எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Wednesday, February 28, 2007

221. பாரதிக்கா அச்சம்?

மணிப்ரகாஷ் கேட்ட கேள்வி என்னோட மனசை உறுத்திட்டே இருந்தது. அவர் சொன்னது: "உங்களுக்கு நல்ல ஆசிரியர் கிடைச்சாங்க. நல்லா எடுத்துச் சொல்லிப் புரிய வச்சாங்க. நல்லாப்புரிஞ்சது. எங்களுக்கு அப்படிக் கிடைக்கலை. தவிர எந்தச் சந்தர்ப்பத்தில் பாரதி இந்தப் பாடல்களப் பாடினார், கவிதை ஊற்று எப்படி எல்லாம் பெருக்கெடுத்து ஓடியது போன்ற விவரம் தெரியாமல் சும்மா தேர்வுக்காகப் படிச்சுத் தான் எழுதினோம்" னு சொல்கிறார். தவிர முத்தமிழ்க் குழுமத்தில் "வேந்தன்" வேறே பாரதிக்குப் பயம் அவனோட அச்சத்தைத் தான் இப்படி வெளிக்காட்டிக் கொண்டிருக்கிறான் என்று என்னுடன் மூன்று நாளாக விவாதம். 2 நாளாய் மனசில் யோசனை ஓடிக்
கொண்டே இருந்தது. அப்போது தெளிவுக்காக வழக்கமாய் எடுக்கும்
பாரதியின் புத்தகங்களான கவிதைத் தொகுப்புக்குப் பதில் நான் எடுத்தது
தங்கம்மாள் பாரதியின் "பாரதியும் கவிதையும்" என்ற புத்தகம். சரி,
பரவாயில்லை எனப் பிரித்தால் 2வது கட்டுரையே நம் கேள்விக்குப் பதில்.

இப்போ இந்தப் புத்தகம் பற்றி ஒரு சிறு அறிமுகம். தங்கம்மாள் பாரதி, தேசீயக் கவி சுப்பிரமணிய பாரதியாரின் மூத்த மகள் ஆவார். இவர் பாரதியைப் பற்றிச் சில புத்தகங்கள் எழுதி உள்ளார். தன் தகப்பானாரான பாரதியின் சில அனுபவங்களையும், அவர் எழுதிய சில
முக்கியமான கவிதைகளைப் பற்றியும் கூறி இருக்கும் இவர் அது எழுதப் பட்ட சந்தர்ப்பத்தையும் கூறி இருக்கிறார். அநேகமாய்ப் பாரதி புதுச்சேரியில் வசித்த நாட்களில் நடந்த சம்பவங்களையே இந்தப் புத்தகம் விவரிக்கிறது. இந்தப் புத்தகம் "காரைக்குடி, புதுமைப் பதிப்பகம் லிமிடெட்" ஆல் வெளியிடப்பட்டது. அச்சிட்டது "சாது ப்ரஸ், ராயப்பேட்டா, சென்னை".
வெளியிட்ட வருஷம் மார்ச் மாதம் 1947ம் வருஷத்தில். எனக்குக் கிடைத்தது பழைய புத்தகக் கடையில் பள்ளி நாட்களில். அப்போது இருந்தே இந்தப் புத்தகத்தை அவ்வப்போது படித்து வந்தாலும் இந்தக் கவிதை எழுதும்போது நினைவுக்கு வரவில்லை. எப்படி மறந்தேன் என்று புரியவில்லை. பின் யோசனையுடன் 2 நாட்களாய்த் தேடிய புத்தகங்களில் இந்தக் கவிதை எழுதிய சூழ்நிலை பற்றிய சான்று தேடும்போது கிடைத்தது. பிரிக்கவும் கிடைத்தது சான்றோடு முழுக் கவிதையும்.

பாரதியார் புதுச்சேரியில் இருக்கும்போது பாடப் பட்டதாய்க் கூறுகிறார் ஸ்ரீமதி
தங்கம்மாள் பாரதி இந்தக் கவிதையை. அவர் கூறும் வார்த்தைகளிலேயே:

"ஒருநாள் சென்னையில் இருந்து சில நண்பர்கள் தந்தையாரைப் பார்க்க
வந்தார்கள். அதில் இருவர் "ஆங்கில பாஷையிலும்" "சயன்ஸிலும்" மோகம்
கொண்டவர்கள். கிணற்றடியில் அப்போது தந்தை ஸ்நாநம் செய்து கொண்டிருந்தார். நண்பர்கள் மாடியிலிருந்து சம்பாஷித்துக் கொண்டிருந்தனர்.

முதலாவது நண்பர்:- என்னப்பா? பாரதியாருக்குத் தமிழில் மோகம் அதிகமாமே! தமிழில் என்ன இருக்கிறது? கருத்துக்களை ஆங்கிலத்தில் சொல்வது போல, தமிழில் சொல்ல முடியவில்லை. அதற்கேற்ற அழகான சொல் தமிழ் மொழியில் ஏது?

இரண்டாம் நண்பர்:- அது மட்டுமா? "ஸயன்ஸ்" எத்தனை உயர்ந்தது? தமிழில்
இருக்கிறதா? வெள்ளைக்காரன் எப்படியிருந்தாலும் கெட்டிக்காரன்.
எத்தனை புதிய மெஷின்கள்! எத்தனை கருவிகள்! எத்தனை வஸ்துக்கள்
கண்டுபிடித்திருக்கிறார்கள்! எத்தனை சாஸ்திரங்கள் கற்கிறார்கள்!

முதலாவது நண்பர்:- ஆமாம். இன்னும் சிறிது நாளைக்குள் மேற்கு தேசத்துப்
பாஷைகள் நாடெங்கும் விரிந்து பரவிவிடும். தமிழ் ஒளிமங்கி மறைந்து
விடும்.

இரண்டாம் நண்பர்:- ஆம், ஒருவரும் அதில் சிரத்தை இல்லாமலிருந்தால்
விரைவில் அழிந்து விடும்."

மேலே கூறிய சம்பாஷணைகளை மெளனமாகக் கேட்டுக் கொண்டிருந்தார்
அப்பா. கேட்டவுடன் கண்களிலிருந்து கண்ணீர் தாரை தாரையாய்ப் பெருகிற்று. தனக்குள்ளாகவே பேசிக் கொண்டார்.

"ஆம், வாஸ்தவம் தான். தாயை மதியாத நம் தமிழனின் அசிரத்தையால் தமிழ்
அழியும். கோழைகளே! பழம்பெருமையோடு திருப்தியடைந்து,
உண்பதும் உறங்குவதுமாகக் காலங்கழிக்கிறீர்களே! என்ன கொடுமை!
ஒருவனாவது நாட்டு நிலைமையைப் பற்றி யோசிக்கிறானா! நமது நிலை இத்தனை கீழ்த்திசை யடைந்திருக்கிறதே என்று சிந்தித்துப் பார்க்கிறானா? தாய்மொழியில் பேசுவது எழுதுவதும் கேவலமென்று கருதி
தெரியாத ஆங்கிலத்தில் உளறினாலும் மதிப்பு என்று நினைக்கிறார்கள்! சேர,
சோழ, பாண்டியர்கள் போற்றி வளர்த்த தமிழின் பெருமையை அறியாத பேதைகள்! இலக்கிய வளர்ச்சியில் ஒருவரது மூளையும் செல்வதில்லை. பிழைப்புக்காகக் கட்டாயமாக ஆங்கிலம் கற்று அதிலுள்ள சுவையைப் புகழ்கிறார்களே! "

இவ்விதம் புலம்பிப் பின் மாடியிலுள்ள நண்பர்களிடம் சென்றார். "தம்பிமாரே! என்ன சொன்னீர்கள் நம் தாய்மொழியைப் பற்றி? மெல்ல மெல்லத் தமிழ் இறந்து விடும் என்கிறீர்கள்! ஒருநாளும் அவ்விதம் ஆகாது. தமிழ்மொழி மங்காது. இன்னும் சிறிது காலத்தில் தமிழர்கள் விழித்தெழுவார்கள். அப்போது தமிழ் மொழி புதுமைப் பொலிவுடன் பிரகாசிக்கும். இதோ கேளுங்கள்! ;தமிழ்த் தாய் தோன்றிய விதம் யாரும் அறியார்கள்! '
என்று கூறிவிட்டுப் பாட ஆரம்பிக்கிறார்.

"யாவரும் வகுத்தற்கரிய பிராயத்தள்
ஆயினுமே எங்கள் தாய்- இந்தப்
பாருளெந் நாளுமோர் கன்னிகை யென்னப்
பயின்றிடுவாள் எங்கள் தாய்-" எங்கள் தாய்!"

என்று கூறி விட்டுக் "கேளுங்கள், சகோதரரே! தமிழ்த் தாய் கூறுவதைக்
கேளுங்கள்!" என்று கோபமும், ஆத்திரமும்,சோகமும் கலந்த குரலில்
பாடுகிறார் தமிழ்த் தாயின் வேண்டுகோள் நிறைந்த பாடலை. அதை ஏற்கெனவே "மெல்லத் தமிழினிச் சாகும்" பதிவில் வெளியிட்டிருக்கிறேன். வேந்தரே! பாரதியா அஞ்சுகிறவன்? :-P

220. கரு காத்தருளும் நாயகி-2

பழங்காலத்திலே முன்னோர்கள் கானகத்தை இருப்பிடமாய்க் கொண்டு வாழ்ந்து வந்த சமயத்திலே இறைவனது உருவ வழிபாடு ஆரம்பித்ததும், அந்த உருவத்தை ஏதேனும் ஒரு மரத்தடியில் எழுந்தருளச் செய்து வழிபட்டு வந்தார்கள். பின்னர் காடு கெடுத்து நாடு வளம் பெற்ற காலத்தில்,
இறைவனுக்காகக் கோயில்கள் கட்டி வழிபட ஆரம்பித்தனர். அப்போது
இறைவனை முதன் முதல் வழிபட்ட மரத்தைச் சுற்றியே அந்தக் கோயில்கள்
அமைக்கப் பட்டன. அந்த மரமே அந்த அந்தத் தலத்துக்குத் தலவிருட்சமாக
அமைந்தது. அப்படி இந்தத் தலத்துக்குத் தல விருட்சமாய் அமைந்தது
முல்லைக்கொடி ஆகும். இறைவன் முல்லைவன நாதனைப் பற்றிய வரலாறு
ஸ்கந்தபுராணத்தில் இருப்பதாய்க் கூறுகிறார்கள்.

முதன்முதல் பூஜித்தவர் பிரம்மா ஆகும். படைப்புக் கடவுள் ஆன பிரம்மா தன்
ஆணவத்தால் தொழில் கைகூடாது போக, இறை அருளால் இந்தக் கோவிலுக்கு வந்து இங்கே தென்மேற்கு மூலையில் தன் பெயரால் ஒரு தீர்த்தத்தை ஏற்படுத்தி முல்லைவன நாதரைப் பூஜித்துத் தன் தொழில் கைவரப் பெற்றார். பின் ஒரு முறை சுவர்ணாகரன் என்னும் வைசியன்
தீவினையின் காரணமாய்ப் பேயுரு அடைந்து கார்க்கிய முனிவரிடம் தஞ்சம்
அடைந்தான். கார்க்கிய முனிவர் அவனை இந்த ஊருக்கு அழைத்து வந்து பிரம்ம தீர்த்தத்தில் நீராட வைத்து முல்லைவன நாதருக்குப் பூஜைகள் செய்விக்கவும் அவன் பேயுரு நீங்க முல்லைவன நாதருக்கு முதல்முறையாகக் கோவில் அமைந்தது கார்க்கிய முனிவரால். பின் உடன்
இருக்கும் முனிவர்களின் சூழ்ச்சியால் பசுவதைப் பழிக்கு ஆளானார் கெளதம
முனிவர். போதாயன முனிவரின் அறிவுரைப்படி இங்கே வந்து முல்லைவனநாதரை வணங்கிப் பூஜித்த கெளதமர் தன் சாபம் தீர்ந்து மகிழ்ச்சி அடைந்தார். அவர் வழிபட்ட லிங்கம் "கெளதமேஸ்வரர்" என்னும் பெயருடன்
அம்மன் சன்னதியில் தனியாகக் கோயில் கொண்டுள்ளது.

சத்திய முனிவர் என்பவர் தவம் செய்யுங்கால், அவர் இருந்த வனத்திற்குள்
வேட்டையாட வந்த மன்னன் குஜத்துவனை முனிவர் தடுக்கிறார், இங்கே வேட்டை ஆடவேண்டாம் எனச் சொன்ன முனிவரை. மன்னன் அலட்சியம் செய்து வேட்டையாடப் புலியுருவைப் பெறுகிறான்,. பின்னர் முனிவரின் அருளால் முல்லைவனநாதரைப் பற்றி அறிந்து இங்கே வந்து நீராடிப்பூஜைகள் மேற்கொள்ளத் தன் சுய உருவை அடைகிறான் மன்னன். பின்னர் இங்கே இறைவனை வழிபடும் சிவாச்சாரியார்களுக்காக இல்லங்கள்
அமைத்துக் கொடுக்கிறான் மன்னன். வைகாசி மாதத்தில் பெருவிழாவையும்
தொடங்கி வைக்கிறான். பின்னர் சங்கு கர்ணன் என்னும் அந்தணகுமாரன் தன் குருவின் மகளை மணக்க மறுத்ததால் குருவின் சாபத்தால் பேயுருப் பெறத் தன் சாபவிமோசனத்துக்காக இந்த ஊர் வந்து வணங்க ஊர் எல்லையை அடையும்போதே பேயுரு நீங்கப் பெற மார்கழித் திருவாதிரைத் திருநாளில், இங்கே உள்ள பிரம்ம தீர்த்தத்தில் நீராடிப் பூஜைகள் செய்து நற்பேறு பெறுகிறான்.

நித்துருவர் என்னும் முனிவரும், அவர் மனைவி வேதிகையும் நீண்ட நாள்
குழந்தைப்பேறு இல்லாமல் முனிபுங்கவர்களுக்கும், ரிஷிகளுக்கும்
பணிவிடை செய்து அவர்கள் ஆசியால் குழந்தைப்பேறு உண்டாக சந்தோஷம்
அடைகிறார்கள். ஒருநாள் நிருத்துவர் மனைவியை ஆசிரமத்தில் விட்டுவிட்டு
வெளியே சென்றிருந்த நேரத்தில் "ஊர்த்துவ பாதர்" என்னும் முனிவர் பிட்சைக்கு அங்கே வர, வேதிகைப் பிரசவ வேதனையில் மயக்கமுற்றிருந்தாள். இதை அறியாத முனிவர் தன்னை அவள்
கவனிக்கவில்லை என அவளை நோய் பீடிக்கவேண்டும் எனச் சாபம் இட, அந்த நோய் பீடித்த காரணத்தால் வேதிகையின் கர்ப்பத்திற்குப் பங்கம் நேருகிறது. செய்வது அறியாது தவித்த வேதிகை முல்லைவன நாதரையும், அம்பிகையையும் வேண்டித் துதிக்க அம்பிகை அவள் பால் கருணை
கொண்டு கர்ப்பத்தைத் தன் தெய்வீகக் கலசம் உள்ள குடத்தில் வைத்துப்
பாதுகாக்கிறாள். உரிய நேரம் வந்ததும் குழந்தை பிறக்கிறது. நோயால் பீடிக்கப்
பட்ட வேதிகைக்குக் குழந்தைக்குப் பாலூட்ட முடியவில்லை. அம்பிகை
உடனேயே காமதேனுவை அழைக்க அதுவும் வந்து தன் பாலைச் சொரிந்து
குழந்தையைக் காக்கிறது. மேலும் தன் கால் குளம்பினால் சுரண்டிப் பால்குளம் அமைத்தும் கொடுக்கிறது. க்ஷீரக்குளம் என்ற பெயரில் அது உள்ளது. பின் திரும்பி வந்த நிருத்துவர் செய்திகள் அறிந்து தன்
மனைவியுடன் இறைவனையும் இறைவியையும் வணங்கித் துதித்துத்
தங்களையும், தங்கள் குழந்தையையும் காத்து அருளியவாறே இந்த ஊரில் உள்ள பெண்களின் கர்ப்பங்களையும், இங்கே வந்து வேண்டிக் கொள்ளுபவர்களுக்கும், மற்றும் இறைவியை மனதால் நினைப்பவர்களுக்கும் கர்ப்பத்தைக் காத்து அருளுமாறு கேட்டுக் கொள்ள அவ்வாறே
அருளுகிறார்கள் ஐயனும், அன்னையும்.

Tuesday, February 27, 2007

219. கரு காத்தருளும் நாயகி

ஊத்துக்காட்டில் இருந்து திருக்கருகாவூர் சென்றோம். சாலை ரொம்பவே மோசம். ரொம்பக் குறுகல் மட்டும் இல்லாமல் செப்பனிடப் படாத சாலைகள். சில இடங்களில் இப்போது தான் சாலை போட ஆரம்பித்து உள்ளார்கள். ஆகவே சற்றுச் சுற்றிக் கொண்டு போக வேண்டி இருந்தது. வயல்களில் நெல் அறுப்புக்குத் தயாராக இருந்தது. சற்றே காய்ந்த வயல்கள். சில இடங்களில் பயறு, உளுந்து தெளிப்பு நடந்து கொண்டிருந்தது. தஞ்சை ஜில்லாவில்
தை மாதம் அறுப்பு முடிந்தால் பிறகு தண்ணீர் வந்தால் தான் நடவு வேலை
பார்க்க முடிகிறது. இதுவே மதுரைப் பக்கம் பெரியாறுப் பாசனம் என்றாலோ,
திருநெல்வேலிப் பக்கம் தாமிரபரணிப் பாசனம் என்றாலோ மூன்று போகமும்
நெல் போடுவார்கள். இப்போ மதுரைப்பக்கம் மூன்று போகம் போட
முடிவதில்லை என என் உறவினர் சொல்கிறார்கள். திருநெல்வேலியில் இன்று வரை மூன்று போகமும் நெல் போடுகிறார்கள். மதுரைப்பக்கம்
தானியங்கள் போடவென்றே "புஞ்சைக்காடு" தனியாக ஒதுக்கப் பட்டிருக்கும். இங்கே மாதிரி நன்செய் வயல்களிலேயே போட மாட்டார்கள். அது பத்தி இந்தப்பதிவு இல்லை. :D

திருக்கருகாவூர் கும்பகோணத்தில் இருந்து தென்மேற்கே உள்ளது. கோவில் மிகப் பழமை வாய்ந்த கோவில் என்கிறார்கள். பல முனிவர்களும், ரிஷிகளும் பூஜித்து வந்திருக்கிறார்கள். பஞ்ச ஆரண்யத் தலங்களில் முதல் தலமாகவும் உள்ளது. இங்கே தல விருட்சம் முல்லை. முல்லைவனமாக இருந்த இடத்தில்
இறைவன் சுயம்புவாகப் புற்று மண்ணினால் லிங்க வடிவாய்த் தானாக ஏற்பட்டான் என்றும், முல்லைக் கொடிகள் சுற்றிக் கொண்டிருந்த காரணத்தால் இறைவனின் திருநாமம், "முல்லைவன நாதர்" எனவும்
கூறுகிறார்கள். முல்லைக்கொடி சுற்றிய அடையாளம் லிங்கத் திருமேனியில்
இன்னும் காணப்படுகிறதாயும் சொல்கிறார்கள். அலங்காரம் செய்திருந்ததால் நம்மால் பார்க்க முடிவதில்லை. இறைவனுக்கு அபிஷேஹம் செய்வது கிடையாது. அபிஷேஹப்பிரியரான சிவனுக்கு இங்கே அபிஷேஹத்திற்குப் பதில் புனுகு சாத்துகிறார்கள். இந்தப் புனுகு சார்த்துதல் பக்தர்களின் வேண்டுகோள் படியும் நிறைவேற்றப் படுகிறது. புனுகு சார்த்த முறைப்படி கோவிலில் பணம் கட்டிவிட்டால் நாம் சொல்லும் நாள் அன்று புனுகு சார்த்திப்பிரசாதம் அனுப்புவார்கள், அல்லது நாமே அங்கே போய் புனுகு
சார்த்தச் சொல்லியும் தரிசிக்கலாம். இறைவியின் திருநாமம் கர்ப்பரட்சாம்பிகை" அல்லது "கரு காத்த நாயகி" ஆகும். இவள் காலடியில் வந்து வேண்டிக் கொண்டால் கர்ப்பிணிப் பெண்களின் பிரசவம் நல்லபடியாக முடியும் எனவும், இங்கே வந்து வேண்டிக் கொள்பவர்களுக்குக் குழந்தை பிறக்கும் எனவும் ஐதீகம் இருக்கிறது. இறைவன் சன்னதிக்கும், இறைவி சன்னதிக்கும் நடுவே அருமைப்புதல்வன் ஆன "கந்தன்" சன்னதி உள்ளது. தன்னிரு மனைவியருடன் காட்சி அளிக்கிறான் தமிழ்க்கடவுள் ஆன கந்த
வேள். ஆகவே இந்தக் கோவில் "சோமாஸ்கந்த" வடிவிலும் இருக்கிறபடியால் மேலும் சிறப்பு வாய்ந்தது. "சோ" எனப்படும் சிவஸ்வரூபமும், "ஸ்கந்தன்" எனப்படும் கந்த ஸ்வரூபமும், "உமா" எனப்படும் சக்தி ஸ்வரூபமும்
ஒருங்கே இணைந்த இந்தக் கோவிலில் தரிசிப்பவர்களுக்குப் பிள்ளை
இல்லாதவர்க்குப் புத்திரப் பேற்றையும், கருவைக் காத்தருளுகிற அம்பிகையின் அருளும் கிடைக்கிறது. சத்தாகிய சிவனும், சித்தாகிய அம்பாளும், ஆனந்தமாகிய ஆறுமுகனும் இணைந்து நமக்கெல்லாம்
சச்சிதானந்தனாக அருள் பாலிக்கிறார்கள். அப்பர், சுந்தரர், திருஞானசம்மந்தர்
ஆகியோர் இந்த இறைவனைத் துதித்து இயற்றிய சில பாடல்கள் தேவாரத்திலும், திருத்தாண்டவத்திலும் உள்ளன. இனி இந்தக் கோயிலின் தல வரலாறு, நாளை காண்போமா?

