எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Sunday, September 27, 2009

நவராத்திரி நாயகி - சரஸ்வதி - தொடர்ச்சி!

தங்கக் கலசத்தில் அந்த நெருப்புக் கொழுந்து வைக்கப் பட்டது. சரஸ்வதியை அழைத்து நீ நீர் உருவெடுத்து நதி ரூபத்தில் சென்று இந்தத் தீக்கொழுந்தை கடலினடியில் சேர்ப்பித்துவிடு எனச் சொல்ல, சரஸ்வதியாலும் அந்த நெருப்பைத் தாங்க முடியவில்லை. பின்னர் பிரம்மன் கங்கை, யமுனை, நர்மதை, தாபி போன்ற மற்ற நதிகளையும் அழைத்து அந்தத் தங்கக் கலசத்தை தீக்கொழுந்தோடு எடுத்துச் சென்று சமுத்திரத்தின் அடியில் வைக்கப் பணித்தார். இவ்விதம் அந்தத் தீக்கொழுந்தானது கடலினடியில் சென்று மறைந்தது. அது முதன்முதல் சரஸ்வதி கையில் கொடுக்கப் பட்ட இடமே பத்ரிநாத்தில் உள்ள தப்த குண்டம் என்று சொல்லுகின்றனர்.


பிரம்மசக்தியாகத் திகழும்போது சரஸ்வதிக்கு பிராம்மி என்ற பெயர் உண்டு. பிரம்ம வித்யை இவள் முகமாகவும், நான்கு வேதங்கள் நான்கு திருக்கரங்களாகவும், இசையும் இலக்கணமும் ஸ்தனங்களாகவும், எண்ணும், எழுத்தும் இரு கண்களாகவும், இதிஹாசம், புராணம் ஆகியவை இரு திருவடிகளாகவும் கொண்ட இவள் கையில் இருக்கும் வீணை ஓங்கார வீணை. ஓங்காரத்தின் வடிவானது. கச்சபி என்னும் பெயருடைய இந்த வீணை பரமேஸ்வரனால் பிரம்மாவுக்கு அளிக்கப் பட்டு சரஸ்வதிக்கு வந்தது.

பொதுவாக வெண்பட்டாடை தரித்து வெண்தாமரை மலராசனத்தில் நான்கு திருக்கரங்களுடன் சுவடி, ஜபமாலை, வீணை இவற்றைத் தாங்கியவண்ணம் காணப் படும் சரஸ்வதி, ஆங்காரசக்தியாய்த் தோன்றும்போது எட்டுக்கரங்கள், மணி, சூலம், கலப்பை, சங்கு, சக்கரம், வில், அம்பு, உலக்கை ஆகியவற்றோடு காட்சி கொடுப்பாள். உக்ரவடிவாய் கெளரியின் தேகத்தில் இருந்து தோன்றிய இவளே கம்பாசுரனை வதம் செய்தாள் என்று தேவி மகாத்மியம் கூறும். வாகீஸ்வரியாக வடிவம் கொள்ளும்போது வாணி நான்குகரங்கள், ஜடாமகுடம், ரத்னகுண்டலம், தண்டம், சுவடி, ஜபமாலை, கிண்டி ஆகியவை தாங்கி முக்கண்களுடன் காட்சி கொடுப்பாள். நான்கு முகங்கள், ஆறு கரங்கள், ஜபமாலை, சுவடி, வீணை, கமண்டலத்துடன் சரஸ்வதியாகக் காட்சி கொடுப்பாள். மான் தோலாடை அணிந்து இடது மூன்று கரங்களில் வரதம், சூத்திரம் ஆகியவற்றையும் வல மூன்று கரங்களில் சுவடி, குண்டிகை, அபயமுத்திரை தாங்கியும் நான்முகவடிவினளாக பிரம்ம பத்னியாக சரஸ்வதி காட்சி கொடுப்பாள் .
கல்விக்கு அதிதெய்வமாகப் போற்றப் படுபவள் சரஸ்வதியே! யாகத்தைக் காக்கும் தேவதையாகவும், யாகத்தை நடத்துபவர்களுக்குத் தேவையான ஞானம், தேஜஸ், வெற்றி ஆகியவற்றைக் கொடுப்பவளும் சரஸ்வதியே.

