இப்போது நாம் மறுபடியும் "தேவியின் திரு அவதாரங்களை"ப் பார்ப்போம். முதலில் இரு அவதாரங்களைப் பார்த்தோம். மஹா விஷ்ணுவாகத் தேவி அவதாரம் எடுத்ததையும், அந்த விஷ்ணுவின் பத்து அவதாரங்களும் தேவியின் பத்து விரல்களில் இருந்து தோன்றியதாகவும் பார்த்தோம்.
2-வது அவதாரம் திருப்பாற்கடலில் யோகநித்திரை புரிந்துகொண்டிருந்த விஷ்ணுவின் நித்திரையைக் கலைத்து "மது, கைடபர்" என்னும் அரக்கர்களைக் கொல்லுமாறு சொன்னது. இப்போது நாம் காணப் போவது எல்லாரிடமும் கேள்விக்குறி ஆகி இருக்கும் "மோகினி" அவதாரம்.
தேவாசுர யுத்தத்தில் பாற்கடல் கடையப் பட்டது என்று சொல்வதுண்டு. இதன்
தாத்பரியம் என்ன என்றால் எப்படி நாம் தயிரைக் கடைந்தால் அதில் இருந்து
வெண்ணை திரண்டு வருகிறதோ, அது போல் நம் பக்தி என்னும் மத்தைக்
கொண்டு இறையருள் என்னும் கடலைக் கடைந்தோமானால் அதில் நமக்குக்
கிடைப்பது உண்மையான கடவுள் எனப்படும் பிரம்மம் என்னும் தத்துவம். சரியோ, தப்போ தெரியாது, நான் புரிந்து கொண்ட மாதிரிச் சொல்லி
இருக்கேன். நமக்கு ஏன் இப்படிச் சொல்லப் பட்டது என்றால் நாம் எல்லாருமே ஒரு வகையில் கதை கேட்பதில் ஆர்வம் உள்ளவர்கள். நம்ம கிட்டே போய் நீ ரொம்ப அசுர குணம் உள்ளவள், இப்படி இருக்காதே! என்று நேர்முகமாய்ச் சொன்னால் கேட்போமா? நிச்சயமாய் மாட்டோம். ஆகையால் இம்மாதிரிக் கதைகள் சொல்லி அதன் மூலம் நம்முடைய மூளைக்குள் பக்தி என்னும் விதை ஊன்றப் படுகிறது. இது கொஞ்சம் ஆழமாய்ப் போனால் தான் உண்மை என்னன்னு புரியும். நமக்குள்ளே உறைகிற இறை என்னும் சக்தி தென்படும். அதற்கு முதல்படி தான் இம்மாதிரிக்கதைகள்.
திருப்பாற்கடலைக் கடைந்த காலத்தில் அதில் இருந்து தோன்றிய அமிர்த
குடத்தை அசுரர்கள் கவர்ந்து கொண்டு போய் வைத்துக் கொண்டார்கள். உலகில் எல்லாமே சமமாய் இருக்க வேண்டும். ஒரு புல், பூண்டு, பூச்சி, புழு கூடத் தேவையில்லாமல் படைக்கப் படவில்லை. ஆங்கிலத்தில் இதை "ecological balance" என்று சொல்வதுண்டு. ஆகவே அசுரப் படைப்பும் தேவையே. அப்போது தான் தர்மம் என்ன வென்று விளங்கும். இது நம்மிடம் உள்ள அசுர குணங்கள் தான் என்றும் புரிந்து கொள்ள வேண்டும். அத்தகைய அசுர குணம் இருந்தால் உண்மையான பக்தி வளராது.