Monday, February 26, 2007

218. மெல்லத் தமிழினிச் சாகும்?!!!!!!

இன்னைக்கு எழுத நினைச்சது என்னவோ திருக்கருகாவூர் பத்தித் தான். ஆனால் ஜீவா வெங்கட்ராமனின் பதிவைப் பார்த்ததும் அதில் வல்லி விளக்கம் கேட்டிருந்ததும் உடனேயே தெரிந்த ஒரு விஷயத்தை எழுதறது சுலபம்னு எழுத ஆரம்பிச்சுட்டேன். பாரதியார் "மெல்லத் தமிழினிச் சாகும்" னு சொன்னதாகப் பலபேர் சொல்லிக்கொண்டும் எழுதிக் கொண்டும் இருக்கிறார்கள். உண்மையில் அவர் எழுதினதின் நோக்கமே வேறே.
அதிலே அந்தக் குறிப்பிட்ட வார்த்தைகளை மட்டும் எடுத்துக் கையாளுவது சற்றுச் சுலபமாக அமைந்து விட்டது நம் எல்லாருக்கும்.
"யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி
போல் இனிதாவது எங்கும் காணோம்" என்றும்,

"தேமதுரத் தமிழோசை உலகமெலாம்பரவும் வகை செய்தல் வேண்டும்"
என்றும்,

"யாமறிந்த புலவரிலே கம்பனைப் போல்,
வள்ளுவன் போல், இளங்கோ போல்,
பூமிதனில் யாங்கணுமே பிறந்ததில்லை,
உண்மை வெறும் புகழ்ச்சியில்லை:
ஊமையராய்ச் செவிடர்களாய்க் குருடர்களாய்
வாழ்கின்றோம், ஒரு சொற் கேளீர்!
சேமமுற வேண்டுமெனில் தெருவெல்லாம்
தமிழ் முழக்கம் செழிக்கச் செய்வீர்!"
என்றெல்லாம் கூறியவர் அவர்.

பாரதிக்கு இருந்த ஒன்றுபட்ட, ஒருமித்த கண்ணோட்டத்தை யாரும் புரிந்து
கொள்ளவில்லை. விடுதலைப் பாடலில் கூட மூன்று முறை "விடுதலை! விடுதலை! விடுதலை! என்று கூறுவது அரசியல், சமூகம் மற்றும் பொருளாதாரம் எல்லாவற்றிலும் நாம் விடுதலையடைய வேண்டும் என்பதினால் தான். "திறமை கொண்ட தீமையற்ற தொழில் புரிந்து"
யாவரையும் நாட்டை உயர்த்தச் சொன்னவன் பாரதி. அப்படிப் பட்ட பாரதி
தமிழ் மொழி சாகவேண்டும் என்று சொல்லமாட்டார் இல்லையா? உண்மையில் அவன் சொன்னது என்னவெனில், தன் மக்களைப் புதிய சாத்திரம் படைக்கவேண்டித் தமிழ்த்தாய் கேட்பதாக அமைந்த அந்தப் பாடலில் இருந்து சில வரிகள் பின்வருமாறு:

"கன்னிப்பருவத்திலே அந்நாள்-என்றன்
காதில் விழுந்த திசைமொழி எல்லாம்
என்னென்னவோ பெயருண்டு-பின்னர்
யாவும் அழிவுற்று இறந்தன கண்டீர்!

தந்தை அருள் வலியாலும்-முன்பு
சான்ற புலவர் தவ வலியாலும்
இந்தக் கணமட்டும் காலன் - என்னை
ஏறிட்டுப் பார்க்கவும் அஞ்சி இருந்தான்


இன்றொரு சொல்லினைக் கேட்டேன் - இனி
ஏது செய்வேன்? எனதாருயிர் மக்காள்!
கொன்றிடல் போலொரு வார்த்தை-இங்கு
கூறத் தகாதவன் கூறினான் கண்டீர்!

"புத்தம் புதியகலைகள்-பஞ்ச
பூதச் செயல்களின் நுட்பங்கள் கூறும்
மெத்த வளருது மேற்கே-அந்த
மேன்மைக்கலைகள் தமிழினில் இல்லை

சொல்லவும் கூடுவதில்லை-அவை
சொல்லுந்திறமை தமிழ்மொழிக்கில்லை
மெல்லத் தமிழினிச் சாகும் -அந்த
மேற்கு மொழிகள் புவிமிசை யோங்கும்"

என்றந்தப் பேதை யுரைத்தான் - ஆ!
இந்த வசை எனக்கெய்திடலாமோ?
சென்றிடுவீர் எட்டுத் திக்கும் -கலைச்
செல்வங்கள் யாவுங் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்!

தந்தை அருள் வலியாலும் -இன்று
சார்ந்த புலவர் தவ வலியாலும்
இந்தப் பெரும்பழி தீரும்-புகழ்
ஏறிப் புவிமிசை என்றும் இருப்பேன்."

இது தான் பாரதி சொன்னது. இந்தக் கவிதையில் முதல் ஐந்து செய்யுள்களை
விட்டு விட்டு மற்றவற்றை அப்படியே கொடுத்துள்ளேன். இதற்கு மேலும் விளக்கம் நான் சொல்ல வேண்டாம் என்று நினைக்கிறேன். அப்புறம் கவிதை
"பாரதியார் கவிதைத் தொகுப்பை"ப் பார்த்துத் தான் எழுதி இருக்கிறேன்.
எனக்குப் படித்தது ஓரளவுக்கு நினைவிருந்தது, ஆனால் கவிதை முழுதும்
தவறு செய்யாமல் எழுத வேண்டும் என்பதால் பார்த்தே தான் எழுதி
இருக்கேன். பாரதிக்கு இருந்த ஒன்றுபட்ட ஒருமித்த கண்ணோட்டம் இன்றைய நாட்களில் மிக மிக அரிதாக உள்ளது. சுதந்திரத்துக்காகப் பள்ளுப் பாடிய பாரதி, "ஆனந்த சுதந்திரம் அடைய"த் தான் பாடினான். நாம் பெற்றது ஆகஸ்ட் சுதந்திரம். அதைத் தான் நாம் கொண்டாடுகிறோம். இன்னும் சொல்லப் போனால் ஆகஸ்ட் சுதந்திர நன்னாளிலோ அல்லது இந்தியா என்று சுதந்திரம் அடைகிறதோ அன்று தலை நகர் டெல்லியில் செங்கோட்டையில் பிரதம மந்திரி கொடி ஏற்ற வேண்டும் என்று
முதன் முதல் சொன்னவரே "நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்" அவர்கள் தான்.
நாம் பாரதியையும் புரிந்து கொள்ள வில்லை. நேதாஜியையும் புரிந்து கொள்ள
வில்லை. ஆகவே தான் நள்ளிரவில் பெற்ற சுதந்திரத்துக்கு இன்னும் விடியவில்லை.

Sunday, February 25, 2007

217. அலை பாயுதே கண்ணா!

இந்த மாதம் 8-ம் தேதி கும்பகோணம் போனதும் ஹோட்டலில் இருந்து கிளம்பி திருக்கருகாவூர் போக ஆட்டோ பிடித்தோம். போகிற வழியில் தான்
ஊத்துக்காடு என்பதாலும், அங்கே உறவினர் இருப்பதாலும் அங்கே போகிற
எண்ணமும் இருந்தது. ஊத்துக்காட்டில் உறவினர் இருந்தாலும் இவ்வளவு நாள் நான் போனதில்லை. கும்பகோணத்திலேயே இப்போத் தான் சில வருடங்களாய்த் தங்கிக் கொண்டு கோவில்கள் பார்க்கப் போகிறோம். முன்னால் எல்லாம் மாமியார், மாமனார் ஊரில் இருந்த சமயம் ஊருக்குப் போகும்போது ரெயில்வே ஸ்டேஷனில் இருந்து அப்படியே டவுன் பஸ் பிடித்து ஊருக்குப் போனால் திரும்ப நாங்கள் இருக்கும் ஊர் திரும்பும் சமயம் தான் மறுபடி கும்பகோணம் ரெயில்வே ஸ்டேஷனைப் பார்க்க முடியும். அதுக்குப்பிந்தைய நாட்களில் இரவுப் பேருந்தில் கிளம்பிக் காலை கும்பகோணம் போய் அங்கிருந்து ஆட்டோ வைத்துக் கொண்டு ஊருக்குப் போய்க் குலதெய்வ வழிபாட்டை முடித்துக் கொண்டு திரும்ப ஒரு மணிக்குக் கும்பகோணம் பேருந்து நிலையத்தில் இருந்து கிளம்பும் சென்னை
பஸ்ஸில் திரும்பிக் கொண்டிருந்தோம். அப்புறம் பையனோ, பெண்ணோ வந்தால் அவங்களுக்காக வாடகைக் கார் ஏற்பாடு செய்து போய் விட்டு வருவோம். இப்போச் சில வருடங்களாய் ஒரு 2 நாளாவாது தங்கி எல்லா இடமும் பார்க்கலாம் என்று பார்த்து வருகிறோம்.

ஊத்துக்காடு அந்த ஊர்க்கோவிலுக்கு மட்டுமில்லாமல் "வேங்கடகவி"யின்
பாடல்களுக்கும் பிரசித்தி பெற்றது. அவருடைய பாடல்கள் எல்லாம் சுத்தத்
தமிழில் ஆனவை. அலை பாயுதே கண்ணா, பால் வடியும் முகம் நினைந்து,
தாமரை பூத்த தடாகமடி, ஆடாது அசங்காது வா," போன்ற பாடல்களின்
வரிகள் எல்லாருடைய உள்ளத்தையும் தொடும். அப்படி உருகி, உருகிக்
கண்ணனின் அழகில் கரைந்தவர் அவர். தியாகராஜர், சியாமா சாஸ்திரி, முத்துசாமி தீட்சிதர் போன்ற மும்மூர்த்திகளின் காலத்துக்குச் சற்று முன்னால் இருந்தவர் என்றார்கள். என்றாலும் இவரின் பாடல் இவருக்குப் பின் ஆறு தலைமுறை வரை பிரபலம் அடையவில்லை. திருமணமே
செய்து கொள்ளாமல் கண்ணனின் வழிபாடே தனக்கு எல்லாம் என்ற
நினைப்பில் வாழ்ந்து வந்த இவரின் குடும்பத்தைச் சேர்ந்த ஆறாவது
தலைமுறையில் பிறந்த "திரு நீடாமங்கலம் கிருஷ்ணமூர்த்தி பாகவதர்"
என்பவரால்தான் இவரது பாடல்கள் பிரசித்தி அடைய ஆரம்பித்தன.
இன்றைக்குப் பரத நாட்டிய அபிநயத்தில் இவரது பாடல்களுக்குப் பிடிக்கும்
அபிநயங்கள் குறிப்பிடத்தக்கவை ஆகும். இவர் பாடல்களின் தொகுப்பை பம்பாய் சகோதரிகள் சி.சரோஜா, சி. லலிதா இருவரும் கொடுத்திருக்கிறார்கள்.
கண்ணன் அழகு பெரிதா?, தமிழின் அழகு பெரிதா? அல்லது பாடியவரின் உள்ளம் அழகா என்று ஒரு பட்டி மன்றமே நடத்தலாம். இவருக்குப் பின் வந்த தியாகராஜரின் சமகாலத்தவரான கோபால கிருஷ்ண பாரதியாரின் பாடல்களும் இப்படித்தான் அதிகம் பிரபலம் அடையவில்லை. ஏன் என்றும்
புரியவில்லை. சங்கீத வித்வான்கள் செய்ய வேண்டிய பணி இது. ஊத்துக்காட்டுக்குக் கிருஷ்ணர் எப்படி வந்தார் என்பதைப் பார்ப்போம்:

காமதேனுவின் பெண்ணான நந்தினி பூலோகத்தில் கண்ணனைக் கும்பிட்டு
வந்தபோது அவனின் காளிங்க நர்த்தனத்தைப் பற்றிக் கேள்விப் பட்டுத்
தனக்கும் அந்தத் தரிசனம் கிடைக்குமா என்று ஏங்குகிறாள். அவள் செய்த
தவத்தாலும், பூஜைகளாலும் கவரப்பட்ட கண்ணன் அந்த ஊரில் இருந்த ஒரு
மடுவில் தானாகச் சுயம்புவாகத் தோன்றுகிறான், அதுவும் எப்படி?
நந்தினியின் ஆசைப்படியே காளிங்க நர்த்தனமாடிய நிலையிலேயே. அப்போது கண்ணனைக் கண்ணாரக் கண்டவர்களில் நாரதரும் ஒருத்தர் என்று ஸ்தலபுராணத்தில் இருப்பதாய்ச் சொல்கிறார்கள். ஸ்தலபுராணம் புத்தகம் கிடைக்கவில்லை. கண்ணன் அங்கே காட்சி அளித்து விட்டுச்
சில நாட்களில் அப்படியே அந்த மடுவில் அழுந்தி விடுகிறான். பின்னாட்களில் அங்கே கண்ணன் இருப்பதைத் தற்செயலாகக் அறிந்த
வேங்கடகவி அங்கே கண்ணனுக்கு ஒரு கோயில் இருந்ததை அறிந்து கோவிலில் அவனைப் பிரதிஷ்டை செய்கிறார். பூஜா முறைகளையும் ஏற்படுத்துகிறார்.

மூலஸ்தானத்தில் கண்ணன் காளிங்க நர்த்தன வடிவில் காட்சி அளிக்கிறான்.
தானாகத் தோன்றியவன் ஆதலால் எந்தச் சிற்பி வடிவமைத்தான் என்பது
புலனாகவில்லை. பல காலங்களுக்கும் முந்தையது என்று மட்டும் சொல்ல
முடிகிறது. குழந்தைக் கண்ணன் தன் இடது காலைக் காளிங்கனின் தலையில் வைத்து
வலது காலைத் தூக்கிக் கொண்டு இடது கையால் காளிங்கனின் வாலைப் பிடித்துக் கொண்டிருக்கிறான். மிக மிக அற்புதமான வடிவம். இடது காலுக்கும், காளிங்கனின் தலைக்கும் நடுவில் ஒரு சின்னப் பேப்பர் போகலாம் போல் இடைவெளி, பட்டாச்சாரியார் காட்டினார். பின் இடது கையால் வாலைப் பிடிக்கும் போது இடது கைக் கட்டை விரல் மட்டும் தான் வாலின் முன்னால் உள்ள பகுதியைப் பிடித்துக் கொண்டு இருக்கிறது. பாக்கி நான்கு விரல்கள் பின்னால் தொங்கிக் கொண்டு இருக்கின்றன. வலது காலில் ஒரே கறுப்புக்
கறுப்பாகத் தழும்புகள். பெருமாளின் வேஷ்டியை விலக்கிக் காட்டினார்
பட்டாச்சாரியார். வலது கால் ஆடுதசையில் உள்ள அந்தத் தழும்புகள்
காளிங்கன் தன் வாலினால் கண்ணனை அடித்ததால் உண்டானதாம். உங்களுக்கும், எனக்கும் எப்படித் தழும்பு உண்டாகுமோ அப்படியே உண்டாகி இருந்தது, இந்தச் சிற்ப அதிசயத்தில். சன்னதி நாங்கள் போன பின் தான் திறந்தார்கள். . பராமரிப்பு நன்றாக உள்ளது. மிகச் சுத்தமாய் வைத்திருக்கிறார்கள். பட்டாச்சாரியாரும் பிரதிபலன் எதிர்பாராமல் கண்ணனுக்குச் சேவை செய்கிறார்.

பின் எங்கள் உறவினர் வீட்டுக்கு அருகில் உள்ள வேங்கடகவியின் இல்லம் இருந்த இடத்தைப் பார்த்தோம். தற்சமயம் யாரோ ஓரிருவர் அவர்கள் பரம்பரையில் இருப்பதாயும், இந்த இடத்தைத் தாம் வைத்திருப்பதாயும் எங்கள் உறவினர் சொன்னார். இப்போது காய்கறித் தோட்டமாக இருக்கும் அந்த 20க்கு 60 உள்ள இடம் அகலம் அதிகம் இல்லாமல் நீள வாட்டத்தில் உள்ளது. ஒரு காலத்தில் கோவிலுக்கு மிக அருகாமையில் இருந்த வேங்கடகவி இந்த வீட்டிலே தான் திண்ணையில் உட்கார்ந்து கொண்டு கவிகள் இயற்றி இருப்பார் என நினைக்கும்போது அவருக்கு வாரிசு யாரும் இல்லையே என்ற நினைப்பும் தோன்றியது. பின் நாங்கள் அங்கிருந்து திருக்கருகாவூர் சென்றோம்.

Wednesday, February 21, 2007

216. தமிழைக் காப்பாற்றிய தாத்தா-2

திரு எம்கே அவர்கள் நான் தமிழ்த்தாத்தாவைப் பற்றி எழுதி இருந்ததில் அவர் வாழ்நாள் பூராவும் தமிழுக்காக உழைத்தார் என்பது தப்பு என்று சொன்னதோடு அல்லாமல், அவர் நன்கொடை பெற்றுப் புத்தகங்கள்
வெளியிட்டதாயும் கூறுகிறார். அவர் தன்னோட வாழ்நாள் பூராவும் தமிழுக்குத்
தான் உழைத்தார். நன்கொடை பெற்றுப் புத்தகம் வெளியிட்டார் என்பதில் இருந்தே அவர் புத்தகங்களைத் தனியாய் வெளியிடும் அளவுக்குப் பணவசதி
படைத்தவர் இல்லை என்பதை திரு எம்கே தன்னை அறியாமல் ஒத்துக்
கொண்டிருக்கிறார். மேலும் சென்னையில் அவருக்குச் சொந்த வீடு இருப்பதாயும் சொல்லி இருக்கிறார். இருக்கிறதா இன்னும்னு தெரியாது. இருந்தது. "தியாகராஜவிலாசம்' என்ற பேரில், திருவட்டீஸ்வரன் பேட்டையில் இருந்தது. அவருடைய பிள்ளையால் கட்டப் பட்டதாய்ச் சொல்லுவார்கள். அவருடைய சொந்தக் கிராமத்திலும் சொந்த வீடுதான் இருந்தது. சொந்த வீடு இருந்ததினாலேயே ஒருத்தர் பண வசதி படைத்தவர் என்று நினைப்பது தவறு என்று என்னோட தனிப்பட்ட அபிப்பிராயம்.

கும்பகோணம் காலேஜில் வேலை செய்த சமயம் மணிமேகலை வெளியிடவும் உழைத்து வந்தார். அதற்காக மூலப்பிரதிக்குப் பல இடங்களில் அலைந்து சேலம் ராமஸ்வாமி முதலியார் என்பவர் கொடுத்த மூலப்பிரதியை வைத்து மேலும் பிரதிகளுக்கு அலைந்து, அவற்றைக் காகிதத்தில் பிரதி எடுத்துக் கொள்கிறார். இதனுடன் கூடவே "சிந்தாமணி"க்காகவும் வேலை நடக்கிறது. சிந்தாமணியில் மணிமேகலையைப் பற்றிய குறிப்புக்களும்,
ஒரு இடத்தில் மணிமேகலையில் இருந்தே மேற்கோளும் காட்டப் பட்டிருக்கிறதைக் காண்கிறார். மணிமேகலையில் சில இடங்களில் உள்ள வார்த்தைகள் புரியாமல் என்ன மதம், என்ன கதை என்று தெரியாமல் குழம்பி இருக்கிறார். இந்தக் குழப்பத்தினூடேயே பத்துப்பாட்டு ஆராய்ச்சியும் தொடர்கிறது. கல்லூரியின் ஓய்வு நேரங்களில் கையெழுத்துப் பிரதியும்,
குறிப்புப் புத்தகமுமாய் இருக்கும் அவர் ஒரு நாள் மணிமேகலையைக் கையில் வைத்துக் கொண்டு குழப்பத்துடன் உட்கார்ந்து இருப்பதைச் சக ஆசிரியர் கணிதம் கற்பிக்கும் ஸ்ரீசக்கரவர்த்தி என்பவர் கவனிக்கிறார்.

விஷயம் என்னவென்று கேட்க மணிமேகலை என்னவென்றே புரியவில்லை எனச் சொல்கிறார் தமிழ்த் தாத்தா.

என்ன புரியவில்லை?" கணித ஆசிரியர் கேட்கிறார்.

தமிழ்த்தாத்தா: "எவ்வளவோ புதிய வார்த்தைகள், இவை மற்றப் புஸ்தகங்களிலே காணவில்லை. ஜைனம், சைவம், வைஷ்ணவம் இவற்றில் இல்லை. இதோ பாருங்கள், இந்த வார்த்தையை, அரூபப் பிடமராம், உரூபப் பிடமராம். பிடமரென்ற வார்த்தையை நான் இதுவரை கேட்டதில்லை."