யஜுர்வேத மந்திரம் ஒன்று, “வீரமும் அறிவும் நிறைந்த சரஸ்வதி திடசித்தமுடையவர்களாக எங்களை விருத்தி அடையச் செய்வாளாக!” என்று பிரார்த்தித்துக் கொண்டு யக்ஞத்தில் நெய்யை அளிக்கிறது. ஞானாம்பிகை, ஞானேஸ்வரி, ஞானசக்தி என்று போற்றப் படுபவளும் இவளே. நாவில் சரஸ்வதியை வைத்திருப்பதாய்ச் சொல்லும் பிரம்மனே இவளைத் துதித்ததும் தான் சனத்குமாரருக்கு “பதிஞானத்தின்” உட்பொருளை உபதேசித்தான் என்கின்றனர் பெரியோர்கள். தேவகுருவான பிரஹஸ்பதியும் கலைமகளைத் துதித்ததுமே “சப்தசாஸ்திரம்” என்னும் நூலை இந்திரனுக்குக் கற்பித்தார். சரஸ்வதியின் அருட்கடாட்சம் பெற்றே கவிஞன் காளிதாசன், சியாமளா தண்டகம், சியாமளா தந்திரம், போன்றவற்றில் தேவியின் சொரூபத்தையும், லீலைகளையும் பற்றி எழுதியுள்ளான்.
சகல கலைகளுக்கும் அதி தேவதையான இவளே சாரதை எனவும் போற்றப் படுகிறாள். தனம் தரும் லக்ஷ்மியாகவும், வீரம் செறிந்த துர்க்கையாகவும் வணங்கப் படுபவளும் இவளே. இவளைக் குறித்தே சாரதா நவராத்திரி கொண்டாடப் படுகிறது. இந்த சாரதையை சிருங்கேரியில் நல்ல முஹூர்த்த வேளை பார்த்துப் பிரதிஷ்டை செய்தவர் ஆதிசங்கரர் ஆவார். ஸ்ரீசக்ரமும் இங்கே பிரதிஷ்டை செய்யப் பட்டுள்ளது.

இவள் மற்ற மதங்களிலும் முக்கியமாய் சமணம், பெளத்தம் ஆகிய மதங்களிலும் காணப்படுகிறாள். சமணர்கள் வாக்தேவி, ஸ்ருதிதேவி என்றும் ஜின ஐஸ்வர்யா என்றும், ஜினவாணி, ஆகமஸ்வரூபி என்றும் அழைப்பார்கள். பெளத்தர்கள் மகா சரஸ்வதி, வஜ்ர சாரதா, வஜ்ரவீணாதாரா, ஆர்ய சரஸ்வதி, வஜ்ர சரஸ்வதி, என ஐந்து வடிவங்களில் சரஸ்வதியை அமைத்து வழிபடுகின்றனர். மஞ்சுஸ்ரீ எனவும் பெளத்தத்தில் சரஸ்வதி அழைக்கப் படுகின்றாள்.

