இப்போ நேரடியா நாம் செளந்தர்ய லஹரி ஸ்லோகத்தின் ஒன்பதாம் ஸ்லோகத்திலிருந்து பார்க்கப் போகிறோம். ரொம்ப நாட்களாக தமிழில் போடுகையில் சப்தங்களைக் குறிக்கும் எண்களோடு போடணும்னு தோன்றும். ஆனால் என்னமோ அது முடியாமலே போயிட்டு இருந்தது. பராஹா.காம் டவுன்லோட் பண்ணி வைச்சும் அதிலே கொடுத்து மாற்றிப் போட முடியலை. நேரமே இருக்காது. எழுதினதைப் போட்டால் போதும்னு இருக்கும். இப்போ நம்ம மின் தமிழ் நண்பர் விநோத்தின் அக்ஷரமுகியில் மாற்றிப் போடுவது சுலபமாக இருக்கிறது. இதை யாருக்கானும் ஸ்லோகங்கள் அனுப்பறதுக்குனு மட்டும் வைச்சிருந்தேன். இனி பதிவிலும் பயன்படுத்திக்கலாம்னு முதல் முதலாகப் போடுகிறேன். கூடவே சாதாரணமுறையிலும் போடுகிறேன்.
*************************************************
महीं मूलाधारे कमपि मणिपुरे हुतवहं
स्थित स्वाधिष्टाने हृदि मरुत -माकाश -मुपरी
मनोस्पी भ्रूमध्ये सकलमपि मितवा कुलपथं
सहस्रारे पध्मे सह रहसि पत्या विहरसे
மஹீம்ʼ மூலாதா₄ரே க₁மபி₁ மணிபு₁ரே ஹுத₁வஹம்ʼ
ஸ்தி₂த₁ ஸ்வாதி₄ஷ்டா₁னே ஹ்ருʼதி₃ மருத₁ -மாகா₁ஶ -முப₁ரீ
மனோஸ்பீ₁ ப்₄ரூமத்₄யே ஸக₁லமபி₁ மித₁வா கு₁லப₁த₂ம்ʼ
ஸஹஸ்ராரே ப₁த்₄மே ஸஹ ரஹஸி ப₁த்₁யா விஹரஸே
மஹீம் மூலாதாரே கமபி மணிபூரே ஹுதவஹம்
ஸ்திதம் ஸ்வாதிஷ்டானே ஹ்ருதி மருத-மாகாச-முபரி
மனோsபி ப்ரூமத்யே ஸகலமபி பித்வா குலபதம்
ஸஹஸ்ராரே பத்மே ஸஹ ரஹஸி பத்யா விஹரஸே
மூல மணிபூரகத்தோடு இலிங்க மார்பு
முதுகளம் விற்-புருவ நடு மொழிவது ஆறு
ஞாலமும் மென்புனலும் அனல் பிழம்பும் காலும்
நாதம் உறு பெருவெளியும் மனமும் ஆக
மேல் அணுகிக் குளபதத்தைப் பின்னிட்டு அப்பால்
மென்கமலத்து ஆயிரம் தோட்டு அருண பீடத்து
ஆலவிடம் பருகிய தன் மைழ்நரோடும்
ஆனந்தம் உறும் பொருளை அறியலாமே
கவிராஜ பண்டிதரின் தமிழாக்கம்
நம்முள்ளே உறைந்து கிடக்கும் சக்தியை எழுப்புவதே மூலாதரத்தில் உறங்குவதை எழுப்புவது என்பார்கள். இது சாதாரணமான விஷயம் இல்லை. இதைக் குறித்து எழுதுவதாலேயே எனக்குப் புரிந்துவிடவும் இல்லை. இங்கே கூறி இருப்பது அம்பிகையானவள் மூலாதாரத்தின் ப்ருத்வி தத்துவத்தில் இருந்து எழுந்து ஒவ்வொரு படியாக மேலேறிச் சென்றுக் கடசியில் ஆயிரம் இதழ் கொண்ட சஹஸ்ராரச் சக்கரத்தில் அதிரகசியமான இடத்தில் இருக்கும் சிவத்தோடு ஐக்கியமாகிறாள் என்பதே பொதுவான அர்த்தம்.