அப்போது அசரீரி எழுகிறது. "அதைப் பிரமரென்று சொல்லலாமோ?"

திகைத்த தாத்தா திரும்பிப் பார்க்கிறார். கூட வேலை செய்யும் ஆசிரியர் ராவ்பகதூர் மளூர் ரங்காச்சாரியார் என்பவர் தான் பேசியது. உடனேயே அவரிடம் செல்கிறார் தாத்தா. இவ்விடத்தில் ரங்காச்சாரியாரைப் பற்றித்
தமிழ்த்தாத்தா கூறுவது: எப்போதும் படித்த வண்ணம் இருப்பார். நேரத்தை வீணாக்க மாட்டார்." என்று புகழ்கிறார். தமிழ்த்தாத்தாவின் சந்தேகத்தைக் கேட்ட ரங்காச்சாரியார் அந்தக் குறிப்பிட்ட செய்யுளைப் படிக்கச் சொல்கிறார்.
தாத்தாவும் படிக்கிறார்.

"நால்வகை மரபி னரூபப் பிடமரும்
நானால் வகையி னுரூபப் பிடமரும்
இருவகைச் சுடரு மிருமூ வகையிற்
பெருவப் பெய்திய தெய்வத கணங்களும்"என்று வாசிக்கிறார் தாத்தா. கேட்கும்
ரங்காச்சாரியார் முகத்தில் ஒளி உண்டாகிறது. மெதுவாய்ச் சொல்கிறார்
ரங்காச்சாரியார், "இது பெளத்த சமயத்தைச் சேர்ந்த வார்த்தை," என்று. எப்படி என்று தாத்தா கேட்டதற்கு அவர் பெளத்தர்களிலே தான் இவ்வார்த்தையை
அதிகம் கையாளுவதாய்ச் சொல்கிறார். இது அவர்கள் லோகக் கணக்கு, அது
சம்மந்தமான ஏற்பாடுகள் எல்லாம் தனி என்றும் சொல்கிறார். அன்றில் இருந்து காலையும், மாலையும் பாடம் கேட்கப் போவதைப் போல் ரங்காச்சாரியார் வீட்டிற்குப் போய் அவர் உதவியோடு பெளத்த சமய சம்மந்தமான விஷயங்களைத் தெளிவு படுத்திக் கொள்கிறார். அந்த அறிவோடு ஆய்ந்ததுதான் மணிமேகலை என்கிறார் தமிழ்த் தாத்தா.

தமிழ்நாட்டுப் பெளத்தர்களின் நிலையும், பெளத்தப் பரிபாஷையும் விளங்கியதாய்ச் சொல்லும் தமிழ்த்தாத்தா தம்மிடம் இருந்த நீலகேசித் திரட்டின் உரை, வீர சோழிய உரை, சிவஞான சித்தியார்-பரபக்கம்,
ஞானப் பிரகாசர் உரை என்பவற்றில் வந்துள்ள பெளத்த சமய சம்மந்தமான
செய்யுட்களையும், செய்திகளையும் தொகுத்து வைத்துக் கொண்டு மணிமேகலை ஆராய்ச்சியில் ஈடுபடுகிறார். ரங்காச்சாரியார் ஏற்கெனவே படித்த புத்தகங்கள் போதாது என ஐயரவர்களும் சில ஆங்கிலப் புத்தகங்களைத் தம் சொந்த செலவில் வரவழைத்து அவருக்குப் படிக்கக்
கொடுத்துச் சொல்லச் செய்கிறார். மானியர் வில்லியம்ஸ், மாக்ஸ்முல்லர், ஓல்டன்பர்க், ரைஸ் டேவிட்ஸ் போன்றவர்களின் புத்தகங்களில் இருந்து படித்து ரங்காச்சாரியார் சொல்லக் கேட்டுக் கொள்கிறார். ஒன்றரை வருடம் நடந்த இந்தப் பாடம் ரங்காச்சாரியார் சென்னைக்கு மாறிப் போனதில் சற்றுத்
தாமதம் ஆகி ஐயரவர்கள் தம் விடுமுறைக் காலத்தில் இரண்டு மாதம் சென்னையில் வந்து தங்கி அவரிடம் பாடம் கேட்கிறார். இம்மாதிரி 5, 6 வருடங்கள் பெளத்த சமயம் பற்றிப் பாடம் கேட்டு அறிந்த பின்னே மணிமேகலையை வெளியிடும் துணிவு உண்டானதாய்ச் சொல்கிறார்.

அதற்குப் பழைய உரை இல்லாததால் தாமே உரை எழுதியதாயும், அதனோடு
பெளத்த சமயத்தைச் சேர்ந்த மும்மணிகளாகிய புத்தன், பெளத்த தர்மம்,
பெளத்த சங்கம் போன்றவற்றைப் பற்றிய வரலாற்றையும் எழுதிச் சேர்க்கச்
சொல்கிறார் ரங்காச்சாரியார். அப்படியே செய்கிறார் ஐயரவர்கள். இடை இடையே பழைய தமிழ்ச் செய்யுட்களையும் சேர்த்து எழுதியதைப்பார்த்து மகிழும் ரங்காச்சாரியார், "அந்தக் காலத்திலே இவ்வளவு பிரசித்தமான விஷயங்கள் அழிந்து போனதே!" என்று வருந்தியதாயும் சொல்கிறார். ரங்காச்சாரியார் இல்லாவிட்டால் மணிமேகலை வெளியிட முடியாது என அறுதி இட்டுக் கூறும் ஐயரவர்கள் அவருக்கு நன்றி கூறி முகவுரையில் எழுதி இருக்கிறார்.

தமிழ்த்தாத்தாவுக்கு உதவியவர்களில் முக்கியமானவர் மதுரை சுப்பிரமணிய ஐயர் என்னும் நீதிபதி ஆவார். இவர் பேரில் திருவல்லிக்கேணியில் மணி ஐயர் ஹால் என்னும் மண்டபம் இருந்ததாய்ச் சொல்கிறார் தமிழ்த்தாத்தா. அடுத்து ராமநாதபுரம் சேதுபதி ராஜராஜேஸ்வர ராஜா, வி. கிருஷ்ணசாமி ஐயர், ஜட்ஜ் முத்துசாமி ஐயர் போன்றோர். இன்னும் சிலர் விட்டுப் போயிருக்கிறது. ஒவ்வொன்றாகத் திரட்டுகிறேன்.

Tuesday, February 20, 2007

215. பால் வடியும் முகம் நினைந்து, நினைந்து!

கும்பகோணம் போன நாங்கள் வழக்கமாய்த் தங்கும்ம் லாட்ஜில் இம்முறை
அறையே கிடைக்கவில்லை. நாங்கள் வாடிக்கையானவர்கள் என்பதால் ஏதோ
பேருக்கு ஒரு அறை கொடுத்தார்கள். எல்லா அறைகளும் "ரதி மீனா"வினால்
முன்பதிவு செய்யப் பட்டு விட்டது. அவங்க வீட்டுக் கல்யாணம் என்பதால்
பேருந்துகளும் முன்பதிவு செய்யப் பட்டு எங்களுக்குக் கும்பகோணம் வரை பஸ்ஸில் இடம் கிடைத்ததே பெரிய விஷயமாகிப் போனது. எங்களுக்குக் கொடுத்த அறை 4வது மாடியில். நல்லவேளையாக லிஃப்ட் இருந்தது, வேலையும் செய்தது. அறைக்குப் போனால் வெந்நீர்க்குழாயே இல்லை.
அக்கினி நட்சத்திரம் என்று சொல்லும் கத்திரி வெயிலிலும் தண்ணீரில் குளிக்க, குடிக்க முடியாத எனக்கு வெளியில் இருந்து வெந்நீர் என்ற பேரில் ஒருபக்கெட் குளிர்ந்த நீர் கிடைத்தது. அதிலே குளித்து முடித்து நாங்கள் முதலில் போனது "வெங்கட் ரமணா லாட்ஜில்" காலை ஆகாரத்திற்காக. கூடிய வரை வெளியில் போகும்போது சாப்பாட்டு விஷயத்தில் கொஞ்சம் கவனமாய் இருந்து கொள்வோம். எல்லா ஓட்டல் சாப்பாடும் ஒத்துக்
கொள்ளாது எனக்கு. அமீபயாசிஸ் உண்டு. அவருக்கோ என்றால் அல்சர் தொந்திரவு. ஆகவே இட்டிலி காலையில் சாப்பிட்டால் மதிய உணவாகக் கோயிலில் கிடைக்கும் தயிர்சாதம் தான் சாப்பிட்டுக் கொள்வோம்.
அதுவும் நான் தவிர்த்து விடுவேன். இளநீர், புதிய பழரசம் அல்லது பழங்கள் என்று சாப்பிட்டுக் கொள்வேன். (திருக்கைலை யாத்திரையின் போது அங்கேயே புதுசாக வேளா வேளைக்குச் சமைத்ததோடு அல்லாமல் வெங்காயம், பூண்டு, மசாலா, காரம் அதிகம் இல்லாத சாத்வீக உணவு. ஆகவே பிரச்னை இல்லை.) அநேகமாக எல்லாக் கோயில்களில் புளிசாதம், தயிர்சாதம் கிடைத்து விடும். ஆனால் நாங்கள் திருநெல்வேலி போனபோது "நவ திருப்பதி" யாத்திரையின் போது கொஞ்சம் கஷ்டப் பட்டோம்.
அங்கே எல்லாம் "கோஷ்டி" என்று சொல்லப் படும் ஆராதனை ஒரு
வேளைதான் நடக்கும். நான் மதுரையில் பார்த்திருக்கிறேன். ஆனால் மதுரையில் காலையிலேயே முடிந்து விடும். இங்கேயோ மத்தியானம் 11-00 லிருந்து 12-00 மணிக்குள் நடக்கிறது. அப்போது தான் பிரசாதம் கிடைக்கும். என்ன, சாப்பாடு பத்தியேப் பேசறேன்னு பார்க்கறீங்களா? இன்னிக்கு இது தான்.

இப்போத் தான் முக்கியமான விஷயம் அல்லது நிகழ்ச்சி வருகிறது. மற்ற
விஷயங்களைப் பின்னுக்குத் தள்ளி விட்டு இதை முன்னாலே சொல்லுகிறேன். 10-ம் தேதி சனி அன்று திருநெல்வேலிக்கு எங்களுக்குத் திருச்சியில் இருந்து குருவாயூர் விரைவு வண்டியில் முன்பதிவு
செய்திருந்தோம். அன்று காலையில் கும்பகோணத்தில் இருந்து திருச்சி செல்ல வேண்டும். அன்றைய தினம் எனக்கு விரத நாளாக அமைந்து விட்டது. வெளியில் சாப்பாடு சாப்பிட மாட்டேன். ஆகவே காலையில் ஒரு காஃபி மட்டும் நான் சாப்பிட்டேன். அவர் காலை ஆகாரம் சாப்பிட்டதும்
கிளம்பினோம். வழக்கம்போல் பேருந்து வேகமாய்ப் போய்க்கொண்டிருந்தது. என்னோட மறுபாதிக்கு ஒரே கவலை, நான் ஒண்ணுமே சாப்பிடாமல் வரேனேன்னு. வழியிலே வர பழம், கிழம்(ஹிஹிஹி) எல்லாம் வாங்கித் தரேன்னு சொல்லிட்டே வந்தார். நானும் வேணாம்னு சொல்லிச் சொல்லிப் பார்த்தேன்.. கேட்கலை.

சாயந்திரமாய் ஒரு 7 மணி போல் திருநெல்வேலி போகும், அங்கே போய்க்
கூடச் சாப்பிடாமல் இருந்தால் நாளைக்கு வெளியே போகணுமேன்னு ஒரே கவலை. தஞ்சாவூர் வந்தது. அங்கே ஒரு ஆவின் பால் கடை இருந்தது. அதைப் பார்த்த நான் உடனேயே சரி, பால் சாப்பிடலாமே, அதனால் ஒண்ணும் தப்பு இல்லைனு முடிவெடுத்து என் கணவரைப் போய் வாங்கிட்டு வரச் சொன்னேன். ரொம்பவே சந்தோஷமாய் வாங்கிட்டு வந்தார். இதிலே
உள்ள உள் விஷயம் புரியாமல் நானும் ரொம்பவே அப்பாவியாய் (!)
உட்கார்ந்திருந்தேன். வண்டியில் ஏறினதும் என் கிட்டே பால் வைத்திருந்த
பாத்திரத்தைக் கொடுத்தாரோ இல்லையோ, கையில் வாங்க முடியவில்லை, அவ்வளவு சூடு, எப்படித்தான் அதைப் பிடித்துக் கொண்டு வண்டியில் ஏறினாரோ தெரியலை. அது கிட்டத் தட்ட 250மி.லி.க்கு மேல் பிடிக்கும், அது
வழியன்னா வழியப் பால். ஏன் இவ்வளவு வாங்கிட்டு வந்தீங்கன்னு கேட்டா நீ முடிஞ்சதைச் சாப்பிடு, மிச்சம் நான் சாப்பிட்டுக்கறேன்னு ஆறுதல் வேறே.
கையிலேயே பிடிக்க முடியலை, வாயில் எங்கே விடறது? எத்தனை ரூபாய்க்கு வாங்கினீங்கன்னு கேட்டா 10 ரூதான்னு சொல்றார். 5 ரூக்கு வாங்கிட்டு வரக்கூடாதான்னு கேட்டால் பத்து ரூக்கு இவ்வளவு வரும்னு தெரியலை, நீயும் எத்தனை நாழிதான் பட்டினியோடு இருப்பே? நல்ல பசும்பால், உனக்காகச் சர்க்கரை போடாமல் வாங்கிட்டு வந்தேன்னு உபசரணை வேறு பலமா இருக்கு. இதை எப்படிக் குடிப்பது. ஆத்தவும் ஒண்ணும் இல்லை.

மனுஷன் எத்தனை நாளாக் காத்துட்டு இருந்தாரோ என்னை இப்படிப் பழி வாங்க? தம்ளர் இருக்கு, அதை எடுக்கலாம்னா பாலை யாராவது வாங்கிக் கையில் கொட்டாமல் வச்சுக்கணும். பஸ்ஸோ வேகமாய்ப் போகுது, என்ன செய்யறது? என்னோட மறுபாதி தம்ளரை எடுக்க முயல அந்த முயற்சியில் கொதிக்கும் பால் என் மேல் கொஞ்சம் சிந்த, நான் "வீல்" என அலற, பஸ்ஸின் வீலுக்குத் தான் ஏதோன்னு கண்டக்டர் நினைத்துப் பஸ்ஸை
நிறுத்த விசில் கொடுக்க, பேருந்து திடீர் பிரேக் போட்டு நிற்க, பால் என் தலை வழியாக முகத்தில் கொட்டி வழிந்து ஓட, பஸ்ஸில் எல்லாரும் என்னைக் கையில் ஒரு சூலமும், வேலும் கொடுத்து நமஸ்காரம் பண்ணாத குறையாகப் பார்த்தார்கள்.

பின்னே அவ்வளவு கொதிக்கிற பால் சரியாகத் தலை உச்சியில் போய் விழுந்து அபிஷேகம் மாதிரி முகத்தில் வழிந்து ஓடினால் அப்படித்தானே
தோணும். என்னோட மறுபாதி சிரிப்பை அடக்கப் பாடுபட்டுக் கொண்டிருந்தது
கண்ணில் பட நான் என்ன செய்யறது? வழக்கம்போல் நற நற நற நற நற, தான். இப்படியாக என்னோட முகமும் பால் வடியற முகம் தான். எல்லாரும்
ஒத்துக்குங்க.!

ஊத்துக்காடு வேங்கட கவியின் "பால் வடியும் முகம் நினைந்து" பாடல் பற்றி
நான் எழுதறதா நினைச்சு வந்தவங்களுக்கு, மன்னிக்கவும், இந்தத் தலைப்புப் போட்டாத் தான் எல்லாரும் வருவாங்கன்னு போட்டேன். ஊத்துக்காடும் போனேன், அதுவும் எழுதி உங்களை எல்லாம் சமாதானம் செய்துடறேன். வர்ட்டா?

214. தமிழைக் காப்பாற்றிய தாத்தா

நேற்றுத் "தமிழ்த் தாத்தா" உ.வே.சாமிநாத ஐயரவர்களின் பிறந்த நாள். தமிழுக்கு அவர் செய்த தொண்டு மிகச் சிறந்தது. இன்றைக்கு நாம் படித்து விவாதிக்கும் சிலப்பதிகாரமும், மணிமேகலையும், சீவக சிந்தாமணியும் இன்னும் எண்ணற்ற தமிழ் நூல்களையும் தேடிக் கண்டு பிடித்துத் தன்
சொந்த செலவிலே தமிழிலே புத்தகங்களாக அச்சிட்டுப் பதிப்பித்தவர்.
இதற்காக அவர் ஊர், ஊராக அலைந்து, திரிந்து சுவடிகளையும், ஏடுகளையும்
சேகரம் செய்தார். சிலர் கொடுப்பார்கள். சிலர் கொடுக்க மாட்டார்கள், ஏளனம்
செய்வர். எல்லாவற்றையும் பொறுத்துக் கொண்டு தன் வாழ்நாள் பூராவும் தமிழைப் பற்றியும், தமிழ்மொழிக் காப்பியங்களைப் புதுப்பிப்பது தவிர வேறு சிந்தனை ஏதும் இன்றி இருந்தவர் இவர். இவருடைய ஆசிரியர் மஹா வித்வான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை அவர்கள். தரும புரம் ஆதீனத்தின் மஹாவித்வான் ஆன மீனாட்சி சுந்தரம் பிள்ளையிடம் அந்த ஆதினத்திலேயே உ.வே.சாமிநாத ஐயரும், திருப்பனந்தாள் காசி மடத்தின் தலைவராய் இருந்த "குமாரசாமித் தம்பிரானும்" படித்தார்கள். ஐயரவர்களே எழுதிய "நினைவு மஞ்சரி"யில் இருந்து சில பகுதிகள் இப்போது எழுதுகிறேன்.

படிப்புக்குப் பின் கும்பகோணம் கல்லூரியில் தமிழ் ஆசிரியர் வேலையில் சேர்ந்த தமிழ்த்தாத்தா அவர்கள் தன் வருமானம் எல்லாவற்றையும் தமிழ் நூல்களைத் தேடிக் கண்டுபிடிப்பதில் செலவிட்டார். இவ்வாறு இவர் சிலப்பதிகாரப் பதிப்புக்கு அப்புறம் "சீவக சிந்தாமணி"யை முதன் முதல் 1891
-ம் ஆண்டு பதிப்பித்தார். அப்போது பிரான்ஸில் இருந்து இவருக்கு 1891-ம்
ஆண்டு ஒரு கடிதம் வருகிறது. விலாசம் தமிழிலும்,ஆங்கிலத்திலும் எழுதப்
பட்டிருக்கிறது. வியப்புடன் கடிதத்தைப் பிரிக்கிறார் ஐயரவர்கள். அதிலே
"வின்ஸோன்" என்னும் பேராசிரியர் ஒருவர் ஐயரவர்களின் ஆராய்ச்சியைப் பாராட்டி ஒரு கவிதை எழுதி இருக்கிறார். அது என்ன என்றால்:

"சிந்தாமணியாம் சிறப்புடைய காப்பியமே
பொன்றாதின் மாலை பொருந்தி வரக்- கண்டேன்
சிலப்பதிகாரமுதற் சீர் நூல்கள் நான்கும்
அளித்தலாம் என்மர் அறைந்து."

(கூடியவரை அந்தப் பழைய தமிழைப் பிரித்துப் பொருள் புரியுமாறு எழுதி
உள்ளேன்.)அந்த வின்சோன் எழுதி இருக்கிற தமிழ் எப்படினு புரியுதா பாருங்கள்! :D

"நீர் 1887-ம் ஆண்டில் அச்சிற் பதிப்பித்த சிந்தாமணியைக் கண்டு மிகவு மதிசயமா யிருந்தோமென்றும் நீர் செய்த வுலகோர்க்குப் பெரியவுபகார
மறிந்தோமென்றும், இன்னும் பழைய புத்தகங்க ளச்சிற் பதிப்பித்தற்
குரியவாயுண்டென்றும் உமக்கு நாமெழுதெவேண்டுமென் றெண்ணிக்கொண்டு வருகிறோமாதலால் மிகவும் களிகூர்ந்து வாழ்வோ மெப்போதென்றால் சிலப்பதிகாரம் மணிமேகலை குண்டலகேசி வளையாபதி யென்னும் வேறு நாற்பெருங்காப்பியங்கள் பரிசோதித்துக் கொடுத்த வப்போதே சொல்லுவோம்!"

"சிலப்பதிகாரமோ வென்றால் சென்னப்பட்டணத்தில் முன் 1885-ம்
வருஷத்தில் அதின் முதற் காண்டம் உரையின்றிக் கொடுத்தார்களென்
றறிகின்றோ மானா லிரண்டாமும் மூன்றாமும் தருகவென்று பல விசேடமா யறவிய மனத்த ரெல்லோருங் கேட்போர்."