நவராத்திரியின் ஒன்பதாம் நாளான இன்றைய வழிபாடு இவளுக்கே உரியது. புத்தகங்கள் வைத்தும் வழிபடுவார்கள். ஆயுதங்களைச் சுத்தம் செய்து அவற்றையும் வைத்து வழிபடுவார்கள். இசைக்கருவிகளுக்கும் சிறப்பு வழிபாடு உண்டு. இன்று பூராவும் வழிபாட்டில் இருக்கும் புத்தகங்கள், ஆயுதங்கள், இசைக்கருவிகளை விஜயதசமி அன்று எடுத்துப் பயன்படுத்துதல் சிறப்பாகக் கருதப் படும். பள்ளிக்கு முதன் முதல் செல்லும் குழந்தைகளுக்கு விஜயதசமி அன்று பள்ளியில் சேர்த்தல் சிறப்பாகக் கருதப் படும். அன்றைய தினம் ஒரு தாம்பாளத்தில் அல்லது சுத்தம் செய்யப் பட்ட தரையில் நெல் பரப்பி அந்த நெல்லில் "ஹரி ஓம்" எனக் குழந்தையின் அம்மாவோ, அப்பாவோ குழந்தையின் கையைப் பிடித்துக் கொண்டு எழுதச் செய்வார்கள்.

அம்பிகை பத்தாம் நாளான விஜயதசமி அன்று சிவசக்தி ஐக்கிய சொரூபிணியாகத் தோற்றம் அளிக்கின்றாள். அன்று மாலையில் நக்ஷத்திரங்கள் தோன்ற ஆரம்பிக்கும் விஜயா என்னும் முகூர்த்தத்திலேயே அவள் அம்பு போட்டு அசுரனை வதம் செய்ததால் அந்த நேரம் சுப முஹூர்த்தநேரமாகவும், நல்ல காரியங்களை ஆரம்பிக்கக் கூடிய நேரமாகவும் குறிப்பிடப் படுகின்றது. தீய சக்திகளை அம்பிகை அழித்த அந்த நல்லநேரமே விஜயதசமி என இன்றும் அம்பு போடுதல் என்னும் நிகழ்ச்சியாகப் பல கோயில்களிலும் சிறப்பாய் நடக்கின்றது. நம் வாழ்விலும் தீமைகளை அழித்து, நன்மைகள் பெருகி வாழ்வில் வளம் பெற அம்பிகையைப் பிரார்த்திப்போம்.

அனைவருக்கும் விஜயதசமி நல்வாழ்த்துகள்.

9 comments:

  1. என் நண்பர் குடும்பத்தில் வசந்த் பன்ச்சமி அன்னிக்கு சரஸ்வதி பூஜை பண்ணி மாங்கா ரசம் கொடுப்பார்கள்.நம்ப பக்கத்தில நவராத்ரில.எனக்கு சரஸ்வதியை நினைக்கும் போது ஒடற நதியும், ஷ்ருதியோட லயமும் மனசுக்குள்ள வரும்.
    இந்த நவராத்ரி ஒன்பது நாளும் அருமையான சத்சங்க். நம்ப கல்ச்சர் ல பண்டிகைகளுக்கு குறைவில்லை . ஒவொவொரு பண்டிகைக்கும் ஒரு அருமையான அர்த்தம் இருக்கும்.காலப்போக்கில் முக்கியத்வம் இலக்கை விட்டு வேற எதுக்கெல்லாமோ திரும்பிக்கொண்டிருக்கிறது அதன் நடுவிலும் விழிப்பு உண்ர்ச்சி இல்லாம இல்லை.நிறைய பேருக்கு அது புரிந்து மனம் நாடவும் செய்கிறது. தொடர்ந்து இந்த சத்சங் கிடைக்கணும் நல்எண்ணங்களின் விழிப்புண்ர்ச்சி மதம் இனம் என்ற பேதங்களுக்கு அப்பாற்பட்டது.ஒவொரு பண்டிகையும் நமக்குள நல்ல எண்ணங்களை மேலும் மேலும் வளர தெய்வம் அருள் பண்ணனும்
    யா தேவி சர்வ ரூபேஷு புத்தி ரூபேன சம்ஸ்திதா , நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோநமஹ.
    யா தேவி சர்வ ரூபேஷு வித்யா ரூபேன சம்ஸ்திதா , நமஸ்தஸ்யை, நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோநமஹ.
    நமக்குள்ள ஒளியா இருக்கிற தெய்வம் மனோ வாக்கு காயத்தால் நல்ல செயல்கள் செய்ய அறிவை தந்து ஆசிர்வதிக்கணும்.
    நாளைக்கு ஸ்ரீ ராம் ராவணனை வென்ற நாள். ஆட்ட நாயகன் ஆஞ்சனேயரைப்பத்தியும் கொஞ்சம் எழுதணும் கீதாஜீ

