பழங்காலத்திலே முன்னோர்கள் கானகத்தை இருப்பிடமாய்க் கொண்டு வாழ்ந்து வந்த சமயத்திலே இறைவனது உருவ வழிபாடு ஆரம்பித்ததும், அந்த உருவத்தை ஏதேனும் ஒரு மரத்தடியில் எழுந்தருளச் செய்து வழிபட்டு வந்தார்கள். பின்னர் காடு கெடுத்து நாடு வளம் பெற்ற காலத்தில்,
இறைவனுக்காகக் கோயில்கள் கட்டி வழிபட ஆரம்பித்தனர். அப்போது
இறைவனை முதன் முதல் வழிபட்ட மரத்தைச் சுற்றியே அந்தக் கோயில்கள்
அமைக்கப் பட்டன. அந்த மரமே அந்த அந்தத் தலத்துக்குத் தலவிருட்சமாக
அமைந்தது. அப்படி இந்தத் தலத்துக்குத் தல விருட்சமாய் அமைந்தது
முல்லைக்கொடி ஆகும். இறைவன் முல்லைவன நாதனைப் பற்றிய வரலாறு
ஸ்கந்தபுராணத்தில் இருப்பதாய்க் கூறுகிறார்கள்.
முதன்முதல் பூஜித்தவர் பிரம்மா ஆகும். படைப்புக் கடவுள் ஆன பிரம்மா தன்
ஆணவத்தால் தொழில் கைகூடாது போக, இறை அருளால் இந்தக் கோவிலுக்கு வந்து இங்கே தென்மேற்கு மூலையில் தன் பெயரால் ஒரு தீர்த்தத்தை ஏற்படுத்தி முல்லைவன நாதரைப் பூஜித்துத் தன் தொழில் கைவரப் பெற்றார். பின் ஒரு முறை சுவர்ணாகரன் என்னும் வைசியன்
தீவினையின் காரணமாய்ப் பேயுரு அடைந்து கார்க்கிய முனிவரிடம் தஞ்சம்
அடைந்தான். கார்க்கிய முனிவர் அவனை இந்த ஊருக்கு அழைத்து வந்து பிரம்ம தீர்த்தத்தில் நீராட வைத்து முல்லைவன நாதருக்குப் பூஜைகள் செய்விக்கவும் அவன் பேயுரு நீங்க முல்லைவன நாதருக்கு முதல்முறையாகக் கோவில் அமைந்தது கார்க்கிய முனிவரால். பின் உடன்
இருக்கும் முனிவர்களின் சூழ்ச்சியால் பசுவதைப் பழிக்கு ஆளானார் கெளதம
முனிவர். போதாயன முனிவரின் அறிவுரைப்படி இங்கே வந்து முல்லைவனநாதரை வணங்கிப் பூஜித்த கெளதமர் தன் சாபம் தீர்ந்து மகிழ்ச்சி அடைந்தார். அவர் வழிபட்ட லிங்கம் "கெளதமேஸ்வரர்" என்னும் பெயருடன்
அம்மன் சன்னதியில் தனியாகக் கோயில் கொண்டுள்ளது.
சத்திய முனிவர் என்பவர் தவம் செய்யுங்கால், அவர் இருந்த வனத்திற்குள்
வேட்டையாட வந்த மன்னன் குஜத்துவனை முனிவர் தடுக்கிறார், இங்கே வேட்டை ஆடவேண்டாம் எனச் சொன்ன முனிவரை. மன்னன் அலட்சியம் செய்து வேட்டையாடப் புலியுருவைப் பெறுகிறான்,. பின்னர் முனிவரின் அருளால் முல்லைவனநாதரைப் பற்றி அறிந்து இங்கே வந்து நீராடிப்பூஜைகள் மேற்கொள்ளத் தன் சுய உருவை அடைகிறான் மன்னன். பின்னர் இங்கே இறைவனை வழிபடும் சிவாச்சாரியார்களுக்காக இல்லங்கள்
அமைத்துக் கொடுக்கிறான் மன்னன். வைகாசி மாதத்தில் பெருவிழாவையும்
தொடங்கி வைக்கிறான். பின்னர் சங்கு கர்ணன் என்னும் அந்தணகுமாரன் தன் குருவின் மகளை மணக்க மறுத்ததால் குருவின் சாபத்தால் பேயுருப் பெறத் தன் சாபவிமோசனத்துக்காக இந்த ஊர் வந்து வணங்க ஊர் எல்லையை அடையும்போதே பேயுரு நீங்கப் பெற மார்கழித் திருவாதிரைத் திருநாளில், இங்கே உள்ள பிரம்ம தீர்த்தத்தில் நீராடிப் பூஜைகள் செய்து நற்பேறு பெறுகிறான்.
நித்துருவர் என்னும் முனிவரும், அவர் மனைவி வேதிகையும் நீண்ட நாள்
குழந்தைப்பேறு இல்லாமல் முனிபுங்கவர்களுக்கும், ரிஷிகளுக்கும்
பணிவிடை செய்து அவர்கள் ஆசியால் குழந்தைப்பேறு உண்டாக சந்தோஷம்
அடைகிறார்கள். ஒருநாள் நிருத்துவர் மனைவியை ஆசிரமத்தில் விட்டுவிட்டு
வெளியே சென்றிருந்த நேரத்தில் "ஊர்த்துவ பாதர்" என்னும் முனிவர் பிட்சைக்கு அங்கே வர, வேதிகைப் பிரசவ வேதனையில் மயக்கமுற்றிருந்தாள். இதை அறியாத முனிவர் தன்னை அவள்
கவனிக்கவில்லை என அவளை நோய் பீடிக்கவேண்டும் எனச் சாபம் இட, அந்த நோய் பீடித்த காரணத்தால் வேதிகையின் கர்ப்பத்திற்குப் பங்கம் நேருகிறது. செய்வது அறியாது தவித்த வேதிகை முல்லைவன நாதரையும், அம்பிகையையும் வேண்டித் துதிக்க அம்பிகை அவள் பால் கருணை
கொண்டு கர்ப்பத்தைத் தன் தெய்வீகக் கலசம் உள்ள குடத்தில் வைத்துப்
பாதுகாக்கிறாள். உரிய நேரம் வந்ததும் குழந்தை பிறக்கிறது. நோயால் பீடிக்கப்
பட்ட வேதிகைக்குக் குழந்தைக்குப் பாலூட்ட முடியவில்லை. அம்பிகை
உடனேயே காமதேனுவை அழைக்க அதுவும் வந்து தன் பாலைச் சொரிந்து
குழந்தையைக் காக்கிறது. மேலும் தன் கால் குளம்பினால் சுரண்டிப் பால்குளம் அமைத்தும் கொடுக்கிறது. க்ஷீரக்குளம் என்ற பெயரில் அது உள்ளது. பின் திரும்பி வந்த நிருத்துவர் செய்திகள் அறிந்து தன்
மனைவியுடன் இறைவனையும் இறைவியையும் வணங்கித் துதித்துத்
தங்களையும், தங்கள் குழந்தையையும் காத்து அருளியவாறே இந்த ஊரில் உள்ள பெண்களின் கர்ப்பங்களையும், இங்கே வந்து வேண்டிக் கொள்ளுபவர்களுக்கும், மற்றும் இறைவியை மனதால் நினைப்பவர்களுக்கும் கர்ப்பத்தைக் காத்து அருளுமாறு கேட்டுக் கொள்ள அவ்வாறே
அருளுகிறார்கள் ஐயனும், அன்னையும்.
உள்ளேன் தலைவி....
ReplyDelete