ஐயரவர்கள் ஆராய்ச்சி செய்யக் கல்லூரியில் பணியாற்றிய நேரம் தவிரத் தன் வீட்டிலேயே மேற்கொண்டார். அதுவும் ஒரு முறை மேற்குறிப்பிட்ட வின்சனின் மாணவர் ஒருவர் ஐயரவர்களைக் காண வந்தபோது வீட்டின் மொட்டை மாடியில் கீற்றினால் ஆன கொட்டகையில் வேலை செய்யும் ஐயரைக் கண்டு வியந்து அவர், "இப்படி மேலே வெயில் அடிக்கும்
இடத்தில் உட்கார்ந்து வேலை செய்கிறீர்களே? வேறு நல்ல இடத்தில்
இருந்து கொண்டு செய்யக் கூடாதா? " எனக் கேட்கிறார். அதற்கு ஐயரவர்கள்
கூறுகிறார்:"என் நிலைக்கு இது தான் முடியும். இந்தத் தேசத்தில் இந்த நிழல் கூட இல்லாமல் கஷ்டப் படும் வித்வான்கள் எத்தனையோ பேர் இருக்கிறார்கள். என் இளமையில் வீட்டுத் திண்ணையிலும், மரத்தடியிலும் இருந்து கொண்டு படித்து வந்த மகாவித்வான்களைக் கண்டிருக்கிறேன்." எனக் கூறுகிறார். இது அவரின் எளிமைக்கு ஒரு சான்றாகும்.

ஹிஹிஹி, மேலே எழுதி இருக்கும் வின்சோனின் கடிதத்தில் உள்ள விஷயங்களைப் படிச்சுப்புரிந்து கொள்ள முயற்சிப்போருக்குப் பின்னூட்டங்கள் நம் தொண்டர் படையால் அளிக்கப் படும். மீதி நாளை கட்டாயம் தொடரும். எதைத் தொடரப் போறேனோ தெரியலை,
கடவுளே, காப்பாத்து!

Monday, February 19, 2007

213. நினைத்தது நடந்தது.

2 பதிவு சேர்ந்தாப்போல ஆன்மீகம் எழுதினாலோ சீரியஸான விஷயம் எழுதினாலோ யாருமே வரதில்லை. நந்தனார் பதிவுக்கும் யாரும் வரலை. மற்ற எல்லாப் பதிவுகளையும் "மொக்கை" என்று வர்ணித்து விட்டுப் பின் விமரிசனம் தரும் அம்பி உட்பட யாருமே வரலை. அப்புறம் ஏன் மொக்கைனு எழுதணும்? சும்மாத் தானே? உண்மையில் இதற்கு ஆதரவு நிறைய வரும்னு எதிர்பார்த்தேன். தமிழுக்காகவாவது வருவாங்கன்னு நினைத்தேன். பக்கத்திலேயே ஆன்மீகப் பயணத்தில் கைலை யாத்திரை பத்தியும் எழுதறேன், அதுக்கும் யாரும் வரதில்லை. முன்னாலே வேதா வந்தாங்க. அவங்க ரொம்ப வருஷம் கழிச்சு இன்னிக்குத் தலை காட்டி இருக்காங்க. அப்புறம் எஸ்.கே.எம்., மலை நாடான் வந்தாங்க. எஸ்.கே.எம்.முக்கு உடம்பு சரியில்லை. மலைநாடான் படிச்சுட்டுப் போயிருப்பார். இப்போதைக்கு ஆறுதல் கொடுப்பது மதுரையம்பதி மட்டும் தான். அவரும் திடீர்னு காணாமப் போயிட்டு இன்னிக்கு வந்திருக்கார். எல்லாருக்கும் அலுவல வேலையும் பார்த்துக் கொண்டு ப்ளாகையும் பார்ப்பது சிரமம்தான். புரியுது. ஆனால் சனி, ஞாயிறில் எழுதினாலும் எல்லாருமேவா வீட்டில் கணினி வைத்திருக்கிறார்கள். அதுவும் கஷ்டமாத் தான் இருக்கு. இந்த லட்சணத்தில் இந்த ப்ளாக்கர் தொந்திரவு வேறே. ஒரு பின்னூட்டம் மாசக் கணக்கா ஒட்டிக்கிட்டு வரவே இல்லை. இன்னும் 4 பின்னூட்டம் பெட்டியிலேயே உட்கார்ந்து கொண்டு போவேனான்னு சொல்றதுங்க. என்னவோ போங்க, இன்னிக்குப் புலம்பல் நேரம். உ.வே.சாமிநாத ஐயரைப் பத்தி எழுத நினைச்சேன். போணி ஆகுமா தெரியலை. இன்னிக்கு அவரோட பிறந்த நாள்னு தெரிஞ்சது. தமிழுக்காக அவர் எவ்வளவு உழைத்தார்னு இன்றைய தலைமுறை அறியாது. அவர் வாழ்வின் ஒரு துளி நாளை!

Sunday, February 18, 2007

212. நந்தனாரை வேதியர் தடுத்தாரா?

தியாக ராஜனுக்கு ஒரே கோபம். நந்தனாரைத் தடுத்தது வேதியர் யாரும்
இல்லை என்று நான் சொன்னதற்கு. அப்புறம் இன்று தற்செயலாகச் சக்தி
விகடன் படித்தபோது அதிலும் இந்தச் செய்தி (எனக்காகவே வந்தாற்போல்)
வந்திருந்தது. இருந்தாலும் நானும் பெரிய புராணம் புத்தகத்தை (ஓசி தான்) வாங்கிக் கொண்டு வந்தேன். இப்போ எழுதப் போறது என்னோட சொந்தக் கருத்துக்கள் ஏதும் இல்லை. பெரிய புராணத்தில் சேக்கிழார் எழுதினதை அப்படியே கொஞ்சம் எளிமையான தமிழில் கொடுக்கிறேன். அவ்வளவு தான் அதோட என் வேலை முடிஞ்சது.

திருஆதனூரையும், அதன் செழுமையையும் வர்ணிக்கும் சேக்கிழார் அங்கிருக்கும் புலைப்பாடியைப் பற்றியும் வர்ணித்து விட்டு இத்தகைய புலைப்பாடியில் முன் ஜென்ம வாசனையால் இறைவனான சிவனை நினைந்த வண்ணம் ஒருத்தர் இருந்தார் என்றும் அவர் பெயர் "நந்தனார்"
என்றும் கூறுகிறார். அதற்கான செய்யுள் பெரிய புராணத்தில் 1051-ம் எண்ணில் வருகிறது.

"இப்படித்தாகிய கடைஞர் இருப்பின்வரைப் பினின் வாழ்வார்
மெய்ப்பரிவு சிவன் கழற்கே விளைத்த உணர்வோடும் வந்தார்
அப்பதியில் ஊர்ப்புலைமை ஆன்ற தொழில் தாயத்தார்
ஒப்பிலவர் நந்தனார் என ஒருவர் உளரானார்."

என்று நந்தனாரைப் பற்றிக் கூறும் சேக்கிழார் நந்தனார் உணர்வு தெரிந்த நாள் முதலாய்ப் பிறைமதியான கண்ணி மாலை சூடிய பெருந்தகையான சிவனிடத்தில் சிந்தை செலுத்தித் தன் மனதைக் கட்டுப்படுத்தி மறந்தும் தீத் தொழில் செய்யாமல் சிவனின் கீழ் தான் அடிமை என்னும் நினைப்புடன் வாழ்ந்து வந்தார்.அவருடைய தொழில் ஊருக்காக வெட்டிமைத் தொழில் செய்வது. அதற்காக ஊரார் கொடுத்த மானிய நிலத்தின் வருவாயில் வாழ்ந்தார். அதைக் குறிக்கும் செய்யுள்

"ஊரில் விடும் பறைத்துடவை உணவுரிமையாக் கொண்டு
சார்பில் வருந் தொழில் செய்வார் தலை நின்றார் தொண்டினால்
கூரிலைய முக்குடுமிப் படையண்ணல் கோயில் தொறும்
பேரிகையே முதலாய முகக்கருவி பிறவினுக்கும்."

-1053-ம் பாடல்இப்படி வாழ்ந்து வந்த நந்தனார் திருக்கோயிலின் உள்ளே (தன்னுடைய குலத் தொழிலின் காண் இயல்பாக விளைந்த அச்சத்தினால்) போகாமல் வெளியே நின்றே தொழுது ஆடிப்பாடி வந்தவர். இவருக்கு ஒரு முறை "திருப்புன்கூர்" என்னும் ஊரில் உள்ள சிவனைத் தரிசிக்கும் ஆவல் மேலிட்டது. கோயில் வாயிலில் நின்று இறைவனைக் குறித்த துதிகள் செய்து ஆடிப் பாடிய நந்தனாருக்கு இறைவனைக் காண தனக்கு நேரே காண ஆசை வந்தது. அப்போதெல்லாம் கோயிலில் வாயிலுக்கு நேரே நந்தியைத் தவிர ஏதும் மறைக்காமல் கோயிலைக் கட்டினார்கள் போலும். நந்தனாரின் ஆசையை உணர்ந்த இறைவன் அவருக்கு அருள் செய்ய விரும்பித்
தனக்கு எதிரே இருந்த நந்தியை விலகி இருக்குமாறு பணித்தது தான் இன்று
ரொம்பவே பிரசித்தி அடைந்து இருக்கும் "சற்றே விலகி இரும் பிள்ளாய்!" என்னும் சொற்றொடர். சேக்கிழார் இதைக் குறிப்பிடுகையில் சொல்கிறார்:

"சீரேறும் இசைபாடித் திருத்தொண்டர் திருவாயில்
நேரேகும்பிட வேண்டும் என நினைத்தார்கது நேர்வார்
காரேறும் எயிற்புன்கூர்க் கண்ணுதலார் திருமுன்பு
போரேற்றை விலங்க அருள் புரிந்தருளிப் புலப்படுத்தார்."
-1057-ம் பாடல்என்று கூறுகிறார்.

இனி நந்தனாரின் தில்லைப் பயணம் பற்றிப் பார்ப்போம்.நந்தனார் சிவபதிகள் பலவற்றுக்கும் போய் வணங்கி உண்மையான திருத் தொண்டைச்
செய்து வாழ்ந்திருக்கும் வேளையில் தில்லைக்குச் செல்ல வேண்டும் என்ற
பேராவல் அவர் உள்ளத்தே எழுந்தது. கோயில் என்றால் சைவர்களுக்குச்
"சிதம்பரம்" என்று தற்காலத்தில் அழைக்கப்படும் தில்லை தான். தில்லைவனம் சூழ்ந்த தில்லைச் சிதம்பரத்தில் ஆடும் நடராஜரின் திருவடி
தரிசனத்திற்காக நந்தனார் தில்லை நோக்கிப் பயணிக்க முடிவு செய்தாலும் "நம் குலத்துக்குப் பொருந்துமோ?" என எண்ணி வருந்தி "நாளைப் போவேன்!" எனக் கூறுகிறார். யாரும் அவரைத் தடுக்க வில்லை. அவராகவே தானே தனியாக எடுத்த முடிவு தான். அதைக் குறிக்கும் பாடல்

"அன்றிரவு கண்துயிலார் புலர்ந்ததற்பின் அங்கெய்த
ஒன்றிய அணை தருதன்மை உறுகுலதோடிசைவில்லை
என்றிதுவும் எம்பெருமான் ஏவல் எனப்போக்கொழிவார்
நன்றுமெழுங்காதல் மிக நாளைப்போவேன் என்பார்."
-1061-ம் பாடல்

இப்படிச் சொன்னவர் ஒருநாள் தில்லைப் பயணம் மேற்கொண்டார். அங்கே தில்லை வாழ் அந்தணரின் ஒழுக்கத்தாலும், தவ நெறியாலும் கவரப்பட்டு,வேதங்கள் ஓதுகிற மடங்கள் இருப்பதையும் பார்த்து
யோசிக்கிறார் மேலே செல்லலாமா என. அதற்குரிய பாடல்:

"செல்கின்ற போழ்தந்த திருவெல்லை பணிந்தெழுந்து
பல்குஞ்செந்தீவளர்த்து பயில் வேள்வி எழும் புகையும்
மல்கு பெருங் கிடையோது மடங்கள் நெருங்கினவுங் கண்டு
அல்குந்தம் குலநினைத்தே அஞ்சி அணைந்திலர் நின்றார்." -1063-ம் பாடல்

இவ்வாறு மூவாயிரம் ஆகுதிகள் இருக்கும் வேதிகைகள் நிறைந்த இவ்வூருக்கு உள்ளே நான் போகலாமா என யோசித்தவாறே நகர் வலம் வருகிறார். இரவும் வந்தது. எவ்வாறு நடராஜப் பெருமானின் ஆனந்தக்
கூத்தைக் காண்பது என்ற நினைப்புடனே உறங்கும் நந்தனாரின் கனவில் பிறைசூடிய பெருமான் தோன்றி அருள் செய்கிறார். முக்கண்ணனார் கூறியதாக சேக்கிழார் எழுதுகிறார்:

"இப்பிறவி போய் நீங்க எரியினிடை நீமூழ்கி
முப்புரிநூல் மார்பருடன் முன்னணைவாய் என்ன மொழிந்து
அப்பரிசே தில்லைவாழ் அந்தணர்க்கும் எரியமைக்க
மெய்ப்பொருளானார் அருளி அம்பலத்தே மேவினார்." -1068-ம் பாடல்

நந்தனாரைத் தீக்குள் இறங்கிப் புனிதராக மாறி பூநூல் அணிந்த தில்லைவாழ்
அந்தணருடன் நீ கோயிலுக்குள் வருவாயாக எனக் கூறிய இறைவனார்
தில்லை வாழ் அந்தணர்கள் கனவிலும் அவ்வாறே தோன்றி நந்தனார் மூழ்கத்
தீஅமைத்துக் கொடுக்கும்படிக் கட்டளை இடுகிறார். அச்சத்துடன் நந்தனாரைத்
தேடிப் போகும் தில்லைவாழ் அந்தணரைத் தீமூட்டித் தருமாறு நந்தனார் வேண்ட அவர்களும் இறைவனைத் துதித்து அவ்வாறே செய்கிறார்கள். தீயில் மூழ்கிய நந்தனார் புதுப் பிறவி எடுத்தாற்போல் மீண்டு வந்து தில்லை வாழ்
அந்தணர்களுடன் அம்பலத்து ஆடுவானின் சன்னதிக்குச் சென்று இறைவனுடன் ஐக்கியம் ஆகிறார். அதற்குரிய பாடல்கள்;

"செந்தீமேல் எழும்பொழுது செம்மலர்மேல் வந்தெழுந்த
அந்தணன்போல் தோன்றினார் அந்தரதுந்துபி நாதம்
வந்தெழுந்தது இரு விசும்பில் வானவர்கள் மகிழ்ந்தார்த்துப்
பைந்துணர் மந்தாரத்தின் பனிமலர் மாரிகள்பொழிந்தார்." -1073-ம் பாடல்

திருவுடைய தில்லை வாழ் அந்தணர்கள் கை தொழுதார்
பரவரிய தொண்டர்களும் பணிந்து மனம் களி பயின்றார்
அருமறைசூழ் திருமன்றி ஆடுகின்ற கழல்வணங்க
வருகின்றார் திருநாளைப் போவாராம் மறை முனிவர்" -1074-ம் பாடல்

"தில்லைவாழ் அந்த்ணரும் உடன் செல்லச் சென்றெய்திக்
கொல்லைமான் மறிக்கரத்தார் கோபுரத்தைத் தொழுதிறைஞ்சி
ஒல்லை போய் உட்புகுந்தார் உலகுய்ய நடமாடும்
எல்லையினைத் தலைப்பட்டார் யாவர்களும் கண்டிலரால்." -1075-ம் பாடல்

இது தான் பெரியபுராணத்தில் நாம் காணும் நந்தனாரின் சரித்திரம். தவிர, பெரிய புராணத்தில் சேக்கிழார் தில்லை வாழ் அந்தணர்களைப் பற்றியும் எழுதி இருக்கிறார். அவர்களின் தவநெறியைப் பற்றியும், சீலத்தையும், ஒழுக்கத்தையும், சிவனையன்றி சிந்தையில் எவரையும் கொள்ளாத பாங்கையும் போற்றித் தான் பாடி இருக்கிறார். அந்தப் பகுதி நான்
சிதம்பரம் தீட்சிதர் வரலாறு எழுத எண்ணி உள்ளேன். அப்போது விரிவாக
எழுதுகிறேன். இதைத் தவிர தேவாரம் பாடுவதைப் பற்றியும் கேட்டிருந்தார்.
தேவாரம் அங்கே தினமும் பாடப் படுகிறது, குறிப்பிட்ட நேரங்களில் தேவாரம் பாடாமல் ஆரத்தி எடுக்கப் பட மாட்டாது. தவிர மார்கழி மாதம் நடராஜர் திரு உலா வரும்போது தேவாரம் ஓதுவோர் முன் சென்று தேவாரம் ஓதிக் கொண்டு போக, பின்னே நடராஜர் அதைக் கேட்டுக்
கொண்டு போக அவர் பின்னே வேதம் ஓதுவோர் வேதம் ஓதிக் கொண்டு வரும் காட்சியை இன்றும் திருவாதிரைத் திருநாளில் காணலாம்.

பத்திரிகையில் வந்த செய்திகளின் படி தில்லைச் சிதம்பரத்தில் தேவாரம் பாட வந்தவரின் நோக்கம், பாட நினைத்த நேரம், முறை இவைகளைப்
பற்றிய உண்மை தெரிந்திருந்தாலும் அதைப் பற்றிக் குறிப்பிட விரும்பவில்லை.

Saturday, February 17, 2007

211. சிதம்பரமும், நானும்

போன மாதம் சிதம்பரம், கடலூர் செல்லும்போது நாங்கள் அரசுப் பேருந்தில்
தான் பயணம் செய்தோம். அப்போது என்னமோ எனக்குள்ளே ஒரு இனம்
தெரியாத கலக்கம் இருந்து கொண்டே இருந்தது. அதற்கு ஏற்ப நாங்கள் சென்ற பேருந்தானது சிதம்பரத்தை நெருங்கும் சமயம், புவனகிரிக்குச் சற்று முன்னால் விபத்துக்கு உள்ளானது. இறை அருளால் எவருக்கும் அடியோ, அல்லது உயிர்ச்சேதமோ ஏற்படவில்லை, எனினும் எனக்கு அரசுப் பேருந்தின்
வேகமும்,ஆட்டமும் கொஞ்சம் பயமாகவே இருந்தது. தரமற்ற சாலைகள் முதல் காரணம், பராமரிப்பு அற்ற வாகனங்கள் இரண்டாவது காரணம், இதை எல்லாம் பொறுத்துக் கொண்டு வேறு வழி இல்லாமல் பயணம் செய்யும் பயணிகள் அடுத்த காரணம் என்று இது ஒரு தொடர்கதை தானே தவிர நம் நாட்டில், அதுவும் தமிழ் நாட்டில் இதற்கு ஒரு முடிவு என்னமோ கிடையாது.

சிதம்பரம் பல முறை போய் வந்திருக்கிறேன். இது ஒன்றும் முதல் முறை
இல்லை. நடராஜர் தரிசனம் மிக அருகாமையில் கண்டு களித்திருக்கிறேன்.
இம்முறை என்னுடைய கணவரின் குருவும், அங்கே சேவை செய்யும் தீட்சிதர்களில் ஒருத்தருமான திரு ராமலிங்க தீட்சிதர் அவர்களிடம் மஹாபாரதத்தில் திரெளபதி ஐந்து பேரை மணந்து கொண்டதைப் பற்றிய
என்னுடைய சந்தேகத்தை நிவர்த்தி செய்யுமாறு கேட்டேன். வியாசர் என்ன
சொன்னார் என்று தக்க பதில் அனுப்புவதாய்க் கூறி இருக்கிறார்.
காத்திருக்கிறேன்.

அப்படியே தில்லைச் சிதம்பரம் பற்றியும், கோவிலின் வழிபாடு பற்றியும்,
தீட்சிதர்களின் வரலாறு பற்றியும் அவர் ஆய்வு செய்த புத்தகம் ஒன்றும்
அன்பளிப்பாய்க் கொடுத்திருக்கிறார். படிக்க வேண்டும். படித்ததும் நான் அறிந்து கொண்ட உண்மைகளை எழுத வேண்டும் என்ற ஆவலுடன் நானே காத்துக் கொண்டிருக்கிறேன்.

தில்லைச் சிதம்பரத்திலே "தேவாரப் பாடல்கள்" காலம் காலமாய் ஓதப் பட்டு வருகிறது. தினமும் காலையில் நடராஜருக்குத் தினசரிக் கணக்கு ஒப்பிக்கும் பழக்கம் ஒன்று உண்டு. அதற்குப் பின் பூஜைகள் நடந்து முடியும் வேளையில், முதலில் தேவாரம் ஓதும் "பரம்பரை ஓதுவார்கள்" அதற்கென உள்ள இடத்தில் இருந்து கொண்டு தேவாரம் ஓதியதும், பின் மறுபடி
வேதம் ஓதுவார்கள். அதற்குப் பின் பூஜை மறுபடி, பின் மறுபடி தேவாரம், பின்
வேதம், பின் பூஜை என்று தொடர்ந்து ஒரு மணி நேரம் செய்த பின் தீப ஆராதனை காட்டி ஓதுவார்களுக்கு அந்த ஆராதனையை முதலில் காட்டியதும் பின் வந்திருக்கும் பக்தர்களுக்குக் காட்டுவார்கள். தேவாரம் வைத்துப் பாதுகாத்த அறை "தேவார அறை" என்ற பெயரிலே இன்னும் இருக்கிறது. தினமும் இருமுறை அங்கே தேவாரம் ஓதப் படுகிறது. நான் பலமுறை போனபோது இந்தப்பூஜையில் கலந்து கொண்டு இதைத்
தரிசிக்கும் பேறு பெற்றிருக்கிறேன்.