    ReplyDelete
  2. //ஞானம்,தேஜஸ், வெற்றி ஆகியவறறை கொடுப்பவள் சரஸ்வதி//

    //நம் வாழ்விலும் தீமைகள் அழிந்து நன்மைகள் பெருகி வாழ்வில் வளம்பெறஅம்பிகையப் பிராத்திப்போம்.//

    எல்லோர் வாழ்விலும் தீமைகள்அழிந்து
    நன்மைகள் பெருகி வாழ்வில் வளம் பெறஅம்பிகை அருள் புரிவாள்.

    கீதாவின் விஜயதசமி நல் வாழ்த்துக்கு
    நன்றி.

    வாழ்க வளமுடன்.

    ReplyDelete
  3. நிறைய தெரியாத விஷயங்கள் தெரிந்து கொண்டேன்.
    உங்களுக்கும் விஜய தசமி நல் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  4. ஜெயஸ்ரீ, வசந்த பஞ்சமி குஜராத், ராஜஸ்தானில் ரொம்பவே கோலாகலமாய்க் கொண்டாடுவார்கள். நம்ம பக்கத்தில் மாங்காய் ரசம் நவராத்திரியிலே செய்யறது எனக்குத் தெரியலை. ஆனால் சித்திரா பெளர்ணமி அன்று மாங்காய், தேங்காய்ப் பால் இரண்டும் கட்டாயம் உண்டு.

    ReplyDelete
  5. ஆஞ்சநேயர் பத்தித் தனியா எழுதிட்டு இருக்கேன். உங்களுக்குத் தனி மடலில் லிங்க் அனுப்பறேன். :))))))))))

    ReplyDelete
    Replies
    1. அம்மா, நல்லாருக்கீங்களா? ஏதோ தேடினப்ப இங்கே கூட்டி வந்தது. ஆஞ்சநேயர் பத்தின சுட்டி எனக்கும் அனுப்பறீங்களா, ப்ளீஸ்?

      Delete
    2. வணக்கம் கவிநயா, இப்போ ஹூஸ்டனில் இருக்கேன். ஆஞ்சநேயர் பத்தின சுட்டி கணினியைப் பல தடவை மீண்டும் மீண்டும் மாற்றி அமைத்ததில் காணாமல் போய் விட்டது! :( தேடிக் கொண்டிருக்கேன். நானும் ஆஞ்சநேயர் பத்தின பதிவைப் பாதியில் தான் நிறுத்தும்படி ஆகி விட்டது. சௌந்தர்ய லஹரி பதிவும் பாதியில் நிற்கிறது. அதற்கான குறிப்புக்களைக் கணினியில் பாதுகாத்து வைத்திருந்தேன். அதுவும் தேட வேண்டி இருக்கு. இப்போதைய மடிக்கணினியில் பழைய சேமிப்புகள் எதுவும் இல்லை. ஆகவே இந்தியா வந்த பின்னர் கணினியிலோ அல்லது பழைய மடிக்கணினியிலோ தேட வேண்டும். :(

      Delete
  6. நன்றி கோமதி அரசு.தாமதமாய் நன்றி சொல்வதற்கு மன்னிக்கவும்.

    ReplyDelete
  7. //நிறைய தெரியாத விஷயங்கள் தெரிந்து கொண்டேன்.//

    தி.வா. நிஜமாவா??? ஹை! உங்களுக்கே தெரியாதுனா ஜாலியா இருக்கு!

    ReplyDelete