்.) புரியாவிட்டாலும் பாசப் பிணைப்பு ஏற்படுகிறது. மெல்ல மெல்ல ஒருவர் பால் ஒருவர் ஈர்க்கப்பட்டுப் பேரன் தாத்தாவுக்கு ஆங்கிலமும், தாத்தா பேரனுக்குத் தமிழும் கற்றுக் கொடுக்கின்றனர். பேரனுக்குத் தன் மகள் பரிசளித்த குருவிக் கூண்டிலிருந்து குருவிகளைத் தாத்தா பறக்கவிடுவது அருமை எனில் தூங்கும் பேரன் கைகளுக்குள்ளாக மூடி வைத்திருக்கும் ஆரஞ்சு மிட்டாயை மெல்லப் பேரன் கையைத் திறந்து எடுத்துத் தாத்தா வாயில் போடும்போது மிட்டாயின் இனிமை நம்முள்ளும் இறங்குகிறது.

அதே போல் ஜாதிப்பற்று மிகுந்து பேரனை ஆதித்யா பிள்ளை எனச் சொல்லுமாறு தாத்தா சொல்லிக் கொடுக்க அதைப் பாதிரியார் வந்து மென்மையாகப் பேசித் தாத்தாவை ஜாதிப் பற்றிலிருந்து விடுவிப்பது ஒரு கவிதை எனில் போகவர எட்டு கிலோ மீட்டர் நடந்தே சர்ச்சுக்குச் செல்லும் மருமகளுக்காகத் தங்கள் வீட்டுப் பூஜை அறையில் ஏசுநாதரின் படத்தையும் மாட்டி அதற்கும் பூமாலை சூட்டி மருமகளை அங்கேயே சாமி கும்பிடும்படி சொல்லும்போது நெகிழ்ந்து விடுகிறோம்.

தன் அருமைச் சிநேகிதன் ஆன லக்ஷ்மணன் இறந்த செய்தி கேட்டு வருந்தும் தாத்தாவிடம் பேரன் நீயும் செத்துடுவியா எனக் கேட்பதும், அதற்குத் தாத்தா ஆமென்பதும் ஒரு சோகமான பாடல்! அதோடு கதையை முடித்திருக்கலாமோ? ஆனால் பின்னால் தாத்தா இறந்து பேரன் வளர்ந்து மருத்துவராகிக் கவிதைகள் தமிழில் எழுதி அதற்கான விருது வழங்கும் விழாவில் பேச அழைக்கும்போது தாத்தாவின் நினைவுகளில் கண்ணீர் மல்கிப் பேச முடியாமல் நிற்பதுடன் படம் முடிகிறது. ஒரு விதத்தில் உருக்கமாக இருந்தாலும் கொஞ்சம் சினிமாத்தனம் வந்து விட்டதோ என்று தோன்றுகிறது.

படத்தில் ஆபாசக் காட்சிகளோ, நடனங்களோ இல்லை. கழிப்பறையே இல்லாமல் வெட்டவெளியில் தாத்தாவும், பேரனும் இயற்கை உபாதையைத் தீர்ப்பதிலிருந்து எல்லாமும் வெகு இயல்பாக வந்து செல்கின்றன. நம் மனதை உறுத்துவதே இல்லை. நதிக்கரைப் பிள்ளையாரைப் பார்த்துப் பேரன் கல் என்பதும், இல்லை கடவுள் எனத் தாத்தா சொல்வதும் ,பின்னர் ஃபோட்டோ மூலம் பேரனுக்குப் புரிய வைப்பதும் அழகு!

இயற்கைக் காட்சிகள் நெஞ்சை அள்ளுகின்றன. எங்கே இருந்து தான் இவ்வளவு அருமையான இடத்தைத் தேர்ந்தெடுத்தாரோ தெரியவில்லை. பறவைகளின் கத்தல் இருக்கும் இடங்களில் வேறு இசைக் கூச்சலே இல்லை. மென்மையான இசை தேவையான இடங்களில் மிக மிக மென்மையாக மனதை வருடுகிறது. வசனங்களும் நறுக்குத் தெரித்தாற்போல் இருக்கின்றன. நதியில் ஓடும் நீரின் மெல்லிய சப்தம் கூட காதில் விழும்படியாக இசை மிக மென்மையாக இருக்கிறது. பாலு மகேந்திராவின் காமிரா வழக்கம்போல் அற்புதமாக விளையாடி இருக்கிறது.  மொத்தத்தில் மனதுக்குத் திருப்தியைத் தந்த ஒரு படம். அனைவரும் இதில் வாழ்ந்திருக்கின்றனர். யாரும் நடிக்கவில்லை என்பதும் முக்கியம். போன வருஷம் தான் வந்திருக்கு என நினைக்கிறேன்.

தலைமுறைகள் விமர்சனம் க்கான பட முடிவு



தலைமுறைகள் விமர்சனம் க்கான பட முடிவு

18 comments:

  1. நான் படம் பார்க்கவில்லை.

    ReplyDelete
    Replies
    1. இது மாதிரிப் படம் கட்டாயம் பார்க்கணும் ஶ்ரீராம்! :) ரொம்ப நேரம் படத்தின் தாக்கம் மறையவே இல்லை!