பெரிய புராணத்தில் நந்தனார் சரித்திரத்தில் ஒரு இடத்தில் கூட நந்தனாரை வேதியர் கோவிலுக்குச் செல்லக் கூடாது எனத் தடுத்ததாய் வரவில்லை என வாரியார் ஸ்வாமிகள் கூறுவார்கள். அது பின்னால் வந்த கதை எனவும் கூறுவார்கள். அதுபோல்தான் சிதம்பரத்தில் தேவாரப் பாடல் தடை செய்யப் படுகிறது என்பதும். இது போல் நிறையக் கதைகள் உலவுகின்றன. அகலிகை கல்லாய் மாறினாள் என்பதும் ஒரு கதை தான் இல்லையா? உண்மையில் கெளதமர் அகலிகையை "நீ யார் கண்ணிலும் படாமல் ஒரு தூசியைப் போல் இரு" என்றுதான் சொல்கிறார் என்பதாய் வால்மீகி ராமாயணத்தில் வருகிறது.

கம்பரும் இதை ஒட்டியே எழுதி இருக்கிறார் என நினைக்கிறேன். பார்க்க வேண்டும், என்ன எழுதி இருக்கார்னு. புராணங்களின் தமிழ் மூலமும், இதிகாசங்களின் தமிழ் மூலமும் சற்றுப் பொறுமையுடன் படித்து அறிந்து
கொண்டோமானால் இவ்விதத் தவறுகள் நேராது. போகட்டும். இப்படியாக நாங்கள் சிதம்பரம் போய்ப் பின் கடலூர் போய் நடேசனின் விருந்தோம்பலில் திளைத்து விட்டு வந்தோம். நடேசனிடம் நாம் கற்றுக் கொள்ள வேண்டியது நிறையவே இருக்கிறது. நண்பர்களையும் விடாமல், உறவையும் விடாமல் எல்லாரையும் அரவணைத்துப் போகும் பாங்கும், மறக்கவே முடியாதது. அவர் மனதுக்கு இசைந்த வண்ணம் நடக்கும் மனைவி கிடைத்ததும் அவர் செய்த அதிர்ஷ்டம் தான்.

கடலூரில் இருந்து திரும்பும்போது பஸ் கிடைக்காமல் வரிசையில் நின்று முன் பதிவு மாதிரி டோக்கன் போட்டுக் கொண்டு ஸ்பெஷல் பஸ்ஸில் வந்தோம். பேருந்தின் ஆட்டமும், வேகமும் மறுபடி கதிகலங்கச் செய்தது. ஆகவே திருநெல்வேலி போகும்போது பேருந்து வேண்டாம் என முடிவெடுத்தோம். ஆனால் முதலில் கும்பகோணம் போய்விட்டுப்
பின்தான் போக வேண்டும். கும்பகோணம் வரைப் பேருந்து தான். தனியார்ப்
பேருந்தில் போகலாம் என முடிவு எடுத்துப் போனால் அதுவும் இம்மாதிரித்தான் போனது. அப்புறம் தான் புரிந்தது, இது தரமற்ற சாலைகளின் குறைபாட்டால் நேர்கிறது என. என்ன செய்ய? நாம் இருப்பது இந்தியா, அதுவும் தமிழ்நாடு. என்ன செய்ய முடியும்? கும்பகோணம் ஒரு மாதிரியாகப் போய்ச் சேர்ந்தோம்.

கும்பகோணத்திலும் சுற்று வட்டாரக் கிராமங்களிலும் பார்த்த இடமெல்லாம்
திரெளபதி அம்மன் கோவில். எங்கே இருக்கிறதுன்னு யாரோ கேட்டாங்களே?
ரிஷி ரவீந்திரனோ ஒரு வேளை? வந்து பாருங்க, தெருவுக்கு ஒரு கோவில்
திரெளபதி அம்மன் கோவிலா இருக்கு.

ஹிஹிஹி, பிரயாணம் விவரம் ரொம்பவே வந்துடுச்சோ, பழக்க தோஷம். இனிமேல் குறைச்சுக்கிறேன். என்னோட அவதியை உங்க கிட்டே எல்லாம் சொல்லி ஆத்திக்காம வேறே யார் கிட்டே சொல்றது? அதான்!! :D

அப்புறம் இந்தத் தலைப்பு ஒரு கவர்ச்சிக்காகக் கொடுத்திருக்கேன். அப்படியாவது போணி ஆகட்டும்னு தான். பி.சி.யோட எனக்குச் சந்திப்பு ஏற்பட்டதுன்னு நினைச்சு வரவங்க இருப்பாங்க இல்லை அதான்!! ஹிஹிஹி!

Friday, February 16, 2007

210 400 பதிவுகள் கண்ட கார்த்திக்

கார்த்திக் 400 பதிவுகள் போட்டிருக்கிறார். எனக்குத் தெரியவில்லை. நேற்று வேறு வேலை குறுக்கிட்டதால் நிறைய வலைப்பக்கங்களுக்குச் செல்லவே முடியவில்லை. எல்லாரும் வந்து வாழ்த்திட்டுப் போயிருக்காங்க. நான் தான் பேசாமல் இருந்திருக்கிறேன். குற்ற உணர்ச்சி குத்துகிறது. அதான் பதிவாவே போடறேன். கார்த்திக் எழுத ஆரம்பிச்சது எப்போன்னு தெரியாது. இருந்தாலும் சில ஆங்கிலப் பதிவுகளையும், அப்புறம் அவர் தமிழில் எழுத ஆரம்பிச்சதிலே இருந்தும் படித்துக் கொண்டே வரேன். ரொம்பவே நல்லா எழுதறார். மனத்தின் ஆழத்தில் இருந்து வரும் உணர்வு பூர்வமான வார்த்தைகள். சத்தியம் ஒவ்வொன்றும். அதுவும் அவரோட அனுபவங்கள் வித்தியாசமாய் இருக்கின்றன. சினிமா பத்தி நிறைய எழுதறாரேனு நான் குறைப்பட்டுக் கொண்டதும் கொஞ்சம் கூடக் கோபப்படாமல் கொஞ்சம் குறைத்திருக்கிறார்னு நினைக்கிறேன். சினிமாவும் வேணும்தான், மருந்து மாதிரி இருக்கணும். மற்ற படி அவர் இன்னும் நல்லா எழுதி நன்றாகப் பிரகாசிக்க என்னுடைய மனப்பூர்வமான வாழ்த்துக்கள். கதை, கவிதை எல்லாத்திலேயும் கலக்கவும் என்னுடைய வாழ்த்துக்கள். நல்ல மண வாழ்க்கை அமையவும் வாழ்த்துக்கள். வாழ்த்துக்கள் கார்த்திக்.

Thursday, February 15, 2007

209. அன்பே சிவம்

நாளை சிவராத்திரி. முதலில் சிவராத்திரி
என்றால் என்ன? சிவபெருமான் லிங்க
வடிவாகத் தோன்றிய காலம் தான்
லிங்கோற்பவ காலம் என்று சொல்லப்
படுகிறது. அந்த லிங்கோற்பவம் நடந்த
நேரம் இரவு 11-30 மணிக்கு மேல் 1-00
மணி வரையாகும். லிங்கோற்பவம் நடந்த
தலம் திருஅண்ணாமலை ஆகும்.
சிவலிங்கம் பற்றிய விளக்கங்கள் எல்லா
ஞான நூல்களிலும், முக்கியமாகத் திருமூலர்
திருமந்திரத்திலும் சொல்லி இருக்கிறார்கள்.
சம்ஸ்கிருதத்தில் ஸ்காந்த புராணம் என்னும்
கந்த புராணத்திலும் சொல்லப்
பட்டிருக்கிறது. அது என்ன என்றால்
வழிபாடு மூன்று வகைப்படுத்தப்
பட்டிருக்கிறது. அவை உருவ வழிபாடு.
இப்போது நாம் செய்து வருவது உருவ
வழிபாடு ஆகும். இன்னொன்று அருவுருவ
வழிபாடு. மற்றது அருவ வழிபாடு ஆகும்.
அருவ வழிபாடு என்பது உருவமற்ற
பரம்பொருளைக் குறிக்கிறது என்று நம்
எல்லாருக்கும் நன்கு தெரியும்.
"பார்க்கும் பொருளெல்லாம்
பரம்பொருளாகப் பார்ப்பது" என்பதும்
அருவ வழிபாட்டைச் சேர்ந்தது ஆகும்.
எல்லாமே இறைவன் என்ற நிலையை
ஞானிகளும், மஹான்களும் தான் அடைய
முடியும் என்பதால் நம்மைப் போன்ற
சாமானிய மனிதருக்காக ஏற்பட்டது உருவ
வழிபாடு. இரண்டுக்கும் இடைப்பட்டது
அருவுருவ வழிபாடு. இதில் உருவம்
இருக்கும். ஆனால் அவயங்கள்
இருக்காது. அருவமாக இருக்கும். இந்த
அருவுருவ வழிபாட்டைக் குறிப்பது தான்
சிவலிங்கத்தை நாம் வழிபடுவது ஆகும்.
இதை எப்படிச் சொல்வது என்றால்
இவ்வுலகாகிய பூமியைப் பெண்ணாக
எடுத்துக் கொண்டால் ஆகாயம் என்பது
அதனுடன் இணைந்த ஆணாகும். அது
போல் லிங்கம் இருக்கும் பீடம்
ஆவுடையாள் எனப்படும் அம்பிகை
என்றால் லிங்கமாகிய பாணம்
சர்வேஸ்வரன் ஆகிறான்.
ஆகாயத்தை நாம் தினமும் பார்க்கிறோம்.
அதன் வடிவம் என்ன? நம்மால் சொல்ல
முடியாது. வடிவம் புலப்படுவதும் இல்லை.
ஆனால் கவிழ்த்து வைக்கப் பட்ட
மரக்காலைப் போல் இருக்கும் இந்த
ஆகாயத்துக்கு இது தான் உருவம் என
நாம் நினைத்துக் கொள்கிறோம். இவ்வுலகம்
பூராவும், அனைத்துமே இந்த ஆகாயம்
என்னும் கூரையின் கீழ் தான்
இருக்கின்றன, நாம் உட்பட. இந்த அண்ட
லிங்கமாகிய ஆகாயத்துக்கு அபிஷேஹம்
செய்ய ஏற்பட்டவை தான் கடல் கள்.
ஆகாய லிங்கம் எவ்வளவு பெரிதோ
அத்தனைக்கும் தேவைப்படும் அளவு நீர்
நிறைந்த சமுத்திரங்கள் இருக்கின்றன.
அபிஷேஹம் முடிந்த ஆகாய லிங்கத்திற்கு
நட்சத்திரங்களே பூக்களாகவும்,
மாலைகளாகவும் ஆகின்றன. ஆடையோ
எனில் எட்டுத் திக்குகளாம். இதைத் தான்
திருமூலர் தன் திருமந்திரத்தில் சொல்லி
இருக்கிறார். (எனக்குத் திருமந்திரம்
பூராவும் தெரியாது. சிவராத்திரி
மஹிமையில் படித்தது பற்றித் தான்
எழுதுகிறேன்.) சைவத் திருமுறைகளில்
பத்தாவது திருமுறை எனப்படும் திரு
மந்திரத்தில் திருமூலர் சொல்கிறார்.

"தரை உற்ற சக்தி, தனி லிங்கம் விண்ணாம்
திரை பொரு நீரது மஞ்சன சாலை
வரை தவழ் மஞ்சு வான் உடுமாலை
கரை அற்ற நந்திக்குக் கலை திக்குமாமே."

என்று லிங்கத்தின் அருவுருவத்தை
வர்ணிக்கிறார். திருமூலர் சிவனை நேரில்
கண்டவர் எனக் கூறுவார்கள். 63
நாயன்மாரிலும் ஒருத்தராகப் போற்றப்
படுகிறவர். இவரது காலத்தைப் பற்றிய
தகவல்கள் சற்று முரணாக இருக்கின்றது.
திருமூலரின் வாக்குப்படி நாம் அனைவரும்
இருப்பது ஒரே கூரையின் கீழ்.
பிரம்மாவும், விஷ்ணுவும் சிவனின்
அடிமுடியைத் தேடியதும், பிரளய காலம்
முடிந்து இரவு நேரத்தில் 4 ஜாமமும்
அம்பிகை இறைவனைப்பூசித்ததும்
சிவராத்திரி எனச் சொல்லப் படும் மாசி
மாதத் தேய்பிறைச் சதுர்த்தசி அன்று தான்.
பொதுவான நியதிப்படி பகல் பொழுது
ஈசனுக்கும், இரவுப் பொழுது
அம்பிகைக்கும் உரியது. சிவராத்திரி அன்று
மட்டும் அம்பிகை தனக்கு உரிய இரவை
ஈசனுக்கு அளித்து அவர் பெயரால்
வழங்கச் செய்கிறாள். சிவம் வேறு அறிவு
வேறு அல்ல என்பார்கள். அறிவே சிவம்.
நம்முடைய அறிவால் அறிந்து கொண்ட
சிவனைப் போற்றித் துதிப்போம்.
"தென்னாடுடைய சிவனே போற்றி,
போற்றி!!எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி,
போற்றி!!"

Wednesday, February 14, 2007

208. தொந்தி விளாகம் தெரு, கல்லிடைக்குறிச்சி!!!!!

ரொம்ப நாளாக் கல்லிடைக்குறிச்சியிலே போய் அப்பளாம் வாங்கிட்டு வரணும்னு ஆசை. நிறையச் சாப்பிட்டிருக்கேன், மதுரையிலே இருக்கிறப்போ. இருந்தாலும் அப்பளம் தயார் செய்யும் இடம் போய் வாங்கிட்டு வந்ஹு சாப்பிட்டால் அதன் ருசியே தனி இல்லையா? இப்போ அதுக்குச் சந்தர்ப்பம் வந்தது. போயிட்டு வந்தேன். அப்பளாம் மட்டும் வாங்கலை, கூடவே நிறையக் கோவில்களுக்கும் போயிட்டு வந்தேன். அப்புறம் அம்பா சமுத்திரம் போய் அங்கே கெளரிசங்கர் ஹோட்டலில் தயிர் வடை (ரொம்பவே நல்லா இருந்தது) சாப்பிட்டுட்டு வந்தேன். திண்டுக்கல்லில் ரெயில் நின்னப்போ இறங்கி வெள்ளங்கோடும் போயிட்டு அப்படியே சிறுமலையிலும் பயணம் செய்யணும்னு ஆசைதான். மதுரையிலும் போய் எல்லாரையும் பார்க்க ஆசை. 2 முறையாவே மதுரை போக முடியலை. மதுரையில் நிறையவே இருக்காங்க பார்க்க. ஆனால் போகிறப்போ டிக்கெட்டும் சரி, திரும்பறப்போ டிக்கெட்டும் சரி, கடைசியா நாங்க இறங்க வேண்டிய இடத்துக்கு வாங்கிட்டோம். அடுத்த பயணம் போறப்போ நிச்சயம் அங்கே எல்லாம் போயிட்டு சிறுமலைப்பழமும் வாங்கிட்டு வரணும். நான் போயிட்டு வந்ததைப் பத்திச் சீக்கிரமாவே எழுதறேன்.

Wednesday, February 07, 2007

207. அதியமானைக் காணவில்லை!!!!!!!!!!

ஹிஹிஹி, நம்ம அதியமான், கோப்பெருஞ்சோழர், பாரி வள்ளல் அவர்களைப் பல நாட்களாய்க் காணவில்லை. பச்சை விளக்கும் எரிய வில்லை. அன்றொரு நாள் "தலைவி" அம்பியிடம் போட்டுக் கொடுத்து விட்டாரே (அம்பியின் தங்கமணி யார்னு அதியமானோட மண்டையைக் குடைந்தது பற்றி) என்று மனது உடைந்து போனவர் தான். அப்புறம் ஆளே இல்லை. அவர் நண்பரிடம் கேட்டால் "நான் ரொம்ப பிசி"ன்னு சொன்னாராம். அதான் நானும் ரொம்பவே பிசின்னு பதிவு எழுதிட்டேன். கண்டு பிடிச்சுக் கொடுத்தால் ஒரு பின்னூட்டம் இலவசம். அவர் கொடுத்தது என்னமோ அழுகின நெல்லிக்காய்தான். அதுக்கே ரொம்ப ஓவரா பில்டப் கொடுக்கிறார் இல்லை? :D அடையாளம் தேவையில்லைனு நினைக்கிறேன்.

206. தொண்டர் தம் பெருமை சொல்லவும் பெரிதே!!!

ஏதோ விளையாட்டாக ஆரம்பித்தேன், நான் தலைவின்னு. அது என்னடான்னா இப்போ ஒரு உண்மையாகவே ஆயிடும் போல் இருக்கு. உண்மையில் என்னுடைய விளையாட்டுப் புத்தி என்னை விட்டுட்டுப் போக வில்லை என்று புரிந்து கொண்டும் கூட எல்லாருமே என்னை ரொம்பவே கெளரவப் படுத்தி விட்டீர்கள். எல்லாருக்கும் என்னோட நன்றிகள். என் கணவரும் தெரிவிக்கச் சொன்னார். குறிப்பாகப் பதிவுகளைப் போட்டி போட்டுக் கொண்டு போட்டுக் கெளரவித்த மணிப்ரகாஷ், கார்த்திக் மற்றும் வேதாவிற்கு நான் தவறாமல் அவர்கள் எழுதுவதை ஊக்குவிப்பது ஒன்று தான் நான் செய்யும் கைம்மாறாக இருக்கும். மற்றபடி தி.ரா.ச. சார், பொற்கொடி, எஸ்.கே.எம்., துளசி, ஜி, கோபிநாத், வெற்றி,. ஜொள்ளுப்பாண்டி, ராம்., (புது ப்ளாக்கருக்கு மாத்தியதோடு இல்லாமல் அவ்வப்போது யோசனைகளும் கூறி வருகிறார்.),சிவமுருகன், லட்சுமி, சென்ஷி, மலை நாடான், செல்வன், இன்னும் விட்டுப் போன எல்லாருக்கும் என் மனமார்ந்த நன்றிகள். ஒரு வாரத்துக்கு என்னோட தொல்லை இருக்காது. அடுத்த புதன் அன்று சந்திப்போம்.

205. நம்பிக்கைக் குழுவின் கவிதைப் போட்டி அறிவிப்பு

முத்தமிழ்க்குழுமத்தின் அறிவிப்பைப் பார்த்திருப்பீர்கள். அது கதை, கட்டுரை, கவிதை எது வேணுமானாலும் அனுப்பலாம். யார் வேணுமானாலும் அனுப்பலாம். ஆனால் "நம்பிக்கைக் குழு"வின் கவிதைப் போட்டி ஆண்களுக்கு மட்டும். ஆண்கள் மட்டுமே கலந்து கொள்ள வேண்டிய இந்தப் போட்டியின் தலைப்பு "காதல்". காதலைப் பற்றி மென்மையாகவும், விரசம் இல்லாமலும் எழுதப்படும் கவிதைகள் வரவேற்கப் படுகின்றன. இதில் நடுவர்கள் பெண்களாமே!!!!!!!!!!! பெண்களால் தேர்ந்தெடுக்கப் படப் போகிற இந்தக் குழுமத்தின் கவிதைப்போட்டியில் ஜெயித்தால் பணமாகவே கொடுக்கிறார்களாம்!!!!!!!!!!!ம்ம்ம்ம்ம்ம்ம், கவிதையும் வராது, வந்தாலும் போட்டியிலும் கலந்து கொள்ள முடியாது. என்ன செய்யறது? பெருமூச்சுத் தான் விடணும். கீழே காணப்படும் மெயில் (மயில்?) விலாசத்துக்குப் போட்டிக் கவிதைகளை அனுப்புமாறு தமிழ்மணம் ஆண் வாசகர்களைக் கேட்டுக் கொள்கிறேன்.

positiverama@gmail.com

paransothi@gmail.com

umanaths@gmail.com கடைசித் தேதி 15, பிப்ரவரி.

இந்த விலாசங்களுக்குக் கவிதைகளையும் அனுப்பலாம். உங்க சந்தேகங்களையும் கேட்கலாம்.

Tuesday, February 06, 2007

204. இவளே தான் அவள்-லலிதே!

இப்போது நாம் மறுபடியும் "தேவியின் திரு அவதாரங்களை"ப் பார்ப்போம். முதலில் இரு அவதாரங்களைப் பார்த்தோம். மஹா விஷ்ணுவாகத் தேவி அவதாரம் எடுத்ததையும், அந்த விஷ்ணுவின் பத்து அவதாரங்களும் தேவியின் பத்து விரல்களில் இருந்து தோன்றியதாகவும் பார்த்தோம்.

2-வது அவதாரம் திருப்பாற்கடலில் யோகநித்திரை புரிந்துகொண்டிருந்த விஷ்ணுவின் நித்திரையைக் கலைத்து "மது, கைடபர்" என்னும் அரக்கர்களைக் கொல்லுமாறு சொன்னது. இப்போது நாம் காணப் போவது எல்லாரிடமும் கேள்விக்குறி ஆகி இருக்கும் "மோகினி" அவதாரம்.