தற்காலங்களில் இந்தக் குண்டலினி யோகம் படும்பாடு சொல்லி முடியாது. சிம்பிள் குண்டலினி யோகா என்றெல்லாம் வந்து இருக்கிறது. பல குருமார்கள் சொல்லிக் கொடுக்கின்றனர். ஆனால் இந்தக் குண்டலினியை எளிதில் அடைய முடியுமா? அந்த குருமார்கள் சொல்லித் தருவது போல் எதுவும் நடக்கிறதா? யாருக்கானும் அது குறித்து சரியாகச் சொல்ல முடியுமா? இல்லை என்பதே பதில். சாதாரணமாக தியானம் அல்லது பிராணாயாமம் பண்ணுகையிலேயே உடலில் ஒருவித உணர்ச்சி ஊடுருவும். இது அனைவரும் அறிந்திருப்போம். இம்மாதிரியாக ஏதோ தோன்றுவதைத் தான் குண்டலினி எழுந்துவிட்டதாக அனைவரும் நினைக்கலாம். உண்மையில் இதற்குக் கடுமையான பயிற்சி வேண்டும். அதோடு இப்படி அனைவரும் அறியும்படியெல்லாம் குண்டலினி எழுந்து கொள்ளவும் செய்யாது.
எப்படி மின்சாரக் கம்பிகளின் இணைப்பில் கண்ணுக்குத் தெரியாதபடிக்கு மின்சாரம் பாய்கிறதோ, அப்படி நமக்கும் சரியான குரு என்னும் இணைப்பின் மூலம் மந்த்ரோபதேசம் நடைபெற வேண்டும். அதிலும் ஒவ்வொரு ஆதாரத்துக்கும் உரிய மந்திரங்கள் உள்ளன. மின்சாரம் கண்ணுக்குத் தெரியாமல் வருவது போல் ஆதாரங்களுக்குரிய மந்திரத்தையும் ரஹஸ்யமாகவே கற்க வேண்டும். இதற்குச் சரியான குரு தேவை. குண்டலினி விழித்துக்கொள்வதை எல்லாம் உணர்ந்து தான் தெரிந்து கொள்ள இயலும். உணர்ந்தவர் யாரும் அது குறித்துச் சொல்ல மாட்டார்கள்.
இப்போ அம்பிகையைப் பார்ப்போம். மூலாதாரம் என்பது நம் உடலில் முதுகெலும்பின் கீழ் மலத்துவாரத்துக்குச் சற்று மேலே உள்ளது. நான்கு இதழ் தாமரை போல் காணப்படும் இது பூமிக்குச் சமமாகச் சொல்லப்படும். இதற்கெனத் தனியான குணங்கள் உண்டு. இந்த மூலாதாரத்துக்கு அடுத்து இரண்டு விரல் கடை மேலே ப்யூபிக் எலும்பில் உள்ளது ஸ்வாதிஷ்டானம். ஆறு இதழ் கொண்ட தாமரைப் பூவின் அமைப்பில் உள்ள இது உருக்கி வாரத்த வெள்ளியின் நிறம் கொண்டு நீருடன் சம்பந்தம் கொண்டது. இந்த மூலாதாரமும், ஸ்வாதிஷ்டானமும் சேர்ந்தே அக்னிகண்டம் என்பார்கள். இதற்கு மேலே பிரம்மக்ரந்தி என்னும் முடிச்சு. இந்த இடம் ச்ருஷ்டிக்கும் காரணமாக அமைந்தது. ஆகவே பிரம்மக்ரந்தி என்பது பொருத்தம் அல்லவா?
அதற்கு அடுத்து மணிபூரகம். நாபிக்கமலம் அல்லது தொப்புள் இதன் இருப்பிடம். பத்து இதழ் கொண்ட தாமரைப் பூவின் அமைப்புக் கொண்ட இது நெருப்போடு சம்பந்தப்பட்டது. சிவந்த நிறம் கொண்டது. நம்முடைய அனைத்து உணர்வுகளையும் பசியைத் தூண்டும் சக்தியும், ஜீரணசக்தியை ஏற்படுத்தும் சக்தியும் உள்ளது. இதற்கு அடுத்து அநாஹதம். உடலின் மத்தியில் இருதய பாகத்தைக் குறிக்கும் இது 12 இதழ் தாமரைப்பூ வடிவில் காணப்படும். பச்சை நிறம் கொண்ட இதற்குக் காற்றின் சக்தி. காற்று நமக்கு எவ்வளவு தேவை என்பதைச் சொல்ல வேண்டியதே இல்லை. காற்றுத்தான் நம்மைக் காக்கவும் செய்கிறது. சரியான உணவும், மூச்சுக்காற்றும், நீருமே நம்மைக் காக்கிறது. மணிபூரகமும், அநாஹதமும் சேர்ந்து சூரிய கண்டம். இதற்கு மேல் விஷ்ணுக்ரந்தி என்னும் முடிச்சு காணப்படும்.