      Delete
  2. அருமையான படம் அம்மா... இப்போது தான் பார்க்க சந்தர்ப்பம் கிடைத்ததா...?

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் டிடி, தலைமுறைகள்னு படம் வந்தது என்னமோ தெரியும்! ஆனால் அது நீல.பத்மநாபனின் தலைமுறைகள் நாவலைத் தழுவி எடுக்கப்பட்டதுனு நினைச்சிருந்தேன். நேற்றுத் தான் தெரியும் பாலுமகேந்திராவின் படம் என!

      Delete
  3. பார்க்கத் தூண்டும் அருமையான விமர்சனம்.

    ReplyDelete
    Replies
    1. வாய்ப்பு அமைந்தால் கட்டாயமாய்ப் பாருங்கள் ரா.ல.

      Delete
  4. பார்க்க வேண்டும்...!

    ReplyDelete
    Replies
    1. விரைவில் பாருங்க அநுராதா!

      Delete
  5. தேசிய ஒருமை பாட்டை வெளிப்படுத்தும் படப் பிரிவில் தேசிய விருது வாங்கின படம்... அருமையான விமரிசனம் தந்திருக்கிறீர்கள்....நீல. பத்மநாபன் அவர்களின் தலைமுறைகள் நாவலை வைத்து, 'மகிழ்ச்சி' னு ஒரு படம் ஏற்கனவே வந்திருக்கும்மா,...முடிஞ்சா பாருங்க....

    ReplyDelete
    Replies
    1. வாங்க பார்வதி, எழுதும்போதே உங்களை நினைச்சேன், கூடுதல் தகவல்களுக்கு. அதே போல் தகவல்களைத் தந்துவிட்டீர்கள். :) நீல.பத்மநாபன் நாவல் "மகிழ்ச்சி" என்ற பெயரிலா வந்திருக்கு? வாய்ப்புக் கிடைத்தால் பார்க்கிறேன். தகவலுக்கு நன்றி.

      Delete
  6. பார்க்கத்தூண்டும் பகிர்வு. இதுவரை பார்த்ததில்லை. இணையத்தில் கிடைக்கிறதா என பார்க்க வேண்டும்.

    ReplyDelete
    Replies
    1. இம்மாதிரிப்படங்கள் விரைவில் யூட்யூபில் கிடைத்துவிடும் வெங்கட்! தொலைக்காட்சியிலேயே வந்துடுச்சுன்னா அப்புறமா என்ன?

      Delete
  7. படம் பற்றி கேள்விப்பட்டு இருக்கிறேன்! பார்த்தது இல்லை! அருமையான பகிர்வு! நன்றி!

    ReplyDelete
    Replies
    1. நல்ல படம் சுரேஷ், கட்டாயம் வாய்ப்புக் கிடைத்தால் பாருங்கள்!

      Delete
  8. உங்களிடமிருந்தே பாராட்டு பெறும் படம்..... ம்ம்ம்ம்ம்ம்ம்.

    ReplyDelete
    Replies
    1. சினிமாவை சினிமாவாக நினைக்க வைக்காமல் இயல்பாக ஒருத்தர் இருப்பதை அவருக்குத் தெரியமால் படம் பிடித்துக் காட்டினால் எப்படி இருக்குமோ அப்படி இருக்கிறது படம்! இது தான் உண்மையான சினிமா ஐயா! உணர்ச்சி வசப்பட்டு ஓவென்று கத்துவதும் உதடுகள் துடிக்க அதை தினுசு தினுசாக வளைத்துக் கொள்வதும் புருவங்களை நெரித்துக் கொண்டு கஷ்டப்பட்டு உணர்ச்சிகளைக் கொட்டுவதும் நடிப்பே அல்ல!

      நான் ஒன்றும் தலை சிறந்த விமரிசகரும் அல்ல. என் விருப்பத்தைச் சொல்கிறேன் அவ்வளவு தான்!

      Delete
  9. அருமையான படம் சகோதரி! நாங்கள் பார்த்துவிட்டோம்...மனதைத் தொடும் படம்...மிக மிக இயல்பான படம்...பாலுமகேந்திரா அசாத்தியமாக அப்படியே வாழ்ந்திருப்பார்...கிட்டத்தட்ட கேரளத்துப் படங்களைப் போல...அங்கும் இப்பல்லாம் கொஞ்சம் மாறிவிட்டது..

    ஹௌ ஓல்ட் ஆர் யு? பார்த்துட்டீங்களா? பாக்கலைனா பாருங்க சகோதரி...அருமையா இருக்கும்...தமிழ்ல 36 வயதினிலே.

    ReplyDelete
    Replies
    1. வாங்க துளசிதரன்/கீதா, ஹௌ ஓட்ல் ஆர் யுவும் பார்க்கலை, 36 வயதினிலேயும் பார்க்கலை! கடைசியிலே இதுவும் தழுவல் தானா? :( 36 வயதினிலே படம் நல்லா இருப்பதாக என் மருமகள் சொன்னார். பார்க்கணும் வாய்ப்புக் கிடைச்சால். :)

      Delete