தேவாசுர யுத்தத்தில் பாற்கடல் கடையப் பட்டது என்று சொல்வதுண்டு. இதன்
தாத்பரியம் என்ன என்றால் எப்படி நாம் தயிரைக் கடைந்தால் அதில் இருந்து
வெண்ணை திரண்டு வருகிறதோ, அது போல் நம் பக்தி என்னும் மத்தைக்
கொண்டு இறையருள் என்னும் கடலைக் கடைந்தோமானால் அதில் நமக்குக்
கிடைப்பது உண்மையான கடவுள் எனப்படும் பிரம்மம் என்னும் தத்துவம். சரியோ, தப்போ தெரியாது, நான் புரிந்து கொண்ட மாதிரிச் சொல்லி
இருக்கேன். நமக்கு ஏன் இப்படிச் சொல்லப் பட்டது என்றால் நாம் எல்லாருமே ஒரு வகையில் கதை கேட்பதில் ஆர்வம் உள்ளவர்கள். நம்ம கிட்டே போய் நீ ரொம்ப அசுர குணம் உள்ளவள், இப்படி இருக்காதே! என்று நேர்முகமாய்ச் சொன்னால் கேட்போமா? நிச்சயமாய் மாட்டோம். ஆகையால் இம்மாதிரிக் கதைகள் சொல்லி அதன் மூலம் நம்முடைய மூளைக்குள் பக்தி என்னும் விதை ஊன்றப் படுகிறது. இது கொஞ்சம் ஆழமாய்ப் போனால் தான் உண்மை என்னன்னு புரியும். நமக்குள்ளே உறைகிற இறை என்னும் சக்தி தென்படும். அதற்கு முதல்படி தான் இம்மாதிரிக்கதைகள்.

திருப்பாற்கடலைக் கடைந்த காலத்தில் அதில் இருந்து தோன்றிய அமிர்த
குடத்தை அசுரர்கள் கவர்ந்து கொண்டு போய் வைத்துக் கொண்டார்கள். உலகில் எல்லாமே சமமாய் இருக்க வேண்டும். ஒரு புல், பூண்டு, பூச்சி, புழு கூடத் தேவையில்லாமல் படைக்கப் படவில்லை. ஆங்கிலத்தில் இதை "ecological balance" என்று சொல்வதுண்டு. ஆகவே அசுரப் படைப்பும் தேவையே. அப்போது தான் தர்மம் என்ன வென்று விளங்கும். இது நம்மிடம் உள்ள அசுர குணங்கள் தான் என்றும் புரிந்து கொள்ள வேண்டும். அத்தகைய அசுர குணம் இருந்தால் உண்மையான பக்தி வளராது.

தேவர்கள் தேவியைத் தியானிக்க தேவி அவர்கள் முன் தோன்றினாள். விஷயம் தெரிந்த தேவியானவள் ஒரு அழகிய பெண்ணாக மாறி மோகினி என்ற பெயருடன் அசுரர் முன் தோன்றி ஆடிப் பாடி அசுரர்களை மயக்கி அமிர்த கலசத்தை வாங்கினாள். இங்கே ஒரு விஷயம் கவனிக்க வேண்டும். பிடிவாதக் காரக் குழந்தை கையில் கிடைத்த ஒரு முக்கியமான பொருளை மீட்க அந்தத் தாயானவள் எவ்வாறு கொஞ்சிக் கெஞ்சுவாள். அப்போது நாம் அந்தத் தாயைக் குறையா சொல்லுவோம்? குழந்தையை நல்வழிப் படுத்தத் தாய் செய்யும் யுக்தி என்று புரிந்து கொள்ள மாட்டோமா? அது போல் தான் இதுவும். அந்த மோகினி தான் ஈசனுடன் சேர்ந்து "சாஸ்தா" என்னும் ஹரிஹர புத்திரரை உண்டாக்கினாள். தர்மத்தை நிலைநாட்டவும், காவல் தெய்வமாகவும் போற்றப்படும் தர்ம சாஸ்தாவின் திரு அவதாரம் தான் "சபரிமலை ஸ்ரீ ஐயப்பன்." புராணங்களின் படி சாஸ்தா 2முறை திருமணம் ஆனவர். ஐயப்பன் நைஷ்டிக பிரம்மச்சாரி. இந்தக் கதைக்கு அப்புறமாய்ப் போவோம்.

இப்போ மீண்டும் தேவியின் 4வது அவதாரம்.தட்சன் தன் மாப்பிள்ளை ஆன ஈசனை அவமதித்து விட்டு யாகம் செய்தான். தட்சனின் மகளாய்ப் பிறந்த
தாட்சாயணியை ஈசன் மணந்திருந்தும் ஈசனை மதிக்காத தன் தகப்பனைக் கண்டு தேவி நியாயம் கேட்க அவனுடைய அகம்பாவம் பிடித்த செயலினால் மனது உடைந்து போய்த் தன் தேகத்தையே அந்த யாகத்தீயில் கொடுத்துத் தியாகம் செய்தாள் தாட்சாயணி. இது அவளுடைய 4-வது அவதாரம். சக்தியின் இந்த எரிந்த உடலைப் போட்டுக் கொண்டு ஈசன் கோபத்தில் ஆடிய நடனத்தால் சகல உலகங்களும் நிலை குலைய, அப்போது அங்கே வந்த விஷ்ணுவானவர் தன் சுதர்சன சக்கரத்தால் தேவியின் உடலைத் துண்டு துண்டாக அறுக்க அவை ஒவ்வொன்றும் இந்தப் பரந்த பாரதமெங்கும்
போய் வீழ்ந்தது. அவ்வாறு தேவியின் அங்கங்கள் வீழ்ந்த இடம் எல்லாம் ஒரு
"சக்தி பீடம்" ஆனது. இவ்வாறு அட்சர சக்தியின் பீடங்கள் 51 ஆனது. வட மொழி எழுத்தில் அட்சரங்கள் 51 என்பதாலும் இருக்கலாம்.

சக்தியை இழந்த ஈசன் தவத்தில் இருக்க உலகம் உய்யவும், மறுபடி இப்பூவுலகம் செழிக்கவும் விருப்பம் கொண்டு தேவாதி தேவர்கள் எல்லாரும் போய் மஹாவிஷ்ணுவை வேண்டி நிற்க அவர் சக்தியானவள் ஹிமராஜனின் புத்திரியாய் வளர்ந்து வருவதாயும் அவள் ஈசனைக்
குறித்துத் தவம் செய்து வருவதாயும், இருவரும் சேரவேண்டி மன்மதனைத்
துணைக்கழைக்க மன்மதனும் தன் பாணங்களால் ஈசனை எழுப்பக் கோபம்
வந்த ஈசன் தன் நெற்றிக் கண்ணால் மன்மதனை எரிக்கிறார். ஆனால் பின்னால் உண்மை உணர்ந்து கொண்டு மன்மதனுக்குச் சாப விமோசனம் கொடுக்கிறார். பின் பர்வத ராஜனின் புத்திரியான "பார்வதி"யைக் கல்யாணம் செய்து கொள்கிறார். சக்தியானவள் சிவசக்தி அம்சமாக ஒரு குமாரனைப் பெற்றுத் தன் சக்தியைத் திரட்டி "வேல்"ஆக்கிக் குமாரனுக்கு அளித்து "சூரன்" முதலான அசுரர்களை அழிக்க உதவி செய்கிறாள். இவளே "ஸ்ரீ லலிதா" ஆவாள்.

மன்மதன் எரிந்த சாம்பலில் இருந்து விஸ்வகர்மா உருவாக்கிய ஓர்
உருவம் ஈசரின் நோக்கினால் உயிர் பெறுகிறது. "பண்டாசுரன்" என்ற பெயர்
பெற்ற அவ்வுருவம் ருத்திர ரூபத்தில் கோபத்துடன் இருந்த ஈசனின் கோபா
அக்கினியின் பஸ்மத்தில் இருந்து உண்டானதால் மிகுந்த கோபத்துடன்
தேவர்களைப் பெரும்பாடு படுத்தினான். அப்போது தேவர்கள் எல்லாரும் கூடித் தங்களை "ஆத்மஹத்தி" செய்து கொண்டு ஒரு ஹோமம் செய்யவே அந்த ஹோமகுண்டத்தில் இருந்து ஸ்ரீசக்ர ரதத்தில் தோன்றியவளும் இவளே!
இவள்தான் தன்னுடைய சக்திகளை எல்லாம் பலவிதமான அம்சங்கள் கொண்ட கன்னியராக்கி பண்டாசுரனைச் சம்ஹாரம் செய்து விட்டு காமேஸ்வரன் என்று சொல்லப் படும் ஈசருடன் ஐக்கியம் ஆகி
இருக்கிறாள். பலவிதமான பெயர்கள், பலவிதமான அவதாரங்கள். இருந்தாலும்
எல்லாம் ஒரே சக்தி.

இப்போது என்னையே எடுத்துக் கொண்டால், என் கணவருக்கு மனைவி, என் பெற்றோருக்குப் பெண், என் சகோதரர்களுக்கு முறையே தங்கை, அக்கா, என் குழந்தைகளுக்குத் தாய், என் மைத்துனர், நாத்தனார்களுக்கு அண்ணன்
மனைவி. நான் ஒருத்தி தான் பலபேர் இல்லை அல்லவா? மேலும் நான்
முன் பிறவியில் என்னவாய் இருந்தேனோ தெரியாது அல்லவா? அடுத்ததாய்ப் பிறவி உண்டா அதுவும் தெரியாது அல்லவா? இந்தச் சிருஷ்டி ரகசியத்தை உண்டு பண்ணுகிறவளுக்குப் பல பேரும், பல அவதாரமும் இருக்கிறதில் என்ன தப்பு? இது நாமே ஏற்படுத்திக் கொண்டாலும்
நம்முடைய செளகரியத்துக்காக ஏற்படுத்திக் கொள்கிறோம். நமக்குப் பிடித்த சக்தியை நாம் வணங்குவோம். அவளுடைய அருளைப் பெறுவோம்.

நம்முடைய இந்திய நாட்டிலேயே நான்கு திசைகளிலும் அவள்
அருளாட்சி தான். வடக்கே காஷ்மீரத்தில் வைஷ்ணவியாகவும், கிழக்கே கல்கத்தாவில் காளியாகவும், மேற்கே மும்பையில் மஹாலட்சுமியாகவும், தெற்கே கன்னியாகுமரியில் பகவதியாகவும் ஆட்சி செய்கிறாள். இந்தத் தேசம் முழுதும் அவள் அருட்பார்வையின் கீழே தான் இருக்கிறது.


"நாரணனென்றுப் பழவேதம்-சொல்லும்
நாயகன் சக்தி திருப்பாதம்:
சேரத் தவம் புரிந்து பெறுவார் இங்குச்
செலவம் அறிவு சிவபோதம்.

ஆதி சிவனுடைய சக்தி-எங்கள்
அன்னை யருள் பெறுதல் முக்தி
மீதி உயிரிருக்கும்போதே-அதை
வெல்லல் சுகத்தினுக்கு யுக்தி!"

மஹா கவி பாரதியார் எழுதியது.

Monday, February 05, 2007

203. வாமனன் பூஜித்த சிவனார்-3

கோவிலினுள் நுழையும்போதே காற்றுச் சில்லென வீசியது. ரொம்பவே
அமைதியான சூழ்நிலை. பிரகாரம் சுற்றி வந்து கர்ப்பக் கிரஹத்தினுள்
நுழையும்போது கர்ப்பக்கிரஹத்தின் வலது பக்கத்தில் சில கருங்கல் சிற்பங்கள் வடிக்கப் பட்டிருக்கின்றன. அப்போது தான் குருக்கள் வந்து மேற்கூறிய கதையைச் சொல்லிவிட்டுப்பின் அந்தச் சிற்பங்கள்
பற்றியும் கூறினார். அவை முறையே மஹாவிஷ்ணு வாமன அவதாரம் எடுத்து வந்து மஹாபலியிடம் பிட்சை கேட்பது, பின் சுக்ராச்சாரியார் கருடனுடன் போரிடுவது, வாமன அவதாரம் திருவிக்கிரம அவதாரம் எடுத்து
மஹாபலிக்கு மோட்சம் கொடுப்பது, பின் திரும்பக் குறளனாகி சிவ பூஜை செய்வது என்ற சிற்பங்கள் எழும்பி எத்தனை காலம் எனத் தெரியவில்லை. கர்ப்பக் கிரஹச் சுவரில் அவை எடுப்பது எவ்வளவு கஷ்டம் என்றும் பார்த்தால் தான் புரியும். எவ்விதமான வசதிகளும் இல்லாத காலத்தில் இம்மாதிரிச் சிற்பங்கள் எழுப்ப எத்தனை காலம் ஆகி இருக்கும், விளக்கொளி இரவில் இப்போது மாதிரிப் பிரகாசமாய் இருந்திருக்குமா? யார் பண
உதவி செய்திருப்பார்கள்? எந்த ராஜாவிற்கு இம்மாதிரிச் செய்ய யோசனை தோன்றியது என்பதை எல்லாம் எண்ணிப் பார்த்தால் எப்படிப் பட்ட கலைச் சிற்பங்கள் என்ற பொக்கிஷங்களை பக்தி என்னும் எண்ணங்கள் மூலம் மக்களுக்கு விட்டுச் சென்றிருக்கிறார்கள். நம் வருங்காலச் சந்ததியினர் இவற்றை எப்படிப் பாதுகாப்பார்கள்? என்றெல்லாம் யோசனை தோன்றியது.

கர்ப்பக்கிரஹத்தில் நுழைந்ததும் உள்ளே போட்டிருந்த நீல வண்ணத் திரையில் குபேர பீம ருத்திர சங்கரர் காட்சி அளித்தார். அவருக்கு தீப ஆராதனை காட்டிவிட்டுப்பின் திரையைச் சற்று விலக்கி உள்ளே தரிசனம் செய்து வைத்தார். சற்றுக் கூடுதல் நேரம் தரிசனம் செய்து வைத்தார்
என்றே சொல்ல வேண்டும். மிக அழகிய லிங்க ரூபத்தில் அம்பாளும் ஐக்கியம் என்றும், இந்த ஸ்வரூபத்தை எப்போதும் மஹாவிஷ்ணு பூஜித்து வருகிறார் என்றும் அந்தப் பூஜையை நேருக்கு நேர் பார்க்கும் சக்தி நமக்கு இல்லை என்பதாலும் சன்னதி எப்போதும் திறந்து வைப்பதில்லை. மேலும்
இது ஆதி சிதம்பரம் என்று சொல்வதாலும், இந்தக் கோயிலிலும் இது ரகசியம் என்று ஐதீகமாய்க் கொண்டு திரையை விலக்கித் தரிசனம் செய்து வைக்கிறார்கள். இந்தக் கோவிலுக்குக் கிழக்கே மலையில் தீபம் ஏற்றுவதால் அது இறைவனின் நெற்றிக்கண்ணாகப் போற்றப் படுகிறது. இந்த தீபம் ஏற்றும் இடம் அம்மன் சன்னதியில் இருந்து நன்றாகத் தெரிகிறது. சன்னதிக்கு நுழையும்போது சற்றே திரும்பி எதிரே பார்த்தால் ஒரு கல் தூண்
இருக்கிறது. அதில் தான் தீபம் ஏற்றுவார்களாம். அம்பாளின் பெயர்
அம்புஜாக்ஷி அம்மாள். திருஞானசம்மந்தர் இக்கோவிலைப் பற்றிப் பாடி இருக்கிறார் என்று கூறுகிறார்கள். கடல் சூழ்ந்த உலகில் தர்மத்தை நிலைநாட்டத் தோன்றியதால் இவ்வூரைத் தேவனாம்பட்டினம் என்றும்
கூறுவார்கள். மாசி மகத்தில் இங்குக் கடல் நீராடுவது விசேஷமாய்க் கூறுகிறார்கள். இங்குள்ள மலைக்கு ஜோதிகிரி, ரத்னகிரி, புஷ்பகிரி, ஒளஷதகிரி என்றெல்லாம் பெயர்கள் உண்டு. தற்காலத்தில் "கேப்பர் க்வாரி" என்று அழைக்கப் படுகிறது.

202. நான் யார், நான் யார்,நான் யார்?

நான் யார்,நான் யார்,நான் யார்? நான் யாரு, எப்படி இருப்பேன்னு
எல்லாருக்கும் மண்டையைக் குடையுது. பார்த்தவங்க ரொம்பக் கம்மி. இந்த வலை உலகிலே முதன் முதல் என்னைப் பார்த்த பெருமை இருக்கிறதாலே அம்பி ரொம்பவேத் தம்பட்டம் அடிச்சுக்கிறார். ஆனாலும் ரொம்பக் குதிக்கிறார் இல்லை? அதுக்கு அப்புறம் வேதா வந்துட்டுப் போயாச்சு. அப்புறம் முத்தமிழிலே இருந்து காழியூராரும், பாசிட்டிவ் ராமாவும் வந்தாங்க. இப்போ புலி வந்து உறுமிட்டுப் போயிடுச்சு. புலி வருது, வருதுன்னு சொல்லிட்டே இருந்தது, நிஜமாவே வந்துட்டுப் போயிடுச்சு. போன வாரம் நாங்கள் கடலூர் போனப்போ நடேசனைப்பார்த்தோம். இன்னும் சில பேர் வரேன்னும் சொல்லிட்டிருக்காங்க.

நீங்க பார்க்கிறப்போ கொஞ்சம் ஏமாற்றம் ஏற்படலாம். ஏனெனில் நீங்கள் தினம் தினம் பார்க்கும் ஒரு சாதாரணப் பெண்மணி போல் தான் நான் இருப்பேன். இன்னும் சொல்லப் போனால் கைப்புள்ள சொல்வார், "எங்க பக்கத்து வீட்டு ஆண்டி போல் எனக்குத் தோணும்"னு அப்படித்தான் நான் இருப்பேன். அதனால் ரொம்பவே எதிர்பார்த்துட்டு வந்து ஏமாறாதீங்க அம்பி, ரொம்பவே ஏமாந்துட்டார் என்னைப் பத்திக் கற்பனை பண்ணி. நானும்தான் ஒரு மதுரை வீரன் ஸ்டைலில் எதிர்பார்த்துப் போனால் பார்க்க ரொம்பவே அப்பாவியா,( பார்க்கத் தான், )ஒரு பையர் வந்திருக்கார். என்னத்தைச்
சொல்ல? ஹிஹிஹி, பையன்னு சொன்னா மரியாதை இல்லைங்கிறதாலே விகுதியை மாத்தி இருக்கேன்.

அப்புறம் எழுதற அளவு பேசறது கொஞ்சம் கம்மி தான். பேச ஆரம்பித்தால்
நல்லாப் பேசுவேன். ஆனால் பேசக் கொஞ்சம் நேரம் பிடிக்கும். அப்புறம்
வந்தவங்களோட நானே பேசிட்டு இருந்தால் என் கணவர் முழிச்சுட்டு
உட்கார்ந்திருக்கணுமே,அதனாலும் கொஞ்சம் கம்மியாத் தான் பேசுவேன்.
வர்ரவங்க வந்து ஏமாந்துட்டுப் போங்கப்பா! இதைத் தவிர, இந்த வலைப்பதிவர் மீட்டிங் எல்லாம் நான் போகிறதில்லை. போனால்
போக ஒரு 2 மணி நேரம் ஆகும். அப்புறம் திரும்பி வர 2 மணி நேரம்
ஆகும். இது சாதாரணமாக ஆகும் நேரம். போக்குவரத்து அதிகம் இருந்து ட்ராஃபிக் ஜாம்னால் கேட்கவே வேணாம். அதனால்தான் நான் இதெல்லாம்
போகிறதே இல்லை. நான் போய் உட்கார்ந்து பேச ஆரம்பிக்கிறதுக்குள்ளே
(அதுக்குள்ளே அவங்க வடையோ, போண்டாவோ, சமோசாவோ ஆர்டர்
கொடுத்திருப்பாங்க) டிஃபன் வரும். அதைச் சாப்பிடக்கூட முடியாது. திரும்பிப்
போக நேரம் ஆயிடும். நான் போய்ட்டு உட்கார்ந்து சாப்பிடாமல் வர முடியுமா? போண்டாவும், வடையும், சமோசாவும் அழாதா? அதற்காக வீட்டுக்கும் எடுத்து வர முடியுமா? அப்படி இருந்தால் போய் எடுத்துட்டு வந்துடுவேன். கல்யாணத்துக்குப் போனால் அப்படித்தான். அங்கே ஒண்ணுமே சாப்பிடாமல் வீட்டுக்கு எடுத்துட்டு வந்துடலாம் போல் இருக்கும். போகாமல் இருக்கவும் முடியாது. ஆனால் வலைப்பதிவர் மீட்டிங்கிலே என்னைப் பெரிய தலைவின்னு நினைச்சுட்டு இருப்பாங்க. அங்கே போய் அல்பம் மாதிரி (உள்ளூர ஆசையாத் தான் இருக்கும்) அந்த டிபனை வீட்டுக்கு எடுத்துப் போறேன்னு எப்படிச் சொல்றது? :D அதனாலேயே வலைப்பதிவர் மீட்டிங் எல்லாம் போறதில்லை.

இப்போக்கூடப்பாருங்க நேத்து முத் தமிழ்க்குழுமத்திலே ஒரு மீட்டிங்
வச்சிருந்தாங்க மெரினாவிலே காந்தி சிலை பக்கத்திலே. போகலை, என்ன போனால் மிளகாய் பஜ்ஜி மட்டும் சாப்பிட்டு விட்டுத் திரும்பறாப்பலே இருந்தாப் பரவாயில்லை. பேச வேறே பேசணுமாம். தலைப்பு எல்லாம் கொடுத்திருக்காங்க, நம்மாலே ஆகிற வேலையா அது?. அதான் போகலை. என்ன தான் வீட்டிலே மிளகாய் பஜ்ஜி செஞ்சு சாப்பிட்டாலும் இந்த மாதிரிக் குரூப்பாப் போய் பஜ்ஜியை அவங்க செலவிலே வாங்கிச் சாப்பிடற டேஸ்டே தனி இல்லையா?