தேவர்கள் தேவியைத் தியானிக்க தேவி அவர்கள் முன் தோன்றினாள். விஷயம் தெரிந்த தேவியானவள் ஒரு அழகிய பெண்ணாக மாறி மோகினி என்ற பெயருடன் அசுரர் முன் தோன்றி ஆடிப் பாடி அசுரர்களை மயக்கி அமிர்த கலசத்தை வாங்கினாள். இங்கே ஒரு விஷயம் கவனிக்க வேண்டும். பிடிவாதக் காரக் குழந்தை கையில் கிடைத்த ஒரு முக்கியமான பொருளை மீட்க அந்தத் தாயானவள் எவ்வாறு கொஞ்சிக் கெஞ்சுவாள். அப்போது நாம் அந்தத் தாயைக் குறையா சொல்லுவோம்? குழந்தையை நல்வழிப் படுத்தத் தாய் செய்யும் யுக்தி என்று புரிந்து கொள்ள மாட்டோமா? அது போல் தான் இதுவும். அந்த மோகினி தான் ஈசனுடன் சேர்ந்து "சாஸ்தா" என்னும் ஹரிஹர புத்திரரை உண்டாக்கினாள். தர்மத்தை நிலைநாட்டவும், காவல் தெய்வமாகவும் போற்றப்படும் தர்ம சாஸ்தாவின் திரு அவதாரம் தான் "சபரிமலை ஸ்ரீ ஐயப்பன்." புராணங்களின் படி சாஸ்தா 2முறை திருமணம் ஆனவர். ஐயப்பன் நைஷ்டிக பிரம்மச்சாரி. இந்தக் கதைக்கு அப்புறமாய்ப் போவோம்.
இப்போ மீண்டும் தேவியின் 4வது அவதாரம்.தட்சன் தன் மாப்பிள்ளை ஆன ஈசனை அவமதித்து விட்டு யாகம் செய்தான். தட்சனின் மகளாய்ப் பிறந்த
தாட்சாயணியை ஈசன் மணந்திருந்தும் ஈசனை மதிக்காத தன் தகப்பனைக் கண்டு தேவி நியாயம் கேட்க அவனுடைய அகம்பாவம் பிடித்த செயலினால் மனது உடைந்து போய்த் தன் தேகத்தையே அந்த யாகத்தீயில் கொடுத்துத் தியாகம் செய்தாள் தாட்சாயணி. இது அவளுடைய 4-வது அவதாரம். சக்தியின் இந்த எரிந்த உடலைப் போட்டுக் கொண்டு ஈசன் கோபத்தில் ஆடிய நடனத்தால் சகல உலகங்களும் நிலை குலைய, அப்போது அங்கே வந்த விஷ்ணுவானவர் தன் சுதர்சன சக்கரத்தால் தேவியின் உடலைத் துண்டு துண்டாக அறுக்க அவை ஒவ்வொன்றும் இந்தப் பரந்த பாரதமெங்கும்
போய் வீழ்ந்தது. அவ்வாறு தேவியின் அங்கங்கள் வீழ்ந்த இடம் எல்லாம் ஒரு
"சக்தி பீடம்" ஆனது. இவ்வாறு அட்சர சக்தியின் பீடங்கள் 51 ஆனது. வட மொழி எழுத்தில் அட்சரங்கள் 51 என்பதாலும் இருக்கலாம்.
சக்தியை இழந்த ஈசன் தவத்தில் இருக்க உலகம் உய்யவும், மறுபடி இப்பூவுலகம் செழிக்கவும் விருப்பம் கொண்டு தேவாதி தேவர்கள் எல்லாரும் போய் மஹாவிஷ்ணுவை வேண்டி நிற்க அவர் சக்தியானவள் ஹிமராஜனின் புத்திரியாய் வளர்ந்து வருவதாயும் அவள் ஈசனைக்
குறித்துத் தவம் செய்து வருவதாயும், இருவரும் சேரவேண்டி மன்மதனைத்
துணைக்கழைக்க மன்மதனும் தன் பாணங்களால் ஈசனை எழுப்பக் கோபம்
வந்த ஈசன் தன் நெற்றிக் கண்ணால் மன்மதனை எரிக்கிறார். ஆனால் பின்னால் உண்மை உணர்ந்து கொண்டு மன்மதனுக்குச் சாப விமோசனம் கொடுக்கிறார். பின் பர்வத ராஜனின் புத்திரியான "பார்வதி"யைக் கல்யாணம் செய்து கொள்கிறார். சக்தியானவள் சிவசக்தி அம்சமாக ஒரு குமாரனைப் பெற்றுத் தன் சக்தியைத் திரட்டி "வேல்"ஆக்கிக் குமாரனுக்கு அளித்து "சூரன்" முதலான அசுரர்களை அழிக்க உதவி செய்கிறாள். இவளே "ஸ்ரீ லலிதா" ஆவாள்.