அடுத்து விசுத்திச் சக்கரம். இது நம் கழுத்துப்பாகம். நஞ்சுண்ட கண்டர் அந்தக் கொடிய விஷத்தைத் தான் உண்டதாலும் கண்டத்தில் நிறுத்திக்கொண்டதாலுமே ப்ரபஞ்சம் தொடர்ந்து இயங்கி வருகிறது. ஆகவே ஒவ்வொருத்தருக்கும் இந்த கண்டம் எனப்படும் கழுத்துப்பாகம் முக்கியமானது. குரல்வளையைப் பிடித்தால் நம்மால் மூச்சுவிட முடியுமா? 16 இதழ் தாமரைப்பூப் போன்ற அமைப்புக் கொண்ட இது நிறமற்றது நம்முடைய சுயம் வெளிப்படும் இடம் இதுவே. பிந்துச் சக்கரத்திற்கு அருகே இருக்கும் இங்கே விஷமும் தயார் நிலையில். அமிர்தமும் தயார் நிலையில். அதனாலேயே சில சமயம் விஷம்போல் பேசுவதும், சில சமயம் இனிக்க இனிக்கப் பேசுவதும் நடக்கிறது, இது திறந்து கொண்டாலே நமக்கு முக்தி எனப்படும் அதி அற்புத சித்தி கிடைக்கும். மாறாக இது மூடிக்கொண்டால் மரணம். இதற்கு மேல் ஆக்ஞா சக்கரம். நம்முடைய இருபுருவங்களுக்கிடையே உள்ளது. நெற்றிப்பொட்டு வைக்கும் இடத்தின் பின்னே உள்ள இதைத்தான் பிந்து என்றும் சொல்வோம். நெற்றியில் பொட்டு வைத்துக்கொள்வதை பிந்து, பிந்தி என்றெல்லாம் சொல்வோம் அல்லவா? இங்கே தான் நம் உடலின் இடநாடியும் பிங்கள நாடியும் சூக்ஷ்ம நாடியோடு சேர்ந்து இங்கே வரும் குண்டலினியை மேலே அனுப்பும். இந்த விசுத்தி சக்கரமும், ஆக்ஞா சக்கரமும் சேர்ந்தது ஸோமகுண்டம் அதற்கு மேலே உள்ளது ருத்ரக்ரந்தி எனப்படும் முடிச்சு.
இந்த க்ரந்தி என்பது நம் நாடிகளில் காணப்படும் முடிச்சை மட்டும் குறிக்காது நம் எண்ணங்களில் ஏற்படும் பூர்வவாசனையால் ஏற்படும் சிக்கல்களையும் குறிக்கும். ஆகவே இவை அனைத்தையும் பிளந்து கொண்டே அம்பிகை மேலேறுவாள். எனில் எவ்வளவு முயற்சி வேண்டும் என்பதை நினைத்துப் பார்ப்போமாக! இங்கே அம்பிகையை மூலாதாரத்திலிருந்து எழுப்பி சஹஸ்ராரத்துக்குக் கொண்டு போய் சதாசிவத்தோடு சேர்த்து மீண்டும் மூலாதாரத்துக்கு அம்பிகை எழுந்தருளும் தருணத்திற்குக் காத்திருப்பதைக் குறிக்கும்.
நம்முள்ளே தினம் தினம் நாம் செய்யவேண்டிய வேள்வியை இது குறிக்கும். நம்முள்ளே உறைந்து கிடக்கும் சக்தியை எழுப்பி நல்லவிதமாகப் பயன்படுத்திக்கொள்ளவேண்டும். இந்த சகல சித்திகளையும் தரும் தேவியை அபிராமி பட்டர்,
சித்தியும் சித்தி தரும் தெய்வம் ஆகித் திகழும் பரா
சத்தியும் சத்தி தழைக்கும் சிவமும் தவம் முயல்வார்
முத்தியும் முத்திக்கு வித்தும் வித்தாகி முளைத்தெழுந்த
புத்தியும் புத்தியினுள்ளே புரக்கும் புரத்தையன்றே."
என்கிறார். ஆதிபராசக்தி அட்டமாசித்திகளை மட்டுமில்லாமல் சக்தியைத்தம்மிடத்தே தழைக்கச் செய்யப் பரசிவனோடும் ஐக்கியமாகி, தவம்புரிவார்க்கு மோக்ஷ ஆனந்தத்தைத் தருகிறாள்.. அந்த முத்தியைப் பெற அடியிடும் மூலமும், மூலமாகித் தோன்றி எழும் ஞானம் ஆகிய எல்லாமாக இருப்பவள் மாதா திரிபுரசுந்தரியே.
நன்று!
ReplyDelete(வீரைக் கவிராயர் தமிழ்லஹரியை அனுப்ப மறந்து விட்டது. அனுப்புகிறேன் :)
வாங்க அப்பாதுரை, கவிராயர் வந்து விட்டார். நன்றி.
ReplyDelete