அப்புறம் இது 4 நாள் முன்னாலே எழுதி வச்சுக் காணோம்னு சொன்ன பதிவு.
இப்போத் திரும்பக் கிடைச்சது. அதைக் கொஞ்சம் மாத்தி நேத்திக்குப் பப்ளிஷ் பண்ணி இருந்தேன், 100 சதவீதம் பப்ளிஷ் ஆச்சுன்னு மெசேஜ் மட்டும் வந்தது. ஆனால் பதிவு வரவே இல்லை. இந்த ராம் என்னமோ ஒரே க்ளிக் போதும் மேடம்னு சொன்னாரே? ஒரே க்ளிக் தான் கொடுத்தேன். ஆனால் பதிவைக் காணவே காணோம். இதுதான் ஒரே க்ளிக்கில் பப்ளிஷ் ஆகிற லட்சணமா? ஒண்ணும் புரியலை போங்க! தலையைச் சுத்துது! என்ன அதிசயமோ, எல்லாம் எனக்கு மட்டும் நடக்குது! எழுதிச் சேர்த்த அருமையான விஷயங்கள் எல்லாம் மறுபடி வரவே மாட்டேங்குது.

அப்புறம் profile போய் நம்மளைப் பத்தின விவரம் எல்லாம் கொடுத்துட்டு வருவோம்னு போனேன். அங்கே போய் என்னோட பிறந்த தேதியைக் கொடுத்தேனா? வாங்கவே மாட்டேங்குது? எனக்கு ஒரே ஆச்சரியம்? invalid date அப்படின்னு மெசேஜ் வருது? என்னடா இது? மே மாதம் 22-ம் தேதி யாருமே பிறக்கக்கூடாதா? பிறந்திருக்க மாட்டாங்களா? இல்லை நம்மளைப் பிறக்கவே இல்லைனு சொல்லுதானு ஆச்சரியப் பட்டுப் போனேன். அப்புறமா உட்கார்ந்து யோசிச்சதும் தான் புரிஞ்சது, அது சர்டிஃபிகேட்டில் உள்ள தேதியைத் தான் ஒத்துக்கும்னு. அது உண்மையான தேதி இல்லையே, சரினு விட்டுட்டேன்.
இப்போ சில ஜோக்ஸ் போடறேன். நேத்துக் கார்த்திக்குக்காக சில ஜோக்ஸ்
போட்டிருந்தேன். இன்னிக்கு அதைப் போடலை. எனக்காக மட்டும் ஒரே ஒரு
ஜோக் போட்டுட்டு முடிச்சுக்கறேன்.

டாக்டர்: காதுக்குள்ளே ஓணான் புகுந்திடுச்சா? எப்படிம்மா?

பெண்:தோட்டத்தில் என் கணவரும், மாமியாரும் பேசுவதை ஒரு மரத்தின்
மறைவில் இருந்து ஒட்டுக் கேட்டேன் டாக்டர்!

இதைத் தான் சொந்தச் செலவில் சூன்யம் வச்சுக்கிறதும்பாங்களோ?!!!!!!!!!!

Sunday, February 04, 2007

201. வாமனன் பூஜித்த சிவனார்

மஹாபலிக்கு மோட்சம் கொடுத்த வாமனன் அந்த அவதாரத்துடனேயே சிவனையும்

பூஜித்தார். அதுவும் எப்படி? ஐயனும், அம்மையும் சேர்ந்து இருக்கும் கோலத்தில்

பூஜித்தார். இந்தத் தலத்தில் வாமன அவதாரமும், மஹாபலிக்கு மோட்சமும்,

மஹாவிஷ்ணுவின் திரிவிக்கிரம அவதாரமும் ஏற்பட்டு மீண்டும் குறளன் ஆன மஹாவிஷ்ணு சிவனைப் பூஜித்ததால் அதுவும் தினமும் பூஜித்து வருவதாயும்

ஐதீகம். ஆகையால் இங்கே இறைவனை நேரிடையாகத் தரிசிக்க இயலாது. திருஞான சம்மந்தரால் திருப்பதிகம் பாடப் பெற்ற இந்தத் தலம் மூர்த்தி, தீர்த்தம், வனம், கிரி, நதி, சங்கமம், ஆரண்யம், பதிகம் போன்றவைகளால் பிரசித்தி பெற்றதாகும். இங்கே கோயில் வந்த பின் தான் மற்றைய தலங்களில் வந்ததாக வரலாறு கூறுகிறது. இக்கோவிலில் மற்றக்

கோவில்களில் உள்ளது போல் போகசக்தி அம்பாள், பள்ளியறை போன்றவை இல்லை. ஏனெனில் இறைவன் சதாகாலமும் இறைவியோடு ஒன்றி இருப்பதாய் வரலாறு.

தேவர்களுக்கு ஞானத்தைப் புகட்டி அஞ்ஞானத்தை விலக்குவதற்கும், அசுரனாய் இருந்தாலும் தர்ம நெறி பிறழாமல் இருந்தால் அழியாத்தன்மையும், இம்மையிலும், மறுமையிலும் அருளைப் பெறலாம் என நிரூபித்ததும் இந்தத் தலமே.உயிர்களை உய்விக்கும் இறைவனின்

திருநாமம் உதவி நாயகன் என்பதாகும். இவ்வூரின் பெயரும் "உதவி திருமாணிக்குழி" என்பதாகும். மஹாலட்சுமி தவம் செய்த நதியாகக் கிருஷ்ணை என்ற பெயருடன் கெடில நதி விளங்குகிறது. கருடனின் பேராலும் இந்நதி விளங்குவதாய்க் கூறுவர்.சரஸ்வதியானவள்

ஸ்வேத நதியாக வடக்கு முகமாய்க் கெடிலத்தில் சங்கமம் ஆகிறாள். நான்காவது பிரம்ம க்ஷேத்திரமான இது "வாம பிரம்ம க்ஷேத்திர"மாக விளங்குகிறது. அதாவது வாமனன் பூஜித்ததாலும், பிரம்மாவின் மனைவி நதியாக சங்கமம் ஆவதாலும் இப்பெயர் பெற்றது.

திருக்கார்த்திகை மாதம் திருவண்ணாமலையில் இறைவன் ஜோதிரூபமாய்த் தரிசனம் தருவது போல் இங்கேயும் தருகிறார்.வாமனனாய்த் தோன்றித் திருவிக்கிரமனாய்க் காட்சி கொடுத்து,

மீண்டும் வாமனனாய்ச் சுருக்கிக்கொண்டு,ஐம்புலன்களையும் கட்டுப் படுத்தி இறைவனை இடைவிடாது பூஜித்த வாமனருக்குக் காவலாக இறைவன் தன் ருத்ர கணங்களில் ஒருவரான "குபேர பீம சங்கரர்"ஐக் காவல் வைக்கிறார். கோவிலுக்குள் நுழைந்ததும்

நந்திஎம்பெருமான் தரிசனம் ஆனதும் கர்ப்பக் கிரஹத்தில் ஒரு நீலவண்ணத் திரை ஓவியமாய் ருத்திரரை வரையப்பட்டது தொங்குகிறது. நாங்கள் போனபோது மதியம் நடுப்பகல் ஆகிவிட்ட படியால் உச்சிக்காலத் தீப ஆராதனைக்குத் திரை போட்டிருக்கிறது என்று

எண்ணினோம். கர்ப்பக் கிரஹத்துக்குள் நுழையும் முன் வலது பக்கமாய்ச் சில சிற்பங்கள் கண்ணையும் கருத்தையும் கவர்ந்தன. அவற்றைப் பார்த்துக் கொண்டே உள்ளே சென்றோம். அர்ச்சகர் வந்து தீப ஆராதனை காட்டவா என்றதும் நாங்கள் நேரம் ஆகுமோ, உச்சிக்காலம் ஆகணுமே என்று கேட்டோம். அதற்குப் பின் அவர் மேற்கூறிய கதையைச் சொன்னார். காவல் காக்கும் பீம சங்கரருக்கு வழிபாடுகள் நடத்தி, அவரின் அனுமதி பெற்றே இறைவனை இங்கே காண முடியும். அதுவும் சில நொடிகளே திரையை விலக்கி இறைவனைக் காட்டுகிறார்கள். கண்கொள்ளாக் காட்சியான அதைக் காண நாம் தயாராக இருக்க வேண்டும்.

Saturday, February 03, 2007

200. நான் ரொம்ப பிசி

ஹிஹிஹி, 200 பதிவுகள் ஆயிடுச்சு. எல்லாம் சரியா இருந்திருந்தா டிசம்பரிலேயே 200 பதிவுகள் போட்டுக் கொண்டாடி இருப்பேன். என்ன செய்யறது? எது எது எப்போ எப்போ நடக்குமோ அது அது அப்போ அப்போ தான் நடக்கும். இன்னிக்குப் பாருங்க யாரும் வாழ்த்துச் சொல்லக் கூட இருக்க மாட்டாங்க. நானே தான் சொல்லிக்கணும்.

200 பதிவுகள் கண்டு வெற்றிக் கொடி (கொடி எங்கே வந்ததுன்னு யாரும் கேட்கக் கூடாது. அரசியலில் இதெல்லாம் ஜகஜம். courtesy" Vetha(l).) நாட்டியமாடிய சீச்சீ, கொடி நாட்டியன்னு படிச்சுக்கோங்க, எங்கள் யானைத் தலைவி(வலி), சீச்சீ மறுபடி யானைனே வருது, பானைத் தலைவி,சீ திரும்ப தப்பு, தானைத் தலைவிக்கு நடக்கும் வெற்றி விழா பற்றிய அறிவிப்பு விரைவில் வெளிவரும்.

தலைப்புக்கும், இதுக்கும் சம்மந்தம் எதுவுமே இல்லைன்னு நினக்காதீங்க. இருக்கு. இப்போ யாரை எடுத்தாலும் அவங்க சொல்றது ரொம்ப பிசி, நேரமே கிடைக்கலைன்னுதான். அதுவும் இப்போ உள்ள தலைமுறைக்கு எல்லாமே பிசிதான். அவங்களுக்கு தொலைபேசியில் பேசி சொந்தங்களுடனோ, வீட்டுப் பெரியவங்களுடனோ நலம் விசாரிக்கக் கூட முடியாமல் பிசி. அவங்க வீடு மாறினாலோ, தொலைபேசி எண் மாறினாலோ சொல்லக் கூட முடியாத அளவுக்கு பிசி. இன்னும் சொல்லப் போனால் நாம் கூப்பிட்டால் கூட தொலைபேசியில் வந்து பேச முடியாத அளவுக்கு பிசி. அப்போ எப்போ சாப்பிடுவாங்க? தூங்குவாங்களா? இதான் என் மனதை அரிக்கும் கேள்வி. அதனாலே நானும் இப்போ சொல்ல ஆரம்பிச்சிருக்கேன் "நான் ரொம்ப பிசி". நிஜமாவே நேரம் இல்லைன்னாலும் தொலைபேசியில் கூப்பிட்டால் பேச முடியாத அளவு மோசமா இல்லை. எங்கேயாவது போனால் சொந்தபந்தங்களுக்குத் தெரிவிக்க முடியாத அளவு பிசி இல்லை. இருந்தாலும் "நான் ரொம்ப பிசி." :D

இந்தப் பதிவே கார்த்திக்குக்காகப் போடறேன். அதிலே வம்பு, தும்பு இல்லைன்னா எப்படி? சூடான பூனை வந்து அம்பிக்குச் சப்போர்ட் செய்தாலும் நம்ம வம்பு உலகில் அவரையும் சேர்த்து இழுக்க வேண்டியது தான்னு முடிவு செய்துட்டேன். என்ன அப்போ அப்போ அவரையும் வம்புக்கு இழுக்கிறாப்போல் இருக்கும். நம்ம பதிவுக்கு வந்தாச்சுன்னா இதுக்கும் தயார்ப் படுத்திக்க வேண்டாமா? இப்போ எங்க மாமியார் வந்தாங்களா? அவங்க வந்தது என்னமோ ஒரு வாரத்துக்கான விசிட்டில். நம்ம அரசியல்வாதிங்க கெட்டாங்க, அந்த அளவு அவங்க பிசி. வந்து சும்மா இருந்தாங்களா? என்னோட போட்டி! எதுக்கு? புத்தகங்களுக்கு. இந்தப் புத்தகம் படிக்கிறதிலே அவங்க கிட்டே ஒரு புத்தகம் போச்சுன்னா லேசிலே திரும்பி வராது. அதுவும் தினசரிப் பேப்பரோ அல்லது "துக்ளக்" புத்தகமோ போயிடுச்சுன்னா அவ்வளவுதான். நான் பாட்டுக்கு இங்கே தேவுடு காத்துட்டிருக்கேன். அவங்க கீழே வைக்கிற வழியாக் காணோம். இதிலே ரொம்ப சந்தோஷப்பட்டது யாருன்னு நினைக்கிறீங்க? எல்லாம் நம்ம மறுபாதிதான். ரொம்பவே சந்தோஷம். ரசித்து ரசித்துச் சிரிச்சிட்டிருந்தார். ஏதோ சீரியலாக்கும்னு நினைச்சா சீரியலில் ரொம்பவே சீரியஸான சம்பவம் நடந்திட்டிருக்கு.மனுஷன், என்னைப் பார்த்துச் சிரிக்கிறார்னு அப்புறம்தான் புரிஞ்சது. எல்லாம் என் HEAD LETTER தான் வேறே என்ன? இப்போ தெரியுதா நான் எவ்வளவு பிசின்னு?

ஏற்கெனவே எங்க ஏரியாவிலே வியாழன் அன்று காலை கொடுக்க வேண்டிய புத்தகம் வெள்ளி அன்றோ சனி அன்றோ போனால் போகிறதுன்னு அரை மனசோட எங்க பேப்பர்காரர் கொடுப்பார். அதுவும் ஒரு பத்துத் தரம் கேட்கணும். இதென்ன ரொம்ப அல்பமா இருக்கேன்னு மனசிலே நினைச்சுட்டுக் கொடுப்பார். பணம் என்னவோ கரெக்டாத் தான் நாம் கொடுப்போம். இருந்தாலும் புத்தகம் கொடுக்கிறது அவர் இஷ்டம்தானே? இந்த அழகிலே வர புத்தகத்தைப் படிச்சுட்டு நான் என்ன விமரிசனம் எழுதறது? அதுக்குள்ளே வலைஉலகிலே எல்லாம் வந்து விவாதம் நடந்து முடிஞ்சுடும். நான் பதிவு எழுதறது தான் ஒரு பெரிய வேலைன்னா இந்தப் புத்தகம் படிக்கிறது அதை விடப் பெரிய வேலையா இருக்கு. இதிலே கொஞ்ச நாள் முந்தி வரை புத்தகங்களை யார் முதலில் பேப்பர்காரர்கிட்டே இருந்து வாங்கறோமோ அவங்க ஒளிச்சு வைக்கிறதெல்லாம் வேறே உண்டு. நான் அது தெரியாமல் பேப்பர்காரர் கிட்டே புத்தகம் வரலைன்னு கேட்டுச் சண்டை போட்டு அவர் என்னை ஒரு அல்பமாய்ப் பார்த்தது உண்டு. இப்போ அது இல்லைன்னாலும் நானும் ஒளிச்சு வச்சிருக்கணுமோன்னு நினைச்சேன் நேத்து. சாயந்திரம்தான் துக்ளக் புத்தகமே கொடுத்தார் பேப்பர்காரர். மாமியார் வெளியே போயிட்டு வந்ததுமே அதைப் பார்த்திருக்கார் போலிருக்கு. நான் வேறே ஏதோ வேலையா இருந்தப்போ அதைப் படிக்க எடுத்தார். நான் உடனேயே அல்பத் தனமாய், "நீங்க மங்கையர் மலர் படிச்சுடுங்க," என்று கொடுத்தேன். "துக்ளக் நான் பார்க்கணும்" என்று மனசில் நினைத்துக் கொண்டேன். அவங்க ரொம்ப அலட்சியமாய், "மங்கையர் மலரா? வேணாம் வேணாம், நான் துக்ளக் படிக்கணும்"னு சொல்லிட்டு 6-30 மணிக்கு எடுத்தாங்க. சாப்பிடும்போது கூடப் பக்கத்திலே துக்ளம். எனக்கு ஒரே சந்தேகம். ஏதும் பரிட்சை எழுதப் போறாங்களோன்னு. அட்டைப்படக் கார்ட்டுனில் ஆரம்பிச்சுப் படிச்சுட்டு ராத்திரி ஒன்பது மணி போல் கீழே வைத்துவிட்டுப் போனாங்களேன்னு பார்த்தா பக்கம் அடையாளம் வச்சிருக்கு. இருந்தாலும் ரொம்பவே தைரியமா எடுத்துப் படிக்க ஆரம்பிச்சா,, படுக்கையை எடுத்துட்டு வந்துட்டாங்க மறுபடி, இருந்தாலும் நான் விடுவேனா? கண்டுக்காத மாதிரி இருந்துட்டேனே! மணி பார்த்தால் 9-30 ஆகவே என்னோட டாக்டரின் 144 தடை உத்திரவை என் கணவர் நினைவு படுத்தவே அரை மனதோடு படுக்கப் போனேன். அதான் ரொம்ப பிசியாப் படிச்சுட்டு இருக்கேன். இப்போதான் பாதி படிச்சிருக்கேன். இன்னும் இருக்கு, வர்ட்டா?

@கார்த்திக், இந்த வம்பு போதுமா? இன்னிக்கு உங்க எல்லாரையும் என்னோட மாமியார் தயவிலே சும்மா விட்டுட்டேன். அடுத்த முறை தாளிச்சுடலாம். வர்ட்டா?

வாமனன் பூஜித்த சிவனார்

நடேசன் அவர்கள் கூட்டிச் சென்ற அந்த "அகஸ்தீஸ்வரர்" (பேர் நான் வச்சது), கோவிலின் ஸ்தல வரலாறு பற்றி ஏதும் தெரியவில்லை. அங்கே பூஜை செய்யும் சிவனடியாருக்கு ஒருவேளை தெரிந்திருக்கலாம். ஆனால் அவர் மறுநாள் தான் வருவாராம். அவ்வளவில் நாங்கள் அந்தக் கோவிலில் இருந்து கிளம்பி மற்றொரு சிவன் கோவிலுக்குப் போனோம்.

திருவஹிந்திபுரத்தில் இருந்து வரும் வழியிலேயே அமைந்துள்ளது இந்தக் கோவில். இதுவும் சற்றுக் குன்றிலேயே அமைந்துள்ளது. 12 ஜ்யோதிர்லிங்கங்களுள் பத்தாவது இது என்று கூறுகிறார்கள். இந்தக்கோவிலின் ஸ்தல புராணம் திருமாலின் "வாமன" அவதாரத்துடன்

சம்மந்தப் பட்டிருக்கிறது. தவிர, மாணிக்கவாசகருக்குச் சிதம்பரத்தில் முக்தி கொடுப்பதற்கு முன் அவரை இங்கே அழைத்ததாயும் கூறுகிறார்கள். அதனால் இதை "ஆதி தில்லை" என்றும் சொல்வது உண்டாம். திருவண்ணாமலையில் திருக்கார்த்திகை தீபம் ஏற்றுவது போல் இங்கேயும் குன்றின் மேல் உள்ள ஒரு தூணில் திருவண்ணாமலையில் தீபம்

ஏற்றும் அதே நேரம் ஏற்றுவது உண்டாம். இந்தத் தூண் அம்மன் சன்னதியில் இருந்து

நன்கு பார்க்கும்படி இருக்கிறது.திருவண்ணாமலைத் தீபம் பார்த்துவிட்டுப் பின் இதையும் பார்க்கவேண்டும் என்ற ஐதீகம் இருப்பதாயும் சொல்கிறார்கள். இப்போது இந்தக் கோயிலின் ஸ்தல வரலாறு:


இந்திரனின் தாயான அதிதி தேவியைப் பூஜித்து வரும்போது ஒரு நாள் விளக்கில்

விட்டிருந்த நெய் உறைந்து போய் விளக்கு அணையும் தருவாயில் இருந்தது. அப்போது அங்கே பசியுடன் வந்த ஓர் எலி அந்த உறைந்த நெய்யைச் சாப்பிட எண்ணி விளக்கில் வாயை வைத்துச் சாப்பிட ஆரம்பிக்கும்போது, தன்னை அறியாமலேயே விளக்குத் தூண்டி விடப் பட விளக்குப் பிரகாசமாய் எரிந்தது. சிவன் கோவில் விளக்கு எரியக் காரணமாய்

அமைந்த காரணத்தால் அந்த எலியின் மறுபிறவியில் அது "மஹாபலி"ச் சக்கரவர்த்தியாய்ப் பிறந்தது. தன்னுடைய நியமங்களை மறவாமலும் இருந்த மஹாபலிச் சக்கரவர்த்தி செய்த யாகத்தில் பலவிதமான தானங்கள் எல்லாருக்கும் கொடுக்கப் பட்டது. தானங்கள் எல்லாம்

முடிந்து விட்ட நிலையில் மஹாபலி யாகம் செய்யத் தயாரானார். அப்போது இந்திரன்

மஹாபலியானவர் இந்த யாகத்தை முடித்துவிட்டால் இந்திரபதவியை விட உயர்ந்த பதவிக்குத் தகுதியாகி விடுவாரே என்ற கவலையில் ஆழ்ந்தான்.