மன்மதன் எரிந்த சாம்பலில் இருந்து விஸ்வகர்மா உருவாக்கிய ஓர்
உருவம் ஈசரின் நோக்கினால் உயிர் பெறுகிறது. "பண்டாசுரன்" என்ற பெயர்
பெற்ற அவ்வுருவம் ருத்திர ரூபத்தில் கோபத்துடன் இருந்த ஈசனின் கோபா
அக்கினியின் பஸ்மத்தில் இருந்து உண்டானதால் மிகுந்த கோபத்துடன்
தேவர்களைப் பெரும்பாடு படுத்தினான். அப்போது தேவர்கள் எல்லாரும் கூடித் தங்களை "ஆத்மஹத்தி" செய்து கொண்டு ஒரு ஹோமம் செய்யவே அந்த ஹோமகுண்டத்தில் இருந்து ஸ்ரீசக்ர ரதத்தில் தோன்றியவளும் இவளே!
இவள்தான் தன்னுடைய சக்திகளை எல்லாம் பலவிதமான அம்சங்கள் கொண்ட கன்னியராக்கி பண்டாசுரனைச் சம்ஹாரம் செய்து விட்டு காமேஸ்வரன் என்று சொல்லப் படும் ஈசருடன் ஐக்கியம் ஆகி
இருக்கிறாள். பலவிதமான பெயர்கள், பலவிதமான அவதாரங்கள். இருந்தாலும்
எல்லாம் ஒரே சக்தி.
இப்போது என்னையே எடுத்துக் கொண்டால், என் கணவருக்கு மனைவி, என் பெற்றோருக்குப் பெண், என் சகோதரர்களுக்கு முறையே தங்கை, அக்கா, என் குழந்தைகளுக்குத் தாய், என் மைத்துனர், நாத்தனார்களுக்கு அண்ணன்
மனைவி. நான் ஒருத்தி தான் பலபேர் இல்லை அல்லவா? மேலும் நான்
முன் பிறவியில் என்னவாய் இருந்தேனோ தெரியாது அல்லவா? அடுத்ததாய்ப் பிறவி உண்டா அதுவும் தெரியாது அல்லவா? இந்தச் சிருஷ்டி ரகசியத்தை உண்டு பண்ணுகிறவளுக்குப் பல பேரும், பல அவதாரமும் இருக்கிறதில் என்ன தப்பு? இது நாமே ஏற்படுத்திக் கொண்டாலும்
நம்முடைய செளகரியத்துக்காக ஏற்படுத்திக் கொள்கிறோம். நமக்குப் பிடித்த சக்தியை நாம் வணங்குவோம். அவளுடைய அருளைப் பெறுவோம்.
நம்முடைய இந்திய நாட்டிலேயே நான்கு திசைகளிலும் அவள்
அருளாட்சி தான். வடக்கே காஷ்மீரத்தில் வைஷ்ணவியாகவும், கிழக்கே கல்கத்தாவில் காளியாகவும், மேற்கே மும்பையில் மஹாலட்சுமியாகவும், தெற்கே கன்னியாகுமரியில் பகவதியாகவும் ஆட்சி செய்கிறாள். இந்தத் தேசம் முழுதும் அவள் அருட்பார்வையின் கீழே தான் இருக்கிறது.