மஹாவிஷ்ணுவோ இந்திரனிடம் கூறினார்: "இந்த்ப் பதவிகளை எல்லாம் விட உயர்ந்த

வைகுண்ட மோட்சத்திற்கும், முக்திக்கும் மஹாபலி தகுதி உடையவன் ஆகிறான்.

அவன் அதை அறியாமல் இந்த யாகம் செய்தால் உயர்பதவி என்ற எண்ணத்தில் இருக்கிறான்." என்று கூறிவிட்டு, மஹாபலிக்கு மோட்சத்தையும், அவன் பிறவி எடுத்ததின் லட்சியத்தை நிறைவேற்றவும் எண்ணி ஒரு வாமனனாகப் போய் நின்றார். அதாவது, ஒரு

ரிஷிகுமாரனாக, பிரம்மச்சாரியாகப் போய் நின்றார். பிரம்மச்சாரிகள் எது கேட்டாலும்

இல்லை என்னாது கொடுப்பது வழக்கம். ஆகவே அவர் வந்ததும் மஹாபலி, வரவேற்று என்ன வேண்டும் எனக் கேட்க, மஹாவிஷ்ணுவோ, "என்ன கேட்டாலும் கிடைக்குமா?" என்று கேட்கிறார். மஹாபலி எது கேட்டாலும் கொடுக்க ஒத்துக் கொள்ளவே தன் காலால் மூன்றடி நிலம் அளந்து எடுத்துக் கொள்வேன் என்று கேட்கிறார், மஹாவிஷ்ணு. மஹாபலியின் மாயை விலகி வந்திருப்பது மஹாவிஷ்ணு என்று புரிந்து தனக்கு முக்தி கொடுக்க வந்திருப்பதையும் அறிந்து கொள்கிறார். உடனேயே தானத்துக்குத் தயாராகிறார்.

ஆனால் அவரின் குருவான சுக்ராச்சாரியாருக்கு இந்தத் தானத்தில் இஷ்டம் இல்லை. தன் சிஷ்யன் இந்திரனை விட உயர்ந்த பதவி பெற வேண்டுமென நினைத்தார். மஹாவிஷ்ணு தன் சிஷ்யனை ஏமாற்றப் போகிறார் என்று எண்ணிக் கொண்டு மஹாபலியிடம் தானம்

கொடுக்கவேண்டாம் எனத் தடுக்கிறார். மஹாபலி மறுக்கிறான்.

தான் சொன்ன சொல் தவறாமல் தானம் கொடுப்பதாயும், வந்திருப்பது மஹாவிஷ்ணு

என்று தான் அறிந்திருப்பதாயும், அவர் மூலம் தனக்கு என்ன நேர்ந்தாலும் சரி எனவும் கூறி ஒரு கிண்டியில் நீர் எடுத்துத் தாரை வார்த்து முறைப்படித் தானம் செய்கிறான். அப்போது மனம் பொறுக்காத சுக்ராச்சாரியார் ஒரு வண்டாக மாறிக் கிண்டியை அடைத்துக் கொள்ள ஒரு தர்ப்பைப் புல்லால் குத்துகிறார், வாமன அவதாரம் எடுத்து வந்த மஹாவிஷ்ணு.

சுக்ராச்சாரியாரின் கண்களில் பாதிப்பு ஏற்படுகிறது. வெளியே வந்த அவர் கருடனுடன் சண்டை போடுகிறார்.

மஹாவிஷ்ணு திரிவிக்கிரம அவதாரம் எடுத்துத் தன் காலால் பூமியையும்,

ஆகாயத்தையும் அளந்துவிட்டுப் பின் மூன்றாவது அடியை எங்கே வைக்க எனக்

கேட்கத் தன் தலையைக் காட்டுகிறான் மஹாபலி. தன் காலை அவன் தலையில்

வைத்து அவனைப் பாதாள உலகிற்கு அனுப்பிக் கீழே உள்ள ஏழு உலகிற்கும் அதிபதியாக்கி அவனுக்குச் சிரஞ்சீவித்துவம் கிடைக்கச் செய்தார்.

இந்த இடத்தில் எல்லாருக்கும் வரும் சந்தேகம் ஆனது:

அது எப்படி மஹாவிஷ்ணுவானவர் ஓர் அரசனை அவன் அசுரக் குலத்தில் பிறந்தான் என்ற

காரணத்தால் கொன்று விட்டு அவனுக்கு மோட்சம் கொடுத்ததாய்ச் சொல்கிறார்களே

என்று வரும். புராணங்களின் கதைகளை நன்கு படித்தோமானால் புரியும். ஒரு

எலியாகப்பிறவி எடுத்துத் தனக்குத் தெரியாமலேயே சிவன் கோவில் விளக்கு எரியக் காரணமாய் இருந்த காரணத்தால் மறுபிறவியில் அரசனாய்ப் பிறந்தும் அசுர

ராஜாவாக இருந்தாலும் நல்லொழுக்கத்துடனும், ,பக்தியுடனும், குருவே தடுத்தாலும் சொன்ன சொல் காப்பாற்றுபவனாயும் இருந்தான் மஹாபலி. அவனுடைய பக்தியை மெச்சியும், உலகில் எதுவுமே யார் ஆளுகைக்கும் நிரந்தரமாய் உட்பட்டது இல்லை. எல்லாமே தர்மத்தின் ஆளுகை என்று தெரிவிக்கவும் யாகத்தைத் தடுத்தார். யாகம் செய்து மூவுலகிற்கும் அரசனானால் அவன் குருவின் துர்ப்போதனையால் அதர்ம வழி நடக்கலாம். அதைத் தடுப்பதற்கும், இதுவரை நல்வழி நடந்த மஹாபலிக்குச் சிரஞ்சீவிப் பட்டம் கொடுக்கவுமே இந்தக் காரியம் நடந்தது. ஸ்தல வரலாறுன்னு எழுதப் போய் எனக்குத் தெரிந்த வரலாறை எழுதி இருக்கேன். ஆனால் இந்த ஸ்தலத்தில் இந்த வரலாறு சம்மந்தப்

பட்டிருக்கிறது. மேற்சொன்ன எலி தூண்டி விட்ட விளக்கு எரிந்த கோவில் இந்தக்

கோவில் தான். இங்கே தான் வாமன அவதாரத்தில் விஷ்ணுவானவர் சிவனைப் பூஜித்திருக்கிறார். அது நாளை.

Friday, February 02, 2007

குடிசையில் சிவனார்

கடலூருக்கு நான் இதுவரை போனது இல்லை. அந்த வழியாக நிறைய முறை கடந்து சென்றிருக்கிறேன். ஆனால் ஊருக்குள் போனது இல்லை. ஒருவேளை சொந்தம் யாரும் இல்லாததாலோ என்னமோ தெரியலை. ஒரு ஆறு மாசமாக திரு நடேசன் எங்க வீட்டுக்கு வரேன், வரேன்னே சொல்லிட்டிருக்கார். ஆனால் அவரால் வர முடியலை. நாங்க

பார்த்தோம். இம்முறை சிதம்பரத்தில் இருந்து வரும்போதோ அல்லது போகும்போதோ அவரைப் பயமுறுத்திடலாம்னு நினைச்சோம். அவருக்குத் தகவலும் சொல்லியாச்சு.

நாங்க கடலூர் வந்து சேர்ந்த தகவலும் சொல்லி அவர் வீட்டுக்கும் போயாச்சு.

உண்மையில் ஊர் இத்தனை அழகாய் இருக்கும்னு நான் நினைக்கவே இல்லை.

வெண்ணாறும், வெட்டாறும் எங்கேயோ பக்கத்தில் ஓடுகிறதுன்னு தெரியும். கெடில

நதியும் இங்கே தான் ஓடுகிறது. ஆனால் இவ்வளவு அழகான குன்றுகள் சூழ்ந்த

ஊர்ன்னும், சீதோஷ்ணம் இத்தனை அருமையாக இருக்கும்னும், அமைதியான ஊர்னும் தெரியாமல் போச்சு. சற்றே பெரிய கிராமம்னு சொல்லலாம். பச்சையைப் பார்க்க முடியாதுன்னு நினைச்ச எனக்கு மரங்கள் அழியாமல் பாதுகாக்கப் படுவது சந்தோஷத்தைத் தந்தது. வயல்களில் அறுவடை நேரம் என்பதால் அங்கங்கே இயந்திரம் வந்து அறுவடை செய்து கொண்டிருந்தது. நடேசன் வீட்டுக்குப் போய்க் காலை ஆகாரம் முடித்ததும்,

நாங்கள் முதலில் திருவஹிந்திபுரம் கோவில் பார்க்கப் போனோம். நடேசன் மனைவியின்

விருந்தோம்பல் பற்றி ஏற்கெனவே சொல்லிட்டேன். அவங்க ரொம்ப அருமையான காலை ஆகாரமும், நல்ல காஃபியும் கொடுத்தாங்க. (அம்பி, குறிச்சுக்கோங்க, காஃபி பத்தி
எழுதிட்டேன்.)

திருவஹிந்திபுரம் கோவிலைப் பத்தி எழுதும் முன்னால் நடேசன் கூட்டிப் போன 2 சிவன்

கோவில்கள் பற்றி எழுதிடறேன். முதலில் நாங்கள் போனது வயல்வெளிகளிடையே போன ஒரு சாலையில் சற்றுக் குன்றுகளால் (கிழக்குத் தொடர்ச்சி மலைக்குன்றுகள்?) சூழப்பட்ட

ஒரு இடத்திற்குச் சற்று ஏறிப் போனோம். அங்கே போவதற்கு முன்னால் நடேசன்

"பூனையாருக்கு" பிஸ்கட் வாங்கிக் கொண்டார். எங்களைப் பார்க்க வருவாரா

மாட்டாரா என்ற விவாதத்திற்கு இடமே வைக்காமல் வரவேற்புக்கே வந்து விட்டார்.

நடேசனை அடையாளம் கண்டு கொண்ட பூனையார், எங்களைப் பார்த்ததும் சற்று

மிரண்டார். நாங்கள் சமாதானம் செய்தோம். அப்படியும் அவர் நாங்கள் கொடுத்த பிஸ்கட்டைச் சாப்பிட வில்லை. பிடிக்கவில்லையோ என்னவோ? அங்கே குன்றுகளுக்கு இடையே வயல் சூழ்ந்த அற்புதமான இடத்தில் சற்று வெட்டவெளி இருந்திருக்கிறது. அங்கே ஒரு சிவலிங்கம், (நூறாண்டுகளுக்கு முன் கண்டுபிடிக்கப் பட்டதாம்.) காணப்பட்டது. சுற்றிலும் சிறிய கட்டிடங்களில் அம்மன்,. பிள்ளையார், சுப்பிரமணியர் காட்சி அளித்தனர். அவங்க எல்லாரும் கட்டிடத்தில் இருக்கும்போது சிவனார் மட்டும் கூரைக்குக் கீழ்

குடியிருக்கிறார். மனைவி, குழந்தைகளுக்குத் தீபாவளிக்குத் துணி எடுத்துக் கொடுத்துவிட்டு அவங்களைப் பார்த்து சந்தோஷப்படும் நடுத்தர வர்க்கத்துக் குடும்பத் தலைவர் மாதிரி

போல் இருக்கிறார் இந்தச் சிவனார் என்று நினைத்துக் கொண்டேன். இங்கே சிவலிங்கத்தில் ஒரு விசேஷம். எல்லாக் கோவில்களிலும் சிவலிங்கத்தின் இடதுபுறம் காணப்படும் ஆவுடையார், இங்கே வலதுபக்கமாய் உள்ளது. எனக்கு ஒரு சந்தேகம். ஒருவேளை சன்னதியை மாற்றிக் கட்டி இருப்பாங்களோன்னு. இல்லைன்னு சொல்றாங்க. ஒரு சிவனடியார் வந்து பூஜைகள் செய்வாராம். அவர் இல்லாத நேரம் ஒரு தாத்தாவும், பாட்டியும் அந்த வயலுக்கு நடுவே, கோவிலுக்கு அருகே குடிசை கட்டிக் கொண்டு இருக்கிறார்கள். அவங்க பார்த்துக் கொள்கிறார்கள். அந்தத் தாத்தா தனக்குத் தெரிந்த மந்திரங்களைத் தனக்குத் தெரிந்த உச்சரிப்புடன் மிகவும் ஆத்மார்த்தமாய்ப் பூஜை செய்து தீப

ஆராதனை காட்டி எங்களுக்குத் தரிசனம் செய்து வைத்தார். காற்று பிய்த்துக் கொண்டு போகிறது. சுற்றிலும் வயல்வெளி. அங்கங்கே அறுவடை நடக்கும் சப்தம் தவிர வேறு சப்தமே இல்லை. நிம்மதியாக ஒரு துண்டைப் போட்டுக் கொண்டு படுத்துவிடலாம் போல் இடம். ஒருபக்கமாய்ப் பார்த்தால் சிறிய குன்றுகளும் அதில் கோவிலுக்கு வரும் பாதையும் தெரிகிறது. பின்னால் பார்த்தால் வயல்வெளி எங்கும் பரந்து இருக்கிறது. அதற்கு அப்பால் சாலையும், போக்குவரத்தும் கொஞ்சமாய்த் தெரிகிறது. வயலில் வேலை செய்பவரையும், அந்தக் கோவிலில் இருக்கும் தாத்தா, பாட்டியையும் தவிர வேறு நடமாட்டமே இல்லை. சற்று நேரம் அங்கே உட்கார்ந்து விட்டுப் பின் மனமில்லாமல் அங்கே இருந்து கிளம்பினோம்.

பி.கு: லலிதாம்பாள் சரித்திரம் வந்துட்டே இருக்கு.கடலூருக்கும், சிதம்பரத்துக்கும் போய்ட்டு வந்து 4 நாள் ஆகியும் எழுதாமல் இருக்கக் கூடாதுன்னு இன்னிக்கு எழுதி இருக்கேன். தொடர் விட்டுப் போகாது. எழுதிடுவேன். அதிலும் சிதம்பரம் பத்தி நிறையத் தகவல்கள் ஆராய்ச்சி செய்து இருக்காங்க. அதைத் தெரிந்து கொண்டு வந்திருக்கேன். அந்தச் "சிதம்பர ரகசியம்" பத்தியும் எழுதவேண்டும். எல்லாம் அந்த ஆடலரசன் துணை வேண்டும்.

Thursday, February 01, 2007

197. ஆதார சுருதியும் அவளே-லலிதே!

உண்மையில் பார்க்கப் போனால் நான் இப்போ சிதம்பரத்தையும், கடலூரில் உள்ள

திருவஹிந்திபுரம் கோயில் மற்றும் அங்கே உள்ள திருமாணிக்குழி சிவன் கோயில்

பத்தி எழுதணும். அங்கே தான் 2 நாள் முன்னால் போயிட்டு வந்தேன். ஆனால்

என்னுடைய சிநேகிதர்கள் சிலரின் கஷ்டங்களைக் கேட்டதும் இந்த லலிதாம்பாள் சோபனம் நினைவுக்கு வந்தது. இது சீக்கிரம் முடிச்சுட்டு அதையும் எழுதணும்னு நினைக்கிறேன். எல்லாம் அந்த லலிதாம்பாளின் விருப்பம் போல் நடக்கும். இது லலிதா சஹஸ்ரநாமத்தின்

வடிவம்னு சொன்னேனே தவிர, கிட்டத்தட்ட "ஸ்ரீதேவி மஹாத்மியம்" தான் இதில் அம்பிகையின் 5 அவதாரங்ளைப் பற்றிக் கீழ்க்கண்ட முறையில் சொல்லப் பட்டிருக்கிறது.


இந்த உலகிற்கு ஆதாரமானவள் அம்பிகையே என்பது சாக்தர்களின் அபிப்பிராயம். அவள் மூலமாகவே மும்மூர்த்திகளும் ஏற்பட்டனர் என்றும், மஹாவிஷ்ணு எடுத்த பத்து அவதாரங்களும், அம்பிகையின் பத்து விரல்களில் இருந்து ஏற்பட்டன என்றும் சொல்லப்படுகிறது. ஏற்கெனவே மஹாவிஷ்ணு எடுத்திருந்த மோஹினி அவதாரத்தைப் பற்றிப் பார்த்தோம். ஈசனை ஒரு பழைய கவிஞர் ஒருத்தர்

"ஒரு பாதி மால் கொள் மற்றொரு பாதி உமையாள்
கொண்டு இரு பாதியாலும் இருந்தான் பராரி" என்று பாடினாராம். அது படி ஒரு பாதியை உமைக்குக் கொடுத்து "அர்த்த நாரீஸ்வரர்" ஆனால், சிவனும், விஷ்ணுவும்

சேர்ந்த தோற்றம், "சங்கர நாராயணர்" என்று சொல்லப் படுகிறது. விஷ்ணு புராணத்தில் விஷ்ணு எடுத்ததாய்ச் சொல்லப் படும் அவதாரங்கள் தேவி புராணத்தில் தேவி எடுத்ததாயும் சொல்லப் படுகிறது. இது தேவியின் முதல் அவதாரம்.

தனது 2வது அவதாரத்தில் தேவியானவள் விஷ்ணுவிற்குத் தன் சக்தியைக் கொடுக்கிறாள். எப்படி என்றால் திருப்பாற்கடலில் ஆலிலை மேல் பள்ளி கொண்டிருக்கும் மஹாவிஷ்ணுவின்

நாபியில் இருந்து தோன்றும் தாமரையில் பிரம்மா அவதரிக்கிறார். அவர் உடனே

என்ன செய்வது என்று தெரியாமல் விழிக்கவே சுற்றும் முற்றும் பார்க்கிறார். 4 திக்குகள் உண்டாகின்றன. அப்போது தேவி பிரசன்னமாகி பிரம்மாவின் மயக்கத்தைப் போக்கித் தெளிவை உண்டாக்கி, சிருஷ்டிக்கும் வல்லமையும் அளிக்கிறாள். பின் விஷ்ணுவிற்குத் தன் சக்தியை அளித்து, அவரின் யோக நித்திரையைக் கலைத்து மது, கைடபர் என்ற இரு

அசுரர்களைக் கொல்லும் உபாயத்தைக் காட்டி மறைகிறாள். இது தேவியின் 2 வது
அவதாரம்.

இந்த இடத்தில் அசுரர் என்பது எல்லாராலும் தவறாய்ப் புரிந்து கொள்ளப் படுகிறது. அசுரர்களை வாழவிடாமல் தேவர்களை மட்டும் வாழவைக்கிறார் கடவுள் என நினைத்துக் கொள்கிறார்கள். எல்லாப் பிறவியும் ஈசன் படைப்பே. தன்னால் பிறப்பிக்கப் பட்டவர்

எல்லாரையும் ஈசன் வாழத்தான் வைப்பார். அழிக்க மாட்டார். நம்மைத் தான் நாமே

அழித்துக் கொள்கிறோம். எப்படியெனில் உண்மையில் மனிதருக்குள் தேவ குணமும்

உண்டு. அசுர குணமும் உண்டு. சிலரிடம் அசுர குணம் மிகுந்து காணப்படும்.

சிலரிடம் தேவ குணம் மிகுந்து காணப்படும். உண்மையில் முதலில் அசுர குணம் மிகுந்தவர்கள் ஜெயித்தது போல் காட்டி வந்தாலும், நம் தமிழ் சினிமாவில் படம் முடியும் சமயம் போலீஸ் வருவது போல் கடைசியிலாவது அவர்களுக்கு எப்படியாவது

அவர்களின் தவறைப் புரிய வைப்பார் கடவுள். நம்முடைய தேவ குணமும், அசுர

குணமும் நடத்தும் போராட்டம்தான் உண்மையில் தேவாசுரப் போராட்டம்.

நம்முடைய மனமானது ஒரு நிலையில் எப்போதும் இருப்பது இல்லை. ஒரு மனது

நல்லது செய்யலாம் என்று சொன்னால், இன்னோர் மனசு," ஆமாம், கிழித்தாய்,

எல்லாருக்கும் நல்லது தான் செஞ்சிட்டிருந்தியே? என்ன வாழ்ந்தே? எல்லாம் இது போதும்." என்று சொல்லி விடும். நம்முடைய மனப் பலவீனங்களுக்கு ஏற்றாற்போல் சில சமயம் நல்ல மனசும்,சில சமயம் கெட்ட மனசும் வெற்றி பெறுகிறது. இந்தப் போராட்டம் நம்

வாழ்நாள் பூரா நடந்து கடைசியில் நாம் இறைவனைச் சரண் அடைந்து," இனி

ஒன்றும் இல்லை, நீயே கதி!" என்று சொல்கிறோமே, அப்போது தான் நமக்குள்

உறைந்திருக்கும் இறை சக்தி வெற்றி பெறுகிறது. இதைத் தான் நாம் நமக்குப் புரிவதற்குச் செளகரியமாகக் கடவுள் வந்து அசுரர்களை அழித்தார் என்று சொல்லிக் கொண்டு நம்மை நாமே தேற்றிக் கொள்கிறோம். இந்த உண்மையைப் புரிந்து கொண்டால் இறைவன் எங்கேயும் இல்லை, நமக்குள் தான் இருக்கிறார். நாம் தான் உதாசீனம் செய்கிறோம் என்று தெரியும்.

தேவியின் மற்ற மூன்று அவதாரங்களும் தொடரும்.