"நாரணனென்றுப் பழவேதம்-சொல்லும்
நாயகன் சக்தி திருப்பாதம்:
சேரத் தவம் புரிந்து பெறுவார் இங்குச்
செலவம் அறிவு சிவபோதம்.
ஆதி சிவனுடைய சக்தி-எங்கள்
அன்னை யருள் பெறுதல் முக்தி
மீதி உயிரிருக்கும்போதே-அதை
வெல்லல் சுகத்தினுக்கு யுக்தி!"
மஹா கவி பாரதியார் எழுதியது.
இன்னிக்குச் செவ்வாய்க்கிழமை, இது என்ன ஞாயிறுன்னு சொல்லிட்டு அடம் பிடிக்குது? இப்போவும் இந்தப் போஸ்ட் பின்னாலே 201, பிடிவாதமா முன்னாலே, ராமா, ராமா, ராமா காப்பாத்து, நீயே துணை! :D
ReplyDeleteபோய் அந்தச் சக்தியையே கேட்டுட்டு வரேன், வர்ட்டா?
வழக்கம் போல பிளாக்கருக்கும் உங்களை கண்டா மட்டும் தான் வம்பிழுக்கனும்னு தோணுது போல மேடம்..
ReplyDeleteபதிவுகள் வரிசையா போட்டு பட்டாசை கிளம்ப்புறீங்க மேடம்..கலக்குங்க
எல்லா சக்திகளும் அவளிடத்தில் அடக்கம் என்பதைத்தான் "பஞ்ச-ப்ரஹ்மாஸன-ஸ்திதாயை" என்று கூறுகிறார்கள்...அதாவது பிரம்ம-விஷ்ணு-ருத்ரன்-ஈசானன்-ஸதாசிவன் என்கிற பஞ்சப்ரம்மத்தை ஆஸனமாக உடையவள்...
ReplyDelete"பண்டாஸீர-வதோத்யுக்த-சக்தி-ஸேனா-ஸமன்விதா" - பண்டாஸீர வதத்திற்கு ரெடியாக இருக்கும் சேனைகளால் சூழப்பட்டிருப்பவள்.
"பண்டஸைன்ய-வதோத்யுக்த-சக்திவிக்ரம-ஹர்ஷிதா" - பண்டனை அழிப்பதில் வீரமாயிருக்கும் சேனைகளால் மகிழ்பவள்.
"பண்டபுத்ர-வதோத்யுக்த-பால-விக்ரம-நந்திதா" - பாலா த்ரிபுரசுந்தரி எனப்படும் அம்பிகையின் குழந்தையால் பண்டனின் புத்திரர்கள் அழிக்கப்படிவதைக் கண்டு ஆனந்தப்படுபவள்.
இங்கு பாலா லலிதையின் குழந்தை என கூறிப்பிடப்பட்டாலும் பாலாவின் தோற்றம் பற்றி எந்த குறிப்பீடும் பிரம்மாண்ட புராணத்திலோ அல்லது வேறெங்குமோ காணக்கிடைக்கவில்லை.
சாக்த மந்திரங்களில் முதலில் ஜெபத்திற்கு பாலா திரிபுரசுந்தரி மந்திரமே முதலில் எடுத்துக்கொள்ளப்படும், இதன் பிறகே, நவாஷரி போன்றவை.
"மந்திரிண்யம்பா-விரசித-விஷங்கவத-தோஷிதா" - மந்திரிணிதேவீ நடத்திய விஷங்க வதத்தால் ஸந்தோஷித்தவள். இங்கு விஷங்கம் என்பது விஷய ஆசையைக் குறிக்கும். இது போலவே இன்னுமொறு நாமம். அது,
"விசுக்ர-ப்ராணஹரண-வாராஹீ-வீர்ய-நந்திதா" - விசுக்ரனை கொன்ற வாராஹியின் வீர்யத்தை வாழ்த்துபவள். இங்கு விசுக்ரம் என்பது அஞ்ஞானத்தை கூறிப்பிடுவதாகக் கொள்ளலாம்). விசுக்ரனும்விஷங்கனும் பண்டனின் சகோதரர்களாக கூறப்படுகிறது.
"காமேஸ்வாரஸ்த்ர-நிர்தக்த-ஸபண்டாஸீர-சூன்யகா" - சிதக்னியாகிய காமேஸ்வர அஸ்திரத்தால் பண்டனையும் அவனது நகரமான சூன்யகத்தையும் அழித்தவள்..
இவ்வாறாக பண்டாசுர வதம் லலிதா சகஸ்ரநாமத்தில் பல இடங்களில் கூறப்பட்டிருக்கிறது....
கார்த்திக், என்னோட பதிவே என்னை மதிக்கிறதில்லை, இப்படி ஒரு நிலைமை எனக்கு! :D என்ன செய்யறது?
ReplyDelete@மதுரையம்பதி, பேசாமல் உங்க ப்ளாகிலே எழுத ஆரம்பிங்க. என்னை விட நீங்க நல்லாவே எழுதறீங்க. இங்கே வரவங்க எல்லாம் அங்கே வந்துடுவாங்க, அப்புறம் எனக்குத் தான் நஷ்டம் ஆகும். இருந்தாலும் பரவாயில்லை. எழுதுங்க.
அப்புறம் இந்த் ஸ்ரீ வித்யாவின் "தச மஹா வித்யை" பற்றிச் சரியாகத் தெரியாமல் எழுத வேண்டாம் என்று ஓர் நண்பர் கூறினார். அதான் ரொம்பவே விளக்கவில்லை. மேலும் நான் ஸ்ரீவித்யா மந்திர உபதேசமும் பெறவில்லை. ஓரளவு படிச்சுத் தெரிந்து கொண்டது தான். குரு மூலம் தெரிந்து கொள்ள வில்லை. "பாலா" விற்கு நெமிலியில் கோவில் இருக்கிறது. ஒரு வீட்டில் என நினைக்கிறேன். என் கணவர் ஒரு முறை தற்செயலாகப் போய்விட்டு வந்தார். எல்லாருக்கும் அழைப்பு வராது எனச் சொல்கிறார்கள். எனக்கு இன்னும் அழைப்பு வரவில்லை. ஆகவே "பாலா" பற்றி ஓரளவு தெரிந்தவர்களும் இருப்பார்கள் என நினைக்கிறேன். என்னிடம் பாலா பற்றிய புத்தகம் இருக்கிறதான்னு பார்க்கிறேன்.
கீதா மாமி,
ReplyDeleteநீங்கள் சொல்வது சரியே, சிலர் ஸ்ரீவித்யா/ஸ்ரீசக்ர உபாசகர்கள் மட்டும் தான் எழுத வேண்டும்/படிக்க வேண்டும் என்பர். நானும் ஒரு உபாசகன் என்பதால் மட்டுமல்ல, இதெல்லாமும் பதிவாக வேண்டும் என்பதால் அங்கங்கு குறிப்பிட விரும்புகிறேன்.
நீங்க சொல்வது/பதிவிடுவது போல எனக்கு தொடராக எழுதவராது. மேலும் தங்களைப் போல் எழுதுபவர்கள் என்போன்றவர்களுக்கு இடம் தருகையில் எதற்கு தனி பதிவெல்லாம்...ஹிஹிஹி......நீங்கள்
எழுதுங்கள், நான் அதில் பின்னூட்டமாக எனக்கு தெரிந்ததையும் சொல்கிறேன்.
enga inga nan potta commenta kaanom? pasikkudhuna commentaya saapiduvinga? :)
ReplyDelete